Advertisement

அவள் 4: (நாள் எட்டு)

காலையில் எழும்போதே கெட்டவார்த்தைகளில் அர்ச்சனையில் துயில் எழச் சுளித்த புருவங்களுடன் படுக்கையை விட்டு கீழே இறங்கினாள். வேறு யாருமில்லை அவள் தந்தை தான், யாரையோ காதில் கிழித்துக்கொண்டு இருந்தார்.  இவள் வெளியே சென்று ஒரு முறை முறைக்கச் சற்றே கம்மியது அவர் குரல், ஆனாலும் முணுமுணுப்பு நிற்கவில்லை, அப்படியே விலகி வெளியே சென்று விட இவள் கோவத்தோடு காலை கடமைகளைப் பார்க்கச் சென்றாள்.

வீட்டிற்குள் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்க கூடாது அது அவள் விதித்த சட்டம் போல். ஒரு முறை அவளையே திட்டிவிடப் பதிலுக்கு அதை எதிர்த்துக்  கத்தி சண்டையிட்டவள், முழுதாக ஆறு மாதங்களுக்கு அவள் தந்தையுடனே பேசாமல் இருந்தாள். அவ்வளவு வெறுப்பும், கோவமும் வரும் கெட்ட வார்த்தைகளை அவள் முன் உபயோகித்தாள். ஆனால் இன்றைய அவள் நிலைமையை யோசித்துப் பார்த்தாள்.

யாரோ எவரோ, மேலதிகாரி என்ற காரணத்தினால் மட்டுமே அந்த மேலாளர் கத்திக்கொண்டே இருப்பதைச் சகிப்பதாய். பல சமயங்களில் தோன்றும்.

“பெண்கள் இருக்கும் இடத்தில் அவதூறாய் வார்த்தைகளை உபயோகிக்காதீர்” என்று கூற

ஆனால் அவளுக்கே அது முட்டாள் தனமாய். அவர்கள் வேலை அது. ஆளுக்கு ஏற்றார் போல் தான் பேசியாக வேண்டும். ஆனாலும் அப்படியே கத்த வேண்டும் உட்கார்ந்த இடத்தில் என்பது இல்லை, அவளின் மென்டோரும் பேசுவார். ஆனால் யாருமில்லாத போது இல்லையா விலகிச் சென்று கத்திவிட்டு வருவார். அந்த இங்கிதம் ஏன் வயதில் மூத்தவரான இவருக்கு இல்லை? என்னவோ…!!!

சில சமயங்களில் என்னடா இப்படியான ஒரு சுழலில் வேலை செய்ய வேண்டும் என்று தோன்றும். வேலைக்குப் போய் தான் ஆக வேண்டும் என்று இல்லை, அவள் வீட்டில். ஆனால் அவளுக்கே தனகென்ன ஒரு சுயம் வேண்டும் என்ற எண்ணம். ஒரு வித வைராக்கியத்துடன் வேலை செய்கிறாள். இவளுடன் இன்னும் இருவர் இவளுடன் சேர்ந்தனர், ஆனால், இங்கே வேலை செய்ய முடியாது என்று ராஜினாமா செய்துவிட்டு விலகி விட்டனர்.

அவள் எடுத்த காரியத்தை முடிக்க மேலும் மேலும் முயற்சிப்பாளே தவிர, சட்டென முடியவில்லை என்று விட்டுவிட மாட்டாள். “commitment” என்று வந்துவிட்டாள் செய்து முடித்துவிட்டே விலகுவாள். இந்த வேலையும் அப்படி தான் அவளுக்கு அவளே இட்டுக்கொண்ட commitment ஒரு வருடமாவது பல்லைக் கடித்துக்கொண்டு வேலை புரியவேண்டும் என்று. ஆயிற்று, எட்டு மாதங்கள் முடியப் போகிறது.

