Advertisement

அனுசுயா அவளை உதிரனுக்கு அருகில் அமரவைத்து பின்னால் நின்றுக் கொள்ள சில பல நிமிடங்கள் மந்திரங்கள் ஓதப்பட்டு உதிரனின் கையில் திருமாங்கல்யம் வந்திருந்தது.
அதை கையில் வாங்கியவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் யாரையோ தேடுவது கண்டு வினயா அருகே வந்தாள். “என்ன அண்ணா தேடுறே??”
“அம்மா எங்கே??”
“அவங்க இங்க தானே இருந்தாங்க” என்று பார்த்தாள்.
“முன்னாடி வரச்சொல்லு நான் வெயிட் பண்ணுறேன்னு சொல்லு” என்று அவளை அனுப்பினான்.
அதற்குள் வேலன் அருகே வந்தார். “என்னாச்சு மருமகனே??”
“அம்மாவை வரச்சொன்னேன் மாமா” என்றான்.
அவரும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு “நான் பார்க்கறேன்” என்று நகர்ந்தார்.
“என்னடா கையில தாலியை வைச்சுட்டு உட்கார்ந்திருக்க” என்று வந்தார் அவனின் பெரிய சித்தப்பா சக்தி.
அவன் அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. “கேட்டா பதில் சொல்றானா பாரு. அவன் அப்பனை மாதிரியே திமிரு இவனுக்கும். நம்மை பேச்சை எல்லாம் கேட்காம அவன் அப்பனை மாதிரியே கல்யாணம் பண்றான்” என்று வந்தார் அவனின் சின்ன சித்தப்பா சிவக்குமார்.
அவன் இப்போதும் பதில் சொல்லவில்லை. அவர்களின் புறம் பார்வையை கூட அவன் திருப்பவில்லை. அதற்குள் வினயா தன் பெரியம்மாவை அழைத்து வந்திருந்தாள்.
அவர் தூரத்தில் இருந்தே “என்ன உதிரா” என்றார் பார்வையால்.
அருகே வருமாறு சைகை செய்தான் மகன். “ஏன் அண்ணி நீங்க முன்னாடி போகக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா, அவன் கூப்பிடுறான்னு நீங்க போறீங்க” என்றார் உதிரனின் சின்ன அத்தை மங்கையர்க்கரசி.
உதிரன் எழுந்து நின்றிருந்தான் “அம்மா இங்க வாங்க” என்றான் சத்தமாய். “உதிரா உங்கம்மா அங்கெல்லாம் வரமாட்டா” என்றார் அவனின் பெரிய அத்தை ராஜேஸ்வரி.
அவன் யாருக்கும் பதில் சொல்லவில்லை அவர்களின் புறம் திரும்பி ஒரு பார்வை பார்க்க அதில் சற்று அடங்கினர் அவர்கள்.
“அம்மா நீங்க வரலைன்னா இன்னைக்கு கல்யாணம் நடக்காது” என்றான் அவன்.
“போங்க அண்ணி நீங்க தானே முன்னாடி நிக்கணும்” என்றார் சினமிகாவின் அன்னை பூந்தமிழ்.
அதுவரை உறவினர்கள் சொன்னதைக்கேட்டு கவலையோடும் குழப்பத்தோடும் இருந்தவரின் உள்ளம் பூந்தமிழின் பேச்சை கேட்டு இதமானது.
வினயா அவர் கைப்பிடித்து மணமேடை அழைத்து வந்தாள். “உங்க பையன் கல்யாணத்தை நீங்க தான் முன்னாடி நின்னு பார்க்கணும். உங்களுக்கு அதுக்கு முழு உரிமையும் இருக்கும்மா” என்றவன் இப்போது அய்யரை பார்க்க அவர் மந்திரம் ஓத அப்போது தான் ஏதோ போல் அமர்ந்திருந்த தன்னவளின் முகம் பார்த்தான்.
“ரிலாக்ஸா இரு நான் தான் கூட இருக்கேன்ல” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னவன் அவள் கழுத்தில் தாலி அணிவித்து அவளை தன்னவளாக்கி கொண்டிருந்தான்.
அடுத்து இருவரும் அக்னியை வலம் வந்தனர். அவளின் கரம் சில்லிட்டு போயிருந்தது, அவள் எதையோ நினைத்து கவலை கொள்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.
அவள் கரத்தை ஆதரவாகவே பற்றிக் கொண்டிருந்தான். லேசாய் அதில் ஒரு அழுத்தம் கொடுத்து தானிருக்கிறேன் என்று உணர்த்தினான்.
