Advertisement

12
“அத்தை நான் காய் வெட்டித் தரட்டுமா??” என்றவளை முறைத்து பார்த்தார் சீதா.
“உன்கிட்ட எத்தனை தரம் சொல்றது இந்த சமையல் வேலையை என்கிட்ட இருந்து பிடிங்க பார்க்காதேன்னு” என்று கடுமையாகவே சொன்னார் சீதா.
“அது வந்து அத்தை நான் வேறென்ன செய்யட்டும். சமையல் நீங்களே செய்ங்க, நான் இந்த காய்கறி தானே நறுக்கித் தரவா”
“நீ எந்த வேலையும் பார்க்க வேணாம் பேசாம உன் புருஷனை மட்டும் கவனி. முதல்ல இங்க இருந்து போ” என்று சொல்ல முகம் வாட அங்கிருந்து நகர்ந்தாள் சினமிகா.
அவர்கள் அறைக்கு வந்திருக்க உதிரன் அப்போது தான் குளித்து வந்திருந்தான். சினமிகா மிகவும் வாடி சோர்ந்து அமர்ந்திருந்தாள்.
முதல் நாள் தான் மறுவீடு முடிந்து வீட்டுக்கு வந்திருந்தனர். இவளின் சோர்ந்த முகம் பார்த்து அருகே வந்து அவளை அணைத்துக் கொண்டே கேட்டான் “என்னாச்சு??”
அதுவரை ஏதோ யோசனையில் இருந்தவள் அப்போது தான் அவனை உணர்ந்தாள். “ஒண்ணுமில்லைங்க”
“அப்புறம் ஏன் உன் முகம் வாடிப் போய் இருக்கு?? அம்மாக்கு ஹெல்ப் பண்றேன்னு தானே போனே”
“ஹ்ம்ம் ஆமா”
“அப்புறம் ஏன் வந்தே??”
“அத்தை தான் உங்களை கவனிக்கச் சொன்னாங்க…”
“ஹேய் சூப்பர்ல இப்படி ஒரு அம்மா கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும்” என்றவன் அவள் கன்னத்தை கடித்தான்.
“அவுச்!! எதுக்கு கடிக்கறீங்க வலிக்குது”
“நல்லா வலிக்கட்டும், கடிப்பேன்னு முன்னாடியே சொல்லியிருக்கேன்ல அதை தான் செய்யறேன்”
“நீங்க கடைக்கு கிளம்பியாச்சா??” என்று அவள் கேட்க “இல்லை” என்றான்.
“ஏன்??”
“இனிமே கடைக்கு போகப் போறதில்லை. வேற வேலை தேடலாம்ன்னு இருக்கேன்…”
“என்ன… என்ன சொல்றீங்க?? ஏன்??”
“முன்னாடியே முடிவு பண்ணது தான் சிமி… இப்போ யோசிச்சது இல்லை”
“ஏன் அப்படி??”
“பாரு வந்தான் வேலை பார்த்தான் பொண்ணையும் கூட்டிட்டு போய்ட்டான், நல்லா செட்டில் ஆகிட்டான் மாமனார் வீட்டிலன்னு சொல்ல மாட்டாங்களா”
“யார் என்ன சொன்னா என்னங்க??”
“வேணாம் சிமி…”
அவளுக்கு அவன் உணர்வுகள் புரிந்து தானிருந்தது இருந்தாலும் கேட்டு வைத்தாள். வேலை என்ற ஒன்று அவனுக்கு அவசியம் என்று அவளுக்கு தெரியும் தானே. இல்லையென்றால் குடும்பம் எப்படி ஓடும்.
கண்டிப்பாக திருமணத்திற்கென்று கொஞ்சம் கடன் ஆகியிருக்கவே செய்யும். வண்டி வேறு கடனில் தான் வாங்கியிருக்கிறார் என்ன செய்ய என்ற யோசனை அவளுக்குள் ஓடியது.
உடைமாற்றி வந்த உதிரன் கண்ணாடி முன் நின்று இன்னமும் தீவிர யோசனையில் இருந்தவளின் பின் வந்து அணைத்து அவள் தோள் வளைவில் முகம் வைத்து “என்ன யோசனை??” என்றான் கண்ணாடியில் தெரிந்த அவளின் முகம் கண்டு.
