Advertisement

அத்தியாயம் – 9
“அபு… எவ்ளோ நேரம் தான் மொபைல் நோண்டிட்டே இருப்ப… டைம் ஆச்சு, தூங்கு மா… நைட்ல இப்படி ரொம்ப நேரம் நீ கண் விழிச்சா பாப்பாக்கு ஆகாது…” என்றான் கட்டிலில் படுத்திருந்த சக்தி.
“ம்ம்… உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு… நான் கொஞ்சம் கழிச்சு தூங்கறேன்…” என்றவள் யாருடனோ சாட் செய்து கொண்டிருப்பது புரிய, “அப்படி யார்கிட்ட இந்நேரத்துல சாட் பண்ணிட்டு இருக்க… படுத்து தூங்கு மா…” அவன் மீண்டும் சொல்லவும், “ம்ம்… சரி…” என்றவள் அவசரமாய் அங்கு பை சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்துவிட்டு தலையணை அடியில் வைத்து படுத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் காலையில் சக்தி அலுவலகத்திற்கு கிளம்ப, “என்னை கவிதா வீட்டில் டிராப் பண்ணிடு சக்தி… இன்னைக்கு அவளுக்கு பிறந்தநாள்… நேர்ல போயி சர்ப்ரைஸ் கொடுக்கப் போறேன்…” என்றாள் அபர்ணா.
தோழியின் பிறந்தநாள் என்றதால் அவள் சந்தோஷமாய் இருப்பாள் என நினைத்தவன் சரியென்று அவளை கவிதா வீட்டில் விட்டுவிட்டே அலுவலகம் சென்றான். வெற்றி யாரையோ பார்க்க வேண்டுமென்று நேரத்திலேயே கிளம்பி சென்றிருந்ததால் சக்தி அவன் காரில் சென்றான்.
கவிதா வீட்டில் அபர்ணாவை இறக்கிவிட்டு உள்ளே செல்லாமல் மாலை பிக்கப் செய்ய வரும்போது பேசிக் கொள்வதாய் சொல்லி சென்றான்.
காலை நேரமானாலும் மாலில் ஓரளவிற்கு கூட்டம் இருக்க அவர்களை விலக்கிக் கொண்டு நடந்தான் வெற்றிவேல். அலைபேசி சிணுங்க எடுத்து காதுக்குக் கொடுத்தவன், “வந்துட்டேன்டா… நீ எங்க இருக்கே…” என்றான் அழைத்த நண்பனிடம்.
“எதிர்ல இருக்கற கபேல பாரு மச்சான்…” என்றவன் கண்ணாடிக் கதவுக்குள் இருந்து கையை அசைக்க கண்டு கொண்ட வெற்றி அழைப்பைத் துண்டித்து அங்கு நடந்தான்.
கபேயில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில ஜோடிகள் அமர்ந்திருக்க அவர்களைக் கடந்து கார்னர் மேசையில் இருந்த நண்பனிடம் சென்றான். அவன் அருகில் அமர்ந்திருந்த புதியவன் புன்னகைத்து கை நீட்ட “ஹலோ சார்…” என்று கை பற்றி குலுக்கினான்.
புதிய பிசினஸ் நண்பர் ஒருவரை அறிமுகப் படுத்துவதற்காய் வெற்றியை அங்கே வரச் சொல்லி அழைத்திருந்தான் அவன்.
“வாடா வெற்றி… இவர் தான் நான் சொன்ன சம்பத்… பன்னாரி மில்ஸ்ல ஜிஎம் ஆ இருக்கார்…”
“ஓ… நைஸ் டு மீட் யு சர்…” கைகுலுக்கி அமர்ந்தான்.
“எங்ககிட்ட ரொம்ப நாளா ஜாப்வொர்க் பண்ணிட்டு இருக்காங்க… எனக்கு தூரத்து சொந்தம் கூட… நல்ல யார்ன் ஏஜன்ட் யாரையாச்சும் தெரியுமான்னு கேட்டார்… டக்குனு உன் நியாபகம் வந்துச்சு… அதான் வர சொன்னேன்…”
“தேங்க்ஸ்டா…” என்றவன் அவரிடம் திரும்பினான்.
