Advertisement

16
கடையில் பணிக்கு அமர்ந்தியிருந்த பெண் வேலனுக்கு அழைத்து அவள் கேட்ட விஷயத்தை சொல்லியிருக்க அவர் உடனே கிளம்பியிருந்தார்.
மனைவியை மட்டும் தனியே அழைத்தவர் “தமிழ் நான் சினா வீட்டுக்கு போறேன். அங்க போயிட்டு நான் போன் பண்றேன், நீ வர்ற மாதிரி இருந்தா சொல்றேன். நீ தயாரா இரு” என்றார்.
“என்னங்க என்னாச்சுங்க நீங்க பதட்டமா இருக்க மாதிரி தெரியுதே என்ன விஷயம்??” என்றார் பூந்தமிழ்.
அவர் மெதுவாய் அந்த விஷயத்தை சொல்ல கண்கள் கலங்கிப் போனது. ஓவென்ற அழுகையை அவர் தொடங்கப் போக சட்டென்று அவர் வாயை அடைத்தார் வேலன்.
“தமிழ் கொஞ்சம் பேசாம இரு. எதுவும் சரிவர தெரியாம நீ பாட்டுக்கு ஊரை கூட்டிறாத, நான் அங்க போய் பார்த்திட்டு உனக்கு போன் பண்றேன்”
“இங்க மேகாவை விட்டுட்டு எப்படி வர?? நிறைமாசமா இருக்காளே??”
“யாராச்சும் கூப்பிட்டு துணைக்கு வைச்சுட்டு வா. டாக்டர் இன்னும் பதினைஞ்சு நாள் இருக்குன்னு சொல்லியிருக்காங்க தானே. எதுவும் ஆகாது” என்று அவர் மனைவிக்கு மட்டுமல்லாது தனக்கும் சொல்லிக் கொண்டார்.
———————
“ம்மா பாடி இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருக்க பெரியாஸ்பத்திரிக்கு வந்திடும்மா, அடையாளம் காட்டணும் சீக்கிரம் வந்திடுங்க” என்றுவிட்டு போயிருந்தார் அவர்.
மயங்கியிருந்த சீதாதேவியை கடையில் இருந்த பெண் மல்லிகாவின் உதவியுடன் கைத்தாங்கலாய் அழைத்து வந்து சாய்விருக்கையில் படுக்க வைத்தாள் சினமிகா.
“அக்கா கொஞ்சம் பார்த்துக்கறீங்களா, நான் போய் அத்தைக்கு  மாத்திரை எடுத்திட்டு வர்றேன். அவங்களுக்கு லோ பீபி இருக்கு” என்றவள் உள்ளே ஓடினாள்.
திரும்பி வரும் போது கையில் மாத்திரை தண்ணீருடன் வந்தவள் சீதாவின் முகத்தில் லேசாய் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சி செய்தாள்.
அவர் அரைகுறையாய் கண் விழிக்கவும் நீரை புகட்டியவள் மாத்திரையை சேர்த்து கொடுத்து விழுங்கச் செய்தாள்.
அவர் இன்னும் முழுதாய் தெளிந்திருக்கவில்லை. சினமிகா எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை, அமைதியாகவே இருந்தாள்.
கடைப் பெண் மல்லிகா கூட மனதிற்குள் நினைத்தாள். என்ன இந்த பொண்ணு கொஞ்சம் கூட கலங்கவே இல்லையே என்று.
“அக்கா ஆஸ்பத்திரிக்கு வேற வரச்சொல்லி இருக்காங்க. அத்தையை இப்படி விட்டு எப்படி போகன்னு தெரியலை”
“நீ கவலைப்படாதம்மா நான் வேலன் அய்யாக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன் அவங்க வந்திட்டு இருக்காங்க” என்று அவர் சொல்லவும் தான் அவளுக்கு நினைவே வந்தது தந்தைக்கு அழைத்துச் சொல்லவில்லை என்று.
