சேரில் அவன் அமர்ந்திருக்க அவன் அருகில் நெருங்கி நின்று வலப்பக்க மீசையை முறுக்கியவள், அவன் கன்னத்தில் இரு பக்கமும் விரல்களால் பிடித்து “இந்த முகம் எப்போவும் ஒரு இறுக்கத்தில் இருக்கும், சிரிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சேன், சிரிக்கிற மாதிரிக் கற்பனை பண்ணி பார்த்தேன்”.
“ஒரு நாள் உண்மையிலேயே சிரிச்சப்போ அது எப்போவும் இந்த முகத்துல நிலைச்சு இருக்கணும்னு ஆசைப்பட்டேன், என்னால மட்டுமே உங்கள நிம்மதியா சந்தோஷமா வெச்சுக்க முடியும்னு ஒரு எண்ணம், அது உங்க மேல காதலா மாறிடுச்சு” என்றவளை ரசனையோடு பார்த்தவன் அப்படியே இடையோடு சேர்த்து இழுத்து மடியில் அமர்த்தி அவள் தோள் வளைவில் கன்னம் பதித்தான்.
இதனை நேரம் இருந்த இனிமை போய் ஒரு படபடப்பு கொற்றவைக்கு “நீ தொட்டப்போ நா எப்படி ரசிச்சேன், நான் தொட்டா மட்டும் என்ன சுருண்டுக்குற என்ற வம்பு வளர்த்தான்”.
பேச்சு கூட நின்றுவிட்டது “நான் சந்தோஷமா இருக்கணும்னு தான் என்ன விரும்புனியா” என்க.
“இல்லை” என்று மறுத்தவள் “சந்தோஷம்னா என்னனு நான் தெரிஞ்சுக்கணும்னு உங்கள நேசிச்சேன், எனக்கே எனக்கான ஒருத்தர் அது நீங்கன்னு தோணிட்டே இருந்தது, நா உங்களுக்குப் பொருத்தமானவளா ?” என்றாள் விழிகளில் எதிர்பார்ப்போடு.
“கல்யாணம் குடும்பம்னு எந்த எண்ணமும் இல்லாம இருந்தவன் நான், அந்த ஆசையை எனக்குள்ள விதைச்சவ நீ, இந்த இன்பன் மொத்தமும் நிலவுக்குத் தான் டி”.
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாகத் தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி
மூன்று மாதங்களுக்குப் பிறகு வரும் முகூர்த்தத்தில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.
கொற்றவையின் வாழ்வே மாறிவிட்டதை போல, தினம் தினம் இரவும் பகலும் அவனின் குறுஞ்செய்திகளில், அவனின் அன்பில் அழகாகச் சென்றது.
இன்டெர்வியூ செல்வதாக இடையில் சென்று வந்தாள் அருணா, வீட்டிற்கு பணம் கொடுப்பதை இரண்டு மாதம் நிறுத்தி வைத்திருந்த கொற்றவை மீண்டும் கொடுக்கத் தொடங்கினாள்.
இருக்கும் மூன்று மாதத்தில் பழைய போல இருந்துவிட்டு போகலாம் என்று முடிவு செய்துவிட்டாள்.
திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே, டேபிளில் தலை சாய்த்து படுத்திருந்தவளின் அருகில் வந்தவன் அவள் தலை வருட மெல்ல விழிகள் திறந்து பார்த்தாள் “ரொம்ப லேட் ஆயிடுச்சு சாரி” என்றான் இன்பன்.
“அப்படிலாம் சட்டுன்னு சொல்லாத கடத்திட்டு போய்டுவேன்” என்றான் அவள் செவிமடலில் இதழ் உரச.
விழிகள் மூடிச் சிறிது நேரம் நின்றாள் அங்கேயே, அவன் பார்வையை சிரிப்பைப் பார்க்காமலே உணர முடிந்தது, வேறு புறம் பார்த்துக்கொண்டே “நான் ஒன்னு கேக்கவா” என்க.
அவளைத் தன் அருகில் இழுத்தவன் “இப்படி பெர்மிஷன் கேக்காதீங்க நிலாம்மா” என்றான்.
“வீட்டுக்கு என்ன கூப்பிட்டு போக மாட்டிங்களா” என்றாள்.
