Advertisement

7
“அண்ணி இதை வாங்கிக்கோங்க” என்றாள் உதிரனின் சித்தப்பா மகள் வினயா.
“இந்த புடவையை தான் நீங்க மண்டபத்துக்கு கட்டிட்டு வரணும்ன்னு பெரியம்மா சொல்லிவிட்டாங்க. இது நம்ம குடும்ப வழக்கமாம்” என்றாள் அவள்.
சினமிகா தன் தந்தையை பார்த்தாள். அவர் விழியசைக்க வினயாவிடம் இருந்து அத்தட்டை வாங்கிக் கொண்டாள்.
“இதுக்கு பிளவுஸ் உள்ளவே இருக்காம் அண்ணி. பெரியம்மா சொல்லச் சொன்னாங்க”
“நான் போய் மாத்திட்டு வரேன்” என்று சொல்லி சினமிகா தன்னறைக்குள் நுழைந்தாள்.
அறைக்குள் சென்று வந்தவள் தயாராகி வந்திருக்க மேகாவே தன் தமக்கையை ஆவென்று தான் பார்த்தாள். ‘இவளுக்கு இவ்வளவு காஸ்ட்லியான சேலையா என்று’
மேகாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான். தமக்கையின் திருமணத்தை தனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அப்பா முடித்துவிட்டாரே என்று அப்படியொரு கோபமும் வருத்தமும் அவளுக்கு.
வேலன் திருமண உறுதி ஆகாமல் அதை யாருக்கும் தெரியப்படுத்த விரும்பவில்லை. அவரே எதிர்பார்க்கவில்லை உதிரனின் வீட்டினர் திருமணத்திற்கு சம்மதம் சொல்வர் என்று.
அவர் சென்று சீதாவிடம் பேசிவிட்டு வந்த மறுநாள் அவரே போன் செய்திருந்தார் வேலனுக்கு.
“ஹலோ நான் சீதாதேவி பேசறேன். உதிரனோட அம்மா” என்று சொல்லவும் “சொல்லுங்கம்மா” என்று மரியாதையாய் பேசினார் வேலன்.
“நேத்து நீங்க வந்து பேசிட்டு போனீங்க. இப்போ உடனே முடிவெடுக்க முடியாத நிலை. இப்போ நாளும் நல்ல நாளா இல்லை. எந்த பேச்சா இருந்தாலும் ஒரு மாசம் கழிச்சு பேசலாமா” என்றிட “சரிங்கம்மா பிரச்சனையில்லை” என்றுவிட்டு அவரும் வைத்துவிட்டார்.
அப்போது கூட ஏதோ ஜாதகம் பார்ப்பார்கள் போல நல்ல நாள் நேரம் பார்த்து தான் எல்லாம் செய்வார்கள் என்று எண்ணியிருந்தார்.
ஆனால் அவர் நல்ல முடிவைச் சொல்லத்தான் அவ்வளவு நாள் எடுத்துக்கொண்டார் என்பதை அவர் நேரில் வந்த அன்று தான் புரிந்துக் கொண்டார்.
அன்று காலை தான் சீதா போன் செய்து அங்கு வருவதாய் சொல்லியிருந்தார். அவர் வந்தால் தானே தெரியும் என்ன விஷயம் என்று அதற்குள் மேகாவிற்கு சொல்ல அவர் விரும்பவில்லை.
ஆனால் சீதாவோ உறுதி செய்யவே அன்று வந்திருந்தார் என்பதே பின்பு தானே புரிந்தது. இதோ தன் மூத்த மகளின் திருமணம் நாளை என்று வந்து நிற்கிறது. அதில் அப்படியொரு ஆனந்தம் அவருக்கு. அதிலும் உதிரன் வீட்டினர் பெரிய ஆட்கள் என்று தெரிந்ததும் சற்று மிரண்டு தான் போயிருந்தார். தெரியாமல் சென்று பெண் கேட்டுவிட்டோம் என்று கூட நினைத்தார்.
அவர் நினைப்பு பொய் என்பது போல் சீதா நடந்துக் கொண்டார். தாங்கள் பெரிய குடும்பம் என்றெல்லாம் பிகு செய்யவில்லை அவர். அதுவே அவரின் நல்ல பண்பை எடுத்துக்காட்டியது அவருக்கு.
“அண்ணி” என்று வினயா அழைக்க “சொல்லுங்க” என்றாள்.
