Advertisement

அத்தியாயம் – 6
பவி இந்துவை அம்மா என்றதும் வெற்றிக்கு சுர்ரென்று கோபம் ஏற அவளை அதட்டினான். அகிலாவும், சிந்துவும் திகைப்புடன் அமைதியாய் நோக்கிக் கொண்டிருந்தனர்.
“பவி… அப்படி எல்லாம் இவங்களை சொல்லக் கூடாது… அக்கான்னு சொல்லு…” அவனது கோபமான குரலைக் கேட்டதும் பவியின் முகம் சுருங்க, குட்டிக் கண்ணில் முணுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“அச்சோ… எதுக்கு சார், குழந்தையைத் திட்டறீங்க… அவளுக்குப் பிடிச்ச போல கூப்பிடட்டும்… ஒருவேளை அவங்க அம்மா ஜாடைல நான் இருக்கேனோ என்னவோ…” இந்துஜா சொல்ல அவன் முகம் இறுகியது.
“வேண்டாம், அவ அம்மா போல யாரும் இருக்கவே வேண்டாம்…” உரத்த குரலில் சொன்னவனின் கோப முகத்தைக் கண்டு அனைவரும் அதிர்ந்து நோக்கினர்.
அதைக் கண்டு இயல்புக்கு வந்தவன், “சாரி…” என்றுவிட்டு “வா…” என்று பவியை எடுத்துச் சென்றான்.
“ச்ச்சே… சரியான முசுடன்… இப்பவும் எந்த மாற்றமும் இல்லை… குழந்தை கிட்ட இப்படியா பேசறது…” சிந்து சொல்ல யோசனையுடன் இருந்த அகிலா, “அது ஏன் அந்தக் குழந்தை இந்துவை அம்மான்னு சொல்லுது… அதோட அம்மா எங்கே… அவ அம்மா போல யாரும் இருக்க வேண்டாம்னு இந்தத் தம்பி எதுக்கு கோபப்படுறார்…” என்றார்.
“அது என்னவோ இருக்கட்டும் மா… அந்தக் குழந்தையை மட்டும் தான் நான் அப்பப்போ மாடிலயும், ஜன்னல் கிட்டயும் பார்த்திருக்கேன்… பாவம், குழந்தை… அம்மா ஏக்கத்துல தான் என்னை அப்படி அழைச்சதோ என்னவோ…” என்றாள் இந்து வருத்தத்துடன்.
“ஆமாம் மா, அந்த வீட்டுல வேலைக்கு வர்றவங்களைத் தவிர வேற யாரும் லேடீஸ் இருக்க போல தெரியல… ஒருவேளை அந்தக் குழந்தையோட அம்மாக்கும், இவருக்கும் டைவர்ஸ் ஆகியிருக்குமோ… ரெண்டு பேரும் பிரிஞ்சிருக்காங்களோ…” சிந்து சொல்ல, “அதெல்லாம் நமக்கெதுக்கு… பாவம் சின்னக்குழந்தை… அவர் மிரட்டினதும் முகமே மாறிடுச்சு…” இந்து பவிக்காகவே வருத்தப்பட்டாள்.
“அதுக்காக முன்னப் பின்னத் தெரியாத ஒரு குழந்தை உன்னை அம்மான்னு கூப்பிட்டா நல்லாவா இருக்கும்… பாக்குறவங்க என்ன நினைப்பாங்க…”
“யாரோ எதுவோ நினைக்கறதைப் பத்தி எனக்கு கவலை இல்லைம்மா… அந்தப் பிஞ்சு மனசு வேதனைப்படக் கூடாது…” என்றாள் இந்து.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வருண், “அக்கா, எதுக்கு அங்கிள் பவியத் தித்தினாங்க, பாவம் பவி…” என்றான்.
“ஆமாடா கண்ணா…” என்றவள், “சரி நீ தூங்கு… நான் தோட்டத்துல வேலையை முடிச்சிட்டு வரேன்…” என்றுவிட்டு புதிதாய் வந்த இளம்செடிகளை சரி பார்க்க சென்றாள்.
