19
திருமண ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது, வட்டிக்கு வாங்கிய பணத்தில் மிக உற்சாகமாக ஷாப்பிங் செய்துகொண்டிருந்தாள் அருணா.
இந்தப் புடவை வேண்டும், அந்த நகை வேண்டும் என்று இருக்கும் பணத்தில், பார்த்தால் கொஞ்சம் நிறைய நகை இருப்பதை போலத் தோற்றம் வரும் நகைகளைத் தேர்ந்தெடுத்தாள்.
சபையில் பார்க்கப் பளிச்சென்று இருக்க வேண்டுமே.
கொஞ்சம் அடக்கி வாசிக்கிறியா, உண்மையில கல்யாணம் அவளுக்கு ஆனா அவ இன்னும் எதுமே வாங்கல என்று ஆராதனா கூடச் சொல்லிவிட்டாள்.
ராதாவிற்கு சிறிது பயம் இருந்தது, வயிற்றில் பிள்ளையை வைத்துக் கொண்டு இந்தச் சடங்குகள் எல்லாம் செய்யலாமா எதுவும் பாதிப்பு வருமா என்று.
அவர் அனைத்திலும் ஒரு ஒதுக்கத்தை காட்டிக் கொண்டிருந்தார், கொற்றவையிடம் வந்தவர் “அம்மாடி உனக்குக் கல்யாணத்துக்கு புடவை நகை எல்லாம் எடுக்கணுமே எப்போ போறது வாங்க” என்க.
“ஏன் எடுக்க நீங்கக் காசு வெச்சு இருக்கீங்களா” என்றாள்.
“இல்லை, அருண் கிட்ட கேக்கலாம்” என்றவரை நிமிர்ந்து பார்த்தவள் “உங்களுக்கு மனச்சாட்சி இருக்கா, அவன் இன்னும் வேலைக்குக் கூடப் போகல, எங்க இருந்தோ கஷ்டப்பட்டு கடன் வாங்கி செய்றான் அவனை நிமிரவே முடியாம செய்யணுமா உங்களுக்கு” என்றவள்.
“எனக்குக் கல்யாணத்துக்கு எதுவும் தேவ இல்லை” என்று கூறிவிட்டாள் வாங்க நினைத்தாலும் அவர்களிடம் அதற்கான பணம் இல்லை.
திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பு இன்பனின் பாட்டி காந்தியம்மா கொற்றவையை காண வந்தார், இரு பை நிறைய பொருட்களுடன் அவருடன் வசந்தனும் வந்தான்.
வந்தவரை உள்ளே அழைத்து அமரவைக்க, ராதாவும் வந்து அழைத்தார் டீப்போட உள்ளே சென்றார் ராதா.
“வாடா எப்படி இருக்க” என்று கொற்றவையை அருகே அழைத்துப் பேசிக்கொண்டிருந்தார் காந்தியம்மா.
“எப்படி இருக்கீங்க அண்ணி” என்ற வசந்தனிடம் அவனின் நலன் மற்றும் பொதுவான விஷயங்கள் பேசினார்.
டீயோடு கொஞ்சம் இனிப்பும் காரமும் எடுத்து வந்தார் ராதா, சந்தோஷமாகக் காந்தியம்மா எடுத்துக்கொள்ள வசந்தனும் எடுத்துக் கொண்டான்.
உண்டு முடித்து “இதுல கல்யாண புடவை அப்புறம் நகை இருக்கு எங்க வீட்டு பொண்ணுக்கு, வாங்கிக்கடா” என்று அவள் கையில் வைத்தார் காந்தியம்மா.
அவரின் பாதம் பணிந்து வாங்கிக்கொண்டாள் “நல்ல இருடா, என் பேரன் கூட நூறு வர்ஷம் சந்தோஷமா வாழனும்” என்று வாழ்த்தப் புன்னகையில் முகம் பிரகாசித்தது.
சிறிது நேரம் பேசியவர்கள் விடைபெற்றனர்.
