“உனக்கு என்கிட்ட பயம் இல்லை. திரும்ப உன்னை கடத்தினா தான் நீ அடங்குவ”

 

“கடத்தி தான் என்னை அடக்கினீங்களா, எனக்கு இது தெரியாம போச்சே” என்று ஆச்சரியம் கொண்டாள்.

 

“மிஸ்டர் மாமனார் பொண்ணாச்சே நீ?”

 

“தேசிகன் பொண்டாட்டி இல்லையா நான்?” என்று இமைசிமிட்டினாள் பெண்.

 

தேசிகன் அவளை தனக்குள் கொண்டு வந்தவன், “பிடிச்சிருக்காடி?” என்று கேட்டான்.

 

“உங்களை தானே?”

 

“தன்வி. தன்வி” என்றான் கணவன் அவளை தனக்குள் நெருக்கி.

 

முதலில் எல்லாம் அவன்தான் இந்த கேள்வியை கேட்பான், இப்போதெல்லாம் மனைவி அடிக்கடி கேட்கிறாள்.

 

“உங்க மாங்கல்யம் எனக்கான தண்டனைன்னு சொன்னா பொண்ணாடி நீ?”

 

“அது மட்டுமில்லை உங்களையும் சேர்த்து சுமக்க எனக்கு இஷ்டமில்லை கூட சொன்னேன்” என்றாள் தன்வி.

 

“இப்போ தினமும் சுமக்கிற. இதோ இங்க, இங்க” என்று அவளின் நெஞ்சத்தையும், இடுப்பையும் சுட்டி காட்டினான் நல்லவன்.

 

“தொட்டு தான் சொல்லணும் இல்லை. இன்னும் அங்கென்ன கை எடுங்க” என்று இடையில் இருந்து தட்டிவிட்டாள்.

 

“எனக்காக தானேடி இன்னும் கூட அந்த வளைவை மெயின்டைன் பண்ற. நான் தொட்டா என்ன?” என்று வம்படியாக பிடிக்க,

 

“அப்படின்னு நான் சொன்னேனா?” என்றாள் மனைவி உதட்டை சுளித்து.

 

“எனக்கே தெரியும்டி” என்றவன்,

 

“நீயும், என்னோட கனவும் என்னை ரொம்ப ஓடவிட்டு தான் என் கைக்குள்ள வந்திருக்கீங்க” என்றான்.

 

“எப்படி வந்தாலும் உங்ககிட்ட வந்துட்டோம் இல்லை.”

 

“வர வரைக்கும் நான் விட மாட்டேன்னு உங்களுக்கு தெரியும்”

 

“ஆமா. உங்களை வேணாம் சொல்லியும் கல்யாணம், புருஷன்னா நீங்க தான் அங்க நிக்கிறீங்க. அப்படியென்ன பார்த்துடலாம்ன்னு தான் ஓகே சொன்னேன்”

 

“பார்த்துட்டியா?” என்று கண்ணடித்து கேட்க.

 

“உங்களை” என்று அவன் தோளிலே அடி கொடுத்தாள்.

 

“யார்கிட்டேயும் நான் அடி வாங்கினதில்லை. ஆனா இப்போ பொண்டாட்டி தொட்டத்துக்கெல்லாம் என்னை அடிக்கிறா” என்று புகார் வாசிக்க,

 

“அப்படித்தான் அடிப்பேன். என் புருஷன் என் உரிமை” அவனின் மார்பில் விரலால் குத்தி சொன்னாள்.

 

“அதே உரிமையை நான் எடுத்தா தட்டி விடுறது” என்றவன் விரல்கள் என்னமோ இன்னமும் அவளின் இடையில் தான் இருந்தது.

 

“வீட்டுக்கு கிளம்ப வேணாமா?”

 

“போலாம்” என்றவன் மனைவியுடன் அவன் சாம்ராஜ்யத்துக்குள் சென்றான்.

