ஸ்கூல் காம்பௌண்ட் உள்ளே நிழலில் வண்டியை நிறுத்தியவள் வணக்கம் வைத்த அனைவருக்கும் புன்னகையோடு பதில் கூறிக் கொண்டே சேர்மன் அறைக்கு விரைந்தாள்.
இவள் சென்றவுடனே அலுவலகக அறையிலிருந்து பைலோடு வந்துவிட்டார் அதன் ஹெட், அவரிடம் அதை வாங்கி விவரங்களைக் கேட்டுக் கொண்டவள், டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் ஹெட்டை அழைத்து அந்த விவரங்களையும் வாங்கி கொண்டாள்.
தன்னுடைய டேபிளின் மேல் இருந்த பைல்களின் எண்ணிக்கை பார்த்துத் தலை சுற்றியது, செய்து தான் ஆக வேண்டும் வேறு வழி இல்லை, அனைத்தையும் படித்துத் தனியே குறிப்பெடுத்து ஒரு ஒரு பைலின் உள்ளேயும் வைக்க வேண்டும்.
புதிய வருடத்திற்கான பாட புஸ்தகங்களின் கணக்குகளைப் பார்க்க வேண்டும், அனைத்திற்கும் ஆள் இருந்தாலும் கேள்விகள் என்னவோ இவளிடம் மட்டுமே கேட்பார் சேர்மன், அதனாலேயே வேலையில் மிகக் கவனம் கொற்றவை.
இல்லையேல் ஆறு வருடமாகக் கிருஷ்ணமூர்த்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க இயலுமா, அணைத்து விவரங்களும் விரல் நுனியில் அவளிடம், அங்கு அவளைக் கேள்வி கேட்கும் உரிமை சேர்மனுக்கு மட்டுமே, வேறு எவரும் அவளிடம் அதிகாரமாகப் பேசிவிட இயலாது அது பிரின்சிபால் மயில்சாமிக்கும் பொருந்தும்
அனைவரையும் அரவணைத்துச் செல்லுவாள், அதிகாரம் தனக்கு அதிகம் வழங்கப்பட்டிருக்கிறது என்று ஒரு முறை கூட அதை வேறு வகையில் உபயோகப் படுத்தியதில்லை, மற்றவர்களைத் தனக்கு கீழாகப் பார்த்ததும் இல்லை.
இது முழுவதும் அவளின் தனிப்பட்ட உழைப்பு, முயற்சி அவள் தந்தை அவளுக்குப் பள்ளியில் கூடப் பீஸ் கட்டியதில்லை, படித்தது கவர்ன்மென்ட் பள்ளியில், கல்லூரி தன் சொந்த சம்பாத்தியத்தில், அவள் வீட்டிலே கவர்மெண்ட் பள்ளியில் படித்தவள் அவள் மட்டுமே.
ஒரு மாத பிள்ளையைத் தாய் விட்டுச் செல்ல, பாட்டி தாயக பார்த்துக்கொண்டார், பால் கறந்து விற்று கோழிமுட்டை விற்று வயல் வேலைக்குச் சென்று என்றுதான் அவளைப் பார்த்துக் கொண்டார்.
ஒரு வயதிற்கு மேல் பாட்டியின் கஷ்டம் புரிந்து பள்ளியின் ஆசிரியர் ஒருவர் வீட்டில் வேலைக்குச் சென்று பாட்டியின் சுமையைக் குறைத்தாள் கொற்றவை.
பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டியின் வீட்டிற்கு வரும் அக்கா மற்றும் தம்பி தங்கையிடம் ஒட்டமாட்டாள், அவளை ஏதோ அநாதை போலப் பார்க்கும் அவர்களைப் பார்த்தாலே அவளுக்கு எரிச்சல் மூளும், ஒரு நாளும் தாய் தந்தையிடம் சென்றதில்லை தன்னை ஆசையாகக் கொஞ்ச வரும் தாயை தள்ளியே நிறுத்துவாள்.
குட்டி மட்டுமே அவளிடம் மீண்டும் மீண்டும் சென்று அவன் பாச வலயத்தில் அவளையும் சேர்த்துக் கொண்டவன், அம்மா அப்பா பார்க்காத போதே இவளுக்கு எவ்வளவு திமிர் என்று தான் பார்ப்பாள் அவள் அக்கா ஆராதனா.
