Advertisement

அத்தியாயம் – 7
மருமகள் உண்டான விஷயத்தைக் கேட்டு சந்தோஷத்தில் மனம் நிறைந்தார் வத்சலா.
கணவன் சக்தியுடன் காலை உணவை உண்டுவிட்டு அறைக்கு சென்றவள் தலை சுற்றி மயங்கி விழ பதறிப் போனவன் அருகில் இருந்த கிளினிக்கிற்கு சென்று டாக்டரை அழைத்து வந்திருந்தான்.
“இந்த மயக்கம் நல்ல செய்திக்காய் இருக்க வேண்டுமே கடவுளே…” மனதுக்குள் வத்சலா பிரார்த்தித்துக் கொண்டிருக்க கடவுள் கேட்டிருக்க வேண்டும். மயக்கமாய் கட்டிலில் கிடந்த அபர்ணாவை பரிசோதித்துவிட்டு புன்னகையுடன் அவரிடம் வந்தார் அந்த லேடி டாக்டர்.
“பயப்படாதீங்க, நல்ல விஷயம்தான்… உங்க வீட்டுக்கு வாரிசு வரப் போகுது… கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சு எழுந்திடுவாங்க…” டாக்டர் சொல்ல நன்றி சொன்னார்.
சக்திவேலுக்கோ ஆனந்தத்தில் தலை கால் புரியவில்லை.
“ஹே…” என்று கத்தியவன் அன்னையைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான்.
“அம்மா, வெற்றிக்கு போன் பண்ணி சொல்லணும்… ஏதாச்சும் ஸ்வீட் பண்ணறியா…” என்று துடித்தான். மகனின் மகிழ்ச்சி கண்டு அன்னையின் மனம் நிறைந்தது. வெகு காலத்திற்குப் பிறகு வீட்டில் கேட்கப் போகும் குழந்தையின் சத்தத்திற்காய் அவரது கண்களும் காதுகளும் காத்திருந்தன.
“சீக்கிரம் வெற்றிக்கும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடணும்… வீடெல்லாம் பேரப் புள்ளைங்க நிறைஞ்சிருக்கணும்… பாட்டி, பாட்டின்னு என்னை சந்தோஷத் தொல்லை பண்ணனும்…” யோசிக்கும்போதே அவருக்கு குதூகலமாய் இருக்க பாயாசம் வைப்பதற்காய் அடுக்களைக்கு விரைந்தார்.
விஷயம் தெரிந்த வெற்றிக்கும் சந்தோஷமாய் இருந்தது.
அப்போதுதான் யார்ன் ஏஜன்சி பிசினஸை இருவருமாய் தொடங்கி இருந்தனர். சக்தி தொழிலில் சிறிது கவனமும் மனைவி மீது முழு கவனமுமாய் இருக்க வெற்றி ஆபீசே கதியென்று கிடந்தான். நிறைய மில்லுக்கு நேரடியாய் சென்று நூலைப் பார்வையிட்டு தனக்கு திருப்தியான மில்லில் இருந்து மட்டும் வாடிக்கையாளர்களுக்கு நூல் வாங்கிக் கொடுத்தான்.
கமிஷனில் கறாராய் இருந்தாலும் தொழிலில் இருந்த நேர்மை சீக்கிரமே அவனுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கத் தொடங்கியது. சக்தியின் கல்யாணம் முடிந்து சிறிது நாளே ஆகியிருந்ததால் அவனைப் பெரிதாய் எதிர்பார்க்காமல் தானே முன்னின்று தொழிலை கவனித்தான்.
சக்தியையே குழந்தையாய் இப்போதும் எண்ணியிருந்தவன் அவனுக்கே ஒரு குழந்தை வரப் போகிறது என்றதும் மிகவும் மகிழ்ந்தான். அபர்ணாவின் மீது இருந்த விருப்பமின்மை விலகி ஸ்வீட், பழம் வாங்கிக் கொண்டு சீக்கிரமே வீட்டுக்குப் புறப்பட்டான் வெற்றிவேல்.