“என்னை வாங்க போங்கன்னா பேசுவீங்க. நான் உங்களை விட ரொம்ப சின்ன பொண்ணு அண்ணி, சும்மா பேர் சொல்லியே கூப்பிடுங்க”
“ஹ்ம்ம்”
“கொஞ்சம் உங்ககூட தனியா பேசணும் வாங்களேன்” என்றவள் “உங்க ரூம்க்கே போய்டலாம்” என்று அழைத்துச் சென்று கதவை அடைத்துவிட்டாள்.
“என்ன வினயா??”
“இருங்க” என்றவள் போனை எடுத்து என்னவோ செய்தவள் தன் தமையனை அழைத்திருந்தாள் போலும். “அண்ணா நீ சொன்ன மாதிரி செஞ்சுட்டேன், நீ சொன்ன மாதிரி செஞ்சுடணும் சரியா” என்று அவனிடம் கதை பேசினாள் அப்பெண்.
‘இவ என்ன அவருக்கு கூப்பிட்டிருக்கா??’ என்று சினமிகா யோசித்துக் கொண்டிருக்கும் போதே “அண்ணி அண்ணன் உங்ககிட்ட பேசணுமாம். அதுக்கு முன்னாடி உங்களை இந்த புடவையில பார்க்கணும்ன்னு சொன்னாங்க”
“இப்போ தான் போட்டோ சென்ட் பண்ணேன் அவங்களுக்கு. நீங்க இப்போ அவங்ககிட்ட பேசுங்க, நான் வெளிய போறேன்” என்று இவளிடம் போனை கொடுத்து நழுவினாள் அவள்.
சினமிகாவிற்கு என்ன பேச என்று தெரியவில்லை. உதிரனோ எதிர்முனையில் இருந்து இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன மேடம் என்கிட்டே பேசவே யோசிக்கறீங்க??” என்றான் அவன்.
“இல்லை அப்படிலாம் இல்லை” என்று தலையாட்டினாள் அவள்.
“அப்போ பேசு உன்னை பார்க்க தான் போன் பண்ண சொன்னேன். உன்னை நேர்ல பார்க்கவிடாம தடா போடுறாங்க. அதான் இப்படி ஐடியா பண்ணேன்”
“எதுவும் பேசவே மாட்டேங்கறீங்க?? நானே தான் பேசிட்டு இருக்கேன். நான் இப்பவும் உங்க கடையில வேலை பார்க்கற அதே உதிரன் தான்”
“இல்லை” என்று வேகமாக மறுத்து தலையாட்டினாள்.
“அப்போ நீயே சொல்லு நான் யாரு??”
நீங்க இப்போ எங்க வீட்டு மாப்பிள்ளை”
“உனக்கு நான் யாரு??”
‘அடடா இவர் என்ன இப்படிலாம் கேக்கறார், தெரிஞ்சுட்டே கேட்டா என்ன செய்ய’ என்று தவிப்பாய் பார்த்தாள் அவனை.
“கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டியா??”
“உங்களுக்கு தெரியும்”
“என்ன தெரியும்??”
“பதில்”
“அதை உன் வாயால தெரிஞ்சுக்கலாம்ன்னு தான் கேட்டேன்” என்றவன் அவள் ஊடுருவும் பார்வை பார்க்க தலை தாழ்ந்தாள் அவள்.
“உனக்கு பிடிச்சு தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா??” என்றான் சட்டென்று இறுகிய முகத்துடன்.
‘அச்சோ தப்பா நினைச்சுட்டார் போல’ என்றெண்ணியவள் நிமிர்ந்து அவனை பார்க்க அவன் இன்னும் அவளை பார்ப்பதை விடவில்லை.
அந்த பார்வையில் முகம் நாணியது அவளுக்கு. இருந்தாலும் அவனுக்கு பதில் சொல்லும் பொருட்டு தலையை மட்டும் ஆட்டினாள்.
“வாய் திறந்து சொல்லணும்”
“பிடிக்கும்”
“என்ன பிடிக்கும்??”
“உங்களை”
“ஹப்பா இந்த வார்த்தையை உன்கிட்ட இருந்து வாங்க இம்புட்டு நாளாச்சு. உங்கப்பா சொல்றாரோன்னு ஓகே சொல்லிட்டியோன்னு பயந்தேன், நல்ல வேளை இல்லை”
“உங்களுக்கு??”
