Advertisement

“ஏய் என்ன??”
“என்ன??” என்றான் அவனும் விடாது.
“இது என் வீடு…”
“அதுக்கு…”
“என்னை நீ மிரட்டறியா??”
“அந்த சம்பவம் எப்போ நடந்துச்சு??”
“என்ன நக்கல் பண்றியா??”
“நீலா” என்று வந்தாள் சினமிகா.
“நீ எதுக்கு எங்களுக்கு நடுவுல வர்றே என்ன வேணும் உனக்கு??”
“உனக்கு என்ன வேணும் முதல்ல அதை சொல்லு” 
“உன் புருஷனை பேசாம போகச்சொல்லு” என்று உதிரனிடம் பேசாது சினமிகாவிடம் சொன்னான் நீலவண்ணன்.
“சொல்லலைன்னா” என்று அவள் கேட்க
“சொல்லுடி” என்றவனின் கன்னத்தில் மீண்டும் ஒரு அறை விழுந்தது. 
நீலவண்ணன் கன்னத்தை தாங்கிப் பிடித்தவாறே அதிர்ச்சியுடன் பார்த்திருந்தான் உதிரனை.
“என்னங்க” என்றவாறே உதிரனின் கையை பற்றினாள் சினமிகா.
“நீ பேசாத சிமி… நான் கொஞ்சம் பேசணும்”
“என்ன என்னடா பேசப் போறே நீ?? ஏன்மா ஆள் வைச்சு அடிக்கறீங்களா நீங்க” என்று அன்னையையும் தந்தையும் பார்த்துக் கேட்டான் நீலவண்ணன்.
“நீலா கொஞ்சம் பேசாம இரேன்” என்றாள் சினமிகா.
“இங்க பாரு நான் உன்கிட்ட பேச வரலை. உனக்கும் எனக்கும் எந்த பேச்சு வார்த்தையும் வேணாம்” என்றான் அவன் அப்போதும் விடாமல்.
வேலனுக்கும் தமிழுக்கும் உதிரன் தங்கள் மகனை கை நீட்டியதில் பயங்கர அதிர்ச்சி. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மகன் அடிவாங்கியது கஷ்டமாக இருந்தாலும் அவனுக்கு இது தேவை தான் என்று நினைத்தனர் அவர்கள்.
“நீ யாரு?? முத இந்த வீட்டுக்கு நீ யாரு?? அதைச் சொல்லு” என்றான் உதிரன்.
“அதை நான் உனக்கு சொல்லணும்ன்னு அவசியமில்லை. நான் யாருன்னு உன் பொண்டாட்டிகிட்ட கேளு” என்று திமிராய் பேசினான் அவன்.
“என் பொண்டாட்டிகிட்ட ஏன் கேக்கணும் நீயே சொல்லு”
“இவனை வைச்சு பிரச்சனை பண்றீங்களா எல்லாரும்”
“நீ சரியா அடிவாங்கலைன்னு நினைக்கிறேன்”
“அப்பா…” என்று கத்தினான் அவன்.
நீலவண்ணன் சத்தம் தான் பெரிதாய் கொடுத்தானே தவிர அவன் உதிரனை போல உயரமும் பருமனுமானவன் இல்லை.
மெலிதான தேகமே உயரமும் சராசரியை விட சற்று குறைவானவனே. உதிரனின் அடியை அவனால் தாங்க முடியவில்லை அது தான் உண்மையே.
இதற்கு மேல் அவன் அடித்தால் நிச்சயம் தாங்க மாட்டோம் என்று உணர்ந்தே தன் தந்தையை அழைத்திருந்தான்.
வேலன் முன்னே வர “மாமா…” என்று கை நீட்டி தடுத்தான் உதிரன்.
