Advertisement

“அம்மா.. இதுக்கும்  அந்த   மாரியாத்தா  தானா?  பாவம்மா  அது.  அதுக்கு  புல்டைம்மும்  வொர்க்  கொடுக்குறீங்க”  என்றான்  தேவா.
“டேய்!… என்ன  இது?  எப்போ  பார்த்தாலும்  அம்மாவை  கிண்டல்  பண்ணிட்டே  இருக்க.  இது  தப்பு”  என்று   அவனை   அதட்டியவாறே,
“அக்கா  …  யாருக்கும்   அடி படலையாம்.  அந்த  எதிரே  வந்த காருக்கு  தான்  ஹெட்லைட்  உடைஞ்சு  போச்சாம்.   சந்தோசும்  இறங்கி   மன்னிப்பு  கேட்டுருக்கான்.  ஆனா  அந்த  ஆள்  அதிகமா  பேசிட்டான்  போல.  பதிலுக்கு  இவனும்  பேச  லேசா  கைகலப்பும்  நடந்துருக்கு”  என்றார்  வைதேகி.
“என்னது … நம்ம  வீட்டு  பையன்  மேலேயே  கை  வைச்சுட்டான்களா?   அந்த  அளவுக்கு  யாருக்கு  தைரியம்  இருக்கு?”  என்று   வெகுண்டெழுந்தான்  உதய்.
“இவன்  ஒருத்தன்.. நான்  சொல்லுறதை  முழுசா  கேட்டுட்டு  கோவப்படு.  அந்த  இடத்துக்கு  போலீஸ்  வேற  வந்துடுச்சு  போல.  ரெண்டு  பேரையும்  ஸ்டேஷன்க்கு  கூட்டிட்டு  போயிட்டாங்களாம்.  அவன்  சிங்கப்பூரில்  தான்  ஒரு  டாக்டர்னு  சொல்லி  அதுக்கான  ப்ரூப்  காட்டியிருக்கான்.  அந்த  போலீஸ்காரங்க  எதையும்   பார்க்கவோ  கேட்கவோ  மாட்றாங்களாம்”  என்றார்  வைதேகி.
“சந்தோஷ்  நம்ம  வீட்டு  பேரை  ஏன்  சொல்லலை?   சோழவந்தான்  அருணாச்சலம் ஐயா  வீடுனு  சொல்லியிருக்கனும்.   அடுத்த  செகண்ட்  சல்யூல்ட்  அடிச்சு   வெளியே  அனுப்பியிருப்பாங்க”  என்றான்  பாலா.
“நம்ம வீட்டு  பேரை  சொன்னதும்  தான்  அவனை  லாக் அப் க்குள்ளவே  தள்ளிட்டாங்களாம்”  என்றார்   வைதேகி  கடுப்புடன்.
“என்னம்மா  சொல்லுறீங்க?”  என்று  மூவரும்  அதிர்ச்சியோடு ஒரே குரலில்  கேட்க,
“தமிழ்ல  தான்டா  சொன்னேன்.  உங்களுக்கு  புரியலையா?  என்  அண்ணி  அங்கே  போலீஸ்  ஸ்டேஷன்ல  அழுதுட்டு  இருக்காங்க”  என்றார்  வைதேகி   அழுது கொண்டே.
“இன்னும்  ரெண்டு  மணி  நேரத்துல  அத்தையும்  சந்தோசும்  நம்ம  வீட்டுல  இருப்பாங்கமா”  என்று   மீசையை  முறுக்கி  விரைந்தனர்  மதுரையை  நோக்கி!
“சாப்பிட்டு  போங்கடா” என்ற  வைதேகியின்  சொல்  காற்றோடு  கரைய..  காரில்  ஏற  போன  தேவாவை  வலுக்கட்டாயமாக  இறக்கிவிட்டு  சென்றனர்.
            இந்த   நிகழ்வுகளையெல்லாம்   ஓர்  பார்வையாளராகவே  இருந்து ….  விமர்சனம்  செய்யும்    மனநிலை   கூட  இல்லாத   பாதசாரியைப்  போன்று   கடந்து  வந்து  விட்டாள்  தனது  அறைக்கு  ஜனனி.
