Advertisement

5
“ஹலோ சார் இங்க என்ன பண்றீங்க??” என்ற சினமிகாவின் குரலில் பால்கோவா செய்வதை வேடிக்கை பார்க்க வந்த உதிரன் அவளை பார்த்து புன்னகை செய்தான்.
“சும்மா தாங்க பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன். ஆமா நீங்க என்ன பண்றீங்க இங்க?? பால்கோவா செய்ய போறீங்களா??”
“ஹ்ம்ம் ஆமா அதுக்கு தான் வந்தேன்…”
“நீங்க செஞ்ச பால்கோவா ரொம்ப ருசியா இருக்கும்ன்னு சார் சொன்னாங்க. டேஸ்ட்க்கு கொடுப்பீங்களா??”
“டேஸ்ட்க்கு வேணா கேளுங்க தர்றேன். ஐஸ் எல்லாம் வைக்க வேணாம்”
“நிஜமாங்க உங்க அப்பா தான் சொன்னாங்க. எனக்கு அது உண்மையா பொய்யான்னு தெரியாது”
“எல்லார் மாதிரி தான் நானும் செய்யறேன், புதுசா ஒண்ணுமில்லை அதுல” என்றவள் அந்த பாத்திரத்தை அனாயாசமாய் தூக்கி அடுப்பில் வைப்பதை ஆவென்று பார்த்தான் அவன்.
“ஆமா நான் தினமும் இங்க வந்து போறேன். இன்னைக்கு தான் நீங்க செய்யறதை பார்க்கறேன்”
“நான் எப்பவும் காலையில செய்யறதோட சரி. வீட்டில யாராச்சும் கேட்டா இப்படி இடையில வந்து ஒரு முறை செய்யறது தான்”
“ஓ அது தான் எனக்கு அந்த கொடுப்பினை கிடைக்கலையா” என்றவன் அவள் செய்வதையே பார்க்க அவனறியவில்லை மற்றவர்கள் இவர்களை கவனித்துக் கொண்டிருப்பதை.
பால் கேனை அவள் எடுக்கப் போக “இருங்க நான் ஹெல்ப் பண்றேன்” என்றவன் அவனே சென்று எடுத்து வந்தவன் “இதை ஊத்திடவா இல்லை வேற எதுவும் பக்குவம் இருக்கா??”
“ஊத்துங்க” என்றவளின் பதிலில் அதை அந்த பாத்திரத்தில் ஊற்றினான்.
அதில் சேர்க்க வேண்டிய மற்றவைகளை அவள் ஒருவரிடம் சொல்ல அவர் எடுத்து வந்து அருகில் வைத்துவிட்டு சென்றார்.
பால் சுண்ட சுண்ட அவள் ஏடுகளை தள்ளி தள்ளி விடாமல் கிளறிக் கொண்டிருந்தாள். ‘இப்படிலாம் கூட பொண்ணுங்க இருக்காங்களா, என்ன பொண்ணுடா இவ’ என்ற எண்ணத்தோடு பார்த்திருந்தான் அவளை.
ஆண்களுக்கு இணையாக அவ்வளவு பெரிய பாத்திரங்களையும் கரண்டியையும் அவள் கையாள்வது அவனுக்கு வியப்பாய். அருகில் வேறொருவர் பால்கோவா செய்துக் கொண்டிருப்பதை பார்த்தான்.
அவளும் அது போலவே தொடர்ந்து கிளறியதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கை வலிக்கும்ல என்று வேறு தோன்றியது. சில பல நிமிடங்கள் கரைந்திருந்தது.
ஏலக்காய் மணம் நாசியை நிறைக்க சற்று நேரத்தில் பால்கோவாவின் வாசமும் வந்திருந்தது.
“ஏங்க??” என்ற அவளின் குரலில் தான் இயல்புக்கு வந்தான்.
“சொல்லுங்க”
“இதை இறக்கி வைக்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று சொல்ல ஆளுக்கொரு புறமாய் பிடித்துக்கொண்டு பாத்திரத்தை இறக்கி வைத்தனர்.
