Advertisement

8
சினமிகாவை அவள் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றனர். காரில் வரும் போது முழுதும் அவன் நினைவே. கடந்த இரு வாரங்களுக்கு முன் ஒரு நாள் அவனை நேரில் பார்க்க நேர்ந்தது.
காரணம் வேறொன்றுமில்லை அது வேலன் உதிரன் சொன்னது போல ராஜபாளையத்திலும் சங்கரன்கோவிலிலும் அவர்கள் கடைக்கு பிரான்ச் ஓபன் செய்திருந்தார்.
அந்த இடம் எல்லாம் அவர் சொந்தத்திற்கு வாங்கியிருந்தார். அவர் மனதில் ஓர் எண்ணம் மகன் விரும்பியது போலவே திருவில்லிபுத்தூரில் இருந்த கடையை அவனுக்கே எழுதியிருந்தார்.
சங்கரன்கோவில் கடை சின்ன மகளுக்கும் ராஜபாளையம் கடை பெரிய மகளுக்கும் என்று மனதில் இருத்தி அதை முடித்து வைக்கவென இரண்டு வாரத்திற்கு முன் உதிரனை ரிஜிஸ்டர் அலுவலகம் வரச்சொல்லியிருந்தார்.
அவர் ஏதோ வேலையாக கூப்பிடுகிறார் போல என்று தான் அவனும் அங்கு சென்றான். அன்னையையும் அழைத்து வரச்சொல்ல யோசனையுடனே அழைத்து வர அங்கு அவர்களின் குடும்பமே இருந்தது.
திருமணம் பேசிய நாட்களாக சினமிகாவை பார்க்க முடியவில்லை என்பதால் உதிரன் அவளை கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தான். இந்த திடீர் சந்திப்பை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
வந்தவர்கள் இவர்களை முறையாய் வரவேற்றனர் நீலவண்ணன் தவிர. அவன் முறுக்கிக்கொண்டு தனியே நின்றிருந்தான் தன் துணையுடன். வேலன் தன் கடமையை சரிவர முடித்துவிடும் எண்ணத்துடன் இருந்தார்.
மகனிடம் வேறொன்றையும் அவர் எதிர்பார்க்கவேயில்லை. “எதுக்கு இப்போ இங்க வரச்சொன்னீங்க??” என்று மனதில் தோன்றியதை கேட்டே விட்டான் உதிரன்.
“ராஜபாளையம் கடை பார்த்திருக்கோம்ல மாப்பிள்ளை அதை பேசி முடிக்கத்தான் இன்னைக்கு ரிஜிஸ்ட்ரேஷன்” என்றார் அவர்.
‘ஓ!! நம்மளை சாட்சி கையெழுத்துக்கு கூப்பிட்டு இருப்பாங்க போல’ என்று நினைத்து முடிப்பதற்குள் வேறு யோசனை இவருக்கு சாட்சிக்கா ஆட்கள் வரமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவரையே உற்று நோக்கினான்.
சீதாவும் அதை தான் நினைத்திருப்பார் போல “அதுக்கு எதுக்கு நாங்க இங்க??” என்றார்.
“மருமகன் பேருல தான் முடிக்கலாம்ன்னு… அதுக்காக தான்…”
“என்ன சொல்றீங்க நீங்க??” என்று அதிர்ந்தனர் இருவருமே.
“இல்லை மருமகனே சங்கரன்கோவில் கடையையும் அப்படி தான் முடிக்கறேன்”
“பெரிய கடையை மகனுக்கும் மருமகளுக்கும் எழுதி சொல்லியாச்சு. இது என் கடமை தானுங்களே” என்றார் அவர் நீண்ட விளக்கமாக.
“சாரி மாமா நான் இதை உங்ககிட்ட எதிர்பார்க்கலை. நீங்க என்னை நம்பி உங்க பொண்ணை தர்றீங்கன்னு நினைச்சேன். இப்படி அவளோட சொத்தை நம்பி நான் இருப்பேன்னு நீங்க நினைச்சீங்களா”
“அச்சோ இல்லைங்க மருமகனே நான் அப்படி நினைக்கலை. என் காலத்துக்கு பிறகு எல்லாம் பிள்ளைங்களுக்கு தான், செய்யறதை நான் இருக்கும் போதே சரியா செஞ்சிடணும்ன்னு ஒரு எண்ணம்”

“அது நான் ஆஸ்பத்திரியில இருந்து வந்ததுமே யோசிச்சது தான்” என்றார்.
