Advertisement

6
சினமிகா கடைக்கு வந்து இருபது நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது. கடைக்கு வருபவர்கள் எல்லாம் அவளை கேட்காமல் செல்வதில்லை. ஏன் உதிரனுக்குமே அவள் வாராமல் என்னவோ போலிருந்தது உண்மை தான்.
அன்று தன் கையால் அவனுக்கு பால்கோவா செய்துக் கொடுத்திருந்தவள் அவன் அம்மாவிற்கு ஒரு டப்பாவில் அடைத்து கொடுத்து விட்டிருந்தாள். சீதாவும் அதன் ருசியை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்திருந்தார் மகனிடம்.
“தம்பி” என்ற வேலனின் குரலில் அவரை திரும்பி பார்த்தான் உதிரன்.
“சார் சொல்லுங்க சார்”
அவர் லேசாய் இதழ் வளைத்து புன்னகைத்தவர் “உங்கம்மாவை பார்க்கணுமே தம்பி” என்றார்.
“நாளைக்கு கூட்டிட்டு வர்றேன் சார்”
“இல்லை தம்பி நானே வந்து நேர்ல பார்க்கணும்”
“நீங்க பீரியா இருக்கும் போது சொல்லுங்க சார். நான் கூட்டிட்டு போறேன்”
“இப்போ போகலாங்கலா” என்று அவர் கேட்டிட ‘இவர் என்ன இப்படி கேட்கறார் அதுவும் இப்போவே. எங்கம்மாக்கு தேங்க்ஸ் எல்லாம் கூட அப்போவே போன்ல சொல்லிட்டாங்க தானே’ என்று யோசித்துக் கொண்டே அவனும் கிளம்பினான்.
“வண்டியில போய்டலாம் தம்பி” என்று அவர் சொல்ல அவரை பின்னால் ஏற்றிக்கொண்டு வண்டியை செலுத்தினான்.
இதோ அவன் வீட்டின் வாசலில் வந்து வண்டியை நிறுத்தியாயிற்று. ‘இவ்வளவு பெரிய வீடா’ என்று தான் பார்த்திருந்தார் வேலன்.
“சார் வீடு பெரிசு தான் பயந்திடாதீங்க. ஆனா இதை வைக்கவோ விக்கவோ அம்மாக்கு இஷ்டமில்லை. அதான் என்னால எந்த தொழிலும் பண்ண முடியலை” என்று அவரின் நினைப்புக்கு பதில் சொன்னான் அவன்.
“உள்ள வாங்க சார்” என்றவன் அங்கிருந்து கிளம்புமுன்னமே அவன் அன்னைக்கு அழைத்து அவர் வர இருக்கும் விஷயத்தை சொல்லியிருந்தான்.
இதோ அவரும் வந்து உள்ளே அமர்ந்திருக்க அங்கு கனத்த அமைதி. வந்ததுமே அவர் இப்படி கேட்பார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர்கள் முகபாவத்திலேயே தெரிந்தது.
ஏன் அவ்வளவு தூரம் அவரை அழைத்து வந்த சம்மந்தப்பட்டவனுக்கே அவர் கேட்டதில் அதிர்ச்சி தான்.
வேலன் வந்ததும் சீதா அவரை உபசரிக்க அதெல்லாம் முடிந்ததுமே பேச்சை ஆரம்பித்திருந்தார் அவர். “என்னோட பெரிய பொண்ணுக்கு உங்க பையனை கட்டித் தருவீங்களா??” என்று.
சீதாதேவி வாயடைத்து நின்றார் என்றால் உதிரனோ ‘என்னாது’ என்று அவரையே பார்த்திருந்தான்.
ஒருவாறு சுய உணர்விற்கு வந்த சீதா, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு “இவன் இதெல்லாம் என்கிட்ட சொல்லவேயில்லை” என்று மகனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார் அவர்.
“தம்பிக்கு நான் என்ன விஷயமா உங்களை பார்க்க வர்றேன்னு கூட எதுவுமே தெரியாதும்மா. அவங்களை கோவிக்காதீங்க. எனக்கு தான் நேரடியா அவர்கிட்ட பேசுறது முறையா தெரியலை”
“அதனால தான் உங்களை நேர்ல பார்த்து பேசிடலாம்ன்னு நானே வந்தேன்” என்றார் அவர்.