அதற்குள் சங்கவி கண்ணைக் கசக்கிக் கொண்டு வந்தாள். “ஆன்ட்டி, ராகுல் பந்தைப் புடுங்கிட்டு தர மாட்டேங்கிறான்…” என்றதும், “சிந்து, என்னன்னு பாரு…” என்று சங்கவியுடன் மகளை அனுப்பிய அகிலா வெற்றி பூர்த்தி செய்த பாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தந்தை பெயர் வெற்றிவேல் என எழுதியவன் அம்மா பெயருக்கு நேராய் எதுவும் எழுதாமல் விட்டிருக்க குழம்பினார்.
வீட்டுக்கு வந்த பின்னும் வெற்றியின் முகத்தில் கோபத்தின் சீற்றம் மறையவே இல்லை. பவித்ராவை சோபாவில் அமர்த்தியவன் அவள் அழுகையை அடக்கிக் கொண்டு விசும்பவும் சற்றுத் தணிந்தான்.
“பவி, இங்க பாரு, நீ குட் கேர்ள் தானே… உனக்கு அம்மா இல்லை… உன் அம்மாவும் பாட்டி மாதிரி சாமிகிட்ட போயிட்டா… நீ அவங்களை அக்கான்னு தான் சொல்லணும்… அம்மான்னு கூப்பிடக் கூடாது…” என்று பொறுமையாய் எடுத்து சொல்ல கண்ணில் திரண்டு நின்ற கண்ணீருடன் அமர்ந்திருந்தவளின் கைகள் ஜோவை இறுக்கிக் கொண்டது.
“இல்லப்பா, அம்மா சாமிகித்த போகல… அது என் அம்மா தான்… நீ பொய் சொல்லற… எனக்கு அம்மாத்த போகணும்… அம்மா வேணும்…” என்று சிணுங்கத் தொடங்கவும் வெற்றிக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
“பவி…” ஆத்திரத்தில் கத்தியதும் அவள் பயந்து நடுங்க, பார்வதி சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார்.
“அம்மா, அம்மா… ச்ச்சே, உன் அம்மா ஒரு சாக்கடை… அவளைப் பத்தி நீ நினைக்கவே கூடாது… புரிஞ்சுதா…” குழந்தையை உலுக்கிவிட்டு வேகமாய் நகர, பவி மீண்டும் கண்ணைத் தேய்த்துக் கொண்டு தேம்பத் தொடங்கினாள்.
முதல் நாளே அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிட விரும்பாமல் ஒதுங்கி நின்ற பார்வதி வெற்றி சொல்லியதைக் கேட்டு அதிர்ந்தாலும் குழந்தை அழுவதைக் காண சகிக்காமல் அருகில் வந்தார்.
“பாப்பா, அழாதடா செல்லம்…”
விசும்பிக் கொண்டிருந்தவளின் தலையில் ஆறுதலாய் வருட அவளுக்கு பாட்டியைப் போலத் தோன்றியதோ என்னவோ அவர் இடுப்பைக் கட்டிக் கொள்ளவும் கலங்கிப் போனார்.
“அச்சோ, பாட்டி சொல்லறேன்ல… அப்பா ஏதோ கோபத்துல திட்டி இருப்பார்… அழாதடா செல்லம்….. வா…” அவளை அழைத்துச் சென்று உணவு மேசை மீது அமர்த்தினார்.
“பாத்தி, நான் பொய் சொல்லல… அம்மா சாமி கித்த போகல… எனக்கு அம்மா வேணும்… அப்பா கூட க்கா…”
“சரி, சரி அழக்கூடாது… இப்போ பாட்டி சொல்லறதைக் கேட்டு சமத்தா இருக்கணும்… உனக்கு சாப்பிட ஏதாச்சும் தரட்டுமா…” என்றவர் ஆரஞ்சை எடுத்து சுளை எடுக்க, “எனக்கு வேண்டாம்…” என்றாள் அவள்.