வேலைக்குக் கிளம்பி வெளியே வர,  அவள் அம்மா பரபரப்பாய் ஓடிக்கொண்டு இருந்தார். அவளுக்கான மதிய உணவு, செலவுக்குப் பணம், காலையில் அவள் குடித்துவிட்டுச் செல்லும் பூஸ்ட் என்று அவளிற்காக என்றே பல வேலைகள். அவரின் தோளைப் பிடித்து அழுத்தியவள்

“அம்மா…அம்மா…கொஞ்சம் மெதுவா தான் செய்  அம்மா, ஒன்றும் அவசரமில்லை” செல்லம் கொஞ்ச

“ஹும்கூம்…போடி உனக்கு நேரம் இருந்தால் செல்லம் கொஞ்சிட்டு இருப்ப நேரம் ஆகிட்டா இது எங்க அது எங்கனு அலைந்துகொண்டு அரக்கப்பரக்க வேலைக்கு ஓடுவ” என்று அவர் பதிலுக்கு அவளை ஓட்ட

“ம்மா…….” செல்லமாய் சிணுங்கியவள்,

நேரம் இருக்கவே பின்பக்க தோட்டத்திற்குச் சென்று பூக்கள் பறித்து வந்து சாமியறையில் வைத்துவிட்டுச் சென்றாள். பின் மற்ற வேலைகளைக் கவனித்து, ஞாபகமாய் எல்லாம் எடுத்தாயிற்றா என்று யோசித்துக் கிளம்ப அவள் அம்மா வாசல் வரை வந்து எப்போதும்போல் வழியனுப்பி வைத்தார்.

மெல்லிய சிரிப்போடு வண்டி ஓட்டியபடி அலுவலக வழியில் சென்றுகொண்டு இருக்க, ஒரு அம்மாள் கை நீட்டி “கொஞ்சம் பஸ் ஸ்டாப் வரை விட்டுட்றியாம்மா? நிறைய நேரம் ஆய்டுத்து” என்று கேட்கச் சரி என்பதாய் அவரையும் ஏற்றிக்கொண்டவள் வண்டியை கிளப்பானானாள். கிட்டத்தட்ட மூன்று மாத காலமாய் வாரத்திற்கு இரண்டு தடவையாவது அவளிடம் லிப்ட் கேட்டுவிடுவார் அவர்.

இறங்கியவர் சும்மா போகாமல் “ஆனாலும் ரொம்ப வேகம் செல்லம் நீ” என்று திணறலோடு சொல்லிச் செல்ல இவளுக்கு புசுபுசுவென கோவம் கிளம்பியது.

பொதுவாகவே நாற்பதிலிருந்து அறுபது கிலோமீட்டர் வேகத்தில் தான் வண்டியை ஓட்டுவாள். இன்று நேரம் இருக்கவே அதனின் கம்மிய வேகத்தில் தான் ஓட்டினாள். அதற்கே அந்த அம்மாளின் பேச்சு. அப்படி குறைந்தபட்ச வேகத்தில் கூட பயணிக்க முடியாதவர் எதற்கு வண்டியில் ஏற வேண்டும். இது போலவே பல முறை கூறியிருக்கிறார். அதனாலே இவர் ஏறினாள், சற்று வேகம் குறைவாகவே, மேடு பள்ளம் பார்த்தே கூட்டிவருவாள்.

“பாவம்” என்ற எண்ணம் மட்டுமே. கிட்டத்தட்ட அந்த குடியிருப்பிலிருந்து பேருந்து நிலையம் ஒன்றைக் கிலோமீட்டர் இருக்கும். மாங்கு மாங்கு என்று நடந்து வரவேண்டுமே என்று அனுதாபத்தில் தான் அழைத்து வருவது.

அது மட்டுமில்லாமல் நிலையத்தில் எதிரவே அவளின் அலுவலகம் என்பதால், தன் வழி பார்த்து விலகிச் செல்வாள், போகும் வழி தானே என்ற எண்ணம்.

‘இனிமேல் இந்த ஆண்டிக்கு லிப்ட் கொடுக்கக் கூடாது. உதவியும் செய்துவிட்டு பேச்சும் வாங்க வேண்டுமா? என்னடா இது.”