என் உழைப்பில் நான் வாழ்கிறேன் என்று திமிராகவே சுற்றுவாள், பாட்டியின் உடல் நிலை மோசம் ஆகப் பெற்றோருடன் செல்லக் கட்டாயப்படுத்தினார் அவளின் பாட்டி, “முடியாது” என்றவளிடம் “என் காலத்திற்கு பின் வயது பெண்ணை யாரை நம்பி விட, என்மீது அன்பிருந்தால் அவர்களுடன் செல், அவர்களின் செலவில் நீ வாழ வேண்டாம் நீ அவர்களை வாழ வெய், நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போ” என்று பலவாறாகப் பேசி அவளை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.
அதிக நாட்கள் இல்லாமல் அவரும் விடைபெற, அவளின் ஓட்டம் மட்டும் நிற்கவில்லை அவளுடைய பதிமூன்றாவது வயதில் அவளைவிட ஆறு வயது பெரியவளான ஆராதனாவை சொந்தத்தில் திருமணம் முடித்து அனுப்பிவிட்டார். திருமண நாள் நெருங்க நெருங்க அவரிடம் ஒருவிதமான பதட்டம், அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுந்தார், மகளுக்கு நிறைய நகை நன்றாகச் செலவு செய்து திருமணம், ஆனாலும் என்ன பிரச்சனை என்று தான் புரியவில்லை.
பிறகு புரிந்தது அரசின் நிலஅளவை துறையில் அதிகாரியாக இருந்தவர் நிறைய முறை லஞ்சம் வாங்கி இருந்திருக்கிறார் என்று, இதில் கொடுமை!! இன்றுவரை இவர்கள் இருப்பது வாடகை வீட்டில் தான், லஞ்ச வழக்கில் மாட்டும் நிலை அப்பொழுது.
இவர் லஞ்சம் கொடுத்துப் பணம் செலவு செய்து தன்னை காத்துக் கொண்டார், சொத்துக்களை விற்று அதைச் சரி செய்ய மகளின் திருமணம் நிற்கும் நிலை, விருப்ப ஓய்வு பெற்று கொஞ்சம் கடன் பெற்று மகளை அனுப்பிவிட்டார், அன்றிலிருந்து பென்ஷன் பணத்தில் மிகக் கடினப்பட்டே குடும்பம் கழிந்தது.
கணக்கெழுதும் வேலைக்குச் சென்றவர் அங்கேயும் பிரச்சனை செய்து மூன்று வருடத்திலேயே வேலையை விட்டுவிட்டார், கொற்றவை தன்னால் முடிந்த வரை வேலை செய்து வருமானம் கொடுக்க, மனிதர் அதைப் பிடித்துக் கொண்டு வீட்டிலே இருந்துவிட்டார்.
கல்லூரியில் படிக்கும்போது பார்ட் டைம் வேலை செய்து தன் திறமையால் முன்னேறி இன்று நல்ல சம்பளத்தில் வேளையில் இருக்கிறாள்
மாலை வீடு திரும்பும்போது தலை வலி உயிர் போனது.
வீட்டிற்கு சென்றாலும் ஓய்வெடுக்க முடியாது, மாலை வேலையில் வீட்டில் டியூஷன் எடுக்கிறாள் இருபது பிள்ளைகளுக்கு, காலை வேலை குட்டி பேப்பர் மற்றும் பால் போடுவதுடன் ஒரு சென்டரில் பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுக்கிறான்.
அந்தக் குடும்பத்தைக் கரை சேர்க்க இப்படி அவளும் குட்டியும் பாடுபடப் பெற்றவர்கள் கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாமல் அனைத்தையும் சிதைத்துக் கொண்டிருந்தனர்.
வீட்டிற்கு சென்றபோதே நேரம் ஆகியிருந்தது, வீட்டின் முன்னாள் இருக்கும் இடத்தில் சிறிய கூரைபோல அமைத்து அதில் டியூஷன் நடத்திக் கொண்டிருந்தாள்.
வண்டியை உள்ளே நிறுத்தியவள் “டேய் ஹோம் ஒர்க் பண்ணுங்க வரேன்” என்றவள் அறையில் நுழைந்து துணியை எடுத்துக் கொண்டு பின்னால் தோட்டத்தில் இருக்கும் குளியலறை நோக்கிச் சென்றாள்.
அது கொஞ்சம் சிறிய வீடு, முன்னாள் கொஞ்சம் இடம் ஒரு முருங்கை மரம், ஹால் இரண்டு சிறிய அறைகள், கட்டில் போட முடியாது பாய் விரித்துப் படுத்துக் கொள்வார்கள், பின்னால் அடுக்களை இறுதியாகத் தோட்டம் அங்கே தான் கழிப்பறை மற்றும் குளியலறை.