“அப்படி எழுதணும்ன்னா உங்க பொண்ணு பேர்ல செய்ங்க, நான் எதுக்கு??” என்றவன் “என்னம்மா நான் சொல்றது சரி தானே” என்று கேட்க அவரும் “எனக்கும் அவன் சொல்றது தான் சரின்னு படுது” என்றார்.
அவர்கள் விடாது அடம் பிடிக்கவும் வேலன் “பேசாம உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து எழுதவா”
“அதை தானே முதல்ல இருந்து சொல்லிட்டு இருக்கீங்க. என் பேர்ல தனியா எழுதறதோ இல்லை எங்க ரெண்டு பேர் மேல சேர்த்து எழுதறதோ ரெண்டுமே வேணாம். உங்க பொண்ணு பேர்ல எழுதுறதுன்னா எழுதுங்க”
“ஏன்னா அது உங்க உரிமை, உங்க பொண்ணுக்கு நீங்க செய்யறதை நான் எந்த தடையும் சொல்ல மாட்டேன். ஆனா எனக்கு எதுவும் வேண்டாம். என்னை நம்பி நீங்க உங்க பொண்ணை தர்றீங்க, எனக்கு அது மட்டும் போதும். உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன்” என்று அவன் சொல்லி முடிக்கும் போது சற்று கர்வமாகவே உணர்ந்தார் வேலன்.
சின்ன மகளுக்கு தேடி வந்து முடித்து சென்றனர் தான். ஆனாலும் சீர்வரிசை என்று அவ்வளவு கேட்டார்கள் அவர்கள் வீட்டில். மகளுக்காக தானே என்று அத்தனையும் சிறப்பாகவே தான் செய்திருந்தார் அத்தந்தை.
ஏனோ உதிரனை முதல் நாள் பார்த்த போதே அவருக்கு பிடித்தது. பெரிய இடத்து பிள்ளை என்ற பிகு எல்லாம் இல்லாமல் தன் தேவைக்காய் வேலைக்கென்று வந்து நின்ற அந்த சுயமரியாதை பிடித்தது அவருக்கு.
அவருக்கு தெரியும் அவனின் வீடே பல லட்சத்திற்கும் பெறுமானமானது என்று. தன் அன்னை சொன்னதை மதித்து அவன் வேலைக்கு சென்றது எல்லாம் அவருக்கு அவன் மேல் பெரிய பிடிப்பை கொடுத்தது.
எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அதை தாங்கி தன் மகளுடன் அவன் பொறுப்பாய் மகிழ்வாய் குடும்பம் நடத்துவான் என்ற எண்ணம் வந்த பிறகே அவன் வீட்டிற்கு சென்றார்.
முதல் நாள் தான் தமிழ் அவரிடம் சொல்லியிருந்தார் அக்கம்பக்கத்தில் உதிரனையும் சினமிகாவையும் பற்றிய பேச்சு ஓடுகிறது என. தன் மனதின் எண்ணம் தான் ஏதோவொரு வடிவத்தில் ஒவ்வொருவருக்கும் போய் சேர்கிறதோ என்ற நினைப்பு அவருக்கு. அதையே உண்மையாக்கினால் தான் என்ற யோசனை அவன் மீதான நம்பிக்கை எல்லாம் சேர்ந்து தானாய் சென்று பெண் கேட்க வைத்தது.
இதோ இப்போது கூட சொத்து வேண்டாம் உங்கள் மகள் போதும் என்று சொல்லி அவரின் நம்பிக்கையை இன்னமும் உறுதியாக்கிய அவன் பேச்சு அவரை நெகிழச் செய்தது.