“நாம இங்க ஒரு கடை ஒபன் பண்ணலாமா??”
“என்ன??”
“நிஜமா தான் கேட்கறேன்…”
“உங்கப்பாவுக்கு எதிராவா??”
“நான் எப்போ அப்படிச் சொன்னேன்??”
“அப்போ நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம் சிமி??”
“நாம இங்க தானே திறக்கப்போறோம் அது எப்படி அப்பாக்கு எதிரான்னு சொல்றீங்க. அவங்களோட எந்த பிசினஸையும் நாம கெடுக்கப் போறதில்லை. நமக்கே நமக்குன்னு புதுசா நெறைய கஸ்டமர்ஸ் கண்டிப்பா கிடைப்பாங்க…”
“நீ சொல்ற ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனா இதுக்கெல்லாம் எப்படியும் ஒரு முதல் வேணுமே??”
“அது பண்ண முடிஞ்சிருந்தா நான் நெறைய ஐடியா வைச்சிருந்தேன், அதெல்லாமே செஞ்சிருப்பேன். அம்மா ரொம்ப பிடிவாதம் வீட்டை வைக்கவோ விக்கவோ கூடாதுன்னு உறுதியா சொல்லிட்டாங்க…”
“நாம எதையும் வைக்க வேணாம், விக்க வேணாம்… என்னோட சேவிங்க்ஸ் கொஞ்சம் இருக்கு…” என்றவளை முறைத்தான் அவன்.
சற்று விலகி நின்றவன் கட்டிலில் சென்று அமர்ந்துக் கொள்ள அவன் எண்ணம் புரிந்தவளாக அருகே வந்து அமர்ந்து அவன் கையை பிடித்துக் கொண்டாள்.
“அது அப்பாவோட பணம் இல்லை. என்னோட உழைப்புக்கான ஊதியம் அது. இந்த ரெண்டு வருஷமா தான் நானும் சம்பளம் வாங்கிட்டு இருக்கேன். அதுவும் அப்பா ரொம்ப கட்டாயப்படுத்தி சொன்னதால சரின்னு வாங்கிக்கிட்டேன்”
“அது அத்தனையும் என்னோட அக்கவுண்ட்ல சும்மாத்தான் இருக்கு. அதிகம் எல்லாம் இல்லை ஒரு அம்பதாயிரம் இருக்கலாம்…”
“அது வேணாம் சிமி” என்று மறுத்தான் உதிரன்.
“நீங்க சம்பாதிச்ச பணத்தை நான் உரிமை கொண்டாடுவேன் தானே. அது மாதிரி தானே இதுவும், இது வேணாம்ன்னு சொன்னா என்னையும் நீங்க விலக்கி வைக்கிறதா எனக்கு தோணும் சொல்லுங்க அப்படித்தான் நான் எடுத்துக்கணுமா??” என்று சொல்ல அவன் அமைதியாக இருந்தான்.
“ப்ளீஸ் ப்ளீஸ் சரின்னு சொல்லுங்க. எனக்கு தெரியும் இந்த பணம் பத்தாது. நாம ஒரு லிஸ்ட் போடுவோம் என்ன தேவைன்னு எவ்வளவு பணம் ஆகும்ன்னு அதுக்கு பிறகு முடிவு பண்ணுவோம்…”
“இப்போவே நோ சொல்லாதீங்க ப்ளீஸ்” என்று அவள் சொல்ல உதிரன் ஒரு மாதிரியாக தலையை ஆட்டி வைத்தான்.
