Advertisement

அத்தியாயம் – 8
காலண்டரில் மேலும் சில தேதிகள் கிழிபட்டிருந்தன.
“அம்மா, நான் ஆபீஸ் கிளம்பறேன்…” டிபன் சாப்பிட்டு முடித்து வெற்றி சொல்லவும் சக்தி ஓடி வந்தான். “வெற்றி, இரு… நானும் ஆபீஸ் வர்றேன்…”
“அம்மா, இன்னைக்கு மழை வரும்னு காலைல டீவில எதுவும் சொன்னாங்களா…” வெற்றி புன்னகையுடன் நக்கலாய் கேட்க சக்தி முறைத்தான்.
“ஹலோ பிரதர், நாங்களும் ஆபீஸ் எல்லாம் வருவோம்… ரொம்பதான் கலாய்க்க வேண்டாம்…” என்றான் ஷர்ட் கையை மடித்து விட்டுக் கொண்டே.
“வெற்றி, ஏண்டா… இருந்திருந்து இன்னைக்கு தான் அவனுக்கு ஞானோதயம் வந்திருக்கு… நீ வேற கிண்டல் பண்ணிட்டு வராம இருந்துடப் போறான்…”
அன்னையும் மூத்த மகனுடன் சேர்ந்து கொள்ள இருவரையும் முறைத்தான் சக்தி.
“ம்ம்… இதெல்லாம் சரியில்ல, சொல்லிட்டேன்… இருடா, அபு கிட்ட சொல்லிட்டு வந்திடறேன்…” என்றவன் அறைக்கு செல்ல, வெற்றியும், வத்சலாவும் புன்னகைத்துக் கொண்டே வாசலுக்கு சென்றனர்.
“அபு டியர், அத்தான் ரொம்ப நாள் கழிச்சு ஆபீஸ் போறேன்… என்னை வாழ்த்தி அனுப்பு பார்க்கலாம்…”
“ஹூக்கும், பேச்சைக் கேட்டா என்னவோ சைனா, பாகிஸ்தான் கூட யுத்தத்துக்கு கிளம்பற போல பில்டப்பு…” அவள் சிரித்துக் கொண்டே சொல்ல,
“சரி, சரி… யுத்தத்துக்கு போகலைனாலும் அத்தானுக்கு முத்தமாச்சும் கொடுத்து அனுப்பலாம்ல…” கேட்டுக் கொண்டே கன்னத்தை அவள் அருகில் கொண்டு சென்றான்.
“ம்ம்… சரி வச்சுக்க…” என்றவள் பிகு பண்ணாமல் அவன் கன்னத்தில் இதழ் ஒற்றி எடுக்க, “ம்ம்… ஓகே பை…” என்றவன் அவளது மேடிட்ட வயிற்றில் முத்தம் கொடுத்து நிமிர்ந்தான்.
“ஹூக்கும், நான் உனக்கு முத்தம் கொடுத்தா நீ உன் குழந்தைக்கு முத்தம் கொடுக்கற…”
“சரி கோச்சுக்காத அபு…” என்றவன் அவள் கன்னத்திலும் இதழ் பதிக்க செல்ல அதற்குள் கார் ஹாரனை அடித்து கத்தினான் வெற்றிவேல்.
“என்னடா வர்றியா, இல்ல நான் கிளம்பவா…” என்றதும், “சரி வந்து தர்றேன்… பை டியர்…” என்று வேகமாய் சென்றான்.
அலட்சியமாய் உதட்டை சுளித்தவளுக்கு சதீஷின் நினைவு வந்தது. “வத்தல் உடம்புல ஏனோ தானோன்னு ஒரு லூசு பான்ட், ஷர்ட் போட்டுட்டு தலை நிறைய முடி வச்சிட்டு பார்க்கவே கேனை மாதிரி இருந்தவன் இப்ப எப்படி இப்படி ஹாண்ட்சமா மாறிட்டான்… ஜிம்முக்கு போயி உடம்பை மெயின்டெயின் பண்ணாலும் அந்தக் கலரும், ஸ்டைலும், பளிச் சிரிப்பும்… ஹப்பா… என்ன ஒரு லுக்கு…” யோசித்தவள்,
“ம்ம்… அவ்ளோ திட்டினாலும் மறுபடியும் என் பின்னாடியே வந்திட்டு இருந்தவனை நாந்தான் ரொம்ப கேவலப் படுத்திட்டேன்… இப்ப இப்படி ஹீரோ கணக்கா வந்து நிக்கறான்… அதும் பாரின்ல வேலை, வீடு, கார்னு ரொம்ப வசதியா இருக்கான்… ஹூம், எனக்கு தான் கொடுத்து வைக்கல…” பெருமூச்சு விட்டவள் ஹாலுக்கு வந்தாள்.
