Advertisement

3
சினமிகாவின் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. அதற்கு முன்பு ஊரறிய நிச்சயத்தை வைத்துக்கொள்ள பிரியப்பட்டார் வேலன்.
அவளின் திருமணம் மற்றவர்களுக்கு கேலிப்பொருளாக இருந்ததை அவரறிவார் தானே. அதன் பொருட்டு தான் அப்படியொரு நிகழ்வு வேண்டுமென்று மாப்பிள்ளை வீட்டினரிடம் சொல்லியிருந்தார்.
பெண் பார்க்கத் தான் மாப்பிள்ளை வீட்டினர் வந்திருக்கவில்லை. அவரின் சின்ன மகள், பிடிக்காது போனாலும் பெண்ணிற்கு தம்பியாய் தன் மகன் நீலவண்ணன் வந்து நிற்க வேண்டும் என்று விரும்பினார் அத்தந்தை.
மாப்பிள்ளை வீட்டினரும் அதற்கு ஒப்புக்கொண்டிருக்க இதோ நிச்சயதார்த்தம் நடக்கும் அந்நாளும் வந்திருந்தது. சினமிகாவிற்கு இன்னமும் பயமும் படபடப்புமே இருந்தது மனதிற்குள்.
அவர்கள் பெண் பார்க்க வந்து சென்ற அன்றிலிருந்து ஒரு மாதத்தில் அவளின் நிச்சயத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் அவள் உதிரனை தினமும் கடையில் பார்த்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாளில் ஒரு நாள் கூட அவனிடத்தில் அவள் பேசியதேயில்லை. அவனுமே இவளை நிமிர்ந்து கூட பார்த்ததில்லை.
அவள் வீட்டினர் அக்கம் பக்கத்தினர் கடையில் வேலை பார்ப்பவர்கள் தங்கை அவளின் மாமனார் மாமியார் என்று அனைவருமே கூடியிருந்தனர். 
அவளின் தம்பி நீலவண்ணன் மட்டும் தந்தை அழைத்ததினால் வந்திருந்தான். அவன் மனைவிக்கு வரமுடியாது என்று சாக்கு சொல்ல தந்தையும் பெரிதாய் எதையும் அவனிடத்தில் எதிர்பார்க்கவில்லை.
திருமணத்திற்கு இருவரும் கண்டிப்பாக வரவேண்டும் என்று திட்டவட்டமாய் சொல்லியிருந்தார் அவனுமே சரியென்றிருந்தான்.
“அக்கா இந்த கலர்ல நீ ஏன் புடவை எடுத்த, பாரு இந்த கலர் உனக்கு நல்லாவே இல்லை” சொன்னது அவளின் தங்கை மேகா.
உண்மையில் அந்த புடவை அவளுக்கு பாந்தமாகவே இருந்தது. விலை கூடுதலாய் பார்க்க பளிச்சென்றிருந்த அந்த புடவை தன் அக்காவைவிட தனக்கு இன்னும் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மேகாவிற்கு.
சினமிகாவோ “அதுக்காக இதை கழட்டியா போட முடியும் மேகா” என்று சொல்ல “என்னக்கா கோபமா பேசுறே??”
“நானா எப்போம்மா பேசினேன்??” என்றாள் சினா.
“கழட்டியா போட முடியும்ன்னு கேட்டியே அதுக்கு என்ன அர்த்தம்”
“நான் எந்த தப்பான அர்த்தத்துலயும் சொல்லலை மேகா. உண்மையை தான் சொன்னேன். இது மாப்பிள்ளை வீட்டுல வாங்கினது நான் என்ன சொல்ல முடியும் நீயே சொல்லு” என்று சொல்ல மேகா வாயை மூடிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் வந்தவள் “அக்கா நீ சீக்கிரம் வெளிய வா, அப்பா உன்னை கூட்டிட்டு வரச் சொன்னார்” என்றாள்.
