Advertisement

11
நல்ல உறக்கத்தில் இருந்தாள் சினமிகா. அவளை யாரோ எழுப்புவது போல தோன்ற கண் விழித்தவளை வரவேற்றது எப்பவும் போல பைரவரே.
அவர் ஏதோ அவளிடம் சொல்ல நினைப்பது போல தோன்றியது அவளுக்கு அவரின் கண்களையே உற்றுப்பார்த்தாள். அதில் என்ன இருந்தது என்று அவள் உணரும் முன்னமே யாரோ அவளை இழுத்தனர்.
சட்டென்று மலையில் இருந்து அவளை கீழே தள்ளிட ஓவென்ற அலறல் மட்டும் அவளிடத்தில்.
“சிமி சிமி என்னாச்சு?? எழுந்திரும்மா…” என்று உதிரன் அவளை உலுக்க அவளோ இன்னமும் ‘ஹான்… ஹான்…’ என்று திணறிக் கொண்டு தானிருந்தாள்.
அங்கு குடிக்க வைத்திருந்த தண்ணீரை கொஞ்சம் எடுத்து ஓங்கி அவள் முகத்தில் அடிக்க திடுக்கிட்டு விழித்தவள் எட்டி வந்து அவனை கட்டிக் கொண்டாள்.
உதிரனும் ஒன்றும் சொல்லாமல் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான். “தண்ணி குடி” என்று சொல்லி அவன் அதை எடுக்க நகர “எங்கயும் போகாதீங்க??” என்று அவனை இன்னும் இறுக்கிக் கொண்டாள்.
“நான் எங்கயும் போகலை உன் பக்கத்துல தான் இருக்கேன். கொஞ்சம் தண்ணி குடி” என்றவன் எட்டி அதை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதை வாங்கி மடமடவென்று பருகியவள் அவன் மீதே தலைசாய்த்துக் கொண்டாள். 
“என்னாச்சும்மா??”
“இல்லைங்க ஒரு கெட்ட கனவு”
“கனவு தானா… சரி விடு”
“கனவு தானான்னு சொல்லாதீங்க. என் கனவுல நடக்கற நிறைய விஷயம் நடக்குது”
“அப்படியா?? என்ன விஷயம் எல்லாம் நடந்துச்சுன்னு சொல்லு”
“கல்யாணம்”
“அது எல்லாருக்கும் நடக்கறது தானே. அது கனவுலயும் வந்திருக்கும்”
“இல்லை என் கல்யாணம் கனவுலயும் உங்ககூட தான் நடந்துச்சு”

“அப்போ நீ என்னையவே நினைச்சுட்டு இருந்திருப்ப அதான்…” என்றான் அவனும் விடாது.
“இல்லை உங்களை பார்க்கறதுக்கு முன்னாடியே நீங்க என் கழுத்துல தாலி கட்டின மாதிரி கனவு கண்டேன்” என்றவள் அவளின் கனவைப்பற்றி அவனிடம் முழுதும் சொன்னாள்.
கொஞ்சம் குழப்பம் கொஞ்சம் ஆச்சரியம் கலந்த பார்வையே உதிரனிடத்தில். இது நடக்குமா என்றால் அவனுக்கு சொல்லத் தெரியாது. ஆனால் சினமிகா பொய்யுரைப்பதாய் அவனுக்கு தோன்றவில்லை.
“நீங்க நம்பலைல. இங்க வீட்டில ஊஞ்சல் இருக்கா??”
“இருக்கு, அதை எதுக்கு கேட்கறே??”
“இல்லை நான் அதை கனவில பார்த்திருக்கேன். ரொம்ப அழகான ஊஞ்சல் அது, மர ஊஞ்சல் தானே அது…”
‘நேர்ல பார்த்த மாதிரியே சொல்றாளே’ என்று எண்ணினாலும் அவளிடம் “ஹ்ம்ம்” என்றான்.
“என் கனவுல நெறைய யூனிக்கான சில விஷயம் எல்லாம் பார்த்தேன். அதெல்லாமும் நான் பார்ப்பேன்னு எனக்கு தோணுது”
“அதெல்லாம் விடு இப்போ உன் கனவுல என்ன வந்துச்சு” என்று அவன் கேட்க “என்னை யாரோ மலையில இருந்து தள்ளிவிடுறாங்க”
“என்ன…”
“என்னை எச்சரிக்கத்தான் பைரவர் வந்தார்”
“பைரவரா யாரு உன்னோட பிரண்டா??”
