16

“நிலவு காத்திருக்கிறது இண்பனுக்காக” என்று மனதில் எண்ணியவள், அவனுக்கு எந்தத் தகவலும் அனுப்பாமல் இருந்தாள், இதழில் உறைந்த புன்னகையோடு அமர்ந்திருக்க  அழைத்துவிட்டான்.

அவள் கைகள் மெல்ல நடுங்கியது அடித்து ஓயும் நேரம் அழைப்பை எடுத்தவள், அமைதியாக இருக்க “கொற்றவை” என்றான் காற்றாக.

அந்தக் குரலில் விழிகள் மூடி லயித்திருக்க அவனின் குரல் செவி வழி உள்நுழைந்து உடலில் ரசாயன மாற்றம் செய்தது “ம்ம்” என்றவள் மொழிய.

“என்ன பண்ற” என்றவனிடம்  “இல்ல சும்மா தான் இருக்கேன்” என்க, “ஹ்ம்ம்” என்றவன் தன் கையில் இருந்த அவள் புடவையில் முகம் புதைத்து விழிகள் மூடி நின்றான்.

“உனக்கு ஒரு சர்ப்பிரைஸ் இருக்கு இங்க வந்ததும் சொல்றேன்” என்றான், “என்ன ?” என்றவள் கேள்விக்கு “ஹம் ஹூம், இங்க நீ வர அன்னைக்கு தான் சொல்லுவேன்” என்றவுடன் அமைதியானாள்.

“வியாழக்கிழமை பாக்க வரோம், பொண்ணு ஒகே சொல்லுமா” என்க.

சிரித்தவள் “என்ன நாலு வருஷம் காக்க வெச்சதுக்கு நா இப்போ உடனே ஒகே சொல்லக் கூடாது” என்றவள் கூற.

“ஒன்னும் பிரச்னை இல்ல, ஒகே சொல்ற வரைக்கும் காதலிக்கலாம்” என்றான் அவன்.

“என்ன சொல்றதுன்னு நீ முடிவு பண்ணிக்கோ, ஆனா அன்னைக்கு அந்தப் பர்பில் சாரி கட்டு” என்க.

“அடப்பாவி, எப்படி நோட் பண்ணிருக்கான்” என்று வெக்கம் ஒரு பக்கம் கோபம் ஒரு பக்கம், அவன் அருகில் இல்லாமல் முறைக்க முடியவில்லை.

அவள் அமைதியானதை புரிந்து கொண்டவன் “நேர்ல இருந்தா திட்டிருப்ப தான” என்றான் சரியாக.

“எல்லாம் சரியா நடக்குமா பயமா இருக்கு” என்றவள் குரலே ஒரு வித பதட்டத்தை சுமந்திருந்தது, “நான் பாத்துக்குறேன் ரிலாக்ஸ்”  என்றவன்,  “நீ போய்த் தூங்கு”  என்று வைத்துவிட்டான்”.

இந்தத் தருணம் எல்லாம் தன் வாழ்வில் வரும் என்று அவள் நினைக்கவில்லை, பருவ வயதில் காதல் கொண்ட பெண்களைப் பார்க்கையில் அவளுக்கும் ஆசை இருந்தது.

தன்னை நேசிக்க ஒருவன் வேண்டும் என்று, இண்பனிடம் காதல் சொல்லிக் காத்திருந்த காலம் எல்லாம் எத்தனை வலிகளைச் சுமந்து சென்றது, அவனின் பாராமுகம் வாழ்வை  பற்றிய பயமும் வெறுமையுமாகக் கடந்தது, இப்படியே தன் வாழ்வு போய்விடுமோ என்று அத்தனை ஏங்கியிருக்கிறாள்.

வியாழன் அன்று காலை வீடே பரபரப்பாகச் சுழன்றது, அவன் கூறிய போலப் பர்பிள் நிற புடவை உடுத்தி நின்றிருந்தாள், நகைகள் என்று ஒன்றும் இல்லை முகம் மட்டும் அத்தனை பிரகாசமாக இருந்தது.

 அருண் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தான், ராதா முடிந்தவரை பலகாரம் செய்து வைத்திருந்தார், அருணா மட்டும் அறையிலிருந்து வெளியில் வரவே இல்லை.

கார் வந்து நிற்கும் சத்தத்தில் ஜன்னல் வழி எட்டி பார்த்தாள், அவனே ஒட்டி வந்திருந்தான் மற்றவர்கள் இறங்கி கொள்ள, அருண் அவனிற்கு கார் நிறுத்த இடம் காண்பித்து கொடுத்தான்.

இடப்பக்கம் இருக்கும் மற்றோரு சிறிய அறையின் ஜன்னலில் அதைப் பார்த்த அருணா “என்ன சொந்தமா கார் வேற வெச்சுருக்கானா,  கிஷோர் எப்போ பாத்தாலும் மொட்டை வெயில்ல பைக்ல தான் கூட்டிட்டு போவான்” என்று ஆத்திரமாக வந்தது அவளுக்கு.