 

ஹோட்டல், அதனை தொடர்ந்து பழங்களுக்காக மிகப்பெரிய சேமிப்பு கிடங்கு, மசாலா பொருட்களுக்கான தொழிற்சாலை, பழங்களுக்கான தொழிற்சாலை, அதன் அலுவலகங்கள் என்று பைக்கில் அப்படியே மெல்ல சென்றான்.

 

தேசிகன் எந்தளவு எல்லாவற்றையும் ரசித்தானோ, அதைவிட தன்வி ரசித்தாள்.

 

கணவனின் கனவு அவளின் கனவாகி, அதற்காக அவள் போட்ட உழைப்பு காரணமாக இருக்கலாம்.

 

பிள்ளைகளை சுமந்த நேரமும், அவளின் அலுவலகத்திற்கு சென்றாளோ இல்லையோ தேசிகன் அலுவலகத்திற்கு சென்றுவிடுவாள்.

 

யார் சொன்னாலும் கேட்க மாட்டாள். தேசிகனின் ஓயாத ஓட்டம் அவளை சோர்வடைய வைத்ததே!

 

“நான் இருக்கேன். நம்ம குடும்பம் இருக்கு” என்று எல்லோருக்கும் ஏதோ ஓர் கூடுதல் பொறுப்பு.

 

தேசிகன் மாமாவின் மகளை கூட தொழிலில் இணைத்துவிட்டாள். அவளுக்கான உரிமை அது என்ற எண்ணத்துடன்.

 

சுதா மகளை கடிந்து, கண்டித்து பிள்ளைகள் பிறந்த நேரம் ஓய்வெடுக்க வைத்து, ஏழாம் மாதம் தான் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அதில் தேசிகன் முதல் கொண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சி.

 

“நான் இல்லைன்னா உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?” என்று கணவன் தலை முடி பற்றி ஆட்டிவிடுவாள் என்பது வேறு கதை.

 

 எப்படியாகினும் இன்று தேசிகன் ஜெயித்துவிட்டான். தன்வி அவனுடன் நிற்பதே அவனுக்கு வெற்றி என்பதை கடந்து, அவனுக்காக அவள் ஓடியது எல்லாம் மனைவிப்பால் கணவனை அதிகமே இழுத்துவிட்டது.

 

“உனக்கு தேங்க்ஸ் சொல்லணுமாடி” என்று தேசிகன் அவனின் அறைக்குள் வரவும் மனைவியிடம் கேட்டான்.

 

“சொல்லலாமே. என் முன்னாடி முட்டி போட்டு கூட சொல்லுங்க” என்றாள் மனைவி.

 

“ஏன் படுத்து உருண்டு சொல்றேனே”

 

“உங்களை”

 

“அடிச்சுக்கோ” என்று அவள் கை பற்றி மார்பிலே வைத்தான்.

 

தன்வி மென்மையாக வருடிவிட, “ஏண்டி அப்படி பண்ண?” என்று கேட்டான்.

 

“எப்படி பண்ணேன்?”

 

“மஞ்சள் ஈரத்தை தொட்டு பார்த்தியே” என்றான் கனத்த குரலில்.

 

“எப்போ?”

 

“கோவில்ல தாலி கட்ட வந்து எடுத்தப்போ” என்றவன் அவளை இழுத்து, மனைவி கழுத்துக்குள் முகம் புதைத்து கொண்டான்.

 

முதல் முதலாக அவளுக்கு தாலி கட்டசென்று, எடுத்ததை சொல்கிறான். தன்விக்கு நினைவு வந்தது.

 

“தெரியலை. மஞ்சள் கயிறோட ஈரம், சில்லன்னு என்னை தொட்டுட்டு போகவும், அந்த இடத்தை தொட்டு பார்க்கணும்ன்னு. ஹேய், அப்போ அதுக்காக தான் திரும்ப தாலி கட்டினீங்களா?” என்று அவன் முகம் நிமிர்த்தினாள்.