தன்னைப் பற்றி பொதுவாய் அறிமுகம் செய்து கொண்டவன், தனது கஸ்டமர்களைப் பற்றியும் கமிஷன் பற்றியும் மேலோட்டமாய் கூறிவிட்டு அவர்கள் மில்லைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான்.
“எவ்ளோ ஸ்பின்டில், என்ன கவுன்ட்ஸ்ல நூல் ஓட்டிட்டு இருக்கீங்க… எங்கே காட்டன் வாங்கறீங்க…” என்றெல்லாம் பிசினஸ் சம்மந்தமாய் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க அவரும் புன்னகையுடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
“ரொம்ப சந்தோஷம் சார், நான் எல்லா மில்லையும் கிளையன்ட்க்கு அறிமுகம் செய்யறதில்லை… எனக்கு அவங்க சொல்லுற விஷயம் எல்லாம் திருப்தியா இருந்தா மட்டும் தான் பிராசஸ் பண்ணுவேன்…”
“நானும் உங்களைப் பத்தி கேள்விபட்டிருக்கேன் வெற்றி… அதான் உங்க பேரை இவர் சொன்னதும் பார்த்துப் பேசலாம்னு வர சொன்னேன்…”
“எனக்கும் உங்களோட பேசினதுல ரொம்ப சந்தோஷம் சார்…” என்றவன் காபியை அருந்திக் கொண்டே பார்வையை வெளியே பதிக்க திடுக்கிட்டான். அங்கே அபர்ணாவும், சதீஷும் சுவாரஸ்யமாய் ஏதோ பேசி சிரித்துக் கொண்டு கபே முன்னில் நின்றிருந்தனர்.
இவர்களிடம் எக்ஸ்கியூஸ் கேட்டு எழுந்து செல்லலாமா என யோசிக்கும்போதே அபர்ணா இவனைப் பார்த்து திகைத்து சட்டென்று அங்கிருந்து நகர, சதீஷும் வேகமாய் பின்னில் சென்று விட்டான்.
அபர்ணாவின் திடுக் பார்வை மனதுக்குள் உறுத்தலாய் இருக்க அதற்குப் பிறகு அதிக நேரம் அவர்களுடன் பேச முடியாமல் சுருக்கமாய் பேசி முடித்து அலுவலகத்தில் வந்து சந்திப்பதாகக் கூறி விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டு விடை பெற்றான் வெற்றிவேல்.
“அபர்ணா எதற்கு இந்நேரத்தில் இங்கே… அதுவும் அந்த சதீஷுடன் அவளுக்கு என்ன வேலை…” குழம்பினான்.
சதீஷை வெற்றியும் நண்பனின் பார்ட்டியில் அறிமுகமாகி இருந்தான். காரில் ஏறியவன் அதற்கு மேல் யோசிக்க முடியாமல் சக்தியின் அலைபேசிக்கு அழைத்து விட்டான்.
“சொல்லுடா…” அவனது குரல் அலைபேசியில் ஒலித்ததும்,
“சக்தி, எங்க இருக்கே… ஆபீஸ்லயா…” என்றான்.
“ஆமா, யாரையோ மீட் பண்ண போறேன்னு சொன்ன, பண்ணிட்டியா…”
“ம்ம்… அதெல்லாம் ஓகே ஆயிடுச்சு… அபர்ணா எங்காச்சும் வெளிய போயிருக்காளா…”
“ஆமா, அவ பிரண்டு பர்த்டேன்னு போயிருக்கா… என்ன விஷயம் டா…” என்றவன் குரலில் லேசாய் பதட்டம் தெரிந்தது.