மனதின் ஓரத்தில் ஏதோவொன்று அவளை குடைந்துக் கொண்டிருந்தது. எதையும் உறுதியாய் காணாமல் யாருக்கும் அழைத்து சொல்ல அவள் விரும்பவில்லை. தந்தை வருவது நல்லது தான் தனக்கு துணையாய் அவர் இருப்பார் என்று சற்று தெம்பாகியது அவளுக்கு.
இருபது நிமிடத்தில் காரில் வந்து இறங்கினார் வேலன். அங்கிருந்த சூழ்நிலையை நொடியில் புரிந்துக் கொண்டவர் மனைவிக்கு அழைத்து வரச் சொன்னார்.
“அப்பா ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்லி சொன்னாங்கப்பா போகணும்” என்றாள்.
அப்போது தான் சற்று கண் திறந்து பார்த்தார் சீதா. “என்னாச்சு உதிரனுக்கு என்னாச்சு” என்று மருமகளை பார்த்துக் கேட்டார்.
அவள் என்ன பதில் சொல்வாள் “பிசி ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்லிட்டு போனாங்க அத்தை”
“உதிரன்??” என்றார் அவர் கேள்வியாய்.
“ஒண்ணும் இருக்காது அத்தை” என்றவளை மற்ற மூவருமே ஆச்சரியமாகத் தான் பார்த்தனர்.
“அப்போ அந்த போலீஸ் சொன்னது…” என்று இழுத்தார் சீதாதேவி.
“அடையாளம் காட்டணுமாம் நான் போயிட்டு வர்றேன் அத்தை” என்றாள்.
‘இந்த பெண் எப்படி இப்படி தைரியமாக இருக்கிறாள்’ என்று தன் மகளைத்தான் பார்த்தார் வேலன். ஒரு வேளை அழுகையை கட்டுப்படுத்துகிறாளா என்ற எண்ணமும் எழுந்தது அவருக்கு.
ஆனால் சற்று முன் பேசிய அவளின் பேச்சில் சற்றும் பிசிறில்லையே. தெளிவாகத்தானே பேசினாள் என்றும் யோசனை ஓடியது அவருக்கு.
“நானும் வர்றேன்” என்றார் சீதா.
“இல்லை அத்தை நீங்க இப்போ தான் மயங்கி விழுந்திருக்கீங்க. நீங்க இருங்க, நான் அப்பா கூட போய் என்னன்னு பார்த்திட்டு வர்றேன்” என்றாள்.
“அக்கா நீங்க அம்மாக்கு துணையா இருக்கீங்களா” என்றாள்.
மல்லிகாவிற்கு ஏற்கனவே வீட்டிற்கு கிளம்ப நேரமாகியிருந்தது. கணவரில்லாத பெண்ணவள் வீட்டில் எட்டு வயது மகளை வயதான தன் மாமியாரிடம் தான் விட்டு வந்திருந்தாள்.
இந்த மாதிரி சூழ்நிலையில் அவர்களைவிட்டு கிளம்பவும் முடியவில்லை. தன்னை போல ஒரு நிலை தானே இப்போது அந்த பெண்ணிற்கும் என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“நீங்க போயிட்டு வாங்கம்மா நான் பார்த்துக்கறேன்” என்றாள் அவள்.
“மல்லிகா தமிழை வரச்சொல்லியிருக்கேன். அதுவரைக்கும் நீ இருந்தா போதும்மா, உங்க வீட்டில தனியா இருப்பாங்க நீ போகணும்ல” என்றார் வேலன்.
“சரிங்கய்யா அம்மா வந்ததும் நான் வீட்டுக்கு போய் சொல்லிட்டு திரும்பி வர்றேன்” என்றாள் அப்பெண்.
அவளுக்கு நன்றி பார்வை கொடுத்து அங்கிருந்து தன் தந்தையுடன் காரில் கிளம்பினாள் சினமிகா.