“சூடா சாப்பிட்டு பார்க்கறீங்களா?? இல்லை ஆறினதும் சாப்பிடறீங்களா??”
“இப்போவே” என்றான் அவன் ஆர்வமாய்.
கொஞ்சம் எடுத்து ஒரு சின்ன தட்டில் வைத்து அவனிடத்தில் நீட்டினாள். கடையில் எப்போதும் இது போல சின்ன தட்டு வைத்திருப்பார்கள் அவர்கள்.
பெரிய ஆர்டர் எடுப்பவர்கள் டேஸ்ட் பார்க்க கேட்பார்கள் என்பதால் அவள் அப்படி வாங்கி வைத்திருந்தாள்.
அதன்பின் அவள் அவனை கண்டுக்கொள்ளாமல் பால்கோவாவை எடுத்து வைக்கும் வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருக்க “என்னங்க இப்படி பண்ணீட்டீங்க” என்று வந்து நின்றான்.
“என்ன சொல்றீங்க??”
“உங்க அப்பா சும்மா சொல்லலைங்க. உங்க கையில என்னமோ மேஜிக் இருக்கு”
“என்னா ருசிங்க அலாதியா இருந்துச்சுங்க”
“கொஞ்சம் ஓவர் தான்”
“நிஜமாங்க, எங்கம்மா சொல்வாங்க… ஒரே மாதிரி செய்யற சமையல் ஒவ்வொருத்தர் கைக்கு மாறுமாம். அது தாங்க கைமணம்ன்னு சொல்றது” என்று அவன் சொல்ல அவளுக்கு கூச்சமாக இருந்தது அவன் புகழ்ந்து பேசுவது.
இதுவரை யார் அப்படி சொல்லிய போதும் அதை கடந்து வந்திருந்தவளுக்கு அவன் கொடுத்த பாராட்டு பெரும் உவகை கொள்ளத் தான் செய்தது.
———————-
“அக்கா அக்கா”
“வா கோதை”
“வா என்ன அங்கிட்டே நிக்குற உள்ள வா. பால் வேணுமா??”
“இல்லைக்கா சும்மா உன்னைய பார்க்கத் தான் வந்தேன்” என்றவள் எதுவோ சொல்ல தயங்குவது போல் தோன்றியது.
“என்ன கோதை எதுவும் பணம் காசு வேணுமா??”
“இல்லைக்கா எப்போ என்ன உதவி கேட்டாலும் இல்லைன்னு தயங்காம செய்யறவங்க நீங்க”
“ஹ்ம்ம் சொல்லு”
“இல்லைக்கா வந்து ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். எனக்கு மனசே கேட்கலைக்கா அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்”
“என்ன விஷயம்??”
“சினா வீட்டில இருக்கா?? அவங்கப்பா??”
“எல்லாம் கடையில இருக்காங்க, நீ சொல்லு” என்று அவர் ஊக்க கோதை விஷயத்தை சொன்னாள்.
“அந்த அய்யமாரு தெருவுல நாலாவது வீட்டில இருப்பாங்களே அவங்க பேரு சித்…” என்று அவள் யோசிக்க “சித்ரா மாமியா??” என்று இவர் எடுத்துக் கொடுத்தார்.
“ஆமாக்கா அவங்க தான். அவங்க என்கிட்ட தானே பிளவுஸ் தைக்க கொடுக்க வருவாங்க. அவங்க நேத்து ஒரு மாதிரியா நம்ம சினாவை பத்தி சொன்னாங்க”
“என்ன சொல்றே??”
