Advertisement

                  மைலாஞ்சியே   நாணமோ
      அத்தியாயம் – 5
        “இமைக்கும்   வேளையிலும்
         இடைவேளை  இல்லை.
         இருக்கட்டும்   நாளையென
          இறுக்கமாய்  இமைகளை  மூடினாலும்
          இமைகளை  மீறி  வழிகின்றாய்  கண்ணீரோடு!
          இதயத்தின்  நினைவுகளாய்  மாறிய நீ!!”
                           காரின்  பின்சீட்டில்  கண்மூடி  சாய்ந்திருந்த  ஜனனியின்  கண்களிலிருந்து  கண்ணீர்  மெல்லிய   கோடாய்  இருபக்கமும்  வழிய… எங்கே  அதை  தன்  அண்ணன்கள்  பார்த்து  விடுவார்களோ  என்ற  பயத்தில்  அவசரமாய்  தன்  கண்களை  துடைத்துக்  கொண்டாள்.
              இன்று   ஏனோ  அவளுக்கு வழக்கத்துக்கு  மாறாக  அவனது  நினைவின்  தாக்கம்  அதிகமாய்  இருந்தது.  விவரிக்க  முடியா  மனநிலையுடன்  பயணமாகிக்   கொண்டிருந்தது   அவளது   மனம்.
          அவளது   மனதை   அடக்கும்   பொருட்டு  தன்   கவனத்தை  திசை  திருப்ப    கார்   கண்ணாடியை   இறக்கி  வேடிக்கை   பார்க்கத்  தொடங்கினாள்.
“ஏன்  ஜானும்மா  தூங்கலையா?”  என்று  கேட்டான்  உதய்.
“தூக்கம்  வரலைனா.   அதான்  ஊருக்குள்ள   வந்துட்டோமே.  இனி  வீட்டுல  போய்  தூங்கிகிறேன்”.  என்றாள்  ஜனனி.
         வீடு   பக்கத்தில்  நெருங்க  நெருங்க  ஜனனியின்  மனது  படபடவென  அடித்துக்  கொண்டது.  தனக்கு   ப்ரஷர்  வந்துடுச்சோ  என   அவளுக்கு   சந்தேகமே   வந்துவிட்டது.
            தான்   பிறந்து  வளர்ந்த  தனது  சொந்த  ஊர்  இப்போது  அவளுக்கு   ஏதோ  அசலூரைப்  பார்ப்பது  போல  தோன்றியது.
            ஜனனியின்  தாத்தா  வீடு  தான்  அவ்வூரிலேயே   மிகப்  பெரியது.   ராஜாக்கள்  காலத்து  அரண்மனையை  நினைவுபடுத்தும்   வகையில்   கட்டப்பட்ட  இந்த  காலத்து   சிறிய  அரண்மனை!.
            மிக  பெரிய  அழகான  கேட்  இரண்டு  யானைகளின்  தும்பிக்கையினால்  இணைக்கப்பட்ட  வடிவில்    கம்பீரமாய்   வரவேற்க…  உள்ளே   மாவிலைத்  தோரணம் ,   அலங்கார   தோரணங்களுடன்  பந்தல்  போடப்பட்டுக்  கொண்டிருந்தது.
“என்ன  அண்ணா  விசேஷம்  நம்ம வீட்டில்?  திருவிழா  கூட  இந்த  மாசம்  இல்லையே”  என்று  கேட்டுக்  கொண்டே  காரிலிருந்து   இறங்கினாள்  ஜனனி.
“ஊர்மிளா  அத்தை  பொண்ணு  ரஞ்சிக்கு  கல்யாணமாம்.  மாப்பிள்ளை  நம்ம ஊராம்.  சோ … இங்கே   வைச்சு  தான்  எல்லாம்  நடக்க  போகுதாம்”  என்றான்   பாலா  கடுப்புடன்.
“வாவ்!… ரஞ்சிக்கு  கல்யாணமா?  அதுவும்  இங்கேயா?  சூப்பர்.  அதை  ஏன்  எரிச்சலா சொல்லுற அண்ணா?  இது  எவ்ளோ  சந்தோஷமான  விஷயம்.  எல்லா  சொந்தக்காரங்களும்  நம்ம  வீட்டுக்கு  வருவாங்க .  ரொம்ப……”  என்று    மேற்கொண்டு  பேச  போனவளை,
“அதான்  எங்களுக்கு  எரிச்சலாருக்கு”  என்று  உதய்யும்,  பாலாவும்  ஒருமித்த  குரலில்  சொன்னவாறு… ஜனனியின்  பெட்டியை  எடுத்துக்  கொண்டு  உள்ளே  சென்று விட்டனர்.