“அபூ… நீ என்ன சொல்லற… நமக்கு குழந்தை வரப்போறது தெரிஞ்சு அம்மாவும், வெற்றியும் எவ்ளோ சந்தோஷத்துல இருக்காங்க தெரியுமா… அவங்களை விடு… நான்… இந்த உலகமே என் காலடில வந்த போல அவ்ளோ சந்தோஷமாருக்கேன்… என் ரத்தம், கை கால் முளைச்ச பூச்செண்டா என் கைல எப்ப வருமோன்னு காத்துட்டு இருக்கேன்… நீ என்னடான்னா, நமக்கு இப்ப குழந்தைக்கு என்ன அவசரம்னு அசால்ட்டா கேக்கற…” 
“ப்ச்… அதில்லை சக்தி, நமக்கு கல்யாணமாகி மூணு மாசம் தானே ஆச்சு… அதுக்குள்ள குழந்தைன்னா எனக்கு சுத்தமாப் பிடிக்கவே இல்லை… லைப் நல்லா என்ஜாய் பண்ணிட்டு ரெண்டு வருஷம் கழிச்சு பெத்துகிட்டாப் போதாதா…”
“அபூ… குழந்தைங்கறது கடவுளா கொடுக்கிற வரம்… அது நாம கேட்டதும் கிடைச்சிடாது… ஒவ்வொருந்தங்க எத்தனை வருஷமாகியும் குழந்தை உண்டாகலைன்னு எவ்ளோ வேதனைப்படறாங்க… அதனால நீ வேற ஏதும் யோசிக்கவே செய்யாதே… நம்ம குழந்தையை எப்படி நல்லபடியா பெத்து என் கைல கொடுக்கறதுன்னு மட்டும் யோசி… அதை வளர்க்கறது எல்லாம் அம்மா பார்த்துக்குவாங்க… தனது விருப்பமின்மை அவன் மனதை மாற்றவில்லை என்பதை உணர்ந்தவள் அதற்கு மேல் அவனிடம் பேசிப் பயனில்லை என்று விட்டுவிட்டாள். ஆனாலும் இப்போது இந்தக் குழந்தை அவசியமா என்ற நெருடல் மட்டும் மாறவே இல்லை.
ஒவ்வொரு நாள் கூடும்போதும் வத்சலாவும், சக்தியும் அவளை ராஜகுமாரி போல கவனிக்க முன்பு தன்னைக் கண்டு கொள்ளாத வெற்றிவேல் கூட இப்போதெல்லாம் சிரிப்பதும், பழங்களை வாங்கி வந்து கவனிப்பதுமாய் வந்த புதிய மாற்றம் அவளுக்குப் பிடித்திருக்க குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்திருந்தாள். அதற்கு தகுந்தது போல் சக்தியும், “குழந்தையைப் பெத்து நல்லபடியா என் அம்மா கைல கொடுத்திரு… அப்புறம் நாம எப்பவும் போல வாழ்க்கைய என்ஜாய் பண்ணிட்டு ஜாலியா இருக்கலாம்…” என்று சொன்னதும் மந்திரம் போல் மனதைக் கட்டுப்படுத்த அமைதியானாள்.
கல்லூரித் தோழன் ஒருவனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு நட்புகளை குடும்பத்தோடு அழைத்திருந்தான்.
“அபூ செல்லம், நாம நிச்சயம் அந்த பார்ட்டிக்கு போகணுமா… எல்லாரும் கிளம்ப எப்படியும் நைட் ஆகிரும்… மாசமா இருக்கும்போது எதுக்கு உனக்கு அலைச்சல்…”
“சக்தி, பார்த்தியா… இதுக்குதான் நான் அன்னைக்கே இப்ப குழந்தை வேண்டாம்னு சொன்னேன்… என்னோட சந்தோஷத்தை இழந்திட்டு தான் இந்தக் குழந்தையை பெத்துக்கணும்னா எனக்கு குழந்தையே தேவை இல்லை…” கணவனிடம் சீறினாள் அபர்ணா.
