Advertisement

13
கடை வேலைகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க உதிரனும் சினமிகாவும் அவ்வப்போது அதற்காக வெளியில் சென்று வந்தனர். பெரும்பாலும் உதிரனே தான் செல்வான்.
ரொம்பவும் முக்கியமாக இருந்தால் மட்டுமே சினமிகா உடன் செல்வாள். வீட்டில் இருக்கும் பொழுதுகள் அவளுக்கு வேலையே இல்லாதது போலவே இருந்தது.
சீதாதேவி எந்த வேலையும் அவளிடம் சொல்வதில்லை. அவளாகவே இதை செய்யவா அதை செய்யவா என்றால் செய்யேன் என்பார் ஒரு முறை, இல்லையென்றால் நீ உன் புருஷனை கவனி நான் பார்த்துக்கறேன் என்று முகத்திலடித்தது போலவே சொல்லிவிடுவார்.
அன்று காலையில் அவர் டிபன் செய்துக் கொண்டிருக்க சினமிகா அருகே சென்றவள் “அத்தை தோசை தானே நான் ஊத்துறேன். நீங்க உட்காருங்களேன்” என்றாள்.
“நீ எதுக்கு இப்போ இங்கே வந்தே?? நீ போ நான் பார்த்துக்கறேன், இப்போவே எல்லாத்தையும் என்கிட்ட வாங்கிக்க பார்க்காதே” என்று அவர் கடுமையாக சொல்லிவிட அவளுக்கு முகம் வாடிப்போனது.
அந்நேரம் உதிரன் சமையலறை வாயிலில் நின்றிருந்தான். தன் அன்னையிடம் பேங்க் பாஸ்புக் எங்கிருக்கிறது என்று கேட்க வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.
“அம்மா என்ன பேசறீங்க நீங்க?? எதுக்கு அவளை இவ்வளவு கடுமையா பேசறீங்க. இப்போ அவ என்ன கேட்டா?? நான் செய்யறேன்னு தானே, அவ தான் செய்யட்டுமே, நீங்களே ஏன் செஞ்சி கஷ்டப்படுறீங்க??” என்று பரிந்து வந்தான்.
“நானும் பலதடவை பார்த்திட்டேன் அவ வேலை செய்யறேன்னு வந்தா நீங்க அவளை எதுவும் பேசிடறீங்க??” என்றான் தொடர்ந்து.
“ஏங்க?? நீங்க எதுக்கு எங்களுக்கு நடுவுல வர்றீங்க?? நான் உங்ககிட்ட கம்பிளைன்ட் பண்ணேனா??” என்று சினமிகா சொல்ல “ஓ!! நீ சொல்லி தான் நான் கேட்கணுமா, நான் பார்க்கறதை நான் கேட்கக் கூடாதா??” என்றான் அவனும் விடாது.
“நீங்க பேசாம போங்க நான் பார்த்துக்கறேன்” என்று அவனை வெளியே அவள் தள்ளிக்கொண்டு போக “விடுமா சினா அவன் உண்மையை தானே சொன்னான்” என்றார் சீதா.
“இங்க வா” என்று அவளை அருகே அழைக்க அவளும் சென்றாள்.
“உனக்கு என் மேல கோபம் இல்லை தானே”
அவள் இல்லையென்று தலையாட்டினாள். “ஏன்??” என்றார்.
“ஏதாச்சும் காரணமிருக்கும்ன்னு தோணிச்சு. மத்தப்படி நீங்க என்கிட்ட நல்லா தானே நடந்துக்கறீங்க அத்தை” என்றாள்.
‘அடப்பாவிகளா இதுக்கு தான் அம்மாக்கும் பொண்டாட்டிக்கும் நடுவுல போகக்கூடாதுன்னு சொல்றாங்களோ. நமக்கே வைச்சுட்டாங்கடா ஆப்பு. நாம கேள்வி கேட்டிருக்க கூடாதோ’ என்று யோசனை ஓடியது உதிரனுக்கு.