“இல்லைக்கா நம்ம சினா கோவில்ல நம்ம கடையில வேலை பாக்குற பையன் கூட யதார்த்தமா பேசிட்டு இருந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். அதை பாத்திட்டு வந்து அந்த மாமி என்கிட்ட ஒரு மாதிரியா சொல்லிட்டு போறாங்க”
“எனக்கு நம்ம சினாவை தெரியும்க்கா. ஆனாலும் விஷயம் உனக்கு தெரியணுமேன்னு தான் சொல்லி வைச்சேன்”
பூந்தமிழின் முகத்தில் சிந்தனை ரேகைகள். ‘இதென்ன புது வம்பு’ என்று தானிருந்தது அவருக்கு. ஏற்கனவே தன் பெண் ஊர் வாய்க்கு அவலாக தானிருக்கிறாள், இதில் இது வேறா என்றிருந்தது அவருக்கு.
அந்த மாமி பார்த்தது அன்னைக்கு நமக்கு உதவி செஞ்ச பையனா தான் இருக்கும். இல்லைன்னா சினா அவர்கிட்ட பேசியிருக்க வாய்ப்பே இல்லை. அவன் அன்று செய்த உதவி மறக்க முடியாதது தான்.
அதற்காக அவனுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் தான். ஆனால் தன் மகளின் வாழ்வா அவனா என்று வந்தால் மகள் தானே அவருக்கு முக்கியம். எதற்கும் தன் கணவரின் காதில் இதை போட்டு வைப்போம் என்று எண்ணிக் கொண்டிருந்தார் அவர்.
——————-
நீலவண்ணன் சொன்னது போலவே வந்து இறங்கியிருந்தான். என்ன இந்த முறை தன் மனைவியையும் உடன் அழைத்து வந்திருந்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
மேகா மதியத்திற்கு மேல் தான் வந்து சேர்ந்திருந்தாள். வந்ததுமே ஆரம்பிக்க விரும்பாத வேலன் அதை மறுநாள் காலைக்கு ஒத்தி வைத்திருந்தார்.
காலையில் செய்ய வேண்டிய வேலைகளை முடித்து வைத்துவிட்டு கடையை உதிரனிடமும் காசியிடமும் ஒப்படைத்துவிட்டு அவர் வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டு முடித்திருந்தார்.
‘இவரு எப்போ தான் பேசுவாரு, நாமே ஆரம்பிப்போமா’ என்று நீலவண்ணன் நினைத்திருக்க வேலனே பேச்சை ஆரம்பித்தார்.
“நீலா உன் பொண்டாட்டியையும் வரச்சொல்லு பேசிடலாம்” என்று அவர் சொல்ல மேகாவோ “என்னப்பா என்ன விஷயம் பீடிகை எல்லாம் பலமா இருக்கு”
“சொத்து விஷயம் பேசி முடிவு பண்ணலாம்ன்னு” என்றார் அவர்.
“அதுக்கு இப்போ என்னப்பா அவசரம்??”
“அவசரம்ன்னு இல்லை பண்ணிடலாம்ன்னு மனசுக்கு தோணுதும்மா” என்றார் அவர்.
சினமிகா எதுவும் பேசவில்லை அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்திருந்தாள். தமிழ் தான் “அதானே எதுக்கு இப்போ அவசரமா இதை செய்யணும் நினைக்கறீங்க. இன்னும் பெரியவளுக்கு முடிக்காம இருக்குல்ல”
“நான் நல்லா இருக்கும் போதே அதெல்லாம் சிறப்பா செஞ்சிடுவேன் தமிழ் கவலைப்படாதே” என்று சொல்லிட தமிழுக்கு கண்கள் கலங்கிவிட்டது.
“நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க??”
“கொஞ்சம் எல்லாரும் பேசாம இருந்தா நான் சொல்ல வர்றதை சொல்லிடுவேன்” என்று சொல்ல அங்கு அமைதி மட்டுமே.
“இந்த வீடு எங்க ரெண்டு பேர் காலம் வரைக்கும் யாரும் விக்கவோ ஆளவோ முடியாது. எங்க காலத்துக்கு அப்புறம் இதை மூணா பிரிச்சு எழுத சொல்லிட்டேன்”
“மூணாவா??” என்றான் நீலவண்ணன்.
“ஹ்ம்ம் அப்போ எத்தனை பங்கு போடணும்ன்னு நீ நினைக்கிறே??”
