21

இத்தனை அழகான இனிமையான ஒரு விடியல் தன் வாழ்வில் வரும் என்று கொற்றவை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

கட்டிலில் அவன் சாய்ந்து அமர்ந்திருக்க அவன் மார்பில் தலை சாய்ந்திருந்தாள்.

இருவரிடமும் அமைதி அவள் நாடி பற்றி முகம் உயர்த்தி நெற்றியில் இதழ் பதித்தவன் “இன்பனின்  நிலவு சந்தோஷமா இருக்கா” என்க.

அவனையே பார்த்திருந்தவள் “ரொம்ப” என்றாள் விழிகளில் கனவு மின்ன , உறங்கா இரவின் மிச்சம் இன்னும் விழிகளில் தங்கி நிற்க முகம் பூரிப்பில் மின்னியது.

அவளைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தவன் மீண்டும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் சென்று அவனைப் பார்த்தவள் “பசிக்குது” என்றாள் முகத்தைச் சுருக்கி , சிரித்தவன் “வா ரெடி ஆகி கீழ போலாம்” என்று அவளைக் குளிக்க அனுப்பினான்.

‘பசிக்குது” என்றவளை காக்க வைக்க அவன் விரும்பவில்லை, மற்றோரு அறையில் அவன் குளித்து வர இருவரும் பழைய வீட்டிற்கு

சாமி தொழுது வர விதவிதமாகச் சமைத்து வைத்திருந்தார் காந்தியம்மா,  “ஏன் பாட்டி இவ்ளோ செஞ்சீங்க”  என்றாள் கொற்றவை கவலையாக.

தானும் ஏதும் உதவி செய்யவில்லை தனியாக வயதானவர் இத்தனை செய்திருக்கிறார் என்று குற்றவுணர்ச்சி ஆனது அவளுக்கு.

“அண்ணி பக்குவம் சொன்னது மட்டும் தான் அவங்க , காலைல இருந்து அடுப்புல வெந்தது நாங்க” என்றான் வசந்தன் அவனையும் லட்சுமியையும் காட்டி.

இருவரும் கொஞ்சம் சோர்ந்து தெரிந்தனர் பாவமாகிவிட்டது கொற்றவைக்கு , அவள் முக மாறுதலைக் கண்ட வசந்தன்.

“அண்ணி இதுக்கெல்லாம் ஏன் இவ்ளோ பீல் பண்ணறீங்க உங்களுக்குச் செய்யாம யாருக்கு செய்யப்போறோம் , உண்மையாவே ரொம்ப ரசிச்சு பாத்து பாத்து சமைச்சிருக்கோம் சாப்பிட்டு சொல்லுங்க” என்க.

அனைவரையும் அமர்த்தி அவளே பரிமாறினாள் , அவள் இலையில்  இன்பன் பரிமாற அனைவரும் ஒன்றாக அமர்ந்து கதைகள் பேசி மகிழ்ச்சியாக உண்டு முடித்தனர்.

மறுவீட்டு விருந்துக்கு அழைக்க அருண் வருவதை பற்றி முன்பே பேசப்பட்டது , அனால் இன்பநிலவன் வேண்டாம் என்று மறுத்துவிட்டான்.

கொற்றவையிடம் கேட்ட பிறகுதான் அந்த முடிவை எடுத்தான், அவளுக்குப் பெரிதாகத் தாய் வீட்டில் சீராட விருப்பம் இல்லை , அவள் இதுவரை அப்படி ஒன்றை அறிந்ததில்லை இனிமேலும் அது வேண்டாம் என்று உறுதியாக நின்றாள்.

அவனுக்கும் அதில் விருப்பம் இல்லை , ஒருவேளை மனைவி விரும்பினால் அவள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியிருந்தான்.

அவளே “வேண்டாம்” என்று சொல்லியபிறகு தங்கள் முடிவை அவர்களிடம் கூறிவிட்டார்கள் , ராதாவிற்கு அதில் வருத்தம் இருந்தது கொற்றவை அவரிடம் நல்ல விதமாகவே சொல்லிவிட்டாள், அருணா திருமணம் இன்னும் இறுதினங்களில் நடக்க இருக்க இது எல்லாம் தேவை இல்லை கல்யாண வேலைகளைப் பாருங்கள் என்று.

