Advertisement

அத்தியாயம் இரண்டு :

மாயங்களும் மந்திரங்களும் என்னுள்!

தாத்தாவின் வீட்டை அடையவும் அங்கே வெளியே மாயாவின் தங்கைகள் இருவரும் மோஹினியும் மாலினியும் அமர்ந்திருந்தனர். கூட மந்திரனின் தங்கை காயத்திரியும்.

அமைதியாக தான் மூவரும் அமர்ந்திருந்தனர். மாயா சென்றது யாருக்கும் தெரியவில்லை என அனுமானித்தான் மந்திரன்.

காயத்ரி இவனை பார்த்ததும் “இவங்க அப்பா அம்மா எங்கே? இவங்க தேடறாங்க” என்றாள்.

“வந்துட்டே இருக்காங்க” என்று இருவரையும் பார்த்தான், சிறுமிகள் இருவரும், இவர்களை போய் அப்படி சொல்லி வந்து விட்டோமே என்று மனது உறுத்தியது.

அம்மாவை மீற முடியாது, இதுவரை எதுவும் சொல்லாதவர் இதை சொல்லும் போது செய்தே ஆக வேண்டிய கட்டாயம். அதையும் விட அப்பாவும் எதுவும் அவனிடம் சொல்லவில்லை. வீட்டில் அத்தனை எதிர்ப்பு, தாத்தா சொல் தட்டாத அப்பா, ஆனால் இந்த விஷயத்தில் மறுத்து பேசவில்லை.

இது ஒரு வகையான மறைமுகமான “நீ செய்” என்ற அவரின் ஒப்புதல்.

ஆனால் மாயா அவளை ஏன் இவர்கள் நினைக்கவில்லை.

மாயா அவளுக்கு யார் மேலாவது விருப்பம் இருந்தால்? யார் மேலாவது என்ன? சீ எம் மின் பேரன்! என்ன மாதிரியான வாழ்க்கை, அதை வேண்டாம் என்று சொல்ல நான் யார்! என்னுடைய பிரச்சனைக்குள் எப்படி அவளின் வாழ்க்கையை பாழ் செய்ய முடியும்?

அதையும் விட வேறொருவனை நினைப்பவள் என்னுடைய மனைவி எப்படி ஆக முடியும்? ஐயோ என்று இருந்தது. நினைத்திடவே பிடிக்கவில்லை. யோசனைகளோடு இருந்தவன் காரை அங்கே வீட்டின் உள் நிறுத்தி விட்டு வெளியே வந்தான்.

பிறகு தான் அவர்கள் எப்படி வருவார்கள் எப்போது வருவார்கள் என யோசித்து நின்றிருந்தான். வீட்டின் உள் செல்லவில்லை செல்லவும் மாட்டான்.

கேட்டின் வெளியில் நின்று, “இவங்க குளிச்சு சாப்பிட்டிடாங்களா?” என்றவனிடம்,

“இல்லை அப்பா அம்மா அக்கா இல்லைன்னதும் அப்படியே தான் உட்கார்ந்து இருக்காங்க”

“அவங்க வந்துடுவாங்க, போ, போய் சாப்பிட வை” என்று காயத்ரியை அதட்ட, அதில் பயந்து அந்த இரு சிறுமிகளும் உள் செல்ல, இவனை ஒரு பார்வை பார்த்தவாரே காயத்திரி அவர்களின் பின் சென்றாள்.

அப்போது காலை பத்து மணி, ஈரோடு சென்று வந்திருக்கிறான். ஆனால் அங்கே எந்த பரபரப்பும் இல்லை. அந்த வீடு எப்போதுமே அமைதியாக தான் இருக்கும். தாத்தா பாட்டி அவனின் அம்மா நீலாம்பிகை தங்கை காயத்திரி மட்டுமே அந்த வீட்டினில்.

