Malar Soodum Penmai 22 2 12395 நீங்க வாங்க என்று தன்வி அன்றும் அழைக்கவில்லை, இன்றும் அழைக்கும் எண்ணமில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானதிற்காக சதாசிவத்தின் வீட்டில் பார்ட்டி. அந்த கம்பெனி ஆட்கள் முதல்கொண்டு, அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். ராஜேந்திரன் முதலில் தேசிகனை தான் அழைத்தார். அதன்பின்னே மற்றவர்களுக்கு அழைப்பு சென்றது. சதாசிவம், சுதா மருமகனை போனில் அழைக்க, “ம்ம்” என்றதோடு முடித்துக்கொண்டான் தேசிகன். வாசுதேவன் முதல் கொண்டு இளையவர்களும் தனி தனியாக அவனை அழைத்திருக்க, தன்வி மட்டும் இன்னும் கணவனிடம் அதுபற்றி பேச கூட இல்லை. “அண்ணி” என்று முரளி திரும்ப அழைக்க, “ம்ம். போலாம்” என்று அவனோடு வீடு கிளம்பினாள் தன்வி. வழியில் சுஜாதா அவளுக்கு அழைத்து, “ப்ரீயாகிட்டியா தன்வி பேசலாமா?” என்று கேட்டாள். இரண்டு வாரங்களாக பேச வேண்டும் என்று கேட்டு கொண்டே இருப்பதால், “ம்ம். என்ன சொல்லு சுஜா” என்றாள் தன்வி. “தேசிகன் மாமாகிட்ட சொல்லி என் அப்பாவை ஊர்ல சேர்க்கணும்” என்றாள் சுஜாதா. தேசிகன் மாமாவா? தன்விக்கு அந்த வார்த்தையே கசந்தது. “என் அப்பா பண்ணது தப்புத்தான் தன்வி. ஆனா அதுக்காக அவரை மொத்தமா குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைச்சிட்டா எப்படி? என்ன இருந்தாலும் அவரோட வீடு அது. முதல்ல பிறந்தது என் அப்பா தான். அவருக்கே உரிமை இல்லைன்னு சொல்றார் தேசிகன் மாமா“ “முதல்ல பிறந்து அந்த குடும்பத்துக்கு அவர் செஞ்சது என்ன சுஜா?” என்று தன்வி கேட்டுவிட. “தன்வி” என்ற சுஜாதாவிற்கு கோபத்துடன் சங்கடமும். “உங்கப்பாவோட காதலால முழுசா பாதிக்கப்பட்டது என்னோட அத்தை தான். தங்கச்சி நம்மாள கஷ்டப்படுறான்னு தெரிஞ்சும், உன் அப்பா அவங்களுக்கு செஞ்சது என்ன? சொல்லு சுஜாதா“ “தன்வி, அவர் ஊருக்கு போயிருந்தா அம்மாவை அவர்கிட்ட இருந்து பிரிச்சிருப்பாங்க“ “அதுக்காக என் அத்தை பலிக்காடா?” தன்வி கொதித்து போனாள். அவளுக்கு இந்த நொடி நினைத்தாலும் பற்றி கொண்டு வந்தது. பாட்டியிடம் பேசியிருந்தாள் தன்வி. கணவன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அவளுக்கு தெரிந்து கொள்ள வேண்டும். “எங்க பெரிய மகன் ஓடி போனதும், சாவித்திரியை வலுக்கட்டாயம கட்டிக்கிட்டாங்க. உன் அண்ணன் பண்ணதுக்கு நீ பதில் சொல்லுன்னு அவளை பாடா படுத்தினாங்க. பிரசவத்துக்கு கூட அவளை எங்க வீட்டுக்கு அனுப்பலை. இரண்டு பிள்ளைகளை சுமக்கும் போதும் அவளுக்கு நிம்மதியில்லை, ஓய்வில்லை“ “நாங்க ஒவ்வொரு முறை பஞ்சாயத்து வைச்சாலும், அராஜகம் தான் பண்ணுவாங்க. சாவித்திரிக்கு அடி விழும். கேட்க போன என் வீட்டுக்காரரையும் அடிச்சுட்டாங்க. அதோட அவர் வீடு வந்து சேர்ந்துட்டார்“ “தேசிகன் காலேஜ் படிச்சிட்டிருந்த நேரம் தான், அந்தாளுக்கு இன்னொரு குடும்பம் இருந்ததே தெரிஞ்சது. வயசு பையன் கூனிக்குறுகி போயிட்டான். நேரா நம்ம வீட்டுக்கு வந்தவன், என் மடியை விட்டு ரொம்ப நேரம் எழுத்துக்கலை. அழுதான் எங்க பேரன். ஜீவனே செத்து போச்சு“ “அந்தாள் இருக்க வீட்டுக்கு நான் வர மாட்டேன், நீங்களும் அங்க இருக்க கூடாதுன்னு சாவித்திரிகிட்ட சண்டை போட, அவளுமே அதுக்கு பின்னாடி அந்தாளு கூட வாழ விரும்பலை. மகன் கையை பிடிச்சுக்கிட்டா. திரும்ப பஞ்சாயத்து. அவங்க சொந்த பந்தமே ஒன்னு சேர்ந்துகிட்டாங்க“ “ஒன்னு என்கூட நீ வாழணும். இல்லை வாழவே கூடாதுன்னு மிரட்ட, தேசிகன் அம்மா, தம்பிக்காக ராத்திரியோட ராத்திரியா ஊரை விட்டே போனான். தேடி பார்த்தவங்க, சின்னவனை தூக்கிட்டு போய், சாவித்திரியை மிரட்டி வர வைக்க பார்த்தாங்க“ “அதுக்கு பின்னாடி தான் தேசிகன் திரும்பி நின்னுட்டான். எங்க அங்காளி, பங்காளிங்களை கூட வைச்சுக்கிட்டு, அவங்க அப்பா குடும்பத்தை எதிர்க்க ஆரம்பிச்சான். இப்போவரை அவங்களோட போராட்டம் தான். ஆனா தோற்க கூடாதுங்கிறதுல பேரன் முடிவா நிக்கிறான்” என்று சொல்லி முடிக்க, தன்விக்கு கணவன் அழுதான் என்பதிலே நெஞ்சம் கனத்து போனது. எந்தளவு துடிச்சிருந்தா கண்ணீர் வந்திருக்கும்? யாரோ பண்ணதுக்கு இவங்க கஷ்டப்படணுமா? சாவித்திரி அத்தை! அவரை போய்? மாமியாரின் இப்போதைய ஆளுமை அத்தனை வலிகளுக்கா பின்னா வாய்த்தது. “தன்வி. ஏய் தன்வி” என்று சுஜா அழைக்க, தன்விக்கு அவளிடம் பேசக்கூட பிடிக்கவில்லை. “தேசிகன் மாமாகிட்ட பேசு தன்வி. அதான் அவர் நினைச்சதை பண்ணிகிட்டார் இல்லை. என் அப்பாவை திரும்ப வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டா என்ன?” என்று கேட்க. “நான் பேச மாட்டேன் சுஜாதா. அவரோட குடும்பத்துல யாரை சேர்த்துக்கணும்ன்னு அவர்தான் முடிவு எடுப்பார்” என்றாள் தேசிகனின் மனைவி. “அதனாலதான் உன்கிட்ட கேட்கிறேன். பாட்டி கூட பேரன் சொல்றதுதான்னு சொல்லிட்டாங்க. காதல் அவ்வளவு பெரிய குத்தமா தன்வி“ “காதலுக்கு பலி கொடுக்கிறது குத்தம் தான் சுஜாதா“ “ச்சு. தன்வி என்ன பேசுற நீ? என் அப்பாதான் அந்த வீட்டுக்கு பெரியவர். அவருக்கு உரிமை இல்லைன்னு சொல்வாங்களா?” “சொல்வாங்க. இருந்தும் இல்லாம இருக்கிறதுக்கு, இல்லாமலே இருந்துக்கோன்னு நினைச்சிருக்கலாம்“ “தன்வி ரொம்ப பேசுற நீ? என்னமோ எங்களால மட்டும் தான் தேசிகன் மாமா கஷ்டப்பட்டது போல பேசுற. உன் அப்பா பண்ணது? தேசிகன் மாமா தொழிலையே முடிச்சிட்டாரே, அதுக்கென்ன சொல்ல போற?” “எங்க பிரச்சனையை நீ பேசாத சுஜாதா“ “ஏன் பேசக்கூடாது? என்னால தானே நீ தேசிகன் மாமாவை கட்டிக்கிட்ட. என் அப்பாவை ஊருக்கு வர வைச்சு, அவருக்கும் அந்த குடும்பத்துக்கும் சம்மந்தம் இல்லைன்னு எழுதி வாங்கினதும் என்னால தான். என்னை பேசக்கூடாது சொல்வியா?” தன்விக்கு புருவங்கள் சுருங்கியது. எதுக்காக இந்த முடிவு? இதுவரை நான் இதுபற்றி யோசிக்கவே இல்லையே? “என்னமோ தேசிகன் மாமா மேல ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி பேசுற. உன் அப்பா கொடுத்த கேஸ்ல தான் அவரோட தொழிலே போச்சு. நீங்க சேர்த்துக்கலாம். என் அப்பா சேரக்கூடாதா?. ஒன்னை மட்டும் மறந்திடாத. நான் அந்த வீட்டு பொண்ணு. நீ எங்க வீட்டுக்கு மருமக கூட இல்லை“ “அப்புறம் எதுக்கு என்கிட்ட கேட்டுட்டு இருக்க சுஜாதா?” என்று