“ஓ… அப்படியா, இங்க ஒரு மால்ல சதீஷோட அவளைப் பார்த்தேன்… அதான் கேட்டேன்…”
“அ…அது வந்து, கவிதாவோட அண்ணன் தானே சதீஷ்… ரெண்டு பேரும் ஏதாச்சும் வாங்கப் போயிருக்கலாம்…” என்றான் சக்தி சமாளிப்பாக.
“ம்ம்… சரிடா, உன்கிட்ட சொல்லிட்டு தானே போயிருக்கா… அப்புறம் எதுக்கு என்னைப் பார்த்ததும் ஷாக் ஆகிட்டு வேகமா கிளம்பிட்டாங்கன்னு புரியல… அதான் கேட்டேன்… சரிடா, நான் கொஞ்ச நேரத்துல ஆபீஸ் வந்திடுவேன்…” என்றவன் மனம் தெளிவாக போனை வைத்துவிட்டான்.
ஆனால் அவன் சொன்னதைக் கேட்ட சக்திக்கு தான் தலைக்குள் ஏதேதோ உருண்டு கொண்டிருந்தது. உடனே அபர்ணாவின் எண்ணிற்கு அழைத்தான். கட்டாகும் நேரத்தில் அழைப்பு எடுக்கப்பட அபர்ணாவின் கொஞ்சும் குரல் காதில் இனிமையாய் வழிந்தது.
“ஹலோ டார்லிங், என்ன அதுக்குள்ளே கால் பண்ணற… கொஞ்ச நேரம் பொண்டாட்டியைப் பார்க்காம, பேசாம இருக்க முடியாதா…” என்றாள் கொஞ்சலாக.
“அபு, நீ இப்ப எங்கிருக்க…” என்றான் சக்தி.
“இதென்ன கேள்வி, நீதான என்னை கவி வீட்ல இறக்கி விட்ட…” என்றவள், “அவளோட பர்த்டே செலபரேஷன்ல தான் இருக்கேன்… கவிக்கு ஆர்டர் பண்ணின கேக்கை வாங்கறதுக்கு நானும் சதீஷும் கேக் ஷாப் போயிட்டு இப்ப தான் வீட்டுக்குப் போயிட்டு இருக்கோம்…” என்றதும் சமாதானமானான்.
“ஓ… அதற்கு தான் சதீஷுடன் மாலுக்குப் போனாள் போலிருக்கிறது…” என நினைத்ததும் பதட்டம் குறைந்தது.
“ஓ… ஓகே அபு… நீ எதுக்கு அதுக்கெல்லாம் போற… வேற யாராச்சும் போகக் கூடாதா… வெற்றி உன்னை மால்ல பார்த்தேன்னு சொன்னதும் எனக்கு ஒண்ணுமே புரியல… அதான் கேட்டேன்… ஓகே டியர்… நீ என்ஜாய் பண்ணு… வெளில அதிகம் போக வேண்டாம்… டேக் கேர் செல்லம்…” என்றவன் அலைபேசியை வைத்துவிட அபர்ணாவிடம் ஒரு வெற்றிப் புன்னகை அலட்சியமாய் உதட்டில் நெளிந்தது.
அன்றைய தினம் கவியின் பிறந்தநாள் என்பதை விட சதீஷின் அருகாமையில் கழிந்ததையே கொண்டாட்டமாய் உணர்ந்தாள் அபர்ணா. அவனது பார்வைகளும் எதார்த்தமாய் தொடுவது போல அருகாமையில் வரும்போது நிகழ்ந்த சின்ன சின்ன ஸ்பரிசங்களும் மனதுக்குள் ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தன.
“ச்சே… கையில அழகா, ரிச்சா இவன் இருக்கும்போது அவசரப்பட்டு அந்த வெண்டக்கா சக்தியை செலக்ட் பண்ணிட்டியே அபு…” என்று மனது அடித்துக் கொண்டது. இன்னொருத்தனின் மனைவியை, வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஒரு தாய்மையை நாம் வழி தவறிப் பயணிக்க வைக்கிறோம் என்ற உறுத்தல் சதீஷுக்கும் இல்லை. அவனுக்கு வெகு காலமாய் மனதுக்குள் கிறங்க வைத்த அழகான அபர்ணா மட்டுமே போதுமாயிருக்க வேறு எதுவும் பொருட்டாய் தோன்றவில்லை.