             சிங்கப்பூரிலிருந்து  இவனது  வருகை.. சென்னையிலிருந்து  அவனது   வருகை   என  அனைத்தும்  பன்னிரெண்டு  வருடத்திற்குப்  பிறகு  ஒரே  நாளில்!
           விதியின்   விளையாட்டு  மீண்டும்  ஆரம்பமா?
ஏற்கனவே  விதி  ஆடிய  விளையாட்டுக்கு  பணயமாய்  அவன்  பயணமாகிக்  கொண்டிருக்கின்றான்.
இம்முறை   யாரோ?  என  பலவாறு  சிந்தித்து   மனம்  ஓய்ந்து  அவளறியாமல்  தூங்க  ஆரம்பித்தாள். 
               “உன்   கனவுகளை  சுமந்து..
                 கனத்தே  தேயும்   இமைகளை
                 நீ    வந்து   லேசாக்கு!!”
 
            அன்றும்,  இன்றும்,  என்றும்  மதுரையை  ஆளும்  மீனாட்சியம்மனின்  திருவடியை  வணங்கிவிட்டு …. தனது  ஷோரூம்க்கு  சென்ற  ரிஷிக்கு  வேலைகள்  வரிசை  கட்டி  காத்து  நின்றன.   ரிஷிக்கு  சிட்டுவை  காணும்  ஆவல்  இருந்தாலும் ,  அவனை  நகர  விடாமல்  செய்தன  ஷோரூம்  வேலைகள்.
                     அவன்   மதுரைக்கு  சென்ற  மூன்றாம்  நாள்  மாலை  நான்கு  மணி  அளவில் ,  ரிஷியின்  சித்தி  ஊர்மிளாவிடமிருந்து   போன்   வந்தது.
“ஹலோ… ரிஷி  .. ப்ரீயா  இருக்கியாப்பா?  நான்  பேசலாமா”   என்று   தயக்கத்துடனே  ஆரம்பித்தார்.    ஏனென்றால்  ரிஷி  எப்பொழுதும்   பிசியாக  தான்   இருப்பான்.  சில   நேரங்களில்   திட்டியும்  விடுவான்.
            போனை   ஸ்பீக்கரில்  போட்டு  டேபிள்  மீது  வைத்தவன்…   தன்  கண்களின்  கவனத்தை  தன்னெதிரே  இருந்த  லேப்டாப்க்குள்ளும்,   காதுகளின்  கவனத்தை  போனுக்கும்  கொடுத்தவாறு…
“ சொல்லுங்க  சித்தி…  நீங்க  , சித்தப்பா, ரஞ்சி  எல்லோரும்  எப்படி  இருக்கீங்க?”  என  கேட்டான்  ரிஷி.
ரஞ்சி  என்றழைக்கப்படும்  ரஞ்சனி…. ஊர்மிளா   தனசேகரனின்   ஒரே  செல்ல   மகள்.
“எல்லோரும்  நல்லா  இருக்கோம்பா.  அது  வந்து…. உன்கிட்ட  ஒரு  விஷயம்  பேசணும்.  எப்படி  சொல்லனும்னு  தான்  தெரியலை”  என்றார்  தயக்கமாக.
            இங்கே  ரிஷிக்கு  பொறுமை  பறந்து  கொண்டிருந்தது.  இந்நேரம்  பக்கத்தில்  தனா  இல்லையென்றால்  திட்டிவிட்டு  லைன்  கட்  பண்ணியிருப்பான்.
“உங்களுக்கு  சொல்ல  தெரியலைனா  சித்தப்பாவை  சொல்ல  சொல்லுங்க  சித்தி”  என்றான்  இறுகிய  குரலில்.
அவனது  குரல்  மாற்றம், அவனது  கோவத்தை  அவருக்கு  உணர்த்திவிட்டது  போல.
“நம்ம  ரஞ்சிக்கு  கல்யாணம்  பண்ண  முடிவு  பண்ணியிருக்கோம்… அதான்…..” என்று   இழுத்தார்.
“வாவ்… ஹாப்பி  நியூஸ்  சொல்லியிருக்கீங்க  சித்தி.  இதுக்கு  ஏன்  தயங்குனீங்கனு  தெரியலை” என்றான்  மகிழ்ச்சியோடு.
