Advertisement

2
உதிரனின் நண்பனொருவன் திருவில்லிபுத்தூரில் இருக்கிறான். அவனிடம் முன்பே சொல்லி வைத்திருந்தான் வேலைக்கு.
அவனை பார்க்க தான் வந்திருந்தான். பஸ்ஸை விட்டு இறங்கியவனுக்குள் ஒரு எண்ணம் கோவிலுக்கு சென்றுவிட்டு பின் நண்பனை பார்க்கலாமே என்று.
கடவுளிடம் குறையை சொன்னால் அவன் செவி சாய்த்து நல்லருள் புரிய மாட்டானா என்ற அவா அவனுக்கு.
தூரத்தில் இருந்தே கோபுரத்தை பார்த்தான். மனதிற்குள் ஏதோவொரு அமைதி வந்து குடிபுகுந்தது. கோவில் வாசலுக்கு வந்து செருப்பை ஒரு ஓரமாய் கழற்றிவிட்டு உள்ளே சென்றான்.
பெருமாளை சேவித்துவிட்டு ஆண்டாள் சன்னதி வந்து கண் மூடி நின்றான். இவனுக்கு எதிரில் நின்றிருந்தாள் சினமிகா.
‘கடவுளே நேத்து ராதா மாமி சொன்ன மாதிரி இன்னைக்கு நான் அவரை பார்ப்பேனா’ என்று கடவுளை நோக்கி மனதார பேசிக் கொண்டிருந்தாள். எதிரில் இருந்தவனை அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.
உதிரன் கடவுளை தொழுதுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட இவளும் வேண்டுதல் முடித்து கிளம்பினாள். உதிரன் அவன் நண்பனை பார்த்து பேசிவிட்டு வெளியில் வந்தவனுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது. நண்பனின் பேச்சில் பெரிதாய் எந்த வரவேற்ப்பும் இல்லை என்பதே அவனை சற்று உடைந்து போகச் செய்தது.
இவனுடன் படித்த நண்பர்கள் எல்லாம் தற்போது படிப்பை முடித்துவிட்டு நல்ல நிலையில் இருக்கின்றனர் ஒரு சிலரை தவிர.
இவன் படிப்பை கூட முடிக்காததால் அவர்களிடம் சென்று உதவிக்கோர கூட யோசித்து நின்றான். தன்னை மீறி நிலைமை செல்ல ஆரம்பித்த நிலையில் அருகிலேயே இருந்த பால்யகால நண்பனை தேடி வந்திருந்தான்.
இவன் படித்தது கோவை பிஎஸ்ஜி என்ஜினியரிங் காலேஜில். அந்த கல்லூரியில் இடம் கிடைப்பதென்பது பலருக்கு கனவு. இவன் நல்ல மதிப்பெண்கள் அதை பெற்று தந்திருந்தது அப்போது.
சூழ்நிலை அதை தொடர முடியாமல் போயிருந்தது. கோவை சென்றால் நண்பர்கள் சிலர் உதவுவர் தான். மில் மூடிய போதே இவன் அங்கு செல்வதாக சொல்ல அவன் அன்னை சீதா தான் தடுத்துவிட்டார்.
தான் தனித்து இருக்க முடியாது என்று ஏதேதோ சொல்ல அவரையும் அவனுடன் அழைத்து செல்லவதாகச் சொல்ல அவன் தந்தை வாழ்ந்த ஊரையும் வீட்டையும் விட்டு வரமுடியாது என்று உறுதியாய் அவர் சொல்லிட அவனாலும் ஒன்றும் பேச முடியாமல் போனது.
இதோ இவ்வளவு தூரம் வந்தும் உருப்படியாய் ஒன்றும் நடந்திடவில்லை. இதற்கு மேல் இங்கு தாக்கு பிடிக்க முடியாது அம்மாவை அழைத்துக்கொண்டு கோவை சென்றுவிடுவது தான் என்ற முடிவிற்கு வந்துவிட்டான்.
