தன்விக்கு அவளின் அலுவலகம் முழு மகிழ்ச்சியை கொடுத்துவிடவில்லை. தேசிகன் தொழில், அவன் அதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதையே, உறுத்தலாக உணர்ந்தாள்.

எல்லோருக்கும் ஏதோ ஒன்று இருந்தது. தேசிகன் மட்டும் எல்லாவற்றிலும் எதோ ஓர் இடத்தில் இருந்தான். அவ்வளுவே! அவனுக்கென்று தனியாக வருமானம் எதுவும் இல்லை.

சாவித்திரி, அவரின் தொழிலை மகனிடம் கொடுக்க போராடி பார்க்கிறார். அசைய மாட்டேங்கிறான். மற்றவர்களும் முயற்சித்துவிட்டனர். பலன் தான் இல்லை.

குடும்பத்தினர் எல்லாம் உணவுண்டு முடிய, தன்வி மட்டும் இன்னும் பந்திக்கு வரவில்லை.

தேசிகன் மூச்சை இழுத்து விட்டு கொண்டவன் தன்வியை, “வா. சாப்பிடலாம்” என்றழைத்தான்.

சுதாவிடம் பேசி கொண்டிருந்த தன்வி, மறுக்க நினைத்து, பின் அமைதியாக கணவனுடன் அமர்ந்து உணவுண்டாள்.

எல்லாம் நல்லபடியே முடிய, வீட்டினர் ஓய்வெடுக்க சென்றனர். சதாசிவம் மட்டும் சாவித்திரி தொழில் செய்யும் இடத்திற்கு சென்றவர், முழுதும் சுற்றி பார்த்துவிட்டு, ஆச்சிரியம் கொண்டார்.

“எல்லாம் நல்லா இருக்கு. தன்விக்கும் கைட் பண்ணுங்க” என்று சொல்ல,

“உங்களை விட நான் கைட் பண்ணிட முடியாதுண்ணா.  பார்த்திருக்கேன் உங்க முறை எல்லாம் வித்தியாசமா இருக்கு. தன்விக்கு அதுதான் சரியா இருக்கும்” என்றார் சாவித்திரி.

அதனோடு தேசிகன் குடும்பத்திற்கு சொந்தமான மற்ற தொழிலையும் பார்த்த சதாசிவம், மலைத்து தான் போனார்.

மதிப்பு போட்டு பார்த்தால் எல்லாம் எங்கோ சென்றது. ‘இதுக்கு தான் அண்ணா என்னை திட்டிட்டே இருந்தாரா? நானும் பணத்துக்காகன்னு பேசியிருக்க கூடாது’ மனிதர் உண்மையாக வருந்தினார்.

மாலை போல் தன்வி வீட்டில் எல்லாம் கிளம்ப, தேசிகன் அன்றிரவு சீக்கிரமே தூங்கிவிட்டான்.

விழாவிற்கான வேலைகள் அவனுக்கு அதிகம் என்பதால் தன்வி எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

மறுநாளில் முதல் செய்தியாக, “அந்தாள் வெளியே வந்துட்டார்” என்று தேசிகன் மாமா சொன்னார்.

அவர் சொல்லி முடிக்கவில்லை. தேசிகனின் தந்தை இவர்கள் கேட்டுக்கு முன் வந்து அப்படி கத்தி கொண்டிருந்தார்.

தேசிகன் முகம் இறுகி போக, அவரின் பங்காளிகளுடன் கேட்டிற்குள்ளேயும் வலுக்கட்டாயமாக நுழைந்தார்.

“யாரை கேட்டு உள்ள வந்தீங்க, முதல்ல எல்லாம் வெளியே போங்க” என்று அரவிந்தன் சத்தமிட.

“டேய். நான் உன் அப்பாடா. என்னை வெளியே போக சொல்வியா நீ?” என்று அவனிடம் பேச,

“அதெல்லாம் எப்போவோ முடிஞ்சு போச்சு. உங்க யாருக்கும் எங்க வீட்ல அனுமதியில்லை. நீங்க போலாம்”  என்று தாத்தா சொன்னார்.

“உன் வீட்டுக்குள்ள வர எங்களுக்கும் ஆசையில்லை. என் மகன்களை என்கூட அனுப்பி வைங்க”

“அப்படி யாரும் இங்கில்லை” என்றான் தேசிகன்.