“உனக்கு என்ன வேணும் இப்போ. அந்த புது கடையா?? எடுத்துக்கோ…”
“மாப்பிள்ளை”
“வேணாம் மாமா அதையும் அவனே எடுத்துக்கட்டும். உங்க வீட்டு பொண்ணை எந்த சொத்துக்காகவும் நான் கல்யாணம் பண்ணலை”
“நான் சொத்தா நினைக்கிறது சிமியை மட்டும் தான். எனக்கு அவ மட்டும் போதும்…” என்றவன் “சிமி நீ என்ன சொல்றே??” என்று மனைவியை கேட்டான்.
தன் கணவன் தன்னையே சொத்தாக நினைப்பதாகச் சொல்லவும் சினமிகாவிற்கு சொல்லொணாத சந்தோசமே.
உதிரன் இவள் பதிலுக்காய் பார்த்து நிற்க அதை உணர்ந்தவளாக “நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடலாம்”
“சினா என்னம்மா பேசறே நீ” என்றார் பூந்தமிழ்.
“இல்லைம்மா அவர் சொல்றது சரி தான். நான் உங்களோட அன்பை தவிர வேற எதையும் எதிர்பார்க்கலை. ஒரு நல்லவர் கையில என்னை ஒப்படைச்சு இருக்கீங்க, இனி எனக்கு வேறென்ன வேணும்” என்றாள் அவள்.
தன்னை கௌரவப்படுத்திய தன் மனைவியை பெருமையாய் பார்த்தான் உதிரன்.
“நீ வந்த வேலை முடிஞ்சது இல்லை இப்போ நீ கிளம்பலாம்” என்றார் வேலன் தன் மகனை ஆத்திரமாய்.
“நல்லவன் மாதிரி நல்லா சீன் போடுறான் அதை நம்புறீங்க”
“நீ பேசாதடா அவரைப்பத்தி, உனக்கு கொஞ்சமும் தகுதி இல்லை அவரை பேசுறதுக்கு”
“இந்த நிமிஷம் சொல்றேன்டா பெத்தவன் வயிறு எரிஞ்சு சொல்றேன்” என்று அவர் ஆரம்பிக்க உதிரன் அவர் வாயை பொத்தினான்.
“வேணாம் மாமா எந்த சாபமும் விட்டிறாதீங்க. உங்க மகன் கஷ்டப்பட்டா அதை பார்த்து வருத்தப்படுற முத ஆளா நீங்க தான் இருப்பீங்க. எதையும் பேசிடாதீங்க” என்றான்.
“எனக்கென்னவோ நீ நீயா வந்து பேசலைன்னு தோணுது. யார் சொல்லிக் கொடுத்தோ வந்து பேசறே. உன் பேச்சுல அது நல்லாவே தெரியுது” என்றான் உதிரன் நீலவண்ணனை பார்த்து நிதானமாக.
“எனக்கு யார் சொல்லிக் கொடுக்கணும். எனக்கு தெரியாதா என்ன பேசணும்ன்னு” என்றான் நீலவண்ணன்.
“பொண்டாட்டி சொல்றதை கேட்கலாம் தப்பில்லை. நல்லது சொன்னா கண்டிப்பா கேட்கணும். ஆனா ஒரு விஷயம் அது நல்லதா கெட்டதா அப்படிங்கறதை உன்னோட சொந்த மூளையை வைச்சு யோசிச்சுட்டு அப்புறம் அதை செய்யணும்”
“சிமி சொன்னா நாம வீட்டுக்கு போய்டலாம் வாங்கன்னு. நான் கேட்கலை ஏன் தெரியுமா ஏன்னா நான் என் மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருக்கேன். நாங்க ஏன் போகணும் சொல்லு”
“நான் இப்போ இங்க பிரச்சனைன்னு கிளம்பிப் போனா அவங்க மனசு வருத்தப்படுவாங்க. தவிர உனக்கு பயந்து எல்லாம் நான் வெளிய போக முடியுமா சொல்லு. நீ யாரு எனக்கு??”