மதிய சமையலுக்கு காய்களை அறிந்து கொண்டே டீவியில் பார்வையைப் பதித்திருந்த வத்சலா, “அபர்ணா, ஜூஸ் எதுவும் சாப்பிடறியா மா, தரட்டுமா…” என்றார்.
“ப்ச்… வேண்டாம் அத்தை…” என்றவள் ரிமோட்டை எடுத்து சானலை மாற்றினாள். ஒரு ஹிந்தி மியூசிக் சானலில் பாட்டு அதிர்ந்து கொண்டிருக்க அதை வைத்தாள்.
“இனி எப்பமா, செக் அப் வர சொல்லி இருக்காங்க…”
“நாலாவது மாசம் முடிஞ்சதும் போகணும் அத்தை…” என்றவள் பாடலின் தாளத்திற்கு ஏற்றவாறு உடலை அசைத்துக் கொண்டிருக்க அதை கவனித்தார் வத்சலா.
“அபர்ணா, வயித்துல குழந்தை இருக்கும்போது இந்த மாதிரிப் பாட்டெல்லாம் கேக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்கமா… மனசுக்கு இதமான பாடல்களைக் கேட்டாதான் குழந்தைக்கு நல்லது…”
அவர் சொன்னதும் சட்டென்று முகம் மாறியவள், “எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு…” என்றாள் வெடுக்கென்று.
சரி, சின்ன விஷயத்தில் எல்லாம் அவளை நிர்பந்திக்கக் கூடாதென்று யோசித்த வத்சலாவும் பேச்சை நிறுத்திவிட்டு அடுக்களைக்கு சென்றார். சிறிது நேரத்தில் அழைப்புமணி இதமாய் ஒலித்து யாரோ வந்ததை சொன்னது.
அபர்ணா அப்போதும் பாட்டிலேயே லயித்திருக்க, நனைந்த கையைத் துடைத்துக் கொண்டே வந்தார் வத்சலா.
“இந்த நேரத்துல யாராயிருக்கும்… ஒருவேளை சக்தி ஆபீஸ் போகாம பாதி வழியில திரும்பி வந்திட்டானோ…” யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தவர் வெளியே நின்ற புதியவனைக் கண்டதும் நெற்றியை சுருக்கினார்.
“வணக்கம் மா, இது சக்தி, அபர்ணா வீடு தானே…” மிகவும் பவ்யமாய் கேட்டவன் மகன், மருமகளுக்குத் தெரிந்தவன் என்பது புரிந்ததும் சினேகமாய் சிரித்தவர், “ஆமாம் தம்பி… நீங்க…” என்றார்.
“நான் சதீஷ்… உங்க மகன், மருமகளுக்கு பிரண்டு… அபர்ணா பிரண்டு கவிதாவோட அண்ணன்… இங்க ஒரு வேலையா வந்தேன்… சக்தி வீட்டுக்கு வர சொல்லிட்டே இருந்தான்… அதான், அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்… அவங்க வீட்ல இல்லையா…” என்றான் மரியாதையுடன்.
“ஓ… உள்ள வாங்க தம்பி… சக்தி ஆபீஸ் போயிட்டான்… அபர்ணா இருக்கா…” அவரது பேச்சு ஹாலில் இருந்தவளின் காதில் விழ எழுந்து வந்தவள் சதீஷைக் கண்டதும் முதலில் திகைத்து பின்பு இயல்பாய் வரவேற்றாள்.
“வா..வாங்க சதீஷ்… உக்காருங்க…” அவளைக் கண்டவன் ஒரு ஸ்பெஷல் சிரிப்பை உதிர்த்து சோபாவில் நிரம்பினான்.
“ஹாய் அபர்ணா, ஹவ் ஆர் யூ…” என்று நலம் விசாரிக்க, “நீங்க பேசிட்டு இருங்க தம்பி, நான் காபி எடுக்கறேன்…” என்ற வத்சலா அடுக்களைக்கு சென்றார்.
அவர் உள்ளே சென்றதும் அவன் பார்வை ஆவலுடன் அவள் மேல் படிய, “அன்னைக்கு உன்னைப் பார்ட்டில பார்த்ததுக்குப் பிறகு உன் நினைவாவே இருக்கு ஹனி… உன்னைப் பார்த்துப் பேசணும்னு மனசு துடிக்குது… வேண்டாம்னு மூளை சொன்னாலும் உன்னை மட்டுமே நினைச்ச மனசு அதைக் கேட்க மாட்டேங்குது…” என்றான் மெல்லிய குரலில்.