அம்மா அனேகமாக மில்லிற்கு சென்றிருக்க வேண்டும். காலை ஒன்பது மணிக்கு சென்று விடுவார். அப்படி வீட்டினில் யார் இருக்கிறார்கள் இல்லை என்று கூடவா கவனத்தில் இல்லாமல் செல்வார்.

ஒரு தளர் நடையோடு வீதியின் இந்த கடை கோடியில் இருந்து அந்த கடை கோடியில் இருந்த அவனின் வீட்டிற்கு செல்ல, பாதி வழியிலே மீண்டும் திரும்பி அந்த வீட்டை பார்த்தான்.

அதன் முன் இரு கார்கள் வந்து நிற்க, நின்று நிதானமாக பார்த்தான்.

நீலகண்டன் இறங்க, பின் சுகந்தி இறங்க, அதற்கு பின் மாயா இறங்கினாள். இறங்கிய சுகந்தி மக்களை தேட அதற்கு அவசியமேயில்லாமல் காரின் சத்தம் கேட்டு மோஹினியும் மாலினியும் வெளியே வந்தவர்கள் அம்மாவிடம் ஓடி வந்து “எங்க போனீங்க?” என்றனர்.

“ஏன் டா? என்ன ஆச்சு?” என்று பதற, “ஒன்னுமாகலையே, உங்களை காணோம்! சொல்லிட்டு போகணும் தானே!” என மாலினி சொல்ல,

“அவசரமா போனோம்! நீங்க தூங்கி எழறதுக்குள்ள வந்துடலாம்னு” என்றவர் “சாப்பிட்டீங்களா?” என,

மாயாவிற்கு அந்த க்ஷணத்தில் அப்படி ஒரு கோபம் பொங்க “இப்படி ஒரு அப்பாம்மா? இதுக்கு நான் வேற கூட வந்திருக்கேன்” என்றாள் நீலகண்டனிடம் தயங்காமல்.

சுகந்தி அவசரமாக திரும்பி பெரிய மகளைப் பார்க்க, அவரை அலட்சியப்படுத்தி உள்ளே நடந்தாள்.

பெரிய மகளை பார்க்க கூடாது என்றெல்லாம் இல்லை, எப்போதுமே அதிகம் மாயா பெற்றோர்களை தேடவே மாட்டாள். அம்மா இருந்து கவனிக்க வேண்டும் என்பதே அவளிடம் கிடையாது. இரண்டு இரண்டு ஆண்டு இடைவெளியில் மூன்று பெண்கள்.

இரண்டாவது குழந்தை பிறந்ததுமே இரண்டு வயது மாயா பெரியவளாகிப் போனால், மூன்றாவது குழந்தை பிறந்ததுமே நான்கு வயது மாயா இன்னும் பெரியவளாகி இரண்டு பேருக்கு அக்காவாகிப் போக, அப்படி ஒன்றும் அம்மா அப்பாவை கொஞ்சத் தோன்றியது இல்லை, அவர்கள் கொஞ்ச வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை.

எல்லாவற்றிலும் தனித்து நிற்பாள், யாரையும் எதிர்பார்க்க மாட்டாள். ஏன் உணவு கொடுக்க அம்மா வந்தால், “நான் என்ன சின்ன பொண்ணா? எனக்கு சாப்பிட தெரியும்! அவங்க ரெண்டு பேரை கவனிங்க! என்று தங்கைகளிடம் திருப்பி விடுவாள்.

வேலைக்கு போகும் சுகந்திக்கு மூன்று குழந்தைகளை கவனிப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்க, தன்னை தேடும் இரண்டு குழந்தைகளை கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும், சமைப்பது மூன்று குழந்தைகளை பார்ப்பது வேலைக்கு செல்வது என்று சிரமப் பட்டு போய் விடுவார்.

