இரு வீடுகளுக்கு இடையில் இருந்த வேப்ப மரத்தின் காற்று அந்தப் பழைய மர ஜன்னலின் வழி நுழைந்து மே மாதத்தின் இறுக்கத்தை குறைக்க பார்த்தது, காலை ஏழரை மணிக்கே வெயில் பல்லைக் காண்பித்துக்கொண்டிருந்தது.
தலை முடியைப் பின்னல் இட்டுக் கொண்டிருந்தவள், மரத்தின் அந்தப் பக்கம் இருந்து கேட்ட குரலில் ஜன்னலின் வழி எட்டிப் பார்த்தாள்.
“அகம்பாவம் அம்புட்டும் அகம்பாவம், அப்படியே ஆத்தாள மாதிரி, என்னனு தான் பெத்தேனோ” என்றவர் குரலில் மிதமிஞ்சிய இயலாமை.
“சித்தி… சித்தி…” என்றவள் குரலில் அவளை நோக்கித் திரும்பியவர் “என்னடி கெளம்பிட்டியா?” என்க.
“ம்ம்” என்றவள் “மைதிலி வந்துருக்காளா?”.
“ ஹ்ம்ம்… ராக்கோழி மாதிரி நடு ராத்திரி வந்து கதவை ஒடச்சா, ஒண்ணே ஒன்னு பெத்தோம்! என்னையும் உன் சித்தப்பனையும் உசுரோட கொல்றதுக்கு, அதுக்கு பொறந்ததையும் அவளை மாதிரியே வளத்து வெச்ருக்கா, என்னனு அந்த மனுஷன் இவளை இன்னும் வெச்சு வாழுறாரோ” என்றவர் விழிகள் கண்ணீரால் நிறைந்தது.
“என்ன சித்தி காலைலே ஏன் கண்ண கசக்குற, நாச்சாய்ந்த்ரம் வந்து அவகிட்ட பேசுறேன், நீ போய்ப் புள்ளய பாரு”.
“ என்னமோ போடி, உன் வயசு தான.. ஒரு குடும்பத்தையே தோள்ல தூக்கி சுமக்குற, உனக்கு ஒரு நல்லது நடக்க மாட்டங்குது, இவளைக் கஷ்டம் தெரியாம வளத்து நல்ல இடத்துல கட்டிக் குடுத்தா, இன்னைக்கு அத்துக்கவா நாளைக்கு அத்துக்கவான்னு நிக்குறா, எல்லாம் நாங்க வாங்கி வந்த வரம், நீ போ உனக்கு வேலைக்கு நேரம் ஆவுது” என்றவர் பேத்தியோடு பின் பக்கம் நடந்தார்.
சிறிது நேரம் அவரைப் பார்த்து நின்றவள், நேரம் ஆவதை உணர்ந்து தன்னை கண்ணாடியில் மீண்டும் ஒரு முறை பார்த்துக்கொண்டாள்.
கழுத்தில் கிடந்த ஒன்றரை பவன் சங்கிலியில் தொங்கும் சின்ன டாலரில் தான் அவள் வாழ்வின் பிடிப்பே இருக்கிறது !! அப்படி தான் நம்புகிறாள் அவள், அதைக் கைகளில் ஏந்தியபொழுது மனம் வலித்தது.
வீட்டின் உள்ளிருந்து கேசரி, பால் கிச்சடியின் மனம் நாசியை நிறைத்தது.
இவர்களால் எப்படி இப்படி ரசித்து உண்டு, நிம்மதியாக உறங்கி, வாழ முடிகிறது? என்று என்ன.
“பலி கொடுக்க உன்னை வைத்திருக்கிறார்களே பிறகு என்ன” என்ற மனசாட்சியின் கேள்விக்குக் கசந்த முறுவல் ஒன்று இதழை நிறைத்தது.
ஹாண்ட்பேகை எடுத்துக் கொண்டவள் அறையிலிருந்து வெளியேறினாள், ஹாலின் மூலையில் என்னை யாரவது அடக்கம் செய்யுங்களேன் என்ற கெஞ்சலோடு சுவரோடு ஒட்டிக் கிடந்தது இந்த வீட்டிற்கு சோபா என்ற பெயரோடு வந்த இருக்கை.
அதன் அருகில் கீழே சுவரில் சாய்ந்து அமர்ந்தாள், அவள் வரவை எதிர்ப் பார்த்தே நின்ற அவள் தாய் அவசரமாகத் தட்டில் கிச்சடியோடு அவள் அருகில் வந்தார்.