“உதிரா உனக்கு தெரியாது நான் இந்த வீட்டுக்கு உங்கப்பாவோட முதல் முறையா வந்தப்போ என்ன கஷ்டப்பட்டேன்னு”
“பிடிக்காம இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததுனாலேயே என்னை அப்படி வேலை வாங்குவாங்க. உன்னோட அத்தைங்க ரெண்டு பேருக்கும் அப்போவே கல்யாணம் ஆகிடுச்சு”
“கல்யாணம் ஆனா முதல் நாள் என் மாமியார் எல்லாருக்கும் காபி போட்டு எடுத்திட்டு வான்னு என்கிட்ட சொல்றாங்க”
“இந்த வீட்டுல எது எது எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது. தட்டுத்தடுமாறி எல்லாருக்கும் ஒரு வழியா காபி போட்டேன். அவ்வளவு குறை சொன்னாங்க. அத்தனை பாத்திரத்தையும் எடுத்து போட்டு விளக்கி வைன்னு சொன்னாங்க”
“இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு ஒரு மாதிரி எனக்கு போகும். உங்கப்பா என்னை கல்யாணம் பண்ணதுனால அவருக்கு பேசி வைச்சிருந்த பொண்ணை உங்க சித்தப்பாக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க”
“நானும் இந்த வீட்டுக்கு மருமக தான் அவங்களுக்கும் அப்படி தான். ஆனா, வேலை எனக்கு மட்டும் தான் இருக்கும், உங்கப்பாக்கிட்ட என்னால பேசக்கூட முடியாது. நான் நைட் ரூமுக்கு போகும் போது உங்கப்பா தூங்கியிருப்பாங்க…”
“இதுக்கு நடுவுல உன்னோட சித்தி கர்ப்பமானாங்க. அப்போ ஆரம்பிச்சது எனக்கு பிரச்சனை, அவளுக்கு முன்னாடியே வந்தியே நீ சும்மாவே இருக்கியேன்னு. நாங்க சந்தோசமா இருந்தா தானே எல்லாம் நடக்கும்”
“எனக்கு ஒரு மாதிரி வெறுத்து போன நிலை. இந்த வீட்டில நான் கிட்டத்தட்ட வேலைக்காரியா தான் இருந்தேன். உங்கப்பாவும் எதுவும் கேட்க மாட்டாங்க, அப்போலாம் எனக்கு அவங்க மேல அவ்வளவு கோபம் எதுவும் கேட்கலையேன்னு”
“உங்க பாட்டிக்கு கொஞ்ச காலம் கழிச்சு என்னை புரிஞ்சுது. மத்தவங்க முன்னாடி காட்டிகிடலைன்னாலும் தனியா இருக்கும் போது என்னை அவங்க எதுவும் சொன்னதில்லை”
“கொஞ்ச நாள் கழிச்சு அவங்க உடம்பு முடியாம படுக்கையிலேயே காலம் போச்சு. அத்தனையும் நான் தான் செஞ்சேன், அவங்களும் போய் சேர்ந்திட்டாங்க. உங்க சின்ன சித்தப்பாக்கும் கல்யாணம் ஆகி வீட்டுக்கு இன்னொரு மருமகளும் வந்தாங்க”
“எப்பவும் போல நானே தான் வேலைக்காரியா இருந்தேன். அது நாள் வரைக்கும் எதுவுமே பேசாம இருந்த உங்கப்பா அப்போ தான் ஆடித்தீர்த்தார். “அம்மாவுக்காக தான் பேசாம இருந்தேன். இனிமே என் பொண்டாட்டியை வேலை வாங்குனீங்கன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்னு சொல்லிட்டார்”
“வீட்டில அவ மட்டும் தான் மருமகளா மத்த இரண்டு பேரும் எதுக்கு இருக்காங்க இனி அவங்களும் வேலை செய்யணும்ன்னு சொல்ல அப்போ தான் எல்லாரும் இவர்கிட்ட சண்டை போட்டு தனியா வெளிய போனாங்க…”
“அவங்க எல்லாம் போன பிறகு தான் எனக்கு விடிவு காலமே பிறந்திச்சு. நான் ஏன் தெரியுமா உனக்கு அப்புறம் இன்னொரு குழந்தை பெத்துக்கலை, என் கஷ்டம் என் மருமக படக்கூடாதுன்னு தான்…” என்று அவர் சொல்லி முடிக்க சினமிகா அவரை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
“நீ வேலை செய்யக்கூடாதுன்னு நான் நினைக்கலை சினா. கண்டிப்பா நீ தான் செய்யப் போறே. என்னால முடிஞ்சா வரைக்கும் நான் செய்றேன். இது நீங்க சந்தோசமா இருக்க வேண்டிய நேரம்”
“எனக்கு இந்த வீட்டில கிடைக்காதது உனக்கு கிடைக்கணும்மா” என்று அவர் சொல்ல சினமிகா நெகிழ்ந்து போனாள்.