                ரிஷியின்  அம்மா  பத்மாவும்   ஊர்மிளாவும்  உடன்பிறந்தவர்கள்.   இவருக்கு   ஆண்  வாரிசு  இல்லாத  குறையை   தீர்ப்பவன்  தான்  ரிஷி.  அவர்களது  வீட்டில்  எந்தவொரு   முடிவும்  ரிஷியிடம்  கேட்ட  பின்பே  அது  நடைமுறைப்படுத்தப்படும்.
“சரி  சித்தி … நீங்க  ரஞ்சியோட  பயோடேட்டாவை   எனக்கு  மெயில்  பண்ணிடுங்க.    ஒரு  டென்  டேஸ்ல  நம்ம  வீட்டு  மாப்பிள்ளையை  செலக்ட்  பண்ணிட்டு  உங்களுக்கு  கால்  பண்ணுறேன்.”  என்றான்   ரிஷி.
“இல்லைப்பா… அது வந்து…” என்று  மீண்டும்  இழுத்தார்  ஊர்மிளா.
இப்போது  ரிஷி  நேரடியாய்  தனாவை  முறைத்துக்  கொண்டே,
“நான்  இப்போ   பிஸி.  உங்க  கூட  பேசி  ரொம்ப  நாளாச்சுனு  தான்  கால்  அட்டென்ட்  பண்ணினேன்.  சொல்ல  வந்த  விஷயத்தை   இழுக்காம   சீக்கிரம்  சொல்லுங்க”  என்றான்  எரிச்சலாய்.
“நாங்க  மாப்பிள்ளையை  பார்த்துட்டோம்.  அதான்  உன்கிட்ட  சொல்லிடலாம்னு  போன்  போட்டேன்பா”  என்றார்  பயந்து  கொண்டே.
“ஓஓ!!”  இந்த  ஓ விலிருந்து  அவன்  என்ன  மனநிலையில்  இருக்கின்றான்  என்பதை  தனாவும்,  அந்த  பக்கம்  உள்ள  ஊர்மிளாவும்   நன்கு  அறிவர்.
“ரஞ்சி… ஒரு  வாரத்துக்கு  முன்னாடி  தான்  வந்து  எங்ககிட்ட  சொன்னா.  அவள்  ஒரு  பையனை  லவ்  பண்ணுறதாகவும் , அவன்  கனடா  போக  போறதாகவும் ,  அதுக்குள்ள  கல்யாணம்  பண்ணி  வைங்கனு  சொல்லி   அழுதா”  என்றார்  ஊர்மிளா.
“என்னது ?  அழுதாளா?” என்றான்  ரிஷி   அதிர்ச்சியாய்.
          ரஞ்சனி  இயல்பிலே  மிடுக்காய்   நடந்து  கொள்ளும்  பெண்.  எதற்கும்  அவள்  அழுது  ரிஷி  பார்த்ததே   கிடையாது.  அப்படிப்பட்டவள்   அழுகிறாள்  என்றால்… எங்கோ  இடிக்குதே  என்று  மனசுக்குள்  எண்ணிக்  கொண்டான்.
“ம்ம்…ஆமா  ரிஷி. அவ   அழுகும்  போது  எங்களுக்கே  அதிர்ச்சியா  தான்  இருந்துச்சு.  அந்த  பையனை   பற்றி  விசாரிச்சோம்.  சென்னையில்   தான்  ஐடி ல  வேலை  பார்க்குறான்.  பையனைக்  கூப்பிட்டு  பேசினோம்.  நல்ல  பையனா   தான்   தெரியுறான்.”  என்றார்   ஊர்மிளா.
“ம்… குடும்பத்தை  பற்றி   விசாரிச்சீங்களா?”
“கடைசியில்   பார்த்தா  அவுங்க  நம்ம  ஊர்க்காரங்க  ரிஷி.   சோழவந்தானில்   தான்  அந்த  பையனோட  தாத்தா  பாட்டி,  அப்பா  அம்மா  எல்லோரும்  இருக்காங்களாம்.  இந்த  பையன்  மட்டும்  இப்போ  சென்னையில்  தங்கி  வேலை   பார்க்குறான்  போல.   ஆனா  மிடில்  க்ளாஸ்  பாமிலி  தான்”  என்றார்  ஊர்மிளா.