“என் செல்லம்ல, சொன்னா கேக்கணும்… இல்லேன்னா அப்பா மறுபடி திட்டுவார்…” என்று கண்ணைத் துடைத்துக் கொடுக்க அமைதியானவள் அதை சாப்பிடத் தொடங்கினாள்.
அன்னையில்லா பிள்ளை
அன்பின் மொழி அறியா கிள்ளை…
கருவில் கண்ட கதகதப்பு
கனவில் கூட அன்னையை
காண முடியா பரிதவிப்பு…
தொட்டில் கட்டிய உன் சேலை வாசம்
கொத்து கொத்தாய் நெஞ்சினில் வீசும்…
உறக்கத்தின் நடுவிலும்
உனைத் தேடும் விரல்கள்
நீயின்றி எப்படி நீங்கிடும் நாட்கள்…
அம்மா என்ற சொல்லை
அழும்போதும் உரைக்காதவர் இல்லை…
ஆனால் எனக்கு மட்டும்
அம்மா என்ற சொல்லே
அந்நியமாய் ஆனதேனோ…
பவி, தனது உணர்வுகளை முழுமையாய் வெளிப்படுத்தவோ சொல்லவோ தெரியாமல் தாயின் பரிவுக்காய் ஏங்கினாள்.
மாடிக்கு சென்ற வெற்றிவேல் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான்.
“ச்சே… நான் எத்தனை அன்பைக் கொட்டி வளர்த்தும் இந்தப் பெண் அம்மாவைத் தேடுகிறாளே… பெற்றதைத் தவிர அவள் குழந்தைக்காய் என்ன செய்து விட்டாள்… அவளைப் பற்றிய ஏக்கமோ, நினைவோ வரக்கூடாது என்றுதானே ஒரு நாளின் அதிக நேரத்தையும் இவளுடனே கழிக்கிறேன்… அப்படி இருந்தும் இவளுக்கு ஏன் அன்னையின் நினைவு…” அவன் மனதில் கோபமும், வருத்தமும் மாறி மாறித் தோன்ற, பவியின் அழுகை முகம் கண்ணில் வந்தது.
“பாவம் குழந்தை… பயந்திருப்பாளோ… என்ன இருந்தாலும் அவகிட்ட நான் இப்படி முரட்டுத்தனமாய் நடந்து இருக்கக் கூடாது…” தன்னைத் தானே திட்டிக் கொண்டு கீழே வந்தவன் பவியின் குரல் அடுக்களையில் இருந்து கேட்கவும் வேகமாய் அங்கு சென்றான்.   
“பாட்டி, எனக்கு தலை சீவி ரோஜாப்பூ வச்சு விடதியா…”
பார்வதியிடம் கேட்டுக் கொண்டிருந்தவள் வெற்றி வந்ததைக் கண்டதும் சட்டென்று ஸ்பீக்கரை ஆப் ஆக்கி, “ஹூம்…” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவன் வந்ததைக் கண்ட பார்வதி, “பாப்பா அழுதுட்டு இருந்துச்சுன்னு இங்கே அழைச்சிட்டு வந்தேன் தம்பி… இதோ கொஞ்ச நேரத்துல சமையல் முடிஞ்சிரும்…” என்றார்.
“ம்ம்… மெதுவா பண்ணுங்கம்மா…” என்றவன், “பவிக்குட்டி, பாட்டிகிட்ட பேசிட்டு இருந்தியா…” எனவும்,
“ஆமா, நான்தான் உன்னோத கா விட்டேன்ல… அதான் பாட்டியோட பேசதேன்…”
“ஓ சரி, அப்பா உனக்கு ரோஜாப்பூ வாங்கிட்டு வரட்டுமா…”
“ஒண்ணும் வேண்டாம்… பாட்டி வாங்கித் தருவாங்க…”
“நான் ரெண்டு எல்லோ ரோஸ் வாங்கித் தருவேன்…” எல்லோ என்றதும் அவள் விழிகள் ஆவலுடன் மலர்ந்தன.
