Advertisement

       மைலாஞ்சியே   நாணமோ
அத்தியாயம் – 4
         தனது  அண்ணன்களுடன்  காரில்   ஏறிய  ஜனனியின்  மனது   அலையினில்   ஆடிடும்   படகாய்   நிலையின்றி  தவித்துக்  கொண்டிருந்தது.   
‘அவன்  எப்போது  இங்கே  வந்திருப்பான்?  இவ்வளவு  நாள்  வராதவன்  இப்போது   ஏன்  வந்தான்?  அதுவும்   எவ்ளோ  தைரியமிருந்தால்   காலேஜ்   காம்பஸ்குள்ளே  வந்திருப்பான்?  அவனைப்   பற்றி   தன்   அண்ணன்களிடம்   சொல்லிவிடலாமா?’  என்று   அவள்  நினைத்துக்  கொண்டிருக்கையில்   அவளது   பெரிய  அண்ணன்  கையிலுள்ள  போன்   அலறியது.
 “ஹலோ  சொல்லுங்கப்பா”  என்று   ஆரம்பித்தான்  பெரிய  அண்ணன்  அருண்  உதய்.
“…………………………………………………………………………………………………..”
“நீங்க   சொன்னது   மாதிரியே   எல்லாம்   செய்துட்டேன்பா.   ஒரு   பெரிய   குறை  என்னன்னா   சிவாவை   இப்போ   எங்களால  ஒண்ணும்   செய்ய  முடியலை.  ஆனா  அவன்   சீக்கிரமே   எங்க  கையில  சிக்குவான்.”
“…………………………………………………………………………………………..”
“ம்ம்….. சரிப்பா.    நாங்க  கிளம்பிட்டோம்.  என்னது   அம்மா  பேசனுமா?   அம்மாகிட்ட   எதுக்கு  சொன்னீங்க?”
தன்  பக்கத்தில்  அமர்ந்து  காரை  ஓட்டிக்  கொண்டிருந்த  தன்  தம்பியான  அருண் பாலாவை  முறைத்துக்  கொண்டே  தன்  செல்போனை  ஜனனியிடம்  கொடுத்து
“ஜானும்மா  அம்மா  உன்கிட்ட  பேசனுமாம்”  என்றான்.
“ஹலோ….என்  செல்ல  அம்மா குட்டி  என்ன செய்யுறாங்க?  என்று   மிகவும்   உற்சாகமாக   பேச   ஆரம்பித்தாள்  ஜனனி.
“………………………………………………………………..”
“அம்மா  ப்ளீஸ்   அழுகாதீங்க.  எனக்கு  ஒண்ணுமில்ல.  இன்னும்   கொஞ்ச   நேரத்துல   உங்க   முன்னாடியிருப்பேன்”  என்று   அவள்   சொல்லிக் கொண்டிருக்கும்போதே…  போன்  அதன்   தொடர்பை   துண்டித்துக்கொண்டது.
“என்ன  அண்ணா  லைன்  கட்டாகிடுச்சு”  
“லைன்   அதுவா   கட்டாகியிருக்காது.   அப்பா  தான்  அம்மாவோட  அழுகையை   தாங்க  முடியாமல்   போனை  பிடுங்கி  கட் பண்ணியிருப்பார்”  என்றான்  உதய்.
“அம்மா கிட்ட   எதுக்கு   அப்பா  சொன்னார்?   அம்மா  அழுவாங்கனு  தெரியாதா?”   என்று  கேட்ட  ஜனனியை 
“அந்த   கேள்வியை   இந்த  தடியன் கிட்ட  கேளு  ஜானும்மா.  எல்லாத்தையும்   சொல்லிட்டு   இப்போ  யாருக்கோ   வந்த  விருந்தோனு  வர்றான்.  ஏன்டா  எருமை  மாடே…  அம்மாகிட்ட  எதுக்கு சொன்ன?”   என்று  ஜனனியிடம்  ஆரம்பித்து  பாலாவிடம்   முடித்தான்.
“நான்  அம்மா கிட்ட  சொல்லனும்னு   நினைச்சு  சொல்லலை.”   என்றவனை
“டேய்!…வேண்டாம்.  நானே  கடுப்புல  இருக்கேன்.  நாம  ஊருக்கு  போக  இன்னும்   நாற்பது  நிமிஷமாகும்.  அதுக்குள்ள  நம்ம  அம்மா  அழுகுற  அழுகைக்கு  ஊரு  சனம்  மொத்தமும்  நம்ம  வீட்டுக்குள்ள  தான்டா  இருக்க  போகுது.  நீ  என்னடான்னா  சொலவடை  போட்டுட்டு  இருக்க?”   என்று   கோவமாய்  கேட்டான்  உதய்.