மணப்பெண் அவளாகவேவா வெளியில் வரமுடியும். யாராவது அவளை அழைத்து தானே வருவர். ஏன் மேகாவின் திருமணத்தின் போது அவளின் நாத்தனார் உடன் வந்து அழைத்து சென்றிருந்தாள் தானே.
மாப்பிள்ளைக்கு அக்கா ஒருவர் இருப்பதாக தானே சொன்னார்கள் அவர்கள் வந்து அழைப்பது தானே முறை இதென்ன இப்படி என்று அவள் யோசித்துக்கொண்டே நிற்க அவசரமாய் அறைக்குள் ஓடி வந்தார் அவள் அன்னை.
அழுது வடிந்த முகத்துடன் நின்றவர் தயாராகி நின்றிருந்த மகளை கட்டிக்கொண்டு அழ சினமிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
“அம்மா என்னாச்சும்மா எதுக்கு அழறீங்க??”
“சினா… சினா…” என்று அழுதாரே தவிர அவர் எதுவும் சொல்லவில்லை.
“மேகா உனக்கு விஷயம் என்னன்னு தெரியுமா?? அம்மா ஏன் அழறாங்க?? அப்பா எதுக்கு என்னை வரச்சொன்னார் சொல்லு” என்று சொல்ல “மாப்பிள்ளை அவங்களோட அக்கா பொண்ணையே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திட்டாராம்” என்ற தங்கையின் பதிலில் அதிர்ந்தாள் மற்றவள்.
“என்ன??”
“அதைச் சொல்ல தான் அப்பா கூப்பிட்டாரு” என்ற தங்கையின் பேச்சில் அப்படியொரு இளக்காரம் இருந்ததை தமக்கை உணர்ந்தாள்.
“மேகா”
“என்ன பண்ண நீ பிறந்த நேரம் சரியில்லை. உனக்கு எல்லாம் தடைபட்டுட்டே போகுது. நல்லவேளை உனக்கு அப்புறம் தான் எனக்கு கல்யாணம்ன்னு சொல்லியிருந்தா என் வாழ்க்கை என்னாகறது” என்றாள் அவள்.
திருமணம் நின்றுவிட்டது என்ற வலியெல்லாம் இல்லை அவளுக்கு. ஆனால் சுயநலமாய் பேசிய தங்கையின் பேச்சு தான் அவளுக்கு வலி கொடுத்தது.
தந்தை அறைக்குள் நுழைந்தார் கையை பிசைந்தவாறே. அவருக்கு பேச நாவெழவில்லை. “சினா” என்றவர் அவள் தலையின் மீது கை வைத்தவர் அப்படியே சரிந்தார்.
ஷனநேரத்தில் அந்த இடம் ரணகளப்பட்டது. நீலவண்ணன் நிச்சயம் நின்றதுமே கிளம்பிவிட்டிருந்தான். அங்கிருந்தால் தன்னை அலையவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டு வெளியேறி இருந்தான்.
வேலன் விழுந்ததுமே பெண்கள் மூவரும் கதறியழ சத்தம் கேட்டு அறைக்குள் ஓடி வந்தார்கள் சிலர். அத்தனை பேரும் வந்தார்களே தவிர ஒருவரும் உதவ முன் வரவில்லை. 
அவர்களை விலக்கி முன்னே வந்தான் உதிரன். “சார்க்கு என்னாச்சு??” என்று பொதுவாய் கேட்க “மயங்கிட்டாரு” என்ற பதில் முணுமுணுப்பாய் வந்தது சினமிகாவிடமிருந்து.
“தள்ளுங்க இப்படி எல்லாரும் சுத்தி நின்னா எப்படி அவருக்கு காத்து வரவேண்டாமா” என்றவன் அவர்களை அப்புறப்படுத்தி சமையலறையில் இருந்து தண்ணீர் எடுத்து வரச் சொன்னான்.
அவர்கள் கடையில் வேலை பார்க்கும் ஒருவர் எடுத்து வந்து தர தண்ணீரை அவர் முகத்தில் தெளித்தான் அவர் இன்னமும் விழிக்கவில்லை.