அதே கோவத்தோடே தன் வேலையைக் கவனித்துக்கொண்டு இருக்க இவளையே திரும்பி திரும்பி பார்த்த அந்த மேடம்

“என்னாச்சு?” என்று கேட்க, இவளும் மூன்று மாத கதையை ஒப்பித்தவள், இனி அவர்களை ஏற்ற போவதில்லை என்று கூற

“நீ எதற்கு லிப்ட் கொடுத்தாய்? அதுவும் மூன்று மாதங்களாக என்று சொல்கிறாய்? கண்டிப்பா இந்த நேரம் தான் கிளம்பவே கிளம்புகிறார்கள் என்றால் ஏதோ அரசாங்க உத்தியோகம் தான் போல, ஒரு வண்டி கூடவா ஏற்பாடு பண்ணிக்கொள்ள முடியாது?”

அவளுக்கும் அதே எண்ணம் தோன்றியதுண்டு, நல்ல பதவி கூட அந்த அம்மாளுக்கு ஆனாலும் “அவர்களுக்கு என்ன பிரச்சனைகளோ என்ன தேவைகளோ” என்ற எண்ணம் அதை அவரிடமும் சொல்ல

“சரி தான், அதற்காக உதவி செய்தால் கூட  வாய் வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாத அளவுக்கா?” என்று கேட்க

தோளைக் குலுக்கியவள்  தன் வேலையைப் பார்க்க ஆரமித்தாள். மதிய நேரத்தில் அந்த மேடம் உணவிற்காக வீட்டுக்குச் சென்று வருவார். இவளும் அந்த புதிய பெண் மட்டுமே அதனால் ஒன்றாகக்  கீழே அமர்ந்து உண்ணுவார். அப்படி அமர்ந்துவிட்டால், இவர்களை யாரும் காண முடியாது, உள்ளே வருவோரை இவர்கள் காண இயலாது. அதே போல் இன்றும் உணவருந்திக்கொண்டு இருக்க திடீரென உள்ளே நுழைந்த அவளின் மென்டர்

“என்ன பண்றிங்க” என்று பெண் குரலில் பேசி கூப்பிட, பயந்து போன புதியவள் “யாரு” என்று கேட்டு விட இவளுக்கோ சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாமல்

“சொல்லுங்க சார்” சிரிப்புடன் இவள் கேட்க

“ச்ச… தெரிஞ்சிடுச்சா?” அவரும் சிரிப்புடன் வினவ

“பழகி போச்சு சார், பாவம் இவங்க தான் பயந்துட்டாங்க”

“ஐயோ நான் யாரோ வந்துருக்காங்கனே நினைத்துக்கொண்டேன்” புதியவள் கூற மேலும் சில மணித் துளிகள் நகர்ந்தது.

“போச்சு சாப்பிட்டியானு கூட கேட்காமல் நான் பாட்டிற்கு இருக்கிறேன், இப்போது கேட்பார் பாரேன்”

“அதுல என்ன இருக்கிறது? உனக்கு பசிக்கிது நீ சாப்பிடுகிற? அவர் வெளிய போய் சாப்ட போறாரு அதுவுமில்லாமல் அவர் எப்போது வேணா போகலாம் வரலாம் நம்ம அப்படியா?”

ஆம், ஆண்கள் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டால், வேலை காரணமாய் மற்றும் முதலாளி எப்போது வேண்டும் என்றாலும் கூப்பிடுவார் என்று சுற்றும் இவரோ தேவையான நேரம் எப்போது வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்வார்.

“நீ பார், இப்போது கேட்கலனா” அவள் கூறி முடிக்கவில்லை

“என்னடா ஒருத்தன் சாப்பிடாமல் இருக்கானேனு இருக்கா? இரண்டு பேரும் நல்ல சாப்பிட்டுட்டு இருக்கிறீர்கள்” கேலியாய் கூற

“நான் சொல்ல’ல?” என்று இவளிடம் கூறியவள் “இல்ல சார் நீங்க வேலையா இருக்கீங்கனு தான் தெரியுமே?” என்று கூற அவர் சரி சரி என்று தலையாட்டினார்.

“என்னடி இது?”

“அது அப்படிதான், ஒரு வார்த்தை கேட்டால் அவருக்குத் திருப்தி, முன்னே நான் மட்டுமே தானே சம்ருதாயத்துக்கு கேட்பேன் பின் நான் கேட்க மறந்தால் அவர் கேட்க ஆரமித்துவிடுவார்” என்று சொல்லிச் சிரிக்க

“சரி தான்”

அவர்கள் உண்டு முடித்துவிட்டு வந்து அமரவும் அந்த நம்பர் பார்ட்டி வந்து அழைக்கவும் சரியாக இருந்தது.