அவர்கள் சென்றவுடன் அவசரமாக வந்த அருணா “என்ன கொண்டு வந்தாங்க” என்று பையைக் கையில் எடுக்க.
“ஏய் அது அவளுக்கு வந்தது, அறிவு இருக்கா இல்லையா உனக்கு” என்று ராதா கோவம் கொள்ள அமைதியாக நின்றாள்.
இதை உள்ளே கொண்டு போய் வைத்தால் தான் இல்லாத நேரம் திறந்து பார்ப்பாள் என்று கொற்றவைக்கு தெரியும் அதனால் “பாருங்க” என்று சொல்லிப் பையைக் கையில் எடுத்தாள்.
ஆராதனாவும் வந்தாள் அந்த நேரம், அவளும் அமர்ந்துவிட முதலில் இருந்த துணி பையை எடுக்க, புடவை அதற்க்கு பிளவுஸ் அனைத்தும் இருந்தது.
மேலே ஒரு குறிப்பு “என் நிலவுக்கு” என்று, அழகான மெரூன் நிறத்தில் பச்சை பார்டர் வைத்த புடவை, பச்சை பட்டில் வேலைப்பாடுகள் நிறைந்த பிளவுஸ்.
மிக உயர்ந்த பட்டு, நல்ல விலை இருக்கும் புடவை என்று பார்த்த போதே தெரிந்தது.
மற்றோன்றில் நகை இருந்தது அருணா ஆர்வமாக எட்டி பார்த்தாள், புடவையைப் பார்த்தே அவளுக்கு வயறு எரிந்தது, இந்த வேலைபாடில் புடவை அவள் பார்த்தாள், அனால் விலை அதிகம் என்று எடுக்க முடியவில்லை.
நகை பெட்டியில் இரண்டு கைக்கும் நான்கு நான்கு வளையல்கள், லட்சுமி உருவம் பதித்த பெரிய குடை ஜிமிக்கி, கழுத்துக்கு ஒட்டிப் போடக் குட்டி குட்டியாக லட்சுமி உருவம் ஒவ்வொரு லட்சுமி உருவத்தின் இடையிலும் பச்சை சிகப்பு என்று கல் பாதிக்கப் பட்டிருந்தது.
அந்த ஒரு நெக்ல்ஸ் போதும் அத்தனை அழகாக இருந்தது, அதற்க்கு கீழே போடச் சிறிதும் பெரிதுமாக இரண்டு மாலைகள், காலுக்குக் கொலுசு அனைத்தும் இருந்தது.
இது அவனே சென்று பார்த்துப் பார்த்து வாங்கியது என்று காந்திமதி சொல்லிச் சென்றார், அவன் ரசனையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
“என்னகூடக் கூட்டிட்டு போல, ராத்திரி பாத்தா எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து என் கைல குடுத்து, என் பொண்டாட்டிக்கு நாளைக்கு போய்க் குடுத்துடுன்னு சொல்றான்” என்று சொல்லிச் சென்றார்.
“ஐயோ எல்லாமே அழகா இருக்கே, இத போட்டுட்டு வந்தா செம அழகா இருக்குமே” என்று அருணாவிற்கு உள்ளே புகைய தொடங்கியது.
“இவ்ளோ வாங்கிருக்கான்!! அவ்ளோ காசு இருக்குமா அவன்கிட்ட” என்று வேறு யோசனை ஓடியது.
கல்யாண புடவை எடுக்கக் கிஷோர் வீட்டினரை ராதா அழைக்க, “எல்லாம் முறைப்படியா நடக்குது, எங்க தலை எழுத்து வேற வழி இல்லாம செய்ரோம், அதனால இதெல்லாம் தேவ இல்ல நீங்களே போய் எடுத்துட்டு வாங்க” என்றவர்.