மேகாவும் வந்திருந்தாள் அவள் கணவன் வெளியூரில் இருந்தவன் அவனும் வந்திருந்தான் இதற்காகவே. எல்லாம் யோசித்தவருக்கு தன் பெரிய மகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவள் என்றே தோன்றியது.
உதிரன் சொன்னது போலவே எல்லாம் செய்தார். அனைத்து ரிஜிஸ்ட்ரேஷனும் முடியவும் அவர்கள் கிளம்பினர். சினமிகா இவனை நிமிர்ந்து பார்த்தாலே தவிர பேசவில்லை.
சீதாவிடம் மட்டும் எப்படியிருக்கிறீர்கள் என்று விசாரித்துக் கொண்டாள் அவ்வளவே. கிளம்பும் முன் “ஹலோ மேடம்” என்று அருகே கேட்ட குரலில் இவள் திரும்பி பார்க்க எதிரில் நின்றிருந்தான் உதிரன்.
அவள் சுற்றுமுற்றும் பார்க்க சற்றுத்தள்ளி தன் தந்தை தாய், உதிரனின் தாய் அனைவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
“அவங்க நம்ம கல்யாண விஷயம் பேசிட்டு இருக்காங்க. ஹ்ம்ம் அப்புறம்”
அவளுக்கு பேச்சே வரவில்லை. பேசாமல் நின்றிருந்தாள். 
“இப்படியே இருந்திட முடியுமா” என்றான்.
என்ன சொல்கிறான் என்று புரியாமல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“இல்லை இப்படியே நம்ம கல்யாணத்துக்கு பிறகும் நீ பேசாமலே இருந்திட முடியுமான்னு கேட்டேன்”
“இல்லை வந்து என்ன பேசன்னு…”
“தெரியலையா… நம்ப முடியலையே, நீ அப்படி ஆளு இல்லையே. நாம இதுக்கு முன்னாடியும் பேசி இருக்கோம் தானே”
“ஹ்ம்ம்”
“அப்போ எல்லாம் தடையே இல்லாம நீ என்கிட்ட பேசியிருக்க தானே”
“ஹ்ம்ம்”
“அப்போ இப்பவும் பேசு” என்று பிடிவாதமாய் நின்றான்.
அப்போது இவன் கடையில் வேலை செய்பவனாக மட்டுமே இருந்தான். இப்போதோ அவளை திருமணம் செய்துக்கொள்ளும் மாப்பிள்ளையாக இருக்கிறான். ஒரு மாதிரி வெட்கமும் கூச்சமும் வந்திருந்தது அவளுக்கு.
“இப்படியே பார்த்திட்டே இருந்தேன்னு வை, உன் கன்னத்தை கடிச்சு வைச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று அவன் சொல்லவும் முதலில் அதிர்ந்து பின் வெட்கம் வந்தது அவளுக்குள்.
அதை ரசித்துக்கொண்டே “கண்டிப்பா கடிக்கத்தான் போறேன் பாரு” என்று ஓரடி நெருங்கவும் அவள் இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
“இப்போ தள்ளிப் போவே அடுத்த வாரம் என்கிட்ட தானே வரணும் அப்போ முதல்ல கடிச்சு வைக்கறேன் பாரு…” என்றான் விடாமல்.
“நான் வந்ததும் என்னை நீ விசாரிக்கவே இல்லை. நான் கேட்டேன் தானே நீ எப்படி இருக்கன்னு. ஹ்ம்ம்ன்னு சொல்லிட்டு போய்ட்ட, பதிலுக்கு கேட்கணும்ன்னு உனக்கு தோணலையா”
“சாரி”
“வாங்கித்தர்றேன்”
“என்ன சொல்றீங்க”

“சாரி கேட்டல்ல வாங்கி தர்றேன்னு சொன்னேன். என்ன கலர்ல வேணும் உனக்கு??” என்று அவன் கேட்க அவள் கேட்ட மன்னிப்பை அவன் சேலை என்று சொல்லி அவளை வம்பிழுக்கிறான் என்று புரிந்தது.
“மன்னிச்சுடுங்க வேணும்ன்னு செய்யலை. எல்லாமே சடனா நடந்திடுச்சு, எதிர்பார்க்கலை இதை. உங்ககிட்ட எப்படி பேசன்னு ஒரு தயக்கம்” என்றாள் மறையாது.