“சினா நானும் வர்றேன்ம்மா” என்று அடம் பிடித்தார் சீதா.
“அத்தை ப்ளீஸ் நீங்க இங்க இருங்க நான் போயிட்டு போன் பண்றேன்” என்றுவிட்டு தான கிளம்பியிருந்தாள்.
இதோ அவர்கள் மருத்துவமனைக்கும் வந்தாயிற்று. அந்த காவலர் கிளம்பும் முன் கொடுத்திருந்த எண்ணுக்கு அழைத்து தாங்கள் வந்த விபரத்தை உரைத்திருக்க அவர் நேரே பிணவறைக்கு வரச்சொல்ல உள்ளுக்குள் அப்படியொரு நடுக்கம் சினமிகாவிற்கு.
அதை வெளிக்காட்டாது தன் தந்தையிடம் “அப்பா மார்ச்சுவரிக்கு வரச்சொல்றாங்கப்பா” என்று சொல்ல அத்தந்தைக்கு தான் மகளின் நிலை என்னவோ செய்தது.
ஆரம்பித்த வேகத்தில் என் மகளின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டாயே கடவுளே என்று ஊமையாய் அழுதது அவருள்ளம்.
அங்கிருந்த ஒரு நபரிடம் கேட்டுக்கொண்டு மார்ச்சுவரிக்கு வந்து சேர “என்னம்மா எவ்வளோ நேரம்மா நீங்க வர்றதுக்கு” என்று காவலர் ஒருவர் சலித்துக் கொண்டார்.
“இது அந்த வண்டியில இருந்தது” என்று சொல்லி வண்டி டாக்குமெண்ட்சை காண்பித்தார் அவர்.
அதை வாங்கி பார்த்தவள் அர்த்தமாய் தன் தந்தையை பார்க்க அவளிடமிருந்து அதை வாங்கி அவரும் பார்த்தார். “இது மாப்பிள்ளையோட வண்டி டாக்குமெண்ட்ஸ் தான்” என்றார்.
“இது அவர் மேல போட்டிருந்த ஜெர்கின்” என்று காட்ட குருதிக்கறை படிந்த அந்த ஜெர்கினை பார்த்த சினமிகா தொப்பென்று அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
“என்னம்மா இது அவருது தானா” என்று காவலர் கேட்க பதில்லில்லை அவளிடம்.
வேலன் மகளின் அருகில் வந்து “சினா இது மாப்பிள்ளை தானாம்மா. சொல்லும்மா” என்று கேட்கும் போதே கண்களில் நீர் வழிந்தது அவருக்கு.
தொண்டைக்குள் எதையோ அடைக்கும் உணர்வொன்று எழ அதை விழுங்கிக் கொண்டே அவள் தலையசைக்க வேலனால் தாங்கவே முடியவில்லை.
“நான் உள்ள வந்து பார்க்கலாமா??” என்று காவலரை பார்த்து கேட்டார்.
காவலர் காலையில் அவர் எங்கு சென்றார் எதற்காக சென்றார் என்ற அனைத்து விபரத்தையும் வீட்டிற்கு வந்திருந்த போதே கேட்டுச் சென்றிருந்தார் தான். 
மேலோட்டமாய் விசாரித்ததை விலாவாரியாக அவர்கள் கேட்க சினமிகா பதில் கொடுத்தாள் அவர்களுக்கு.
“சார் அந்த பொண்ணு என்ன நிலமையில இருக்கு நீங்க பாட்டுக்கு அது என்ன இது என்னன்னு கேட்கறீங்க. ப்ளீஸ் சார் கொஞ்சம் மனுஷத்தன்மையோட நடந்துக்கங்க” என்று வேலன் சற்று சத்தமாகவே சொன்னார்.
“சார் எங்க கடமையை தான் சார் நாங்க பண்றோம்…”
“அப்போ முதல்ல என்ன பார்க்க விடுங்க சார்…” என்றார் வேலன்.
