22

“அண்ணனைப் பாக்கணுமா , அப்படினு யாரு இருக்கா உனக்கு இங்க,  தூக்கி போட்டுப் போனப்போ தெரியலையா  உறவு இருக்குனு” என்று வார்த்தைகளை அவர் கடித்து துப்ப.

யாரின் பக்கம் பேச என்று தெரியாமல் நின்றாள் கொற்றவை,  ஆயிரம் இருந்தாலும் இந்த வீட்டு பெண் அவள் , எதிர்த்தும் பேச இயலாது தன் தங்கை செய்தது போன்ற ஒரு தவறுதான் இவளும் செய்திருக்கிறாள்.

அவளுக்கு ஊரறிய திருமணம்!! இவள் இன்னும் வீட்டிற்குள் கூட நுழைய முடியாமல் நிற்கிறாள் “பாட்டி நீங்க டென்சன் ஆகாதீங்க பேசலாம்” என்றாள் கொற்றவை காந்தியம்மாவிடம்.

“உனக்குத் தெரியாது மா , என்ன குறை வெச்சோம் இவளுக்கு , இப்படியொரு காரியத்தைப் பண்ணி எங்க எல்லாரையும் தல குனிய வெச்சுட்டாளே , கண்டவன் எல்லாம் பேசறமாதிரி வெச்சது இவளால் தானே” என்று கண் கலங்கினார்.

“இங்க பாருடி அவன் வெளில போயிருக்கான் , அவன் வரதுக்குள்ள இங்க இருந்து போய்டு” என்றவர் அவர் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டார்.

அவள் அங்கேயே அழுதுகொண்டு நிற்கக் கொற்றவைக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை , அவனின் புல்லட்டின் சத்தம் கேட்க இவளைப் பதற்றம் தொற்றிக்கொண்டது.

“நீ உள்ள இரு” என்று அவளை ஒரு அறைக்குள் அனுப்பியவள், வெளியில் வந்து நிற்க , உள்ளே நுழைந்தவன் அவள் முகத்தின் பதற்றத்தை கவனித்தான்.

“என்ன ஆச்சு” என்றவன் கேள்வியில் “ஒன்னும் இல்ல வாங்க” என்று அவள் முன்னே நடக்க.

“கொற்றவை” என்றவன் அழுத்தமான அழைப்பில்… “இனியால் வந்துருக்கா , ஏதோ பிரச்சனைபோல நீங்கக் கோவப்படாம பொறுமையா கேளுங்க ப்ளீஸ்” என்று முடித்தாள்.

அவளையே பார்த்திருந்தவன் சோபாவில் சென்று அமர , கொற்றவை இனியாளை அவன் முன்பு கொண்டு வந்து நிறுத்தினாள் , அழுது சிவந்த முகம் கொஞ்சம் வீங்கி இருந்தது.

அவன் அமைதியாகவே இருக்க இனியால் தானே சொல்லத் தொடங்கினாள் “அண்ணா நீங்கக் குடுத்த காசு நகை வெச்சு நாங்களே புதுசா டியூஷன் சென்டர் தொடங்கினோம் , நல்ல தான் போச்சு ஒரு மாசம் முன்னாடி வரைக்கும், நெறய பசங்க படிச்சாங்க என்னோட நகை எல்லாம் கூட மீட்டுட்டார்”.

“வீட்டைக் கூடக் கொஞ்சம் பெருசா எடுத்தி கட்டிட்டோம் , திடீர்ன்னு அங்க பாடம் நடத்துற ஒரு சார் வேற ஜாதி பொண்ண கூட்டிட்டு போய்க் கல்யாணம் பண்ணிட்டார் , அந்தப் பொண்ணு சைடு கொஞ்சம் பெரிய ஆளுங்க”.

“அன்னைக்கு ராத்திரியே வந்து சென்டரை மொத்தமா அடிச்சு நொறுக்கிட்டாங்க , இவரையும் ரொம்ப அடிச்சுட்டாங்க நானும் இவரும் இந்த மாதிரி தான் கல்யாணம் பண்ணிணோம்ன்னு யாரோ சொல்லிட்டாங்க”.