“ஜானும்மாக்கு   ஸ்டிச்சிங்  போட்டுட்டு  இருந்தப்போ… நாம  வெளியே  வெயிட்  பண்ணிட்டு  இருந்தோம்ல.  அப்போ   அம்மா  எனக்கு  போன்   போட்டாங்க.  ஜானுவை  பார்த்தாச்சானு   கேட்டாங்க.  என்னால  அந்த  சமயத்துல  அழுகையை  கன்ட்ரோல்  பண்ண  முடியலை.  அதான்  அழுதுட்டே   சொல்லிட்டேன்”  என்றான்  சிறு  குழந்தையாய்!
              நாம்  வயதிலும்,  சமுதாயத்திலும்  எவ்ளோ பெரிய  ஆளாக  வளர்ந்தாலும்   மன  ஆறுதலைத்  தேடி  தஞ்சமடைவது   தாயின்  மடி தான்.  
                   ஜனனியின்  சொந்த ஊர்  மதுரை  மாவட்டத்திலுள்ள   சோழவந்தான் எனும்  அழகிய  கிராமம்.  
                 பாண்டிய  நாட்டில் இருந்த  இவ்வூரை  சோழ மன்னன்  ஒரு  முறை  பார்த்துவிட்டு  தனது  ஆளுகைக்கு  உட்பட்ட  தஞ்சை  நகரைப்  போன்றே  செழிப்பான  வயல் வெளிகளுடன்  திகழ்வதால்  சோழன் உழவந்தான்  என பெயரிட்டு… அதுவே   நாளடைவில்   மருவி  சோழவந்தான்  எனவும்  அழைக்கப்படுகின்றது.
                    வைகை  தாயின்  மடியில்  வெற்றிலை,  நெல், வாழை,  தென்னை,  கரும்பு  என  அனைத்தும்  வஞ்சகமில்லாமல்  வளர்ந்து   எங்கெங்கும்  பசுமையை  தனதாக்கியுள்ளது.
              ஜனனியின்  தாத்தா  அருணாச்சலம் ….  அவ்வூரிலேயே   மிக  முக்கிய  செல்வாக்கு  வாய்ந்தவர்.  வசதியாலும், பண்பாலும்  உயர்ந்தவர்.   இவரது  பேச்சுக்கு  எதிர்  பேச்சு  பேசுபவர்   அவ்வூரில்  எவருமிலர்.   இவர்  ஆதரவு   கொடுக்கும்   கட்சியே   அங்கு   வெற்றி  பெறும்.  
                 அவரது   துணைவியார்  அங்கையர்கரசி…    தெய்வீகமான, அமைதியே  உருவான    குடும்ப  தலைவி.   மருமகள்களை  மகள்களாய்  பாவிக்கும்  அன்பான  அன்னை.  பசியென்று  வருவோருக்கு  இல்லை  என்ற  சொல்  இல்லை  இவர்களிடம்!.
            இவர்களுக்கு   அருள் பிரகாஷம், அருள் குமரன்  என்ற  இரு  மகன்களும்,  பத்மாவதி, ஊர்மிளா  என்ற இரு  மகள்களும்  உள்ளனர்.  மகன்கள்  இருவரும்  ஒற்றுமையாய்  கூட்டுக்  குடும்பமாக  வாழ்வதை  பார்க்கும் போதெல்லாம்  பெரியவருக்கு  பெருமையாய்   இருக்கும்.
           அவரது   பெண்கள்   இருவரும்  தத்தம்   கணவரோடு  சென்னையில்  செட்டிலாகி  விட  கோவில்  திருவிழா, கல்யாணம், விசேஷம்  போன்று  வருடத்திற்கு  ஒரு  முறையோ இரு  முறையோ  என எப்போதாவது  வந்து  செல்வர்.
            அருள்பிரகாஷம்   சுமித்திரை  தம்பதியினருக்கு  மூன்று வாரிசுகள்…  அருண் உதய்,அருண் பாலா, அருண் தேவா.
            அருள்குமரன்  வைதேகி  தம்பதியினருக்கு  ஒரே  பெண்.
அக்குடும்பத்தின்  இளவரசி ஜனனி தேவி.
             இங்கே  யாரும்  பெரியம்மா  என்றும், சித்தி  என்றும்  அழைப்பதில்லை. சுமித்திரையை  ஜனனி   ‘பெரியம்மா’  என்று  அழைக்காமல்  அம்மா  என்று  தான்  அழைப்பாள்.  அதே  போல்  தான்  உதய், பாலா, தேவா மூவரும்  வைதேகியை  ‘சித்தி’  என்று  அழைக்காமல்  அம்மா என்று  தான்  அழைப்பார்கள்.  