உணவை முடித்தபிறகு அவர்களிடம் ஓய்வெடுக்க சொன்னார் காந்தியம்மா  “இல்ல பாட்டி நான் இருக்கேன் மதியம் என்ன செய்யணும்” என்றவளை தனியே அழைத்துச் சென்று “போய்த் தூங்குத்தா, இல்லனா என் பேரான எப்படி சமாளிப்ப” என்றவரை பார்க்க முடியாமல் முதல் ஆளாக அந்த வீட்டிற்கு ஓடி விட்டாள்.

சத்தமாகச் சிரித்துக்கொண்டே வந்தவர் பேரனைப் பார்த்து நக்கலாகச் சிரிக்க “என்ன பண்ணுச்சு தெரியலையே” என்று எண்ணியவன் வீட்டிற்கு செல்ல அவர்கள் அறையில் கட்டிலில் படுத்திருந்தாள் கொற்றவை.

“என்ன செய்கிறாள்” என்று அருகில் செல்ல அவன் வருவதை உணர்ந்து முகத்தை மறைத்தாள் “என்ன பண்றீங்க நிலாமா” என்று அவள் அருகில் படுக்க.

“அச்சோ போங்க  பாட்டி ரொம்ப கிண்டல் பண்றாங்க” என்றாள் கொஞ்சலாக.

 “ஐயோ அத நீ இவ்ளோ அழகா சொன்னா  நான் என்ன ஆகுறது” என்றவன் அவளைச் சேர்த்தணைத்து  “தாங்க மாட்டடி” என்று  அணைப்பை இறுக்கினான்.

அவன் தேவை புரிந்தது பெண்ணிற்கு , ஆனால் மேலே முன்னேறாமல் “அப்படியே தூங்கு” என்று அவளைத் தன் அணைப்பில் வைத்திருந்தவன் அவள் உறங்கியபிறகு உறங்கினான்.

மூன்று மணி கடந்த பிறகு வசந்தனின் அழைப்பில் இருவரும் விழித்தனர் , உணவை முடித்தபிறகு இன்பநிலவனும் வசந்தனும் நர்சரிக்கு சென்றனர், பாட்டியுடன் அமர்ந்து அவளுடைய இன்பனை பற்றி ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவர்கள் வீடு திரும்பும்போது காந்தியம்மாவுடன் ஓட்டுவீட்டின் திண்ணையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தாள்,  நொடிக்கொருதரம் விழிகள் அவன் வருகையை எதிர்பார்த்து சுழன்றது.

புல்லட்டின் சத்தம் சங்கீதமாகச் செவிகளை நிறைக்க அவனைப் பார்த்தவுடன் உடலில் மின்சாரம் பாய்ந்தபோல ஒரு சந்தோஷ உணர்வு படர்ந்தது.

“ஏன்யா புது பொண்டாட்டிய வீட்ல விட்டுட்டு இந்த வெட்டிப் பய கூட ஏன் ஊர்வலம் போற” என்ற பாட்டியைக் கொலைவெறியோடு முறைத்த வசந்தன்.

“ராத்திரி சாப்பிட்டு அவங்க போனதும் சில்வண்டு தனியா என்கிட்டே சிக்குவல்ல , இருக்கு உனக்கு” என்க.

“போடாப் போடா வெட்டிப்பயலே உங்க அப்பனையே ஒலக்கையாள அடிச்சவடா நான் அது இப்போவும் இங்க தான் இருக்கு” என்க  சிரித்துக்கொண்டே உள் நுழைந்தான் இன்பன்.

இரவு உணவை முடித்ததும் காந்தியம்மாவிடம் “பாட்டி நாளைக்கு கொற்றவையை அவங்க வீட்ல காலைல கொண்டு விடலாம்னு இருக்கேன், நாளன்னைக்கு அவ தங்கச்சி கல்யாணம்ல இவளும் அங்க இருக்கட்டும்” என்க.

“அதுக்கு என்னப்பா கொண்டு போய் விடு , நீங்களும் என்ன தேவைன்னு பாருங்க இப்போ அந்த வீட்டு  மாப்பிள நீ , உன் கடமையை நீயும் செய்யணும்” என்க.

அவனும் அதை முன்பே தீர்மானித்திருந்தான் மெல்ல தலை அசைத்துச் சம்மதம் சொன்னான் இருவரும்  புதிய வீட்டிற்கு சென்றனர்.

