காலை அவனுடன் வண்டியில் ஏற, நேரே அவனின் துறையூர் நர்சரி வந்து நிறுத்தினான், அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை அதுவரை.
அங்கு வந்தும் அவள் அப்படியே நிற்க, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான், என்ன ஆயிற்று இவனுக்கென்று அவள் அவனையே பார்த்திருக்க அவள் அருகில் நெருங்கி நின்றான்.
மூச்சடைத்தது அவளுக்கு, தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறிய பொருளை எடுத்தவன் இன்னும் கொஞ்சம் அவளை நெருங்கி அவள் கழுத்தில் அதை அணிவித்தான்.
முன்பு அவள் அணிந்திருந்த அதே போன்ற செயின், அவள் விழிகள் நிரம்ப தொடங்கியது “இது இல்லாதப்போ எனக்கு வசதின்னு நான் சொன்னேன் நீ கேக்கல” என்க.
அப்பொழுதும் அவளுக்குப் புரியவில்லை, அவளை இடையோடு சேர்த்து அனைத்தவன் கழுத்தில் முகம் புதைக்க, சர்வமும் ஸ்தம்பித்தது அவளுக்கு.
“இப்போ பாரு எனக்கு இது டிஸ்டர்ப் ஆகுது” என்றான் கிரங்கிய குரலில்.
“ஆனா உனக்கு நா இல்லனாலும் இது தான முக்கியம், இது இல்லனு தான அப்படி அழுத” என்றான்.
மெல்ல மெல்ல அவள் கைகள் உயர்ந்து அவன் சட்டையைப் பிடிக்க அவன் மார்பில் முகம் புதைத்தவளின் கண்ணீர் அவன் இதயம்வரை நனைத்தது.
“ஹாப்பி பர்த்டே பொண்டாட்டி” என்றவனை இன்னும் நெருங்கியவள் இதழ்களில் சிரிப்பும் விழிகளில் நீரும் சம அளவில்.
அவள் விரல்களின் நடுக்கத்தை இப்பொழுதும் உணர முடிந்தது, அவனின் அழுத்தமான பிடிக்குள் இருக்கும் தன் விரல்களில் பார்வை பதித்திருந்தாள் கொற்றவை.
விழிகளில் ஈரம் இப்பொழுதும் மிச்சமிருந்தது, ஒரு கையால் அவள் கன்னத்தைத் தாங்கியவன் “பிடிச்சிருக்கா” என்க.
மெல்ல இதழ்கள் விரிய முகம் செம்மை பூசியது, “எப்போவும் செய்யணும்னு நினைக்கிற ஒரு விஷயத்தை இன்னும் செய்யாம இருக்க” என்றான்.
கேள்வியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள், தன் வலது புர மீசையை முறுக்கிக்கொண்டே இதழ் ஓரம் தொட்டு காண்பித்து “முத்தம்” என்க.
மறுப்பாகத் தலை அசைத்து, கீழுதட்டை கடித்துக்கொண்டே அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
வெகுநேரம் கழித்து அவளே முகம் உயர்த்தி நோக்க அவளையே பார்த்திருந்தான், விலக நினைக்க அவன் பிடி இறுகியது, அவளிடம் படபடப்பு கூட, நெருங்கி வந்தவன் அவள் செவியில் மந்திரம் என ஓதினான் “இப்போ ஒன்னும் பண்ண மாட்டேன், நல்லா யோசிச்சு சொல்லு கல்யாணத்துக்கு ஒரு மாசம் வேணுமா ஒரு வாரம் போதுமா” என்க.
“அஹ்ஹ்” என்று அதிர்ச்சியாகி அவனைப் பார்த்தாள், “ஹ்ம்ம்” என்று மெல்ல சிரித்தவன் “ரொம்ப பாஸ்டா இருக்குற மாதிரி தோணுதா” என்க “ம்ம்” என்றாள்.
“இல்ல இது ரொம்ப ஸ்லோ, பெருசா லைஃப்ல இது பண்ணனும் அது பண்ணனும், இப்படி இருக்கணும்னு ஏதும் யோசிச்சதில்ல, தம்பி தங்கச்சிய நல்லா படிக்க வெக்கணும்”.
“அப்புறம் நெறய பேர் நெறய விதமா பேசினாங்க, ஒரு மாதிரி வெறுப்பு எல்லார்மேலயும், கடைய ஆரம்பிச்சப்போ கூட வசந்தனக்கு ஒரு எதிர்காலம் அப்படி தான் யோசிச்சேன்”.
“அன்னைக்கு சொன்னியே ஒரு வார்த்தை” என்றவன் அவள் விழிகளை நேரே பார்த்து “ஐ லவ் யு” என்றான், அவள் தொண்டை குழி ஏறி இறங்க, அவள் முகத்தைக் கைகளில் ஏந்தியவன் நெற்றி முட்டி “அந்த ஒரு சொல் எனக்குன்னு ஒரு வாழக்கை வேணும்னு யோசிக்க வெச்சுது, வாழனும் உன்கூட ஒரு வாழ்க்கை” என்றவன் முடிக்கும் முன் அவனின் மீசை நுனியில் முத்தம் பதித்தாள்.
எப்பொழுது இதழ்கள் பூட்டிக் கொண்டது என்று தெரியவில்லை.
அவளும் தலை அசைக்க, ரசனையான புன்னகை அவன் முகத்தில் “இங்க இருந்தா சரிவராது” என்று தலை கோதியவன்.
“சாப்பிடலாமா” என்க அவள் அதிர்ச்சியாகி அவனைப் பார்த்தாள், ஒரு நொடி யோசித்தவன் சத்தமாகச் சிரித்து “ஏய் நிஜமா சாப்பாடு சாப்பிடலாமான்னு தான் கேட்டேன்” என்றவன் குரலில் வெக்கம் பிடுங்கி தின்ன அவன் மார்பிலே முகத்தை மறைத்துக் கொண்டாள்.
மேலும் அவளைச் சோதிக்காமல் அவளை ஹோட்டல் அழைத்துச் சென்றான், அன்று முழுதும் அவளுடன் தான் இருந்தான், இப்படியொரு பிறந்தநாள் தன்னுடைய வாழ்வில் வரும் என்று அவள் கனவிலும் எண்ணவில்லை.
மாலை அவளைப் பள்ளியில் இறக்கிவிட்டவன் “கொற்றவை பாட்டியோட முறைப்படி வீட்டுக்கு வந்து பேசுறேன்” என்றான்.
முகத்தில் புன்னகை நிரந்தரமாகத் தவழ்ந்து கொண்டிருந்தது அவளுக்கு, “பத்திரமா போய்டுவியா, நான் கொண்டு வந்து விடவா” என்க.
“ஹ்ம்ம் ஹூம்” என்று தலை ஆட்டியவள் “விட இல்ல, கூட்டிட்டு போக வாங்க, நான் காத்துட்டு இருப்பேன்” என்றவளை பார்த்தே நின்றிருந்தான்