அவளுக்கு மஞ்சள் நிறம் மிகப் பிடித்தமானது.
“எங்கே பவிக்குட்டி, அப்பாகிட்ட பழம் விடுங்க…” என்றவன் அவளுக்கு கிச்சுகிச்சு மூட்ட சிரித்தவள், “ஹாஹா… பழம்…” என்று நெளிய மகளை அள்ளிக் கொண்டான் வெற்றிவேல்.
அவ்வளவுதான் அந்தக் குழந்தையின் கோபம்… சற்று முன் நடந்ததை மறந்து சிரித்துக் கொண்டிருந்தவளை பார்வதி கனிவோடு நோக்கிக் கொண்டிருந்தார்.
சில நாட்களாய் ஹோட்டல் உணவு உண்டவர்களுக்கு பார்வதியின் சமையலும், பழகும் விதமும் பிடித்துப் போனது. மதிய உணவு முடிந்து பவித்ரா உறங்கியிருக்க அவள் அருகில் அமர்ந்து தலை வருடிக் கொண்டிருந்தான் வெற்றி. அவன் மனதில் குழந்தையிடம் அப்படி நடந்து கொண்டதன் வருத்தம் மிச்சமிருந்தது. ஒரு கையைத் தலைக்கு மேல் தூக்கி மறு கையால் வெற்றியின் விரலைப் பற்றியிருந்தாள் பவித்ரா. அதைக் கண்டதும் சக்திவேலின் நினைவு வர வெற்றிக்கு கண்கள் பனித்தன.
சக்தியும் இப்படிதான். இரவு உறங்கும்போது வெற்றியின் விரலைப் பற்றிக் கொண்டே உறங்குவான். இவன் வேண்டுமென்றே கையை இழுத்துக் கொண்டால் சிணுங்கிக் கொண்டு அவனது கைகள் இவன் விரலைத் துளாவிப் பற்றிக் கொள்ளும்.
“சக்தி… ஏண்டா நம்ம வாழ்க்கைல இப்படி எல்லாம் நடக்கணும்… நான் சொல்ல சொல்லக் கேட்காம அந்த பாழாப் போன காதல் புதைகுழில விழுந்து வாழ்க்கையே சிதற விட்டுட்டுடியே டா… உன் நல்லதுக்காக தானே படிச்சுப் படிச்சு ஒவ்வொண்ணும் சொன்னேன்… ஓவர் விளையாட்டுத் தனமா இருக்கியே… உன்னை சரியான முறைல வழி நடத்தி பெரிய லெவல்ல கொண்டு வரணும்னு கனவு கண்டேனே… எல்லாத்தையும் சிதைச்சுட்டுப் போயிட்டியே டா…”
உடன் பிறந்தவனின் நினைவில் கட்டுப்பாட்டை மீறிக் கண்கள் கலங்கியது. அவன் உடல் ஓய்வாய் கட்டிலில் அமர்ந்திருக்க உள்ளமோ கட்டவிழ்ந்த பந்தயக் குதிரை போல் பழைய நினைவுகளைத் தேடி ஓடியது.
தொலைத்த இடத்தில்
தேட விடாமல்
ஓட வைக்கும் நினைவுகளே
வாழ்வில் பெரும் சாபம்…
“நான் அபர்ணாவ லவ் பண்ணறேன்… அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்…” சக்தி தீர்மானமாய் சொல்ல வெற்றிவேலும், வத்சலாவும் அதிர்ந்தனர்.
“என்னடா சக்தி சொல்லற, அவ நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டா டா… அவ சரியில்லை…” வெற்றி சொல்ல சக்தி தீர்மானமாய் கூறினான்.