அவரிடமிருந்து அதை வாங்கியவள் “என்ன இன்னும் தலைப்புச் செய்தி வாசிக்காம இருக்காங்க!!” என்ற யோசனையோடு கிச்சடியை உள்ளே தள்ள, “அம்மாடி” என்று அவள் தாயின் அழைப்பு.
“ஆரம்பிச்சாச்சு, ஒரு வரி செய்தி முடியட்டும், அதுக்கப்புறம் விரிவா பாப்போம்” என்று எண்ணியவள் கிச்சடி சாப்பிடுவதே தலையாய கடமையெனத் தட்டிலே கவனம் வைத்திருந்தாள்.
“நம்ம மிருதுக்கு சடங்கு பண்ணனும்” என்க சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தவள் விழிகளில் தெரிந்த ஏமாற்றத்தில் அவர் தலை தானே தாழ்ந்தது.
அதைக் கண்டவளுக்கு கோவம் உச்சம் தொட்டது “இப்படி நின்று நின்று தானே தன்னை அனைத்திலும் இவர் ஒதுக்கி வைத்தார்” என்ற எண்ணம் உள்ளில் எரிந்து கொண்டிருந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது.
இரண்டு வாய் சாப்பிட்ட உணவை அப்படியே வைத்துவிட்டு எழுந்து விட்டாள் “சாப்பிடு டா” என்றவரை நிமிர்ந்தும் பார்க்காமல், தன் கைப்பையிலிருந்து சீட்டு ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தவள்.
“ஒரு நாள் இப்படி வந்து நிப்பீங்கன்னு தெரியும், சீட்டு போட்ருக்கேன் அவங்க கிட்ட சொல்லுறேன், ரெண்டு லக்ஷம் எடுத்து நல்லா செய்ங்க” என்றவள் வண்டி சாவியை எடுக்க, “ரெண்டு லச்சம் வெச்சு என்ன பண்ண?, இந்த வீட்டு முதல் பேத்தி, அஞ்சு பவனுக்கு கொறையாம செய்றேன்னு சம்மந்தி கிட்ட சொல்லிருக்கேன்” என்ற சத்தத்தில் விழிகளை இறுக மூடித் தன்னை நிலைப் படுத்தினாள்.
“பொறுமை பொறுமை” தந்தை என்ற ஸ்தானத்தில் இருக்கும் அவரை இதுவரை “அப்பா” என்று அவள் அழைத்ததில்லை, அவரும் அதை எதிர்ப் பார்க்கவில்லை.
ஏன் அவள் அன்னையையே அவள் “அம்மா” என்று அழைத்ததில்லை, அவளுக்கு அம்மா அப்பா எல்லாம் அவள் பாட்டி தான்.
“அக்கா உனக்கு நேரம் ஆகல நீ போ, அவர் அஞ்சு பவுனு செய்ற அளவுக்குக் காசு வெச்ருக்கார் அவர் செய்வார், இல்லனாலும் நீ எதுக்கு செய்யணும், பேத்திக்கு அவர் தான செய்யணும்” என்று வந்து நின்றான் அவள் தம்பி அருண்.
“என்னய்யா பேசுற, அப்போ நீ செய் தாய் மாமா நீ தானே” என்ற தந்தையிடம்,
“அத இல்லனு நா எப்போ சொன்னேன், நா இன்னும் சம்பாரிக்க ஆரம்பிக்கல சம்பாரிச்சாலும் யாருக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும், நம்ம சக்திக்கு முடிஞ்சத செய்யணும்”.
“உங்க வெட்டி வீரப்புக்கு எதுக்கு இவ்ளோ சொன்னீங்க, யாரை கேட்டுச் சொன்னீங்க?”
“அப்புறம் என் பொண்ணுக்கு என்ன மரியாதை அங்க” என்றார் தந்தை.
“உங்களுக்கு ஒரு பொண்ணுதான் இருக்கா? எல்லாத்தையும் அவங்களுக்கே கொடுத்தாச்சு, எங்களை நடுத்தெருவுல நிறுத்தியாச்சு, இன்னும் என்ன வேணும் உங்களுக்கு நானும் பேசக் கூடாதுன்னு பாக்குறேன்”.