         ஜனனிக்கு   இப்போது  தெளிவாக  விளங்க  தொடங்கி விட்டது.  தன்   மனம்  ஏன்  அப்படி  துடித்தது  என்று!  கார்க் கதவில்  சாய்ந்தவாறு  நின்று  யோசிக்க தொடங்கி விட்டாள்.
“ஐயோ!..   என்  குலவிளக்கு  தலையில்  யாரு  இப்படி கட்டு  போட்டது?.  ஏஏ.. ஜனகை   மாரியாத்தா!… உனக்கு   கண்ணு  இல்லையா?  என்  குலகொழுந்தை  குருதி  கொப்புளிக்க  வைச்சுட்டியே?”   என்று   நெஞ்சில்  அடித்துக்  கதறிய  படி  வந்த  சுமித்திரை  ஜனனியின்  யோசனைக்கு  தற்காலிக  முற்றுப்புள்ளி  வைத்தார்.
அவர்  அழுத  அழுகைக்கு  அவர்களது  பண்ணையில்  வேலை  செய்து  கொண்டிருப்போர்,  அக்கம்  பக்கத்தில்  உள்ளோர்  என  ஒரு  சிறிய  மாநாடு  நடத்தும்  அளவு   கூட்டம்  கூடியது.  இது  அனைத்தும்  வீட்டின்  வெளியே  தான்  நடந்து  கொண்டிருக்க…
              இந்த  சத்தம்  கேட்டு  வீட்டிற்குள்  இருந்து  ஓடி  வந்தனர்  வைதேகியும்,  ஜனனியின்  சகோதர்கள்  மூவரும்.
“அக்கா!  என்ன  இது?  வீட்டுக்குள்ள  போய்  பேசிக்கலாம்  வாங்க”  என்று  ஜனனியை  முறைத்தபடி  சுமித்திரையை  உள்ளே  அழைத்துக்  கொண்டு  சென்றார்  வைதேகி.
சுமித்திரை…  சற்றே  கனத்த  உருவம்  தான்.  அதுவும்  அவருக்கு  ஒருவித  செல்வாக்கான  தோற்றத்தையே  கொடுத்தது. கள்ளங்  கபடமற்றவர்.
வைதேகி…  ஜனனிக்கு  அக்காவை  போல  இன்றும்  இளமையாய்,  சுறுசுறுப்புடன்  வலம்  வரும்  இயல்பான  அம்மா.
வீட்டிற்குள்  வந்த  சுமித்திரை,  மீண்டும்  “அய்யோ!  என்  குலவிளக்கு  தலையில்……………”என்று  தொடங்க
“ அக்கா…  உங்க  குல விளக்குக்கு  கண்ணு   தெரியாம  ஓடி  கீழே  விழுந்ததுனால  தான்  குருதி  கொப்புளிச்சு  கட்டு  போட்டுருக்கு.  அதுக்கு  அந்த  அம்மன்  என்ன  செய்யும்?”    என்றார்   வைதேகி.
“ஏன்மா.. இன்னைக்கு  முழுசும்  இந்த  ஒரு  ஸ்கிரிப்ட்  தான்  மனப்பாடம்  பண்ணுனீங்களா?”  என்றான்   தேவா  சிரித்துக்  கொண்டே.
“உங்களுக்கு  எல்லாம்  கிண்டலா இருக்கா?  என்  புள்ளை  அடிபட்டு  வந்து  நிக்குது.  அய்யோ!.. என்  குலவிளக்கு   தலையில………”  என்று  மீண்டும்  அழ  தொடங்கியவரிடம்,
“அய்யோ!… அம்மா… நீங்க  இப்படி  அழுகுறதுக்கு  பதிலா  எங்க  தலையில   நீங்க  கல்லையே  தூக்கிப்  போட்டுடலாம்”  என்று  சொல்லி  சென்றான்   உதய்.
“ஏஏ…ஜனகை  மாரியாத்தா  உனக்கு  கண்ணு  இல்லையா?   காது  இல்லையா?  மூக்கு  இல்லையா?  வாய்  இல்லையா?  நாங்க  இப்படி   கொடுமைப்படுத்தப்படுறோமே.. அதை  பார்த்துட்டு   சும்மா   இருக்கீயே?”  என்று   ராகம்  போட்டு  பாட்டாய்   பாடிவிட்டு   சுமித்திரை   அடிக்க   வருவதற்குள்   ஓடி விட்டான்  தேவா.