“அப்போ நான் தான் வில்லனா??” என்ற குரலில் மாமியாரும் மருமகளும் திரும்பி பார்த்தனர்.
“போடா நீ என்கிட்ட பேசாத” என்று கோபித்துக் கொண்டார் சீதா.
“ஏன்மா?? நான் என்ன பண்ணேன்?? உங்க மருமக கூடவே ராசியா இருக்கீங்க??”
“நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லைல” என்று சொல்லும் போது அவர் குரல் தழுதழுக்க சினமிகா தன் கணவனை பார்த்தாள் எல்லாம் உங்களால தான் என்று.
“அம்மா நான் புரிஞ்சுக்காம கேட்கலை. நீங்க ஏன் அப்படி பண்றீங்கன்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்”
“இப்படியே விட்டா ஒரு நேரம் இல்லனா ஒரு நேரம் அவளுக்கும் சலிப்பு வரலாம்ல”
“ஏங்க??”
“சிமி நீ பேசாம இரு… இங்க பாருங்கம்மா நீங்க உங்க மாமியார் மாதிரி கிடையாது. நீங்க சிமிக்கு ஒரு நல்ல மாமியார், அவளை புரிஞ்சுக்கோங்கம்மா…”
“உங்க எண்ணம் சரியா தான் நான் இல்லைங்கலை. கூடமாட அவ வேலை பார்க்கறதுல எந்த தப்புமில்லை. இனி கடை வந்திட்டா அவ அதுல கொஞ்சம் பிசி ஆகிடுவா. அவளால முழுசா வீட்டு வேலை பார்க்க முடியாது”
“ஆனா முடிஞ்சதை அவ செய்யட்டும்மா. அப்போ தான் அவளுக்கும் இது நம்ம வீடுங்கற ஒரு உணர்வு வரும்” என்று தன் அன்னைக்கு புரிய வைக்க “புரியுது உதிரா” என்றார் அவர்.
நாட்கள் அழகாய் நகர ஆரம்பித்தது. கடை வேலைகள் சிறிது சிறிதாக ஆரம்பித்தது தற்போது முடிவடையும் நிலையில் இருந்தது. வீட்டின் முன் பகுதி கடைக்காக சரிசெய்யப்பட்டு பொலிவாக காட்சி அளித்தது.
இன்னும் பத்து தினங்களில் கடை திறப்புவிழா என்றிருந்த நிலையில் சினமிகாவிற்கு நீலவண்ணனிடம் இருந்து வக்கீல் நோட்டீஸ் வந்தது. அவள் கடை ஆரம்பித்தே அவர்களின் சொத்தில் தான், அதாவது அனைவருக்கும் பொதுவான சொத்தில் இருந்து தொடங்குகிறாள் என்றும் குடும்ப சொத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாள் என்பது போன்ற பல விஷயங்கள் அதில் அடங்கியிருந்தது.