பின் பெரியவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று சொல்ல அவன் தன் அன்னையின் காலில் முதலில் விழுந்தான்.
பின் அவளின் பெற்றோரின் ஆசிர்வாதம் பெற்ற பின்னே தான் மற்றவர்களின் காலிலேயே விழுந்தான். அவன் சித்தப்பாமார்கள் அத்தைமார்கள் இன்னமும் அவன் மீது கடுப்பில் தானிருந்தனர்.
“நல்லா இருந்தா சரி” இப்படி தான் இருந்தது அவர்களின் வாழ்த்து. 
“உதிரா”
“என்னம்மா??”
“உங்க சித்தப்பா சித்தி, அத்தை எல்லாம் இருந்து சாப்பிட்டு போகச் சொல்லு”
“சொன்னா மட்டும் அவங்க செய்யப் போறாங்களாம்மா??”
“நம்ம கடமையை நாம சரியா செஞ்சிடணும் உதிரா”
அவர்களை நோக்கிச் சென்றவன் உடன் சினமிகாவையும் அழைத்துச் சென்றான். “நீயும் அவங்களை ஒரு வார்த்தை கூப்பிட்டிரு” என்று அவளிடம் சொல்ல ஹ்ம்ம் என்று தலையசைத்திருந்தாள் அவள்.
“எல்லாம் இருந்து சாப்பிட்டு போங்க” என்றான் அவன்.
அவனைத் தொடர்ந்து சினமிகாவும் சொல்ல அவன் சித்தப்பா ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தார் அவனை.
“என்னடா உங்கம்மா சொல்ல சொன்னாங்களா இப்படி?? ஹ்ம்ம் பரவாயில்லை உங்கம்மாக்கும் கொஞ்சம் மரியாதை தெரியுது போல”
“ஒத்த பிள்ளையை வைச்சுட்டு இருக்கா நம்ம தயவு என்னைக்கா இருந்தாலும் தேவை தானே. அதான் அனுப்பியிருப்பா” என்றார் அவன் அத்தை.
“பேசி முடிச்சிட்டீங்களா” என்றான் இரு கைகளையும் கட்டிக்கொண்டு.
“என்னடா ஏத்தமா பேசுற??” என்றார் மற்றொரு சித்தப்பா.
“எனக்கு ஏத்தம் இருந்தா என்ன தப்பு??”
“டேய் சக்தி இவனுக்கு அவன் அப்பனை மாதிரியே திமிரு, அம்மையை மாதிரியே மாதிரி பேச்சு” என்றார் ராஜேஸ்வரி.
“நீங்க வந்த வேலை முடிஞ்சுது கிளம்புங்க” என்றான் உதிரன்.
“என்னடா கூப்பிட்டு வைச்சு அவமானப்படுத்தறியா. இதுக்கு தான் தகுதி தராதரம் பார்த்து கல்யாணம் பண்ணியிருக்கணும்ன்னு சொல்றது”
“அம்மா எப்படியோ அப்படியே பிள்ளையும் வந்து வாய்ச்சிருக்கு” என்று சின்னத்தை சொல்லவும் “ஹேய்” என்று அவன் கத்திய கத்தலில் அத்தனை பேரும் அங்கு தான் திரும்பி பார்த்தனர்.
“போய்டுங்க எல்லாம் மரியாதை. போனா போகுதுன்னு விட்டுக் கொடுத்து போனா ரொம்பவும் பேசறீங்க. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாம்”
“எப்பவும் அமைதியாவே இருப்பேன்னு நினைப்பா உங்களுக்கு. எங்கம்மா சொன்னாங்க அதனால தான் எதையும் நான் யோசிக்காம உங்களுக்கு எல்லாம் பிரிச்சு கொடுத்தேன்”
“ஒரு நிமிஷம் ஆகாது என்னை ஏமாத்தி வாங்குனீங்கன்னு கோர்ட் போய் கேஸ் போட, போடணுமா சொல்லுங்க போடணுமா” என்று அவன் கேட்க அவன் சித்தப்பாமார்கள் வாயை மூடிக் கொண்டனர்.