“டாக்டர் இப்போ தான் வந்தார், அட்டாப்சி முடிச்சுட்டு தான் சார் இனி பாடி கிடைக்கும் வெயிட் பண்ணுங்க சார்” என்றார் காவலர்.
சற்று முன் தான் தமிழ் போன் செய்து சினமிகாவின் வீட்டிற்கு வந்ததாக கூறியிருந்தார். வேலன் அவரிடம் மருத்துவமனையில் நடந்த விஷயத்தை சொல்லியிருக்க போனிலேயே அழ ஆரம்பித்துவிட்டார் தமிழ்.
“தமிழ் அவங்களை பார்த்துக்கோ, இங்க என்னன்னு பார்த்திட்டு நான் சினாவை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்” என்றார் அவர்.
சிறிது நேரம் கழித்து காவலரின் முன் சென்று நின்றவர் “சார் உள்ள எவ்வளவு நேரம் ஆகும் சார்…”
“எனக்கெப்படி சார் தெரியும், இன்னைக்கு மட்டும் தற்கொலை, ஆக்ஸிடென்ட்ன்னு ஏழு கேசு வந்திருக்கு சார்… டாக்டர் ஒவ்வொண்ணும் அட்டாப்சி பண்ணனும், முடிச்சுட்டு சொல்வாங்க சார்…”
“வீட்டில என்ன ஏதுன்னு பார்க்கணும்ல சார்…”
“எனக்கு உங்க நிலைமை புரியுது சார், ஆனா இதான் ப்ரொசீஜர் அதை நான் மாத்த முடியாதுல சார்… நான் வேணா போய் கேட்டு வந்து சொல்றேன் சார்” என்றார் அந்த காவலர் கொஞ்சம் தன்மையாக.
“என் பொண்ணை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு சார். அவளை வீட்டில விட்டு நான் மட்டும் வரட்டுமா சார்…”
“அவங்க வீட்டாளுங்க கையெழுத்து போடணும் சார், அவங்க இருக்கணும்”
“நான் போடுறேன் நான் அவரோட மாமனார் தான்”
“இல்லை சார் அப்பா, அம்மா, பொண்டாட்டி புள்ளைங்க இப்படி யாராச்சும் தான் சார் போடணும். நாளபின்ன எங்களை யாரும் கேள்வி கேக்கக்கூடாதுல சார்” என்றார் அவர் தன் தரப்பாய்.
வேலன் வேறொன்றும் பேசாமல் மகளின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டார். அங்கு அப்போது இன்னொரு கும்பல் அழுதுக் கொண்டே வர “சினா நாம வெளிய இருப்போம் வாடா” என்றவர் அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்து அமர்ந்தார்.
காவலரிடம் வெளியில் இருப்பதாக சொல்லித்தான் வந்திருந்தார். சினமிகா அங்கு குமித்து வைத்திருந்த மண் மேட்டில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
அழுக வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. பேசாமலே இறுக்கமாய் அமர்ந்திருந்தாள் சினமிகா. அவள் என்ன நினைக்கிறாள் என்று வேலனால் கணிக்கக் கூட முடியவில்லை.
வாய்விட்டு அழுதால் தேற்றலாம் இது என்ன மனநிலை என்று மகளையே தான் பார்த்திருந்தார் அவர். இப்படி வந்து உட்கார்ந்திருப்போம் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை.
நேரம் தான் கடந்துக் கொண்டிருந்ததே தவிர இன்னமும் உள்ளிருந்து அட்டாப்சி முடித்ததாய் எந்த தகவலும் வரவில்லை.
“சினா ஏதாச்சும் குடிக்கிறியாம்மா…” என்றார் வேலன்.