“என்ன சிமி?? என்ன இது??” என்று கேட்டவாறே அருகில் வந்தான் உதிரன்.
“நீலா அனுப்பியிருக்கான், பாருங்க” என்றவள் அதை தன் கணவனிடம் நீட்ட அதைப் படித்தவனின் முகம் ஏகத்துக்கும் கடுகடுத்தது.
“அவனுக்கு வாங்கினது பத்தலைன்னு நினைக்கிறேன்” என்று பல்லைக் கடித்தான்.
சினமிகாவோ யோசனையாக இருந்தாள். சீதா அப்போது தான் அங்கு வந்தவர் “என்னாச்சு” என்றிருக்க உதிரன் நடந்ததை சொன்னான்.
“ஏன்மா இதெல்லாம் ஒத்து வருமா?? எதுக்கு உன் தம்பி இதெல்லாம் பண்றான்??” என்றார் அவர் கவலையாக.
“பார்த்துக்கலாம் விடுங்க…” என்றாள் அவள் சற்றும் தளராத குரலில்.
“சிமி நிஜமா தான் சொல்றியா??”
“உறுதியா சொல்றேன் அவனால எதுவும் செய்ய முடியாதுங்க. எனக்கு இப்போ வேற ஒரு எண்ணம் தான் உறுத்துது”
“என்னம்மா??”
“என்னை நீங்க இப்போ ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டிட்டு போறீங்களா??”
“எதுக்கு சிமி??”
“கூட்டிட்டு போங்க அங்க வைச்சு சொல்றேன்” என்றவள் “அத்தை நாங்க இப்போ போயிட்டு வர்றோம். வந்து என்னாச்சுன்னு சொல்றேன் அத்தை” என்று சொல்லி விடைபெற்றாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் அவளின் வீட்டிற்கு வந்திருந்தனர். சினமிகா கிளம்பும் முன் தன் தந்தைக்கு அழைத்து சொல்லியிருந்தாள் வீட்டிற்கு வருமாறு.
சினமிகா உதிரனின் மறுவீடு முடிந்த சில தினங்களில் மேகாவின் வளைகாப்பும் முடிந்து அவள் இப்போது தாய் வீட்டில் தானிருக்கிறாள்.
இவர்கள் வந்து இறங்கவுமே வேலன் வாயிலில் வந்து வரவேற்றார். “வாங்க மாப்பிள்ளை” என்று சொன்னவர் இருவரின் முகத்தை தான் பார்த்திருந்தார்.
ஏதோ பிரச்சனை என்ற அளவில் அவருக்கு புரிந்தது. பொதுவாய் சினமிகா எதையும் பெரிதுபடுத்தும் ரகமில்லை. அவளே சொல்கிறாள் என்றால் விஷயம் பெரிது என்று அவருக்கு புரிந்தது.
“மேகா எங்கப்பா??”
“உள்ள தான் இருக்காம்மா…”
“அவளையும் வரச்சொல்லுங்கப்பா…” என்றவள் ஹாலிலேயே அமர்ந்துக் கொண்டாள்.
“சினா என்னாச்சும்மா ஏன் ஒரு மாதிரியா இருக்கே??” என்று கேட்டேவிட்டார் தமிழ்.
“சொல்றேன்ம்மா” என்றாள்.
தமிழ் இருவருக்கும் குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார். “நான் எதுவும் சாப்பிடுற மூட்ல இல்லைம்மா” என்றவள் அதை மறுக்க உதிரன் மட்டும் வாங்கிக் கொண்டான்.
“வாக்கா வாங்க மாமா” என்றாள் மேகா.
“இப்போ தான் என்னைப் பார்க்க வரணும்ன்னு உங்களுக்கு தோணிச்சா?? வளைக்காப்பு அன்னைக்கு வந்ததோட சரி, பத்து நாளாச்சு…” என்றாள்.