“அச்சோ அபு, மெதுவாப் பேசு… அம்மா ஹால்ல இருக்காங்க…”
“அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை… நான் இப்படிதான் இருப்பேன்… உனக்கு வேணும்னா உன் குழந்தை முக்கியமா இருக்கலாம்… ஆனா எனக்கு என் சந்தோஷமும், சுதந்திரமும் தான் முக்கியம்… அதுக்குத் தடை சொன்னா அப்புறம் நான் பொல்லாதவ ஆயிடுவேன்…” அறைக்குள் அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் ஏதோ வாக்குவாதம் என்பது புரிய வத்சலா குரல் கொடுத்தார்.
“சக்தி, என்னடா அங்க சத்தம்…”
“அது ஒண்ணும் இல்லம்மா, சும்மா பேசிட்டு இருந்தோம்…” என்றவன் அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல் பார்ட்டிக்கு ரெடியாகத் தொடங்கினான்.
கழுத்திலும் முதுகிலும் ஆழமாய் இறங்கி உடல் வளைவுகளை அப்பட்டமாய் எடுத்துக் காட்டி, உடலோடு ஒட்டியது போலிருந்த நேவி ப்ளூ நிற முழு கவுனை அவள் அணிந்து வந்தாள். “இந்த டிரஸ்ஸா…” முகத்தை சுளித்தான் சக்தி. அவளது பளிச்சென்ற மேனியின் நிறத்தை கவுனின் நெட் டைப் முழுக் கைகள் எடுப்பாய் காட்டிக் கொண்டிருக்க தாய்மையின் பூரிப்பில் தளதளத்த உடலை மேலும் கவர்ச்சியாய் காட்டிக் கொண்டிருந்தது.
“ஏன் இதுக்கென்ன…” கேட்டுக் கொண்டே தலைமுடியை சீவி லூசாய் கட்டாமல் விட்டாள். தான் சொன்னால் அவள் கேட்கப் போவதில்லை என்று உணர்ந்தவன் அதற்கு மேல் கேள்வி கேட்காமல் கிளம்பினான்.
“அம்மா, நாங்க பிரண்டு பர்த்டே பார்ட்டிக்கு கிளம்பறோம்… நைட் டின்னர் வேண்டாம்…” என்றான்.
“ம்ம்… சரிப்பா, வெற்றி சொன்னான்… அபர்ணா, உனக்கு தான் பூ கட்டிட்டு இருக்கேன்… வாம்மா, வச்சு விடறேன்…” மல்லிச்சரத்துடன் வத்சலா எழுந்து வந்தார்.
“குடுங்க அத்தை… நான் கார்ல உக்கார்ந்துட்டு வச்சுக்கறேன்…” என்று வாங்கிக் கொண்டாள்.
“ம்ம்… பத்திரமா கூட்டிட்டுப் போடா…” வத்சலா சொல்ல சக்தி முன்னில் சென்று காரை எடுத்தான். அபர்ணா செல்கையில் லாங் கவுனில் கால் இடறி தடுமாற, பார்த்துக் கொண்டிருந்த வத்சலா, “ஐயோ… பார்த்து மா…” என்று ஓடி வந்தார்.
“ம்ம்… தடுக்கிடுச்சு… பார்த்துக்கறேன்…” என்றவள் கவுனை சற்று தூக்கிப் பிடித்தபடி காருக்குள் அமர்ந்தாள். சக்திக்கு முதன்முறையாய் மனதில் ஒரு கலக்கம் வந்தது.