அவள் தலை இல்லையென்று ஆடியது. காலையில் உதிரனுடன் பேசியதெல்லாம் ஞாபகத்திற்கு வந்து போனது. ‘உன்னைவிட்டு நான் எங்க போவேன்’ என்ற அவன் குரல் மட்டும் அவளுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
இரவு ஏழு மணியளவில் தான் வீட்டிற்கு காவலர் வந்து சொல்லி சென்றிருந்தார். இவர்களும் அதற்கு பின் வீட்டிலிருந்து கிளம்பி அதோ இதோவென்று ஒன்பது மணியளவில் வந்து சேர்ந்திருந்தனர்.
தற்போது நேரம் அதிகாலையை நெருங்கியிருந்தது. காவலர் வெளியே வந்து வேலனிடம் கண்ஜாடை காட்ட அவரின் பின்னே சென்றார் அவர்.
“சொல்லுங்க சார்”
“அடுத்தது உங்க கேஸ் தான் அட்டாப்சி பண்ணப் போறாங்க. டாக்டர் காபி குடிக்க போயிருக்கார், வந்ததும் ஆரம்பிச்சிடுவாரு, எப்படியும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும்” என்று சொல்லிச் சென்றார் அவர்.
சினமிகாவோ கலைந்த தலையுடன் இருட்டில் எங்கோ வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க வேலனுக்கு பொங்கிக் கொண்டு வந்தது.
வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது, இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை சினமிகா. காவலர் மீண்டும் வந்தவர் வேலனை சத்தமாக அழைத்தார்.
“உங்கது தான் போயிட்டு இருக்கு சார் இப்போ” என்று குரல் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
சினமிகா அமர்ந்திருந்தவள் பரபரப்பாய் எழுந்து நின்றிருந்தாள். “அப்பா… அப்பா…” என்றாள்.
அவளின் குரலில் திரும்பி பார்த்தவர் “என்னம்மா சினா என்னடா” என்றார்.
“அப்பா… அப்பா…” என்றவள் இலக்கின்றி எங்கோ ஓட பயந்து போனார் வேலன்.
“சினா நில்லும்மா என்னாச்சும்மா உனக்கு… சினா… சினா…” என்று குரல் கொடுத்தவாறே மகளை பின் தொடர்ந்தார் அவர்.
சினமிகா ஓடிவந்தவள் எதிரில் ஒருவர் கைத்தாங்கலாய் பற்றியிருக்க தாங்கி தாங்கி நடந்து வந்துக் கொண்டிருந்தவனை நெருங்கி கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள்.
அவள் அழுகை சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரும்பி பார்க்க அதையெல்லாம் அவள் கண்டுக்கொள்ளவில்லை. பின்னோடே ஓடிவந்த வேலனும் அவனைக் கண்டு அதிர்ச்சியாகி நின்றுவிட்டார்.
“சிமி எதுக்குடா அழறே??” என்றான் அவன். அவளிடம் பதிலில்லை கதறி கதறி அழுதுக் கொண்டிருந்தாள்.
அவனருகில் நின்றிருந்தவர் சற்று தள்ளி நின்றுக் கொண்டார். பின்னால் வந்த வேலனைக் கண்ட உதிரன் “என்னாச்சு மாமா நீங்க எல்லாம் இங்க என்ன பண்றீங்க?? சிமி எதுக்கு மாமா அழறா?? நான் ரொம்ப நேரமா வீட்டுக்கு போன் பண்ணேன் யாரும் எடுக்கலை, அம்மா போன் ஸ்விட்ச் ஆப்” என்றான்.
