Advertisement

                                மைலாஞ்சியே நாணமோ
            அத்தியாயம்-3
“நீ   என்னை நினைக்கவில்லையென்று 
சிணுங்கி  கொள்ளும் மனது
உனது   நிராகரிப்பின் போது
சிதறிப் போவதை அறிவாயா?”
  ரிஷி டெக்ஸ்டைல்ஸின் கிளைகளை இந்தியா முழுவதும் நிறுவ வேண்டும்.  இது தான் ரிஷியின் கனவு,லட்சியம்,ஆசை இன்னும் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். இதுவரை அவனது ஷோரூம் சென்னை,கோயம்புத்தூர்,திருச்சி என தமிழகத்தின் மிக முக்கிய பெரிய நகரங்களில் எல்லாம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிவிட்டு  இப்போது  சங்கம்  வைத்து  தமிழ்  வளர்த்த
மண்ணாம்   மதுரையில்  தன்னையும்  வளர்க்க முடிவெடுத்து விட்ட்து.
மதுரையில்  ஷோரூம்  ஆரம்பிக்க  முடிவெடுத்த பின்  அங்கே  தன்னால்  இயல்பாக  போய்  வர முடியுமா ? என்ற கேள்வி  தான்  அவன்  முன் எழுந்தது . உற்ற நேரத்தில்  கை  கொடுத்தான்  தனா.  தான்  அங்கேயே  தங்கி  எல்லா வேலைகளையும்  கவனித்துக்  கொள்வதாய்  நண்பனுக்கு  நம்பிக்கை  அளித்தான்.
மதுரை  ஷோரூமை  தனது  தங்கை  ரேணுகாவிற்கு  திருமண  பரிசாக  வழங்க  வேண்டும்  என்பது  ரிஷியின்  ஆசை.  லேண்ட்  ரெஜிஸ்ட்ரேஷன்  ரேணுகாவின்  பேரிலேயே  பதிவு பண்ணியதால்  அவனது  தந்தையுடன்  ரேணுகாவையும்  தனாவையும்  மட்டும்  அனுப்பி  வைத்து விட்டான்.  இப்போதோ  ஷோரூமின்  வேலைகள்  முடியும்  தருவாய்க்கு  வந்து விட்ட போதும்  இன்னும் ரிஷி  ஒரு  தடவை  கூட  நேரில்  போய்  பார்க்கவில்லை.  முதலில்  மதுரைக்குச்  செல்ல  தயங்கியவனின்  மனது  இப்போது  துணிந்து விட்டது  வருவதை  எதிர்கொள்ள!  
“ரிஷி விலாஸ்”  என்ற  எழுத்துகள்  தங்க  நிறத்தில்  மின்னிட… சிறிய அரண்மனை  போன்ற  பங்களா  வாயிலின்  நடைபாதையின்  இருபுறமும்  விதவிதமான  வண்ண  மலர்களின்  மத்தியில்  செயற்கை  நீர் வீழ்ச்சியொன்று  காண்போரின்  கண்களுக்கு  மட்டுமல்ல  மனதுக்கும் குளிர்சியை  அளித்தது.
ரிஷி உள்ளே நுழைந்ததும்  ஹாலில்  பொன்னியின் செல்வன்  புத்தகத்தோடு  ஒன்றிப்  போயிருந்த அவனது  தங்கை ரேணுகா ,
“என்ன இன்னைக்கு  அதிசயமா இருக்கு? மன்னர்  ரிஷிவந்த்  நகர்வலத்தை  சீக்கிரம்  முடிச்சுட்டு  வந்துட்டார்.”  என்று கிண்டல்  செய்ய
“இல்லடா  குட்டிமா  நான்  திரும்பவும்  போகனும்”  என்று ரிஷி  கூறவும்  
“ஓ!… அதான்  உங்களது  படை தளபதி ,மந்திரி என அத்தனை  இலாக்காக்களையும்   தன்னகத்தே வைத்துள்ள  திருவாளர்  தனபிரபு  அவர்களும்  உடன்  வந்துள்ளாரோ? அப்போ  இதுவும் 
நகர்வலத்தின்  ஒரு பகுதி  தானா?”  என்று  ரேணுகா  கேட்டாள்.