இப்போதைய அளவு அப்போது நீல கண்டனுக்கோ இல்லை சுகந்திக்கோ சம்பளம் கிடையாது. கஷ்ட ஜீவனம் கிடையாது என்றாலும் பட்ஜெட் போட்டு வாழும் வாழ்க்கை. அதையும் விட நீல கண்டன் வசதியான மகனாக எந்த வேலையும் செய்யாமல் வளர்ந்தவருக்கு, குடும்பத்தை ஒற்றை ஆளாக கொண்டு செல்வது அவருக்குமே பழக பல வருடங்கள் ஆனது.

இப்போதைய பக்குவம் அவருக்குமே இல்லை! எல்லா கோபதாபங்களும் மனைவிடம் மட்டுமே காண்பிப்பார். சுகந்தி அனுசரித்து போகும் மனைவி என்றாலும் அவர்களுக்குள் வரும் சண்டைகள் அனேகம்.

இப்படி இருக்க மற்ற இரண்டு மக்களிடம் கேட்கும் கேள்விகளோ, கவனிப்போ மாயாவிடம் இருக்காது. அவளை இந்த கேள்விகள் கேட்டால் “இதெல்லாம் என்னை பார்த்து கேட்பாயா? எனக்கு தெரியாதா?” என்ற பெரிய மனிதத் தன்மை தான் இருக்கும்.

அதுதான் மாயா, ஸ்வர்ணமாயா அவளின் முழுப் பெயர்.

அவளை சுற்றி அவளுக்காக எப்போதுமே ஒரு கூட்டம். அப்படி அதீத அழகு சொல்ல முடியாது, ஆனாலும் அழகி, அதையும் விட நடை, உடை, பாவனை, பேச்சு, சொல், செயல் பொதுவாய் அனைவரையும் கவரும். தங்களுக்கு ஏன் இப்படி வருவதில்லை வந்தால் நன்றாக இருக்குமே என்று தான் நினைப்பர்.

அப்படி சிநேகிதம் ஆனவள் தான் ஸ்ரீநிதி, பொதுவில் அப்படி ஒரு மூடி டைப் ஸ்ரீநிதி! யாரோடும் பழக மாட்டாள். பத்தாம் வகுப்பு வரை ஹாஸ்டலில் இருந்தவள், தனிமையில் யாரோடும் பேசாமல் இருந்தவள், இங்கே பதினொன்றாம் வகுப்பில் மாயாவின் வகுப்பிற்கு.

சற்று குண்டாக இருப்பாள், நிறமும் சற்று குறைவு, அதன் பொருட்டு ஸ்ரீநிதிக்கு தாழ்வு மனப்பான்மை. அங்கே சேர்ந்து அவள் இரண்டு நாட்கள் ஆகியிருக்க, அந்த இரண்டு நாட்களும் மாயாவும் விடுப்பு எடுத்திருந்தால் பள்ளிக்கு.

அன்று தான் மாயா பள்ளிக்கு வந்திருக்க ஸ்ரீநிதி யாரோடும் பேசாமல் தனியாக உணவு உன்ன, அவள் யாரென்று யாருக்கும் தெரியாது.

மாயா தான் இவளருகில் வந்து அமர்ந்து, “ஏன் தனியா இருக்க? தனியா சாப்பிடற நானும் உன்னோட சேர்ந்துக்கட்டுமா?” என தானாக சென்று பேசினாள்.

“ம்ம்” என்று அப்போது தலையை மட்டும் ஆட்டினாலும் சகஜமாக ஸ்ரீநிதிக்கு பேச வரவில்லை. ஆனாலும் விடாது மாயா சலசலக்க,

“இங்கே வா” என்று அவளின் மற்ற தோழிகள் கூப்பிட,

“இல்லை நான் நிதி கூட சாப்பிடறேன்” என்று உரிமையாக சொல்ல, அதுவரை யாரும் அவளின் வகுப்பில் பேசாது இருந்தவர்கள், ஒன்றிரண்டு பேர் “ஹாய்” என்றார்கள்.