பேருந்து நிலையம் நோக்கி நடையை போட்டவனின் நடை நின்றது. அங்கு ஒரு கடையில் வேலைக்கு ஆட்கள் தேவை என்றிருக்க கால்கள் தன்னையுமறியாமல் அங்கு சென்று நின்றது அவனுக்கு.
“சார் இங்க முதலாளி”
“என்ன வேணும் சார்??”
“இல்லை முதலாளியை பார்க்கணும்” என்று துணிந்து கேட்டுவிட்டான்.
சினமிகா அங்கு தானிருந்தாள், பால்கோவாவை எடைப்போட்டு அவள் எடுத்து வைக்க மற்றொருவர் அதை பேக் செய்துக் கொண்டிருந்தார்.
இவன் வந்ததையும் தந்தையை கேட்டதையும் பார்த்திருந்தாள். யாருடா இவன் பார்க்க அடியாள் மாதிரி ஓங்கு தாங்கா இருக்கானே என்ற எண்ணம் தான் முதலில் அவளுக்கு எழுந்தது.
அவன் உடல் தான் அப்படி வளர்ந்திருந்தது முகம் நன்றாய் களை பொருந்தியதாய் பார்ப்போரை வசீகரிக்கும் படி இருக்க இவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சார் பின்னாடி இருக்காங்க. கொஞ்ச நேரத்துல வருவாங்க வெயிட் பண்ணுங்க ஆமா என்ன விஷயமா அவரை பார்க்கணும்?? நீங்க வேணா அவரோட பொ” என்று அங்கிருந்தவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேலன் அங்கு வந்தார்.
“என்ன காசி?? யார் இவரு??” என்றவாறே.
“அய்யா இவங்க உங்களை பார்க்கணும்ன்னு சொன்னாங்க” என்று சொல்ல வேலன் அவன் முகத்தை பார்த்துவிட்டு கையெடுத்து கும்பிட அவனும் பதில் வணக்கம் செய்தான்.
“சொல்லுங்க தம்பி என்ன விஷயம்??” என்று நேரடியாய் விஷயத்திற்கு வந்தார்.
அவனுக்கு மற்றவர்கள் முன்னால் எப்படி பேசுவது என்று சங்கோஜமாய் இருக்க “சார் உங்ககிட்ட தனியா பேசலாமா??” என்றான்.
‘நம்மகிட்ட தனியா பேச என்ன இருக்கு. ஒரு வேளை எதுவும் பெரிசா ஆர்டர் எடுக்க வந்திருப்பாரோ’ என்ற யோசனை படர அவன் பின்னே சென்றார்.
வாயிலுக்கு வெளியில் வந்து நின்றிருந்தனர் இப்போது. “இல்லை வந்து இங்க ஆட்கள் தேவைன்னு போட்டிருக்கீங்களே??”
“ஆமா அதுக்கென்ன இப்போ??”
“என்ன வேலை சார்??” என்று அவன் தயங்கி கேட்கவுமே அவருக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
அவன் பார்க்க நல்ல வசதியான வீட்டுப்பையன் போன்ற தோற்றமளித்தான். ஆனால் சாதாரண உடையே அணிந்திருந்தான். வாழ்ந்து கெட்டவர்களாக இருப்பார்களோ என்று தோன்றியது அவருக்கு.
“இது டெலிவரி பாய் வேலை தம்பி”
“எனக்கு வேலை தருவீங்களா??” என்று அவன் கேட்க அவர் அப்படியே உருகிப் போனார்.
“தம்பி நீங்க பார்க்க படிச்ச”
“இல்லை சார் பாதியில படிப்பை விட்டுட்டேன். அப்பா தவறிட்டாங்க” என்று சொன்னான்.
“ஓ!!” என்றவர் யோசிக்க ஆரம்பித்தார்.