“இல்லை சிமி வண்டி லோன் கல்யாண செலவுன்னு நெறைய இருக்கு. கல்யாண செலவாச்சும் உங்கப்பா பாதி செய்யறேன்னு சொல்லி செஞ்சுட்டார். வந்த பணத்தை வைச்சு அதை செட்டில் பண்ணிடலாம் கொஞ்சம்”
ஆனாலும் இந்த வண்டி லோன் வேற போட்டுட்டேன் அவசரப்பட்டு அது தான் எனக்கு கொஞ்சம் யோசனை…”
“இப்படியே யோசிச்சுட்டே இருந்தா நாம எதுவுமே செய்ய முடியாதுங்க, துணிஞ்சு இறங்கிடணும்” என்று அவள் தோள் கொடுக்க உதிரன் ஒருவாறு தலையசைத்தான்.
“இப்போ மெயின்ல நாம ஒரு கடையை பார்க்கணும், அதுக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கணும்” என்று ஆரம்பிக்க “எந்த கடையும் பார்க்க வேணாம்” என்றாள் சினமிகா.
“என்ன சிமி சொல்றே??”
“ஆமாங்க வேணாம். நம்ம வீடே இவ்வளவு பெரிசா இருக்கு. இங்கவே ஆரம்பிச்சுக்கலாம். முன்னாடி இருக்க பெரிய வராண்டாவை கடைக்கு வைச்சுக்கலாம். சமையலுக்கு மட்டும் பின்னாடி ஒரு ஓலையோ சிமென்ட் ஷீட்டோ போட்டு அதுல செஞ்சுக்கலாம்” என்று அவள் சொல்ல அருகே வந்து அவளை கட்டிக் கொண்டான் அவன்.
“என்னாச்சு??”
“ரொம்ப யோசிக்கறே நீ”
“நான் சொன்னது தப்பா. அத்தை எதுவும் சொல்வாங்களா??”
“அம்மாகிட்டவே பேசிடலாம்” என்றவன் அவளுடனே வெளியில் வந்தான். 
சீதாவிடம் இருவரும் சொல்ல முதலில் அமைதியாக யோசனையில் ஆழ்ந்தார். பின் நிமிர்ந்தவர் “நல்ல யோசனை தான் உதிரா, செய்ங்க” என்று சொன்னாலும் அவரும் பணத்தை பற்றி யோசனையை அவரும் முன் வைக்க சினமிகா உதிரனிடம் சொன்னதையே சொல்லி அவரை சமாதானம் செய்ய ஒரு வழியாய் அவரும் மனதார சரியென்றிட இருவருக்கும் சந்தோசமாக இருந்தது.
மூவரும் அமர்ந்து என்ன தேவை என்று பட்டியலிட்டனர். சினமிகா கடைசியாக சொன்னதை கேட்ட உதிரன் “இது எதுக்கு சிமி??” என்றிட “வேணும்” என்றாள்.
“நீ என்ன பண்ண நினைக்கிறே??”
“அப்பாக்கு எதிரா பண்ண வேணாம்ன்னு நீங்க தானே சொன்னீங்க??”
“ஆமா ஆனா அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்??”
“புதுசா ட்ரை பண்ணலாம்ன்னு இருக்கேன்”
“என்ன சொல்றே நீ??”
“ஆமா புதுசா தான் ட்ரை பண்ணப் போறேன்”
“என்ன செய்யப் போறே அதை வைச்சு??”
“ப்ரீசர் பாக்ஸ் எதுக்கு தேவைப்படும். ஐஸ் ப்ரீஸ் பண்ணத் தானே… அதுக்கு தான் நானும் கேட்டேன். குல்பி செய்யற ஐடியா இருக்கு எனக்கு”
“நம்மோட பால்கோவா டேஸ்ட்டை அதுல அப்படியே கொண்டு வந்தா என்னன்னு தான் அதைச் சொன்னேன். தவிர நாம பால்கோவாவா செஞ்சு விக்காம அதை வைச்சு புதுசா என்ன ஸ்வீட் செய்யலாம்ன்னு பார்ப்போம்”
“இந்த சூர்யகலா, சந்திரகலா ஸ்வீட்ஸ் எல்லாம் கோவா உள்ள வைச்சு செய்வாங்க. அப்புறம் குலாப்ஜாமூன் கூட ரெடிமேட் மிக்ஸ் வைச்சு செய்யறது விட கோவா வைச்சு செய்யறது இன்னும் ருசியா இருக்கும். அப்புறம் இன்னும் நெறைய வெரைட்டி இருக்கு” என்று அவள் அடுக்கினாள்.
