Advertisement

1
திருவில்லிப்புத்தூர் அழகிய ஊர். தமிழக அரசின் சின்னமான கோபுரத்தின் அடையாளம். ஆண்டாள் அவதரித்த திருத்தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த புண்ணிய ஸ்தலம் என்ற பெருமை கொண்ட ஊர். ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்படும் ஊர்.
புலர்ந்தும் புலராத காலைப்பொழுது நம் நாயகி வாசலை கூட்டி நீர் தெளித்து கோலமிட்டு முடித்திருந்தாள்.
அப்படியே பின்னால் சென்று தொழுவத்திற்கு வந்திருக்க அங்கேயும் கூட்டி பெருக்கி சுத்தப்படுத்தி பசுவிற்கு தண்ணீர் காட்டிவிட்டு வந்தவள் அடுத்து குளிக்கச் சென்றாள்.
பைப்பின்னலை போட்டு முடித்து நுனிக் கூந்தலை முடிச்சிட்டு விளகேற்றியவள் சாம்பிராணி போட்டுக் கொண்டு வந்தவள் பின்னால் வந்து தொழுவத்திலும் புகை காட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
வீடே மணந்தது சாம்பிராணி புகையினால். “அம்மா நான் கடைக்கு கிளம்பறேன்” என்று அன்னைக்கு அறிவிப்பு செய்துவிட்டு அவள் வெளியில் வர “சினா கொஞ்சம் பால் இருந்தா கொடேன்” என்று வந்து நின்றார் அடுத்த வீட்டு பெண்மணி கோதை தன் ஒரு வயது குழந்தையுடன்.
அவர்கள் வீட்டில் கறக்கும் பால் வீட்டு உபயோகத்திற்கு போக மொத்தமும் பால்கோவா செய்வதற்காய் அனுப்பிடுவர்.
இன்று கோதை வந்து கேட்கவும் அந்த கோதை நாச்சியாரே வந்து கேட்டதாக தோன்றியது அவளுக்கு. எப்போதும் அவர் இப்படி கேட்பதில்லை. எப்போதாவது தான் வருவார்.
அதனால் ஒன்றும் சொல்லாமல் “கொஞ்சம் இருங்கக்கா” என்றுவிட்டு வீட்டிற்குள் சென்றாள்.
“அம்மா கோதையக்கா வந்திருக்காங்க. பால் கேக்குறாங்க” என்றுவிட்டு அன்னை எடுத்து வைத்திருந்த பாலில் இருந்து கொஞ்சம் எடுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றினாள்.
“சினா அது வீட்டுக்கு. அவளுக்கு தெரியாதா நாம பாலை எல்லாம் கடைக்கு அனுப்பிருவோம்ன்னு” என்றார் அவளின் அன்னை பூந்தமிழ்.
“அம்மா அவங்களுக்கு தெரியாதா ஏதோ இல்லைன்னு தானே கேட்கறாங்க” என்றுவிட்டு அவள் நகர “இப்படியே யார் என்ன சொன்னாலும் ஏமாந்திட்டே இரு” என்று அவள் நகர “என்ன ஏமாந்திட்டேன்??”
“முதல்ல பாலை கொடுத்திட்டு வா” என்றார் அவர்.
வெளியில் வந்து கோதைக்கு பாலை கொடுத்துவிட்டு அந்த குழந்தையை தூக்கி சில நொடிகள் கொஞ்சிவிட்டு உள்ளே வந்தாள் அவள்.
“சொல்லுங்க நான் என்ன ஏமாந்திட்டேன் இப்போ??”
“யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பாத சினா”
“நம்பினா என்ன இப்போ கெட்டுப்போச்சு”
“இப்படியே விதாண்டாவாதமா பேசாத”
இதற்கு மேல் நின்றால் அன்னையின் புலம்பலை நாள் முழுதும் கேட்கும் சூழ்நிலை வரலாம் என்றுணர்ந்தவள் “நான் கடைக்கு கிளம்பறேன்” என்றாள்.
“அப்பாவை இங்க வரச்சொல்லு இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அவருக்கு”
“சரி” என்றுவிட்டு நகர்ந்தாள்.
கடை என்று அவளால் சொல்லப்பட்ட இடம் தூரத்தில் எல்லாம் இல்லை இவள் வீட்டின் பின்புறமே இருந்தது. தொழுவத்திற்கு செல்ல இவள் வீட்டின் வழியே செல்ல வேண்டும்.
இந்த கடையானது தொழுவதிற்கும் பின்னால் இருந்தது. இவள் வீட்டில் இருந்து வெளியில் வந்து அருகில் இருக்கும் சிறு சந்தின் வழியே தான் அங்கு செல்ல வேண்டும்.
சினமிகா மெதுவாய் இறங்கி நடந்தாள். இன்னமும் பொழுது நன்றாய் புலர்ந்திருக்கவில்லை. மெதுவாய் இருள் விலகி வெளிச்சத்தை வரவேற்றுக் கொண்டிருந்தது.
கடைக்கு சென்றவள் அங்கும் கூட்டி பெருக்கி கோலமிட்டு சாமிக்கு பூப்போட்டு விளக்கேற்றினாள். அவள் தந்தை வெளியே இருந்திருப்பார் போலும். அப்போது தான் உள்ளே வந்தார்.
“சினா வந்துட்டியாம்மா உன்னைய தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன். சாமியை கும்பிட்டு அடுப்பை மூட்டி விட்டிருடா, ஆளுங்க இப்போ வந்திடுவாங்க”
“நீயே அந்த பாத்திரத்தை வைச்சு முதல்ல பாலை காய்ச்சிடுடா. உன் கையால செய்யற பால்கோவாக்கு ருசியே தனி தானே” என்றார் அவளின் தந்தை வேலன்.
“சரிப்பா, ஆனாப்பா நீங்க எனக்கு ரொம்ப ஐஸ் வைக்கறீங்க”
“ஹா ஹா நிஜம் தானேடா சொல்றேன். எனக்குமே நீ செய்யறது தான் பிடிக்கும்” என்றார் அவர்.
“அப்பா நம்ம மேகாக்கு ஒரு தூக்குல போட்டுக் கொடுக்கறேன் கொடுத்தனுப்பிடுங்கப்பா. அவ நேத்தே அம்மாகிட்ட கேட்டாளாம் அம்மா சொன்னாங்க” என்றாள் அவள்.
அதை கேட்ட அவருக்கு ஒரு மாதிரியாகிப் போனது. வீட்டின் மூத்த மகள் சினமிகா, வயது இருப்பத்தியாறு. அவளுக்கு பின் பிறந்த நீலவண்ணன் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை விரும்பி ஒரு வருடத்திற்கு முன் தான் யாருக்கும் சொல்லாமல் திருமணம் முடித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு அடுத்தவள் தான் மேகா கல்லூரிப் படிப்பை அவள் முடிக்கவுமே அவளுக்குமே வரன் வீடு தேடி வந்தது. வேலனும் பூந்தமிழும் மூத்தவளை வைத்துக்கொண்டு முடிக்க முடியாது என்று மறுத்திருந்தனர்.
சினமிகா தான் “எனக்கு முடியும் போது முடியட்டும்மா, அவளுக்கு வர்ற நல்ல வாழ்க்கையை நாம ஏன்மா கெடுக்கணும்” என்று பிடிவாதமாய் சொல்லிவிட நீலவண்ணன் திருமணத்திற்கு முன்பே அவளின் திருமணமும் முடிந்திருந்தது.
அதன் பின் தான் நீலவண்ணன் தன் விஷயத்தை வீட்டில் சொல்லியிருக்க வேலன் கோபத்தில் கத்த அப்போது வீட்டை விட்டு சென்றவன் தான் இன்னமும் எட்டிப்பார்க்கவில்லை.
அவன் நன்றாய் படித்து பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாத சம்பளத்திற்காய் வேலை செய்கிறான். அவனுக்கு தந்தையின் தொழில் பிடிக்கவில்லை. அருமை தெரியாதவர்களுக்கு எப்படி அது புரியும்.
இதோ மூத்த மகளுக்கு வரன் தேடிக் கொண்டிருக்கின்றனர் அது அமைந்த பாடு தான் இல்லை. மேகா பூந்தமிழை போன்று மிக அழகாக இருப்பாள்.
அதனாலேயே அவளை தேடி வந்து மணமுடித்து சென்றிருந்தனர். சினமிகா தன் தந்தை போன்று மாநிறமே நல்ல லட்சணம் பொருந்திய முகம் அவளுக்கு. பார்த்ததும் அவளை பிடிக்காதவர்களுக்கு கூட அவளுடன் பழகினால் பிடித்துப் போகும் அவளை.
வேலனுக்கு மகளைப் பற்றிய கவலை பெருங்கவலையாகி போனது. இளையவள் மாசமாயிருக்கிறாள், மூத்தவளுக்கு ஒரு திருமணத்திற்கு கூட வழியில்லாமல் இருக்கிறதே என்று நிதமும் அவர் மனம் வேதனை அடையும்.
சினமிகா அடுப்பை மூட்டி அந்த பெரிய பாத்திரத்தை தூக்கி வந்து அதில் வைக்க மற்றவர்கள் உள்ளே நுழைந்தனர்.
“என்ன சினா இன்னைக்கு அடுப்புகிட்ட நிக்க அப்போ இன்னைக்கு பால்கோவா மிச்சமில்லாம தீர்ந்து போகும் பாருங்க” என்று சொன்னார் ஒருவர்.
“அண்ணே போதும் போதும் இதான் வர்ற நேரமா வந்து வேலையை பாருங்க” என்றாள் அவள்.
அவளின் தந்தை கறந்து வைத்திருந்த பால் அந்த அறையின் ஒரு மூலையில் கேனில் வைத்திருக்க இவளே சென்று எடுத்து வந்தவள் பாலை அந்த பாத்திரத்தில் ஊற்றினாள்.
அதை கிளரும் பெரிய கரண்டியை கொண்டு பால் பொங்க பொங்க அதை கிளறிவிட்டுக் கொண்டிருந்தாள். பாலில் ஏடு பரவ பரவ அதை கொஞ்சம் கொஞ்சமாய் ஒதுக்கி ஒதுக்கி கிளறினாள்.
“சினா ஏலக்காய் தட்டி வைச்சிருக்கேன், சீனி இந்த கேன் அளவுக்கானது இதுல இருக்கு” என்று வந்து நின்றார் சித்ரா.
“தேங்க்ஸ்க்கா” என்றவள் ஏலக்காய்யை தூவினாள் இப்போது, பின் சீனியை சேர்த்து கிளறி பால்கோவாவின் பதம் வந்ததும் பக்குவமாய் அதை இறக்கி வைத்தாள்.
கொஞ்சம் பால்கோவாவை எடுத்து அங்கிருந்த கடவுளுக்கு படைத்தவள் இரு தூக்கில் கொஞ்சம் போட்டு எடுத்துக்கொண்டு தன் தந்தையை நாடி வந்தாள்.
“அப்பா இதை மேகா வீட்டுக்கு கொடுத்தனுப்பிடுங்க. நான் இப்போ கோவிலுக்கு போயிட்டு வர்றேன்ப்பா” என்று சொல்லி கிளம்பியவளுக்கு அப்போது தான் அன்னை சொன்னது நினைவிற்கு வர “அப்பா அம்மா இன்னைக்கு உங்களுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்கு வீட்டுக்கு வந்திட்டு போகச் சொன்னாங்கப்பா”

“நான் சொல்ல மறந்திட்டேன். கடைக்கு தான் ஆளுங்க வந்தாச்சேப்பா, நீங்க போய் குளிச்சிட்டு சாப்பிட்டு வாங்க. அதுக்குள்ள நான் கோவிலுக்கு போயிட்டு வந்திடறேன்” என்றாள்.
“சரிம்மா நான் பார்த்துக்கறேன். நம்ம ராசு வருவான் அவனை இன்னைக்கு சங்கரன்கோவிலுக்கு போய் தங்கச்சி வீட்டுல கொடுத்திட்டு வரச் சொல்றேன்”
சினமிகா ஏதோ சொல்ல வர “வீட்டுக்கு இப்போவே கிளம்புறேன்ம்மா” என்று அவர் சொல்ல திருப்தியாய் பார்த்துக் கொண்டு சென்றாள்.
சினமிகா படிக்காதவள் எல்லாம் இல்லை கல்லூரி சென்று பிஏ வரை படித்தவள் தான். அவளுக்கு அவளின் அன்னையை போல் தமிழின் மீது பிடித்தம் தமிழை தான் தெரிவு செய்து படித்திருந்தாள்.
தந்தைக்கு அவர் கடையில் எப்போதும் அவள் தான் உதவியாய் இருப்பாள் அது இப்போது வரையிலுமே தொடர்கிறது. சின்னவள் வேலை எல்லாம் நன்றாகவே செய்வாள் ஆனால் கடைக்கெல்லாம் அவள் வரமாட்டாள்.
கரிப்பிடித்துக் கொள்ளும் என்பாள். அவள் நிறம் குறைந்துவிடும் என்ற கவலை அவளுக்கு.
சினமிகா படித்து முடிக்கவுமே அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்திருந்தார் வேலன். ஏனோ அப்போதிருந்தே அவளுக்கு எதுவுமே செட்டாகவில்லை.
பெரும்பாலும் மாப்பிள்ளை வீட்டினர் வீடு வரை வந்ததேயில்லை. இத்தனை வருடத்தில் நால்வர் மட்டுமே வந்து பார்த்து சென்றிருந்தனர்.
சினமிகா கோவிலுக்கு வந்திருந்தாள். பெருமாளை சேவித்துவிட்டு ஆண்டாள் சன்னதி நோக்கிச் சென்றாள். மனமுருக பிரார்த்தனை செய்துவிட்டு அவள் அங்கு ஒரு ஓரத்தில் அமர ராதா மாமியின் கண்களில் விழுந்தாள்.
“என்ன சினா காலையில கோவிலுக்கு வந்திருக்கே, பெரிய வேண்டுதலோ” என்றவாறே வந்து அவளருகில் அமர்ந்தார் அவர்.
“அப்படியெல்லாம் இல்லை மாமி, எப்போவும் வர்றது தானே”
“அது சரிடியம்மா. நான் என்னவோ நீ உன் கல்யாணத்துக்காக வேண்டிட்டயோன்னு நினைச்சேன். சரி அதை விடு நாளைக்கு மார்கழி பிறக்குது காலையில நீயும் வந்திடுவியோ”
“கண்டிப்பா வந்திடுவேன் மாமி”
“இந்த ஆண்டாள் சீக்கிரமே உனக்கொரு ராஜகுமாரனை மாப்பிள்ளையா கொடுக்கட்டும். நீ வேணா பாரேன் இந்த மார்கழி முடியறதுக்குள்ள உன்னோட மாப்பிள்ளை உன் னைத் தேடி வருவான்” என்று அவர் சொல்ல திடுக்கிட்டு பார்த்தாள் சினமிகா.
ராதா மாமி பேசிவிட்டு எழுந்து செல்லவும் கோவில் மணி வேறு அடிக்க அவளுக்குள் லேசாய் அதிர்வலைகள். 
அவளுக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அவள் வீட்டில் அவளுக்கு முதன் முதலாய் மாப்பிள்ளை பேசி அவர்கள் பெண் பார்த்து சென்ற அன்றைய தினம் அவளுக்கொரு கனவு.
அன்றைய கனவு இன்று நடந்தது போல் இப்போதும் அவள் உடல் சிலிர்த்தது அதன் நினைவில். கனவில் இவள் எங்கோ இருட்டில் பயணிக்கிறாள்.
நடக்கிறாள் நடக்கிறாள் நடந்துக்கொண்டே இருக்கிறாள். எங்கு செல்கிறோம் என்று அவளுக்கு தெரியவில்லை ஆனால் பாதை முழுதும் கும்மிருட்டு.
இருளில் எங்கோ அகப்பட்டுக் கொண்டதை போன்ற உணர்வு. கால பைரவா என்னை காப்பாத்துப்பா என்று மனதிற்குள் அவள் வேண்டி முடிக்கும் தருணம் அந்த பைரவரே நாய் உருவத்தில் வந்தது போன்ற உணர்வு அவளுக்கு.
நாய் ஒன்று அவளருகில் நின்றிருந்தது. இவளை ஒரு பார்வை பார்த்து அது முன்னே நடக்க அது தான் வழி என்பது போல் இவளும் பின்னே நடந்தாள். 
முன்பாவது சுற்றுப்புறம் ஏதோ மலைப்பாதை என்பது இருந்தது. இப்போது ஏதோ குகைக்குள் போவது போன்று இருந்தது. அவ்வளவு நேரமும் வந்துக் கொண்டிருந்த காற்று மெல்ல மெல்ல குறைந்து புழுக்கம் வந்தது.

Advertisement