“மேடைல உங்க பொண்ணு வாந்தி எடுத்து எங்க மானத்தை வாங்காம இருக்கணும், இப்போ எங்களுக்கு அந்தப் பயம் தான்” என்று கொட்டும் வைத்தார்.
இவர்கள் மட்டுமே சென்று துணிமணி நகைகள் எடுத்தனர், அதை அவனுக்குப் புகைப்படம் எடுத்து அருணா அனுப்ப, பார்த்தவன் ஒன்றும் சொல்ல வில்லை.
இவள் அவனுக்கு அழைத்து “இது நல்லா இருக்கா சொல்லு, இந்தப் புடவை எடுக்கவா” என்க.
“ஏதாவது ஒன்னு எடுத்துட்டு வா, உயிரை வாங்காத இங்க அம்மா அப்பா எல்லாரும் கண்டபடி பேசிட்டு இருக்காங்க நானே டென்ஷனா இருக்கேன், உனக்கு இப்போ புடவை தான் முக்கியமா” என்று எரிந்து விழுந்தான்.
காதல் திருமணம் கைக்கூடுகிறது என்ற ஒரு சிறிய சந்தோஷம் கூட இல்லை, மனதில் அழுத்தம் கூடியது அருணாவிற்கு, அவர்கள் வீட்டிற்கு சென்றபிறகு என்ன நடக்கும் தன்னை என்னவெல்லாம் பேசுவார்கள் என்று பயமாக இருந்தது.
இவர்கள் அனைத்தையும் பார்த்து முடிக்க அழைத்துவிட்டான் இன்பன், “ஒய் பொண்டாட்டி… எல்லாம் ஓகேயா உனக்குப் பிடிச்சிருக்கா” என்றவன் “ஏதாவது பிடிக்கலைன்னா எடுத்து வை நான் நாளைக்கு வரேன் நாம போய் மாத்திட்டு வரலாம்” என்றான்.
“ஆமாம் பிடிக்கல மாத்தணும்” என்றாள் கொற்றவை.
“எல்லாம் எவ்ளோ அழகா இருக்கு, இவ என்ன பிடிக்கல சொல்றா” என்று மற்றவர்கள் அவளை ஆச்சர்யம் கலந்து பார்க்க மெல்ல நகர்ந்து கொஞ்சம் தூரம் சென்றாள்.
“அப்படியா, சரி எது பிடிக்கல சொல்லு மாத்திடலாம்” என்ற இன்பனின் கேள்விக்கு.
“இந்த இன்பனை பிடிக்கல” என்றாள்.
“எது பிடிக்கவில்லை என்று கூறுகிறாளோ அதைத் தனக்கு தரச் சொல்லிக் கேப்போம்” என்று அவள் பின்னேயே பூனை நடை நடந்து சென்று நின்ற அருணாவின் காதில் அது சரியாக விழுந்தது.
“இந்த இன்பனை பிடிக்கல, எப்போ பாத்தாலும் என்ன மொறச்சிக்கிட்டே வீராப்பா சுத்துறா அந்த இன்பன் வேணும்” என்க ஒரு நொடி அந்தப் பக்கம் அமைதி.
அவன் இதழில் புன்னகை விரிந்திருக்கும் என்று இவளால் உணர முடிந்தது “மொறச்சுட்டு மட்டும் இருக்கமாட்டேன் கடிச்சு திங்கவும் செய்வேன்” என்றவன் குரலில் அவள் இதழ்கள் கடிபட.
“ரெண்டு நாள் வெயிட் பண்ணு என் பசி எவ்ளோன்னு உனக்குச் சொல்றேன்” என்க விழிகளை மூடிக் கொண்டாள்.
அவள் முகத்தின் செம்மை அருணாவிற்கு எரிச்சலாக இருந்தது, “என்ன சொல்லி இருப்பான் இவ்ளோ சிவக்குற அளவுக்கு” என்று யோசித்தவள்.
உண்மையிலே அவன் மட்டும் தான் விரும்பினானா என்று சந்தேகம் கொண்டாள் இவர்கள் பேசுவதை பார்த்து.
