Advertisement

அவள் எண்ணமே சரி என்பது போல் அவள் எங்கோ இடித்துக்கொள்ள இவள் தடவிப் பார்க்க அது குகையின் சுற்றுப்புற சுவர் என்பது புரிந்தது. அங்கும் இருள் மட்டுமே ஆட்சி செய்தது, ஆனால் தூரத்தில் எங்கோ ஒரு வெளிச்சப்புள்ளி வந்துக் கொண்டிருந்தது.
அது எங்கிருந்து வருக்கிறது இவள் அறியாள் ஆனால் அதன் ஒளி இவர்கள் பாதைக்கு இப்போது வழி வகுத்தது. ஒரு வழியாய் அவர்கள் அந்த வெளிச்சப்புள்ளி தோன்றிய இடத்திற்கு வந்திருக்க பார்த்திருந்தவள் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பெரிய வீடு அது ஒரு திருமணத்தையே நடத்திவிடும் அளவிற்கு பெரியது அது. அதன் நடுவில் அவள் எண்ணம் போல் மணமேடை ஒன்று போடப்பட்டிருக்க ராஜாவை போல் உடைத்தரித்திருந்தவன் அமர்ந்திருந்தான்.
‘பெரிய ராஜா போல அவருக்கு கல்யாணமாயிருக்கும். பொண்ணும் பெரிய வசதியான வீட்டு பொண்ணா இருக்கும்’ என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த வேளை அவளை யாரோ சுரண்டுவது போலிருக்க அவள் திரும்பி பார்த்தாள்.
பைரவர் இன்னும் அங்கு தான் நின்றிருந்தார். ‘இதெப்படி மறந்தேன்’ என்று யோசித்தவாறே ‘இங்க எதுக்கு வந்திருக்கோம் யாரைப் பார்க்க’ என்று எண்ணம் போனது. பைரவருக்கு அவள் நன்றி சொல்ல சில நொடிகளில் பைரவரை காணவில்லை.
பிரமையோ என்று இவள் யோசித்துக் கொண்டிருக்க அறைக்குள் சிலர் நுழைந்தனர். இவளைப் பார்த்து ஏதோ சொல்லி சிரித்தவர்கள் இவளை அழைத்துச் செல்ல ‘என்ன எதுக்கு இவங்க கூட்டிட்டு போறாங்க’ என்று இவள் நினைக்க அவர்கள் அவளை நேராய் அழைத்துச் சென்ற இடமோ மணவறை.
அந்த ராஜாவின் அருகே இவளை அமர வைக்க அவன் இவளின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தான். குப்பென்று வியர்த்துவிட இவள் எழுந்து அமர்ந்திருந்தாள். அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று யாரோ சொன்னது வேறு நினைவுக்கு வர ஒன்றும் புரியாமல் இருந்தாள்.
மறுநாள் அவள் வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டு பெண்ணொருத்தி “என்ன சினா நேத்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாங்க போல. என்ன சொன்னாங்க??” என்றாள்.
“எதுவும் சொல்லலைக்கா??”
“அதுக்கெல்லாம் கவலைப்படாத சினா. வர்ற முத மாப்பிள்ளையே அமையணும்ன்னு இல்லை. இதுக்கெல்லாம் நீ விசனப்படாத” என்று அவர் சொல்லி செல்ல இவளோ ‘நான் எங்க இப்போ கவலைப்பட்டேன்’ என்று தான் யோசித்தாள்.
அதுவுமில்லாமல் மாப்பிள்ளை வீட்டினர் அவர்களின் வீட்டில் கலந்து பேசிவிட்டு அன்று சொல்வதாக தான் சொல்லி சென்றிருந்தனர். இன்னமும் அவர்கள் முடிவை சொல்லியிருக்கவில்லை அதற்குள் இவர் இப்படி சொல்கிறார் என்று எண்ணிக்கொண்டு அவள் தன் வேலையை பார்த்தாள்.
என்ன காரணமோ அவள் அறியாள் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பதில் வந்திருந்தது பெண் வேண்டாம் என்று. அவர்கள் கோவிலில் பூ போட்டு பார்த்ததாகவும் பூ அவர்கள் வேண்டியது வரவில்லை என்று சொல்லியிருந்தனர்.
அது போலவே ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு மாப்பிள்ளை வீட்டினரும் வரும் போதெல்லாம் அதற்கு முன்னமே இவளுக்கு தெரிந்து போகும் இந்த இடம் முடியாது என்று. 