“இதுல  என்ன இருக்கு  சித்தி… நாம  நம்  பொண்ணுக்கு  எல்லா  வசதியையும்   செய்து  கொடுத்துடலாம்”  என்றான்  ரிஷி.
“அதை   தான்  நாங்களும்  நினைச்சுக்கிட்டோம்.அப்புறம்  நாங்க  சோழவந்தானுக்கு  போன்  போட்டு… நம்ம  தாத்தா,  மாமாகிட்ட  சொல்லி  அந்த  குடும்பத்தை  பற்றி  விசாரிக்க  சொன்னோம்.  அவுங்களும்   அந்த  குடும்பம்   நல்ல  குடும்பம்னு  சொல்லிட்டாங்க”  என்றார்   ஊர்மிளா.
“ம்ம்” 
“இன்னைக்கு  காலையில்  அந்த  பையனோட  அம்மா  எனக்கு  போன்  போட்டாங்க.  உங்க  பொண்ணோட  போட்டோவை  என்  பையன்  காட்டினான்.  எங்களுக்கு  உங்க  பொண்ணை  ரொம்ப  பிடிச்சுருக்கு.  என்  பையன்  கனடா  போறதால  இந்த  மாசத்துக்குள்ளேயே  கல்யாணம்  பண்ணி  வைச்சுடுவோம்.  அதன்  பின்னாடி  ரஞ்சனிக்கு   விசா  எடுத்து  அவளையும்  அனுப்பி விடுவோம்னு   சொன்னாங்க”   என்றார்  ஊர்மிளா.
இங்கே  ரிஷிக்கு  கோவம்  சுறுசுறுவென  ஏறியது.
“என்னது?… அவன்  கல்யாணம்  பண்ணிட்டு  ரஞ்சியை  இங்கே  விட்டுட்டு  போயிடுவானா?  அப்புறம்  எதுக்கு  அவன்  கல்யாணம்   பண்ணுறான்?  அவன்  வேலையெல்லாம்  முடிச்சுட்டு  வர  சொல்லுங்க.  பிறகு  கல்யாணம்  பண்ணி  வைக்கலாம்”   என்றான்  கோவமாய்.
            அவனது   கோவத்தை  தெரிந்த  ஊர்மிளா ,  “இல்லை  ரிஷி.  மாப்பிள்ளையோட  ப்ராஜெக்ட்  ரெண்டு  வருஷமாம்.  அவர்  அங்கே  போனதும்  நம்ம  ரஞ்சியை   கூப்பிட்டுக்குவாராம்”  என்றார்.
            மாப்பிள்ளை  என்று  சொன்னதில்  இருந்தே  அவர்கள்  எல்லோரும்  முடிவெடுத்து விட்டார்கள்  என  அறிந்து  கொண்டான்   ரிஷி.
 “ம்…வேற  என்ன  சொன்னாங்க ”
“இந்த  மாசத்துல  இனி  ஒரேயொரு  முகூர்த்தம்  வர்ற  வெள்ளிக்கிழமை   தான்  இருக்கு.  மாப்பிள்ளையோட  குல தெய்வ  கோவிலில்  வைச்சு  தான்  அவுங்க  வீட்டு  கல்யாணம்  எல்லாம்  நடக்குமாம்.  அதனால  வரும்  புதன்கிழமை   பொண்ணு   பார்த்து  பூ  வைச்சு  முடிவு  பண்ணிடுவோம்.  மறுநாள்  வியாழக்கிழமை  நைட்  நிச்சயம்  பண்ணிட்டு  வெள்ளிக்கிழமை  கல்யாணம்  பண்ணிடுவோம்னு  சொன்னாங்க”   என்றார்  ஊர்மிளா.
“என்ன  நினைச்சுட்டு  இருக்காங்க?  இன்னைக்கு  என்ன  கிழமைனு  உங்களுக்கு  தெரியுமா?  இன்னும்  ரெண்டு  நாள்ல  எல்லாம்  நடக்கனும்னு  யாருக்கு  அவசரம்  இங்க?”  என  கோவமாய்  ரிஷி  கேட்டான்.
“ரஞ்சிக்கு  தான்  அவசரமாம்”  என்றார்  ஊர்மிளா.
“வாட்?…. என்ன  சொல்லுறீங்க”  அதிர்ந்தான்  ரிஷி.
         
                 

Advertisement