அதைக் கேட்டு அவள் விழிகள் ஆச்சர்யமாய் விரிய, “நிஜமா தான் சொல்லறேன் ஹனி, நீ என்னை எப்படி நினைச்சாலும் என் மனசுல இப்பவும் நீ தான் இருக்கே…” என்றான் காதல் சொட்டும் வார்த்தைகளைத் தேக்கி. தனது புகுந்த வீட்டில் கணவனின் அன்னை அருகில் இருக்கும்போதே காதலித்த பெண்ணிடம் பேச வந்த அவனது தைரியத்தை எண்ணி அவளுக்கு வியப்பாய் இருந்தது.
“நான் அடுத்த வாரம் லண்டன் கிளம்பிருவேன்… அதுக்குள்ள கொஞ்ச நேரம் உன் கூட இருக்கணும்னு மனசு ரொம்ப பிடிவாதம் பிடிக்குது… எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்க முடியுமா ஹனி…” என்றான் பாவமாக. அத்தனை அழகான ஒரு ஆண்மகன் தன்னை இப்போதும் இத்தனை நேசிக்கிறான் என்பதே அவளுக்கு மிகவும் பெருமையாக சந்தோஷமாக இருக்க பதில் சொல்லாமல் நின்றாள்.
“காபி எடுத்துக்கங்க தம்பி…” அதற்குள் வத்சலா காபி டிரேயுடன் அங்கு பிரசன்னமானார்.
“நன்றிமா…” சொல்லி எடுத்துக் கொண்டவன், “அம்மா, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்… அடுத்த வாரம் நான் வெளிநாடு கிளம்பிடுவேன்… என் தங்கைக்கு பிறந்தநாள் வருது… அவளுக்கு ஏதாவது ஸ்பெஷல் கிப்ட் கொடுக்கணும்னு நினைக்கிறேன்… ஆனா, எனக்கு என்ன வாங்கறதுன்னு தெரியல… அதான், நீங்க அனுமதி கொடுத்தா அபர்ணாவை அழைச்சிட்டுப் போயி வாங்கிட்டு வந்திடுவேன்…” மிகவும் தன்மையாய் கேட்டவனிடம் என்ன சொல்வதென்று புரியாமல் அவர் மருமகளைப் பார்த்தார்.
“அது வந்து தம்பி, அபர்ணாவை டாக்டர் அதிகம் வெளிய போக வேண்டாம்னு சொல்லி இருக்கார்… சக்தி வேற இப்ப வீட்ல இல்லை…” தயக்கமாய் சொல்ல சிரித்தான்.
“உங்க தயக்கம் புரியுது மா… கவலைப் படாதீங்க… உங்க மருமகளைப் பூ போல கார்ல கூட்டிட்டு போயிட்டு அப்படியே கொண்டு வந்து பத்திரமா விட்டுடறேன்…” என்றான் அவன்.
அவனது தைரியமான பேச்சு ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும் மறுக்கவும் தோன்றாமல் மௌனியாய் நின்றாள் அபர்ணா.
அவன் அவ்வளவு சொல்லவும் என்ன சொல்வதென்று யோசித்த வத்சலா, “சரி அபர்ணா, தம்பி இவ்ளோ சொல்லறார்… நீ சக்தி கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிட்டு வந்திடு…” என்றார். அதைக் கேட்டதும் அவளை அறியாமலே மனதுள் உற்சாகம் பீறிட தலையாட்டினாள்.
சக்தியின் அலைபேசிக்கு அழைத்து கவிதாவின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்குவதற்காய் தன்னை சதீஷ் உடன் அழைப்பதாய் சொல்ல பத்திரமாய் சென்று வருமாறு கூறியவன் சதீஷிடமும் அதையே சொன்னான்.
“அஞ்சு நிமிஷம், டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடறேன்…” என்றவள் அறைக்கு செல்ல வத்சலா சதீஷிடம் அவன் குடும்ப சம்மந்தமான பொதுவான விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அடர் பச்சை வண்ணத்தில் குட்டி மஞ்சள் பூக்கள் சிதறிய அழகான சல்வாரில் கண்ணை நிறைக்கும் விதத்தில் அழகாய் புறப்பட்டு வந்தாள் அபர்ணா.
இருவரும் காரில் கிளம்பி சென்ற பின்னும் ஏனோ மனதுக்கு ஒரு ஒவ்வாமை தோன்ற சிறிது நேரம் வாசலிலேயே நின்ற வத்சலாவுக்கு காரணம் புரியவில்லை.