“நான் கண்டிப்பா செய்வேன் சார் என்னால முடியும்”
“இல்லை தம்பி சம்பளமும் குறைச்சலா தான் வரும்”
“எவ்வளவு தருவீங்க??”
அவர் சொன்ன தொகை அவன் மில்லில் வாங்கி சம்பளத்துடன் ஒத்துப்போக யோசிக்கவே இல்லை சரியென்றுவிட்டான்.
“என்னப்பா இப்படி உடனே சரின்னு சொல்றே??”
“அது போதும் சார். நான் வேலை பார்த்த மில்லில கூட அவ்வளவு தான் வாங்கிட்டு இருந்தேன்” என்றான்.
“ஏன் அதே வேலைக்கு போகலாமேப்பா??”
“மில்லு மூடிட்டாங்க சார்”
“வேற மில்லுல வேலை கிடைக்காதா??”
“நான் படிப்பை வேற முடிக்கலை சார். முடிக்கவும் வசதியில்லை அதான்…”
அதற்கு பின் அவர் யோசிக்கவில்லை. “சரிப்பா நீ வேலைக்கு வந்திடு, வண்டி இருக்கா உன்கிட்ட??” என்றவர் அவன் முகம் போன போக்கை பார்த்து “இல்லைன்னா பரவாயில்லை கடை வண்டி இருக்கு அதை யூஸ் பண்ணிக்கோ”
“டெலிவரிக்கு எடுத்திட்டு போற வண்டி தான். ஆமா நீ எங்க இருக்கப்பா??”
“ராஜாபாளையம் சார்”
“நாளையில இருந்து வந்திடு”
“நாளைக்கு எதுக்கு சார் தள்ளி போடணும் இன்னைக்குல இருந்தே வந்திடுறேன்” என்றான் அவன்.
“தம்பி உங்க பேரென்ன??”
“உதிரன் சார்”
“நல்ல பேர், சரி உள்ள வாங்க உங்களுக்கு சுத்திக்காட்டறேன். அப்புறம் என்ன வேலைன்னும் சொல்றேன்” என்றவர் அவனை உள்ளே அழைத்துப் போனார்.
“இது தான் பால்கோவா தயாரிக்கற இடம் தம்பி” என்றவர் அங்கிருந்தோரை இவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். முதலாளியே ஒருவரை அழைத்து வந்து இதெல்லாம் செய்வது மற்றவர்களுக்கு ஆச்சரியம் தான்.
வேலன் எப்போதும் சாதி மத வித்தியாசம் எல்லாம் பார்ப்பது இல்லை தான். கடைக்கு வேலைக்கு ஆட்கள் எடுத்தால் மற்றவர்கள் தான் அவர்களுக்கு என்ன வேலை என்று சொல்லிக் கொடுப்பர்.
ஏனோ உதிரனுக்கு அவராய் ஒவ்வொன்றும் சொல்லிக் கொடுத்தார். “என்ன வேலைன்னு சொல்லிட்டீங்க சார். எங்கெல்லாம் போகணும்ன்னு நீங்க எதுவும் சொல்லவேயில்லையே??” என்று அவன் கேட்க திறமைசாலி தான் என்று மெச்சிக் கொண்டார் அவனை.
டெலிவரி பாய் வேலை என்றால் கடைகடையாய் ஏறி இறங்க வேண்டும் தானே. “சங்கரன்கோவில், ராஜாபாளையம்ன்னு இங்க சுத்துவட்டாரம் முழுக்க நமக்குன்னு வாடிக்கையாளர்கள் இருக்காங்க தம்பி”
“அவங்க கடைக்கு கொண்டு போய் சரக்கெல்லாம் போட்டு வரணும். வாரத்துல முத ரெண்டு நாள் இல்ல முணு நாள் இந்த வேலை இருக்கும். ஒரு நாள் கடையில மீதி ரெண்டு நாள் போய் காசை வசூல் பண்ணிட்டு வரணும்”
“சார் நான் மட்டுமா போகணும்??”