“கொஞ்சம் உங்க கூட பேசவேண்டும்” என்று அழைத்துவிட்டு செல்ல

அவளின் மென்டர் அவளையே பார்த்தார் “என்னம்மா என்ன விஷயம்? அவர் எதுக்கு கூப்பிடறாங்க?” ஏனெனில் அவர்கள் வேலைக்கும் இவர்கள் வேலைக்கும் சமந்தமே இல்லை

“ம்ம்…தெரியலைச் சார்” கூற  

“சரி போய் பார்த்துவிட்டு வா” என்று கூறி இவர் மதிய உணவிற்குச் செல்ல

“இதோ வந்துடுறேன்டி” என்று புதியவளிடம் கூறிவிட்டு வெளியே வர அந்த அவன் நின்றுக் கொண்டு இருந்தான்.

“என்ன?”

“எதற்கு அப்படிப் பண்ண?” கோவமாய் கேட்க இவள் சுற்றுமுற்றும் பார்த்தவள் “வெளியே போய் பேசுவோமா?” என்று சொல்ல இருவரும் பக்கத்தில் உள்ள பூங்காவிற்குச் சென்றனர். உச்சி தொடும் வேளையாதலால் யாருமே இல்லை, உள்ளே. அதை கண்டுகொள்ளாமல் இவள் உள்ளே செல்ல அவன் பின் தொடர்ந்தான்.

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“எதற்கு காவல்துறை நம்பர் கொடுத்து ஏமாற்றின? ஏதாவது எடாகுடாமா நான் மாட்டி இருந்தால்?” என்று கேட்க

“அதனால் என்ன சார்? நான் எத்தனையோ முறை முடியாது என்று சொல்லியும் நீங்க தான தொல்லை கொடுத்தீர்கள்? அப்போ இதெல்லாம் பேஸ் பண்ணித் தான் ஆகவேண்டும்” அவள் சிரிப்போடு சொல்ல அவன் முகம் கருத்தது.

“அதுக்குனு…” அவன் பேச்சை ஒற்றை விரல் நீட்டி தடுத்தவள்

“நான் பேசி முடிச்சிடுறன் அப்புறம் நீங்கச் சொல்ல வருவதை சொல்லுங்க” அவன் அமைதியாய் இருக்க இவள் தொடர்ந்தாள்.

“எப்போதும் வயது பிள்ளைகள் செய்யும் தவறை பெரிதாய் எடுக்காத சமுதாயம் ஏன் ஒரு வயதைத் தாண்டியவர்களைக் கடுமையாகக் கண்டிக்கிறது என்று தெரியுமா?

திருமணம் ஆனா பிறகு தவறிழைக்காமல் இருக்க முயல்கின்ற மக்கள் திருமணத்திற்கு முன்பு தவறே செய்யாதவர் என்று நினைக்குறிங்களா? இல்லை. ஆனால் ஏன் அப்படி இருக்காங்க தெரியுமா? அதுவும் பிள்ளைகள் என்று வந்த பின்னால் சுத்தமாக அக்மார்க் ஒழுக்க மிக்கவர்களாக மாறிவிடுகின்றனர் அது ஏனென்று நினைத்து இருக்கீங்களா?

தன்னை பார்த்து தன் பிள்ளைகள் கெட்டுவிடக் கூடாது என்பதற்காய் மட்டும் அல்ல, இதே நிலைமை தன் பெண்ணிற்கோ பிள்ளைக்கோ நிகழ்தால் என்ன ஆகும் என்கின்ற பயம். யோசித்து பாருங்க உங்களுக்கு இப்போது தான் குழந்தை பிறந்து இருக்கு இல்லையா? அது வளர்ந்த பிறகு உங்களைப் போலவே ஒருவர் வந்து தொல்லை கொடுத்தால் அதுவும் இப்படியான ஒரு வயது வித்தியாசத்தில் உங்களுக்கு எப்படி இருக்கும்?