அபர்ணாவுக்குப் பிடித்த கறுப்பு நிற ஆடி காரில் தான் சதீஷ் வந்திருந்தான். அவள் சக்தியிடம் இப்போது இருக்கும் ஸ்விஃப்டை கொடுத்துவிட்டு கறுப்பு ஆடி வாங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். அவனும் வாங்கலாம் என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.
அந்தக் காரிலிருந்தும், அவனிடமிருந்தும் பரவிய ஒருவித சுகந்தம் சுகமாய் நாசியை வருட, இதமான அந்த சூழலில் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தவளுக்கு நடப்பதெல்லாம் கனவோ என்று கூடத் தோன்றாமலில்லை.
அந்த அமைதியை கலைக்கும் விதமாய் சதீஷின் குரல் மென்மையாய் ஒலித்தது.
“ஹனி, என்னோட வர்றதுல உனக்கு வருத்தம் எதுவும் இல்லையே… உங்கிட்ட அனுமதி கேட்காம விட்டுட்டேன்…”
“ம்ம்… அப்படி ஒண்ணும் இல்லை… கவிக்கு கிஃப்ட் வாங்க தானே… கவி எப்படி இருக்கா… எங்களுக்குள்ள ஒரு சின்ன பிரச்சனை… அதனால ரெண்டு பேரும் பேசிக்கறதில்லை…”
“ம்ம்… நல்லாருக்கா… மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்காங்க… சரியா எதுவும் அமையலை…”
“ஓ… சக்தியோட அண்ணன் வெற்றிக்கு கூட கல்யாணத்துக்கு பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க… கேட்டுப் பாருங்க…”
“ஓ… அப்படி அமைஞ்சா நாம உறவுக்காரங்க ஆயிடலாம்… அடிக்கடி பார்த்துக்கலாம்…” என வியப்பாய் நோக்கினாள்.
“நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை சதீஷ்…”
“அன்னைக்கும், இன்னைக்கும் நான் நேசிச்சது உன்னை மட்டும்தான்… இனியும் நேசிக்கப் போறதும் உன்னை தான்…” என்றவனின் கண்கள் ஆவலாய் அவள் மீது படிய எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள் அபர்ணா.
கவிதாவுக்கு வாங்கிய பரிசுப் பொருட்களை விட அதிகமாய் அபர்ணாவுக்குப் பார்த்துப் பார்த்து வாங்கி பரிசளித்தான் சதீஷ். அவனோடு ஒன்றாய் இருந்த நிமிடங்களை மிகவும் ரசனையாய் உணர்ந்தாள் அபர்ணா.
பர்ச்சேஸ் முடிந்து ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்கு அவளை அழைத்துச் சென்றான் சதீஷ்.
அவளுக்குப் பிடித்த பிளாவரை அவளிடம் கேட்காமலே இருவருக்குமாய் ஆர்டர் செய்தவனை திகைப்புடன் நோக்கியவளைக் கண்டு புன்னகைத்தான்.
“என்ன ஹனி, ஆச்சர்யமாப் பார்க்கிற… உனக்குப் பிடிச்ச எல்லாமும் எனக்கும் பிடிக்கும்… உனக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு ஒரு லிஸ்டே தயார் பண்ணி வச்சிருப்பேன்…” சொல்லி சிரித்தவனின் கண்களும் சேர்ந்து சிரிக்க அழகாய் கன்னத்தில் விழுந்த குழியை பிரமிப்பாய் பார்த்தாள்.
“சாப்பிடு ஹனி… நீ பார்க்கற பார்வைல ஐஸ்கிரீமோட சேர்ந்து நானும் உருகிடப் போறேன்…” அவன் சொல்லவும் சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டாள்.
அழகான லயங்கள் ஸ்வரம் தப்பி அங்கே அபஸ்வரமாய் ஒலிக்கத் தொடங்கியதை அவள் உணர்ந்திருக்கவே இல்லை. தன் வாழ்க்கைத் தாளங்கள் மீளுமோ, இல்லை மாளுமோ என்பதை யோசிக்கவும் தோன்றாமல் பகட்டும் பணமும், கண்ணை மறைக்க ஐஸ்க்ரீமை விழுங்கத் தொடங்கினாள்.
ஒருத்தியை மட்டுமே மனதில் கொண்ட ராமனாய் கணவன் இருந்தாலும் அடுத்தவன் மனைவியை ஆட்டையைப் போடும் ராவணனாய் சதீஷை உணர்ந்தவளுக்கு தான் சீதை அல்ல என்பதும் புரியவில்லை. அங்கிருந்து வீட்டுக்கு திரும்பும்போது அவளது மனம் அவனிடம் சரியத் தொடங்கி இருந்தது.