“மாட்டேன், நீங்க என் மனைவியா வாங்க ஏன்னா… நீங்க வந்து தான் நம்ம வீட்ல பால் காச்சணும்” என்க.
“என்ன??” என்று அதிர்ச்சியாகி அவனைப் பார்க்க.
“ஹ்ம்ம்… இப்போ நாங்க இருக்குறது எங்களோட பழைய வீட்ல, இந்தப் பொண்ண எப்போ பிடிக்க ஆரம்பிச்சுதோ அப்போ தோணுச்சு ஒரு வீடு கட்டணும் அப்படினு, நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் தான் அந்த வீட்டுக்குக் குடிபோறோம்” என்றவனை விழியகலாமல் பார்த்து நின்றாள்.
என்ன சொல்ல என்ன செய்ய ஒன்றும் புரியவில்லை, விழிகள் மெல்ல கலங்க தொடங்க “இப்போ அழுதா நான் இப்படியே வீட்டுக்குப் போய்டுவேன்” என்றான்.
அப்படியும் சில துளிகள் உருண்டு விழுந்தது, அவளின் கைப்பிடித்தவன் “அழாம வந்தா ஐஸ் கிரீம் வாங்கி தரேன்” என்றான் சிரிப்பை அடக்கி.
அவனை முறைத்தவள் வண்டியின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
உச்சிப்பிள்ளையார் கோவிலின் தெப்பக்குளத்தை சுற்றி நிறைய சிறிய பெரிய கடைகள் இருக்கும், எப்பொழுதும் திருவிழா கூட்டம் தான் அங்கே.
அங்கிருந்த பிரபலாமான ஹோட்டலுக்கு அவளை அழைத்துச் சென்றான், கொஞ்சம் இருட்டாக இருக்கும் சீனா மாடல் ஹோட்டல், மிதமான இசையும் மனமும், வெளிச்சம் என்பது சாப்பிடும் டேபிளில் மட்டுமே இருக்கும்.
அந்த இருட்டுக்கு கண்கள் பழகவே கொஞ்சம் நேரம் எடுக்கும், உள்ளே நுழைந்ததும் அவள் முதலில் மிரண்டுவிட்டாள், முதல் அடியிலே அவள் தடுமாற அவளைத் தன் கைவளைவில் உள்ளே அழைத்துச் சென்றான்.
அந்த அறையின் இறுதியில் ஆறு படிக்கட்டுகள் இருந்தது அதில் ஏற அங்கேயும் இதே போல டேபிள் இடப்பட்டிருந்தது, அங்குச் சுவரோடு ஒட்டிய இடத்தில் அவளை அமரவைத்து நேரே இவன் அமர்ந்து கொண்டான்.
மெனு பார்க்க ஒன்றுமே தெரியவில்லை, சிறிது நேரத்திற்கு பிறகு அந்த இருள் பழகியதும் மெனுவை பார்த்தாள், பார்த்தவள் அவனை நிமிர்ந்து பார்த்துத் தயங்க “என்னமா” என்றான் இன்பன்.
“இல்ல இந்த மாதிரி ஹோட்டல்ல நாங்க யாரும் சாப்பிட்டது இல்ல, இப்போ நான் மட்டும் சாப்பிட கொஞ்சம் கஷ்டமா இருக்கு, அவங்க எல்லார்க்கும் ஏதாவது வாங்கிட்டு போலாமா” என்க.
ஆழ்ந்து மூச்செடுத்து சேரில் சாய்ந்து அமர்ந்தவன் முன்னே அவளின் அருகே நெருங்கி “உன்ன கட்டிப்பிடிச்சு கண்ணா பின்னானு முத்தம் கொடுக்கணும்னு தோணுது என்ன பண்ண” என்றான்.
அவன் முகமே தெரியவில்லை, ஆனால் அந்தக் குரல் உடலே சிவந்துவிட்டது கொற்றவைக்கு, மெனு கார்டில் முகம் மறைத்துக்கொண்டாள்.
“எப்படி டி இப்படி இருக்க முடியுது உன்னால” என்றவன் “என்ன வேணுமோ பார்ஸல் வாங்கிட்டு போலாம், இப்போ நீ ஆர்டர் பண்ணு” என்க.
அவளுக்கு வெகுநாட்களாகப் பிரைட் ரைஸ் பெப்பர் சிக்கன் சாப்பிட ஆசை அதையே சொன்னாள், அவனும் ஆர்டர் செய்ய இருவரும் உணவருந்த, விழிகளைச் சுழற்றியவன் பார்வையில் விழுந்தாள் அருணா.