“சிமி இதுக்கு முன்னாடி நீ இதெல்லாம் செஞ்சிருக்கியா??”
“ட்ரை பண்ணியிருக்கேன்”
“நிஜமாவா!!” என்றான் ஆச்சரியமாய்.
“இன்னைக்கு செய்யவா ஒரு ட்ரையல்” என்றாள் அவளும் ஆர்வமாய். பின் தன் மாமியாரை ஒரு பார்வை பார்த்தாள் அவர் எதுவும் சொல்லிவிடுவாரோ என்று.
“ஹ்ம்ம் செய்யேன்” என்று அவரும் சொல்லிட அவள் களத்தில் இறங்கினாள். 
மாமியாரின் உதவியுடன் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டவள் பாலை சுண்டக் காய்ச்சி தேவையான இனிப்பை கலந்து பின் அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளை நன்றாக சீவி கடைசியில் சேர்க்க பார்க்கவே நன்றாக இருந்தது.
ஆறியதும் அதை எடுத்து சில்வர் கிளாசில் ஊற்றி ப்ரிட்ஜை திறந்து ப்ரீசரில் வைத்தாள். “கலக்குறே போ” என்றான் உதிரன்.
“என்ன உள்ள வைச்சுட்ட எப்போ சாப்பிடுறது??”
“கொஞ்ச நேரம் ஆகும் அது செட் ஆக, இப்போ நாம அந்த லிஸ்ட்க்கு எவ்வளவு அமௌன்ட் தேவைப்படும்ன்னு பார்ப்போம்” என்று சொல்ல மூவருமாக தோராயமாக அதற்கு ஆகும் செலவை கலந்தாலோசித்தனர்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வாயிலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சினமிகா எழுந்து வெளியில் வந்து பார்க்க டெம்போ ஒன்று அங்கு நின்றிருந்தது.
வேலன் மெதுவாய் இறங்கி வர “வாங்கப்பா” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே உதிரனும் சீதாவும் வந்துவிட அவர்களும் அவரை வரவேற்றனர்.
“என்ன மாமா இதெல்லாம்??” என்று உதிரனே கேட்டான்.
“சீர் சாமானெல்லாம் கொண்டு வந்திருக்கேன். முன்னாடியே வாங்கி வைக்கலை. கல்யாணத்தப்போ வாங்கிக்கலாம்ன்னு இவங்கம்மா சொல்லிட்டா அதான் நேரா கடைக்கு போயிட்டு தேவையானது எல்லாம் வாங்கிட்டு இங்க வர்றேன்”
“தமிழ் பின்னாடி ஆட்டோவில வர்றா” என்று சேர்த்து சொல்ல தன் அன்னையை அழைக்க சினமிகா வெளியில் எழுந்து சென்றுவிட்டாள்.
சீதா அவர்களுக்கு குடிக்க காபிக் கலக்கச் சென்றுவிட பூந்தமிழும் வந்துவிட்டார். மகளிடம் நலம் விசாரித்து சீதாவை காணச் சென்றுவிட்டார் அவர்.
“எதுக்கு மாமா இவ்வளவு இங்க தான் எல்லாமே இருக்கே??”
“அதெல்லாம் கண்டிப்பா செய்யணும் மாப்பிள்ளை”
“ஆமாப்பா எனக்கும் அதான் தோணுது. இங்க தான் எல்லாமே இருக்கே??”
“இல்லைடா சினா மேகாக்கு கொடுத்தோம் உனக்கும் கொடுக்க வேணாமா சொல்லு” என்றார் அவர் பெண்ணை பெற்ற தகப்பனாக.
“புரியுதுப்பா ஆனா” என்றுவிட்டு அவள் நிறுத்த சீதாவும் தமிழும் காபி கோப்பையை சுமந்தவாறே வந்து சேர்ந்தனர்.
“என்னம்மா??” என்றார் அவர்.
“இல்லை நீங்க தப்பா நினைக்கக் கூடாது” என்று அவள் இழுக்க உதிரனுக்குமே அவள் என்ன சொல்லப் போகிறாள் என்ற யோசனையே.