சில பெண்களின் மனதும் அத்தனை சீக்கிரத்தில் எதிலும் திருப்தி அடைந்து விடுவதில்லை. ஒன்று கிடைத்தால் அதை விட பெட்டராய் மற்றொன்றைத் தேடும் பெண்களும் இந்த பூமியில் ஏதோ காலம் முதல் இருக்கத்தான் செய்கிறார்கள்… ஆனால் அவர்களின் நேரில்லா ஆசைகள் நேடியதெல்லாம் வெறும் அவப் பெயரைத்தான் என்பதை யோசிக்கத் தவறி விடுகிறார்கள்…
ஒரு ஆண் பிழைத்தால் பாதிக்கப்படுவது குடும்பம்… ஆனால் ஒரு பெண் பிழைத்தால் பரம்பரைக்கே அது அவப்பெயரை உருவாக்கும் என யோசிக்க  மறந்து விடுகிறார்கள். மோகமும், ஆசையும் தவறான வழியில் கை காட்ட அதன் பாதையில் அபர்ணாவும் பயணிக்கத் துவங்கியிருந்தாள்.
சதீஷ் வேண்டுமென்றே கேக் வாங்க செல்ல அவளை அழைக்க, அவளும் சந்தோஷத்துடன் அவனுடன் சென்றாள். அடுத்தநாள் அவன் வெளிநாடு கிளம்புவதால் மனதில் ஒரு ஏமாற்றம் சூழ்வதை உணர்ந்தவள் அவனுடன் இருக்கும்  அருகாமையை மிகவும் விரும்பினாள். கேக்கை வாங்கிக் கொண்டு காரில் திரும்ப வீட்டுக்கு சிறிது தூரம் முன்னே காரை நிறுத்தினான் சதீஷ்.
எதார்த்தமாய் அவள் கையைப் பற்றுவது போல் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டவன் உருக்கமாய் பேசினான்.
“ஹனி, நாளைக்கு நான் கிளம்பிடுவேன்… இந்த நாளை என் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன்… இனி அங்கே இருக்கப் போற நாளை உன்னை நினைச்சிட்டு தான் கழிக்கப் போறேன்… ஆறு மாசத்துல மறுபடி உன்னைப் பார்க்க நான் வர்ற வரைக்கும் மொபைல் மட்டும் தான் கதி… அதனால…” என்றவன் சட்டென்று அவள் புறங்கையில் இதழ் பதித்தான்.
திகைப்பில் கண்கள் விரிய பார்த்தாலும் மறுக்காமல் அவள் அமர்ந்திருக்க அவள் கையை இறுக்கமாய் பற்றிக் கொண்டு நெஞ்சில் வைத்தவன், “என்னை மறந்திட மாட்டியே…” எனக் கேட்க, அமைதியாய் அவன் தோளில் சாய்ந்திருந்தாள் அவள். அந்த மௌனம் அவளது மனநிலையை சொல்ல மனது குத்தாட்டம் போட்டது சதீஷுக்கு. அதையே சம்மதமாய் எடுத்துக் கொண்டவன் அவள் வீட்டிலிருந்து கிளம்பும் முன் இருவருக்குமாய் ஒரு தனிமையை உருவாக்கிக் கொண்டான்.
கவிதாவுக்கு பிறந்தநாள் பரிசைக் கொடுக்கும்போதே சதீஷ் அதைத் தேர்வு செய்தது அபர்ணா என்று சொல்லியிருக்க அவளுக்கு இவள் மேலுள்ள வருத்தம் எல்லாம் போயிருந்தது. இவளைக் கண்டதும் சந்தோஷமாய் கட்டிக் கொண்டவள் எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.