என் வயதில் உங்களுக்குத் திருமணம் ஆகி குழந்தை வந்து இருந்தால், இப்போது என் வயதிற்கு ஒரு பிள்ளை உங்களுக்கு இருக்கும் (நாற்பதை தாண்டிய வயது என்று கணித்திருந்தாள்), அப்போ நீங்க எனக்கு என்ன மாதிரியான ஒரு மரியாதை கொடுத்து ஒதுங்கி இருந்து இருக்க வேண்டுமென்று புரிகிறதா? இது இரண்டாவது முறை. முதல் முறை நீங்க அட்வான்டேஜ் எடுத்ததுக்கே நான் பதிலடி கொடுத்தேன்

(ஆம், முதல் முதலில் அவளை நேருக்கமாய் இடிப்பது போல் வந்து ‘அவ்வளவு பயமா’ என்று கிண்டலடித்தவனைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை, அவனின் வயது தப்பாக எண்ணவிட வில்லை, சாதாரண கேலி பேச்சு என்று விட்டுவிட்டாள்.

மறுமுறை அவள் தலைக்குக் குளித்து முடியை விரிய விட்டு வரும்போது ‘பிரி ஹார் விடப் பின்னினால் நல்ல இருக்கு என்று கூற

சிரித்தபடி இவளும் ‘பார்த்துச் சார் உங்கள் மனைவியை ப்ரீ ஹைரில் எங்கும் போகாமல் பாரத்துக்கோங்க அப்புறம் கண்ட ஆளுங்களும் அவர்களிடம் வழிய ஆரமித்துவிட போகிறார்கள்’ என்று பதிலுக்கு நக்கலாய் கொடுத்துவிட்டு வந்தாள்)

அவள் பேசப் பேச முகம் இறுக கறுக ஒன்றும் பதிலடி கொடுக்க முடியாமல்

“இதுக்கு நல்ல நீ அனுபவிப்ப” என்று கூறி விடுவிடுவென நகர்ந்துவிட்டான் அவன். வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு இவள் மணியைப் பார்க்க உணவு நேரம் முடிய இன்னும் ஐந்தே நிமிடங்கள் இருப்பதைக் கண்டவள் தானும் நகர்ந்தாள்.

அதன் பின், அந்த மேடம், விற்பனை மேலாளர் என அனைவரும் இருக்கவே எதுவும் பேசாமல், கதைக்க முடியாமல் அவரவர் வேலையைக் கவனித்தனர். அந்த புதியவளிடம் மட்டும் நடந்ததை மேலோட்டமாய் கூறி வைத்தாள், ஒரே வயது என்பதால் சட்டென வந்து ஒட்டிக்கொண்ட நட்பின் காரணமாய் ஒன்றிப்போய் தான் இருந்தனர் இருவரும் இரண்டே நாட்களில்.  

“ஹே அவன் என்ன இவ்வளவு சீப்பாக இருக்கிறான், அவன் வயதிற்குச் செய்யும் வேலையா இது? அவன் வயது என்னனு தெரியுமா உனக்கு?”

“என்ன நாற்பதைத் தாண்டியதாய் இருக்கலாம்”

“ஆமாப்பா, எனக்கிட்டத் தானே எல்லாருடைய தற்குறிப்பும் இருக்கு, அவனுக்கு இப்போது நாற்பத்தி மூன்று. அவன் மூஞ்சை பார் பெண்களை விட அந்யாயதிர்க்கு மேகப் போட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் கண்ண்டாடி முன்பு நின்றுகொண்டு. எப்படி இப்படியான ஆட்கள் எல்லாம் வேலையில் வைத்து இருக்காங்க?”

“தெரியலையே?”

“எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா இங்க இருக்கவே, ஏற்கனவே எனக்கு எதுவும் வேலையே இன்னும் அலோட் பண்ணவில்லை, இங்கு எனக்கு செட் ஆகும் என்றும் தோன்றலை”

“அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம், யாமிருக்க பயமேன்?” கடவுள் ஆசிர்வதிப்பது போல் கைகளை வைத்து இவள் கூற பட்டென இருவருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. மற்ற மூவரும் இவர்களையே பார்க்க அடக்கிக்கொண்டு வேலையில் மூழ்கினர்.

Advertisement