“இங்க நிக்குறாங்களே அவங்களுக்கு அப்பா அம்மா எடத்துல இருந்து என்ன கடமை செஞ்சிருக்கீங்க, அவங்க கிட்ட கை நீட்டிக் காசு வாங்க உங்களுக்கு உறுத்தல” என்க.
“குட்டி” என்று கண்டிப்போடு வந்த தமக்கையின் குரலில் “ஏன்க்கா இப்படி இருக்க, நீயும் கேக்க மாட்ற” என்றான் ஆற்றாமையோடு.
இப்பொழுதும் தலை குனிந்து கண்ணீர் சிந்தினார் அவர், இவர்களிடம் பேசுவதே வீண் என்று வண்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டாள்.
இருவரையும் எரிச்சலோடு பார்த்தவன், இங்கு நடந்த எதையும் அறியாதவள் போல மேக்கப் முடித்து அறையிலிருந்து வெளி வந்த தன் உடன் பிறந்தவளை பார்த்தான்.
“மகாராணிக்கு அலங்காரம் முடிஞ்சுதா” என்க அவனிடம் கொஞ்சம் பயம் அவளுக்கு.
“இல்ல காலேஜ்க்கு கிளம்பினேன்”.
“தெரியுது, உன் மூஞ்சில அப்பி வெச்சிருக்க சுண்ணாம்ப வெச்சு இந்த வீட்டுக்கே வெள்ளை அடிக்கலாம், படிக்கப் போறியா பேஷன் ஷோவ்க்கு போறியா” என்றான்.
அன்னையும் தந்தையும் அமைதியாக இருந்தனர், குட்டி எனப்படும் அருண் இந்த வீட்டின் ஒற்றை ஆன் வாரிசு, தவம் இருந்து பிறந்தவன், அவனுடைய பிறப்பு மட்டுமே அவன் தாய் ராதாவை இந்த வீட்டின் குடும்ப தலைவியாக இன்றும் வைத்திருக்கிறது.
அவனோடு ஒன்றாய் பிறந்தவள் அருணா, ஆண் மகவை கையோடு அழைத்து வந்த தேவதையாகக் கோபாலன் அவளைப் பார்ப்பார்.
தன்னை முதன் முதலில் அப்பா என்று அழைத்த முதல் மகள் ஆராதனாவும் அவர்க்கு பிடித்தமானவள்.
இரண்டாவதாகப் பெண் பிறந்தால் உன்னுடைய அதிர்ஷ்டம் எல்லாம் போய்விடும் என்று மலைக்கோட்டையில் ஒரு ஜோசியன் சொன்னானாம், இரண்டாவதாகப் பிறந்தவளால் தன் செல்வாக்கே சரிந்து விட்டதாகக் கூறி அவளைத் தள்ளி வைத்தார் கோபாலன்.
கணவனா பிள்ளையா என்றபோது, ஒரு மாத சிசுவை தன் தாயிடம் ஒப்படைத்து திருமண வாழ்வை காப்பாற்றிக் கொண்டார் ராதா.
குளித்துத் தயாராகி வந்தவன் தமக்கை உண்ணாமல் வைத்து விட்டுச் சென்ற தட்டைப் பார்த்துக்கொண்டே அவனும் உண்ணாமல் கல்லூரிக்குச் சென்றுவிட்டான்.
எந்த உறுத்தலுமின்றி நன்றாக உண்டவர் மீதம் தேவைப் படும் பணத்திற்கு என்ன செய்ய என்ற யோசனையோடு திண்ணையில் அமர்ந்துவிட்டார்.
திருச்சி துறையூர் நெடுஞ்சாலையில் அவள் வண்டி பறந்து கொண்டிருந்தது, துறையூர் வழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் பகளவாடி அது தான் அவளின் ஊர்.
அந்த நெடுஞ்சாலையில் பல பெரிய கல்லூரிகள், பள்ளிகள் இருக்கிறது அதில் ஒரு பள்ளியின் சேர்மன் “கிருஷ்ணமூர்த்தியின்” பி.எ அவள், அந்தப் பள்ளி தொடங்கி ஆறு வருடங்கள் ஆகிறது, அன்றிலிருந்து அங்கு இருக்கிறாள் முதலில் பார்ட் டைம் வேலை பார்த்தாள் கல்லூரியில் படித்துக் கொண்டு, இப்பொழுது அந்தப் பள்ளியின் அனைத்தும் அவள் – கொற்றவை அவள் பெயர்.