சில வரன்கள் வந்து பார்த்து செல்வர், சிலது பேச்சு முடிவது போல செல்லும் நாளை அவர்கள் வருவதாக இருக்கும் ஆனால் வர மாட்டார்கள். 
முதலில் அதை கண்டுக்கொள்ளாதவள் அவளின் தங்கையின் திருமணமும் தம்பியினதும் முடிந்த போது தான் சில விஷயங்கள் அவளுக்கு புலப்பட்டது.
சினமிகாவின் தங்கை கல்லூரி முடித்து வீட்டிலிருந்தாள். இவள் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்க வழியில் ஒரு பெண்மணியை பார்த்தாள். இவள் கடைக்கு வாடிக்கையாய் வந்து பால்கோவா வாங்க வருபவர் தான் அவர். எப்போதாவது கோவிலிலும் அவரை பார்த்திருக்கிறாள்.
“சினா என்ன கோவிலுக்கு போயிட்டு வாராப்புல இருக்கு”
“ஆமாம்மா”
“ஹ்ம்ம்” என்று பெருமூச்சுவிட்டவர் “போன வாரம் உங்கம்மாவை கடையில பார்த்தேன் உனக்கு எந்த இடமும் முடியலைன்னு கவலையா பேசிட்டு இருந்தாங்க”
“உனக்கும் வரன் பார்க்க ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆகப் போகுதாமே. உன் தங்கச்சியும் அடுத்து ரெடியா நிக்குறா, போறப் போக்க பார்த்தா உனக்கு முன்னுக்க உன் தங்கச்சிக்கு முன்னாடி முடிஞ்சிரும் போல” என்று அவர் சொல்ல உள்ளுக்குள் சுருக்கென்றிருந்தது அவளுக்கு.
தங்கைக்கு முதலில் முடிப்பதை பற்றி அவளுக்கு கவலையில்லை. இதென்ன இப்படி ஒரு பேச்சு பேசுகிறார்கள் என்ற எண்ணமே.
அவர் சொன்னது போலவே அடுத்த வாரமே மாப்பிள்ளை வீட்டினர் தேடி வந்து அவள் தங்கையின் திருமணம் ஒரே மாதத்தில் முடிந்தது. 
தன் வாழ்வில் ஏதோவொன்று நடக்கிறது என்று அவள் உணர ஆரம்பித்த தருணம் அதுவேயாகும். தங்கை திருமணத்திற்கு வந்திருந்த இவளை பிடிக்காத தூரத்து உறவில் இருந்த அத்தை ஒருவர் “தங்கச்சிக்கு முடிஞ்சிட்டு, நாளைக்கு உன் தம்பியும் யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கப் போறான்”
“உனக்கு எப்போ தான் முடியுமோ” என்று அவர் குத்திப்பேச அவளுக்கு உள்ளுக்குள் எதுவோ செய்தது. இப்படி பேச்சுகள் வரும் ஒவ்வொரு முறையும் ஏதோவொன்று அவளுக்கு உணர்த்தியது. அது பலிக்கப் போகிறதென்று.
அவர்கள் பேசும் அனைத்தும் எல்லாம் பலிப்பதில்லையே. சில விஷயங்கள் மட்டுமே பலிக்கிறது, அதுவும் அவளை பற்றி சொல்லும் தருணங்கள் மட்டுமே.
அது அசரிரீயா அல்லது அது நடக்கப் போகிற நிகழ்வின் ஆரம்பமா என்று அவளுக்கு புரியவில்லை. இதோ இப்போது ராதா மாமி சொல்லி செல்கிறார் கோவில் மணியும் அடிக்கிறது.
இதுவும் நடக்கப் போகிறதா தன் கனவு பலிக்கப் போகிறதா என்ற எண்ணம் அவளுக்குள் வியாபித்தது.
——————–
உதிரன் தன் கைக்கடிக்காரத்தை எடுத்து கையில் கட்டிக் கொண்டிருந்தான். அவன் அன்னை சீதாதேவி அவனை அழைத்தார்.
“உதிரா??”
“என்னம்மா??”
“ஏன்பா இன்னைக்காச்சும் உனக்கு வேலை கிடைச்சிடுமாப்பா??”