“மாப்பிள்ளை உங்களுக்கு ஒண்ணுமில்லைல”
“எனக்கு ஒண்ணுமில்லை மாமா, வழியில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் கால்ல கொஞ்சம் லேசா கிழிச்சிருச்சு. ஒருத்தன் வேகமா வந்து இடிச்சிட்டான் நான் ரோட்டுக்கு அந்த பக்கம் விழுந்திட்டேன். அதிர்ச்சியில மயக்கமாகிட்டேன். நான் விழுந்தது யாருக்கும் தெரியலை, அங்க செடிகளா இருந்துச்சு”
“நானே மயக்கம் தெளிஞ்சு எழுந்தப்போ தான் பார்த்தேன். கீழ விழுந்ததுல கால்ல ஏதோ கிழிச்சுடுச்சுன்னு”
“மெதுவா எழுந்து வந்து ரோட்டுக்கு வந்தப்போ தான் சார் எனக்கு ஹெல்ப் பண்ணார். எங்க போகணும் கேட்டார் நான் ராஜபாளையம்ன்னு சொல்லவும் நானே கூட்டிட்டு போறேன்னு கூட்டிட்டு வந்தார் மாமா”
“அடிப்பட்டிருக்கு ஆஸ்பிட்டல் போயிட்டு போய்டலாம்ன்னு தான் இங்க வந்தோம் மாமா. இந்த நேரத்துல வேற எந்த கிளினிக் திறந்திருக்காதுல நான் தான் பெரியாஸ்பத்திரிக்கு போய்டலாம்ன்னு இங்க வந்திட்டேன்” என்று சொல்லி முடித்தான் அவன்.
“சிமி எனக்கு ஒண்ணுமில்லை நான் வந்திட்டேன். கண்ணு முழிச்சதும் சார் போன்ல இருந்து உனக்கு போன் பண்ணேன் நீ எடுக்கவே இல்லைடா… சாரிடா எனக்கு எதுவுமில்லைம்மா” என்று அவள் தலையை தடவிக் கொடுத்தான்.
“மாப்பிள்ளை உங்க வண்டி என்னாச்சு??”
“அந்த கதையை ஏன் கேட்கறீங்க மாமா…” என்றவன் ஆரம்பிக்க “சார் கால்ல ப்ளீட் ஆகுது முதல்ல டாக்டர் பார்த்திட்டு அப்புறம் நிதானமா பேசுங்க சார்…” என்று உடன் வந்தவர் சொல்ல சினமிகா என்னும் சிலைக்கு அப்போது தான் உயிர் வந்தது போல் குனிந்து அவன் காலில் அடிப்பட்டிருந்தை பார்த்தாள்.
“அப்பா இவரை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயிட்டு வர்றோம்ப்பா, நீங்க அங்க போய் அந்த போலீஸ்கிட்ட சொல்லுங்க. நான் முடியவும் கூட்டிட்டு வர்றேன்” என்றாள் நிதானமான குரலில்.
“யாரை பார்க்க போகணும் சிமி??” என்றான் அவன் சாவகாசமாய்.
“அது அது வந்து…” என்று இழுத்தார் வேலன்.
“அப்பா நீங்க போங்க…” என்று அவரை அனுப்ப அவர் அங்கிருந்து கிளம்பினார்.
“சார் இவ்வளவு நேரம் பேசிட்டே வந்தேன். உங்க பேரே கேட்கலையே சார் நானு” என்றான் உதிரன் அவனுக்கு உதவி செய்து அழைத்து வந்தவரிடம். “என்னோட பேரு ஷியாம்” என்றார் அவர்.
“என்னோட பேரு உதிரன் சார், இவங்க என் வைப் சினமிகா” என்றான் இவன்.
அவனை அழைத்து சென்று முதலுதவி செய்தனர். உதிரனுக்கு காலில் ஆங்காங்கே கொஞ்சம் சிராப்பு இருந்தது. முழங்காலுக்கு கீழே தான் பெரிதாய் காயமிருந்தது.
மருந்திட்டு கட்டுப்போட்டு வலிக்கு ஊசி போட்டு வலி நிவாரணி மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினர். “சிமி எங்கே போறோம்??” என்றான் அவள் செல்லும் வழி பார்த்து.
“உங்களுக்கு அட்டாப்சி நடந்திட்டு அதை பார்க்க போறோம்” என்ற அவளின் பதில் அதிர்ந்து அவளை பார்த்தான் அவளின் கணவன்.

Advertisement