“சார் ஒரு நிமிஷம்” என்று இடையிட்டான் உதிரன்.
“சொல்லுங்க தம்பி”

“அம்மாகிட்ட கொஞ்சம் பேசிட்டு வர்றேன் சார்” என்றவன் தன் அன்னையை பார்க்க அவரை வெளியேவிட்டு தாயும் மகனும் உள்ளே சென்றனர்.
“என்ன உதிரா இதெல்லாம்??”

“அவர் தான் சொன்னார்லம்மா நிஜமாவே எனக்கு தெரியாது. ஆனா அவர் கேட்டதுல என்னம்மா தப்பு”

“என்ன சொல்றே உதிரா… அப்போ நீ அந்த பொண்ணை விரும்பறியா??”
“இல்லைம்மா இதுவரைக்கும் எனக்கு அப்படி எந்த எண்ணமும் இருந்ததில்லை”
“அப்போ அம்மா உனக்கு கல்யாணம் பண்ணிக்க வைக்க மாட்டேன்னு நீயே முடிவு பண்ணிட்டியே”
“அம்மா நான் அப்படி சொல்லலை. நீங்களும் எனக்கு ரொம்ப நாளா பொண்ணு பார்த்திட்டு தானே இருக்கீங்க. யாரு எனக்கு பொண்ணு கொடுக்கறேன்னு சொன்னாங்க”
“அதெல்லாம் சட்டுன்னு நடக்கற விஷயமில்லை உதிரா”
“சரிம்மா எல்லா வரனும் ஏன் தட்டிப்போச்சு நீங்களே சொல்லுங்க”
“ஜாதகம் செட் ஆகலை”
“அம்மா ஜோக் பண்ணாதீங்க. ஜாதகம் மட்டுமில்லை நானும் அவங்களுக்கு செட் ஆகமாட்டேன்னு தான் வேணாம்ன்னு சொன்னாங்க. என்னோட தகுதி என்னன்னு எனக்கு தெரியும்மா”
“உதிரா நீ என்ன சொல்ல வர்றே??”
“நாமா போய் கேட்கலை அவரா தானே கேட்டு வர்றார். எனக்கொண்ணும் தப்பா தெரியலை”
“அதுக்கு”
“சரின்னு சொன்னா…”
“டேய் உனக்கு புரியலையா. நீ தான் சொன்னல்ல அந்த பொண்ணுக்கு எந்த வரனும் சரியா அமையலை, நிச்சயம் கூட நின்னுப் போச்சுன்னு. அப்போவே தெரிய வேணாமா அந்த பொண்ணோட லட்சணம் என்னன்னு”
“அம்மா” என்று அதிர்ந்து கத்திவிட்டான் உதிரன்.
“என்னம்மா பேசறீங்க நீங்க?? அந்த பொண்ணு என்னம்மா தப்பு செஞ்சா… அவளை வேணாம்ன்னு நீங்க சொன்னா நான் எதுவும் சொல்லப் போறதில்லை அதைவிட்டு எதுக்கு இப்படி பேசறீங்க?? தப்பும்மா இனிமே இப்படி சொல்லாதீங்க. உங்களை மீறி நான் எதுவும் எப்பவும் செய்ய மாட்டேன்”
“உதிரா நீ சொல்ற மாதிரியே நான் ஓகே சொல்றேன்னு வைச்சுக்குவோம். அவங்க வேற ஆளுங்கப்பா, எப்படி இதெல்லாம் ஒத்து வரும்”
“அம்மா நீங்களா இப்படி பேசுறது, எனக்கு ஆச்சரியமா இருக்கும்மா. அப்பா அப்படி நினைச்சிருந்தா நீங்க இங்க வந்திருக்க மாட்டீங்களேம்மா. அப்பா உங்களை விரும்பி தானேம்மா கட்டிட்டு வந்தாங்க”
“அதனால தான் உதிரா சொல்றேன், அவரை அவரோட குடும்பத்துல எல்லாரும் ஒதுக்கி வைச்சுட்டாங்க. பார்த்தல்ல எப்படி இருக்க வேண்டிய நாம இப்போ எப்படி இருக்கோம்ன்னு”
“அம்மா அன்பான உறவுகள் நம்மை சுற்றி இருந்தா போதும். காசு, பணம், கவுரவம்ன்னு பார்த்து வர்ற எந்த சொந்தமும் உண்மையானதா இருக்காதும்மா. என்னோட இப்போதைய நிலை தெரிஞ்சும் என்னை நம்பி அவர் பொண்ணை கொடுக்கறேன்னு வந்து நிக்கறார்”
“அப்போ என் மேல அவருக்கு எவ்வளவு உறுதி இருக்கணும்”
“அதுக்காக நான் என்ன செய்யணும் உதிரா”
“முடிவெடுக்க வேண்டியது உங்க கையில விடுறேன். என்னோட கருத்தை சொன்னேன் அவ்வளவு தான். பாவம் அவர் ரொம்ப நேரமா வெளிய இருக்கார் நான் போறேன்” என்று நகர்ந்தான்.