“ஏன் அப்படி கேட்கறீங்க??”
“இல்லை சார் முதல் முறையா போனா என்னை நம்பி எப்படி சார் அவங்க வாங்குவாங்க??”
“நல்ல கேள்வி தான். கொஞ்ச நாளைக்கு உன்னோட கடையில இருக்கற ஆள் ஒருத்தர் வருவாரு. பழகின பிறகு நீயே பார்த்துக்கோ”
“சார் வந்து…” என்று இழுத்தான்.
“சொல்லுப்பா”
“இல்லை வசூல் கூட நானே செய்யணுமா??” என்று அவன் கேட்கவும் அவருக்கு சுறுசுறுவென்று வந்தது கோபம். பொறுமையாய் பதில் சொன்னால் இவன் என்ன இப்படி கேட்கிறான் என்றிருந்தது அவருக்கு.
“தப்பா எடுத்துக்காதீங்க சார். என்னை நம்பி அதை வாங்கிட்டு வரச்சொல்றீங்களே அதான்…” என்று அவன் இழுக்க அவன் சொல்ல வருவது புரியவும் அவரின் கோபம் காணாமல் போனது.
“இத்தனை வருஷமா இங்க கடை நடத்தறேன். ஒருத்தரை எடை போடக்கூட தெரியாமலாப்பா இருப்பேன்” என்று சிரித்தார் அவர்.
“தேங்க்ஸ் சார் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்… என் மேல நீங்க வைச்ச நம்பிக்கையை நான் கண்டிப்பா காப்பாத்துவேன் சார்… உங்களுக்கு நன்றியுடையவனா இருப்பேன் சார்” என்றவனின் குரலில் நெகிழ்ச்சி இருந்தது.
“சரிப்பா வேலையை பாரு” என்றுவிட்டு அவர் வேறு ஒருவரை அழைத்து அவனுக்கு அறிமுகம் செய்துவிட்டு பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு நகர அவனுக்கு யாரோ தன்னை உற்றுநோக்கும் உணர்வு ஏற்பட்டது.
திரும்பி பார்க்க சினமிகா பார்வையை வேறு புறம் திருப்புவது புரிய அவளை பார்த்தவனும் முகத்தை திருப்பிக் கொண்டான்.
‘யார் இவ என்னைய எதுக்கு பார்க்குறா??’ என்று யோசித்தவன் ‘நமக்கெதுக்கு இதெல்லாம்’ என்று தோளைக் குலுக்கி அந்த நபரிடம் தனக்கு தோன்றிய சந்தேகங்கள், தகவல்கள் எனக் கேட்டு தெரிந்துக் கொண்டான்.
வேலன் எங்கோ சென்றுவிட்டு திரும்பி வந்தவர் “சினா” என்றழைக்க பேக்கிங்கில் உதவிக் கொண்டிருந்த சினமிகா நிமிர்ந்து “சொல்லுங்கப்பா” என்று சொல்ல உதிரன் ‘ஓ!! இவ அவரோட பொண்ணா’ என்று பார்த்தான்.
“இன்னைக்கு நீ கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போய்டும்மா”
“சரிப்பா, என்ன விஷேஷம்ப்பா??”
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்கடா”
“ஓ!!” என்றவள் வேறொன்றும் சொல்லவில்லை, ஆனால் இந்த இடமும் முடியாது என்று மனதிற்குள் தோன்றத்தான் செய்தது.
‘இவர்கள் என்ன காரணம் சொல்லி வேண்டாம் என்று போவார்களோ’ என்று இவள் நினைத்திருக்க வந்தவர்கள் இவளுக்கு பூவைத்து தாம்பூலம் மாற்றிக்கொண்டு அத்திருமணத்தை உறுதி செய்து சென்றிருந்தனர்.
அவளின் அன்னைக்கும் தந்தைக்கும் முகம் கொள்ளா பூரிப்பு தோன்றியது. எப்படியோ தங்கள் மகளுக்கு வரன் அமைந்துவிட்டது என்று எண்ணி சந்தோசப்பட்டனர்.