“வைதேகிமா  பசிக்குது.   சாப்பிட  எடுத்து  வைங்க.  இப்போதைக்கு   இவுங்க   ரெண்டு  பேரும்   வர  மாட்டாங்க.  வாங்க  நாம   போவோம்”  என்றான்  பாலா.
“என்னடா  இப்படி  சொல்லிட்ட?  என்  புள்ளைக்கும்  பசிக்கும்  தான?  நீ  வா  ஜானும்மா.   அம்மா  ஊட்டி விடுறேன்.  ரொம்ப  வலிக்குதாடா?”  என்று   கேட்டுக்  கொண்டே  ஜனனியுடன்  சென்றார்   சுமித்திரை  டைனிங் டேபிளுக்கு.
“அப்பாவும் , தாத்தாவும்  எங்கே?  பாட்டியை  கூட  காணோம்?”  என்று  சுமித்திரையிடம்  கேட்டாள்  ஜனனி.
“இன்னைக்கு   அறுப்புக்கு   ஆள்  வந்துருக்குமா.  அதான்  தாத்தாவும்  அப்பாவும்  அங்கேயே   இருக்காங்க.  பொழுது  சாய  வந்துடுவாங்க.  அந்த   பெரிய  வீட்டை  சுத்தம்   செய்ய  ஆள்  விட்டுருக்காங்க.  உங்க  பாட்டி  அங்கே  இருக்காங்க.  இப்போ  வந்துடுவாங்க.  நீ  சாப்பிடுமா”   என்று   சொல்லிக் கொண்டே  ஜனனிக்கு   பரிமாறிக்  கொண்டிருந்தார்  சுமித்திரை.
“என்ன   ஒரு   வில்லத்தனம்?  பந்தி  போட்டாச்சுனு  ஒரு  குரல்  கொடுத்தியா  தடியா?  தானா  தின்னுட்டு  இருக்க”  என்று   சொல்லிக்  கொண்டே   வந்து  அமர்ந்தார்கள்   உதய்யும்,  தேவாவும்.
“எனக்கும்  யாரும்  பந்தி  போடலை.  நானா  வந்து  பந்தில  உட்கார்ந்துகிட்டேன்.  நீங்களும்  அதே  மாதிரி  வந்து   ஜாயின்  பண்ணிக்கோங்க”  என்று  சொல்லிவிட்டு  சாப்பாட்டில்  கவனமானான்  பாலா.
“ஆஹா… என்ன  ஒரு  பெருந்தன்மை  என்  உடன் பிறப்புக்கு”   என்றான்  தேவா  கிண்டலாய்.
சாப்பிடுவதை   நிறுத்திவிட்டு  பாலா  அவர்களை  கேள்வியாய்  நோக்க,
“அது  வந்து  பிரதர்… ஏதாவது  மீதியிருந்தா தான உன்  கூட ஜாயின்  பண்ணிக்க  முடியும்.  நீ  சாப்பிடுற  வேகத்துக்கு  இலை   தான்  மீதியிருக்கும்  போல”  என்றான்  உதய்.
“சரி… அதுக்கும்  என்  பெருந்தன்மைக்கும்  என்னடா  சம்பந்தம்?   லூசு  மாதிரி   உளறிட்டு  இருக்கீங்க.   வைதேகிமா  அவனுகளுக்கு   சீக்கிரம்   சாப்பாடு  போடுங்க.  பசியில்  கிறுக்கனாய்  மாறிட்டு  இருக்காங்க”  என்றான்  பாலா.
“கூப்பிடாத  பந்திக்கே  இப்படி  கூப்பாடு  போட்டு  சாப்பிடுற. இதுல  உன்னை  கூப்பிட்டு  பந்தி  போட்டா  அவ்ளோ  தான்.  உனது  பெருந்தன்மை  அங்கே  தெரியுதுனு  தேவா  சொல்லுறான்.”  என்றான்   உதய்  சிரித்துக்கொண்டே…
“அடங்கவே  மாட்டீங்களாடா  ரெண்டு  பேரும்”  என்று  சொல்லிக்  கொண்டே  சாப்பாட்டில்  இருந்து  எழுந்து,  அவர்களை  அடிப்பதற்காக  துரத்த  ஆரம்பித்தான்.