“பிரண்ட் தான் ஆனா நீங்க நினைக்கிற மாதிரி பைரவர் மனுஷன் இல்லை. அந்த கடவுள் பைரவர் சாமி தான் நாய் உருவத்துல வருவார் எப்பவும்”
“சரியா போச்சு போ”
“கிண்டல் பண்றீங்களா??”
“எனக்கு தெரியலை, நீ சொல்றது நம்புற மாதிரியும் இல்லை நம்பாத மாதிரியும் இல்லை. அந்த கனவை விடு…”
“ஹ்ம்ம்”
“ஆமா மணி என்னங்க??”
“நாலரை ஆகுது” என்று சுவற்றில் மாட்டியிருந்த கடிக்காரத்தை பார்த்துச் சொன்னான்.
“அப்போ கனவு கண்டிப்பா பலிக்கும்”
“சிமி பேசாம இரு அதையே நினைச்சுட்டு என்னை வேற குழப்பிட்டு”
“இல்லைங்க அது வந்து…” என்று அவள் தொடர அவன் அவளை தன் புறம் இழுத்துக் கொண்டான்.
“நீ எதுவும் சொல்ல வேணாம்” என்றவன் அவள் இதழ் முற்றுகை செய்து தன் தேவையை தொடங்கினான்.
——————–
“வாங்க வாங்க…” என்று மகளையும் மருமகனையும் சந்தோசமாக வரவேற்றனர் பூந்தமிழமும் வேலனும்.
திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு தான் உதிரனும் சினமிகாவும் அங்கு மறுவீட்டிற்கு வந்திருந்தனர். இடையில் நாள் சரியில்லை என்று சீதா சொல்லியிருக்க இதோ இன்று தான் வந்தனர். “மேகா வர்றேன்னு சொன்னாளாப்பா??”
“நாளைக்கு தான் வருவாம்மா…” என்றவர் பின் தன் மருமகனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
சினமிகா எழுந்து சமையலறை சென்றாள். “என்னம்மா ஸ்பெஷல்??”
“உனக்கு பிடிச்சது தான்…” என்றவர் “நல்லாயிருக்கியாடா??”
“ரொம்ப நல்லா இருக்கேன்ம்மா”
“அம்மாவும் அப்பாவும் இப்படி அவசரமா கல்யாணம் பேசிட்டோம்ன்னு உனக்கு எதுவும் வருத்தமிருக்கா??”
“நிச்சயமா இல்லைம்மா. நான் ரொம்பவே சந்தோசமா இருக்கேன், என்னை நினைச்சு நீங்க வருத்தப்பட வேணாம். அவர் என்னை நல்லா பார்த்துக்கிறார்” என்று மகள் சொல்லவும் மனம் நிறைந்து போனது தமிழுக்கு.
வேலன் யாரையும் வீட்டிற்கு அழைத்திருக்கவில்லை. மறுநாள் தான் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதனால் அன்று தான் அனைவரையும் வரச்சொல்லி சொல்லியிருந்தார்.
இவர்கள் சந்தோசமான மனநிலையில் இருக்க அதிரடியாய் அங்கு வந்து இறங்கினான் நீலவண்ணன்.
வாசலில் ஏதோ வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டு வேலன் தான் வெளியில் வந்தார். காரில் இருந்து இறங்கும் நீலவண்ணனை யோசனையுடனும் ஒரு வித கோபத்துடனுமே பார்த்திருந்தார்.
பின்னே உடன்பிறந்தவளுக்கு முறை செய்யக் கூட வராதவனை அவர் மகிழ்வாகவா பார்த்திருக்க முடியும். அவனை வா என்று கூட அழைக்க அவருக்கு தோன்றவில்லை.
அவனே வந்தான் இவரை ஒரு பார்வை பார்த்து உள்ளே செல்ல பின்னோடு இவரும் சென்றார். “தமிழ்” என்று குரல் கொடுக்க வந்தவர் மகனை பார்த்ததும் அதிருப்தியானார்.
சினமிகா எப்போதும் போல் தான் இருந்தாள். “வாடா எப்படி இருக்கே??” என்று கேட்கவும் தவறவில்லை அவள்.
நீலவண்ணன் தான் அவளுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. உதிரன் மச்சினனை ஒரு பொருட்டாய் கூட பார்க்கவில்லை.
உதிரனுக்கு நீலவண்ணனை பிடிக்கவில்லை. அதுவும் சினமிகா திருமண நிச்சயம் நின்ற அன்று தந்தையை கூட கவனிக்காமல் சென்ற அவனை சுத்தமாய் அவனுக்கு பிடிக்கவில்லை.
“வீட்டோட மாப்பிள்ளை வந்தாச்சு போல” என்றான் நக்கல் குரலில்.