“பேசணும் இனிமே நாம ஒரு குடும்பமாகப் போறோம். எனக்கு நீ போன் பண்ணணும். நம்பர் தெரியுமா??” என்றவன் “உனக்கு தெரியும் ஆஸ்பிட்டல்ல வைச்சு வாங்கின தானே” என்றான் ஞாபகமாய். அதற்குள் வீட்டினர் வர அவன் சற்று நகர்ந்தான்.
அவளுக்கு புரிந்தது அவனுக்கு தன்னை பிடித்து தான் சரியென்று சொல்லியிருக்கிறான் என்று அதுவே அவளுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. திருமணம் அவன் வீட்டிலேயே நடப்பதாக இருந்தது. 
அவள் தந்தை சொல்லியிருந்தார் அது பெரிய வீடு என்று. ஆனால் அது அவள் கனவில் பார்த்த வீடா என்பது தெரியவில்லை அவளுக்கு.
அந்த வீட்டின் பின் புறம் இருந்த அறையில் அவளை தங்க வைத்திருந்தனர். திருமணத்திற்கு முன் மாப்பிள்ளை வீட்டில் தங்க கூடாது என்று அவர்கள் வீட்டில் குடியிருப்பவரின் வீட்டில் தங்க வைத்தனர்.
அவளும் வேறு வழியில் அந்த வீட்டிற்கு வந்ததால் அவளால் எதையும் கவனிக்க முடியவில்லை. உதிரன் அவ்வப்போது அழைத்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அதுவே அவளுக்கு அவ்வளவு சந்தோசத்தை கொடுத்தது. மேகா ஒரு நேரம் சந்தோசமாய் பேசுபவள் மறுநேரம் தமக்கையின் வாழ்வை பார்த்து நொடிக்கத் தான் செய்தாள்.
“ஏன்பா இவங்களுக்கு இவ்வளவு பெரிய வீடா. இதென்னா வாடகை வீடாப்பா” என்று வேலனை அவள் கேட்க அவரோ “மேகாம்மா இது மாப்பிள்ளையோட சொந்த வீடு”
“அவங்களுக்கு மட்டும் தான். இன்னொரு விஷயம் தெரியுமா அவங்க பெரிய ராஜ பரம்பரை” என்று அவர் சொல்லவும் மேகா மட்டுமல்ல சினமிகாவும் தன் தந்தையை அதிர்ச்சியாய் தான் பார்த்தாள்.
‘இதென்ன கனவு பலிக்கிறதா, அப்போ கனவுல வந்த எல்லாமே நடக்குமா’ என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு தலை வலித்தது.
மேகாவிற்கு அவ்வளவு பொறாமையாக இருந்தது. இவளுக்கு வந்த வாழ்வை பாரேன் என்று தான் நினைத்தாள். அவளுக்கும் மாப்பிள்ளை வீட்டினர் தேடித்தான் வந்து திருமணம் முடித்து சென்றனர்.
மாப்பிள்ளை மேகாவை விட கொஞ்சம் சுமாராகத் தானிருப்பார். சொந்த வீடு, நல்ல வேலை நல்ல குடும்பம் எல்லாம் இருக்கவே தான் வேலன் தன் மகளை மணமுடித்துக் கொடுத்தார்.
மேகாவிற்கு அதில் அவ்வளவு பெருமை. என் அழகை பார்த்து தேடி வந்தாங்க இப்படி தான் அவள் நினைப்பு. ஆனால் தமக்கைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பார்க்க நன்றாக இருக்கிறார்.
இவ்வளவு பெரிய சொந்த வீடு வேறு, இதில் ராஜ பரம்பரை வேறு என்று சொல்லவும் அவள் புகைந்து தான் போனாள். தன் தமையனுக்கு போன் செய்தாள் விஷயத்தை சொல்வதற்கு.
நீலவண்ணன் திருமணத்திற்கு வந்திருக்கவில்லை. வேலனும் அவனை பெரிதாய் அழைத்திருக்கவில்லை. பத்திரிக்கையை வீடு தேடித்தான் சென்று வைத்து வந்திருந்தனர் அவரும் தமிழும்.