 

“தெரியலை” என்றான் கணவன் அவள் கண்களோடு கண்கள் கலந்து.

 

“அப்போ இருந்த கோவம், என் அம்மா கஷ்டப்பட காரணமா இருந்தவர், என்னை ப்ளாக்மெயில் பண்ணி அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்றார். எப்படி முடியும் என்னால? முடியலை. ஆனாலும் உன்னை அந்த இடத்துல வைச்சு பார்க்கும் போது, இங்க வலிச்சது” என்று அவன் மார்பை, மனைவி விரலாலே வருடினான்.

 

“ஏன் வலிக்குதுன்னு அப்புறம் தெரிஞ்சது. நீ அந்தாள் பொண்ணு இல்லை. எனக்கு அதைவிட வேறென்ன வேணும் சொல்லு. கட்டிட்டேன். எதையும் யோசிக்கலை. நீ யார், என்னன்னு எதையும் யோசிக்கலை” என்றான்.

 

தன்விக்கு அவன் வார்த்தைகள், அவன் முகம் எல்லாம் ஏனோ கண்களை கலங்க வைத்தது.

 

“வலுக்கட்டாயமா கட்டினேன், பிடிக்காம கட்டினேன், பழிவாங்க கட்டினேன்னு என்ன சொன்னாலும், நான் கட்டினது எனக்காக!” என்றான்.

 

“தேசிகன்” என்று பெண் முனக,

 

“பிடிச்சிருக்காடி. என்னை வேணாம் சொல்ல மாட்ட இல்லை”

 

“நீங்க என்னை சொல்வீங்களா?”

 

தேசிகன் அவள் கன்னத்தை கடித்து வைத்தான்.

 

“நான் மட்டும் சொல்லலை. நீங்களும் என்னை நேரா பார்த்து, நான் வேணாம் சொன்னீங்க” என்றாள் தன்வி.

 

“சரியா போச்சு. கேம் ஓவர்” என்று தேசிகன் கண்ணடித்தான்.

 

தன்வி சொன்ன வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு மறப்பதே இல்லை போல.

 

“ரொம்ப உங்களுக்குள்ள வந்துட்டேனோ” என்று மனைவி கேட்டாள்.

 

“உனக்குள்ள நான் வந்ததை விட குறைவு தான்” என்றான் கணவன்.

 

“அப்படியெல்லாம் நீங்களே கற்பனை பண்ணிக்க வேணாம்” என்று தன்வி உதட்டை சுளிக்க,

 

“நிஜத்தை போய் யாராவது கற்பனை பண்ணுவாங்களாடி” என்று அவளின் நெற்றி முட்டினான்.

 

தன்வி அவனுக்குள் சரணடைந்து நின்றாள். வேண்டாம் என்றவளை, அன்பினால் முழுவதுமாக அவனுடன் பிணைத்தவனாகிற்றே அவள் கணவன்.

 

“பிடிச்சிருக்காடி” என்று தேசிகன் விடாமல் கேட்க,

 

“பிடிச்சிருக்கு” என்று அவன் மார்பில் முத்தமிட்டாள்.

 

“எனக்கும்” என்று அவள் இடையை வருடினான் நல்லவன்.

 

வேறென்ன வேண்டும் என்று தெரியவில்லை. இருவரும் நன்றாக இருப்பார்கள் என்ற உறுதி நிச்சயம் கிடைத்துவிட்டது.

 

வாழ்க்கையை அதன் போக்கிலே வாழ்ந்து விடுவார்கள். கடமைக்காக என்றில்லாமல், அவர்களுக்குள் பிணைந்துவிட்ட அன்பினால் வாழ்ந்துவிடுவார்கள்.

 

தேசிகனுக்கு தன்வி வேண்டும். தன்விக்கு தேசிகன் வேண்டும். இருவருக்கும் இருவருமே கிடைத்து விட்டார்கள். முற்றும் முழுதாக, குறைவில்லாமல் கிடைத்துவிட்டார்கள்.

 

போதுமே!