“டேய்!  சாப்பிடுங்கடா…  என்ன  இது  சின்ன  புள்ளை  மாதிரி  விளையாட்டு”  என்று  அவர்களின்  பின்னால்  வைதேகியும்  சென்றுவிட…
ஜனனிக்கு  பொரியல்  எடுப்பதற்காக  சுமித்திரையும்  கிட்சனுக்குள்  போக…
நடந்த  காட்சிகளும்,  கேட்கும்  கேளிக்கைகளும்  ஜனனியின்  கண்களையோ,  செவிகளையோ  எட்டியதாக  தெரியவில்லை.  நினைவுகள்  வேறொரு  உலகத்தில்  சஞ்சரிக்க,  கைகள்  சாதத்தில்  கோலம்  போட்டு  கொண்டிருக்க,
“ஜானும்மா  ஏன்  இன்னும்  சாப்பிட  ஆரம்பிக்கலை?”  என்று  கேட்ட  படி  கையில்  பொரியல்  பாத்திரத்துடன்  வந்தார்  சுமித்திரை.
“எனக்கு  பசிக்கவே  இல்லைமா.  தூக்கம்  தான்  வருது.  நான்  கொஞ்ச  நேரம்  ரெஸ்ட்  எடுத்துட்டு  அப்புறம்  சாப்பிடுறேன்மா  ப்ளீஸ்”  என  கெஞ்சி  கொண்டிருக்கையிலேயே  வந்து   சேர்ந்தனர்  வைதேகியும்  அவளது  சகோதர்களும்.
“இன்னும்  சின்ன  புள்ளை  மாதிரி,  ரத்தம்  வர்ற  அளவுக்கு  ஓடி  பிடிச்சு  விளையாடிட்டு  இருக்க!  என்ன   தான்  நினைச்சுட்டு  இருக்க?  இவ்ளோ  பெரிய  பொண்ணுக்கு  பார்த்து  சூதானமா  நடக்க  தெரியாது?  இப்போ  என்னன்னா  சாப்பாடு  வேண்டாம்னு  சொல்லிட்டு  இருக்க?  வெறும்  வயித்துல  மருந்து  மாத்திரை  சாப்பிடுவியா?”  என்று  வெகு  நேரமாய்  அடக்கப்பட்ட  கோவத்தை  சிறிதே  இறக்கினார்  வைதேகி.
அவரது  கோவத்தை  அடக்குவதற்காகவே  அலறியது  அவ்வீட்டிலுள்ள  அக்காலத்து   தொலைபேசி…
எடுத்து  பேசிவிட்டு  வந்தவரின்  சோர்ந்த  முகம் ,  ஏதோ  பிரச்சனை  என்று  அங்கிருந்தவர்களுக்கு  சொல்லாமல்  சொல்லியது.
“என்னம்மா… போன்  பேசிட்டு  வந்து  உங்க  முகம்  பேய்  அறைஞ்ச  மாதிரி  இருக்கு?”  என்றான்  உதய்.
“அதெல்லாம்  ஒன்னுமில்ல. நீங்க  முதல்ல  சாப்பிடுங்க”
“இப்போ  நீங்க  சொன்னா தான்  சாப்பிடவே   செய்வோம்” என்று  உதய்  சொல்லிவிட்டு   கண்ணை  காட்டவும்  மீதி இருவரும்  சாப்பாட்டில் இருந்து   எழுந்திருக்கவே  செய்துவிட்டனர்.
பதறி  போன  வைதேகி ,  “நான்  சொல்லுறேன்.  நீங்க  சாப்பிட்டு  தான்  போகணும்”  என  உறுதிமொழி  வாங்கி கொண்டார்  சிறுபிள்ளைத்தனமாக… அது  காற்றோடு  கரையப்  போவதை  அறியாமல்!
“என்  அண்ணியும்  அவுங்க  பையன்  சந்தோசும்  சிங்கப்பூர்ல  இருந்து  இத்தனை  வருஷம்  கழிச்சு  நம்மை  பார்க்க  வந்துருக்காங்க.   மதுரையில் இருந்து  இங்கே  வரும் வழியில  எதிரே  வந்த  காரோட  இடிச்சுட்டாங்க  போல”  என்றார்  வைதேகி.
“மாரியாத்தா… ஆத்தா… ஜனகை தேவியே!”  என்று  பதற   ஆரம்பித்தார்  சுமித்திரை.

Advertisement