“இதே வேலையா வெச்சுருக்கீங்களானு சொல்லிச் சொல்லி அடி , தலைல பன்னெண்டு தையல் கால் எலும்பு ஒடஞ்சிருக்கு நடக்க முடியாது இப்போ”.

“ரொம்ப கஷ்டம்னா ஹாஸ்ப்பிட்டலுக்கே நெறய செலவு ஆயிடுச்சு, சமாளிக்க முடியல கொஞ்சம் உதவி பண்ணுனா” என்க அவனுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.

இவர்கள் இதே தவறை செய்தபோது இன்பனின் குடும்பம் ஒதுங்கிப் போனது , இப்பொழுது வேறொரு பெண்ணின் காரணத்தால் இவன் அடிபட்டுக் கிடக்கிறான் , எப்படியோ போ என்று விட முடியவில்லை.

வாயிலில் நின்று அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த வசந்தனை திரும்பிப் பார்க்க “அண்ணா” என்று வந்து நின்றான் அவன்.

“எவ்ளோனு பாத்து மொத்தமா ஹாஸ்பிடல்ல கெட்டிடு” என்றவன் கார்டை அவனிடம் கொடுத்துவிட்டு , கொஞ்சம் பணத்தை கொற்றவையின் கையில் வைத்துவிட்டு மாடி ஏறினான்.

தன கையில் இருந்த பணத்தை அப்படியே இனியாளின் கையில் வைத்தவள் “இப்போ போ நான் அப்புறம் வந்து பாக்குறேன்” என்றாள்.

மாடியைப் பார்த்துக்கொண்டே அவள் நிற்க “எல்லாம் உடனே சரி ஆகாது , இது சரி ஆகுமானும் எனக்குத் தெரியல போப்பாக்கலாம்” என்று அவளை அனுப்பினாள்.

வசந்தனும் வண்டியை எடுத்துக்கொண்டு அவளின் ஆட்டோவின் பின்னே சென்றான் மருத்துவமனை நோக்கி.

அறைக்குள் சென்றவள் பார்த்தது கட்டிடலில் ஒரு கையை வைத்துக் கண்களை மறைத்துப் படுத்திருந்தவனை தான், கதவை அடைந்தவள் அவன் அருகில் சென்று படுத்து அவனை அணைத்துக்கொள்ள , அவள் புறம் திரும்பியவன் அவளைத் தன்னுள் இன்னும் இறுக்கமாக இழுத்து அணைத்தான்.

“ஒகே தான” என்றவள் கேள்விக்கு “இப்படியே இரு ஒகே ஆயிடுவேன்” என்றவன் முதுகை மெல்ல தட்டி கொடுத்தாள் , சிறிது நேரம் சென்று திரும்பியவன் அவளைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டு  “அங்க என்ன பிரச்சனை” என்றான்.

“தெரியல அருணா கோவிச்சுட்டு வந்துட்டான்னு மட்டும் அம்மா சொன்னாங்க போனா தான் தெரியும் , ஏன் இப்படி பண்றாங்கன்னு ஒன்னும் புரியல” என்க.

“முக்கியமான காரணம் பொறுமை இல்லை , எப்போவும் ஸ்மூத்தா ஹாப்பியா லைப் போகணும் நினைக்கிறாங்க , அப்படி யாருக்குமே நாடகக்காதுனு அவங்களுக்கு புரியல”.

“அவங்களே மாறினாதான் உண்டு இவங்களுக்குலாம் அட்வைஸ் வேல செய்யாது , வேணும்னா போய் வாழு வேண்டாம்னா போன்னு விட்டுரனும் , அவங்கள நாம தாங்கலைனு தெரிஞ்சாலே கொஞ்சம் பயம் வர ஆரம்பிக்கும்” என்றவன் கூற்று அவளுக்கும் உண்மை என்று தோன்றியது.

அன்று மாலை கொற்றவை அவளின் தாய் வீடு சென்றாள், ஆராதனாவும் வந்திருக்க இவள் சென்றபோது அறையில் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள் அருணா , அவளுடைய நெருங்கிய தோழியிடம் மாமியார் வீட்டின் கஷ்டங்களைக் கூறிக் கொண்டிருந்தாள்.