“இதுல நினைக்க என்னப்பா இருக்கு. எனக்கு தானே இந்த வீடு வரணும். கடைசி வரைக்கும் உங்களை வைச்சு காப்பாத்த போறது நான் தானே” என்று சொல்ல சத்தம் போட்டு சிரித்தார் வேலன்.
“ஒருத்தன் சாகக் கிடந்தேன். கூட பிறந்தவளோட நிச்சயம் நின்னு போச்சு, அதெல்லாம் முக்கியமில்லைன்னு விட்டா போதும்ன்னு ஓடினவன் நீ எங்களை வைச்சு காப்பாத்த போறியா” என்று பார்த்தார் மகனை.
“அப்பா அன்னைக்கு எனக்கு முக்கிய வேலை வந்திடுச்சு அதான் கிளம்பிட்டேன்” என்றான் அவன்.
“சரிப்பா அப்போ வேலை வந்திட்டு ஆனா அதுக்கு அப்புறம் கூட நீ வந்து என்னை பார்க்கலையே… நான் அதெல்லாம் எதிர்பார்க்கலை அந்த பேச்சு வேணாம். கூட பிறந்தவ கல்யாணம் நின்னுச்சு அது கூட உனக்கு முக்கியம் இல்லைல”
“என்ன பேசறீங்க நீங்க?? இவளை தினமும் ஒருத்தன் வந்து பார்த்திட்டு பிடிக்கலைன்னு போறான். அதுக்கு நான் என்ன பண்ண முடியும்”
“நீங்க நல்ல மாப்பிள்ளையா பார்க்கறதை விட்டு என்னை குறை சொன்னா எப்படி??” என்ற உடன் பிறந்தவனின் பேச்சில் நொறுங்கி போனாள் சினமிகா.
“ஏன் நீ நல்ல மாப்பிள்ளையா பார்க்கறது. உனக்கும் அந்த கடமை இருக்கு தானே” என்று அவர் சொல்லிட “அதுக்கு நீங்க அழகான பொண்ணை பெத்திருக்கணும், என்னமோ மாட்டு கொட்டகையை கிளீன் பண்ணுறதும் வீட்டு வேலை பார்க்கறதும் மட்டுமே கவுரவும்ன்னு நினைச்சு வளர்த்து வைச்சீங்க அவளை”

“படிப்பாவது எங்களை மாதிரி படிச்சாலா அதுவும் இல்லை. தமிழ் படிக்கறாளாம் இவளை எல்லாம் என்ன சொல்ல” என்று அவன் தொடர்ந்து பேசிட வேலன் அவனை நோக்கி கையை நீட்டிவிட்டார்.
“என் பொண்ணை பத்தி பேச உனக்கென்ன தகுதி இருக்குடா. இனி ஒரு வார்த்தை அவளை பத்தி பேசினே இங்கவே உன்னை வெட்டி போட்டிருவேன். உன்னையலாம் பெத்து வளர்த்து படிக்க வைச்சி ஆளாக்கிவிட்டா நீ பேசிட்டே இருப்பியோ”
“என்னத்த பெத்து வளர்த்தீங்க… இந்த அடுப்படியில வந்திட்டு நான் எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேன்னு எனக்கு தான் தெரியும். சும்மா ஒண்ணும் நான் இப்போ இந்த இடத்துல இல்லை”
“நான் படிச்சு கேம்பஸ்ல செலக்ட் ஆகி இந்த உயரத்துல இருக்கேன்” என்றான் அவன் பெருமிதமாய்.
“அந்த படிப்பை உன்னை நான் படிக்க வைக்கலைன்னா நீ எப்படி படிச்சிருக்க முடியும். உன்னைய படிக்க வைச்சது என்னோட தப்பு தான்” என்றார் அவர் காரமாய்.