“இங்க பாரு தேசிகா. உன் அம்மாக்காக, அப்பன் என்னை தூக்கி போட்டுடுவியா நீ? நாம எல்லாம் ஒரு குடும்பம். இவ யாரு நமக்குள்ள? முதல்லே இவளை நசுக்கியிருந்தா இன்னைக்கு என் மகன்கள் யாரோ ஒருத்தர் வீட்ல இருப்பாங்களா? எல்லாத்துக்கும் காரணம் இவதான்” என்று மனைவியை பார்த்து குரோதம் கொண்டார்.

“நாங்க சரியான இடத்துல தான் இருக்கோம். நீங்க கிளம்புங்க முதல்ல. ண்ணா. நான் இதுக்கு தான் சொன்னேன். இந்தாளை சும்மா விட கூடாதுன்னு. பாரு இப்போ நம்ம முன்னாடியே அம்மாவை என்ன பேச்சு பேசுறார்ன்னு” என்று அரவிந்தன் குதிக்க,

“டேய். அடங்குடா. என்னை செஞ்சிடுவியா நீ? இப்போ நான் நினைச்சா கூட உன் அம்மா என் வீட்ல வந்து ஆள் செய்யணும். ஏதோ போனா போகுதுன்னு விட்டா”

“என் அம்மா வந்து உன் வீட்ல ஆள் செய்யணுமா?” என்று தேசிகன் தீவிரமாக கேட்க,

“ஆமா. ஏன் செய்ய மாட்டாளா? அனுபவம் உள்ளவ தானே? ஏய் என்ன வாய் பார்த்துட்டு இருக்க, நம்ம மகனுக்கு சொல்லு. இப்போ ஏதோ தொழில் பண்ணா நீ பெரியாளாகிடுவியா? என்னைக்கும் எனக்கு கீழே தான் நீ. மறந்திடாத” என்று சாவித்திரியை பார்த்து ஏளனம் செய்தார் மனிதர்.

தேசிகன் அவரை புருவங்கள் சுருங்க தீர்க்கமாக பார்த்தவன், “எல்லாரையும் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளு” என்று தம்பிக்கு உத்தரவிட்டான்.

அரவிந்தன் அடுத்த நொடியே அதை செய்ய, தேசிகன் அடுத்த ஒரு வாரம் வீட்டில் இருக்கவில்லை.

எங்கிருக்கிறான், என்ன செய்கிறான் எதுவும் தெரியவில்லை.

“திரும்ப எனக்கு ஆகாத வேலை எதுவும் செய்றானாண்ணா?” என்று அண்ணனிடம் கேட்க,

“இல்லை சாவித்திரி. நீ இதுல கையெழுத்து போடு” என்றார்.

“இதென்னண்ணா புதுசா இருக்கு?” என்று தங்கை கேட்க,

“சொன்னா தான் கையெழுத்து போடுவியாமா” என்ற அண்ணன் கேள்வியில் உடனே கையெழுத்திட்டார்.

“இதுவே நான் கேட்டிருந்தா, ஆமா சொன்னாதான் கையெழுத்து போடுவேன்னு ஆயிரம் பேசியிருப்பாங்க உங்க தங்கச்சி, பாருங்க இப்போ அண்ணா கேட்ட ஒரு கேள்விக்கு இத்தனை கையெழுத்து?” என்று தேசிகன் இழுக்க,

“டேய் நீ முதல்ல வீட்டுக்கு வா. நீ இல்லாம போனா, நைட்டுக்கு எனக்கு சோறு போடுவாங்களான்னு கூட தெரியலை” என்றார் மாமா.

“என் பொண்டாட்டி அப்படி எல்லாம் பண்ண மாட்டா மாமா. நான் சொல்றேன் அவகிட்ட”

“என் பொண்டாட்டி பண்ணுவாடா. இப்போவே ஆயிரம் நொடிப்பு. ஒழுங்கா என்னோட கிளம்பு”

“அவ்வளவு தான் மாமா. கடைசி கட்டத்துல இருக்கோம்” என்றான் தேசிகன்.

அவன் திட்டப்படி எல்லாம் முடிந்து, வீட்டுக்கு வந்தவன், “நாளைக்கு காலையில ரிசார்ட் வேலை ஆரம்பிக்க போகுது” என்று வீட்டினருக்கு அறிவிக்க,

“ராசா உண்மையாவா?” என்று எல்லாம் மகிழ்ந்து போனார்கள்.

