Advertisement

4
“சார்” என்று உதிரன் அழைக்க திரும்பி பார்த்தார் வேலன்.
“உங்ககிட்ட ஒரு சின்ன சஜஷன் சொல்லலாமா”
“சொல்லுங்க”
“இல்லை நான் வந்து அதிகப்பிரசங்கித்தனமா பேசுறேன்னு நினைக்காதீங்க சார். எனக்கு தோணினதை சொல்றேன்”
“நம்ம கடையில எல்லாம் அளவுவாரியா பிரிச்சு தான் பேக்கிங் பண்றோம்”
‘என்ன சொல்ல வர்றாரு’ என்று தான் பார்த்தார் வேலனும்.
“அதையும் விட சின்ன சைஸ் பேக்கிங் பண்ணலாம்ல சார். அதவாது பத்து ரூபாய் பதினஞ்சு ரூபாய்ன்னு இந்த சைஸ்ல”
“அதுல பெரிசா என்ன கிடைக்கும் தம்பி. அது வியாபாரம் ஆவாதுங்களே”
“இல்லை சார் நீங்க தப்பா நினைக்கறீங்க. எனக்கு தெரியும் அது பெரிய அளவுல லாபம் இருக்காதுன்னு ஆனா நல்ல ரீச் கொடுக்கும் சார். அதை வாங்கி சாப்பிட்டு பார்க்கறவங்க நிச்சயம் நம்மோட பெரிய சைஸ் பாக்கெட்ஸ் வாங்குவாங்க”
“தவிர குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க, வேஸ்ட் ஆகாது இப்படி நிறைய இருக்கு சார்” என்று நீண்ட விளக்கமாய் சொன்னான் அவன். ஆனாலும் வேலன் இதெல்லாம் சரியாய் வருமா என்று தான் பார்த்தார்.
“ஒரு நிமிஷம் தம்பி” என்றவர் “அம்மாடி” என்றழைத்திட “இதோ வர்றேன்ப்பா” என்று அவள் உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
“சார் அவங்க பேரு என்ன??”
“சினமிகா”
“அப்படியொரு பேரா?? புதுசா இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம் சார்??”
“அவளே வருவா அவகிட்ட கேட்டுக்கோங்க” என்றார் அவர். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் வந்துவிட “சொல்லுங்கப்பா” என்றிருந்தாள்.
அவரும் உதிரன் சொல்லியதை சொல்ல “நல்ல ஐடியா தானேப்பா அதுக்கு எதுக்கு யோசிக்கறீங்க. அவர் சொல்றது எனக்கும் சரின்னு தான் தோணுது”
“இல்லைம்மா வந்து…”
“எதுக்குப்பா வந்து போயின்னு இழுக்கறீங்க??”
“நீ சரின்னு சொல்றியாம்மா??” என்று மீண்டும் கேட்க அவள் தலையசைக்க அடுத்து அவன் சொன்னது போல பேக்கிங் செய்யப்பட்டு கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
“தம்பி நீங்க சொன்னீங்களேன்னு தான் செய்யறேன். பால்கோவா எல்லாம் மத்த ஸ்வீட் மாதிரி இல்லை. சீக்கிரம் கெட்டுப்போகக் கூடியது. அதுல நம்ம தேதி எல்லாம் போட்டிருக்கோம்”
“குறிப்பிட்ட தேதிக்குள்ள விக்கலைன்னா எல்லார் பொழைப்பும் போகும்ப்பா” என்று அன்றே அவருக்கு தோன்றிய தன் சந்தேகத்தை கேட்க அவனோ லேசாய் சிரித்துவிட்டு அவருக்கு விளக்கம் சொன்னான்.
“சார் நான் அதெல்லாம் யோசிக்காமலா சொல்லியிருப்பேன். நீங்க நமக்கான லாபத்தை கொஞ்சம் குறைச்சு வைங்க. ஆனா அதுல போடுற விலையை கடைக்காரருக்கு கட்டுப்படியாகுற மாதிரி போடுங்க”
“பொருள் கெட்டுப்போனாலும் அவருக்கு முடிஞ்ச அளவு லாபம் கிடைச்சா அவருக்கும் சந்தோசம். நமக்கும் சந்தோசம் தானே… தவிர எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கு நம்ம கடை பால்கோவா நல்லா போகும்ன்னு”
“சாப்பிட்டு பார்த்தீங்களா தம்பி” என்றார் அவர் ஆர்வமாய்.