              வீட்டிற்கு  ஒரே  பெண்  வாரிசு  என்பதால்  ஜனனி  மேல்  அனைவருக்கும்  அளவில்லா  பாசம்.  இப்போது  போனில்  அழுதது  சுமித்திரை  தான்.  அவருக்கு  ஜனனி  என்றால்  கொள்ளை  பிரியம்.
               மீண்டும்  அலறிய  போனை  எடுத்தான்  உதய்.  அழைப்பது  வைதேகி  அம்மா  என  தெரிந்ததும்  மீண்டும்  பாலாவை  முறைக்கத்  தொடங்கினான்.
“ஏன்  அண்ணா  கால்  அட்டென்ட்  பண்ணாம  பாலா  அண்ணாவை  முறைச்சுட்டு  இருக்கீங்க?”  என்றாள்  ஜனனி.
“இந்த  எருமை  செய்து  வைச்ச  வினைக்கு  ஊருக்கு  போறதுக்குள்ள  இன்னும்  எவ்ளோ  போன்  கால்  வரப் போகுதோ?  இப்போ  போன்  போடுறது  வைதேகி  அம்மா.”  என்றான் உதய்.
“அய்யோ…  வைதேகி  அம்மா  கிட்ட  என்னால  பேச  முடியாது  அண்ணா.  என்னை  திட்டுவாங்க.  ப்ளீஸ்  கால்  அட்டென்ட்  பண்ண  வேண்டாம்.  நான்  வீட்டுல  போய்  அவுங்க  கூட  பேசிக்கிறேன்.  அங்க  எல்லோரும்  இருப்பாங்க. அம்மாவால  என்னை  திட்ட  முடியாது.”  என்றாள்  ஜனனி.
“சரி  ஜானும்மா  நீ  கொஞ்ச  நேரம்  தூங்கு.  உனக்கு  ஸ்டிச்சிங்  போட்டது  இன்னும்  வலிக்குதா?”  என்றான்  கவலையாய்.
“அதெல்லாம்  இப்போ  வலி  தெரியாது  அண்ணா…  நைட்  தான்  வலி  தெரிய  ஆரம்பிக்கும்.  பெயின்  கில்லர்  போட்டா  சரி  ஆகிடும்.”
             அருண்  உதய்க்கு  பன்னிரெண்டாம்  வகுப்புக்கு  மேல்  படிப்பில்  நாட்டம்  இல்லை. தன்  அப்பாவோடு  சேர்ந்து  விவசாயத்தையும்,  அரிசி  மில்லையும்  கவனிக்க  ஆரம்பித்து  விட்டான்.
             அருண்  பாலா ,  B.Sc  அக்ரி  முடிச்சிட்டு  இப்போ  தான்  அப்பாவுக்கும்,  அண்ணாவுக்கும்  உதவியாய்  விவசாயத்தை  கவனிக்க  வந்துவிட்டான்.
             அருண்  தேவா,  இப்போது  தான்  பன்னிரெண்டாம்  வகுப்பு  படித்துக்  கொண்டிருக்கின்றான்.
             சோழவந்தானை  நோக்கி  கார்  வேகமெடுக்க…  அதை  விட  வேகமாய்  மூடிய  இமைகளுக்குள்  ஜனனியின்  நினைவுகள்  கடந்த காலத்துக்குள்  பயணமாகின.
          “சலிக்காத  உன்  நினைவுப்   பக்கங்களை
            புரட்டுவதிலேயே   கழிந்து  கொண்டிருக்கின்றது
            என்  காலங்கள்!”
              மதுரை  மண்ணில்  வந்து  இறங்கி  விட்டனர்  ரிஷியும்  தனாவும்…
“ஷோரும்க்கு  போக  சொல்லு”  என்று  சொல்லிக்  கொண்டே  ஏர்போர்ட்டிலிருந்து  தங்களை  அழைத்து  போக  வந்திருக்கும்  காருக்குள்  ஏறி  அமர்ந்தான்  ரிஷி.
“டேய்!  என்ன  விளையாடுறியா?  டைம்  என்ன  ஆச்சுனு  பாரு.  சாப்பிட்டு  நல்லா  ரெஸ்ட்  எடுத்துட்டு  மார்னிங்  போவோம்.”  என்றான்  தனா.
“ஏன்…  உனக்கு  ரெஸ்ட்  வேணுமா?  நீ  போ.  நான்  என்ன  சின்ன  குழந்தையா  தொலைஞ்சி   போயிட”
             தனாவுக்கு   இப்போ  ரெஸ்ட்   தேவை  இல்லை.  தனிமை  தான்  தேவை.