‘பாவம்  ரொம்ப  முத்தி போச்சுபோல ‘ என்று மனசுக்குள்  நினைத்துக்கொண்டான்  தனா.
“டேய்  குட்டிமா…நான் ஊருக்கு  போக போறேன்.  திரும்பி  வர நான்கு  நாளாகும்.  திங்க்ஸ்  பேக்  பண்ணிட்டு  உன்கிட்ட  சொல்லலாம்னு தான்  வந்தேன் “ என்று  ரிஷி  சொல்லவும்  
அதுவரை  மலர்ந்திருந்த ரேணுகாவின்  முகம்  கூம்பியது.  அவளது  அண்ணன்  அவளை  விட்டு  அடிக்கடி  வெளியூர்களுக்கு  மட்டுமில்லாமல்  மாதக்கணக்கில்  வெளிநாடுகளுக்கும்  செல்லுவதுண்டு.  பிரிவென்பது  அவளைப் பொறுத்தவரை  புதிதல்ல.  ஆனாலும்  ஒவ்வொரு முறையும்  அவன்  செல்லும்போதும்  கலங்கிய விழிகளுடன் தான் வழியனுப்பிவைப்பாள். 
“எந்த  ஊருக்கு  அண்ணா  போக  போற” என்று  தன்  கலங்கிய  விழிகளை  மறைத்தவாறு  கேட்டாள்.
“மதுரைல  நம்ம  புது  ஷோரூம்  வேலை  நடந்துட்டு  இருக்குல.  அது  பினிஷிங்க்  வொர்க் மட்டும் தான் இருக்கு.  நான் சைன்  போடுற  பேப்பர்ஸ்  ரெண்டு  மூணு  பெண்டிங்குல  நிக்குது.  நான் கண்டிப்பா  போக  வேண்டிய  சூழ்நிலை  வந்துடுச்சு.”  என்று  ரிஷி  சொன்னதும்  
“என்னது  மதுரைக்கா போகப்போற?” என்று  அதிர்ச்சியில்  தன் கண்களை  அகல  விரித்தாள் ரேணு.
‘ஆண்டவா!… அவனே  இப்போதான்  மனசு வந்து  மதுரைக்கு கிளம்பியிருக்கான்.  இப்போ  இந்த  லூசு  வேற  இப்படி கேட்டு  வைக்குது. கண்ணை எப்படி விரிச்சு  வைக்குறா  பாரு. கீழே  விழுந்திட  போகுது’  என்றது  தனாவின்  மைண்ட்  வாய்ஸ்.
“யெஸ் … மதுரைக்கு தான் போகபோறேன். தனாவை  சாப்பிட  வை.  நான்  ரெடியாகிட்டு  வரேன்.” என்று  சொல்லிக்கொண்டே  மாடிப்படிகளில்  எறியவன்  சற்றே  நின்று  
“வீட்டுல  வேற  யாரையும்  காணோம்  எங்கே  போயிருக்காங்க? “என்று   கோவமாய்  கேட்டான்  ரிஷி.
“ அப்பாவும்  அம்மாவும்  இப்போ தான் பக்கத்துல உள்ள  கோவிலுக்கு  போனாங்க  அண்ணா.  வர்ற நேரம் தான்  அண்ணா”  என்றாள்  சமாதானமாக.