“என் மாமா அத்தைக்கு நீ பையன் அவ்வளவு தான். அதுக்கு மேல உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லை”
“என்னங்க”
“என்ன சொல்லப்போறே இவன் உன் தம்பின்னா. அது எனக்கும் தெரியும், ஆனா நீ தான் அவனுக்கு அக்கான்னு அவனுக்கு தெரியலை. அம்மா அப்பா காலத்துக்கு பிறகு அக்கா தான் அம்மா மாதிரின்னு அவன் நினைக்கலை”
“நீ ஏன் அவனை நினைக்கிறே?? அவனுக்காக யோசிக்கறே??”
“அவனுக்கு உங்க யாரோட அருமையும் தெரியலை. அம்மா, அப்பா இல்லாதவங்களுக்கு தான் தெரியும் அவங்களோட அருமை என்னன்னு”
“இப்படி ஒரு அற்புதமான அம்மா அப்பா கிடைச்சிருக்காங்க இவனுக்கு. அதை பார்த்துக்க தெரியலை இவனுக்கு. பாசத்தை காட்ட ரெண்டு அருமையான சகோதரிகள் இருக்காங்க. அதை அனுபவிக்க தெரியலை இவனுக்கு”
“நீங்க என்ன இவனோட சம்பாத்தியத்தையா கேட்டீங்க. அவனோட அன்பையும் பாசத்தையும் தானே எதிர்பார்த்தீங்க. அதை கூட கொடுக்க முடியாதா அவனுக்கு”
நீலவண்ணனோ அடிவாங்கியதிற்காய் அசரவெல்லாம் இல்லை அப்படியே நின்றிருந்தான்.
“நீ ஊருக்கு கிளம்பு எப்போ ரெஜிஸ்ட்ரேஷன்னு போன் பண்ணுவாங்க மாமா அப்போ வா…”
“என் வீடு இது என்னையே நீ வெளிய போன்னு சொல்றியா??” என்று அப்போதும் குதித்தான் அவன்.
“இது என் வீடு. என்னோட சொந்த சம்பாத்தியம், தாத்தா சொத்து தான் பேரன் பேத்திகளுக்கு சொந்தம். உங்க தாத்தா சம்பாத்தியம் பின்னாடி இருக்க மாட்டு கொட்டகை தான், அதுக்கு பக்கத்துல ஒரு ஓட்டு வீடு இருக்குல்ல அதுவும் தான்…”
“அதுக்கு மட்டும் தான் உனக்கும் உரிமை இருக்கு. என் சம்பாத்தியத்தை யாருக்கு வேணா நான் எழுதி வைப்பேன். மரியாதையா இந்த வீட்டை விட்டு நீ போ, நானா உன்னை அடிச்சு துரத்தினதா இருக்க வேணாம்…” என்றார் வேலன்.
“எப்படியிருந்தாலும் நாளைக்கு நீங்க என்கிட்ட தான் வந்தாகணும்…” என்றான் அவன் ஏளனக்குரலில்.
“நான் செத்தாலும் நீ எனக்கு கொள்ளி வைக்கக் கூடாது. உன்னை மாதிரி ஒரு சுயநலம் பிடிச்ச பிள்ளையை பெத்ததுக்கு நான் ரொம்ப வெட்கப் படுறேன்” என்றார் அவர் வேதனையான குரலில். உதிரன் அவர் அருகே வந்து ஆறுதலாய் பற்றிக் கொண்டான் அவரை.
“விடுங்க மாமா…” என்றவன் “நீ கிளம்பு முதல்ல, நீ கேட்டதை நாங்க செஞ்சிடறோம். இந்த சொத்து எதுவும் நாளைக்கு உன்னை காப்பாத்த போறதில்லை. மனுஷங்க தான் முன்னாடி வருவாங்க…”
“அது புரியற அன்னைக்கு உன் பக்கத்துல யாரும் இருக்க மாட்டாங்க” என்றான் உதிரன்.
நீலவண்ணனோ “நீ ஒண்ணும் எனக்கு பிச்சை போடவேண்டியதில்லை, எனக்குரியதை வாங்கிக்க எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான்.
“கோவிச்சுக்கிட்டான் போல” என்றாள் சினமிகா.
“போகட்டும் விடு” என்றான் உதிரன்.

Advertisement