“அதான் இப்போ வந்திட்டோமே” என்றாள் சினமிகா பட்டும்படாமலும்.
“அப்பா இதை பாருங்க” என்றவள் அவளுக்கு வந்திருந்த நோட்டீசை அவரிடம் காட்டினாள். அதை படித்து பார்த்தவரின் முகம் கோபத்தில் ஜொலித்தது.
“அவனுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு. எதுக்கு மேலே மேலே அவன் பிரச்சனை பண்ணிட்டு இருக்கான்ம்மா…”
“அப்பா எனக்கு தெரிய வேண்டியது ஒரு விஷயம் தான். நாங்க கடை திறக்கப் போறோம்ன்னு அவனுக்கு எப்படி தெரியும்??”
வேலன் அந்த இடத்தில் யோசிக்க ஆரம்பிக்க உதிரனுக்கு அவள் ஏன் அங்கு அழைத்து வந்தாள் என்பதும் புரிந்தது. அவன் பார்வை மேகாவை தான் நோக்கியது.
வேலன் முதலில் தமிழை பார்க்க அவரோ நானில்லை என்ற பார்வை கொடுக்க அவரின் பார்வை தன்னையுமறியாமல் மேகாவின் புறம் திரும்பியது.
அதை புரிந்தவளாய் “அதுவந்து நான் தான்பா சொன்னேன்” என்றாள் அவள்.
“தேங்க்ஸ்” என்ற குரல் சினமிகாவிடமிருந்து ஒலித்தது.
“அப்பா நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுப்படுத்திகறேன். இந்த நிமிசத்துல இருந்து நான் உங்களுக்கு பொண்ணு மட்டும் தான். யாருக்கும் அக்காவா இனி நான் இருக்கலை. இருக்கவும் மாட்டேன்” என்றாள் உறுதியான குரலில்.
“அக்கா” என்றும் “சினா” என்று அதிர்ச்சியாய் குரல் கொடுத்தனர்.
“அக்கா நான் என்ன தப்பு பண்ணேன்க்கா. என்னை ஏன் நீ வெறுக்கற??”
“உண்மையை சொல்லு மேகா நான் உன்னை வெறுத்தனா?? இல்லை நீயா??”
“உனக்கு என் மேல அப்படி என்ன காழ்புணர்ச்சி எனக்கு தெரியலைம்மா. வேணாம் அது மேல மேல வளர நான் இடம் கொடுக்க விரும்பலை”
“நீ கோபத்துல முடிவெடுக்கற சினா” என்றார் தமிழ்.
“அம்மா எனக்கு யார் மேலயும் என் கோபமும் இல்லை. கோபமே அறியாதவள்ன்னு எனக்கு பேரு வைச்சுட்டு நீங்களே இப்படி சொல்றீங்க”
“நிச்சயம் இது கோபத்துல எடுத்த முடிவு இல்லை. மேல மேல எந்த வெறுப்பையும் நான் வளர்த்த விருப்பப்படலைம்மா…”
“நான் அண்ணாகிட்ட சொன்னது தப்பு தான்க்கா அவங்க இப்படி செய்வாங்கன்னு எனக்கு தெரியாது” என்றாள் அவள் கலங்கிய குரலில்.
“அவனுக்கு இந்த விஷயத்தை பத்தி நீ சொல்ல வேண்டிய அவசியமே இல்லை மேகா. உனக்கு அப்பா எழுதி வைச்ச கடையை நீ காப்பாத்திக்க நினைச்சு தான் அவனோட நல்ல உறவை நீ மெயின்டெயின் பண்ணுறேன்னு புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை மேகா” என்று அவள் மேகாவின் மனநிலையை சரியாய் கணித்து சொன்னாள்.