“அவ சரியா தான் இருக்கா, உன் பார்வை தான் சரியில்லை… எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு…”
“டேய்… ஒண்ணாப் பிறந்த உங்களுக்கு வெளிய எங்கயும் பொண்ணெடுத்தா சரியா வராதுன்னு என் அண்ணன் பொண்ணுங்கள மருமகளாக்கிக்கறேன்னு  நான் மாமாக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்…” 
“அதெல்லாம் நாங்க அறியாத வயசுல கொடுத்த வாக்கு தானேம்மா… மனசுக்குப் பிடிச்சவளையே கல்யாணம் பண்ணிகிட்டா தானே வாழ்க்கை நல்லாருக்கும்…”
“அதுக்காக எங்க யாருக்கும் அவளைப் பிடிக்க வேண்டாமா…”
வெற்றி சொல்லவும், “உனக்கு எப்பவுமே அவளைப் பிடிக்காதே, எனக்குப் பிடிச்சாப் போதும்னு நினைக்கறேன்…”
அவர்கள் மறுக்க மறுக்க சக்தியின் பிடிவாதம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. முன்தினம் அபர்ணாவைப் பெண் பார்க்க யாரோ வந்ததாகக் கூறி உடனே இருவரும் கல்யாணம் செய்தாக வேண்டும்… என்று அபர்ணா சொல்ல அதன் விளைவு தான் சக்தி இப்படிப் பேசினான். அவர்கள் எத்தனையோ சொல்லியும் கேட்காமல் சக்தி தன் நிலையிலேயே பிடிவாதமாய் நின்றான்.
“சாரிம்மா… உங்க பேச்சை மீறணும்னு நான் நினைக்கல… ஆனா அபர்ணா தான் என் வாழ்க்கைன்னு நினைக்கிறேன்… நீங்களே எங்க கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டா மரியாதையா இருக்கும்…”
அவன் வார்த்தையைக் கேட்டு வத்சலா கண்ணீர் விட்டார்.
“உன்னோட தான இவனையும் பெத்தேன்… இவனுக்கு இந்த மாதிரி எல்லாம் புத்தி போகலையே… நமக்கு சொந்தம்னு இருக்கறது என் அண்ணன் குடும்பம் தான்… இனி அவங்க முகத்துல நான் எப்படி முழிப்பேன்… குடும்ப மானத்தை வாங்கறதுக்குன்னே வந்து பொறந்திருக்கியே…”
அன்னையின் கண்ணீரில் மனம் கலங்க, “அம்மா நான் காதலிச்ச பொண்ணை விட்டுட்டு உங்க அழுகைக்காக மாமா பொண்ணைக் கட்டிகிட்டாலும் என் மனசு உறுத்தும் மா… என்னால சந்தோஷமா வாழ முடியாது…. நான் அந்த அளவுக்கு அபுவை லவ் பண்ணிட்டேன்… ப்ளீஸ் புரிஞ்சுக்க மா…” கெஞ்சத் தொடங்கினான்.
வெற்றி வெறுப்புடன் சக்தியை நோக்க, “ப்ளீஸ்… என்னை அப்படி கேவலமா பார்க்காதடா… எனக்கு உன்னையும் அம்மாவையும் எவ்ளோ பிடிக்குமோ அதே போல அபுவையும் ரொம்பப் பிடிக்கும் டா… அவ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால கற்பனை பண்ணவே முடியல… ப்ளீஸ்… அம்மாக்கு சொல்லுடா… அவ இல்லேன்னா நான் செத்திருவேன்டா…” சொல்லும்போதே குரல் உடைந்திருக்க அழத் தொடங்கினான்.
அந்த இறுதி வார்த்தை காதில் விழுந்ததும் தனது அழுகையை நிறுத்திவிட்டு நிமிர்ந்த வத்சலாவின் மனது உடனே ஒரு முடிவுக்கு வந்தது.
“எழுந்திருடா… எப்ப ஒரு பொண்ணுக்காக உயிரையே விட்டிருவேன்னு அழத் தொடங்கினியோ… இதுக்கு மேல உங்களைப் பிரிச்ச பாவம் எங்களுக்கு வேண்டாம்… அவளோட சேர்ந்து வாழப் போறவன் நீ… உன் இஷ்டப்படியே உன் கல்யாணம் நடக்கட்டும்… வெற்றி, வேண்டிய ஏற்பாட்டை செய்திடு…” என்றார் வத்சலா.