“இன்னைக்கு தான் அவங்கல்லாம் என்கிட்டே ஹாய் சொல்றாங்க” என்ற ஸ்ரீநிதி, “நீங்க கூட என்கிட்டே ரெண்டு நாளா பேசலை” என,

“அம்மாடி” என்ற மாயா, “நீங்களா? கட் திஸ்!” என்றவள், “நான் ஏன் பேசலை தெரியுமா?” என்று நிறுத்தினாள்.

“என்னவோ?” என்று ஸ்ரீநிதி பார்க்க,

“நான் ரெண்டு நாளா வரலை” என சொல்லி சத்தம் போட்டு சிரித்தாள்.

என்னவோ கூட சேர்ந்து சிரிக்க வேண்டும் போல ஸ்ரீநிதிக்கு அப்படி ஒரு உந்துதல், ஸ்ரீநிதியின் முகத்தினில் தானாக புன்னகை பூக்க,

“குட், இப்படி தான் இருக்கணும். உம்ன்னு இருக்கக் கூடாது” என்று எதோ சிறு குழந்தைக்கு சொல்வது போல மாயா சொல்ல , ஸ்ரீநிதிக்கு அவளை அவ்வளவு பிடித்தது. அப்போது ஆரம்பித்தது தான் அவர்களின் நட்பு. பின்பு பல சமயங்களில் பலமானது.

இதோ தோழிக்காக அண்ணனை அனுப்பி வைத்திருக்கிறாள். நிர்மலை கவனியாது சென்ற மாயா, பின்பு நினைவு வந்தவளாக “அச்சோ” என திரும்பி, “சாரி அண்ணா” என விரைந்து வந்தவள், “உள்ள வாங்க” என அழைத்தாள்.

அதன் பின்னரே உணர்வு வந்தவர்களாக பெற்றோர்களும் அழைக்க, நிர்மல் வர, அவனின் அடிபொடிகள் அங்கேயே தேங்கி நின்றனர்.

“சாரி, நான் உங்களை பார்த்ததில்லை” என்று மரியாதை நிமித்தம் நீலகண்டன் சொல்ல,

“நான் இங்க இல்லை, ஆஸ்டிரேலியால இருந்தேன், நிதி ரொம்ப கம்பல் பண்ணினா, மாயா பிரச்சனைல இருக்கான்னு வந்தேன், அப்படியே என்னால போக முடியாது? என்னன்னு எனக்கு தெரியணும்!” என்று வற்புறுத்தும் குரலில் கேட்டான்.

அப்பாவிடம் நிர்மல் கேள்வி கேட்கவும், மாயாவிற்கு அது சற்று முரண்டியது. அவளின் அப்பாவை ஒருவர் கேள்வி கேட்பதா என்பது போல,

நீலகண்டன் விழிக்க, திரும்பிய மாயா “அண்ணா நான் பார்த்துக்கறேன், கொஞ்சம் நேரம் சாப்பிட்டிட்டு வர்றேன், ப்ளீஸ் எதுவும் கேட்காதீங்க” என்று சென்றாள்.

சுகந்தி மகளின் பின்னோடு சென்று உணவு வைக்க முற்பட, “நான் வெச்சுக்கறேன்” என்று சொன்னவள், அம்மாவை வைக்க விடவில்லை, அவளே வைத்துக் கொண்டு அவசரமாய் உண்ண, அப்போது தான் தாத்தாவின் அறையில் இருந்து பாட்டி வெளியே வந்தார்.

மாமியாரின் முன் மகள் எதுவும் சொல்லி விடுவாளோ என சுகந்தி ஒதுங்கி கண்பார்வை படும் இடத்தினில் நின்று கொண்டார். பாட்டியின் முன் மாயாவும் எதுவும் பேசவில்லை.

“இன்னுமா பொண்ணுங்களா நீங்க சாப்பிடலை” என்று காயத்ரியையும் ரோஹினியையும்  மாலினியையும் பார்த்துக் கேட்டார்.