“என்ன சிமி அப்படி என்ன கேட்கப் போறே நீ??”
“இல்லைங்க எனக்கு இந்த பாத்திரம் எல்லாம் இப்போ தேவை இல்லை தானே. இங்க எல்லாமே இருக்கு”
“அதைத்தானே நாம இப்போ மாமாகிட்ட சொல்லிட்டு இருந்தோம். அவங்க பொண்ணுக்கு செய்ய நினைக்கிறாங்க. அதை எப்படி நாம மறுக்க முடியும் சொல்லு”
“என்னம்மா சினா?? உன் எண்ணம் என்னன்னு நேரா சொல்லும்மா” என்று வேலன் கேட்க “எனக்கு இதெல்லாம் வேண்டாம்ப்பா அதுக்கு பதில் நான் கேட்கறதை வாங்கிக் கொடுங்க…”

“உங்களுக்கும் சீர் செஞ்ச மாதிரி இருக்கும். எனக்கும் அது உபயோகமா இருக்கும்” என்று அவள் சொல்லியே விட உதிரனுக்கு அவள் என்ன யோசிக்கிறாள் என்று புரிந்து அவளை கண்டிப்போடு பார்த்தான்.
“ப்ளீஸ்” என்ற பார்வை அவள் பார்க்க அவனுக்கு ஒரு மாதிரியாகி போனது. ஒன்றும் பேசவில்லை அவன்.
“என்ன வேணும்ன்னு சொல்லுடா அப்பா வாங்கித் தர்றேன். இது வேணாம்ன்னு சொல்லாதடா இதுவும் இருக்கட்டும்” என்றார் அவர்.
“ப்ளீஸ்ப்பா நீங்க கொண்டு வந்ததுல எந்த பாத்திரமும் எங்களுக்கு வேணாம். அதுக்கு பதில் நான் எழுதிக் கொடுக்கறதை மட்டும் வாங்கிக் கொடுங்க அது போதும் எனக்கு” என்றவள் தாங்கள் புதிதாய் ஒரு கடை திறக்கும் எண்ணத்தில் இருப்பதை அவரிடம் சொல்ல அவர் அகமகிழ்ந்து போனார். தமிழும் சந்தோசப்படவே செய்தார்.
“மாமா உங்களுக்கு போட்டியா செய்யறதா நினைக்க வேணாம்”
“செஞ்சாலும் தப்பாவே நினைக்க மாட்டேன் மாப்பிள்ளை. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இதை கேட்கும் போது”
“ஒரு அப்பனா இதைக்கேட்டு நான் படுற சந்தோசத்தை விட என் அப்பா குருவா இருந்து எனக்கு கத்துக்கொடுத்ததை நான் செஞ்ச மாதிரி என் பொண்ணு செய்யறான்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு எனக்கு” என்று சிலாகித்தார் அவர்.
பின் மகள் கேட்டது போல அவர் வாங்கிக் கொடுக்கவும் தவறவில்லை. அவர்கள் சீராய் கொண்டு வந்த பாத்திரங்கள், கட்டில் என்று இன்னும் சிலவற்றை அவள் திருப்பிக் கொடுத்துவிட சொல்ல வேலனோ “இந்த டிரெஸ்ஸிங் டேபிள், அப்புறம் அந்த மர அலமாரி மட்டும் வேணாம்ன்னு சொல்லாதேம்மா”
“நான் அதை ஆச்சாரிகிட்ட சொல்லி செய்ய சொல்லி வாங்கிட்டு வந்தேன்” என்று அவர் சொல்லிட அவர்கள் மறுக்கவில்லை.
அன்றைய இரவு பாலை எடுத்துக்கொண்டு சினமிகா அறைக்குள் நுழைந்தவள் அப்படியே நின்றுவிட்டாள். அவள் கனவில் கண்ட அதே டிரெஸ்ஸிங் டேபிள்.