“இப்போவே எப்படிம்மா சொல்ல முடியும். நானும் கிடைச்ச வேலையெல்லாம் பார்த்திட்டு தான் இருக்கேன். என்னவோ எதுவுமே செட் ஆக மாட்டேங்குது”
“உன்னைய மேற்கொண்டு படிக்க வைச்சிருந்தா பெரிய வேலைக்காச்சும் போயிருக்கலாம். பாதியிலேயே படிப்பை நிறுத்தும் படியாச்சு” என்று சொல்லி கண் கலங்கினார் அவர்.
“அதுக்கென்னம்மா பண்ணுறது விடுங்க”
“இன்னைக்கு எங்கேப்பா போகப் போறே??”
“தெரியலைம்மா யார் வேலை கொடுக்கறாங்களோ அங்க வேலைக்கு போகலாம்ன்னு இருக்கேன்”
“நமக்கு இப்படியா ஆகணும். உங்க பாட்டன் பூட்டன் எல்லாம் இருந்த இருப்புக்கும் இப்போ நாம இருக்கற இருப்புக்கும் எந்தவொரு சம்மந்தமுமில்லை” என்று அவர் அடுத்து ஆரம்பிக்க “அம்மாம்மா போதும் நிறுத்துங்க ஆரம்பிக்காதீங்க”
“காலம் வேகமா போயிட்டு இருக்கு. இன்னும் பழைய கதையை பேசிட்டு இருக்காதீங்க. நான் கிளம்பறேன்” என்றவன் வீட்டிலிருந்து வெளியில் வந்தான்.
அவனின் வீடென்னவோ சொந்த வீடு தான். வீடு ராஜபாளையத்தில் இருக்கிறது. பெயருக்காக தான் அந்த வீட்டில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள். இன்ஜினியரிங் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது அவன் தந்தை ராமசாமி நெஞ்சு வலியில் இறந்துவிட அவன் படிப்பு அங்கேயே முடிந்து போனது.
வீட்டிற்கு ஒரே ஆண் வாரிசு அவனே. அவன் அப்பாவிற்கு உடன் பிறந்த தம்பிகள் இருவர், அவர்கள் அவன் தந்தை இறந்த பிறகு சொத்திற்காய் அடித்துக் கொண்டதில் இவனே அனைத்தையும் பிரித்துக் கொடுத்துவிட்டான்.
அந்த வீட்டை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். தற்போதைய மதிப்பில் அந்த வீடு பல லட்சங்கள் பெறுமானம் ஆகும்.
அதை விற்க அவன் அன்னை தடை, பேங்கில் வைத்து கடன் வாங்க தடை என்று அவனால் முன்னேயும் செல்ல முடியவில்லை பின்னேயும் போக முடியவில்லை.
அதனால் கிடைத்த வேலைகளை செய்து வந்தான். ராஜபாளையத்தில் தெரிந்தவர் ஒருவரின் மூலம் அங்கிருந்த மில்லில் வேலை பார்த்தான்.
இவன் டிகிரி முடிக்காததால் இவன் சம்பளம் சொற்பமாகவே வந்தது. அது அவர்களின் செலவிற்கு போதாதாக இருக்க வேறு வழியில்லாது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டான்.
அவன் அன்னை அதற்கும் தடை சொல்லத் தான் செய்தார். வருமானம் வேண்டுமே அதனால் அதைச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்திருந்தான்.
வாடகை வரும் பணமும் அவன் சம்பளமும் கொஞ்சம் போதுமானதாக இருந்தது அவர்களுக்கு. அவன் அப்பா பார்த்துக் கொண்டிருந்த தொழிலை கூட அவன் சிற்றப்பாமார்கள் சண்டையிட்டு பிரித்துக் கொண்டு சென்றிருந்தனர்.
அவன் தந்தையின் ஈமச்சடங்கு, அதற்கு முன் அவர் மருத்துவமனையில் இருந்த செலவு என்று அனைத்தும் கடனாகியிருந்தது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் அதை அடைத்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்தான்.
இதோ அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த மில்லை நிரந்தரமாக மூடிவிட்டனர். வேலை போய்விட்டது அடுத்து என்ன செய்ய என்ற நிலை.
கிடைத்த வேலையை செய்துக் கொண்டிருக்க அது அவனுக்கு பிடித்தமில்லாமல் போனது. நிரந்தமான தொழில் இல்லாமல் அவனும் தான் என்ன செய்வான்.
உயிர்ப்பானவனே
சினம் கொள்ளாதவளின்
கரம் சேர்வாய்
வரம் பெறுவாய்
நலம் காணுவாய்
வீழ்ச்சி போய்
மாட்சிமை அடைவாய்

Advertisement