கேக் முறித்து எல்லாருக்கும் கொடுத்து நெருங்கியவர் தவிர மற்றவர்கள் சென்றுவிட தோழியை அழைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காண்பிக்க அழைத்து வந்தாள். சதீஷின் வெளிநாட்டுப் பணம் வீட்டில் நன்றாக விளையாடியிருக்க ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து வடிவமைத்திருந்தனர்.
மாடியில் ஒவ்வொரு அறையாய் காட்டிக் கொண்டிருந்தவள் கீழே யாரோ வந்திருப்பதாய் சதீஷ் சொல்லவும் சென்றாள்.
“வா ஹனி, என் ரூமைக் காட்டறேன்…” என்று தனது அறைக்கு அழைத்துச் சென்றான். அவனது விசாலமான அறையும் அதில் அங்கங்கே இருந்த ஆடம்பர பொருட்களும் அவள் விழியை வியப்பில் மலர்த்தின.
அவள் அருகில் பட்டும் படாமல் நின்று கொண்டிருந்தவன் சட்டென்று அவளைத் தன்னிடம் இழுத்து அணைத்துக் கொள்ள திமிராமல் அடங்கி நின்றவளின் இதழ் கள்ளைத் தேடி அவனது இதழ்கள் குனிந்து சுவைக்கத் தொடங்கின. கண் மூடி ரசித்து கிறங்கி நின்றவளின் முகம் சந்தோஷத்தைக் கொடுக்க மெல்ல அவளை விடுவித்தான்.
மாலையில் சக்தி அழைக்க வந்தபோது எந்த குற்றவுணர்வும் இல்லாமல் கிளம்பிச் சென்ற அபர்ணாவின் மனதில் சதீஷ் நிறைந்திருக்க, குழந்தை சுமையாய் தோன்றியது. சக்திக்கு தான் செய்வது துரோகம் என்ற எண்ணமே அவளுக்குத்  தோன்றவில்லை.
மனைவி மீது அதீதமாய் அன்பையும், நம்பிக்கையும் வைத்திருந்த சக்திக்கு அவள் சொன்ன வார்த்தைகளில் சந்தேகம் வரவே இல்லை. அடுத்தநாள் சதீஷ் வெளிநாடு கிளம்பிவிட இருவர் உறவும் உடல் அளவில் முன்னேறாவிட்டாலும் அலைபேசியில் நெருங்கிக் கொண்டு தான் இருந்தது.
அவனில்லாத ஆறு மாதத்தில் குழந்தையைப் பெற்று சுமையை இறக்கி வைத்துவிட்டு கண் நிறைந்த கணவன் அருகிலிருக்க, காமுகனின் வரவுக்காய் காத்திருந்தாள் அந்த குடும்பத்தைக் கலக்க வந்தவள்.
அன்னையில்லாமல் தந்தை, தம்பியுடன் வளர்ந்தவள் அவள். நற்பண்புகள் தெரியாமலே வளர்ந்து விட்டாளோ. அவள் வீட்டினரும் கல்யாணத்தோடு அவளோடுள்ள எல்லாத் தொடர்பையும் நிறுத்திக் கொண்டனர். தந்தை இங்குள்ள வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு மகனுடன் துபாய் சென்றுவிட்டார். அதனால் அவளது தலைப்பிரசவமும் புகுந்த வீட்டிலேயே வத்சலா பார்த்துக் கொண்டார்.
குழந்தை பவித்ராவுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்தவளை கை கால் பிடித்து கெஞ்சி தான் சக்திக்கு சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. சக்தியிடம் சிடுசிடுவென்று எரிந்து விழுந்து கொண்டே இருந்தவள் குழந்தையையும் ஒழுங்காய் கவனிக்காமல் விட்டாள். பசியாற்றுவதைத் தவிர அந்தக் குழந்தைக்கு ஒரு தாயாய் அவள் எதுவும் செய்யவே இல்லை. அவளது செயல்களும் பேச்சும் சக்திக்கு வருத்தத்தையும் சோர்வையும் தந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க மிகவும் முயற்சித்தான்.