அவர் வாய் திறந்து புகட்டிப்பார்க்க அதையும் அவர் ஏற்கவில்லை என்றதும் தாமதிக்கவில்லை அவன். அவரை கையில் தூக்கிக் கொண்டான்.
“ஆஸ்பிட்டல் போய்டலாம்” என்றவாறே.
அதில் பூந்தமிழ் பொங்கி பொங்கி அழ “அம்மாவை யாராச்சும் சமாதானம் செய்ங்க, கூட யாராச்சும் ஒருத்தர் மட்டும் வாங்க” என்றவன் “காசி அண்ணே ஆட்டோ இல்லனா டாக்சி கூட்டிட்டு வாங்களேன்” என்று குரல் கொடுக்க அவர் வெளியே ஓடினார்.
சினமிகா திரும்பி அருகில் இருந்த தங்கையை பார்த்தாள். தந்தையின் நிலைக்கண்டு அவள் பயந்து போயிருந்தாள். கண்கள் கலங்கியிருந்தது. அவள் கணவன் ப்ராஜெக்ட் ஒன்றிற்காய் அமெரிக்கா சென்றிருந்தான்.
அவளை அவளின் மாமியாரிடம் விட்டுவிட்டு இவள் தன் அன்னையையும் உடனே அழைத்துக்கொண்டே மருத்துவமனைக்கு விரைந்தாள்.
அன்னையை தனியே விட்டு செல்ல அவள் பிரியப்படவில்லை. இதோ வேலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முழுதாய் ஒரு நாள் ஓடிபோயிருந்தது.
உதிரனும் அவர்களுடனே இருந்தான். வேறு ஆண்கள் யாரும் உடன் இல்லாததால் அவன் துணையாய் இருந்தான். எது வாங்கி வரவேண்டும் என்றாலும் அவனே அனைத்திற்கும் ஓடினான்.
முதல் நாள் மருத்துவமனையில் சேர்த்த பின்பு மருத்துவர்கள் அவள் தந்தைக்கு வைத்தியம் தொடங்கியிருந்தவர்கள் அவருக்கு மைல்ட் அட்டாக் என்றிருந்தனர்.
ஒரு நாள் பார்க்கலாம் என்றார்கள். அன்று இரவு முழுவதும் அவர் அப்சர்வேசனில் இருந்தார். உதிரனுக்கு நன்றி கூறிய சினமிகா அவனை வீட்டிற்கு போகச்சொல்ல அவனோ தான் இருப்பது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றிருந்தான்.
அவன் வீட்டிற்கும் அழைத்து அன்னையிடம் சொல்லிவிட்டிருந்தான். மறுநாள் காலை அவளிடம் “நீங்க வேணா அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்களேன்”
“இல்லை வேணாம் அப்பா கண்ணு முழிக்காம போக முடியாது” என்றவளின் கண்கள் நிறைந்தது.
அதை பார்த்தவனுக்கோ என்னவோ போலானது. தனக்கு தான் தந்தை இல்லை. கடவுளே இவளுக்கும் அது போல நிலையை கொடுத்து விடாதே, அந்த மனிதர் நல்ல மனிதர் என்று வேண்டிக் கொண்டான்.
“இல்லை நேத்து மண்டபத்துல எல்லாம் போட்டது போட்டபடி கிளம்பி வந்தாச்சு. நீங்க போய் எதுவும் முடிக்க வேண்டிய வேலை இருந்தா…” என்று அவன் முடிக்காது நிறுத்தவும் அவளுக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது.
தங்கையும் பல முறை அவளை அழைத்திருந்தாள். சமையலுக்கு மீதம் கொடுக்க வேண்டிய காசை கேட்டு வந்திருக்கிறார்கள் என்று. அடுத்து மேளக்காரர்கள் என்று ஒவ்வொன்றாய் அவள் சொன்னதும் நினைவிற்கு வந்தது.