“என்ன உங்களுக்கு??”
“உங்களுக்கு என்னை எப்படி பிடிச்சது??”
“அதை உன்கிட்ட நேர்ல சொல்லணும், நீ மிசஸ் சினமிகா உதிரனா வந்த பிறகு சொல்றேன்” என்று அவன் சொல்லவும் முகம் வாடியது அவளுக்கு.
“உங்கப்பா எங்க வீட்டுக்கு வந்து பேசும் போது உன்னை பிடிச்சுதா பிடிக்கலையான்னு எனக்கு தெரியலை. ஆனா இந்த கல்யாணம் வேணாம்ன்னு எனக்கு தோணலை. நான் சொல்றது உனக்கு புரியுதா”
அவள் தலையை ஆட்டினாள். “இப்படி சும்மா மந்திரிச்சு விட்ட ஆடு மாதிரி தலையை ஆட்டாம பதில் சொல்லுமா” என்று சொல்ல அதற்கும் அவள் உருட்டிய உருட்டலில் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“சொல்லுங்க”
“ஹ்ம்ம் அது” என்றவன் “அப்புறம் எங்கம்மா பதில் சொல்ல ஒரு மாசத்துக்கும் மேல டைம் எடுத்துக்கிட்டாங்க. அவங்களும் என்கிட்ட சொல்லவே இல்லை உங்கப்பாகிட்ட ஓகே சொல்லப் போறதா”
“இந்த பேச்சுக்கு அப்புறம் உன்னை கடையில பார்க்கணும் நினைச்சப்போ நீ கண்ணுலவே மாட்டலை. எப்படியாச்சும் பார்த்திடணும்ன்னு தான் ஏகாதசியை மனசுல வைச்சுட்டு கோவிலுக்கு வந்தேன்”
“என்னமோ அது வரைக்கும் எதுவும் தோணாதது கல்யாண பேச்சு வந்த பிறகு ஒரு ஆர்வம் உன்னை பார்க்கணும்ன்னு. பொண்ணுன்னு நான் எங்கயும் போய் பார்த்தில்லை”
“போட்டோல அம்மா காட்டியிருக்காங்க அவ்வளவு தான். சோ கோவில்க்கு உன்னை பார்க்கத்தான் வந்தேன்” என்று அவன் சொன்ன போது அப்படியொரு மலர்ச்சி அவள் முகத்தில்.
“ஆனா நீ உனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிட்டுன்னு சொன்னியா. எனக்கு புஸ்ஸுன்னு போச்சு, சரி நமக்கு கொடுத்து வைச்சது அவ்வளவு தான் போலன்னு வாழ்த்திட்டு வந்திட்டேன்”
“அப்புறம் நடந்தது எல்லாம் தான் உனக்கே தெரியுமே. ஆமா அன்னைக்கு கோவில்ல வைச்சு ஏன் அப்படி சொன்னே??”
“அது… அது உங்கம்மா என்கிட்ட பேசினாங்க அப்பாகிட்ட பேச முன்னாடி. அப்போவே என்கிட்ட சொன்னாங்க சீக்கிரமே வந்து வீட்டில பேசறேன்னு… அதான் கோவில்ல அப்படிச் சொன்னேன்…” என்றாள்.
“என்னது எங்கம்மாவா?? வாய்ப்பே இல்லை”
“நான் நிஜமா தான் சொல்றேன்” என்றவளின் பேச்சில் நிச்சயம் பொய்யில்லை.
“என்ன நடந்துச்சு??”
“எனக்கு போன் பண்ணாங்க??”
“எப்போ??”
“அதான் சொன்னேன்ல நடுவுல ஒரு டைம்”
“என்ன சொன்னாங்க??”
“உனக்கு என் பையனை பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க??”
“நீ என்ன சொன்னே??”
“பிடிச்சிருக்குன்னு சொன்னேன்”
“அப்புறம்”
“அப்போ தான் சொன்னாங்க. இப்போ நல்ல நாளா இல்லை நான் வந்து உங்கப்பாகிட்ட பேசறேன்னு சொன்னாங்க…”
“அதை வைச்சு நீ என்கிட்ட கோவில்ல அப்படி சொன்னியா. ஆனா எங்கம்மாவும் தான் ரொம்ப பிராடு எனக்கு எதுவும் சொல்லலை”
“உன்னை கல்யாணத்துக்கு அப்புறம் வைச்சுக்கறேன். எங்கம்மாக்கு இப்போவே கச்சேரி வைக்கறேன்” என்றான்.