வெளியில் வந்து அவரிடம் சாதாரணமாய் அவன் பேசிக்கொண்டிருக்க சில நொடிகளில் சீதாவும் வந்திருந்தார்.
“வந்து இதெல்லாம் சட்டுன்னு முடிவெடுக்க கூடிய விஷயமில்லை” என்று இழுத்தார்.
“தெரியுங்க, நீங்க யோசிச்சு சொல்லுங்க. நான் கிளம்பறேன், நல்ல முடிவா எதிர்பார்க்கறேன்” என்று சொல்லி அவர் எதிர்பார்ப்பை வைத்து அவர் எழ “உதிரா கூட்டிட்டு போ” என்றார் சீதா.
“இல்லைம்மா இருக்கட்டும் நானே போய்டுவேன்”
“அவன் தானே கூட்டிட்டு வந்தான் கூட்டிட்டு போவான்” என்று அவர் உறுதியாய் சொல்லிட அவர்கள் கிளம்பினர்.
——————–
தன்னை போல் மேலும் ஒரு மாதம் ஓடியிருந்தது. சீதாவிடத்தில் மேற்கொண்டு உதிரன் ஒன்றும் கேட்கவில்லை. வேலன் அவனிடம் எப்போதும் போலவே இருந்தார்.
உதிரனுக்கு என்னாகும் என்ற எதிர்பார்ப்பு. இதற்கிடையில் சினமிகாவை அவன் பார்த்து வெகு நாட்கள் ஆகிருது. அவளை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது அவனுக்கு.
அது அவளுடன் திருமண பேச்சு வார்த்தை வந்தினாலா அல்லது வேறு எதுவாவதா என்பதை அவன் அறிந்திட முற்படவில்லை.
காலண்டரில் ஏகாதசியை தேடினான். அவளை பார்த்துவிடும் எண்ணத்துடன். அவன் தேடிய நேரம் அது மறுநாளே வந்திருக்க மனதிற்குள் ஒரு உற்சாகம் பிறந்தது அவனுக்கு.
அன்று அவளைப் பார்த்த அதே நேரத்தை மனதில் ஓட்டிப்பார்த்து இதோ கோவிலுக்கும் வந்துவிட்டான். ஆனால் அவளை தான் காணவில்லை.
‘பெருமாளே சோதிக்காத என்னை, அவளை நான் பார்க்கணும்’ என்று மனதார வேண்டுதல் வைத்தான்.
அச்சமயம் அவளுமே உள்ளே வந்துக் கொண்டிருந்தாள். என்னவோ இதுநாள் வரை அவளை பார்க்காததில் மனதிற்குள் ஒரு ஆர்வம் வந்திருந்தது அவனுக்கு.
திடிரென்று அவள் முன்னே சென்று சென்றான். அதில் திடுக்கிட்டவள் அவனை கண்டதும் ஆசுவாசமாகி லேசாய் புன்னகைத்தாள்.
“ஏங்க உங்களை கடையில பார்க்க முடியலை??”
“இனிமே வர மாட்டேன் எப்பவும்??”