அவனின் பாட்டி காந்தியம்மா முன்னே இறங்க  அவருடன் கையில் தட்டுடன் லட்சுமி மற்றும் வசந்தன் இறங்கினர், இளம் நீல நிறத்தில் ஷர்ட் மற்றும் அதே கரை வைத்த வேஷ்டியில் இப்பொழுதே கல்யாண மாப்பிளை போல  இருந்தான்.

அனைவரும் உள்ளே வந்து அமர்ந்தனர் கைகளைக் கட்டிக்கொண்டு நன்றாகச் சேரில் சாய்ந்து அமர்ந்திருந்தான், அருணும் வசந்தனும் கட்டைவிரல் உயர்த்தி சிரித்துக் கொண்டனர்.

லட்சுமிக்கு கொற்றவையை தெரியாத மாதிரி  எப்படி நடந்துகொள்ள என்ற படபடப்பில் அவள் கல்யாண பெண்போல் தலை கும்பிட்டு அமர்ந்திருந்தாள்.

வெங்கடேசன் ஆராதனாவிடம் கூற அவள் தங்கையை அழைத்துவந்தாள், ராதா காபி தட்டை அவள் கையில் கொடுக்க “இறைவா எங்கேயும் கொட்டி விடாமல் கொண்டு போய்விட வேண்டும்”  என்று வேண்டிக்கொண்டே எடுத்துச் சென்றாள்.

அவள் பதட்டத்தோடு நடந்து வரும் அழகை பார்த்து அவனுக்குச் சிரிப்பு வந்தது இதழ்களுக்குள் அடக்கி  வைத்தான்  “உங்களை விரும்புறேன் என்று முகம் பார்த்துச் சொன்னவள் இவளா !!” என்று ஆச்சர்யப்படும் அளவுத் தலை தரையை மட்டுமே பார்த்திருந்தது.

அனைவருக்கும் கொடுத்து இறுதியாக அவனிடம் வந்து கொடுக்க “காபியோட உன்னையும் சேத்து எடுத்துக்கவா” என்றவன் குரலில் கையில் இருந்த தட்டு கீழே விழா பார்த்தது, அதை  அவள் கையேடு சேர்த்து பிடித்தவன்.

“ஒகே சொல்லிடு உன் அளவுக்குப் பொறுமை இல்ல வெயிட் பண்ண முடியாது” என்று அவளிடம் சொல்லிவிட்டு, கொஞ்சம் சத்தமாக “பாத்து மெதுவா” என்றான்.

கொற்றவை வேகமாக அடுக்கலைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள், என்ன முயன்றும் சிரிப்பையும் வெட்கத்தையும் மறைக்க முடியவில்லை.

அவளை எட்டிப் பார்த்த ராதா மகளுக்கு இதில் முழு சம்மதம் என்பதை புரிந்து கொண்டார், பொதுவான விஷயங்கள் பேசப் பெண்ணிடம் சம்மதம் கேளுங்கள் என்றான் இன்பன்.

“வேணும்னே பண்றான்” என்று மீண்டும் ஹாலிற்கு வந்தவள், வெங்கடேசனின் “என்ன கொற்றவை உனக்கு மாப்பிளையை பிடிச்சுருக்கா” என்ற கேள்விக்குத் தலையை மட்டும் ஆட்டினாள்.

“நான் கொஞ்சம் பேசணும்” என்றான் இன்பன் “அய்யோயோ” என்று அவள் மனம் அலறியது.

“இவன் கொஞ்சம் உர்ர்ன்னே இருந்திருக்கலாம்,  இப்படி படுத்துறானே” என்று பரிதாபமாக அவனைப் பார்க்க, எழுந்து நின்று விட்டான்.

“அதுக்கென்ன போய்ப் பேசுங்க” என்ற வெங்கடேசன்  “பின்னாடி தோட்டத்துக்குக் கூட்டிட்டு போக்கொற்றவை” என்க  “ஐயோ மாமா இப்படி தனியா கோத்துவிடுறீங்களே” என்று அவனுடன் நடந்தாள்.

பின்னால் சென்று அவள் நிற்க, அவளைத் தொடர்ந்து வந்தவன் “ஹ்ம்ம் நல்லா இருக்கு” என்க.

“கொஞ்சம் இடம் தான் அதனால கம்மியா தான் செடி இருக்கும்” என்றாள் அவள்.

அவளைப் பார்த்துச் சிரித்தவன் “நான் தோட்டத்தைச் சொல்லல, என் நிலவ சொன்னேன் அப்படியே அள்ளுது” என்றான் ரசனையாக.

சட்டென்று குனிந்து கொண்டாள் இதழை அழுத்தமாகக் கடித்துக்கொள்ள, “கொற்றவை என்ன பாரு” என்றான் அவள் “முடியாது” என்று மறுக்க, அங்கிருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டான்.