ஆனால் அவன் தான் கோபத்தில் திருமணத்திற்கு வரவில்லை. மேகா அழைத்து விஷயத்தை சொல்லவும் எல்லாம் கேட்டுக்கொண்டான் பதில் எல்லாம் பேசிவிடவில்லை அவன். ஏற்கனவே வேறொரு கடுப்பில் இருந்தான் அவன். 
எல்லாம் கடையை எழுதிய வைத்த விவகாரம் தான். சொத்து முழுதும் மகனுக்கே என்ற நினைப்பில் இருந்தவனின் எண்ணத்தில் மண் அள்ளி போட்டிருந்தாரே தந்தை.
உரிமையை எதிர்பார்ப்பவன் கடமையை சரிவர செய்திருக்க வேண்டும் தானே. அதை செய்யாமல் தன் உரிமையை மட்டும் நிலைநாட்ட முனைந்திருந்தான்.
மேகா தன் தந்தையிடம் “ஏன்பா அவங்க ராஜ பரம்பரைன்னு சொல்றீங்க. அவங்க எப்படி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க”
“அது அவங்களோட பெருந்தன்மை” என்றார் அவர்.
“எனக்கென்னவோ அவங்க இப்போ ஒண்ணுமில்லாதவங்களா இருப்பாங்களோன்னு தோணுது. எல்லாம் இருந்தா ஏன் நம்ம வீட்டில பொண்ணு எடுக்க போறாங்க. எல்லாம் நம்ம சொத்தை நம்பி தான் சரின்னு சொல்லியிருப்பாங்க” என்று மட்டம் தட்ட முயல வேலன் ரௌத்திரமானார்.
“தமிழ் என்ன பேசறா இவ?? எப்படி இப்படி எல்லாம் இவளுக்கு பேச வருது. யாரையும் எடுத்தெறிஞ்சு பேசுற மாதிரி நம்ம இவளை வளர்க்கலையே”
“ஒருத்தன் படிக்கறேன்னு ஹாஸ்டல்ல இருந்ததுனால பாசமில்லாம இருக்கான்னு நினைச்சேன். ஏன் மேகா உனக்கு எப்படி இந்த மாதிரி எண்ணமெலாம்  வந்துச்சு” என்றார் அவர்.
“அப்பா இல்லைப்பா தெரியாமப்பா சாரிப்பா…” என்றவளுக்கு கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. வயிற்று பிள்ளைக்காரி கண் கலங்க கூடாது என்ற எண்ணம் வரவும் “விடும்மா இனி இப்படி பேசாத”

“அவ உன்னோட அக்கா அவளோட வாழ்க்கை நமக்கு முக்கியம். யாரையும் குறைச்சு பேசக்கூடாது. அவங்க தகுதிக்கு முன்னாடி நாம நிற்க கூட முடியாது, அவங்களோட இந்த வீட்டு மதிப்புக்கு வராது நம்மோட சொத்தெல்லாம்”
“கண்டதும் யோசிச்சு மூளையை போட்டு குழப்பாம நல்லதே நினைச்சு பழகு. அது உனக்கு மட்டுமில்லை உன் வயித்துல வளர்ற பிள்ளைக்கும் நல்லது” என்றார் அவர்.
தமிழும் தன் மகளை கண்டித்தார் “என்ன மேகா அப்பாவை எதிர்த்து பேசுற பழக்கம் உனக்கு எப்போ வந்துச்சு. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பேசலாமா, தப்பில்லையா. நாளைக்கு உனக்கு அக்கான்னு சொந்தம் வேணாமா, எங்களுக்கு அப்புறம் உனக்கு அவ தான் எல்லாம் செய்யணும்”
“உன் அண்ணன் செய்வான்னு நினைக்காத, அவன் எப்பவோ நம்ம கையை விட்டு போய்ட்டான்” என்று சொல்ல மேகாவிற்கும் அது புரிய அமைதியானாள்.
மேகா எப்போதும் சொந்தத்தை விரும்புபவள் தான். அண்ணன் உறவை பற்றி அவர் சொன்னது உண்மை தானே.