அவளை எதிர்பார்க்காமல் வத்சலா குழந்தையைத் தன் பொறுப்பிலேயே பார்த்துக் கொண்டதால் அவனுக்கு சற்று நிம்மதியாய் இருந்தது. அவர்களுக்குள் உள்ள விலகலும் போராட்டமும் மேலோட்டமாய் வீட்டில் தெரியாமலில்லை. சக்தியிடம் மனதில் உள்ள சந்தேகத்தை வத்சலா கேட்க முயல்கையில் அவர் வருத்தப்பட வேண்டாமென்று எதுவும் சொல்லாமல் பூசி மெழுகி விடுவான் சக்தி. வெற்றியிடம் அதைப் பற்றி அவர் சொல்லி வருத்தப்பட அவனும் சக்தியிடம் விசாரித்துப் பார்த்தான்.
“என்னடா சக்தி, உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா… அவ என்னடான்னா எப்பவும் மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு இருக்கா… பழைய போல உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் ஒரு நெருக்கம் இல்லையே… ஏதாவது சண்டையா…”
“ச்ச்சே… அதெல்லாம் இல்லடா வெற்றி… அவ இப்ப குழந்தை வேண்டாம்னு சொல்லியும் நான் கேக்கல… இப்ப குழந்தை நைநைன்னு அழுகும்போது என் மேல கோபமா இருக்கா…”
“ஓ… ஏன் அவளுக்கு இப்ப குழந்தை வேண்டாமாம்… ரோஜாப்பூவ குழைச்சு செய்து வச்ச போல எவ்ளோ அழகா இருக்கா உன் குழந்தை… அதைப் பார்த்தும் அவளுக்கு எப்படி இப்படி சொல்லத் தோணுதோ…” என்றவனிடம் அதற்கு மேல் அபர்ணாவைப் பற்றி சொல்ல விரும்பவில்லை சக்தி.
ஒருநாள் குழந்தை அழுது கொண்டிருக்க அதைக் கண்டு கொள்ளாமல் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள் அபர்ணா. அழுகையைக் கேட்டு ஓடிவந்த வத்சலா, முதன்முறையாய் அவளை அதட்டினார்.
“ஏன் அபர்ணா, குழந்தை இப்படி அழுதுட்டு இருக்கா… எடுக்காம நீ மொபைலை நோண்டிட்டு இருக்க…” என்றதும் அவள் பார்த்த பார்வையைக் கண்டு சில்லிட்டுப் போனது அவருக்கு. குழந்தையை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டவர் சக்தியிடம் அதைப் பற்றி சொல்ல அவன் விசாரித்தான்.
“ஏன் அபு, இப்படிப் பண்ணற… இது நம்ம குழந்தை… நம்ம ரத்தம், அவளை அழ வைக்க உனக்கு எப்படி மனசு வருது… உனக்கு என்னதான் பிரச்சனை… என்னைப் பக்கத்துல கூட வர விட மாட்டேங்கற… எல்லாரும் உன்னை நேசிக்க தானே செய்யறோம்…” என்று உருக்கமாய் கேட்டும் பதில் இல்லை.
அதற்கும் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டவள் குழந்தைக்கு பால் கொடுக்காமல் வீம்பு பிடிக்க என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கியவன் கெஞ்சியே சம்மதிக்க வைத்தான். இப்படி நாளுக்கு நாள் அவளது அட்டகாசம் அதிகமாகி மற்றவர்களுக்கும் தெரியத் தொடங்க குழந்தைக்கு இரண்டு மாதமான போது குடும்பத்தின் நிம்மதியைப் போக்க சதீஷும் வந்து சேர்ந்தான்.
