Advertisement

மலரே மலர்வாய் 8


இந்திய நேரப்படி பகல் என்பதால் அவள் வீட்டினர் முகம் பார்த்து பேசினால் சந்தோஷமாக உணர்வாள் என்று நினைத்து அவள் வீட்டில் உள்ள லேப்டாப்க்கு வீடியோ கால் செய்தான்.


அங்கே அவர்களுக்கு எப்படி லேப்டாப் யூஸ் பண்றது என சொல்லிக்கொடுத்திருந்ததால் அவன் கால் செய்தவுடன் அவர்களும் ஆன் செய்ய அவர்கள் நலன் விசாரித்தவன் செல்வியின் பக்கம் திருப்பி அவளை பேசச்சொல்ல அவளும் அவர்களுடன் நன்றாக பேச ஆரம்பித்தாள்.


அப்போது அங்கே வந்தமர்ந்த அவளது அப்பத்தாவிடம் மறுபடியும் “அப்பத்தா சிவாஜி செத்துட்டாராம்” என ஆரம்பிக்க


அவள் அப்பத்தாவோ அதற்குமேல் “என்னடி சொல்ற விவரங்கெட்டவளே?” என


அவளும் அப்படியே ஆரம்பித்தவள் முழுவதும் கதைகதையாக பேச இன்பச்செல்வனுக்குத் தான் முடியவில்லை.


எப்படியோ அவர்களிடம் பேசி சமாதானமாகி அவள் முடிக்கவும் வீடியோ காலை கட் செய்தவன் அவளிடம் “நீ கடைசியா என்ன படம் பார்த்த தாமரை?” எனக் கேட்க


“ம் போன வாரந்தான் மாமா முதல் மரியாதையும் பதினாறு வயதினிலே படமும் பாத்தேன்” என சொல்லவும்


அவள் சொல்லிய படங்கள் வெளிவந்த வருடத்தைப் பார்த்தவன் அதிர்ந்தான்.


அந்த படங்கள் வெளிவந்து பல வருடங்கள் ஆகியிருக்கவும் புதிதாக வந்த தமிழ் படங்களின் பெயர்களைப் பார்த்தவன் “ம் ‘கபாலி’ ‘எந்திரன் 2’ இந்த மாதிரி படங்களெல்லாம் பார்த்ததில்லயா?” எனக் கேட்க


“இதெல்லாம் படமா மாமா” என அவள் எதிர்க்கேள்விக் கேட்க


அவனுக்குத் தான் தலைமுடியை பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.


அவள் தன்னுடைய வழியில் வரமாட்டாள், அவள் வழிக்கு நாம் சென்றால் தான் சரியாக இருக்கும் என்று உணர்ந்தவன் அவள் கேட்டப் படத்தை போட்டுவிட்டான்.


செந்தாமரைச்செல்வி விடியற்காலையில் எழுந்து வெளியே வர திருநாவுக்கரசு ஹால் சோபாவில் அமர்ந்திருந்தார்.
அவரைப் பார்த்ததும் அவர் அருகில் செல்ல “வாம்மா நல்லா தூங்குனியா. செல்வா எங்க?”


“ம் நல்லா தூங்கினேன் மாமா. அவுக தூங்கிட்டு இருக்காக” எனவும்


“சரி நீ உட்காரும்மா நான் உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என அவர் சொல்லவும்


“ஐய்யோ என்ன மாமா நீங்க இருங்க நான் போய் எடுத்துட்டு வாரேன்” என்றவள்,


சமையலறைக்குச் சென்று பாத்திரத்தில் இருந்த பாலை வேறு பாத்திரத்தில் ஊற்றி அவன் நேற்று செய்ததை நினைத்துப்பார்த்து அப்படியே அவளும் அடுப்பை ஆன் செய்து பாலை காய்ச்சினாள்.


அவர்கள் அனைவருக்கும் காபி கலந்துக்கொண்டு முதலில் போய் தன் மாமனாரிடம் கொடுத்தாள். அவரும் குடித்துவிட்டு “ரொம்ப நல்லாயிருக்கும்மா” என்று பாராட்ட பின் தன் கணவனுக்கு எடுத்துச்சென்றாள்.


அவர்கள் அறைக்குச்சென்றவள் தன் கணவனை மெதுவாக “மாமா எந்திரிங்க மாமா?” என எழுப்ப


அவனோ சற்றும் அசையாமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
பின் மெதுவாக அவன் அருகே குனிந்து காதில் “மாமாஆஆஆஆ” என கத்த அவன் அடித்து பிடித்துக்கொண்டு எழுந்தான்.