“ஒரு நாள் காசியண்ணே கொடுத்தார் சார், செம டேஸ்ட்” என்றான் சிலாகித்து.
“நீங்க என் பொண்ணு செஞ்சதை சாப்பிட்டு பார்க்கலை, அது அதைவிட ருசியா இருக்கும்” என்று சொல்ல இவனோ எல்லாம் ஒரே ருசி தானே என்று எண்ணிக் கொண்டான்.
“நீங்க நம்பலைன்னு நினைக்கிறேன்”
“அப்படிலாம் இல்லை சார்” என்றிருந்தான்.
அவன் சொன்னது போல புது வாடிக்கையும் வந்தது, முன் செய்ததை விட கூடுதலாய் அவர்கள் டெலிவரி செய்யும்படியும் ஆனது.
அவனின் திறமை கண்ட வேலன் அவனை டெலிவரிக்கு அனுப்புவதில்லை. கடையிலேயே அமர்ந்திக்கொண்டார், சென்ற வாரத்தில் இருந்து கம்ப்யூட்டரில் பில் போடும் முறையை புகுத்தியிருந்தான்.
அவனே பொறுப்பாக இருப்பதால் அவர் அதை அவனிடத்திலேயே விட்டுவிட்டார்.
இதோ இப்போதும் கூட ஒரு புது திட்டத்தோடு தான் அவர் முன் நின்றான். அவனின் ஆர்வம் அவருக்கு புத்துணர்ச்சியை கொடுத்த போதும் இதெல்லாம் எதற்கு?? அதற்கு என்ன பெரிதாய் பலன் இருக்கப் போகிறது என்ற எண்ணத்தில் அவர் உழல அவன் அவர் தோளை தட்டினான்.
“வேணாம் தம்பி இன்னொரு பிரான்ச் எல்லாம் வைச்சு நான் என்ன பண்ண போறேன்” என்று அவர் விட்டேத்தியாய் சொன்னார்.
உதிரன் அவரிடத்தில் ராஜபாளையத்திலும், சங்கரன்கோவிலிலும் அவர்கள் கடைக்கென்று புது பிரான்ச் ஆரம்பிப்பது பற்றித் தான் பேசியிருந்தான். 
அவன் பேச்சுக்கு அவர் செவி சாய்த்ததில் அவனுக்குள்ளும் ஒரு ஆர்வம் வந்திருந்தது அந்த வேலையில். அதை இப்படி செய்தால் நன்றாய் இருக்குமா அப்படி செய்தால் நன்றாய் இருக்குமா என்று அவன் நிறைய யோசித்து ஒவ்வொன்றாய் தான் அவரிடம் சொல்லி மாற்றிக் கொண்டிருந்தான்.
இன்னமும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வைக்கும் எண்ணம் கூட அவனிடத்தில் உண்டு தான். ஆனால் அதைப்பற்றி அவரிடம் இன்னமும் சொல்லியிருக்கவில்லை.
இன்னொரு பிரான்ச் என்றதெற்கே அவர் யோசிக்கிறாரே என்று நினைத்து அமைதியாய் அவரை பார்த்தான்.
“நீங்க வேணா உங்க பொண்ணுகிட்ட பேசிப் பாருங்க சார்” என்று அவன் சொல்ல “அவகிட்ட என்ன தம்பி கேட்கிறது இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு அவ” என்று அவர் பேச ‘இவர் என்ன இப்படி பேசறார்’ என்று பார்த்தான் அவன்.
எதையும் மகளை கேட்காது செய்ததில்லை அவர். இப்போது இப்படி சொல்கிறார் என்று தானிருந்தது அவனுக்கு.
இவர்கள் விவாதத்தை தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு தானிருந்தாள் சினமிகா. அவர்கள் பேசுவது காதில் விழவில்லை என்றாலும் எதுவோ சொல்கிறார்கள் என்று எண்ணி அருகே வந்தாள்.