நேரே கிச்சன் செல்ல ராதா மகளுக்குப் பிடித்த போல , மாலை சாப்பிட முறுக்கு சுட்டுக்கொண்டிருந்தார்.

அங்குச் சென்ற கொற்றவை “என்ன செய்றீங்க” என்க ,  “அருணாக்கு முறுக்கு சாப்பிடணும் சொன்னா அதான் செய்றேன்”  என்றவர், இவளுக்கு ஒரு தட்டில் வைத்துக் கொடுக்க அதை ஓரமாக வைத்தவள், அடுப்பை அணைத்து விட்டு அவரின் கைபிடித்து தோட்டத்திற்கு இழுத்து சென்றாள்.

உடன் ஆராதனாவும் வர “என்ன நெனச்சுட்டு இருக்கீங்க , உங்க பொண்ண இங்கயே வெச்சு சீராட்ட போறீங்களா… புகுந்த வீடு போய்ப் பத்துநாள் கூட ஆகல அதுக்குள்ள வந்து நிக்குறா” என்றாள் கோபமாக.

“இல்லமா அவங்க மாமியார் காலைலே எழுந்து வேலை பாக்கலைனு ரொம்ப கேவலமா பேசுறாங்க போல , அவளுக்கு மசக்கை தொல்லை அதான் காலைல எழ முடியல” என்றார் ராதா.

“இல்லனா மட்டும் அவ வேல செஞ்சுடுவாளா” என்று கேட்டாள் ஆராதனா.

“இல்லடி…”  என்ற தாயை தடுத்தவள் “இங்க பாரு ஏதோ வீட்டுக்கு மூத்த மருமகனா போய்ட்டதால கல்யாணத்த நடத்தினார் , உன் வீட்டு பஞ்சாயத்துக்கு எல்லாம் வந்து நின்னுட்டு இருக்க முடியாது, எதுக்காவது என்ன கூப்பிட்ட அப்படியே நீயும் உன் வீட்டுக்குப் பொட்டி கட்டிடுனு சொல்லிட்டாரு , நாங்க எதுக்கும் வரமாட்டோம் உன் பொண்ண ஒழுங்கா போய் வாழச் சொல்லு இல்ல எப்படியோ போங்க” என்றவள் உள்ளே சென்றுவிட.

“இவ இங்க வந்து நின்னுட்டா எல்லா பிரச்னையும் முடிஞ்சுடுமா, அவளுக்குத்தான் புத்தி இல்லனா நீங்களும் அப்படிதான் இருக்கீங்க” என்றவள் குரலை இடைவெட்டி வந்தது அருணின் குரல்.

“யாரு என்ன சொன்னாலும் அவங்க புத்தில ஏறாது, உன் பொண்ணு பத்து நாள்ல திரும்பி வரதுக்கு நான் கடன் வாங்கி கல்யாணம் பண்ணல, என்ன நெனச்சுட்டு இருக்கீங்க எல்லாரும், ரெண்டு நாள் டைம் அவ ஒழுங்கா புருஷன் வீடு போகணும்”.

“அவளா தேர்ந்தெடுத்த வாழ்க்கை அட்ஜஸ்ட் பண்ணி போய்த் தான் ஆகணும் , முடியாதுனா நீங்க உங்க பொண்ண வெச்சு பாத்துக்கோங்க நான் ஆபீஸ் பக்கம் தனியா வீடு பாத்து போறேன்” என்றவன் வெளியில் சென்றுவிட.

என்ன செய்ய என்று தெரியாமல் தடுமாறி நின்றார் ராதா, எத்தனையோ பேசிப்பார்த்தும் அருணா பிடிவாதமாக நிற்க, அருண் அவனின் நண்பர்களுடன் சென்று தங்கிக் கொண்டான்.

அதற்க்கு அடுத்த வாரம் கிஷோரை அழைத்த இன்பன் பேச வேண்டும் என்று வரச்சொல்ல , அவனுடைய நர்சரிக்கு மாலை வந்து சேர்ந்தான் கிஷோர்.