“அம்மா இவர் என்ன இப்படில்லாம் பேசிட்டு இருக்கார். கூப்பிட்டு அசிங்கப்படுத்தறார் எங்களை. என் பொண்டாட்டி முன்னாடியே அடிக்கறார் பேசறார் நான் பேசாமலே இருக்கணுமா” 
“எங்களை எதுக்கு போன் போட்டு வரச் சொன்னார் அதை முதல்ல சொல்லச் சொல்லுங்க. நாங்க ஊருக்கு கிளம்பறோம்” என்று குதித்தான் அவன்.
“நீ கிளம்பறதுன்னா தாராளமா கிளம்பலாம்”
“அப்பா”
“நான் சொல்ல வர்ற விஷயத்தை கேட்கணும்ன்னா வாயை மூடிட்டு இருக்கணும், கேட்க பிரியப்படலைன்னா கிளம்பிட்டே இருக்கலாம்” என்று சொல்லிட அங்கு அமைதி.
“வீட்டை பத்தி சொல்லிட்டேன். அடுத்து இங்க இருக்க தோட்டம் அதை ரெண்டா பிரிச்சு உனக்கும் மேகாக்கும் எழுதியாச்சு”
“அவளுக்கு எதுக்கு எனக்கு புரியலை. பொண்ணுங்களுக்கு தான் கல்யாணம் பண்ணி நகை எல்லாம் போட்டு அனுப்பறீங்கல்ல அப்புறம் எதுக்கு சொத்து வேற. அதுவும் எல்லாத்துலயும் பங்கு கொடுக்கணுமா”
“அண்ணா அப்பா உனக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிருப்பார். உன் கல்யாணம் நடந்தாலும் அதே செலவு தான் ஆகியிருக்கும். நீ அந்த வாய்ப்பை கொடுக்கலை, சோ நீ அதைப்பத்தி பேசாத” என்று திருப்பிக் கொடுத்தாள் மேகா.
“அதான் எனக்கு முடிக்கலைல அப்போ எனக்கு தானே நிறைய வரணும்” என்று அவன் பேச இப்படி ஒரு பிள்ளை என் வயிற்றில் தான் உதித்தானா என்று பூந்தமிழும், இவன் என் பிள்ளையே இல்லை என்று வேலனும் நினைத்தனர்.
சுயநலத்தின் மொத்த உருவமாய் நீலவண்ணன் எப்படி வந்தான் என்று யோசித்தவருக்கு தன் அன்னையின் முகம் வந்து போனது.
சிறு வயதில் ஆண்பிள்ளைக்கு தான் அனைத்தும் என்று சொல்லி வளர்த்த அவர் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் மகன் அந்த பேச்சை மட்டும் மனதில் நன்றாகவே உருவேற்றி இருக்கிறான் என்று இப்போது புரிந்தது அவருக்கு.
நீலவண்ணன் ஒரு வகை என்றால் மேகா மற்றோரு வகை சுயநலம். நீலவண்ணன் அவனுக்கும் தன் மனைவிக்கும் என்று நினைக்கும் அளவிற்கு சுயநலம் என்றால் மேகா வேறு ரகம்.
அவளுக்கு சொத்து ஒரு பக்கம் என்றால் அனைவரும் தனக்கு வேண்டும் என்று நினைக்கும் ரகம். ஏன் அவள் சினமிகாவை கூட பேசுவாள் தான் ஆனால் அவளை ஒரேடியாய் ஒதுக்கி தள்ளவென்று எப்போதும் அவள் நினைத்திட்டதில்லை.
ஆளாளுக்கு ஒரு மனவோட்டத்தில் இருக்க வேலனோ “கடையை சினாக்கு கொடுக்கலாம்ன்னு இருக்கேன்” என்றார் அவர்.
மேகா அதற்கு பெரிதாய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அது தனக்கு தெரியாத வேலை அது தெரிந்தவர்க்கு செல்வது தானே நியாயம் என்ற எண்ணத்தில் அவள் அமைதி காத்தாள்.
நீலவண்ணனோ “அதெப்படி நல்ல லாபம் வர்ற அந்த கடையை மொத்தமா அவ பேருக்கே எழுதி வைச்சுடுவீங்களா. இதென்ன நியாயம்??” என்று பாய்ந்து வந்தான்.