“என்னப்பா??”
“ஒண்ணுமில்லைம்மா”
“நீங்க என்ன சொன்னீங்க??” என்று நேரடியாக அவனை பார்த்தே கேட்டாள் அவள்.
“நான் சாரை எதுவும் சொல்லலைங்க”
“அச்சோ நான் அந்த அர்த்ததுல கேட்க வரலை. நீங்க என்ன பேசிட்டு இருந்தீங்க. அப்பா திடீர்ன்னு இப்படி இருக்கார் அதான் கேட்டேன்”
அவனோ அவரை பார்த்தான் சொல்லவா என்பது போல். அவர் விழியசைவில் அவரிடம் பேசியதை சொல்ல “நல்ல விஷயம் தானேப்பா எதுக்கு யோசிக்கறீங்க. பணத்துக்காகவா??”
“இல்லைம்மா”
“என்ன யோசனைப்பா உங்களுக்கு??”
“எதுக்கும்மா இதெல்லாம்??”
“ஏன் அப்படி சொல்றீங்க??”
“நான் இருக்க வரைக்கும் தான்ம்மா இந்த கடை இருக்கும். அதுக்கு பிறகு யாரும்மா பார்ப்பாங்க. உன் தம்பி இந்த தொழில் வேணாம்ன்னு தான் ஊரைவிட்டே போய்ட்டான்”
“உன் தங்கைக்கு கல்யாணம் முடிஞ்சது, நாளைக்கு உனக்கும் கல்யாணம் முடிஞ்சு போய்டுவ, அப்புறம் எதுக்கும்மா இதெல்லாம் விஸ்தரிச்சுட்டு” என்று அவர் சொல்லவும் அவர் எதற்காய் அப்படி பேசினார் என்றே உதிரனுக்கு புரிந்தது.
“எங்க தாத்தா எங்கப்பாவுக்கு கத்துக் கொடுத்தார். அப்பா வீட்டிலவே செஞ்சு விக்க ஆரம்பிச்சார். நான் அப்பாகிட்ட தொழிலை கத்துக்கிட்டு ஒரு சின்ன கடையை ஆரம்பிச்சேன்”
“கடவுளே புண்ணியத்துல எந்த குறையும் இல்லைம்மா இப்போ வரைக்கும். எனக்கப்புறம் இதெல்லாம் இப்படியே போய்டும்ன்னு நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”
“அதை மேல மேல பெரிசாக்கி என்ன செய்யப் போறேன் நானு. நான் இருக்க வரை இந்த கடை இருக்கும், என்னால முடியாத தருவாயில யாருக்காச்சும் கடையை வித்திட்டுவேன்” என்று அவர் சொன்ன போது அப்படியொரு வலி இருந்தது அந்த குரலில்.
அதை அங்கிருந்த மற்ற இருவருமே உணர்ந்திருக்க சினமிகா பேச ஆரம்பித்தாள். “அப்பா இந்த கடையை என்னை நம்பி கொடுப்பீங்களாப்பா??” என்றாள் அவள்.
“நீ எப்படிம்மா?? தவிர நாளைக்கு உன் தம்பி வந்து என்ன சொல்லுவான்னு எனக்கு தெரியலை. அவன் பேச்சு செயல் எதுவுமே சரியில்லைம்மா”
“அப்பா அவன் நடத்துறதா இருந்தா அவனே நடந்தட்டும், நான் குறுக்க வரமாட்டேன். நீங்க யாருக்கோ கொடுப்பேன்னு சொன்னீங்க அதுல எனக்கு உடன்பாடு இல்லை”

“நான் பார்த்துப்பேன்னு உங்களுக்கு ஏன்பா தோணலை?? இது நம்ம தொழில் அப்படிங்கறதை தாண்டி இது நம்மோட அடையாளம்ப்பா, இதை எப்படிப்பா நான் விடமுடியும்”
வேலன் மனதிற்குள் எதுவோ யோசித்தார். அதை அவர் செயல்படுத்தும் நாளன்று வீட்டில் பெருத்த சச்சரவு வரும் என்று அறிந்தே அதற்கு எல்லாம் தயார் செய்தார். 