கேட்டாள் தன்வி. “போன செகண்ட் வரை நீ எனக்கு தெரிஞ்சவளா இருந்த, இனி நீ யாருன்னே எனக்கு தெரியாது” தன்வி வெறுப்புடன் சொல்ல, “அப்படியே கூட இருக்கட்டும். என் அப்பா விஷயத்துல நீ கேள்வி கேட்கிற ரைட்ஸ் உனக்கு இல்லை” சுஜாவும் பேசினாள். “யாருக்கு ரைட்ஸ் இல்லை? நாளைக்கு என் பிள்ளைங்க கூட உன் அப்பாவை கேள்வி கேட்பாங்க. அவர் பதில் சொல்லித்தான் ஆகணும்“ “அவர், அவர் ஏன் சொல்லணும்? பிரெண்டுன்னு உன்கிட்ட ஹெல்ப் கேட்டா ரொம்ப பண்ற நீ” என்று சுஜாதா வைத்துவிட, தன்விக்கு எக்கச்சக்க கடுப்பு. ஓய்வு எடுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போனது. அன்று மாலை பார்ட்டிக்கு தயாராகி வர, “என்ன தன்வி சிம்பிளா ரெடியாயிருக்க?” என்று சுதா கேட்க, “இதுவே போதும்மா” என்று முடித்துக்கொண்டாள். “சரி மாப்பிள்ளை எங்க? கெஸ்ட் எல்லாம் வர போறாங்க” “ஏன் நீங்க கேட்க மாட்டிங்களா? நானே கேட்கணுமா?” என்று அம்மாவிடம் பாய்ந்தாள் மகள். “தன்வி” என்று கண்டிப்புடன் அதட்டிய சுதா, “என்ன கோவம் உனக்கு?” என்று கேட்டார். “தெரியாது” என்று மகள் சென்றுவிட, சுதாவிற்கு தலைவலி ஆரம்பமானது. “எங்க உன் சின்ன மாப்பிள்ளை? இன்னும் வரலை” என்று மனைவியிடம் சதாசிவம் கேட்க, “அவர் உங்களுக்கும் மருமகன் தான். நீங்க கேளுங்க” என்று போனை நீட்டினார் சுதா. “நானா? ஏன் சுதா, நீ பேசு” என்று மறுத்தார். “பேச முடியாதுன்னா என்னை கேள்வி கேட்க கூடாது” என்று செல்ல, முரளியை தேடி சென்று கேட்டார் சதாசிவம். அவன் பதிளில்லாமல் இவரை பார்க்க, “என்னடா? எங்க உன் அண்ணான்னு தானே கேட்கிறேன்“ “உங்க வீட்டு பார்ட்டிக்கு என்னை கேட்கிறீங்க? என் அண்ணா ஏன் இன்னும் வரலை? உங்க மருமகன் தானே அவர்.” என்று இவரிடம் திரும்ப கேட்டான் முரளி. “உன்கிட்ட போய் கேட்டேன் பாரு” என்று கடுப்புடன் நிற்க, ராஜேந்திரன் தம்பியிடம் கோவமாக நெருங்கினார். “நீ அன்னைக்கு பேசினதுல தான் மாப்பிள்ளை உன் வீட்டுக்கு வரலைன்னு நினைக்கிறேன். தன்வியும் மாப்பிள்ளையை கூப்பிட காணோம்” “ண்ணா. நான்“ “நீ தான். நீ மட்டும் தான் காரணம். இன்னும் என்ன பண்ண நினைக்கிறியோ எல்லாம் பண்ணு” என்று பார்ட்டி முடிந்ததும் அவர் கிளம்பிவிட, மகளும் அமைதியாகவே இருந்ததில் தந்தை திணறினார். “முரளி” என்று தன்வி அழைத்தவள், “எனக்கு நம்ம வீட்டுக்கு போகணும்” என்றாள். “இந்த நேரத்துலவா?” “தேனி இல்லை. சென்னை வீட்டுக்கு” என்று தன்வி சொல்ல, “வாங்கண்ணி” என்று உடனே அவளை அழைத்து கொண்டு கிளம்பினான். தடுக்க வந்த சதாசிவத்தை அவரின் மனைவி நிறுத்திவிட்டார். தன்வியிடம் அந்த வீட்டின் சாவி இருக்க, அதற்கு அவசியமே இல்லாமல் தேசிகன் வாசலிலே மனைவியை எதிர்கொண்டான். தன்விக்கு கணவனை விட்டு கண்கள் அகல மறுத்தது. “வாழ்த்துக்கள் மேடம்” என்று அறைக்குள் சென்று கட்டியணைக்க, தன்வி அவன் நெஞ்சில் சாய்ந்தவள், விலகவே இல்லை. “தன்வி” என்று தேசிகன் அழைக்க, இன்னும் நெருக்கமாக கணவனை கட்டிக்கொண்டாள் மனைவி. தேசிகன் புருவம் சுருங்கினாலும், மனைவிக்காக தன் நெஞ்சத்தை கொடுத்தான்.