எழுந்தமர்ந்தவன் காதை தேய்த்துவிட்டுக்கொண்டு “எதுக்குடி என்ன இப்படி கத்தி எழுப்புன?” என கோபமாக வினவ


“காலைல விடிஞ்சி இவ்வளவு நேரமாச்சு. இன்னுமா தூங்குவிங்க மொத எழுந்திரிங்க?” என எழுப்ப


‘நேத்து நைட் படம் பாத்துக்கிட்டு என்ன எங்க தூங்கவிட்டா’ என நினைத்து அவன் அவளை முறைத்துக்கொண்டே ஃப்ராஷ்ஷாகி வந்தான். அவன் வரவும் கையில் காபியைக் கொடுக்க, குடித்துப்பார்த்தவன் காபி சிறிது ஆறியிருந்தாலும் இன்று வேறுமாதிரி இருக்கிறதே என்ற ஆச்சரியத்தோடு முழுவதையும் குடித்துவிட்டு “அப்பாவ காபி போட்டாங்க?” என வினவ


“இல்லிங்க மாமா நாந்தேன் போட்டேன்” 


“என்ன நீயா போட்ட? உனக்கு இங்க இருக்கிற அடுப்பெல்லாம் ஆன் பண்ண தெரியுமா?”


“நேத்து நீங்க செஞ்சத பாத்து செஞ்சேன்” என்று சொன்னவள் அவனிடமிருந்து கப்பை வாங்கிக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.


அவள் பின்னாடியே சென்றவன் அவள் சரியாக அடுப்பை அணைத்திருக்கிறாளா எனப் பார்த்துவிட்டு அவனறைக்கு வந்தான்.


திருநாவுக்கரசு காலையிலே வெளியே சென்று பால் பாக்கெட், ரெடிமேட் இட்லி மாவு மற்றும் சில காய்கறிகள் வாங்கி வந்திருந்ததால் அதை வைத்து அவள் காலை உணவாக இட்லியும் தொட்டுக்க சட்னி, சாம்பார் செய்திருந்தாள்.


அவன் ரெடியாகி வரவும் தன் மாமனாருக்கும் கணவனுக்கும் உணவை பரிமாற அவள் கைமணத்தில் உணவு அவ்வளவு நன்றாக இருந்தது.


அதை அவர்கள் இருவரும் திருப்தியாக உண்ண திடீரென்று அவளைப் பார்த்து “இது என்ன குழம்பு?” என வினவ


“இது சட்னி இது சாம்பார் மாமா” என்று அவள் சொல்லவும்
அவனுக்கு இத்தனை நாளாக தன் தந்தை தோசை மற்றும் இட்லிக்கு சாம்பார் என செய்து கொடுக்கும் ஒன்றை நினைத்துப் பார்த்து “இது சாம்பார் தானா?” என சந்தேகமாக வினவ


“சத்தியமா சாம்பார் தான் மாமா. ஏன் மாமா நல்;லா இல்லியா?” என பாவமாக கேட்க,


அவனோ பதில் சொல்லாமல் தன் தந்தையை முறைக்க அவரோ உணவிலே கவனமாக இருப்பது போல் நடித்தார்.


அவள் தனது பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து அவன் அவளிடம் “ம்கூம் ரொம்ப நல்லாயிருக்கு சாம்பார்னா இதுதான் சம்பார்” என்று சொல்லி மேலும் பல இட்லிகளை விழுங்கிவிட்டே எழுந்தான்.


பின் அவளும் சாப்பிட்டுவிட்டு அவர்கள் அறைக்குச் செல்ல அவளைப் பார்த்தவன் “வெளிய போய்ட்டு திங்க்ஸ் வாங்கிட்டு வரலாமா?” எனக் கேட்கவும்


“சரி மாமா” என்றவள் புடவையில் தயாரானாள்.


அவளைப் பார்த்தவன் “புடவை வேணாம் வேற ட்ரெஸ் போடு” என்று அவளிடம் தான் வாங்கிக்கொடுத்த ட்ரெஸை அவன் போடச் சொல்லி பெட்டியிலிருந்து எடுத்துக்கொடுக்க


அதைப் பார்த்த அவளோ “என்ன ட்ரெஸ் மாமா இது நல்லாவே இல்ல” என அவன் வாங்கிக் கொடுத்திருந்த சட்டை மற்றும் ஜீன்ஸை பார்த்து சொல்ல


“சரி அப்ப இதாவாது போடு” என்றவன் ரெட் கலர் டாப் மற்றும் ஒயிட் கலர் லெக்கினை எடுத்துக்கொடுத்தான்.


