ராஜேந்திரன் இப்போதும் பதவியில் இருக்க, கட்சி ஆட்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள் பலர் வந்திருக்க, அரவிந்தன், முரளிக்கு தான் அதிக வேலை.
இளையவர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்திருக்க, குழந்தைகளின் எண்ணிக்கையும் கூடியிருந்தது.
குடும்ப புகைப்படம் என்ற ஒன்றை எடுக்கவே போராட்டம் தான். இப்போதும் விருந்தினர்கள் கிளம்பிய பின் மாலை போல் எல்லாம் தயாராகி வந்துவிட்டனர்.
பாட்டி நடுவில் இருக்க, எல்லாம் அவரை சுற்றி, மிக பெரிய கூட்டம்.
“காட்டுமிராண்டி கூட்டத்துல நீங்களும் சேர்ந்துட்டீங்க சம்மந்தி” என்று பெரியவர் சத்தமாக சிரிக்க,
“எல்லா போட்டோக்கும் இதை சொல்லியே ஆகணும் இல்லை உங்களுக்கு” என்று சதாசிவம் காண்டாகிவிட்டார்.
தேசிகன் உதட்டுக்குள் சிரிக்க, தன்வி கணவனின் தோளில் இடித்தவள், “உங்க மகனை எங்கன்னு பாருங்க முதல்ல. அவனோட தான் எல்லா வாண்டுகளும் இருக்கும்” என்றாள்.
“இருப்பா. என் பேரன் இன்னும் வரலை” என்று சதாசிவம் அவனை தேட கிளம்ப,
“இவனோட. டேய் போய் எல்லாத்தையும் தேடுங்கடா” என்று மற்றவர்களும் எழுந்துகொள்ள பார்க்க,
“ஹரி” என்று தேசிகன் ஒற்றை குரல் ஓங்கி கொடுத்தான்.
“ப்பா” என்று ஆறு வயது மகன் எங்கிருந்தோ ஆஜர் ஆக, அவனுடன் மற்ற பிள்ளைகளும்.
“இவ்வளவு நேரம் நாங்க கூப்பிட்டது எல்லாம் உனக்கு கேட்கலையாடா நல்லவனே” என்று அரவிந்தன் அவனை அதட்டினான்.
“குழந்தையை எதுக்குடா அதட்டுற” என்று பெரியவர்கள் ஒன்று போல அவனை கடிந்து, எல்லா குழந்தைகளையும் நடுவில் நிற்க வைக்க, பாட்டி முதல் பெரிய பேரன் ‘ஹரிஹரனை’ கூப்பிட்டு தன் மடியில் அமர்த்தி கொண்டார்.
“பாட்டிக்கு வெய்ட் கொடுக்காம உட்காரணும் ஹரி” என்று தேசிகன் சொல்ல,
“சரி, சரிப்பா” என்று மகன் அது போலவே அமர,
“தன்வி பேத்தியை கொடு” என்று கை நீட்டினார் சதாசிவம்.
தேசிகன் கையில் இருந்த மகளை கொடுக்க சொல்லி அவள் கண் காட்ட, “தாத்தாகிட்ட போகணுமா பாப்பா?” என்று கேட்டான் நல்லவன்.
தேசிகன் தம்பதியின் நாலு வயது மகள் சுஹாசினி, அப்பா, தாத்தாவை குழப்பமாக பார்க்க, “இப்போ கொடுக்க போறீங்களா இல்லையா?” என்று கணவனை கண்களால் மிரட்டி கொடுக்க வைத்தாள் தன்வி.
“ம்ம். இப்போ எடுங்க” என்றார் பெரியவர்.
முதலில் பெரிதாக குடும்ப புகைப்படம். அதன் பின் அவரவர் மனைவி மக்களுடன், பெற்றவர்களுடன் புகைப்படம் எடுத்தனர்.
“எங்க சம்மந்தியோட தனி போட்டோ” என்று சதாசிவத்தை நடுவில் நிற்க வைத்து எடுத்து கொண்டனர்.
சதாசிவத்திற்கு இவங்களோட முடியலைடா என்றிருந்தது. முதல் ஆளாய் இவரை கடுப்பாக்குவதும் இவர்கள் தான். பாசத்தை காட்டுவதும் இவர்கள் தான்.
“சம்மந்தி. காலரை சரி பண்ணுங்க” என்று பெரியவரே எடுத்தும் விட, சதாசிவத்திற்கு முகம் நிறைந்த புன்னகையே.
“அப்புறம் மருமகனோட ஒரு போட்டோ எடுத்துகிறது” என்றும் கேட்க,
“ஆரபிச்சுட்டாங்க” என்று சதாசிவம் அண்ணனிடம் ஓடிவிட்டார்.
“தம்பி நாம” என்று மனோகரும், தேசிகனும் மட்டும் ஓர் புகைப்படம் எடுக்க,
“மச்சானுங்க இல்லாம என்ன போட்டோ?” என்று ராஜேந்திரன் மகன்களும் இணைந்து கொண்டனர்.
இப்படியாக எல்லாம், எல்லோருடனும் புகைப்படம் எடுக்க, முரளியும் அவன் குடும்பத்துடன் நின்றான்.