“ஏன்??”
“அப்படித்தான்”
“ஓ!!”
“அது உங்க அடையாளம்ன்னு சொன்னீங்க. அடையாளத்தை யாரும் துறக்க நினைப்பாங்களா” என்றான்.
“நான் துறக்கலை, ஒதுங்கி இருக்கேன்”
இன்னமும் சொன்னால் அது அதிகப்படியாய் இருக்குமோ என்று எண்ணி அமைதியானான்.
“அப்போ அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்??”
“கல்யாணம் தான்”
“உங்களுக்கு கல்யாணமா??” என்று அவளிடத்தில் கேட்கும் போது ஏதோவொரு ஏமாற்றம் அவனுக்குள் எழுந்தது.
“ஹ்ம்ம் ஆமா சீக்கிரமே நடக்கப் போகுது”
“வாழ்த்துகள்” என்று அவன் கரம் கொடுக்க “நன்றி” என்று கைகூப்பினாள்.
“சரிங்க நான் கிளம்பறேன்” என்றுவிட்டு நகர்ந்துவிட்டான் அவன்.
——————
“உதிரா நாளைக்கு வெளிய போகணும் நீ கொஞ்சம் லீவ் போடு” என்றார் சீதா.
“எங்கேம்மா??”
“சொன்னா தான் வருவியா??”
“சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்ல”
“நாளைக்கு தெரிஞ்சுக்கோ”
“அம்மா” என்று அவன் கத்திக்கொண்டிருக்க அவர் உள்ளே சென்றுவிட்டார்.
ஊஞ்சலில் சென்று அமர்ந்துக் கொண்டான். அதை ஆட்டிக்கொண்டே இருக்க மனம் சற்று அமைதியான உணர்வு. 
மறுநாள் காலையிலேயே எழுப்பிவிட்டார் சீதா. “எதுக்கும்மா இவ்வளவு சீக்கிரம். அதான் நான் லீவ் போட்டேன்ல பொறுமையா போலாம்”
“நீ போய் குளிச்சுட்டு கிளம்பி வா. முதல்ல கோவிலுக்கு போகணும், நல்ல வேட்டி சட்டை எடுத்து போடு” என்று சொல்ல முணுமுணுத்துக் கொண்டே கிளம்பினான்.
“பொங்கல் சாம்பார் வடை பண்ணியிருக்கேன் உனக்கு பிடிக்குமேன்னு” என்று அவன் குளித்துவிட்டு தயாராகி வந்திருந்த தன் மகனிடம் உணவு தட்டை நீட்டினார் அவர்.
இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் அவன் வண்டியிலேயே கிளம்பியிருந்தனர்.
உதிரன் தனக்கென தனியாக லோன் போட்டு வண்டி ஒன்றை எடுத்திருந்தான். அதில் தன் அன்னையை அமர சொல்லியவன் “எங்கம்மா போகணும் இப்போவாச்சும் சொல்லுங்க” என்றான்.
“திருவில்லிபுத்தூர் போகணும்”
“அங்க ஏன்??”
“கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னேன்ல” என்று அவர் சொல்ல அவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை. அன்னையின் பிடிவாதம் அவன் அறிந்தது தான்.
பேசாமல் வண்டியை கோவிலுக்கு விட்டான். கடவுளை சேவித்து அவர்கள் கிளம்பியிருக்க “உதிரா இந்த அட்ரஸ்க்கு போகணும்” என்று அவர் கொடுத்த முகவரி அவன் அறிந்த முகவரியே.
உள்ளே ஏதோவொரு உற்சாகம் பரவியது அவனுக்கு. இது அவன் நினைப்பதாக இருந்தால் கடவுளே என்று வேண்டிக்கொண்டே வண்டியை செலுத்தி அந்த வீட்டின் வாயிலில் நிறுத்தினான்.
உள்ளிருந்து வேலன் ஓடிவந்தார் உடன் பூந்தமிழும். “வாங்க… வாங்க…” என்று இருவருமே வரவேற்றனர்.
உதிரனுக்கு நடப்பதெல்லாம் கனவா நனவா என்றிருந்தது. தன் வாழ்க்கையில் இப்படியொரு மாற்றம் நடக்கும் என்று அவன் எதிர்பார்த்திருகக்வில்லை.
வேலையும் கொடுத்து தன் பெண்ணையும் கொடுக்க நினைக்கும் வேலன் பெரிய மனிதரே என்ற எண்ணம் தான் அவனுக்கு. அவர் நம்பிக்கையை பொய்க்காது தான் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டான் அந்த நேரம்.
“ரொம்ப நாள் காக்க வைச்சுட்டேன் நினைக்காதீங்க. நேரம் நல்ல நேரமா இல்லை. இவனுக்கும் இப்போ தான் நேரம் கூடி வந்திருக்கு”
“அதைதான் நீங்க மறுநாளே போன் பண்ணி சொல்லிட்டீங்களே” என்று வேலன் சொல்ல ‘இது எப்படி எனக்கு தெரியாம நடந்துச்சு’ என்று தன் அன்னையை பார்த்தான் உதிரன்.
“நான் மட்டுமே வந்திருக்கேன்னு நினைக்காதீங்க. இவங்க சித்தப்பா, அத்தைங்க எல்லாம் ரொம்பவும் பார்ப்பாங்க. அவங்களை எல்லாம் கல்யாணத்துக்கு கூப்பிடலாம்ன்னு இருக்கேன். இப்போ பொண்ணை பார்க்கலாமா??” என்றார்.
“நிச்சயமா” என்றவர் தன் மனைவியை பார்க்க அவர் சினமிகாவை அழைத்து வந்தார்.
——————–
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சினமிகாவை யாரோ தட்டி எழுப்ப விழித்து பார்த்தவளின் அருகே பைரவர்.
அவரை கண்டதும் அப்படியே எழுந்தவள் அவரின் பின்னேயே சென்றாள்.
சிறிது தூரம் சென்ற அவர் அழைத்து சென்றது ஒரு இருட்டறை அவளுக்கு அங்கு மூச்சு மூட்டும் போல இருந்தது. 
கும்மிருட்டு அறை தூசியும் தும்புமாய் இருந்தது அவளுக்கு வந்த தொடர்ந்த தும்மலில். இருட்டில் கையை துழாவியவள் எப்படியோ சுவரை பற்றியிருந்தாள்.
அங்கு சுவிட்ச் தெரிய அதை உமிழவிட அறைக்குள் வெளிச்சம் வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தகங்கள் சிதறிக்கிடந்தது.
அழகிய மரத்தாலான பெரிய குடுவை ஒன்று இருந்தது. அதில் நுணுக்கமான வேலைப்பாடுகள் தெரிந்தது. அதை தடவி பார்த்தாள்.
மெதுவாய் அந்த அறையை அவள் சுற்றிவிட்டு வெளியில் வந்து பைரவரை தேட அவர் எப்போதும் போல் அவளை சேர்ப்பிக்க வேண்டிய இடத்தில் விட்டு கிளம்பியிருந்தார்.
இவள் அறைக்கதவை பூட்டிவிட்டு திரும்பினால் அந்த பெரிய வீட்டின் கீழ் பகுதி தெரிந்தது. அவள் பின்னே காலடியோசை கேட்க அவளை பின்னிருந்து அணைத்தவனின் கரம் அவள் கரம் கொண்டவன் என்பதை உணர்த்தியது அவளுக்கு.
“சிமி இங்க என்ன பண்றே??” என்ற அவன் அழைப்பில் அப்படியே அவன் புறம் திரும்ப “என்ன அப்படி பார்க்கறே முழுங்குற மாதிரி”
அவள் இல்லையென்பதாய் தலையசைக்க அவனோ அவள் இதழ் சிறைப்பிடித்து தன் வசம் வைத்துக்கொள்ள அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் சினமிகா.
அவள் உதட்டை தொட்டுப் பார்க்க அது இன்னும் ஈரத்துடன் இருந்தது. இன்னமும் இதழில் குறுகுறுப்பு ஓடியது அவளுக்கு.
இன்னும் ஒரு வாரத்தில் சினமிகாவுக்கும் உதிரனுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.

Advertisement