“அப்போ கடையை நீயே நடத்திக்கோ எனக்கு அது வேண்டாம்” என்று முதல் முறையாய் வாயை திறந்திட்டாள் சினமிகா.
“என்னை என்ன உன்னைய மாதிரி அடுப்புல வெந்து கரிகட்டை மாதிரி ஆகச் சொல்றியா??” என்று கேட்க தமிழ் அவனை அடிக்க கை ஓங்கிவிட அருகில் நின்றிருந்த மருமகள் முறைத்ததில் ஓங்கிய கையை இறக்கிவிட்டார்.
“உன்னால அடுப்புலையும் வேக முடியாது. ஆனா கடை மட்டும் உனக்கு வேணுமா??”
“ஆமா அதுல நல்ல லாபம் வரப் போய் தானே நீங்க வீடு வாசல் தோட்டம் துரவுன்னு எல்லாம் வாங்குனீங்க”
“சரி நீயே சொல்லு அதுல எவ்வளவு லாபம் வருது”
“எனக்கெப்படி தெரியும்”
“நீ தானே சொன்னே நல்ல லாபம் வருதுன்னு”
“இப்போ என்ன சொல்ல வர்றீங்க??”
“அப்பா நான் பேசிக்கறேன்” என்ற சினமிகா “உன்னை யாரும் அடுப்புல வேகச் சொல்லலை. கடை எனக்கு வேணவும் வேணாம். அதை நீயே பார்த்துக்கோ”
“நான் எப்படி பார்க்க முடியும்??”
“ஆளை வைச்சு பார்த்துக்கோப்பா. எம்புட்டு படிப்பு படிச்சவன் நீ, உன்னை தேடி வந்து வேலையெல்லாம் கொடுத்து கூட்டிட்டு போனாங்கன்னா நீ எவ்வளவு பெரிய ஆளு”
“உன்னால முடியாதா என்ன??”
“அக்கா”
“என்ன??”
“அண்ணாவால எப்படி பார்க்க முடியும். நீ எதுக்கு இப்படி பேசறே??”
“சரி அப்போ நீயே பார்த்துக்கோ”
“என்னக்கா உன்னால மட்டும் தான் பார்க்க முடியும்ன்னு திண்ணக்கத்துல பேசறியா” என்று அவளும் வாயை விட்டாள்.
“அப்பா இந்த நிமிஷம் சொல்றேன் எனக்கு அந்த கடை வேணாம். நீங்க கடையை வித்துடுங்க. ஆனா உங்களோட பேரை நான் காப்பாத்துவேன்ப்பா, நம்ம அடையாளத்தை நான் தொலைக்க விடமாட்டேன்”
“எனக்கு பெரிய சொத்து நீங்க சொல்லிக் கொடுத்தது தான்ப்பா. அதை எப்படி உபயோகப்படுத்தணும்ன்னு எனக்கு தெரியும் நான் பார்த்துக்கறேன்”
“சினா” என்றார் வேலன் வேதனையான குரலில்.
“எதுக்கு நீ இப்போ சும்மா சீன் போடுற, வேணுமின்னா ஒண்ணு செய்யலாம். நீயே கடையை பார்த்துக்கோ அதுல பாதி லாபத்தை நீ எடுத்துக்கோ மீதியை எனக்கு கொடுக்கணும்” என்று புது சட்டம்  பேசினான் நீலவண்ணன்.
“இங்க பாரு உனக்கு வேணும்ன்னா நீ பாரு. இனி எனக்கும் கடைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் சினமிகா.
வேலன் தன் மனதிற்குள் ஒரு முடிவெடுத்தவாராய் கடையை விற்க ஏற்பாடு செய்தார். 
“உங்க பொண்ணு ரொம்ப தான் பண்ணுற, நல்ல வியாபாரம் பண்ணுற கடையை விக்க வைச்சுட்டல்ல” என்று பேசிவிட்டு அவன் தன் மனைவியுடன் ஊருக்கு சென்றுவிட்டான்.

Advertisement