“இவள் ஏன் இப்படி கவனமில்லாமல் குழந்தை மீது விருப்பமில்லாமல் இருக்கிறாள்…” என வருந்தினாலும், “பாவம், அவளுக்கு இருவரும் கொஞ்ச நாள் சுதந்திரமாய் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை… அதனால் தான்…” என தன்னையே தேற்றிக் கொண்டான். ஆனால் அதற்குப் பிறகு நிறைய விஷயங்களில் அவன் தன்னை சமாதானப்படுத்த வேண்டிவந்தது.
காரில் ஒலித்த தமிழ் பாடலை மாற்றி ஆங்கிலப் பாடலை ஒலிக்க விட்ட அபர்ணா தானும் சேர்ந்து பாடிக் கொண்டிருக்க சக்தி சாலையில் கவனமாயிருந்தான்.
அவள் கையிலிருந்த பூவை தலையில் வைக்காமல் வண்டியின் டாஷ்போர்டில் வைக்கவும் யோசனையாய் மனைவியை ஏறிட்டான்.
“ஏன்… அபூ, பூவைத் தலைல வைக்கலையா…”
“ப்ச்… இவ்ளோ மாடர்னா டிரஸ் பண்ணிட்டு, லூஸ் ஹேர் விட்டுட்டு பூவை வைப்பாங்களா…” என்றாள் நக்கலுடன்.
“என்ன அபூ, அம்மா உனக்காக எவ்ளோ ஆசையா கட்டிக் கொடுத்தாங்க… அப்ப மறுக்காம வாங்கியும் வச்சிட்டு இப்ப இப்படி சொல்லற…”
“உன் அம்மா தான் ஓல்டுலேடி… அவங்களுக்கு இப்போதைய நாகரிகம் எல்லாம் தெரியாது… உனக்குமா தெரியாது… சரி, கிளம்பற நேரத்துல அவங்ககிட்ட வேண்டாம்னு சொன்னா நீ மூஞ்சியத் தூக்கி வச்சுக்குவேன்னு தான் வாங்கினேன்…” அவள் கூலாக சொல்லவும் அவன் திகைத்துப் போனான்.
அதற்குள் அவள் தோழி ஒருத்தி அலைபேசியில் அழைத்து, “நான் வந்து எவ்ளோ நேரமாச்சு… உன்னைக் காணவே இல்லை… வருகிறாயா, இல்லையா…” என்று கேட்டுவிட்டு வைக்க அபர்ணாவிற்கு கடுப்பானது.  
“சக்தி, ஏன் வண்டியை இவ்ளோ ஸ்லோவா விடற… இன்னும் கொஞ்சம் பாஸ்டா போ… நீ உருட்டற உருட்டுல பார்ட்டியே முடிஞ்சுடப் போகுது…” என்றாள் சிடுசிடுப்புடன்.
“என்ன அபு, டாக்டர் சொன்னதை மறந்துட்டியா… வண்டில இந்த சமயத்துல அதிகமா போகக் கூடாது, அதும் ஸ்பீடா போனா வயித்துல இருக்கற கருவுக்கு ஆபத்துன்னு  சொல்லி இருக்காங்கல்ல… மறந்துட்டியா…”
“அய்யய்ய… எப்பப் பார்த்தாலும் குழந்தை குழந்தைன்னுட்டு… கேக்கவே கடுப்பாகுது… நீ இப்ப ஸ்பீடாப் போகப் போறியா இல்லியா… ச்ச்சே… சரியான நச்சு…” என்றாள் எரிச்சலுடன்.
அவளது பிடிவாதங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அதிகரித்துக் கொண்டே இருக்க அவள் மீதுள்ள காதலும் குழந்தையை சுமக்கிறாள் என்பதில் வந்த கரிசனமும் அவனைக் கோபப்படுத்தாமல் அமைதி காக்கச் செய்தது. ஆனால் அந்தப் பிடிவாதங்கள் வாழ்க்கையையே பறித்துக் கொள்ளப் போவதை அப்போது அவன் உணரவில்லை.