அன்று நீலவண்ணன் பேசும் பேச்சில் தன் மகள் காயப்படுவாள் என்று யோசித்திருந்தால் அவர் அதை செய்திருக்க மாட்டாரோ?? என்னவோ??
——————–
அன்று ஏகாதசி சனிக்கிழமை என்பதால் கூடுதல் சிறப்பாய் இருந்தது. சினமிகா பெருமாளை சேவித்துக் கொண்டிருந்தாள் மனமுருக.
அவள் கடையில் இருந்து கிளம்பிய போதே கண்டுவிட்டிருந்தான் உதிரன். கோவிலுக்கு தான் செல்வாள் என்றறிந்ததும் கடையில் சொல்லிவிட்டு அவனுமே கிளம்பியிருந்தான்.
அன்று மருத்துவமனையில் உடனிருந்து அத்துனையும் செய்த அவனுக்கு வேலனும் பூந்தமிழும் நேரிலேயே வந்து சிறப்பு செய்திருந்தனர்.
மகன் கூட இருந்து செய்யாதை அவன் செய்ததில். எப்போது அவனை பார்த்தாலும் பூந்தமிழுக்கு கண்கள் கலங்கியே விடும்.
தன் கணவரை கையில் தூக்கிக்கொண்டு விரைந்தவனை நினைத்தால் அன்றைய நாளும் அதை தொடர்ந்த நினைவுகளும் தான் எப்போதும் அவருக்கு தோன்றும்.
அந்த நிகழ்வுக்கு பின்னர் உதிரனும் சினமிகாவும் அவ்வப்போது பேசிக்கொண்டனர். நன்றாக பேசிக்கொள்ளும் அளவு இல்லையென்றாலும் அவனிடத்தில் அவளுக்கும் அவளிடத்தில் அவனுக்கும் ஒரு நல்ல எண்ணம் இருந்தது.
அவனுக்கு அவளின் பெயரை குறித்த விளக்கம் வேண்டும். அன்று அவளின் அப்பா சொன்னதில் இருந்தே அதையே யோசித்துக் கொண்டிருந்தான்.
கடையில் வைத்து அவளிடம் தனியே பேச ஒரு மாதிரியாக இருந்தது. அனைவர் முன்னிலும் பேச அவனுக்கு தயக்கம் இருந்ததில்லை.
ஏனோ அவளிடத்தில் அதிக உரிமை எடுத்து பேசுவதாக மற்றவர்கள் நினைத்துக்கொண்டால் அதனால் தான் இதோ அவளின் பின்னேயே கோவிலுக்கும் சென்றிருந்தான்.
அவள் கடவுளை வேண்டி அங்கிருந்து நகர்ந்து சென்றிருக்க இவன் வேண்டுதல் முடித்து துளசி தீர்த்தம் குடித்து அங்கிருந்து கிளம்பிருந்தான்.
ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நின்றிருந்தவன் “ஏங்க??” என்று அழைக்க சட்டென்று திரும்பி பார்த்தாள் சினமிகா.
அவள் நடையை தடை செய்து அவனுக்காய் நின்றிருந்தாள். “ஏகாதசிக்கு நீங்களும் கோவிலுக்கு வருவீங்களா??” என்று அவள் கேட்க அவன் திருதிருவென்று விழித்தான்.
“இன்னைக்கு ஏகாதசியா??” என்று வேறு கேட்க அவளோ இவனை லேசாய் முறைத்தாள்.
“நிஜமாவே எனக்கு தெரியாதுங்க. சும்மா உங்ககிட்ட பேசலாம்ன்னு தான் வந்தேன்” என்று சொல்ல சினமிகாவிற்குள் படபடப்பாய் இருந்தது.