“அச்சோ அவங்ககிட்ட கேட்க வேணாம்”

“கேட்பேன்… சரி அதை விடு, இது வினயா போன் ரொம்ப நேரம் பேச முடியாது. ஒழுங்கா உன் போன்ல இருந்து இப்போ நீ எனக்கு கூப்பிடுற ஓகே வா…” என்றுவிட்டு போனை வைத்தான் அவன்.
அவள் உடனே அவன் போனுக்கு அழைக்க “இப்போவாச்சும் கூப்பிட்டியே, அன்னைக்கு உன்கிட்ட சொல்லிட்டு தானே வந்தேன், போன் பண்ணுன்னு”
“நானே பண்ணவா??”
“வேற யாரு பண்ணுவாங்களாம்”
“நீங்க”
“நீ எந்த நேரத்துல ப்ரீயா இருக்கேன்னு எனக்கு எப்படி தெரியும். அதனால தான் உன்னை பண்ணச் சொன்னேன். நீ எப்போ செஞ்சாலும் நான் பேசுவேன்”
“இப்போ நான் என்ன செய்யணும்??”
“கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி போன் பேசறதே தனி சுகம் தான். அதையெல்லாம் இல்லாம பண்ணிடுவ போல, இவ்வளவு நாள் தான் விட்டாச்சு. இந்த ரெண்டு நாளாச்சும் ப்ளீஸ் ஒழுங்கா போன் பண்ணு”
“சரி” என்றவள் “வெளிய கூப்பிடுறாங்க நான் போன் வைக்கவா??” என்று கேட்க “சரி நேர்ல பார்ப்போம், உனக்காக காத்திட்டு இருக்கேன்”
“ஒரு நிமிஷம்… ஒரு நிமிஷம்…”
“உங்களுக்கு என்னை பிடிச்சுதா எப்படி??”
“அதான் சொல்லிட்டனே பிடிச்சதுன்னு எப்படின்னா என்ன அர்த்தம்”
“அ… அது…”
“தெளிவா கேளு பதில் சொல்றேன்”
“இல்லை நான் உங்க அளவுக்கு இல்லை”
“அப்படின்னா”
“உங்க உயரத்துல பாதி தான் இருக்கேன். உங்களை மாதிரி உருண்டு திரண்டு எல்லாம் இல்லை” என்று அவள் சொல்லிய தினுசில் அவனுக்கு சிரிப்பு வந்தது.
“ஹ்ம்ம் மேலே”
“அப்புறம் நீங்க நல்ல கலரு. நான் எல்லாமே குறைவு தான், அதான்”
“அழகுன்னா என்ன??”
“ஹான்…”
“அழகுன்னா என்னன்னு கேட்டேன்??”
“ஏன் இப்படி கேட்கறீங்க??”
“உன்னோட அழகு உன்னோட குணம். நான் கூட முதல்ல உன்னை பார்க்கறப்போ உன்னோட புற அழகை பார்த்து தான் கொஞ்சம் தள்ளி இருந்தேன். நீ என்னை பார்க்காம இருந்திருந்தா கூட உன்கிட்ட சாதாரணமா பேசி இருப்பேன்”
“ஆனா நீ என்னை எப்படியோ பார்ப்பியா அதனால நான் உன்னை ரொம்ப குறைவா நினைச்சேன். ஆனா அது அழகு இல்லைன்னு உன்கூட பேச பேசத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்”
“உன்னோட நிச்சயம் நின்னு போச்சு. உன்னோட கவலையெல்லாம் ஒதுக்கி ஓரங்கட்டி உங்கப்பாவுக்காக ஓடின பாரு. ரொம்ப பிடிச்சது அப்போ, அத்தனை பேரு கன்னாபின்னான்னு பேசினப்போ இதெல்லாம் என்னை பாதிக்காதுன்னு இருந்த பாரு. அந்த துணிவு அழகு”
“ஆஸ்பிட்டல்ல நீ தனியா சேர்ல தூக்கத்துல அப்பா அப்பான்னு அழுதிட்டே இருந்தே. அப்போவே மனசுக்கு எப்படியோ போச்சு. எனக்கு தான் அப்பா இல்லாம போய்ட்டாங்க, உங்கப்பாக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன் உனக்காக”