“நீ பாக்காம நான் எதுவும் பேசமாட்டேன்” என்க.

“ஏன் இப்படி” என்று அவனை நிமிர்ந்து பார்க்க “ஒரே ஒரு தடவ சொல்லு” என்றான்.

“என்ன” என்றவள் கேட்க.

“முதல் தடவ சொன்னியே தைரியமா என்கிட்டே, அதை இப்போ இங்கே என் கண் பார்த்துச் சொல்லு நான் போயிடுவேன்” என்க.

“முடியாது”  என்று தலை ஆட்டியவள்  “யாரவது வந்துடுவாங்க” என்று பயந்து எட்டி எட்டி பார்த்தாள்.

நான்கு முறை கேட்டும் அவள் சொல்லாமல் ஒரு வித பயத்தில் இருக்க, உள்ளே எட்டிப் பார்த்தான், அனைவரும் தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டிருக்க, இவனைப் பார்த்த வசந்தனுக்கு கண் காண்பித்தவன் அவளின் கைபிடித்து இழுத்து சுவரோடு சேர்த்து நிறுத்தி அவள் கன்னத்தை அழுத்தமாகப் பிடித்துத் தன்னை பார்க்க வைத்தான்.

அவள் பார்வை நிலையாக அவன் விழிகளில் சங்கமிக்க “இப்போ சொல்லு” என்றான்.

சில நொடிகள் அவனைப் பார்த்தவள் “ஐ லவ் யு” என்றாள் திடமாக, புன்னகையோடு அவளை விடுவித்து உள்ளே சென்றான்.

அவளுக்கு ஒன்றுமே ஓட வில்லை அப்படியே அங்கேயே அமர்ந்துவிட்டாள், சிறிது நேரம் சென்று ஆராதனா வந்து அவளை அழைத்துச் சென்றாள் பூ வைத்து உறுதி படுத்திக்கொண்டனர், லட்சுமி அவளுக்குப் பூ வைத்தாள்.

திருமணத்தைக் கொஞ்சம் சீக்கிரம் வைத்துக் கொள்ளலாம் என்று காந்திமதி கூற இவர்களும் ஒத்துக் கொண்டனர், ஒன்றும் வேண்டாம் என்று அவர்கள் சொன்னாலும் அக்காவுக்குத் தன்னால் இயன்றதை செய்ய விரும்பினான் அருண்.

வட்டிக்கு கடன் வாங்க ஏற்படுகள் செய்திருந்தான், யாரிடமும் சொல்லவில்லை, லட்சுமி கொற்றவையிடம் அவளின் நாளைக் கேட்டுக் குறித்துக்கொண்டாள் அதற்க்கு ஏற்றாப்போலத் திருமண நாளைக் குறித்துக்கொள்ளலாமே.

கோபாலன் வந்தவர்களை “வாங்க” என்று சொன்னதோடு சரி யாரிடமும் பேசவில்லை அனைத்தையும் வெங்கடேசனே பேசிவிட்டார்.

கோபாலன் பேசாமல் இருந்ததே அனைவருக்கும் நிம்மதி, அவர்கள் விடைபெற்றுக் கிளம்ப அறையிலிருந்து வெளியில் வந்த அருணா “எல்லாருக்கும் சந்தோஷமா இப்போ, என்ன பத்தி ஏன் யாருமே யோசிக்க மாட்டறீங்க” என்றாள் குரல் உயர்த்தி.

இன்பனை அனுப்பிவிட்டு உள்ளே வந்த வெங்கடேசன் மனைவியை அழுத்தமாகப் பார்க்க “நீ வா இங்க” என்று அவளை உள்ளே தள்ளிச் சென்றாள் ஆராதனா.

“மாமா அதிக நாள் கடத்தாம சீக்கிரமா கல்யாணத்த வெச்சுடுங்க, கல்யாணத்த கோவில்ல தான் வெக்க போறோம், அவனோட பிசினஸ் பண்றவங்க பிரண்ட்ஸ் அவங்களுக்கு தனியா ஒரு பார்ட்டி மாதிரி அப்பறமா வெச்சுருவான், முடிவு பண்ணிட்டு சொல்லுங்க” என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றுவவிட்டார்.

இரவுவரை அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை, பேசமாட்டான்…. அவன் பேசுவதெல்லாம் குறிஞ்சி பூப்பதை போல என்று எண்ணியவள் உறங்கத் தொடங்க, குறுஞ்செய்தியின் சிறிய சத்தம் கூட அவளைத் தட்டி எழுப்பியது.

அவன் தான், மணி பார்க்க இரவு பதினொன்றை கடந்து கொண்டிருந்தது “என்னை ஏன் பிடிச்சது உனக்கு”  என்று கேட்டிருந்தான்.

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே…
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே