Advertisement

10
உதிரனுக்கு அவளின் பதில் மனதிற்குள் அப்படியொரு உணர்வை கொடுத்தது. சந்தோசமாகவே வலம் வந்தான் அவன்.
அவன் நண்பர்கள் சிலர் கோவையில் இருந்து வந்திருந்தனர். அவர்களை மனைவிக்கு அறிமுகம் செய்தான். வந்தவர்கள் கிளம்ப அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தவனுக்கு தூக்கமாக வந்தது.
காலையிலேயே முகூர்த்தம் முடிந்ததால் நேரம் இன்னும் மதியத்தை தொட்டிருக்கவில்லை. பன்னிரண்டு மணிக்கு இன்னும் பத்து நிமிடம் இருந்தது. உதிரன் தன் மனைவியை தேட அவன் பார்வையை கண்டுக்கொண்ட பூந்தமிழ் மகளை கூப்பிட்டார்.
“என்னம்மா??”
“உன்னை தேடுறாங்க பாரு, போய் என்னன்னு கேளு” என்று மகளை அனுப்பி வைத்தார்.
அவளும் அவள் உறவினர்களின் கூட்டத்தில் இருந்து எழுந்தவள் அவனை நோக்கிச் சென்றாள்.
“என்னை தேடுனீங்களா??”
“ஹ்ம்ம் ஆமா என் கூட தானே நின்னுட்டு இருந்தே. அதுக்குள்ளே எங்கே போனே??”
“நீங்க உங்க பிரண்ட்ஸ் கூட ஜாலியா பேசிட்டு இருக்கும் போது நான் எதுக்கு இடைஞ்சலா அதான் ஒதுங்கி வந்துட்டேன்” என்றாள்.
“எனக்கு தூக்கம் வருது, நான் தூங்க போறேன். நீயும் வர்றியா??” என்று அவன் சொல்ல ‘என்னது’ என்று பீதியாய் அவனை பார்த்தாள்.
“எதுக்கு அப்படியொரு கலவரம் உன் கண்ணுல??” என்று பேசிக்கொண்டே அவன் நடக்க இவளும் அவனுடன் நடந்தாள்.
“ஒண்ணுமில்லை”
உதிரன் தன் அன்னை இருக்குமிடம் வந்திருந்தான். “அம்மா” என்றழைக்க “என்னப்பா உதிரா??” என்றார் அவர்.
“எனக்கு தூக்கம் வருதும்மா. கொஞ்ச நேரம் போய் படுக்கவா??”
“ஒரு வழியா மதிய சாப்பாட்டை முடிச்சுட்டு போயேன் உதிரா” என்றார் அவர்.
“காலையில சாப்பாடே இரண்டு மணி நேரம் முன்னாடி தானேம்மா சாப்பிட்டேன்”
“உதிரா சொன்னா புரிஞ்சுக்கோ”
“ஹ்ம்ம் சரி…”
“நான் போய் மதிய சாப்பாடு ரெடி ஆகிடுச்சான்னு பார்த்திட்டு வர்றேன். நீ வேணா சினமிகாவோட முதல்ல உட்கார்ந்து சாப்பிட்டிரு” என்றார் அவர்.
“சரிம்மா” என்றான் அவன்.
அவர்கள் வீட்டின் வெளியிலேயே பந்தல் போட்டு ஒரு புறம் சமையல் நடக்க மற்றொரு புறம் உணவருந்தும் இடமாக மாற்றியிருந்தனர்.
சொந்தங்கள் எல்லாம் திருமணம் முடிந்ததும் கிட்டதட்ட கிளம்பியிருந்தனர். நெருங்கிய சொந்தங்கள் சிலர் மட்டுமே அங்கிருந்தனர்.
சீதா வெளியில் சென்று பார்த்து வந்தவர் “உதிரா இன்னும் பத்து நிமிசத்துல முடிஞ்சிடுமாம்” என்றார் மகனிடம்.
மதிய உணவு முடிந்து அவன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு தன் மனைவியை பார்க்க சினமிகா சங்கடமாய் உணர்ந்தாள்.
“உதிரா நீ போய் உன் ரூம்ல தூங்கு. மருமக அவங்க அம்மா அப்பா கூட இருக்கட்டும். எல்லாரும் இன்னைக்கு சாயங்கலாம் கிளம்பிருவாங்கல்ல”
“ஓ!! நானும் போகணுமாம்மா??”
“இல்லையில்லை நீ ரெஸ்ட் எடு, அவ அவங்களோட பேசிட்டு கொஞ்சம் நேரம் அங்கவே ரெஸ்ட் எடுப்பா” என்றார் மகனிடம்.
‘தாலி கட்டியாச்சு. என் பொண்டாட்டியை என் கூட இப்போ அனுப்ப இவங்களுக்கு என்ன யோசனையோ, என்ன சம்பிரதாயமோ நான் என்ன அதுக்குள்ள பாய்ஞ்சிட போறனா என்ன’ இதெல்லாம் அவன் மனதிற்குள் தான் சொல்லிக் கொண்டான்.
அவன் அன்னை வித விதமாய் அவனிடம் சமாளிப்பு செய்யும் போதே அவனுக்கு புரிந்துவிட்டது.
சினமிகா பூந்தமிழின் மடியில் படுத்திருந்தாள். கண்கள் கரித்தது அவளுக்கு ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“சினா உனக்கு சொல்லணும்ன்னு இல்லை பார்த்து பக்குவமா நடந்துக்கோம்மா. நல்ல பேர் எடுக்கணும், பெரியவங்களை அனுசரிச்சு போகணும். பார்த்தில்ல மாப்பிள்ளைக்கு அம்மா மேல ரொம்ப பிரியம்”
“அவங்க மனசு சங்கடப்படுற மாதிரி எதுவும் செஞ்சிடக் கூடாது. உன் மனசுக்கு நீ நல்லாவே இருப்ப…” என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.
“தமிழ் விடு எதாச்சும் சொல்லி அவளை கலவரப்படுத்தாதே. அவளுக்கு எல்லாம் தெரியும்” என்றார் வேலன்.
“ஏன்மா நானும் உங்களுக்கு பொண்ணு தானே. என்னை மறந்துட்டீங்க நீங்க” என்று வந்தாள் மேகா.
“மேகா அக்கா கல்யாணம் ஆகி போறா. அதனால பேசிட்டு இருக்கேன். உன் கல்யாணம் முடிஞ்சப்பவும் நான் உனக்கு சொன்னேன் தானே”
“ஹ்ம்ம் சொன்னீங்க சொன்னீங்க. ஆனாலும் உங்க ரெண்டு பேருக்கும் உங்க பெரிய பொண்ணு மேல தான் பாசம் அதிகம்” என்று அவள் நொடிக்க தமிழுக்கு ஆயாசமாக இருந்தது.
“வயித்து பிள்ளைக்காரி இப்படி எல்லாம் விசனப்படக் கூடாது மேகா” என்றார் தமிழ்.
சினமிகா தாயின் மடியில் இருந்து எழுந்தவள் சற்று தள்ளி அமர மேகா வந்து படுத்துக் கொண்டாள்.
அந்த அறையில் பெண் வீட்டினரும் அவர்களின் உறவினர்கள் சிலர் மட்டுமே இருந்தனர். ஆளுக்கொரு பக்கம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
“சினா நீ கொஞ்சம் நேரம் படும்மா” என்றார் வேலன்.
“ஹ்ம்ம் சரிப்பா” என்றவள் கட்டிலில் படுத்துக் கொண்டாள். இப்போதெல்லாம் இரவில் அவளால் சரியாக உறங்க முடியாததில் அந்த பகல் வேளையில் அவள் படுத்ததும் தூக்கம் அவளை பிடித்துக் கொண்டது.
உதிரன் மாலை நான்கு மணி போல அறையில் இருந்து எழுந்து வந்தான். குளித்து முடித்து வேறு உடைக்கு மாறி வந்திருந்தான்.
அவன் வெளியில் வரவும் சீதாவுடன் பேசிக் கொண்டிருந்த பூந்தமிழ் அவரிடம் சொல்லிக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றார்.
மகள் இன்னமும் உறக்கத்தின் பிடியில் இருக்க “சினா எழுந்திரும்மா” என்று குரல் கொடுத்தார்.
அவளும் சட்டென எழுந்திருந்தவளுக்கு சுற்றுப்புறம் பிடிபடவில்லை சில நொடி. பின் உணர்ந்தவள் தன் அன்னையை பார்க்கக் “மாப்பிள்ளை எழுந்திட்டார், நீ முகத்தை கழுவிட்டு வெளிய போ” என்றார்.
“ஹ்ம்ம் சரிம்மா” என்றவள் அவர் சொன்னதை செய்தாள்.
சீதாவும் அவளுமாக அனைவருக்கும் மாலை நேர சிற்றுண்டி கொடுத்து காபி கொடுத்து என்று செய்தனர். வீட்டுப்பெண்ணாய் அவள் மாறியிருந்தாள்.
“இங்க பக்கத்துல இருக்க பிள்ளையார் கோவிலுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்திடுங்களேன்” என்றார் சீதா மகனை பார்த்து..
“எல்லாருமே போயிட்டு வருவோம்மா” என்றான் அவன்.
அனைவருமே ஒன்றாய் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். நடந்து செல்லும் தொலைவு தான் என்பதால் நடந்தே சென்றனர்.
வேலன் குடும்பத்தினர் கோவிலில் இருந்து நேரே அவர்கள் வீட்டிற்கு கிளம்புவதாக சொல்லிவிட்டிருந்தனர்.
சாமி கும்பிட்டு அனைவரும் கிளம்பியிருக்க சினமிகா தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தாள். தமிழ் அவள் கைப்பிடித்து அழுத்திக் கொடுத்தார். “ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வரப் போறே தானேம்மா எதுவும் யோசிக்காத” என்றார் அவர்.
“ஹ்ம்ம் சரிம்மா” என்றவள் “உடம்பை பார்த்துக்கோங்கம்மா. அப்பா சரியா நேரத்துக்கு சாப்பிட மாட்டார். கடைக்கு கொண்டு போயாச்சும் கொடுத்திடுங்கம்மா” என்றாள்.
வேலனும் மகளின் அருகே வந்து “சந்தோசமா இரும்மா…” என்று தலையில் கை வைத்தார். தன் மருமகனிடம் வந்தவர் ஒன்றும் சொல்லவில்லை அவன் கைகளை பிடித்துக் கொண்டார்.
“கவலைப்படாதீங்க மாமா நாங்க இருக்கோம்” என்றான் அவன்.
மேகாவிற்கும் அழுகை வந்தது தமக்கையின் பிரிவில். சினமிகாவை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள். “எதுக்கு மேகா அழறே?? நான் எங்க போயிட்டேன் இங்க தானே இருக்கேன். அப்பப்போ பார்த்துக்கலாம் விடு” என்று சமாதானம் செய்தாள்.
அவர்கள் கிளம்பிச் செல்லும் வரையில் கூட அவள் கண்ணீரே விடவில்லை, அவர்களை சிரித்த முகமாகவே வழியனுப்பினாள். அவர்கள் வண்டி அப்புறம் நகர்ந்ததும் அவளால் தன்னை சமாளிக்க முடியவில்லை. உதிரன் பார்த்துக் கொண்டு தானிருந்தான்.
“அம்மா கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று அன்னையிடம் சொல்லிக்கொண்டு சினமிகாவை அழைத்துக் கொண்டு கோவிலின் பின்புறம் வந்தான்.
“இங்க பாரு” என்று அவன் சொன்னது தான் தாமதம் அவனை கட்டிக்கொண்டு ஓவென்று கதறல் அவளிடத்தில்.
அவள் அழட்டும் என்று இவனும் அமைதியாக இருந்தான் அவள் முதுகை நீவியவாறே. ஒரு வழியாய் அவளே சமாதானம் ஆகி அவனைவிட்டு தள்ளி நின்றாள்.
“முடிஞ்சுதா??”
“கிண்டல் பண்றீங்களா??”
“நிச்சயமா இல்லே… அவங்க முன்னாடி நீ அழவே இல்லை, பெரிய விஷயம் தான். ஏன்??”
“நான் அழுதா அவங்களுக்கு சங்கடமா இருக்கும் தானே. அதான் சமாளிச்சுக்கிட்டேன்”
“சரி போகலாம் வா” என்று சொல்லி அவள் தோளில் கைபோட அவள் அதை எடுத்துவிட்டாள்.
“நீ என் பொண்டாட்டி”
“அதுக்காக தோள்ல கைப்போட்டு அதை ஊருக்கே காட்டணுமா??”
“சரி தான், ஆனா நான் போடுவேன். இப்போ நீ சொல்றதுல ஏதாச்சும் காரணம் இருக்கும்ன்னு நினைக்கிறேன், சோ போனா போகுது” என்றவன் அவளுடன் நடந்தான்.
இதோ வீட்டிற்கும் வந்து சேர்ந்தனர். சினமிகாவின் உறவினர் பெண்மணி அவளுடன் இருந்தார் துணையாக.
இரவு உணவுக்கு பின் அவளை அலங்கரித்து உதிரனின் அறைக்கு அனுப்பி வைத்தனர். உதிரன் அங்கில்லை அவள் மட்டும் தானிருந்தாள்.
அறையின் அலங்காரம் அவளை என்னவோ செய்தது. அப்போது தான் அறையை முழுதுமாய் நோட்டமிட்டாள். அது அவள் கனவில் பார்த்த அதே அறை.
கட்டிலை திரும்பி பார்க்க அவள் கனவில் பார்த்த அதே கட்டிலும் மெத்தையும், குனிந்து அவள் கீழே பார்க்க அங்கே ஒரு குமிழ் இருந்தது.
சினமிகாவின் இதயம் வேகமாய் துடித்தது. அந்த குமிழை அவள் இழுக்கப் போக “என்ன சிமி தேடுறே??” என்றான் உதிரன்.
சட்டென்று எழுந்தவள் அவன் மேலேயே இடித்துக் கொண்டாள். உதிரனும் அவளை அணைத்தவாறே பிடித்துக் கொண்டான்.
“என்னே தேடிட்டு இருந்தே??”
“ஒண்ணுமில்லை, கீழே என்னவோ பூச்சி மாதிரி இருந்துச்சு அதான் பார்த்தேன்” என்றாள்.
“பாரு நான் கதவை சாத்தாம வந்துட்டேன்” என்றவன் அவளை விலக்கி கதவை நாடிச் சென்றான்.
தாழிட்டு திரும்பி வந்தவன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டான். “உட்காரு”
“ஹ்ம்ம்”
“என்ன செம சைலென்ட்டா இருக்கே??”
“அப்படில்லாம் ஒண்ணுமில்லையே”
“பயமாயிருக்கா??”
“தெரியலை…”
“பா… பால் சாப்பிடுங்க” என்று எழுந்தாள்.
“சரி கொடு” என்று அவன் சொல்ல அங்கு ஒரு குவளையில் வைத்திருந்த பாலை ஒரு தம்ளரில் ஒற்றி அவனிடம் நீட்டினாள். “நான் குடிச்சுட்டு உனக்கும் கொடுக்கணுமா, சினிமால காட்டுவாங்களே அது மாதிரி”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எனக்கும் ஒரு கிளாஸ் இருக்கு, நான் அதுல ஊத்தி குடிச்சுக்கறேன்” என்றவள் சற்று இயல்புக்கு வந்திருந்தாள்.
சொன்னது போலவே தனக்கும் ஒரு தம்ளரில் ஊற்றிக்கொண்டு அவனருகே அமர்ந்தாள்.
“கால்ல விழுக மாட்டியா அப்போ”
“பழைய படம் ரொம்ப பார்ப்பீங்கள் போல”
“புது படம்லா கூட பார்ப்பேன்”
“அப்போ பிரியமானவள் படத்துல விஜய் சிம்ரன் கால்ல விழுவார் அதும் பார்த்தீங்க தானே”
“தெரியாம கேட்டேன்மா” என்று சரண்டர் ஆனான்.
“நான் ஒண்ணு கேட்கலாமா உங்களை?? தப்பா எடுத்துக்க மாட்டீங்களே??”
“அது தப்பா சரியான்னு கேட்ட பிறகு தானே தெரியும். நீ கேளு நான் கண்டிப்பா பதில் சொல்றேன்”
“இல்லை வந்து காலையில் ஏன் அப்படி கோபம் வந்துச்சு உங்களுக்கு”
“நீ மனசுல எதுவும் வைச்சுக்காம கேட்டது எனக்கு சந்தோசம் தான். ஆனா இனிமே இப்படி கேட்காதே. உனக்கு விளக்கம் சொல்ல நான் கடமை பட்டிருக்கேன்”
“அம்மா எல்லாருக்கும் பிடிக்கும் தான். எனக்கும் அப்படித்தான், ஆனா அவங்க தான் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அப்பாக்கு அப்புறம் எல்லாமே அவங்க தான் எனக்கு”
“அப்பா இருந்தவரை எங்க சொந்தக்காரங்க எல்லாம் அப்பபோ வந்து போயிட்டு தான் இருந்தாங்க. அவங்க போன பிறகு தன் வேலைன்னு எல்லாரும் பிச்சுக்கிட்டு போய்ட்டாங்க”
“என்னைப் பத்தியோ அம்மாவை பத்தியோ யாருக்கும் எந்த கவலையும் இல்லை அக்கறையும் இல்லை. ஒரு தனி மனுஷி என்ன செய்வாங்கன்னும் யாரும் யோசிக்கலை”
“நாங்க அவங்ககிட்ட எந்த உதவியும் எதிர்பார்க்கலை. ஆனா நான் இருக்கேன்னு ஒரு சப்போர்ட் கூட யாரும் அப்போ கொடுக்கலை. எங்க நாங்க காசு கேட்டிருவோமோன்னே இருந்தாங்க”

“எல்லாத்துலயும் ஒரு ஹைலைட் என்னன்னா அந்த நேரத்துல கொஞ்ச கூட மனசாட்சியே இல்லாம சொத்தை மாத்தினா தான் ஆச்சுன்னு நின்னாங்க. அம்மா ஒரு வார்த்தை பேசலை, கொடுத்திருன்னு சொன்னாங்க”
“வீடு மட்டும் கொடுக்க வேண்டாம் மத்த எல்லாத்தையும் கொடுன்னு சொல்லிட்டாங்க. எல்லாத்தையும் விட அப்பா இல்லாத அந்த நேரம் அம்மா எவ்வளவு உடைஞ்சு போயிருப்பாங்க. ஆனா அதை எப்பவும் அவங்க என்கிட்ட காட்டினதே இல்லை. எனக்காக ஒவ்வொரு நிமிஷமும் இருந்தாங்க”
“என்னோட அத்தைங்க, சித்தப்பாங்க பேசினது நீ கேட்ட தானே. எங்கம்மா முன்னாடி வரக்கூடாதாம். அவங்களுக்கு நான் ஒரே பையன், எனக்கொன்னுன்னா அவங்க தான் வருவாங்க”
“அவங்களை விட்டு நான் கல்யாணம் பண்ண முடியுமா. அதுவும் அவங்க தூரத்துல இருந்து தான் பார்க்கணுமாம் அது என்ன நியாயம். விட்டுட்டு போன சொந்த பந்தம் எல்லாம் கூடவே இருக்குமாம். என்னோட அம்மா தள்ளி நின்னு பார்க்கணும் அதெப்படி என்னால ஒத்துக்க முடியும் நீயே சொல்லு சிமி”
“அத்தை நிஜமாவே ரொம்ப கொடுத்து வைச்சவங்க இப்படியொரு பிள்ளை கிடைக்க. எனக்கும் உங்களை மாதிரியே ஒரு பிள்ளை தான் வேணும்” என்று இவள் பேச்சுவாக்கில் சொல்ல உதிரன் இவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னங்க நான் பேசிட்டு இருக்கேன். நீங்க என்னை பார்க்கறீங்க??”
“எனக்கு பொண்ணு வேணும்”
“என்… என்ன சொல்றீங்க??”
“நீ பையன் வேணும்ன்னு சொன்னே, எனக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு வேணும் அப்பா மேல பாசமா இருக்க பொண்ணு” என்றான் அவன்.
அதில் அவள் முகம் நாணிவிட “நான் இந்த கிளாஸ் எல்லாம் கழுவி வைச்சுட்டு வர்றேன்” என்று எழுந்தாள்.
அங்கிருந்த வாஷ்பேசினில் கழுவிட்டு வந்தவள் அவனருகே அமர்ந்தாள். “நான் இந்த புடவையை மாத்திக்கட்டுமா. காலையில இருந்து இதே தான் கட்டிட்டு இருக்கேன்”
“ஏன் வேற மாத்திக்கலையா??”
“இல்லை அத்தை சொன்னாங்க இதான் சம்பிரதாயமாம் அதான்…” என்று இழுத்தாள்.
“மாத்தவா??” என்று இவனை பார்த்தாள்.
“மாத்தலாம் மாத்தலாம்” என்றவனின் பார்வை வேறு சேதி சொல்ல அதில் இவள் கண்களில் லேசாய் பீதி தெரிந்தது.
“என்ன ரொம்ப மாதிரி பார்க்கறே” என்றவன் தான் அவளை ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இல்லை…” என்றவள் எழுந்து நின்றாள்.
“இன்னைக்கு இங்க இருந்து நீ தப்பிக்க முடியும்ன்னு நினைக்கறியா??”
அவள் தலை இல்லையென்று ஆடியது. “அப்போ வா” என்று அவன் கை நீட்ட மெதுவாய் கரம் கொடுத்தாள் அவனிடம்.
அதைப்பற்றியவன் வேகமாய் சுண்டியிழுக்க அவன் மீது வந்து விழுந்தாள். “எதுக்கு என்கிட்ட பயம்”
அவளுக்கு வார்த்தையே வரவில்லை. அவன் பார்வை உச்சி முதல் பாதம் வரை கன்னாபின்னாவென்று அலைந்தது.
மெதுவாய் அவளை கட்டிலில் சாய்த்தவன் அவள் மேலே பரவியிருக்க நெற்றியில் ஆரம்பித்து அவள் மொத்த தேகத்தையும் அவன் இதழால் ஒற்றியெடுக்க ஆரம்பித்தான்.
அதில் அவள் உடல் சிலிர்க்க அவள் வெட்கத்தை வெற்றிக்கொண்டு அவளை தன் வசமாக்கிக் கொண்டவன் அவளுடன் சேர்ந்து தாம்பத்ய பந்தத்தை படித்து இருவரும் அழகிய இல்லறதிற்குள் நுழைந்தனர்…

Advertisement