அம்மா, இரு மகன்கள், அவர்களின் மனைவி பிள்ளைகள் என்று வெகு பந்தமாக நின்றது அந்த குடும்பம்.
“அண்ணாவோட இருக்கணும் சார். எனக்கு வேற யாரோடவும் செட்டாகாது” என்றான்.
கணவருக்காக, சுதா மருமகனுக்கு அழைத்து கேட்க, “நான் சொன்னாலும் இருக்க மாட்டான் அத்தை. வேணும்ன்னா கணேஷை கூப்பிட்டுக்கோங்க. அரவிந்தன் கூடத்தான் படிச்சான். இப்போ தொழிலிலும் இருக்கான். சிட்டி வாழ்க்கை அவனுக்கு பிடிக்கும்” என்று சொல்ல,
சதாசிவம் விருப்பம் இல்லாமல் தான் கணேஷை வர சொன்னார். ஆனால் சில நாட்களில் அவன் நன்றாக செட்டாகிவிட்டான்.
தேசிகனின் மாமா அவரின் குடும்பத்துடன் பேர பிள்ளைகளுடன் நின்று எடுத்து கொள்ள,
“மாமா, அத்தை” என்று தேசிகன் அவர்கள் கைபற்றி தன்வியுடன் சேர்ந்து, தனியாக புகைப்படம் எடுத்து கொண்டான்.
பெரிய வீட்டில் அவனுக்கான இடம் கொடுத்து, அங்கீகாரம் கொடுத்து, இந்த நொடிவரை அவனை முன்னிறுத்தி என்று அவர்கள் செய்தது தேசிகனுக்கு மிகப்பெரியது.
“மாமா” என்றழைத்தாலும் அவனுக்குள் அவர் தந்தை ஸ்தானமே!
இறுதியாக தேசிகன் குடும்பம் புகைப்படத்திற்கு நிற்க, சாவித்திரி மையமாக அவரின் இரு பக்கமும் மருமகள்கள், அவருக்கு பின் மகன்கள், அவருக்கு முன் பேரக்குழந்தைகள் என்று சாவித்திரி அந்த நொடி தான் தன்னை ராணியாகவே உணர்ந்தார்.
மிகவும் கம்பீரமாக கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவரை, தேசிகனின் தந்தை ஓர் மூலையில் நின்று பார்த்தார்.
அதுவரை இல்லாத ஓர் ஏக்கம் அவருக்குள் எழுந்தது. இனி என்ன பயன்?
இரவு உணவும் மிக பெரிய பந்தியாகவே நடந்தது. ஊர்க்காரர்கள், அங்காளி, பங்காளி என்று அன்றய முழு நாளிற்கான உணவும் அங்கே தான்.
“நீங்க நிலம் கொடுக்கலைன்னா இது இல்லை” என்று தேசிகன் எல்லோருக்கும் நன்றி சொல்ல, பரிசு கொடுக்க,
“இன்னும் கூட நீ பண்ணுப்பா. நாங்க இருக்கோம்” என்று வெகு திருப்தியுடன் விடைபெற்றனர்.
“சேர்த்து பிடிக்கிறதுல நீ மன்னன் தம்பி” என்று மனோகர் சொல்ல,
“இல்லைன்னா உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் நான் சமாளிச்சிருக்க முடியுமா?” என்று கேட்டான் தேசிகன்.
“கிளம்பலாமா தேசிகா. ரொம்ப நேரம் ஆச்சு. ரெஸ்ட் எடுக்கணும்” என்று பெரியவர் வந்தார்.
“சரி தாத்தா. நீங்க கிளம்புங்க. நான் பின்னாடியே வரேன்” என்று தன் குடும்பத்தை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தவன், மனைவியை மட்டும் தன்னுடன் இருத்தி கொண்டான்.
“தன்வி எங்க?” என்று சதாசிவம் கேட்டவர், முரளி எதோ சொல்ல வரவும், “சொல்லாத. எனக்கே தெரிஞ்சு போச்சு” என்றார்.
“ண்ணா. நீங்க பேத்தியை உங்களோட தூங்க வைச்சுக்கிறீங்களா?” என்று சாவித்திரி கேட்க,
“ஹரியும் எங்களோட இருக்கட்டும்மா” என்று சுதா சொல்ல, பேரக்குழந்தைகளுடன் மனிதர் சந்தோஷமாகிவிட்டார்.
ராஜேந்திரனுக்கு தம்பி பற்றி கவலை அகன்றது. அவரின் குணம் தெரிந்து பழகும் சம்மந்தக்காரர்கள் அவருக்கு நிம்மதி அளித்தார்கள்.
நிலா ஒளியில் தேசிகன் அவன் தொழில் மையத்தை ரசனையுடன் பார்த்து கொண்டிருக்க, தன்வி அவள் கணவனை ரசித்து கொண்டிருந்தாள்.
“பொறுப்புகள் கூடிருச்சுடி” என்று சொல்ல,
“எனக்கு கூடினதை விட இல்லை” என்றாள் மனைவி.
“நீ என்னை சொல்லலை இல்லை” என்று மிரட்ட,
“உங்களை மட்டும் இல்லை, உங்க பிள்ளைகளையும் சேர்த்து தான் சொல்றேன்” என்றாள் தன்வி அசராமல்.