“இதோ பாட்டி” என்ற காயத்திரி, வீட்டினலாக “அத்தை, மாமாவையும் கூப்பிடுங்க” என்றாள்.

நடந்தவைகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வராத சுகந்தி தடுமாற, மாயா மாலினியிடம் “அப்பாவையும், அங்க ஒரு அண்ணா இருப்பாங்க, அவங்களையும் சாப்பிடக் கூப்பிடு” என்றாள்.

மாலினி அக்கா சொன்னதை தப்பாமல் செய்ய, நீலகண்டன் “வாங்க” என நிர்மலை சம்பிரதாயமாக அழைக்க, “வேண்டாம்” என்று நிர்மல் மறுத்தான்.

அதை மாலினி அப்படியே ஒளிபரப்பினால் மாயாவிடம்.

உண்டு கொண்டிருந்தவள் அப்படியே எழுந்து வந்து “அண்ணா வாங்க, இல்லை எங்கண்ணனுக்கு சாப்பாடு கூட போடாம, நீ மட்டும் சாப்பிடுவியான்னு நிதி கேட்பா?” எனவும்,

“எனக்கு போன் பண்ணிட்டே இருக்கா” என்றான் சலிப்பாக நிர்மல்.

அந்த குரல் என்ன உணர்த்தியதோ “அண்ணா, நிதி கிட்ட நான் பேசிக்கறேன். நீங்க வாங்க” என்று சொன்னவள் நீலகண்டனிடம் “கூப்பிட்டிட்டு வாங்கப்பா” என்றாள்.

“என்னடா நடக்குது” என்று நொந்து போனான் நிர்மல். “என்ன இது? எதற்கு வந்தோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்?”

“இல்லை, நான் கிளம்பறேன், இன்னைக்கு ஈவ்னிங் வரை கோவை சிட்டில தான் இருப்பேன். நைட் தான் சென்னை கிளம்பறேன். எப்போன்னாலும் என்னை கூப்பிடு, யாரும் எதுக்கும் கட்டாயப் படுத்த முடியாது” எனப் பொதுவாக சொல்ல,

“யார் இது?” என்பது போல பாட்டி பார்த்திருந்தார்.

“அண்ணா ப்ளீஸ், உங்களை வெச்சு காமெடி எதுவும் பண்ணலை. சோ, எதுவும் வொர்ரி பண்ணாதீங்க, இப்போ சாப்பிடுங்க, வாங்க!” என்றார்.

அதற்குள் காயத்திரியின் கைபேசிக்கு அழைத்த மந்திரன், “யாரு அது வீட்டுக்குள்ள? வாசல்ல கார் நிக்குது!” என எதுவும் தெரியாதது போல கேட்டான்.

என்ன நடக்கின்றது என்று தெரிந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். பின்னே நாளை நிச்சயம் செய்வதாக பேச்சு. ஒருவேளை முதல் மந்திரியின் பேரன் என்பதால் அவளின் அப்பாவே திருமணதிற்கு சம்மதம் தெரிவித்து அழைத்து வந்திருப்பாரோ என்ற யோசனைகள் ஓடக் கேட்டான்.

“தெரியலை? என்னவோ அவங்களை சாப்பிடக் கூப்பிட மாயா போயிருக்கா!” என்று மட்டும் சொல்ல,

“யாரு அது?” என்றான் அதட்டலாக.

“யாருக்கு தெரியும்? சும்மா என்னை கேட்டா?” என்று காயத்திரி எகிறினாள். அண்ணனுக்கும் அவளுக்கும் ஆகவே ஆகாது.