குளித்து வந்தவள் தாய் தந்த டீயை குடித்துக் கொண்டே டியூஷன் எடுக்கச் சென்றுவிட்டாள்.
இரவு நேரம் சென்று வீட்டிற்கு வந்த இன்பநிலவன் உறங்காமல் இருக்கும் பாட்டியைப் பார்த்து முறைக்க, “வயசானவ காத்திட்டுருப்பாளே சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்னு உனக்குத் தானே தெரியணும், என்ன ஏண்டா முறைக்கிற” என்றார்.
அழுதிருக்கிறார் என்று புரிந்தது கடையில் நடந்ததை வசந்தன் கூறியிருப்பான், “நா என்ன குழந்தையா வந்து சாப்பிட போறேன், நீ போய்த் தூங்க வேண்டியது தானே” என்றவன் ரூமில் சென்று குளித்து வந்தான்.
ஒன்றும் பேசாமல் அவனுக்கு உணவை எடுத்து வைத்தார் “இங்க வந்து கூடச் சொல்லல, அவ்ளோ வேண்டாதவங்கள போய்ட்டோம், உன் மாமனுக்கு எங்கடா போச்சு அறிவு அவ சொல்றத மட்டும் கேக்குறான், இவன் பொண்ண யாரும் கேக்கல அப்படி என்ன இங்க சோத்துக்கு இல்லாம கெடக்குறாங்க, இவ இவ்ளோ ஆட்டம் ஆடுறா” என்று மீண்டும் அழத் தொடங்க, “இப்படி அழு எனக்குச் சாப்பாடு வேண்டாம்” என்க உடனே கண்களைத் துடைத்துக் கொண்டார்.
தங்கையின் பிள்ளைகளை வளர்க்க எந்த விதத்திலும் உதவவில்லை இன்பநிலவனின் தாய் மாமா கந்தவேள், தன்னுடைய இரு மகன்களையும் மருமகள்களையும் ஒரே நேரத்தில் விபத்தில் பறிகொடுத்து மூன்று பேரப்பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்று அறியாமல் கலங்கி நின்ற நொடிகள் இப்பொழுதும் மறக்க இயலவில்லை அவரால்.
பதினாறு வருடங்கள் எப்படி போனது எத்தனை வலிகள், கண்ணீர், அவமானம், இன்று பேரன் நிற்கும் இந்த நிலைக்கு வர அவனின் இளமை முழுதும் அந்நிய மண்ணில் கிடந்து வெயிலில் வெந்து உருகினான்.
அவன் வாழ்வில் ஒரு நல்லது நடந்து விட வேண்டும், தன் காலம் கழியும் முன் அவனிற்கு ஒரு துணையை கொடுத்து விட வேண்டும் அது மட்டுமே அவரின் ஆசை இப்பொழுது.
“ ஏய்யா அந்தப் புள்ளய உனக்குப் பிடிக்கும் தான, அப்புறம் ஏன் இன்னும் சொல்லாம இருக்க” என்க மீண்டும் அவரை முறைத்தவன் “இவன் சொல்றதல்லாம் கேட்ட இப்படி தான் கிறுக்கா சுத்துவ, போப்போய்த் தூங்கு” என்றவன் அவன் அறைக்குச் சென்று கதவடைதான்.
பீரோவிலிருந்து அந்தப் புடவையை எடுத்துக் கொண்டு கட்டிலில் விழுந்தான், கொற்றவையின் புடவை மூன்று வருடத்திற்கு முன்பு பள்ளியின் ஸ்போர்ட்ஸ் டே முடிந்து அங்கேயே புடவை மாற்றி அதை ஒரு பையில் வைத்து எடுத்து வந்தாள், வேலை பளு, பல நாட்கள் உறக்கம் இல்லாமல் வேலை பார்த்தது, மிக மிகச் சோர்வாக இருந்தவள் கொண்டு வந்த பாதிப் பொருட்களை அவனின் கடையிலே விட்டுச் சென்றாள்.
அதில் அவளின் புடவையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டான், அது இல்லமால் ஒரு நாள் கூட அவன் உறங்கியதில்லை, ஆனால் இன்று வரை அவளிடம் அதைப் பார்வையில் கூட உணர்த்தியதில்லை.