விட்டுக் கொடுத்துப் போகும்
விலகிப் போக விரும்பா
பிரியங்களே இங்கு
பெரிதும் அடிபடுகிறது…
பார்ட்டி ஹாலில் நட்புக்களைக் கண்டு, “ஹாய்… ஹலோ…” சொல்லிக் கொண்டே பிறந்தநாள் நாயகனிடம் சென்றனர். அபர்ணா உண்டாயிருப்பது அறிந்து நண்பர்கள் சக்திக்கு வாழ்த்து சொல்ல சந்தோஷமாய் உணர்ந்தான்.
“ஹாய்… வாடா சக்தி, கல்யாணமான உடனே செஞ்சுரி அடிச்சுட்ட போலருக்கு… கங்கிராட்ஸ் மச்சி…” இவன் சொல்லும் முன் நண்பன் இவர்களை வாழ்த்த நன்றி சொல்லி இருவரும் அவனை வாழ்த்தினர்.
“எங்கடா, வெற்றி வரலையா…” அவன் கேட்க, “நாங்க வீட்ல இருந்து அப்படியே வந்துட்டோம்… அவன் ஆபீஸ் போயிருக்கான்… வந்திருவான்…” என்றான் சக்தி.
அதற்குள் நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டு ஒவ்வொன்றும் விசாரிக்க அபர்ணாவும் அவள் தோழியருடன் செட்டிலானாள். சிறிது நேரத்தில் வெற்றியும் அங்கே வந்துவிட பழைய நண்பர்களின் சந்திப்பில் ஹாலே கலகலத்தது.
“என்னடா வெற்றி, உன் தம்பி சீமந்த சாப்பாடே போடப் போறான்… நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப் போற…”
“எல்லாத்தையும் ஒண்ணா சாப்பிட்டா வயிறு தாங்காது பாரு… மெதுவா போட்டுக்கலாம் டா…” என்றான் சிரிப்புடன்.
“விடுடா மச்சான்… அவனாச்சும் பாச்சிலர் லைப் என்ஜாய் பண்ணட்டும்…” என்றான் ஒரு குடும்பத் தலைவன்.
“ம்ம்… அதச்சொல்லு… நீ என்ஜாய் டா மச்சான்…” என்றவன், பிசினஸ் விஷயமாய் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அபர்ணாவோ தோழியருடன் ஐக்கியமாகி இருந்தாள்.
நல்ல உயரத்துடன் நெடியவன் ஒருவன் அவர்களிடம் வர, “அபு… இங்க வர்றான் பாரு, அவனை நியாபகம் இருக்கா… உன் பின்னாடியே சுத்துவானே கவி அண்ணன் சதீஷ்… லவ் லெட்டர் கொடுத்து கூட மாட்டினானே…” தோழி அவள் காதில் கிசுகிசுத்து மற்ற ஒருத்தியுடன் நகர திரும்பிப் பார்த்தவள் திகைத்தாள். அவளது விழிகள் வியப்பில் விரிய அவள் அறிந்த நோஞ்சான் சதீஷ் கட்டுமஸ்தான உடலுடன் கண்களில் சிரிப்பு மின்ன அழகான தோற்றத்தில் நின்றான்.
“ஹாய் ஹனி… ஹவ் ஆர் யூ, என்னை நினைவிருக்கா…”
அப்போதும் நம்ப முடியாமல் அவள் விழிகள் அவன் மீதே நிலைத்திருக்க, “வாவ்… யூ ஆர் லுக்கிங் சோ பியூட்டிபுல்… சக்தி உன்னை நல்லா கவனிச்சுக்கறான் போலருக்கு…” என்றவனின் பார்வை தப்புத் தப்பாய் தன் மேனியில் அலைவதை உணர்ந்தாலும் தடுக்கத் தோணாமல் அதைத் தன் அழகிற்கு கிடைத்த அங்கீகாரமாய் உணர்ந்தாள். அவன் அருகாமையில் வீசிய சுகந்தமான நறுமணம் ஒரு புதிய வாசனையைக் கொடுக்க சுகமாய் உணர்ந்தாள்.