“நீயும்  கூட  சேர்ந்து  கோவிலுக்கு  போக  வேண்டியது தானே?  ஏன்  தனியா இருக்க?”  என்று  ஆத்திரத்தோடு  கேட்டவனிடம் 
“அம்மா  கூப்பிட தான்  செய்தாங்க.  பொன்னியின்  செல்வன்  படிச்சுட்டு  இருந்தேன். செம இன்ட்ரெஸ்ட்டா  இருந்துச்சு. அதான்  வரலைனு சொல்லிட்டேன்” என்று  கூறி  விட்டு  ரிஷியின்  முகத்தைப்  பார்க்க  அப்போதும்  அவனது  முகம்  கோவத்தில்  இறுகிக் கிடக்க 
“துணைக்கு  ராணியும் ,கனகாம்மாவும்  இருக்காங்களே  அண்ணா. வெளியே  வாட்ச்மேன்  இருக்கார்.  அப்புறம்  என்ன  பயம்?”  என்றாள்  ரேணு.
கனகாம்மா  என்பவர்  இவர்களது  வீட்டில்  வேலை  செய்யும்  பெண்மணி. ராணி  அவரது  மகள். ரேணுகாவை  விட இரண்டு  வயது  சிறியவள். ரேணுகாவும்  ரிஷியும்  ராணியை  தங்கையை  போன்று தான் எண்ணுவார்கள்.
“சரிடா  குட்டிமா  நான் கிளம்பி வர  பிஃப்டீன்  மினிட்ஸ்  ஆகும்.  அதுக்குள்ள  தனாவை சாப்பிட வை.” என்று  சொல்லிக்கொண்டே மாடிப்படிகளில்  மீண்டும்  ஏற ஆரம்பித்தான்.
“எனக்கு  பசிக்கலைடா. எதுவும் வேண்டாம்.” என்று மறுத்த தனாவை நோக்கி 
“ஏன் இப்போயெல்லாம் இங்கே சாப்பிட மாட்ற?  வீட்டுக்கும் வர மாட்ற? என்னாச்சு?”  என்று  கேட்டுக் கொண்டே  படிகளில் இருந்து இறங்க தொடங்கினான்.
‘செத்தாண்டா சேகரு. என்கொயரி ஸ்டார்ட்  ஆகிடுச்சு.’ என்று மனதுக்குள்  சிரித்தவாறு தனாவை நோக்கி  ரேணுகா  பரிதாபமாக  பார்க்க  அவளது  கேலி  பார்வையை  உணர்ந்த தனா கடுப்பாகி…  சட்டென்று  சோபாவிலிருந்து எழுந்து  தனது  இரு கைகளையும்  தலைக்கு  மேலே  கொண்டு சென்று ரிஷியை  நோக்கி இருகைகளாலும்  வணங்கி  
“ஐயா… ரிஷி  மஹாபிரபுவே!  நான்  சாப்பிடப்போறேன். ப்ளீஸ்  உங்க   கொஸ்டீன்  பேகை  தூக்கிட்டு போங்க.  பிளைட்டுக்கு  நேரமாச்சு.” என்றவன்  தூக்கியகையை  இறக்காமலே  டைனிங்  ஹால்  நோக்கி  சென்றான்.
தனாவை  அப்படி  பார்த்ததும்  அங்கே  வேலை  செய்து கொண்டிருந்த  ராணி  “என்ன  அண்ணா  எலெக்சன்ல  நிக்கப் போறீங்களா?”  என்று  கிண்டல்  பண்ணினாள்.
“ஏன்மா  என்மேல  இவ்ளோ  பகை  உனக்கு? உன் ரிஷி  அண்ணன்  ஒருத்தனோட  கேள்விக்கே  என்னால  பதில்  சொல்ல  முடியலை. இதுல நாட்டு  மக்கள்  கேட்குற  கேள்விக்கும் , எதிர்க் கட்சிக்காரன்  கேட்குற  கேள்விக்கும்  என்னால  பதில்  சொல்ல  முடியுமா?  மீ  பாவம்மா  “  என்று  சொல்லிக்கொண்டே  கைக்கழுவியவன் சாப்பிட  வந்து  அமர்ந்தான்.