அதுவும் அவர்கள் அன்றே திருமணத்தை உறுதி படுத்தும் விதமாய் வெற்றிலை மாற்றிக்கொண்டது அவர்களை இன்னமும் மகிழ்ச்சிக் கொள்ள செய்தது.
ஏனோ சினமிகாவால் அதை எண்ணி மகிழ்வாய் உணர முடியவில்லை. இதுவரை வந்ததாவது பெண் பார்ப்பது பின் நின்றது. இப்போது உறுதி வேறு செய்து சென்றிருக்கிறார்கள் இது என்னாகுமோ என்ற கவலை தான் வந்தது அவளுக்கு.
அன்றைய இரவின் உறக்கத்தில் மீண்டுமொரு கனவு. வெகு நாளைக்கு பின் வரும் கனவு. மீண்டும் அவள் அதே பாதையில் பயணிக்கிறாள், அன்று போலவே இன்றும் அவளை வழி நடத்துவது பைரவரே.
இந்த முறை வீடு அலங்கரித்திருக்கவில்லை. ஆனால் சென்ற முறை கனவில் வந்த அதே வீடு தான். அங்கொரு பெரிய மர ஊஞ்சல் மிக அழகாக இருந்தது. அதில் அந்த ராஜகுமாரன் அமர்ந்திருந்தான்.
இவள் செல்ல அவன் இவள் கையை பிடித்தான். அதில் உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடியது இவளுக்கு. அருகில் பார்க்க பைரவரை காணவில்லை.
வழிவிட்டு அவர் எங்கோ சென்றுவிட்டார் என்று எண்ணிக்கொண்டாள். அவள் கையை பிடித்தவன் அவளை தன்னருகே அமர்த்திக் கொண்டான்.
அதுவரை மனதிற்குள் இருந்த அலைப்புறுதல் மறைந்து எதுவோ ஒரு நிம்மதி தோன்ற அவன் தோளில் தலை சாய்ந்துக்கொள்ள அவன் கீழே காலை ஊன்றி ஊஞ்சலை மெதுவாய் ஆட்டினான்.
அது இன்னமும் சுகமாயிருக்க அவன் நீளமான கால்கள் அவள் கண்ணில் பட்டது. நல்ல உயரம் போல என்று எண்ணிக்கொண்டாள்.
அவனை சரியாய் பார்க்கவில்லை என்று தோன்ற நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளுக்கு குப்பென்று வியர்த்து அப்படியே படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டிருக்க அவள் வியர்வையில் குளித்திருந்தாள். ‘எனக்கு ஏன் இப்படி கனவு வந்துச்சு. காலையில் கடைக்கு வந்தவன் எப்படி என்னோட கனவில??’ என்று நினைத்து மருகினாள்.
அவளை கவலை பிடித்துக் கொண்டது. தன் வாழ்வில் எதுவோ நடக்கவிருக்கிறது என்று மட்டும் புரிந்தது. அது அவளின் நல்லதிற்கா இல்லை கெட்டதிற்கா என்று தான் அறியமுடியவில்லை.
இன்னமும் அவள் கையில் அவன் தொட்ட குறுகுறுப்பு தோன்ற நடந்ததை கனவென்று அவளால் நம்பவே முடியவில்லை.
எழுந்துச் சென்று அறையில் இருந்த சன்னலை முழுதாய் திறந்து வைத்தாள். வெள்ளி நிலவு வானில் ஊர்வலம் வந்துக் கொண்டிருக்க இவளின் பார்வை தூரத்தே தெரிந்த கோபுரத்தை தொட்டு நின்றது. உயர்ந்து நின்ற கோபுரத்தை விழியகலாமல் பார்த்திருந்தாள்.