“ரொம்ப அழுதிட்டே இருந்தியா அதான் பக்கத்துல உட்கார்ந்து உன்னை என் மேல சாய்ச்சுக்கிட்டேன். அப்புறம் நீ எழுந்து கேட்கவும் சும்மா ஏதோ சொல்லி சமாளிச்சேன். இப்படி நிறைய உன்னோட குணம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதை அப்போ எனக்கு உணரத் தெரியலை, உங்கப்பா வந்து கேட்கவும் விட்றாதடான்னு உள்ள ஒரு குரல்”
“அங்க இருந்து தான் உன்னை பத்தி அதிகம் யோசிக்க ஆரம்பிச்சேன். என்னை பொறுத்தவரை உன்னை எனக்கு பிடிச்சது உன்னோட அக அழகுக்காக தான், எல்லாரையும் அனுசரிச்சு போற அந்த குணம் அதெல்லாம் பேரழகு தெரியுமா”
“அப்புறம் இன்னொன்னு நீ ஒண்ணும் நல்லா இல்லைன்னு நினைச்சுக்க வேணாம். லட்சணமா அம்சமா களையான முகம் தான் உனக்கு. எனக்கு அதுவும் பிடிச்சிருக்கு” என்று முடித்தான் ஒருவாறு.
அவன் சொல்லச் சொல்ல அவளுக்குள் சொல்ல முடியாத உணர்வு.
“ஹான் அப்புறம் மேடம் என்ன சொன்னீங்க நான் உருண்டு திரண்டு இருக்கேனா. என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது??”
“அடியாள் மாதிரி” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.
“அப்படியா இருக்கேன்”
“பின்னே இப்படி ஓங்கு தாங்கா நீள அகலமா இருக்கீங்க”
“இருந்தா அடியாள்ன்னு சொல்வியா”
“சாரி”
“சொல்லிக்கோ பரவாயில்லை. அடியாள் தான் என் மனையாளுக்கு மட்டும்” என்றுவிட்டு அவன் கண்ணடிக்க அவளுக்கு வியர்த்து போனது.
“நேரமாச்சு கூப்பிடுறாங்க” என்று சொல்லி தப்பிக்க பார்த்தாள்.
“எஸ்கேப் ஆக ட்ரை பண்ணுறே, பரவாயில்லை. என்கிட்ட வரும் போது என்ன பண்றேன்னு பாக்கறேன்” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.
“இன்னும் நீ இங்க என்ன பண்ணுறே” என்று வந்து நின்றாள் மேகா.
“கொஞ்சம் ரெடியாகிட்டு இருந்தேன்”
“அதான் அப்போவே ரெடி ஆகிட்டியே”
“சரி நீ எதுக்கு வந்தே??”
“நீ என்ன பண்ணுறேன்னு பார்க்கத் தான் வந்தேன்”
“சரி நீ போ நான் வர்றேன்”
“போன்ல பேசிட்டு இருந்த போல யார்கிட்ட??” என்றாள் அவள் விடாமல்.
“அவர் தான் பேசினார்”
“ரொம்ப முன்னேற்றம் தான் போ. பார்த்து பார்த்து இதுவும் புட்டுக்கப் போகுது” என்று சொல்ல சுருக்கென்று ஒரு வலி எழுந்தது சினமிகாவிற்கு.
தன் பொறுமையை இழுத்து பிடித்தவளாய் “உன்னோட வேண்டுதல் அது தான் போல” என்றாள் அவளும் பதிலுக்கு.
“இல்லையில்லை நான் அப்படி சொல்ல வரலை… அது…” என்றவள் “அம்மா கூப்பிட்டாங்க வா போகலாம்” என்றுவிட்டு வெளியேறினாள்.
கண்ணை மூடி வேண்டி நின்றாள் சினமிகா. அருகே ஏதோவொரு அரவம் கண் திறந்து பார்க்க பைரவர் இவளை பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த ரூமுக்குள்ள எப்படி என்று அவள் சுற்றும் முற்றும் பார்க்க இப்போது அவர் அங்கில்லை. இது கனவா என்று கண்ணை கசக்கியவள் சன்னல் அருகே சென்று பார்க்க அங்கே பைரவர் இவள் அறையை திரும்பி பார்த்தவாறே சென்றுக் கொண்டிருந்தார்.

Advertisement