“பார்ரா… சர்வேஸா…  இந்த  கொடுமையை!  இவரு  எலெக்சன்ல  நின்னு  ஜெயிச்சி அதுவும்  ஆளும்  கட்சியா  முதல்வரா  உட்கார போறாராம்.  இதெல்லாம்  நடந்துட்டா  இந்த வீடு  தான் தாங்குமா ?  இந்த நாடு  தான்  தாங்குமா?”  என்று   ஏற்ற இறக்கங்களோடு  பேசிக்கொண்டே  அங்கு வந்து  சேர்ந்தாள் ரேணுகா.
“வாங்க  தம்பி  உங்களை  பார்த்தே  ரொம்ப  நாளாச்சு.  ஏன் தம்பி  இப்போ  எல்லாம்  வீட்டுக்கு  வர  மாட்டுறீங்க?”  என்று  கேட்டுக்கொண்டே  வந்தார்  கனகாம்மா.
“ஐயோ!  நீங்களுமா! “ என்று  அலறினான்  தனா.
அதை  கண்டு  ரேணுவும், ராணியும்  சிரிக்க  புரியாமல்  பார்த்தார்  கனகாம்மா.
“ஏன்மா நீயும் ரிஷி அண்ணாவை மாதிரியே  கேள்வியா  கேட்குற? பாவம்  தனா  அண்ணா. இப்போ தான்  ரிஷி  அண்ணா  கேட்ட  கேள்வில  இருந்து  தப்பிச்சு  இங்கே ஓடி  வந்தாங்க.  இங்கே  வந்தா  நீயும்  அதே  கேள்வியை  வேற  மாடுலேஷன்ல  கேட்குற.  போம்மா  போய்  அண்ணாவுக்கு   சாப்பிட  சூடா  எதாவது  ரெடி  பண்ணி  கொண்டு  வாம்மா  சீக்கிரம்.  அண்ணாவுக்கு  ப்ளைட்டுக்கு  நேரமாச்சாம்.”  என்று ராணி  சொன்னதும்  
“இதோ  ஐந்து  நிமிஷம்  தம்பி .  சூடா  கொண்டு  வர்றேன்.  ராணி  என்  கூட  வா” என்று  சொல்லிக் கொண்டே  கிட்சன்  நோக்கி  வேகமாய்  சென்றார்  ராணியுடன்.
டைனிங்  ஹாலில்  இப்போது  தனித்து  விடப்பட்டனர்  தனாவும்  ரேணுகாவும்.
“என்னடா… என்னை  பார்த்தா  ரொம்ப  முத்திப்  போனது  போலவா  தெரியுது?”  என்று அவனுக்கு  மட்டுமே  கேட்கும்  குரலில்  கோவமாய்  கேட்டாள்  ரேணுகா.
‘நாம  மனசுக்குள்ள தான  நினைச்சோம்.  இவளுக்கு  எப்படி  தெரிஞ்சுச்சு?  இந்த விஷயத்துல  அண்ணனும்  தங்கச்சியும்  ஒரே மாதிரியா  இருக்குதுங்க.’  என்று  மனசுக்குள்  சர்டிபிகேட்  கொடுத்து  கொண்டிருக்க
“என்னடா  அப்படி  பார்க்குற?  இப்போ  நீ  நினைச்சுட்டு  இருந்ததையும்  என்னால  சொல்ல  முடியும்.”  என்று  ரேணு  சொல்ல  
“என்னனு  சொல்லு  பார்ப்போம்”  என்று  கெத்தாக  தனா  கேட்டான்.
“நீ  மனசுக்குள்ள  என்ன  நினைச்சாலும்  நானும்  என்  அண்ணனும்  கண்டுபிடிச்சிடுவோம்.  இதை  தான  இப்போ நினைச்சிட்டு  இருந்த”  என்று  ரேணு  சொன்னதும்
“எப்படிடி? இப்படி  கண்டுபிடிக்குற?”  என்று  வியப்பில்  வாய்  பிளந்தான்  தனா.