              ரேணுவிடம்  காதலை  சொல்லிவிட்டு   வந்த  பின்…  அவளிடமிருந்து  ஏகப்பட்ட  sms  வந்து  கொண்டே  இருக்க,  ரிப்ளை  பண்ண  தான்  அவனுக்கு  தனிமை  தேவை.  இதை  ரிஷியிடம்  சொல்லிட  முடியுமா  அவனால்?
“நான்  அதுக்கு  சொல்லலைடா.  நான்   உன்கூட  வந்தால்  உனக்கு   ஹெல்ப்பா  இருப்பேன்.  ஆனா  எனக்கு  காலையில்  இருந்து   ஒரே   அலைச்சல்.  அதான்   சொன்னேன் “  என்றான்.
              ரிஷி  தனாவின்  கண்களை  கூர்மையாய்  நோக்கினான்.  அவனது  ஆராய்ச்சி  பார்வையை  தாங்காது  தலையை  குனிந்து  கொண்டான்  தனா.
“போச்சு.  இவன்  ஆராய  ஆரம்பிச்சிட்டான்.   தப்பிச்சிடு  தனா”  என தனாவின்  மனது  எச்சரிக்கை  செய்ய
              தனாவையே   சில  நொடிகள்  வெறித்து  பார்த்த  ரிஷிக்கு   என்ன  புரிந்ததோ?  “ம்ம்…  சரிடா. ஹோட்டல்க்கே  போவோம்”  என்று  சொல்லிவிட்டு,  மதுரை  மக்களை  ரசிக்க  ஆரம்பித்துவிட்டான்.
                தனா  மதுரையில்  வாடகைக்கு   ஒரு  சிறிய  வீடு  எடுத்து  தங்கி  இருந்தான்.  காலையில்  வீட்டு  வேலைக்கு  ஒரு  நடுத்தர  வயது  பெண்மணி  ஒருவர்  வருவார். வீட்டை  சுத்தம்  செய்து,  துணிகளை  துவைத்து,  சமையலும்  செய்து  விட்டு  போய்  விடுவார்.  இரவு  மட்டும்  தனா  ஹோட்டலில்  சாப்பிட்டு  கொள்வான்.
                மதுரையில்  மிகப்  பெரிய  பிரபலமான   ஹோட்டல்  ஒன்றில்   ரிஷிக்கு  ரூம்  புக்  பண்ணியிருந்தான்  தனா.
                அந்த   அறை  மிகவும்   பெரியதாய்,  அழகாய்  வடிவமைக்கப்பட்டிருந்தது. அறைக்குள்  நுழைந்தவுடன்  ஒரு  அழகிய  வரவேற்பறை   அதையடுத்து  பெரிய  பெட்ரூம்,  அதன்  பக்கவாட்டில்  ஒரு  பால்கனி  பிரம்மாண்டமான  சோபாக்கள்,  விலையுயர்ந்த  அலங்கார  பொருட்கள்  என  அந்த  அறை  மிகவும்  ரசித்து  உருவாக்கப்பட்டிருந்தது.
            அறையை   சுற்றிலும்  பார்வையை  சுழற்றிய  ரிஷி,  திருப்தியுடன்  தலையசைத்தான்.
“உனக்கும்  இங்கேயே  ரூம்  புக்  பண்ணியிருக்க  வேண்டியது  தான?  நீ  மட்டும்  ஏன்  தனியா  அங்கே  இருக்கனும்?”  என்றான்  ரிஷி.
“அது  சரிப்பட்டு  வராது.  நான்  மதுரைல  மாசக்கணக்கில்  தங்கி  இருக்கேன்.  இந்த  மாதிரி  ஹோட்டல்  சாப்பாடு  தினம்  சாப்பிட்டா  உடம்பும்  ஒத்துக்காது.   என்  பர்ஸும்  தாங்காது”
                 தனாவின்  பேச்சை  கேட்ட  ரிஷிக்கு  கோவம்  தலைக்கேறியது.
“உன்னுடைய  தங்கும்  செலவு,  சாப்பாட்டு   செலவு,  மற்ற  செலவு  என  எல்லாமே  கம்பெனி   செலவு  தான.  நீ  ஏன்  செலவை   பற்றி   கவலைப்படனும்?”
“செலவு  கம்பெனியோடதா  இருந்தாலும்,  தேவை  இல்லாம  செலவழிக்க  கூடாது.  இது  தான்  என்னோட  பாலிசி.  தேவை  இல்லாததுக்கு  எல்லாம்  கோவப்படுறதை  நிறுத்து.  நல்லா  தூங்கி  ரெஸ்ட்  எடு.  நான்   மார்னிங்   வரேன்”  என்று  சொல்லிவிட்டு  நிற்காமல்  பறந்து  விட்டான்.

Advertisement