“டேய்” என்று கத்தினர் அன்னையும் தந்தையும் ஒரு சேர.
“இப்போ எதுக்கு நீ இங்க வந்தே??” என்றார் வேலன்.
“சும்மா உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருந்துச்சு அதான்…”
“பார்த்தாச்சுல்ல கிளம்பு” என்றார் வேலன் ‘நான் உனக்கு அப்பன்டா’ எனும் பாவத்துடன்.
“அதெப்படி வந்ததும் கிளம்பிட முடியுமா. இன்னைக்கு மாப்பிள்ளை விருந்து வேறன்னு கேள்விப்பட்டேன், இருந்து போக வேணாமா…” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.
“ஆமா தெரியாம தான் கேக்கறேன், வீட்டோட மாப்பிள்ளைக்கு விருந்து வேற வைக்கணுமா என்ன??”
“நீலா கொஞ்சம் வாயை மூடு, இதுக்கு மேல பேசின மரியாதை கெட்டிரும்” என்றார் வேலன்.
உதிரன் இன்னமும் மற்றவனின் புறம் பார்வையை திருப்பவேயில்லை. சினமிகா தான் சங்கடமாய் உணர்ந்தாள், பேசும் தன் தம்பியை என்ன செய்ய என்று பார்த்திருந்தாள்.
உதிரனின் அருகே வந்து நின்றாள். மற்றவர் காதில் விழாதவாறு அவனிடம் “என்னங்க??” என்று அழைக்க நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் “என்ன??” என்றான்.
“நாம வீட்டுக்கு போகலாமா??” என்றாள் வாயசைத்து.
“நாம ஏன் போகணும்??” என்றான் அவனும் அவள் போலவே உதட்டசைத்து.
“நீலா நீ பிரச்சனை பண்ணணும்ன்னே வந்திருக்கியா??” என்றார் பூந்தமிழ்.
“ஆமா அதுக்கு தான் வந்திருக்கேன் இப்போ என்னங்கறீங்க??” என்றான் அவனும் விடாது.
“உனக்கு என்ன வேணும்னாலும் நாம அப்புறம் பேசிக்கலாம். இப்போ அதுக்கான நேரமில்லை, நீ கிளம்பு” என்றார் வேலன் அவனிடம்.
“எனக்கு இப்போவே பேசணும். இவன் முன்னாடியே பேசணும் ஒண்ணுமில்லாதவனுக்கு எல்லாம் நம்ம சொத்தை எழுதி வைச்சுட்டீங்க. பெத்த பிள்ளைக்கு நியாயம் செய்யலை நீங்க… அந்த கரிப்பிடிச்ச கடையை என் தலையில கட்டிட்டு நல்ல புது கடையை அவளுங்க ரெண்டு பேருக்கும் வாங்கி கொடுத்திருக்கீங்க”
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க. நான் உங்க எல்லார் மேலயும் கேஸ் போடப் போறேன்” என்று அவன் குதிக்க தன் பொறுமை போனவராக வேலன் தன் மகனை அடிக்க கை ஓங்கியிருக்க பதிலுக்கு அவன் தன் தந்தையின் சட்டையை பிடித்திருந்தான்.
இடியென ஒரு அறை விழுந்திருந்தது நீலவண்ணனின் கன்னத்தில். உதிரன் தான் அவனை அறைந்திருந்தான்.
அவ்வளவு நேரம் தந்தை மகன் பேசிக் கொண்டிருந்ததால் அவன் அமைதியாய் இருந்த உதிரன் இதற்கு மேலும் மௌனம் காப்பது நல்லதன்று என்று நினைத்தவனாய் இருவருக்கும் இடையில் வந்து நின்றான்.
நீலவண்ணன் இன்னும் தன் தந்தையின் பிடித்திருந்த சட்டையை விடாது இருக்க “கையை எடு” என்று உதிரன் சொல்ல தன்னையுமறியாமல் அவன் சொன்னதை செய்தான் நீலவண்ணன்.
நீலவண்ணனின் கன்னம் எரிந்தது. ஆத்திரம் அவன் அறிவை இழக்க செய்ய “நீ யாருடா எனக்கும் எங்கப்பாவுக்கும் நடுவுல” என்று மரியாதையின்றி பேசினான்.
“ஓ!! இவரு தான் உங்கப்பாவா?? எனக்கு தெரியாம போச்சே. ஏன் மாமா உங்களுக்கு இப்படி ஒரு மகன் இருக்கான்னு எனக்கு சொல்லவே இல்லை” என்றான் உதிரன் நக்கல் குரலில்.

Advertisement