“அக்கா!! அது வந்து”
“வேணாம் இதுக்கு மேல பேசி உன்னை வருத்தப்படுத்தவோ என்னை கஷ்டப்படுத்திக்கவோ நான் விரும்பலை. எனக்கு இந்த வீட்டை பொறுத்தவரை அப்பா, அம்மா மட்டும் தான் உறவு”
“சினா வேணாம்டா அவ பாவம் உன்னோட தங்கை தானே விட்டுக் கொடுத்து போயேன்டா”
விரக்தி சிரிப்பொன்றை உதிர்த்தான் சினமிகா. “போதும்மா நிறைய விட்டுக் கொடுத்திட்டேன். எனக்கு யாரோட வெறுப்பும் வேணாம்மா. நான் யார் வம்புக்கும் போகலை, எனக்கு மட்டும் எதுக்கு இப்படி நடக்கணும் சொல்லுங்க”
“இவங்களுக்கு என் மேல என்னமா அப்படியொரு துவேஷம் நான் எந்த கெடுதலும் யாருக்கும் செய்யலையேம்மா…” என்று சொல்லும் போது அவளின் குரல் பிசிறு தட்டியது.
“சிமி” என்று அருகே வந்திருந்தான் உதிரன். பார்வையாலேயே அவனிடம் ஒன்றுமில்லை என்றவள் தன் தந்தையிடம் திரும்பி “அப்பா நான் சொன்னதுல எதுவும் தப்பிருக்காப்பா” என்றாள்.
“இல்லைம்மா இனி நீ என்ன செஞ்சாலும் நான் தடுக்க மாட்டேன்ம்மா. நானும் ஒரு முடிவுக்கு வந்திட்டேன்” என்றவரின் முகத்திலும் ஒரு தீவிர பாவம் வந்திருந்தது.
“மேகா உனக்கு இதுக்கு முன்னாடி சொல்லியிருக்கோம் உனக்கு நீலா எப்பவும் துணையா இருக்கா மாட்டான். அக்கா தான் எல்லாத்துக்கும் வரணும்ன்னு. எங்களுக்கு அப்புறம் உனக்கு உறவா இருக்கப் போறது அவ மட்டும் தான்னு”
“அவ்வளவு சொல்லியும் நீ இப்படி பண்ணிட்டியேம்மா” என்றார் அவர்.
“அப்பா இல்லைப்பா நான் சொல்றதை நீங்களாச்சும் கேளுங்கப்பா”
“நீலா ஒரு பணத்தாசை பிடிச்சவன்னா நீ சுயநலவாதியா இருக்கே… விடும்மா நான் எதுவும் இனி உன்னை சொல்ல மாட்டேன். நாங்க இருக்க வரை உனக்கு செய்வோம், அதுக்கு பிறகு யாரும் உனக்காக வரமாட்டாங்க. எல்லாமே இனி முடிஞ்சது” என்றார் அவர்.
“அப்பா நாங்க கிளம்பறோம். அம்மா வர்றோம்” என்று கிளம்பினாள் சினமிகா.
“அக்கா ப்ளீஸ்க்கா” என்று அருகே வந்து சினமிகாவின் கையை பிடித்தாள் மேகா.
“மேகா எனக்கு உன் மேல கோபமில்லை. உனக்காக நாங்க யாரும் நிக்க மாட்டோம்ன்னு நினைச்சுட்டேல்ல நீ… என்னத்தை சொல்ல விடு… உடம்பை பார்த்துக்கோ, நல்ல படியா குழந்தையை பெத்தெடு”
“உன் குடும்பம் தான் உனக்கு எல்லாம். அவங்களை யாருக்காகவும் விட்டுக்கொடுத்திடாதே. இதை உனக்கு அக்காவா சொல்லலை. எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு நான் சொல்ற அறிவுரை அவ்வளவு தான், வர்றேன்” என்றுவிட்டு உதிரனை பார்த்தாள்.
அவனும் தன் மாமா அத்தையிடம் சொல்லிக் கொண்டவன் மேகாவை ஒரு பார்வை மட்டும் பார்த்து சினமிகாவுடன் கிளம்பிவிட்டான்.

Advertisement