அதைப் பார்த்த அவளோ “இதெல்லாம் வேண்டாம் மாமா. நா போடமாட்டேன்” என


“இப்ப நீ போடுறியா இல்ல நானே போட்டுவிடவா?” என அவன் கேட்கவும்


அவள் சிணுங்கிக்கொண்டே அதில் தயாராகி வந்தாள்.
அவனிடம் “மாமா மாராப்ப கொடுங்க மாமா?” எனவும்


“மாராப்பா அப்படின்னா?”


“ம் விளையாடதிக மாமா இதுக்கு மேல போடுறது. அத கொடுங்க மாமா” எனவும்


“இதுக்கு மேல எதுவும் போட தேவையில்லை. இதுவே நல்லாயிருக்கு” என்றவன் அவள் தலைமுடியை விரித்து விட்டு தான் வாங்கிக் கொடுத்த நகைகளில் ஒரு செட்டைக் கொடுத்த அணியச்செய்தான்.


வெளியே ஹாலிருந்த அவன் தந்தையிடம் “அப்பா நான் தாமரைய கூப்பிட்டுகிட்டு வெளிய போய்ட்டு வரேன். நீங்க லன்ச் ஆர்டர் பண்ணிக்கங்க. வேற எதுனாலும் எனக்கு கால் பண்ணுங்க” என்றவன் அவளோடு வெளியே சென்றான்.


அவளோடு காரில் சென்றவன் அந்த ஊரிலிருந்த மிகப்பெரிய ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றான்.
அதனை பார்த்து வியந்தவள் “என்ன கடை மாமா இது? என்ன வாங்க வந்திருக்கோம்?” என வினவ


“இது கடையில்ல மால். இங்க எல்லாமே கிடைக்கும்” என்று சொன்னவன் முதலில் சமையல் பொருட்கள் விற்கும் கடைக்கு அழைத்துச்சென்றவன் சமையலுக்கு தேவையான பொருட்களை அவளிடம் கேட்டும், அங்கிருந்த பொருட்களின் பெயரை வாசித்து அவளிடம் சொல்லியும், அதில் போட்டிருந்த படங்களை பார்த்தும் வாங்கச் செய்தான்.


பின் மிக்சி, கிரைண்டர் மற்றும் சில அத்தியாவசிய தேவையான சமையல் சாதனங்களை வாங்கிக்கொடுத்து, ஒருவாரத்திற்கு தேவையான காய்கறிகளும் ஆர்டர் செய்து டோர் டெலிவரி செய்யச் சொன்னவன், அவளை அங்கிருந்த துணி கடைக்கு அழைத்துச்சென்றான்.


அவள் மறுக்க மறுக்க அவளுக்கு பல மாடர்ன் உடைகளை வாங்கிக் குவித்தவன் பின் அவளோடு அங்கிருந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச்சென்றான்.


அவளை ஒரு சீட்டில் அமர்த்திவிட்டு எதிர்சீட்டில் அவனும் அமர்ந்து ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தான். அவள் ஐஸ்கிரீம் வரும்வரை சுற்றியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவர்கள் பக்கத்தில் டேபிளில் அமர்ந்திருந்த அமெரிக்க ஜோடிகள் மாறிமாறி ஊட்டிக்கொண்டே சாப்பிட அதை அவள் அதிசயம் போல் ஆஆ வேன பார்க்க
அதை பார்த்தவன் அவளிடம் “உனக்கும் அப்படி ஊட்டிவிடவா?” கண்ணடித்து வினவ


அவள் வேகமாக மறுப்பாக தலையை அசைத்து எப்படியோ வேகவேகமாக அள்ளி ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்தாள்.


அவளுக்கு படம் பார்க்க மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்தவன் அடுத்து அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த தியேட்டருக்கு அழைத்துச்சென்றான்.
அங்கே அழகான ஆங்கிலப் படம் ஓட புரியவில்லையென்றாலும் அவளும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தாள்.


முதலில் ஆர்வமாக பார்த்தவள் பின் பார்த்த காட்சிகளில் நெளிய ஆரம்பிக்க இன்பச்செல்வன் அவளை பார்த்து “ஏதாவது வேணுமா தாமரை?” எனக் கேட்க


“ம்கூம்” என்றவள் படம் பார்க்க முடியாமல் அவஸ்தையாக நெளிந்துக் கொண்டேயிருக்கவும்,

என்ன தாமரை என்ன வேணும் சொல்லு?” என அவன் மீண்டும் கேட்கவும்


“இப்படி படமெல்லாம் நீங்க பார்ப்பிங்களா மாமா?” என கிசுகிசுப்பாக வினவ


“எப்படி படம்?” என அவன் கேள்வியாக கேட்க


அவன் காதில் அவள் “ம் இப்படி அசிங்கமான படமெல்லாம்” என்று சொன்னதைக் கேட்கவும்


“இதெல்லாம் அசிங்கமான படமா?”