அவ்வளவு நேரமும் அங்கு நடந்ததை பார்த்துக் கொண்டு தானிருந்தாள் சினமிகா. அவளுக்கு நிஜமாகவே உதிரனை நினைத்தும் அவன் அன்னையை நினைத்தும் அப்படியொரு பெருமிதம் தோன்றியது.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது போல் தானிருந்தனர் அவர்கள். அறையில் இருந்தவர்கள் வெளியேறவும் அவள் மொபைலுக்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
மென்னகையுடனே போனை அட்டென்ட் செய்தாள். அதை எதிரிலிருந்தவனும் பார்த்திருக்க “என்ன வரவேற்பு பலமா இருக்கு, உனக்கு சிரிக்க தெரியுமா. மறந்திட்டன்னு நினைச்சேன்” என்றான் அவன்.
“நான் சிரிக்கறது உலக அதிசயமா என்ன”
“இல்லையா பின்ன?? பேசவே யோசிச்ச இப்போ சிரிக்கறயே”
“சிரிச்சா தப்பா”
“இல்லையே தப்பில்லையே. ஒரு வழியா என்னை தேடி வந்தாச்சு”
“எப்போ??”
“எங்க வீட்டில தானே இருக்க?? உனக்கு ஒண்ணு தெரியுமா நீ இருக்க ரூமுக்கு நேரே பின்னாடி இருக்க ரூம் தான் நம்ம ரூம்”
“இப்படியே இந்த சுவத்தை உடைச்சுட்டு உள்ள வந்திடேன்” என்றான் ஆர்வமாய்.
அவனின் அந்த ஆர்வம் புரிந்தவள் அமைதியாய் சிரித்தாள். “சிரிக்காதடி”
“அப்போ என்ன செய்யறதாம்??”
“இப்போ நான் அங்க வரவா??”
“அச்சோ வேணாம்…”
“ஆமா வந்திட்டா மட்டும் நீ ஓடிவந்து கட்டிக்கப் போறியா என்ன” என்று முகத்தை சுருக்கிக் கொண்டான்.
“நான் என்ன பண்ணணும்??”
“ஒண்ணும் பண்ண வேணாம் போ. எனக்கே தெரியுது நான் ஓவரா ரியாக்ட் பண்றேன்னு. என்னமோ கல்யாண பேச்சு வந்ததுல இருந்தே ஒரு பரபரப்பு தான்”
“சரி நானே பேசிட்டு இருக்கேன் நீ சொல்லு”
“என்ன சொல்ல??”
“என்ன வேணா சொல்லு”
“இந்த தாடியை நீங்க எடுக்க மாட்டீங்களா??”
“நாளைக்கு இருக்காது”
“ஏன் இன்னைக்கு எடுத்தா வேணாங்குதா??”
“உனக்கு பிடிக்கலையா??”
“அப்படியெல்லாம் இல்லை, முகத்தை மறைக்குது” என்று சொல்ல இவன் ரசனையாய் சிரித்தான்.
“சொல்லு நான் பார்க்க எப்படி இருக்கேன். உனக்கு பிடிச்சிருக்கா”
“வேணாம் வேணாம் ஏற்கனவே என்னை அடியாள்ன்னு வேற சொல்லிட்ட நீ” என்று அவனே இடைமறித்தான்.
“பின்னே நீங்க அப்படி தானே இருக்கீங்க. கடிக்க போறேன் பாரு உன்னைய”
“கடிச்சாலும் அதே தான் சொல்வேன். உங்களை நான் கட்டிப்பிடிக்கவே எனக்கு நாலு கை வேணும் போல” என்று சொல்ல அவன் அமைதியாகிவிட்டான்.
“என்ன பேச்சே காணோம்??” என்று இவள் சொல்ல “நீ எதுக்கு கட்டி பிடிக்கறே, நானே உன்னை கட்டிக்கறேன் போதுமா” என்று இவன் சொல்லவும் தான் சொன்னதே அவளுக்கு உரைத்து அதில் முகம் நாணம் பூசிக் கொண்டது.

Advertisement