அங்கு அவனைக் காத்து இன்பனும் வெங்கடேசனும் நின்றிருந்தனர், “வாங்க” என்று அழைத்துச் சென்று உள்ளே அமரவைத்தவர்கள் காப்பி கொடுத்துவிட்டு  “அப்பறம் என்ன பிரச்னை” என்க.

இருவரையும் மாறி மாறிப் பார்த்தவன் “எல்லா விஷயத்துலயும் இன்பனை காண்பித்து உங்கள கம்பேர் பண்ணி பேசுறா , வீட்ல எந்த வேலையும் செய்ய மாட்டறா , எங்க அம்மா ஏதாவது சொன்னா சண்டைக்கு நிக்குறா” என்று அடுக்கிக் கொண்டே செல்ல.

“எல்லாம் தெரிஞ்சுதான லவ் பண்ணினீங்க” என்றான் இன்பன்.

“ரெண்டு பேருமே தப்பு பண்ணிடீங்க , இனிமேலாவது அதைச் சரி பண்ண பாருங்க , அவள உங்க வீட்ல பொருந்தி போக வைக்க வேண்டியது உங்க பொறுப்பு , நீங்க இன்னும் கொஞ்சம் அனுசரணாயா அவகிட்ட நடந்தாலே போதும் எல்லாம் மெல்ல மாறும்”.

“பிரிவு எதற்கும் தீர்வு இல்லை , உங்க வீட்ல கேட்டது எல்லாம் போட்டுப் பொண்ண அனுப்பினது இப்படி திருப்பி அனுப்ப இல்லை , நீங்க நல்ல விதமா நடந்துக்குற வரைக்கும் நாங்களும் அப்படியே நடந்துப்போம் , புரியும்னு நினைக்குறேன்”.

“இன்னைக்கே உங்க பொண்டாட்டிய வீட்டுக்குக் கூட்டிட்டு போயிருக்கணும், நாங்க சொல்லி நீங்க வந்ததா தெரிய கூடாது கொஞ்சம் நீங்களும் அட்ஜஸ்ட் பண்ணி போங்க , உங்க அம்மாவையும் மனைவியையும் சமாளிக்க வேண்டியது உங்க பொறுப்பு மகன் வாழக்கை நல்லா இருக்கணும்னா உங்க அம்மாகிட்டயும் கொஞ்சம் அடங்கிப் போகச் சொல்லுங்க, திரும்ப இந்த மாதிரி பேச வெக்காதீங்க” என்றவன்.

“ஒரு வீட்ல பொண்ணு எடுத்துருக்கோம் இப்படி முறுக்கிட்டு போறது நல்லா இல்ல, எதுவும் தேவ சமாளிக்க முடியலைன்னா எங்க கிட்ட தயங்காம கேளுங்க, அத விட்டு இப்படி இனிமே நடக்க கூடாது” என்க.

“சரி சரி” என்று மண்டை ஆட்டியவன் , நேரே வீடு சென்று அம்மாவிடம் கறாராகப் பேச , அவர் எகிற அப்போ நான் தனிக்குடித்தனம் போய்டுறேன் என்னால உங்க ரெண்டு பேரையும் சமாளிக்க முடியல நிம்மதி இல்ல என்றான் முடிவாக.

அதற்கும் அவர் பேசத் தலைவிதியை நொந்தவன், ஒரு படுக்கை அறை கொண்ட வீடு பார்த்துவிட்டு மனைவியை அழைத்தான் , அதற்கும் அவள் குறை சொல்லிப் பிரச்சனை செய்ய , டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிட்டான்.

ராதாவும் கோபாலனும் பதறி அடித்து அவனிடம் செல்ல , அவர்கள் சீராகக் கொடுத்த அனைத்தையும் திருப்பிக் கொடுத்தவன் அவளோட வாழ முடியாது எடுத்துட்டு போங்க என்றான்.