கீழே கதவை அடைத்தவுடன் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டவன் தங்கள் அறைக்குச் சென்றான், நல்ல வசதியாக அவன் கழுத்தில் கைகள் கோர்த்துக்கொண்டு அந்த நொடிகளை ரசித்தாள்.

கட்டிலில் அமர்ந்து அவளைத் தன் மடியில் அமர்த்தியவன் “உன்கிட்ட கேக்காம நாளைக்கு அங்க போறத பத்தி சொல்லிட்டேன் , உனக்கு ஒகே வா” என்க.

“என் தங்கச்சி கல்யாணம் நாப்போகாம எப்படி” என்றாள் புருவங்கள் ஏற்றி இறக்கி.

“நிலாமா… ஆனா ராத்திரி வந்துடுவீங்கல்ல” என்றவன் குரலில் என்ன உணர்வது.

அவன் முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்தியவள்  “நாலு வருஷத்தை இழந்துட்டேன் , அதும் உங்களுக்கு என்னைப் பிடிச்சிருந்தும் நீங்கச் சொல்லலாம இருந்து”.

“இனிமே ஒரு நாளைக் கூட விடுறதா இல்லை , சண்டையோ சமாதானமோ இங்க தான் இருப்பேன் , நீங்கத் தான் என்னைப் பார்த்துக்கணும்” என்க கண்களில் குறும்பு மின்ன இதழில் மந்தகாசம்  விரிந்தது , அதைத் தன்னிடமே வைத்துக்கொள்ளாமல் அவளுக்கு உடனே கடத்திவிட்டான் அவன் இதழ்கள் வழி.

காலையே அம்மா வீடு செல்ல வேண்டும் என்ற நினைவுகள் எல்லாம் காற்றில் கரைய ஒருவரில் ஒருவர் உருகி கரைந்தனர் இரவெல்லாம்.

அவள் வீட்டிற்கு செல்லும்போது காலை மணி பதினொன்று , ஆராதனா  அங்கிருக்க ஆண்கள் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர், மாமன்கள் இருவரும் தோள்கொடுக்க வந்து சேர்ந்தனர் அருணுக்கு, ஆளுக்கு ஒரு பொறுப்பை எடுத்துக்கொள்ள அவன் நிம்மதியாக மூச்சுவிட்டான்.

திருமணத்திற்காக இவ்வளவு பெரிய  காரியத்தைச் செய்தவள் இப்பொழுது என்னவோ விட்டதை பார்த்துப் படுத்திருந்தாள்.

 திருமணத்தைப் பற்றிய ஒரு சின்னப் பதட்டமோ எதிர்பார்ப்போ அவளிடம் இல்லை , அதிகாலை எழுந்து தயாராவதை யோசித்தாலே இப்பொழுது தலை சுற்றியது , ஹாலில் ஆரதானவுடன் தாம்பூல பைப்போட்டுக்கொண்டிருந்த கொற்றவையின் மேலே பார்வை பதிந்தது.

முகம் புதிய அழகில் ஜொலித்தது கொற்றவைக்கு , கன்னங்களில் செம்மை நிரந்தரமாகத் தங்கியதை போல , இடையில் அலைபேசியை எடுத்துப் பார்ப்பவள் வழிகளில் வெட்கத்தின் சாயல்.

தன்னால் இப்படி இருக்க முடியவில்லையே என்ற இயலாமையின் கோபம் அனைத்தும் கிஷோரின் மேல் திரும்பியது அருணாவிற்கு.

மெல்ல மெல்ல அனைத்தையும் செய்து முடித்தனர் , திருமண வீட்டில் வேலைகளுக்கா பஞ்சம் சரியாக ஒன்பது மணிக்கு வெங்கடேசனுடன் வந்துவிட்டான் இன்பன்.

காலை உணவு மதியம் சாப்பாடு அனைத்தும் மண்டபத்தில், மற்ற  வேலைகளும் முடிந்திருக்க கொஞ்சம் ஓய்வாக அனைவரும் அமர்ந்திருந்தனர்.