முதல் உதிரனுடன் ஏதோ பேச்சு வார்த்தை வந்த போது அவளுக்கு கனவில் கண்ட ஊஞ்சல் ஞாபகம் வந்திட “ஏங்க ஊஞ்சல் இருக்குன்னு சொன்னீங்கள்ள அது எங்க நான் பார்க்கவே இல்லையே” என்றாள்.
“அது எப்பவும் ஹால்ல தான் இருக்கும் சிமி. ஹால் தானே மேடை எல்லாம் போட்டாங்க, அப்போ தான் அதை கழட்டி உள்ள வைச்சோம். நான் எடுத்து மாட்டிவிடுறேன்” என்று சொன்னவன் அதை உடனே செய்திட அதை பார்த்தவள் அசந்து போனாள்.
அவள் கனவில் பார்த்த அதே ஊஞ்சல் இரு மயில்கள் தோகை விரித்து ஆடுவது போல சாய்வு பலகை இருக்க, அமரும் பலகையில் அழகிய கோலங்கள் வரையப்பட்டிருந்தது.
“ஆமா டிரெஸ்ஸிங் டேபிள் ஒண்ணு இருக்கணுமே அது எங்க இருக்கு??”
“அதெல்லாம் இங்க கிடையாது. ஏதோ ஒண்ணு கனவுல பார்த்தே அது போல இங்க ஒரு ஊஞ்சல் இருக்கு, அதுக்காக கனவுல பார்த்த எல்லாமே இங்க இருக்குமா என்ன” என்று கிண்டலடித்தான் உதிரன்.
இதோ அவள் கனவில் பார்த்தது போலவே மரத்தினாலான டிரெஸ்ஸிங் டேபிள் அவள் கண் முன்னே.
உதிரன் கட்டிலில் படுத்திருந்தவன் எழுந்து அவளருகே வந்தான். “என்ன சிமி இங்கவே நிக்கறே?? நான் தூக்கிட்டு போகணும்ன்னு நிக்கறியா, சொன்னா செய்ய மாட்டேனா??” என்றவன் அவளை தூக்கப் போக “ஹ்ம்ம் நான் ஒண்ணும் அதுக்காக நிக்கலை”
“வேற என்ன??”
“என் கனவுல வந்த டிரெஸ்ஸிங் டேபிள்” என்று அவள் சற்று முன் ஆட்களால் கொண்டு வந்து வைக்கப்பட்ட அதை சுட்டிக்காட்ட உதிரன் திரும்பிப் பார்த்தான்.
“இப்போ என்ன பண்ணலாம் சொல்லு”
“இல்லைங்க என் கனவு பலிக்குது. அது என்னவோ எனக்கு சொல்ற மாதிரியே இருக்கு. என்னன்னு எனக்கு தான் புரிய மாட்டேங்குதுன்னு தோணுது…” என்றவள் குழம்பி நிற்க “இதெல்லாம் வேலைக்கு ஆகாது” என்றவள் அவள் கையில் வைத்திருந்ததை வாங்கி அருகில் வைத்து அவளை தூக்கிக் கொண்டான்.
“பால் குடிங்க ஆறிடும்”
“இப்போ சொல்லு ஆறிடும்ன்னு இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்தது யாராம்” என்றவன் தன் தேவையில் மூழ்கி அவளையும் மூழ்க வைத்தான்.
——————–
சினமிகா கட்டிலில் சாய்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு அரவம் கேட்டது வெளியில். தலையை திருப்பி அவள் மெதுவாய் பார்க்க பைரவர் உள்ளே வந்துக் கொண்டிருந்தார்.
“நீங்க எப்படி இங்க??” என்றவாறே அவள் எழுந்து நிற்க அவள் காலை சுரண்டியவர் சில அடி முன்னே செல்ல பின்னோடே சினமிகாவும் சென்றாள்.
அவர் ஓரிடத்தில் சென்று நிற்க அங்கு உதிரன் விழுந்து கிடந்தான் ரத்த வெள்ளத்தில். பதறியடித்து அவள் கண் விழிக்க அவள் மேல் கை ஒன்று வந்து விழுந்தது.
பயத்துடன் அவள் திரும்பிப் பார்க்க உதிரன் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

Advertisement