“சரி நான் மட்டும் போயிட்டு வர்றேன். அம்மா இருக்கட்டும் அவங்க கூப்பிட்டாலும் வரமாட்டாங்க. நான் வீட்டுக்கு போய் என்னன்னு பார்த்திட்டு வந்திடறேன் அதுவரைக்கும் அம்மாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்று சொல்ல அவனும் சரியென்றிருந்தான்.
தன் அன்னையிடம் சொல்லி விடைபெற்றவள் அங்கிருந்து பாதி சென்றுவிட்டு திரும்பி இவனை நோக்கி வந்தாள்.
“உ… உங்க போன் நம்பர் தரமுடியுமா??”
“நோட் பண்ணிக்கோங்க” என்றவன் சொல்லியிருக்க அதை தன் மொபைலில் குறித்துக்கொண்டு கிளம்பினாள்.
வீட்டிற்கு செல்ல அவள் தங்கையும் அவளின் குடும்பமும் அவர்களின் வீட்டில் தானிருந்தனர். யாருக்கெல்லாம் என்ன கொடுக்க வேண்டுமோ கொடுத்து வேலையை முடித்தவள் கடை சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.
“அக்கா” என்ற அழைப்பில் நின்றாள்.
“சொல்லு மேகா”
“நானும் வரட்டுமா??”
“இப்போ வேணாம் மேகா… நான் போன் பண்ணுறேன் உனக்கு சரியா”
“ஏன்மா நானும் உங்க மாமாவும் வந்து பார்த்திட்டு வர்றோமே??” என்றார் மேகாவின் மாமியார்.
“வேணாம் அத்தை. அப்பா இன்னும் கண்ணு முழிக்கலை தானே.இப்போ வந்து எதுக்கு பார்க்கறீங்க, நான் போன் பண்ணுறேன் அத்தை அப்புறம் நீங்க கிளம்பி வாங்க” என்றாள் அவரிடமும்.
“அக்கா இப்போ நீ எங்கே போறே??”
“கடையை திறக்க”
“அது இப்போ ரொம்ப முக்கியமா??” என்ற தங்கையிடம் எந்த பதிலும் சொல்லவில்லை, பேசாமல் நடந்தாள்.
“நான் கேட்டுட்டே இருக்கேன் நீ கிளம்பினா என்ன அர்த்தம்”
“என்ன பதில் சொல்லன்னு தெரியலை மேகா, இன்னைக்கு கொஞ்சம் பேருக்கு சரக்கு டெலிவரி பண்றோம்ன்னு அப்பா சொல்லியிருக்கார். எல்லாம் பேக் பண்ணி ரெடியா இருக்கு”
“நான் கடையை திறந்திட்டா ஆளுங்க வந்து பார்த்துக்க போறாங்க. அட்லீஸ்ட் அந்த டெலிவரி வேலையாச்சும் முடியும்” என்றவள் அதற்கு மேல் நின்றால் அவள் இன்னும் கேள்வி கேட்பாள் என்றெண்ணி நகர்ந்தாள்.
போனில் யாருக்கோ அழைத்து கடைக்கு வரச்சொன்னவள் கடையை திறந்துவிட்டு காசியண்ணனை அழைத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மருத்துவமனை கிளம்பிவிட்டாள்.
அவள் தந்தை இன்னமும் கண் விழித்திருக்கவில்லை. எப்படியும் இரவாகும் அவர் கண் விழிக்க என்றிருந்தனர். உதிரனை வீட்டிற்கு சென்று வரச்சொன்னாள். அவனும் கிளம்பியிருக்க இவள் அன்னைக்கு சாப்பிட உணவை வாங்கிக்கொடுத்து சாப்பிட வைத்து அழைத்து வந்தாள்.
முதல் நாளில் இருந்து அவன் தான் அவர்களுக்கு அவ்வப்போது காபி டீ என்று வாங்கி வந்து கொடுத்திருந்தான். தான் அவனுக்கு எதுவும் வாங்கி கூட தரவில்லையே. சாப்பிடாமலே அனுப்பிவிட்டோமே என்று இப்போது தோன்றியது அவளுக்கு.