அதைக் கேட்டதும் அன்னையைக் கட்டிக் கொண்ட சக்தி, “ரொம்ப தேங்க்ஸ் மா… என்ன இருந்தாலும் எங்க சந்தோசம் தான் உனக்கு முக்கியம்னு நிரூபிச்சுட்ட… நான் இப்பவே அபுகிட்ட இந்த விஷயத்தை சொல்லிக் கூட்டிட்டு வரேன்…” என்றவன் வேகமாய் அலைபேசியை எடுத்து ஓடினான்.
வெற்றி எதுவும் சொல்லாமல் யோசனையாய் இருப்பதைக் கண்டவர், “என்னடா, நான் சொன்னதில் உனக்கு உடன்பாடு இல்லையா…” என்று கேட்க, “அந்தப் பொண்ணு அவ்ளோ சரியில்லை மா… அவ எப்படி நம்ம குடும்பத்துக்கு நல்ல மருமகளா இருப்பான்னு யோசிக்கறேன்…”
“ம்ம்… இதுதான் என் தலை விதின்னு உன் தம்பி முடிவு பண்ணிட்டான்… இனி நம்மால மாத்தி எழுதவா முடியும்… அவன் விருப்பப்படி நடக்கட்டும்…”
“ம்ம்… இருந்தாலும் அவசரப்பட்டு சம்மதிக்காம கொஞ்சம் பேசி அவனுக்குப் புரிய வச்சிருக்கலாமோ…” அவன் சொல்லவும், “என்ன யோசிச்சாலும், பேசினாலும் உன் தம்பியோட பிடிவாதம் மாறாது… அப்புறம் எதுக்கு வீணாப் பேசி சங்கடப்படணும்… அவன் மனசுல அவ்ளோ இடம் பிடிச்ச அந்த பொண்ணை எனக்கே பார்க்கணும் போல இருக்கு… எப்படி இருப்பா என் மருமக…” புன்னகையுடன் கேட்ட அன்னையை அமைதியாய் பார்த்தான் வெற்றி.
தனது விருப்பத்தை விட பிள்ளைகளின் விருப்பத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கும் அந்தத் தாய்க்கு தனது மகனின் அன்பின் ஆழம் புரிந்ததும் உடனே மனதைத் தேற்றிக் கொள்ள முடிந்தது. அவளுக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு மகன் நேசித்திருக்கிறான் என்பது புரிந்ததும் வேறு யோசிக்கத் தோன்றவில்லை.
சக்திவேல் அபர்ணா கல்யாணம் முடிவானது தெரிந்ததும் தங்கையிடம் சண்டை போட வந்தனர் அண்ணனும் அண்ணியும். அவர்களிடம் இளைய மகனுக்கு சாதகமாய் பேசிய வத்சலா மூத்த மகனுக்கு அவர்களின் பெண்ணைக் கேட்கவும் சம்மதிக்காமல் கோபத்துடன் கிளம்பிய அந்த உறவும் அதோடு தொடர்பை முறித்துக் கொண்டது.
தன் உடன் பிறந்தவனின் தொடர்பு முறிந்தாலும் வீட்டுக்கு வந்த மருமகளைத் தங்கமாய் தனது மகளைப் போலப் பார்த்துக் கொண்டார் வத்சலா. முதலில் அவளைக் கண்டு கொள்ளாமல் இருந்த வெற்றியும் பிறகு தேவைக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசத் தொடங்கினான்.
தினமும் மகனும் மருமகளும் ஜோடியாய் புறப்பட்டு வெளியே செல்லும்போது சந்தோஷமாய் அனுப்பி வைக்கும் மாமியாருக்கு அவள் குழந்தை உண்டானது தெரிந்ததும் உலகமே கையில் வந்த போல் சந்தோஷத்தைக் கொடுத்தது.
காதல்
உண்மையல்லாத போது
முறிந்து போவது
மணங்கள் மட்டுமல்ல…
மனங்களும் தான்…

Advertisement