“நான்  உன்கிட்ட  லவ்  சொல்லி  இன்னையோட  ரெண்டு  வருஷமும்  ஐந்து  மாசமும்  பத்து  நாளுமாச்சு.  நீயும் என்னை  அப்போதிருந்து  லவ்  பண்ண  ஆரம்பிச்சுட்ட.  ஆனா  என்கிட்ட  உன்னை  லவ்  பண்ணவே  இல்லைனு  பொய்  சொல்லிட்டு  ஓடி  ஒழியுற”  என்றாள்  ரேணு.
“ஏய்… யாருடி  ஓடி  ஒழியுறது? ஓவரா  பேசிட்டு  இருக்க. உன் அண்ணன்காரன்  தான  மதுரை  ஷோரூம்காக  என்னை  அங்க  போக  சொன்னான்.உனக்கு  பயந்து  ஒண்ணும்  போகல.”
என்றான்  தனா.
இவர்கள்  இவ்வாறு  வழக்கடித்துக்  கொண்டிருக்கையில்
கையில்  உணவுத்  தட்டுடன்  ராணி  வருவதைக்  கண்டதும்  தனாவும் ரேணுவும்  இயல்பாய்  இருப்பது  போல  காட்டிக்கொண்டனர்.
“என்ன  ராணி…  சப்பாத்தியா  ரெண்டு  மட்டும் வை” என்றான் தனா.
“நீங்களும்  ரேணு  அக்காவும்  ரகசியமா  என்ன  அண்ணா  பேசிட்டிருந்தீங்க?” என்று கேட்டுக்கொண்டே  தனாவுக்கு  தட்டில்  சப்பாத்தியை  வைத்தாள்  ராணி.
“ரகசியமா?  எங்களுக்குள்ள  அப்படி  பேச ஒன்னும்  இல்லையே.  சும்மா  எப்பவும் போல  தான்  பேசிட்டு  இருந்தோம்.”  என்று  சமாளித்தான்   தனா.
“நான்  வரும்போது  ரெண்டு  பேரும்  பேசிட்டுதான்  இருந்தீங்க அண்ணா. ஆனா  என்ன பேசுனீங்கனு  எனக்கு  கேட்கவே  இல்லையே.  அப்போ  அது  ரகசியம்  தானே.” என்று  சொல்லிவிட்டு  ரேணுவை  பார்த்து  சிரித்தாள்  ராணி.
இவளுக்கு  என்ன பதில்  சொல்வது  என்று தெரியாமல்  வெகு  தீவிரமாய்  சாப்பிட  ஆரம்பித்தான்  தனா.
அப்போது  ராணியை  கனகாம்மா  அழைத்துவிட  அவள்  கிட்சனுக்குள்  போகவே  இவனும்  கை கழுவிட  வாஷ்ரூம்  நோக்கி  அவசரமாய்  சென்றான். அவன்  பின்னாடியே  சென்ற  ரேணு,
“இப்படி  ஓடி  ஒழியுறதே உனக்கு  வேலையா  போச்சு.  இப்போ இவ கேட்ட  கேள்விக்கு  பயந்து  ஓடி  வர்ற. இன்னும் எத்தனை  நாளைக்கு  தான்  இப்படி  பயந்து  ஓடுவ?” என்று  கேட்டவளை  ஆத்திரத்துடன்  முறைத்தவன்  தன்னை நோக்கி  இழுத்து  வன்மையாய்  சேர்த்து  அணைத்தான்.
அவனது  இந்த  எதிர்பாராத  செய்கையினால்  ரேணுகாவின்  உடல்  பயத்தில்  நடுங்கினாலும்  அவனிடமிருந்து  விடுபட  முயற்சிக்கவும்  இல்லை. விரும்பவும் இல்லை. நடுக்கத்துடனே  அவனது  கை  வளைவில்  வாகாக  சாய்ந்து  கொண்டாள்.

Advertisement