இருக்கையில் அமர்ந்தவளுக்கு கண்கள் சொருக உறக்கத்திற்கு சென்றாள் உடன் கனவுடன் ஓர் பயணமும்.
அடர்ந்த காடு அது காட்டில் அவ்வப்போது கேட்ட நரியின் ஊளைச்சத்தமும், யானையின் பிளிறலும் அவளுக்குள் பயத்தை விதைத்துக் கொண்டிருக்க அவள் காலை சுரண்டினார் பைரவர்.
“வந்திட்டீங்களா உங்களைத் தான் தேடிட்டு இருந்தேன்” என்று இவள் வாய்விட்டு சொன்னாள் அவரிடம்.
அவர் பதில் சொல்லாமல் முன்னே நடந்தார். இந்த முறையும் அதே வீட்டிற்கு தான் சென்றனர் ஆனால் செல்லும் வழி தான் புதிதாய் இருந்தது.
அங்கு அந்த ராஜகுமாரன் நின்றிருந்தான். “எங்கே போயிட்டே பாரு உங்கப்பா வந்திருக்காங்க” என்றவன் அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
அவளின் தந்தை அங்கு அந்த ஒற்றை மர இருக்கையில் அமர்ந்திருந்தார். அது நன்றாக வேலைப்பாடமைந்த இருக்கையாக இருந்தது.
இவள் ஓடிச்சென்று அவரின் காலடியில் அமர்ந்தாள். “அப்பா என்னாச்சுப்பா உங்களுக்கு… நான் ரொம்ப பயந்திட்டேன்ப்பா. நல்லா இருக்கீங்கல்லப்பா, உங்களுக்கு ஒண்ணுமில்லைல” என்றவள் அவரின் மடியில் முகம் புதைத்து அழ அந்த ராஜகுமாரன் “அவரை பயமுறுத்தாதே இப்போ தானே சரியாகி வந்திருக்காரு”
“அவருக்கு ஒண்ணுமில்லை நல்லாகிட்டாரு” என்றவன் சொல்ல கண்ணை துடைத்து எழுந்தவள் “நிஜமாவே ஒண்ணுமில்லை தானே” என்று கேட்க “ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. நீ தான் பார்க்கறியே” என்றவன் அவளை தன் மீது சாய்த்துக் கொள்ள அவளின் அழுகை அப்படியே இருந்தது.
அவன் மார்பில் முகம் புதைத்து அவள் அழுதிருக்க அவன் சட்டையில் ஈரத்தின் சாயல். தூக்கம் கலைந்து அவள் விழித்துப் பார்க்க உண்மையிலேயே அவள் உதிரனின் மார்பில் சாய்ந்திருந்தாள்.
திடுக்கிட்டு விலகியவள் சுற்றுமுற்றும் பார்க்க அவள் அன்னை ஒரு ஓரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
உதிரன் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன நடக்குது இங்க நான் எப்படி’ என்ற கேள்வி அவளை குடைந்து எடுத்தது.
அவன் சட்டையில் கனவில் பார்த்தது போலவே ஈரத்தின் சாயல். அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டி இருந்தது. அவனை தவிர யாருமே இப்போது சொல்ல முடியாது என்ற முடிவிற்கு வந்தவள் “என்னாச்சு??” என்றாள்.
“ஒண்ணுமில்லை”
“இல்லை நான் எப்… எப்படி உங்க… மேல”
‘ஓ!! இவ அதை கேட்கிறாளா’ என்றெண்ணியவன் நான் வரும் போது நீங்க தூக்கத்துல அழுதிட்டு இருந்தீங்க. உங்க பக்கத்துல வந்து எழுப்பலாம்ன்னு பார்த்தேன். ரொம்ப அழுதீங்க” என்றுவிட்டு நிறுத்திக்கொண்டான்.
அவளும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. “நீங்க எப்போ வந்தீங்க??”
“இப்போ தான் ஒரு பத்து நிமிஷம் இருக்கும்”
“டாக்டர் வந்தாங்களா??”