“அப்புறம் இல்லயா மாமா?”


“ம்கூம் இதெல்லாம் தப்பே இல்ல. இதெல்லாம் காதலோட உச்சகட்டத்தில நம்மளோட உணர்ச்சி தூண்டுறதலா நடக்கிற நிகழ்வுகள். இது இயற்கையானது” என்று சொல்லவும்


அவள் அவனைப் பார்த்து சந்தேகமாக “அப்ப ஏன் மாமா அன்னைக்கு நீங்க இப்படியெல்லாம் செய்யல? இல்ல உங்களுக்கு தெரியாதா?” என வினவ அவனுக்கு சிரிப்பாக இருந்தது.


“ம் எனக்குத் தெரியாது. நீ வேணா நான் கத்துக்கறதுக்கு உதவி செய்றயா?” என


அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் ‘ஙே’ என்று விழிக்க


“என்ன கத்துத் தருவியா?” என மறுபடியும் கேட்டுக் கொண்டே அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் பின்னோடு கைகளை போட்டு சில சேட்டைகள் செய்ய அவளுக்குத் தான் அவஸ்தையாக இருந்தது.


“மாமா கைய எடுங்க மாமா ஒருமாதிரி இருக்கு” என்று அவள் கெஞ்ச


“ம்கூம் நீ எனக்கு சொல்லித் தரமாட்டுற. நானேவாவது கத்துக்கறனே” என்றவன் அவள் அருகில் இன்னும் நெருங்கியவன் அவளை சிவக்க வைத்தான்.
படம் முடிந்து அவர்கள் வீட்டுக்கு வரும்போது அவர்களுக்குள் ஒரு நெருக்கம் வந்திருந்ததை இருவரும் உணர்ந்திருந்தனர்.


இரவு உணவையும் அவர்கள் வெளியே முடித்துவிட்டு வந்திருந்ததால் ஒரு குளியல் போட்டுவிட்டு படுக்கையில் அமர்ந்திருந்த இன்பச்செல்வனுக்கு அவளை படிக்க வைக்க வேண்டும், தனக்கு ஏற்ற மாதிரி மாற்ற வேண்டும் என்ற எண்ணம் போய் அவளை அன்பில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் என்ற ஆசை வந்ததது.

அதனால் அவளுக்கு தான் தவறு செய்கிறோமோ? என்ற எண்ணம் உண்டானது.


அப்படியே படுக்கையில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தவன் அவள் வருகையை உணர்ந்து திரும்பிப் பார்க்க இரவு சாட்டின் உடையில் அவளைக் கண்டவுடன் மூளை வேலை நிறுத்தம் செய்ய பார்வையால் அவளை பருகியவாறே அமர்ந்திருந்தான்.


செந்தாமரைச்செல்வியின் மனதோ இன்று அவன் தியேட்டரில் நடந்து கொண்டதை நினைத்து உள்ளம் எதையோ எதையோ எதிர்பார்க்க நாணமும் தயக்கமும் போட்டிபோட அவன் அருகில் அமர்ந்தவள் “தூங்கலையா மாமா” என


“ஹான் என்ன கேட்ட தாமரை?” என்று முழிக்க

இல்ல மாமா தூக்கம் வரலையா?”


“ஆமா” என்றவன் எதோ சிந்தனையில் ஆழ


அவள் மெதுவாக “நான் படுத்துக்கவா மாமா?” என்று எதிர்பார்ப்புடன் கேட்க


“சரி” என்று அவன் சொல்லவும் அவளுக்கு புஸ்ஸென்றானது.


தன் மனதை சமன்படுத்திக்கொண்டு படுத்தவள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கவும் இன்பச்செல்வனும் படுத்துக்கொண்டு அவளை பின்புறமாக அணைத்து “என்ன கொல்லறடி தாமரை சத்தியமா முடியலடி” எனவும்
திரும்பி அவன் பக்கம் பார்த்து அவள் படுக்கவும் அவள் இதழ்களை தனதாக்கியவன் சிறிதுநேரம் கழித்தே விட்டான்.


பின் அவளிடம் “உனக்கு சம்மதமா தாமரை?” என தயக்கமாக வினவ


அவளோ சம்மதத்தின் அறிகுறியாக அவன் நெஞ்சில் புதைய இந்த செந்தமாரைச்செல்வியை உண்மையான செந்தாமரை மலர் போல் சிவந்து மலர வைத்தான்.

Advertisement