இன்னமும் மின்சாரம் வந்திருக்கவில்லை. விழிகள் மெதுவாய் தாழ்ந்து வீதியை நோக்க அப்படியே திடுக்கிட்டு போனது அவளுக்கு. கனவில் அவளுக்கு துணை நின்ற அதே பைரவர்.
வெள்ளையில் ஆங்காங்கே கருப்பு நிற புள்ளிகளை கொண்டிருந்த அதே பைரவர். விழிகளை மூடி மூடித்திறந்தாள். அதுவும் இவளையே பார்த்துக் கொண்டு வாலாட்டிக் கொண்டிருந்தது.
ஒரு குறைப்பு கூட இல்லை அதனிடத்தில். பயத்தில் நா வறண்டு தொண்டை உலர்ந்து போனது. இருளில் நடப்பதற்கு கூட அவளுக்கு அச்சமாக இருந்தது.
ஒருவாறு அங்கிருந்து நகர்ந்து கட்டிலருகே வந்தவள் அவளின் கைபேசியை தேடி எடுத்து பிளாஷ் லைட்டை ஆன் செய்யவும் மின்சாரம் வரவும் சரியாக இருந்தது.
அறையில் இருந்த மின்விளக்கை எரியவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள். விடிய விடிய உறக்கம் வராதது தான் மிச்சம் அவளுக்கு.
——————–
“அம்மா” என்ற உதிரன் ஒரு காலை கீழே ஊன்றி மெல்ல பின்னால் சாய ஊஞ்சலில் மெதுவாய் ஆடினான். மற்றொரு காலை மடித்து வைத்து போனை பார்த்துக் கொண்டிருந்தான்.
“உதிரா கிளம்பிட்டீயாப்பா?? இரு இரு உனக்கு சாப்பாடு கட்டிட்டேன் எடுத்திட்டு வர்றேன்” என்று உள்ளிருந்து அன்னை குரல் கொடுக்க “அம்மா பசிக்குது முதல்ல காலையில டிபன் கொடுங்களேன்” என்றான்.
“உனக்கு ஊஞ்சல்ல உட்கார்ந்திட்டா உலகமே உன் கைக்குள்ள வந்து உட்காரணும்ன்னு நினைப்பியே?? நீயே உள்ள வந்து சாப்பிட்டு போயிருக்கலாம்லப்பா” என்றவாறே மகனருகில் வந்து அமர்ந்தார் சீதா.
“அம்மா நீங்களே ஊட்டி விடுங்களேன்” என்றவன் உருவத்தில் தான் வளர்ந்திருக்கிறான் என்றே அந்த தாய்க்கு தோன்றியது.
மனதளவில் இன்னமும் குழந்தையாய் இருக்கும் தன் மகனுக்கு சிறிய வயதிலேயே பொறுப்பை சுமக்க வேண்டிய நிர்பந்தத்தை நினைத்து அவருக்குமே வருத்தமாக இருந்தது.
அதுவும் அவன் முதல் நாள் வீட்டிற்கு வந்து வேலை கிடைத்துவிட்டது என்று சொன்ன போது இருந்த சந்தோசம் அவன் என்ன வேலை என்று சொன்ன போது உள்ளுக்குள் வலியை உணரத்தான் செய்தது அந்த தாய் மனம்.
மகனுக்கு அவர் ஊட்டிவிட சாப்பிட்டு முடித்தவன் அவர் கட்டிக்கொடுத்திருந்த மதிய உணவை எடுத்துக்கொண்டு திருவில்லிபுத்தூர் கிளம்பிவிட்டான்.
வரையினிலே
மஞ்ஞை கூட்டம்
அகில் மரத்தின்
அருகினிலே
சுனையொன்றின் ஓட்டம்
பாறை இடுக்கினிலே
வழி பிறக்கும்
மறைந்திருக்கும் 
பொக்கிஷமே
உனக்கென்றும் வரமே!!
(வரை – மலை, குன்று, மஞ்ஞை – மயில்)

Advertisement