“இன்னும் இல்லை, இனிமே தான் வருவாங்க” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து நர்ஸ் வந்தார்.
“உங்கப்பா கண்ணு முழிச்சிட்டாங்க, நான் டியூட்டி டாக்டரை கூட்டிட்டு வர்றேன்” என்றவள் நகர்ந்தாள்.
சினமிகாவால் அப்போது தான் நிம்மதியாய் மூச்சே விட முடிந்தது. தன் அன்னையை எழுப்பி அப்பா முழிச்சிட்டாங்கன்னு இப்போ தான் சொன்னாங்கம்மா” என்று சொல்ல அவர் கையெடுத்து கடவுளை தொழுதார்.
விரைந்து வந்த மருத்துவர் ஐசியூவின் உள்ளே செல்ல பின்னோடே அந்த செவிலியரும் சென்றார். அரைமணி நேரத்தில் மருத்துவர் வெளியில் வந்தவர் “ஹி ஹிஸ் ஒகே நவ். மார்னிங் வரை அவர் இங்க தான் இருப்பார். அப்புறம் ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடலாம்”
“நாளைக்கு ஒரு நாள் இங்க இருக்கட்டும், அடுத்த நாள் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்” என்றார்.
“டாக்டர் நாங்க அவரை பார்க்கலாமா??”
“நர்ஸ் வந்து சொல்லுவாங்க அப்போ போய் பாருங்க சரியா. இப்போ ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு, கொஞ்சம் டெஸ்ட் எடுக்க சொன்னேன், அதெல்லாம் முடிச்சிட்ட பிறகு போய் பார்க்கலாம்” என்று சொல்லி நகர்ந்துவிட்டார் அவர்.
வேலனுக்கு ஒரு வழியாய் உடல்நிலை தேறி இதோ அவர் வீட்டிற்கும் வந்துவிட்டார். ஆனால் முன்பு போல அவர் இருக்கவில்லை, எப்போதும் யோசனையும் கவலையுமாகவே தென்பட்டார் அவர்.
அவரை கண்டு அன்னைக்கும் மகளுக்கும் பெருங்கவலையாய் போனது. சினமிகா தன் தந்தையை பழைய மாதிரி மாற்ற வேண்டும் என்று எண்ணி அவரிடம் பேசவாரம்பித்தாள்.
“அப்பா”
“சொல்லுடா”
“கடைக்கு போகலாமலே இருக்கீங்களே”
“ஹ்ம்ம் போகலாம்”
“அப்பா”
“சொல்லும்மா”
“ஏன்பா எப்போ பார்த்தாலும் கவலையாவே இருக்கீங்க??”
“உன் கல்யாணத்தை நினைச்சு தான்மா எனக்கு கவலையா இருக்கு??”
“அப்பா நான் ஒண்ணு சொல்லவா??” என்றவளை நிமிர்ந்து பார்த்தார்.
“நீங்க கவலைப்படுறதால எதுவும் மாறிடாதுப்பா. உங்க மனத்திருப்திக்காக ஒண்ணு சொல்றேன். எல்லாமே நல்லதுக்கு தான் நடக்குதுன்னு நினைச்சுக்கோங்கப்பா”
“உங்க மனசுப்படியே எனக்கு நல்ல வாழ்க்கை அமையும்ப்பா. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க வீணா மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க”
“கவலைப்பட்டுட்டே இருந்தா எதுவும் மாறிடப் போறதில்லைப்பா. நாளைக்கு காலையில நான் கடைக்கு வருவேன், எனக்கு முன்னாடி நீங்க அங்க இருக்கணும்” என்றுவிட்டு அவள் எழுந்து செல்ல அந்த பெருமாளிடமே விட்டுவிட்டார் அவரிடம் மனசங்கடத்தை.
புள்ளி களவன்
திருப்பிப்போடு
வலி கொடுக்கும்
புது வழி பிறக்கும்
(புள்ளி களவன் – நண்டு)

Advertisement