“நல்லா தானே இருந்தீங்க எல்லாரும் எங்க அப்பா இருக்க வரை. அவர் போனதும் உங்க குணம் எல்லாம் மாறிடுச்சு. இல்லை நீங்க எப்பவும் அப்படித்தான் போல நாங்க தான் தெரிஞ்சுக்காம இருந்திட்டோம்”
“பேச வேணாம் நீங்க யார் பேசறதையும் நான் கேட்க விரும்பலை. நாங்க உறவு வேணும்ன்னு நினைச்சதுனால தான் எல்லாத்தையும் விட்டுக்கொடுத்தோம். ஏமாந்து கொடுத்தோம்ன்னு நினைச்சா அது உங்க முட்டாள்த்தனம்”
“இனிமே எங்கம்மாவையோ அப்பாவையோ பேசினா நான் என்ன வேணும்னாலும் செய்வேன். இது தான் கடைசி உங்க எல்லாருக்கும். நீங்க எல்லாரும் என்னோட கல்யாணத்துக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி”
“இருந்து சாப்பிட்டு போங்க. இல்லைன்னா நாளைக்கு உங்க எல்லார் வீட்டுக்கும் வக்கீல் நோட்டீஸ் வரும்”
“என்னடா மிரட்டறியா??”
“இல்லை உண்மையை தான் சொன்னேன். நீங்கலாம் உறவாச்சும் ஒண்ணாச்சும் இருக்கும் போது நான் மட்டும் ஏன் அதெல்லாம் பார்க்கணும். நான் ஏன் கஷ்டப்படணும்??”
“சரி தேவையில்லாத பேச்செல்லாம் வேணாம். சாப்பிட்டு போங்க, இல்லையில்லை வேணாம் என்னோடவே வந்து சாப்பிடுங்க” என்று கிட்டத்தட்ட அனைவரையும் மிரட்டியே அழைத்து வந்தான் உணவருந்த.
உணவு முடிந்த அவர்கள் கிளம்பிவிட சீதா தன் மகனிடம் “உதிரா எதுக்கு இப்படி பண்ணே?? நீ கொஞ்சம் பொறுத்து போயிருக்கலாம்ல”

“நீங்க சொன்னது கேட்டு பொறுத்து தானேம்மா போனேன்”
“இருந்தாலும்…”
“இவங்ககிட்ட இப்படித்தான்ம்மா பேசணும். அப்போ நான் சின்ன பையன் விவரம் தெரியலை. நீங்க சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டினேன்”
“உதிரா அம்மா தப்பு பண்ணிட்டேன்னு நினைக்கறியா??”
“இல்லைம்மா, அப்படி நான் சொல்ல வரலை. கொஞ்சம் நிதானமா எல்லாம் செஞ்சிருக்கலாம். நான் ஒண்ணும் சொத்துக்காக இதை சொல்லலை”
“உதிரா பாரு மருமகளை அரண்டு போயிருக்கா, நீ பேசு” என்று சொல்லி நகர்ந்தார்.
அப்போது தான் சினமிகாவை பார்த்தான். திருமணம் முடிந்த பின்னே அவன் செல்லுமிடமெல்லாம் அவளும் உடன் சென்றுக் கொண்டிருந்தாள்.
தனியே நிற்க வேண்டாம் என்று பூந்தமிழ் சொல்லியிருந்தார். அதனாலேயே அவன் பின்னேயே சென்றாள்.
அவன் உறவினர்களிடத்தில் காட்டிய பாவத்தில் அவள் சற்று மிரண்டு தான் பார்த்திருந்தாள் அப்படியொரு சத்தம் போட்டிருந்தான் அவர்களை பார்த்து.
“என்னாச்சு என்னை மிரண்டு போய் பார்க்கற மாதிரி இருக்கு” என்றான் அவளிடத்தில் குனிந்து.
அவள் இல்லையென்று தலையாட்டினாள். “இல்லைன்னு சொன்னாலும் பார்த்தாலே தெரியுது”
“அதெல்லாம் யோசிக்காத அவங்க என்னோட சொந்தக்காரங்க தான். ஆனா சிலது எல்லாம் பேசித்தானே ஆகணும். எங்கம்மாவை பேசினா என்னால தாங்க முடியாது”
“தேங்க்ஸ்”
“இதை நான் எதிர்ப்பார்க்கலை”
“எதை??”
“நீ தேங்க்ஸ் சொல்வேன்னு. ஆனா எதுக்கு சொன்னே??”
“அம்மாக்காக பேசறீங்க. எனக்காகவும் எப்பவும் இருப்பீங்கன்னு நம்பிக்கை கொடுத்திருக்கீங்க முதல் நாளே அதுக்காக தான் தேங்க்ஸ் சொன்னேன்” என்றவளை சற்று ஆச்சரியமாக பார்த்தான்.

Advertisement