“இல்லையில்லை வந்து உங்கப்பா சொன்னாங்க. உங்க பேரோட அர்த்தத்தை உங்ககிட்ட கேட்க சொல்லி. அதை கேட்க தான் வந்தேன்”
‘அதை கேட்கத்தான் வந்தியா’ என்பது போல் அவள் புருவம் உயர்த்தி பார்க்க “சத்தியமாங்க அதுக்கு தான் வந்தேன்”
“கடையிலவே கேட்க வேண்டியது தானே”
“இல்லை அங்க நான் என்னவோ ரொம்ப பேசறேன்னு நினைச்சிப்பாங்கன்னு தான் ரொம்ப பேசறதில்லை. சார்கிட்ட நான் பேசறதே நிறைய பேருக்கு பிடிக்கலை” என்று அவன் சொல்லிட “யாருக்கு பிடிக்கலை??”
“அதெல்லாம் எதுக்குங்க??” என்றவன் “உங்க பேரோட அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ். ரெண்டு நாளா நான் இதே தான் யோசிச்சுட்டு இருந்தேன்” என்று சொல்ல “என்னன்னு??” என்றிருந்தாள் அவள்.
“அன்னைக்கு உங்ககிட்ட கேட்க மறந்திட்டேன், அதனால மறுநாள் சார்கிட்டவே கேட்டேன். அவர் இது ஏதோ தமிழ் பேருன்னு சொன்னார். என்னன்னு கேட்டேன், அதுக்குள்ளே வழக்கம் போல என்னோட வில்லன் காசியண்ணன் வந்து அவரை கூட்டிட்டு போய்ட்டார் நானும் மறந்திட்டேன்”
“காசியண்ணன் உங்களுக்கு வில்லனா”
“இல்லையா பின்னே, சார்கிட்ட நான் பேசினாலே முறைக்கிறாரே??”
“ஓஹோ!! இது வேற நடக்குதா” என்று இவள் அவனிடம் பேசிக்கொண்டிருக்க “என்னடிம்மா இங்க நின்னு பேசிட்டு இருக்க” என்று வந்தார் அவர்கள் கடைக்கு வாடிக்கையாய் வரும் சித்ரா மாமி.
“யாரு இது?? இவர் தான் மாப்பிள்ளையா தனியா பேசிட்டு இருக்கியா??” என்று வேறு கேட்டுவைக்க அவள் நினைத்து போலவே கோவில் மணியும் அடித்திருக்க சினமிகா உதிரனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏங்க பேசிட்டு இருந்தா மாப்பிள்ளைன்னு சொல்லிருவீங்களா, நான் இவங்க கடையில வேலை பார்க்கறவன் என்னையும் அவங்களையும் போய் பேசறீங்க” என்று அவன் விளக்கம் கொடுத்தான்.
“கடையில வேலை பார்க்கிறவனா, நான் பார்க்கலையே??”
“மாமி இவங்க வேலைக்கு சேர்ந்து மூணு மாசம் தான் இருக்கும். நீங்க தான் உங்க பொண்ணு வீட்டுக்கு போயிருந்தீங்களே, நீங்க இங்க திரும்பி வந்தே ஒரு வாரம் தானே ஆகுது. கடைப்பக்கம் நீங்க தான் இன்னும் வரலையே. இன்னைக்கு வர்றீங்களா, அரைகிலோ பால்கோவா செஞ்சு எடுத்து வைக்கவா” என்று இவள் சொல்ல அவர் நாக்கில் எச்சில் ஊறியது.
“ஆமாடி உன் கையால செஞ்சு வை. அதுனா தான் அவருக்கும் ரொம்ப பிரியம், நான் சாயங்காலம் வந்து வாங்கிக்கறேன்” என்றவர் அவனையும் ஒரு பார்வை பார்த்து தான் கடந்தார்.
“யாருங்க இவங்க இஷ்டத்துக்கு பேசறாங்க??”
“சித்ரா மாமி நமக்கு தெரிஞ்சவங்க தான்”
“சரி அந்த கதையை விடுங்க, நம்ம கதைக்கு வாங்க”
“நம்ம கதையா??”