கொற்றவை இன்பனுடன் போகிறேன் என்றபோது யாராலும் மறுக்க முடியவில்லை அப்படி ஒருத்தி இந்த வீட்டில் இருந்ததாய் அவர்கள் இத்தனை நாள் எண்ணி பார்க்கவில்லையே , இப்பொழுது மட்டும் என்ன ஆகையால் அவனுடன் தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

அதிகாலை முகூர்த்தத்துக்கு சரியாக வந்து சேர்ந்திருந்தனர் , நீல நிற பட்டுடுத்தி அவளும் , பட்டு  வேஷ்டி இளம் நீல நிற முழுக்கை  சட்டையில் அவனும் , வஞ்சனை இல்லமால் கணவனைச் சைட் அடித்துக்கொண்டிருந்தாள் கொற்றவை.

அவனுக்குத்தான் அவஸ்தையாக இருந்தது இங்கே , மனைவியை அள்ளிக்கொள்ளவும் முடியவில்லை , அவளைப் பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.

பார்லர் பெண் அலங்காரம் செய்யக் காத்திருக்க மூன்று முறை வாந்தி எடுத்துச் சோர்ந்து போய்ப் பெரும் எரிச்சலில் இருந்தாள் அருணா , இந்த நிமிடம்வரை அவளிடம் பேசவோ எப்படி இருக்கிறாள் என்று கேட்கவோ இல்லை கிஷோர்.

காலை எழுந்தது தலை வலி எடுக்க, அதற்காகக் குடித்த காப்பி மொத்த குடலையும் வெளியில் எடுக்கும் வேலையைப் பார்த்தது , ஒரு வழியாக அவளை இருத்தி அவசரமாக ஒரு அலங்காரம் செய்தனர்.

அவள் தேர்வு செய்த எதையும் செய்ய இயலவில்லை , மணமேடையில் அவளை அமர்த்துவதற்குள் ஆரதனாவுக்கும் கொற்றவைக்கும் மண்டை காய்ந்தது.

தாலி கட்டி முடித்த அடுத்த நொடி அங்கேயே அவள் வயிற்றின் கரு வேலையைக் காட்ட , ஆள் ஆளுக்கு ஒன்று பேசினர் , உறக்கம் இல்லாமால் அப்படி என்று பேசிச் சமாளித்தாலும் சிலருக்கு சந்தேகம் சரியாக வந்து சேர்ந்தது.

சிறப்பாகத் திருமணத்தை முடித்துச் சீர்வரிசையோடு அவளைப் புகுந்த வீட்டில் விட்டனர் , தங்கள் கடமை முடிந்தது என்று இரு மருமகன்களும் மனைவியரோடு அவர் அவர் வீடு சென்றுவிட்டனர்.

கொற்றவை இன்பனின் நாட்கள் அழகாக நிறைவாகச் சென்றது, பாதி நாட்கள் அவளைப் பள்ளியில் கொண்டு விட்டு அழைத்து வருவதை விரும்பிச் செய்துகொண்டிருந்தான்.

வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேர அனைத்தையும் ஒழுங்கு படுத்தி கிச்சன் செட் செய்து இங்கேயே சமயல் செய்யத் தொடங்கி விட்டனர், காலை அவளே அடுப்படி வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

காந்தியம்மா அவளுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார் , மற்ற வேலைகளுக்கு ஒரு பெண்ணை வரச் சொல்லி விட்டனர், பேரனின் மனைவி அனைத்தையும் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள இப்பொழுதுதான் நிம்மதியாக உணர தொடங்கினார் பேரனைப் பற்றிய கவலை இல்லாமல்.

அருணாவின் திருமணம் முடிந்த பத்தாம் நாள் அந்த வீட்டில் வாழ முடியவில்லை என்று அவள் பிறந்த வீட்டிற்கு  வந்துவிட்டதாகக் கூறி அழைத்த ராதா அழுது கரைந்தார்.

மீண்டும் முதலில் இருந்தா என்று தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள் கொற்றவை , அதேநேரம் முன்னே யாரோ நிற்பதை போலத் தோன்ற நிமிர்ந்து பார்த்தவள் முன் முழுதாகத் தன்னை மூடிக் கையில் ஒன்று இடுப்பில் ஒன்று என்று இரு குழைந்தைகளுடன் நின்றிருந்தாள் ஒரு பெண்.

“எங்கடி வந்த” என்ற காந்தியம்மாவின் குரலில் இவள் பதறி  எழ “பாட்டி அண்ணனைப் பாக்கணும்” என்றாள் அவள்.