அம்மா, மனைவிக்கு மட்டும் அவனிடம் எதோ ஓர் உறுத்தல். எப்படி திடீர்ன்னு மனசை மாத்திக்கிட்டான்?

“என்னடி என் பொண்டாட்டி” என்று ஒரு வார பிரிவிற்கு மனைவியை ஆசையாக அணைத்து கொண்டான் தேசிகன்.

“உண்மையை சொல்லுங்க. என்ன பண்ணிட்டு வந்திருக்கீங்க?” என்று தன்வி விசாரிக்க,

“கூடிய சீக்கிரம் தெரிஞ்சுப்ப” என்று முடித்து கொண்டவன், மனைவியை கொண்டாட ஆரம்பித்தான்.

தொடர்ந்த நாட்களில் தம்பதிகள் அவரவர் வேலையில் மூழ்கிவிட்டனர். தேசிகனுக்கு ஹோட்டல் வேலைகள் வரிசைகட்டி நின்றது.

மனைவிக்காகவே சில நாள் எல்லாம் விட்டு ஓடிவந்துவிடுவான். “ரொம்ப மிஸ் பண்றேன்டி” என்று இரவு முழுவதும் அவளை கையிலே வைத்திருப்பான்.

தன்விக்கும் கணவன் மீதான தேடல் அதிகமே உண்டு. அவளே வியக்கும் வகையில் தேசிகனை தேடினாள் பெண்.

பிடிக்கும் என்ற பிடித்ததை கடந்து கணவன் அவளை ஏதோ செய்தான்!

அவன் இல்லா நாட்களில் கோவம் அதிகமே வந்தது, ஓரிரு முறை அவனை அழைத்து சண்டையும் போட்டுவிட்டாள்.

“உங்களுக்கு மட்டும் தான் வேலை இருக்கா, எனக்கு இல்லையா? நான் உங்களுக்கு எவ்வளவு முக்கியம்ன்னு இதுல நல்லா தெரியுது” என்றும் பேசிவிட, தேசிகன் அன்றிரவே வீட்டுக்கு வந்துவிட்டான்.

“என்னடி, என்னாச்சு உனக்கு?” என்று மனைவியை தன் நெஞ்சில் சுமந்தபடி கேட்க,

“ஏதோ ஆச்சு. எல்லாம் உங்களால தான்” என்று மார்பிலே குத்தி வைத்தாள்.

“ஆபிஸ், வேலை, வீடுன்னு போரடிக்குதா? உன் அப்பாவை போய் பார்த்துட்டு வரியா? சென்னைக்கு டிக்கெட் போடவா?” என்று கேட்க,

“சென்னைக்கு போக எனக்கு தெரியும். நீங்க சொல்லாதீங்க” என்று அதற்கும் கடித்து வைத்தாள்.

“சரி. நான் ரிசார்ட்க்கான பொருட்கள் வாங்க தான் போறேன். நீயும் என்னோட வா.  லைட்ல ஆரம்பிச்சு பெயின்டிங் வரை எல்லாம் பார்த்து வாங்கணும்” என்றழைக்க,

“இப்போ தான் கூப்பிடுவீங்களா? எனக்கு இந்த வாரம் முக்கியமான மீட்டிங் இருக்கு” என்றவளுக்கு ஏனோ சட்டென கண்கள் கலங்கிவிட்டது.

தன்வியே திகைத்து, கணவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்து கொண்டாள்.

‘ரொம்ப வீக் ஆகிட்டேன். என்னை நான் ரெடி பண்ணனும்’ என்றும் முடிவெடுத்து கொண்டாள்.

மறுநாள் தேசிகன் கிளம்பும் வரைதான் அந்த முடிவு எல்லாம், திரும்ப அந்த வெறுமையான அறை, அவளுக்குள் ஓர் வெற்றிடத்தை உருவாக்கி விட்டது.

‘என்னை பலவீனம் ஆக்கிட்டார்!’ என்று கணவன் மேல் கோபத்துடன், ஏக்கத்தையும் சுமந்து கொண்டாள்.

கட்டிட வேலைகள் எவ்வளவு வேகமாக நடந்ததோ, அவ்வளவு வேகமாக தேசிகனும் ஓடினான்.

இடையிடையே மனைவியை பார்க்கவும் அவன் ஓடி வர, “இந்த ரிசார்ட் வேலை எல்லாம் இப்போதான் பண்ணுவீங்களா? என்னை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி பண்ண வேண்டியது தானே?” என்று மனைவி சண்டைக்கு நின்றாள்.