“உனக்கு போய் கூப்பிட்டேன் பாரு” என மந்திரன் சொல்ல,

“அது தான் உன்னை சுத்தி அத்தனை தங்கைங்க இருக்காங்க தானே. நான் எதுக்கு” என்று சொல்ல,

“வைடி ஃபோனை, உன்னையெல்லாம் மதிச்சு கேட்டேன் பாரு”

“ஏன் என்னை மதிக்காம யாரை மதிக்கப் போற. இரு, அம்மாகிட்ட சொல்றேன்”

“சொல்லு முதல்ல, என் உயிரை எடுக்கறாங்க. அதுதான் நாங்க வேண்டாம்னு போயிட்டாங்க தானே, பின்ன நான் யாரை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஏன் சொல்றாங்க? அது பின்னாடி போய் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சணுமா?”

“பண்ணிக்க மாட்டேன்னு அம்மா கிட்ட சொல்லவேண்டியதுதானே. சும்மா என்கிட்டே எகிர்ற”

“சொல்ல தான் போறேன், என்னால பண்ணிக்க முடியாதுன்னு சொல்ல தான் போறேன்” என்று உறுதியான குரலில் சொல்ல,

அதுவரை சண்டையிட்டு கொண்டிருந்தவள் “வேண்டாம் ப்ளீஸ் சொல்லிடாத, தாத்தாவும் பாட்டியும் உடைஞ்சு போயிடுவாங்க” என,

“இன்னும் பத்து இல்லை இருபது வருஷம் இருப்பாங்களா? அதுக்காக என் வாழ்க்கையை வீணாக்க முடியுமா? ஏன் என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கறாங்க! வேண்டாம்னு சொல்ற பொண்ணு பின்னாடி போய் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்களா?” என்று கத்தியவன் அலைபேசிவைத்தான்.

மனது சற்று ஆசுவாசமாக உணர்ந்தது!

கண்டிப்பாக காயத்திரி அம்மாவிடம் உடனே அடுத்த நொடி சொல்வாள் எனத் தெரியும்.

ஐந்து நிமிடம் கூட இருக்காது அம்மாவின் அழைப்பு, “என்ன பிரச்சனை?”

“காயத்திரி சொல்லலையா?”

“உனக்கு பொண்ணு பிடிக்கலையா இல்லை பொண்ணோட சம்மதம் இல்லைன்னு கல்யாணம் பண்ணப் பிடிக்கலையா?”

“என்ன பதில் சொன்னா கல்யாணம் வேண்டாம் சொல்வீங்க?”

“என்ன பதில் சொன்னாலும் நான் வேண்டாம் சொல்ல மாட்டேன், மேல உனக்கு என்ன இஷ்டமோ பண்ணிக்கோ?” என்று கணமான குரலில் சொல்ல,

அப்படியே சில நொடி அமைதியான மந்திரன்,

“சரி பண்ணிக்கறேன், ஆனா நீங்க அப்பாவோட சேர்ந்து வாழ்வீங்களா?” என்றான் அம்மாவையும் விட ஆழ்ந்த குரலில்.

“என்னோட வாழ்க்கைக்கும் உன்னோட வாழ்க்கைக்கும் என்னைக்கும் இணை சேர்க்காதே” என்று நீலாம்பிகை சொல்ல, எதுவும் பதில் சொல்லாமல் மந்திரன் வைத்தான்.

“போனவ சும்மா இருக்காம என்னடா என் வீட்டு வாரிசுக்கு பொண்ணு பார்க்கறா, இந்த கல்யாணம் நடக்காது” என திருமூர்த்தி தன் மகன் வீரராஜனிடம் சொல்லிக் கொண்டிருக்க,

கைபேசியை அணைத்த மந்திரன் வீட்டின் உள்நுழைய, இந்த வார்த்தைகள் ஸ்பஷ்டமாய் காதினில் விழுந்தது.

“என்ன தாத்தா?” என்றான்.

“என் பொண்ணை கொன்னவன் பொண்ணை நீ கல்யாணம் பண்ணுவியா?” என்ற கேள்வியுடன் தாத்தா நின்றார்.

மந்திரங்களும் மாயங்களும் உன்னுள்!

 

Advertisement