“ஹனி, நான் இன்னும் நாலஞ்சு நாள் தான் இங்கே இருப்பேன்… மறுபடியும் ஆறு மாசம் கழிச்சோ இல்லேன்னா கவிதா கல்யாணத்துக்கோ தான் வருவேன்… உன்னை அதுக்குள்ள இன்னும் ஒரு தடவையாச்சும் மீட் பண்ண முடியுமா…” அவன் கேட்டபோது மறுக்காமல் அமர்ந்திருந்தவள் மௌனமாய் தலையாட்டினாள்.
அவர்களின் அலைபேசி எண்கள் பரிமாறப்பட்டது…
சொன்னது போல் பத்திரமாய் மருமகளை வீட்டில் கொண்டு வந்து விட்டவனை மதிய உணவு உண்ணுமாறு வத்சலா சொல்ல அழகாய் மறுத்துவிட்டு, “உங்களைப் பார்த்தப்ப எனக்கு இறந்து போன என் அம்மா நினைவு வந்துச்சு… இதை உங்களுக்காக வாங்கினேன்… மறுக்காம வாங்கிக்கங்கமா…” என்று ஒரு புடவையை அவருக்குப் பரிசளிக்கவும் செய்தான் சதீஷ்.
“எதுக்குப்பா இதெல்லாம்…” என்று கேட்டாலும் தன்னை அன்னையாய் நினைத்து வாங்கியதாய் சொன்னதால் மறுக்க மனம் வராமல் வாங்கிக் கொண்டார். சதீஷ் நன்றி சொல்லி விடை பெற, கையில் நிறைய கவர்களுடன் வந்த மருமகளைக் கண்டு “ஓ… நீயும் பர்ச்சேஸ் பண்ணியாமா…” என்றவரிடம், “டயர்டா இருக்கு… அப்புறம் சாப்பிட்டுக்கறேன்…” என்றுவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
வத்சலாவின் மனதுக்குள் காரணமில்லாமல் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்க, “ச்சே… எப்பவும் நல்லதே நினைக்கணும்னு சொல்லற நானே இப்படி இருந்தா எப்படி…” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டார். மதிய உணவுக்கு சக்தியும், வெற்றியும் வீட்டுக்கு வரமுடியாது என்று சொல்லி இருந்தனர்.
சதீஷ் வாங்கிக் கொடுத்த உடைகளை தன் மீது வைத்துப் பார்த்த அபர்ணா, “சதீஷ் எவ்ளோ அழகா டிரஸ் செலக்ட் பண்ணறான்…” என பாராட்டிக் கொண்டே கையிலிருந்த அவன் பரிசளித்த மோதிரத்தை வருடிக் கொடுத்தவள் அதை அவிழ்த்து அலமாரியில் வைத்தாள்.
இப்போது சதீஷ் செய்யும் எல்லா விஷயங்களும் ஹீரோத் தனமாய் இருக்க கணவன் செய்யும் விஷயங்கள் அரை வேக்காட்டுத் தனமாய் தோன்றத் தொடங்கியது.
சக்தி தொடர்ந்து அலுவலகத்திற்கு செல்லத் தொடங்க அபர்ணா, சதீஷ் நட்பு வளர்வதற்கு அலைபேசிப் பேச்சுக்கள் போதுமானதாய் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவனது பேச்சுக்கள் அவளை பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. சதீஷ் என்னும் மாய உலகம் அவளை விழுங்கிக் கொண்டிருப்பது புரியாமல் விரும்பியே அதில் தொலைந்து கொண்டிருந்தாள், அந்தக் குடும்பத்தை சிதைக்க வந்த அபர்ணா என்ற நச்சுப் பாம்பு.
ஒருவரை ஒருவர் காண வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் அவன் வெளிநாடு கிளம்புவதற்கு முன் தினம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொண்டனர். ஆனால் அந்த சந்திப்பு வெற்றியின் கண்ணில் விழுந்தது தான் அந்தக் குடும்பத்தில் முதல் கரடாய் நெருடச் செய்தது.
பறவைகள் கூடத்
துணிவதில்லை…
பழகிய இடம் விட்டு
பறந்து செல்ல…
ஆனால் தேடல்
வேறாகும்போது
அன்பும் தேவையில்லை…
மரம் விட்டு மரம்
தாவும் குரங்காய்
சில அழுகிய மனங்கள்…
சாக்கடைப் புழுவாய்
சகதியில் புரளும் புழுக்கள்…

Advertisement