கீழே மூலையில் இருந்த டேபிளில் ஒருவனுடன் அமர்ந்திருந்தாள், இடையில் விழிகளைத் துடைப்பது பட்டது, அவர்களின் டேபிளில் இருந்த வெளிச்சத்தில் அவள் முகம் அத்தனை தெளிவில்லை ஆனால் அவன் உறுதியாக நம்பினான் அவள் தான் என்று.
இடையில் பார்வையை அங்கேயும் பதித்துக்கொண்டான், இவர்கள் உண்டு முடித்து உணவு பார்ஸல் வாங்கும் வரை அவர்கள் அங்கிருந்தனர் தீவிரமாக ஏதோ விவாதம் சென்றது.
வெளியில் வந்தவன் கொற்றவையிடம் அங்கேயே இருக்க சொல்லி மீண்டும் உள்ளே சென்றான், நேரே அவர்களின் டேபிளில் சென்று நிற்க அவனைப் பார்த்த அருணா அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள். “நீங்கக் கிஷோரா” என்றவன் கேள்விக்கு “ஆமாம் நீங்க?! ” என்றான் அவன்.
“எனக்கு மனைவியாகப் போகிறவள் என்னிடம் அனைத்தையும் பகிர்கிறாள்” என்ற கர்வம் கூட இருந்தது அவன் குரலில்.
“வீட்ல வந்து முறையா பேசி நிச்சயம் பண்ணிட்டு வெளில கூட்டிட்டு போங்க, எங்க வீட்டு பொண்ண உங்களோட அங்க பாத்தேன் இங்க பாத்தேன்னு மத்தவங்க சொல்றது சரி கிடையாது பாருங்க” என்றவன் “கொற்றவை வெளில நிக்குறா வா” என்று அவளை அழைத்துச் சென்றான்.
இன்பனுடன் வெளியில் வந்த தங்கையை அதிர்ச்சியாகப் பார்த்தாள் கொற்றவை, அவர்களின் பின்னையே வந்தான் கிஷோர், என்ன செய்கிறாள் இவள் என்று கோபமாக வந்தது.
தான் சொன்னால் மட்டும் கேட்டு விடுவாளா, இன்று எங்கயோ இன்டெர்வியூவிற்கு போவதாகக் காலையில் ராதவிடம் கூறினாள், இன்று மட்டுமா இல்லை இத்தனை நாளும் இதைத் தான் செய்கிறாளா?.
இதோடு நிறைய இடங்களுக்குச் சென்று வந்தாள் ஆனால் வேலை மட்டும் கிடைக்கவில்லை, அப்படியானால் இவள் இவனுடன் தான் சுற்றுகிறாள்.
அவர்கள் வீட்டில் பணத்திற்கு தான் மதிப்பு கொடுக்கிறார்கள், அவர்கள் கேட்பதை கொடுத்து இந்தத் திருமணத்தை நடத்த இயலாது அதன் பிறகும் சும்மா இருப்பார்களா மீண்டும் மீண்டும் இப்படி கேட்டுக் கொண்டே இருந்தால் எப்படி சமாளிக்க, இவளுக்கு இதை எப்படி புரியவைக்க, அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
“நீங்க ரெண்டு பெரும் ஆட்டோல வீட்டுக்குப் போங்க” என்ற இன்பன் ஒரு ஆட்டோ பிடித்து அவருக்கு முகவரி சொல்லிப் பணத்தையும் கொடுத்தான்.
“போயிட்டு போன் பண்ணு” என்று கொற்றவையிடம் சொல்லி அனுப்ப அவள் தலை ஆட்டினாள்.
வந்தபோது இருந்த மனநிலை அல்லவே இப்பொழுது, கிஷோரை பார்த்தவன் “இனிமே இந்த மாதிரி செய்யாதீங்க, உங்களுக்குக் கல்யாணம் பண்ண விருப்பம் இருந்தா உங்க வீட்டு ஆளுங்கள கூட்டிட்டு வாங்க” என்றவன் தன் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
ஆனால் அவன் வீடு சென்று சேர்ந்தபோது புதிய பிரச்னையைச் சுமந்து வந்தது கொற்றவையின் அழைப்பு.