“அதாங்க உங்க பேரோட கதை”
“ஓ!! அதுவா!! அது பெரிசா எதுவுமில்லைங்க, சினமிகான்னா சினம் மிகாதவள்ன்னு அர்த்தம்”
“ரொம்ப கோபம் வருமோ”
“அதுக்கு அர்த்தம் அதில்லை சினம் கொள்ளாதவள்ன்னு அர்த்தம். எனக்கு எப்பவும் கோபமே வரக்கூடாதுன்னு நினைச்சு அம்மா வைச்சிருக்காங்க”
“ஏன் கோபம் அப்படிங்கறது ஒரு உணர்வு தானே. அது வந்தா என்ன தப்பு??”
“அவசியமில்லா கோபம் தப்பு தானே. அது வரக்கூடாதுன்னு நினைச்சு வைச்சிருக்கலாம். தவிர அவங்களுக்கு இந்த பேரு பிடிச்சிருக்கலாம். இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு”
“ஹ்ம்ம் அதும் சரி தான்” என்றவன் “கிளம்பலாமா??” என்றிட “இல்லை நான் வீட்டுக்கு போறேன், நீங்க கடைக்கு போங்க” என்று மறுத்து அவள் வீடு சென்றாள்.
——————–
“நீலா சொத்து பத்தி பேசணும், நீ எப்போ ப்ரீயா இருக்கியோ அப்போ ஊருக்கு வந்திட்டு போ. வர்றதுக்கு முன்னாடி சொல்லு, அப்போ தான் சின்னவளையும் இங்க வரச்சொல்ல முடியும்” என்றார் வேலன் தன் மகனுக்கு போன் செய்து.
“நாளைக்கே வர்றேன்ப்பா” என்றான் அவன் சற்றும் யோசிக்காமல்.
“இல்லைப்பா உனக்கு வேலை இருக்கும். அதை பாதியில விட்டு உன்னால வர முடியாதுல”
“இல்லைப்பா இந்த வாரம் நான் கொஞ்சம் ப்ரீயா தான் இருக்கேன், இன்னைக்கு நைட் கிளம்பி நாளைக்கு வர்றேன்ப்பா” என்றிருந்தான்.
அவர் தன் சின்ன மகள் மேகாவிற்கும் அழைத்து மறுநாள் வீட்டிற்கு வரமுடியுமா என்று கேட்டிட அவள் வண்டி அனுப்பச் சொல்லியிருந்தாள். போனை வைத்துவிட்டு சின்ன மகளிற்காய் வண்டி சொல்லி அதன் விபரத்தை மகளுக்கும் சொல்லிவிட்டு தன் மனைவியை தேடிச் சென்றார் வேலன். 
——————
“பைரவா” என்ற ஒற்றைக் குரலில் அவள் காலருகே வந்து நின்றிருந்தார் அவர். “எனக்கு மனசுக்கு என்னவோ பண்ணுது” என்று இவள் அவரின் காலடியில் அமர்ந்துக் கொண்டு கண் கலங்க சொல்ல அவர் இவள் கையை சுரண்டினார்.
இவளும் எழுந்தவள் அவர் பின்னேயே செல்ல அதே வீட்டிற்கு அழைத்து சென்றார் அவர். ஆனால் இப்போது அவள் பார்ப்பது அந்த வீட்டில் உள்ள ஒரு பெரிய அறையை தான்.
அங்கு மரத்தினாலான அழகிய வேலைப்பாடமைந்த டிரெஸ்ஸிங் டேபிள் இருக்க அதன் முன்னிருந்த கண்ணாடியின் முன் சென்று இவளை நிற்க வைத்து பைரவர் நகர்ந்திருக்க கண்ணாடியின் உள் அவன் அந்த ராஜகுமாரனின் பிம்பம் தெரிந்தது.
அருகே வந்தவன் அவள் இடையணைத்து அவள் தோள் வளைவில் முகம் புதைத்து கண்ணாடியில் தெரிந்தவளை பார்த்தான்.
“என்னாச்சு?? உன் கண்ணு ஏன் கலங்கியிருக்கு??” என்றான்.
அவளிடம் பதிலில்லை. “உனக்கு என்னை பிடிக்கலையா, என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு விருப்பமில்லையா??” என்று அவன் கேட்டிட உறக்கம் கலைந்து எழுந்தமர்ந்தாள் அவள்.

Advertisement