கவிதாவின் கல்யாணத்துக்கு வந்தவன் தனக்கென்று ஒரு  அபார்ட்மெண்டை விலைக்கு வாங்கினான். கவிதாவின் கல்யாணத்திற்கு சக்தியும் அபர்ணாவுடன் சென்றிருந்தான். அதற்குப் பிறகு அவர்களின் சந்திப்பு அபார்ட்மென்டில் தொடர வீட்டில் சொல்லாமலே கிளம்பிச் செல்லும் மருமகளைக் கண்டு பேசவும் அஞ்சினார் வத்சலா.
அடுத்து வந்த நாட்களில் அரசல் புரசலாய் விஷயம் வீட்டுக்குத் தெரிய வர சக்தி கேட்டபோது, “உன்னோடு வாழ எனக்குப் பிடிக்கவில்லை, நான் போகிறேன்…” என்று பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள். சக்தி எத்தனையோ தடுத்தும், வத்சலா குடும்ப மானமே போய்விடும் என்று கெஞ்சிக் கேட்டும் அவள் நிற்கவில்லை. வெற்றியின் அதட்டலுக்கும் பயப்படவில்லை.
பசிக்கு அழும் குழந்தைக்கு புட்டிப் பால் கொடுக்கும் வத்சலாவின் கண்கள் கண்ணீரைச் சுரந்தன. அதைக் காணும்போது சக்திக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. வெளியே சென்றால் விஷயமறிந்த நண்பர்களின் ஏளனப் பார்வைக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினான்.
மகனின் நிலை கண்டு அழுது கலங்கினார் வத்சலா. உறவுகளும், சுற்றத்தாரும், “மருமக, மகனை வேண்டாம்னு சொல்லிட்டு வேறொருத்தன் கூடப் போயிட்டாளாமே… சின்னக் குழந்தை இருக்கறதைக் கூட நினைச்சுப் பார்க்கலையே…” என்று அக்கறையாய் விசாரிப்பது போல் பரிதாபப்பட்டனர். தலை நிமிர்ந்து வாழ்ந்த அந்த குடும்பம் அவளது செயலால் தலை குனிந்து வீட்டுக்குள்ளேயே முடங்கியது.
ஒருநாள் குழந்தைக்கு புட்டிப்பால் சேராமல் டாக்டரிடம் அழைத்துச் செல்ல, “ஏன் தாய்ப்பால் கொடுக்கவில்லை… குழந்தைக்கு புட் பாய்சன் ஆகி இருக்கிறது…” என்று டாக்டர் சொல்லவும் பதில் சொல்லாமல் கதறி அழும் சக்தியைக் கண்டு அவர் புரியாமல் பார்க்க வெற்றியின் கண்களும் கலங்கியது. ஒரு தீர்மானத்திற்கு வந்தவன் அபர்ணாவைத் தேடி அந்த அபார்ட்மென்டுக்கு சென்றான்.
அடுத்தநாள் காலை செய்தித்தாளில் கொட்டை எழுத்தில் அந்த செய்தி வெளியாகியிருந்தது.
“கைக்குழந்தை, கணவனை விட்டு கள்ளக் காதலனுடன் சென்ற பெண்ணையும், அவள் காதலனையும் வெட்டிக் கொன்ற கணவன் ரத்தம் உறைந்த அறுவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்…”
தலைப்புச் செய்திக்கு கீழே அபர்ணாவும், சதீஷும் தலை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கும் செய்தியும், அடுத்த படத்தில் அறுவாளுடன் போலீஸ் ஸ்டேஷனில் நிற்கும் சக்தியின் படமும் வெளியாகியிருந்தன.
நேசிக்கும் இதயத்தின்
சுவாசம் புரியாமல்
செயற்கை சுவாசம் தேடி
ஓடும் பிணந்தின்னிகளாய்…
நேசித்த மனதைக் கொன்று
சுவாசிக்க இரைப்பையைத்
தேடும் அவலக் கூட்டங்கள்…
இதயமில்லா சுவருக்குள்
இருந்திடுமோ நேசமும்…

Advertisement