ஒருமுறை கூட இத்தனை அழகான உணர்வுகளைக் கிஷோர் தனக்கு தந்ததில்லை என்று உணர்ந்தாள்.
“இன்றாவது தன்னை ஆசிர்வதிப்பாரா” என்று திருமண நாள் காலைக் கோபாலனை பார்த்திருந்தாள் கொற்றவை.
ராதா அவளை அழைத்துச் சென்று அவரின் முன் நிறுத்த, தன் கடமையை அவள் சரியாகச் செய்தாள், இருவரின் காலிலும் விழுந்து எழுந்தாள்.
கோபாலன் நகர்ந்தும் செல்ல வில்லை ஆசிர்வதிக்கவும் இல்லை அவளுக்கு மனதே வெறுத்து விட்டது என்ன மனிதர் இவர் என்று ஒன்றும் பேசாமல் காரில் அமர்ந்துகொண்டாள்.
கோவில் மைதானத்தில் சென்று வண்டி நிற்க, கொற்றவையுடன் ஆராதனாவும் அருணாவும் இறங்கினர், அருண் காலையில் இருந்தே அங்கே தான் இருக்கிறான்.
ஒரு தந்தை செய்ய வேண்டிய அனைத்தையும் அவன் முன் நின்று செய்துகொண்டிருந்தான்.
இவள் இறங்கி இரண்டு அடி நடக்க, எங்கிருந்தோ அவள் அருகில் வந்து நின்றான் இன்பன், கையை நீட்ட அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.
அவன் விழிகளில் அத்தனை ரசனை, கொள்ளை கொள்ளும் அழகில் நின்றாள், விழிகளை அகற்ற இயலவில்லை அவனால், அவனே அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்.
கிஷோர் வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர், கிஷோரின் மூத்த சகோதரன் தன் வருங்கால மனைவியுடன் வந்திருந்தான்.
அவனுடன் வேலைபார்க்கும் பெண்ணை விரும்பி இருவரும் மனம் புரிந்து கொள்ள முடிவும் செய்துவிட்டனர், கிஷோரின் தாய்க்கு அதில் விருப்பம் இல்லை.
அந்தப் பெண் விவகாரத்தானவள், தன் மகனும் விவகாரத்தானவன் என்பதை விட்டுவிட்டு மகனுக்குத் திருமணம் ஆகாத பெண்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.
ஆனால் அவரின் மகன் தன்னுடைய திருமண விஷயத்தில் தெளிவாக இருந்தான், தன்னை புரிந்துகொண்டு அப்படியே ஏற்றுக் கொள்ளும் பெண் வேண்டும் என்று விரும்பினான்.
இருவரின் ரசனைகளும் ஒத்து போக விருப்பத்தைப் பரிமாறிக் கொண்டனர், முதல் முறை கொற்றவை மறுத்தபோதே தாயிடம் அவன் தெளிவாகக் கூறி இருந்தான் “எனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது, தேவை இல்லமால் என் திருமண விஷயத்தில் நீங்கள் இனியும் மூக்கை நுழைக்காதீர்கள்” என்று.
அவர் தான் கேட்கவில்லை, இப்பொழுது அனைவரும் காணவே, அவளை… தான் திருமணம் செய்யப் போகும் பெண் என்று அறிமுகம் செய்து வைத்தான்.
கொற்றவை இன்பநிலவனிடமும் நன்றாகப் பேசி அவர்களை வாழ்த்தினான்.
பூஜைகள் முடிந்து தாலியை கையில் வாங்கியவன் “கொற்றவை” என்று அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள், புன்னகையோடு அவளைப் பார்த்தவன் “கட்டட்டுமா” என்க அவனை முறைக்க முயன்று தோற்றவள் தலையைக் குனிந்து நிற்க மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் சரிபாதியாக மாற்றிக்கொண்டான் இன்பநிலவன். இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்