விஷயம் அறிந்து யாரும் வந்து “என்ன” என்று கேட்க வில்லை, மகள்கள், மருமகன்கள் யாரும் வரவில்லை , அருண் வந்தவன் சரி கெடச்சது எல்லாம் வித்துட்டு என் காச குடுங்க கடனை அடிச்சுட்டு என் வாழக்கையை  நான் பாக்குறேன் என்றான்.

மற்றும் அருணாவிடம் அம்மா அப்பா செலவுக்கு மாசம் ஐயாயிரம் மட்டும் தான் கொடுப்பேன் , உனக்கு வேணும்னா வேலைக்குபோ என்றுவிட்டான்.

ஒரு மாதம் பொறுத்தவள் கணவனிடம் மீண்டும் சென்றாள், இந்த முறை அவன் சில முடிவுகளைத் தீர்க்கமாக எடுத்திருந்தால்  “என் வருமானத்தில் வாழ முடியும் என்றால் வா இல்லை என்றால் வராதே” என்றுவிட  வேறு  வழி இல்லாமல் அவளும் தலைவிதியே என்று அவனுடன் இருந்து கொண்டாள்.

ஆபீஸ் அருகில் வீடு பார்த்த அருண் தாய் தந்தையுடன் அங்குக் குடி பெயர்ந்தான்,  இனியாவின் கணவனின் உடல் நிலை சரி ஆக அணைத்து உதவிகளையும் இன்பன் செய்தான்.

அதோடு அவனுக்குத் தெரிந்த இடத்தில ஒரு வேலைக்கும் ஏற்படு செய்தான் , தங்கையிடம் இப்பொழுதும் பேசுவதில்லை.

திருமணம் முடிந்து ஐந்தாம் மாதம் அழகான மாலை வேலை, மிதமான சாரல் விழுந்து கொண்டிருந்த நேரம் தங்களின் கடைக்கு வந்து சேர்ந்தாள் கொற்றவை.

பில் செக்க்ஷனில் இருந்தவனை பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றவள் அவனை இறுக்கமாக அணைத்துக்கொள்ள “ஏய் நிலாமா என்னடா இந்த நேரம் இப்படி , என்னாச்சு!!  யாரும் ஏதும் சொன்னாங்களா” என்க.

“ஆமாம்” என்று தலை ஆட்டினாள் , அவள் முகத்தைக் கையில் தாங்கியவன்  “யாரு என்ன சொன்னா”  என்று கோபமாகக் கேட்க.

“நான் சொல்லுவேன்…… ஆனா நீங்க அவங்கள ஒன்னும் சொல்ல மாட்டிங்க” என்று முகத்தைச் சுருக்க.

“யாருனு சொல்லு எப்படி கேக்குறேன் பாரு” என்றவன்“ பாட்டியா!! அவங்க ஏதும் சொல்லமாட்டாங்களே” என்று யோசிக்க.

“அவங்க இல்ல , இனிமே காப்பி சாப்பிட கூடாதுனு சொல்லிட்டாங்க”.

“யாரு சொன்னா” என்க.

“டாக்டர்”.

“ஏன்”.

“உங்க புள்ளைக்கு அது ஒத்துக்கல, உடனே வெளில தள்ளி விட்டுறாங்க”  என்க முதலில் புரியாமல் இருந்தது , அடுத்த நொடி மனதில் மின்னல் வெட்டியது.

“நிலாமா…… நிஜமாவா” என்றவனின் மார்பில் முகத்தைப் புதைத்தவள் “ஹ்ம்ம்” என்றாள் வெட்கம் சுமந்து , அவளைத் தன்னில் இழுத்து அனைத்துக்கொண்டவன் மனம் எங்கும் சந்தோஷ சாரல்.

திருமணத்திற்கு பின் அவர்கள் காதல் இன்னும் இன்னும் ஆழமாக அழகாகப் புரிதலுடன் வளர்ந்தது , அவளின் அனைத்துமாக இருந்து அவளைத் தாங்கினான்.

இருவருமே வாழ்வில் சில துன்பங்களைக் கடந்து வந்தவர்கள் , இனி அவர்கள் வாழ்வு  நிம்மதியாக நிறைவாக இருக்கும்.