காதலிக்கும் போது அவள் அழகைப் பாராட்டி கண்ணே, மணியே, செல்லமே, வெல்லமே என்று தன் பின்னால் சுற்றிய சக்திவேல் இப்போதெல்லாம் அப்படிக் கொஞ்சாத ஏக்கம் அவளுக்கு மிக அதிகமாகவே இருந்தது.
“சதீஷா நீங்க… ஆளே ரொம்ப மாறிப் போயிட்டீங்க…”
“ம்ம்… என்னோட இந்த தோற்றத்துக்கு ஒரு அழகான பொண்ணுதான் காரணம்…”
“ஓ… யாரு உங்க ஒயிபா…”
“இல்ல… என் தேவதை…” என்றவன் அவள் கண்களை காதலுடன் நோக்க அந்த விழிகளை சந்திக்க முடியாமல் அவள் பார்வையை மாற்றிக் கொண்டாள்.
“உன்னை மாதிரி ஒரு நோஞ்சான் பயலுக்கு என்னைப் போல அழகான பொண்ணு கேக்குதான்னு அவ என்னைப் பார்த்து கேட்டப்ப தான் என் தோற்றத்தைப் பார்த்து எனக்கே அசிங்கமா தோணுச்சு… அதுக்கப்புறம் கொஞ்ச நாள் பாரின் போயிட்டேன்… அங்கே இருக்கும்போது தான் இந்த மாற்றம் எல்லாம் வந்துச்சு… மறுபடியும் அந்த தேவதையைத் தேடி வந்தப்ப அவளுக்கு கல்யாணமாகி ஒரு குட்டி தேவதையை சுமந்திட்டு இருக்கான்னு சொல்லி என் சின்ன இதயத்தை சிதற வச்சுட்டாங்க… எனிவே கங்கிராட்ஸ் ஹனி…” சொன்னவன் கண்ணை சிமிட்டி கையை நீட்ட, முதலில் தயங்கினாலும் அவன் கையைப் பற்றிக் குலுக்கினாள்.
அதற்குள் அவளைத் தேடிக் கொண்டு சக்திவேல் அங்கு வந்துவிட சட்டென்று தடுமாறியவள், “ச..சக்தி, இது சதீஷ்… என் பிரண்டோட அண்ணன்…” என்று அறிமுகப்படுத்த, “ஹாய்…” என்று அவனும் கை குலுக்கிவிட்டு சதீஷைப் பற்றி விசாரித்தான்.
சதீஷ் சக்தியுடன் பேசிக் கொண்டே இவளிடம் சின்ன கண் சிமிட்டலுடன் அடிக்கடி சிரித்தான். அந்தக் கண்ணில் இருந்த ஏதோ ஒன்று அவளைக் கவர அவளாலும் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
“ஓகே சதீஷ், டைம் கிடைக்கும்போது ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க…” என்றவன், “அபு… சாப்பிட்டு கிளம்பலாமா… டைம் ஆச்சு…” என்றான்.  “நீ போ சக்தி, நான் என் பிரண்ட்ஸ் கூட சாப்பிட்டுக்கறேன்…”
“சரி, நானும் பிரண்ட்சோட சாப்பிட்டு வந்திடறேன்… கிளம்பலாம்…” என்றவன் அங்கிருந்து நகர, அதற்குள் அவளது தோழி வந்துவிட்டாள்.
“என்ன அபு, சாப்பிடப் போகலாமா…”
“ம்ம்…” என்றவளை சற்றுத் தள்ளி நின்று கண்களாலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சதீஷ்.
எழுதி முடித்த பிறகு
எத்தனை முறை அழித்தாலும்
பழைய நிலைக்குத் திரும்பாத
ஏடு போல தான் வாழ்க்கையும்…
எழுதும் முன்னே சிந்தியுங்கள்…

Advertisement