“சுதா இன்னும் எவ்வளவு நேரம்?” என்று மனைவிக்கு குரல் கொடுக்க,
“வந்துட்டேன்ங்க. இப்போ நாம தன்வியை பார்க்க போயே ஆகணுமா?” என்று கேட்டார் சுதா.
“பார்ட்டில இருந்து அப்படியே கிளம்பிட்டா தன்வி. நான் உன் மருமகனை கூப்பிடத்தான் செஞ்சேன். ஆனாலும் அவர் வரலைன்னு என்னை தான் எல்லாம் பேசுறீங்க” என்று சதாசிவம் சொல்ல,
“உன்னை தான் சொல்வோம், நீ பண்ணதுக்கு தான் மாப்பிள்ளை உன் வீட்டு வாசற்படியை மிதிக்க மாட்டேங்கிறார்” என்று ராஜேந்திரன் வந்தார்.
“ண்ணா”
“ஆமா இப்போ எதுக்கு தன்வி வீட்டுக்கு கிளம்பி நிக்கிற? திரும்ப சண்டை போடவா?”
“ண்ணா. நான் உங்க மாப்பிள்ளைகிட்ட பேசத்தான் போறேன். என் பொண்ணுக்காக அவர்கிட்ட மன்னிப்பு கேட்கவும் நான் ரெடிதான்” என்றார் தந்தை.
“நீ மன்னிப்பு கேட்ப, எங்களுக்கு தாண்டா மனசு ஆறாது. உன் பொண்ணும் அதை விரும்பமாட்டா”
“அப்புறம் என்னை வேறென்ன தான் செய்ய சொல்றீங்க? என் பொண்ணு அவ வீட்டுக்காரரோட அவளோட வீட்டுக்கு வந்து போக வேண்டாமா?”
“இப்போவும் அவளுக்காக தான் யோசிக்கிறீங்க? மருமகன்கிட்ட நீங்க நடந்துகிட்ட விதம் தப்புன்னு உங்களுக்கு தோணலையாங்க” என்று சுதா ஆதங்கத்துடன் கேட்க,
“என்னமோ நான் மட்டும்தான் மோசமா நடந்துகிட்ட மாதிரி பேசுறீங்க? உன் மருமகன் பண்ணது எல்லாம் உனக்கு மறந்து போச்சா? முதல்ல இந்த கல்யாணமே என்னை கடத்தி வைச்சு நடந்தது தான்” என்று குதிக்க,
“உன்னை கடத்தினது மருமகன் இல்லை, உன் போட்டிக்காரன் பண்ண வேலை அது. மாப்பிள்ளை அவன்கிட்ட இருந்து உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்தார்” என்றார் ராஜேந்திரன்.
“என்ன மாமா சொல்றீங்க?” சுதா அதிர்ந்து போக,
“ஆமா அத்தை. தேசிகன் உதவியால தான் மாமாவை நம்மால உடனே கன்டுபிடிக்க முடிஞ்சது. சிங்கப்பூர் வேலை முடிய கூடாதுன்னு செஞ்சது” என்று மனோகரும் சொன்னான்.
சதாசிவத்திற்கு இந்த விஷயம் புதிது. அவரை ஏதோ ஓர் அறையில் அடைத்து வைத்து, நேரத்திற்கு உணவு மட்டும் கொடுத்து கொண்டிருந்தனர் அவ்வளவு தான்.
“ம்ம். இப்போ அடுத்து வேற எதையாவது தூக்கிட்டு வந்து மருமகனை குறை சொல்லு” என்று ராஜேந்திரன் தம்பியிடம் சொல்ல,
“மாப்பிள்ளை. பம்முறதில்லை. அது அவருக்கு வரவும் வராது. ஆனா பாயறதில்லைன்னு மட்டும் சொல்லாதீங்க, அதுவும் என்னை வைச்சுக்கிட்டு” என்று சதாசிவம் முகம் சுருக்கினார்.
“ஏன் உன்மேல பாய்ஞ்சு, பிராண்டி வைச்சுட்டாரா மாப்பிள்ளை. எங்க அந்த காயத்தை காட்டு பார்ப்போம்” என்று ராஜேந்திரன் கேட்க,
“ண்ணா. எல்லாம் ஊமைகுத்து. உங்களுக்கு தெரியாது விடுங்க. இப்போ என்ன அவர் தப்பு செய்யலை. நான் மட்டுமே தப்பு. அவ்வளவு தானே? எனக்கு புரிஞ்சிடுச்சு. என் மகளை பார்க்க நான் போலாமா?” என்று கேட்டார் சதாசிவம்.