Advertisement

அத்தியாயம் – 5
வெற்றி காரை நிறுத்திவிட்டு வந்ததும் வாசலிலேயே காத்திருந்த பவித்ரா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். வாட்ச்மேன் மனைவி பவித்ராவுக்கு துணையாய் இருந்தார்.
“அப்பா…”
“பவிக்குட்டி… இவங்களைத் தொந்தரவு பண்ணாம சமத்தா இருந்தியா…”
“ம்ம்…” தலையாட்டினாள் குழந்தை.
“குழந்தையால என்ன தொந்தரவுங்க ஐயா… சாப்பிட சொன்னதுக்கு மட்டும் அப்பா வந்து தான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டா…” என்றார் பாக்கியம்.
“ம்ம்… சரிம்மா, நான் பார்த்துக்கறேன்… உங்க வீட்டுக்காரர் இன்னும் வரலியா… அப்பவே ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டாரே…” என்றான்.
“வந்துட்டாருங்க ஐயா… பக்கத்துல கடை வரைக்கும் போயிருக்காரு…”
“ம்ம்… சரிங்கம்மா… இந்தப் பணத்தை வச்சுக்கங்க… நாளைக்கு எப்பவும் போல வந்திருங்க…” என்றான்.
“சரிங்கையா… நான் போகும்போது அவரைக் கூட்டிட்டு அப்படியே வீட்டுக்கு கிளம்பிக்கறோம்…” சொல்லிவிட்டு, கிளம்பினார். வாட்ச்மேனும் அவரது மனைவியும் வெற்றிக்கு மிகுந்த நம்பிக்கையான ஆட்கள் என்பதால் வெளியே ஏதாவது வேலை இருந்தால் இவர்களின் பொறுப்பில் குழந்தையை விட்டுச் செல்வான்.
இரவு ஷிப்டுக்கு வேறு வாட்ச்மேன் என்பதால் இந்த வாட்ச்மேன் வேலை முடிந்து மனைவியை அழைத்துச் செல்வதற்காய் இங்கே வந்திருந்தார். அடுத்த நாள் முதல் சமையல் வேலைக்கு பார்வதி அம்மாவை வர சொல்லியிருந்தான். அவர் செட்டாகி விட்டால் இங்கேயே தங்கிக் கொள்ள சொல்லலாம் என நினைத்திருந்தான்.
அடுத்தநாள் பார்வதியம்மா காலையிலேயே வந்து இருவருக்கும் காபி, பால் கலந்து கொடுத்துவிட்டு காய்கறி வாங்குவதற்காய் கடைக்கு சென்றிருந்தார்.
சோபாவில் அமர்ந்து வெற்றி ஏதோ பைலைப் புரட்டிக் கொண்டிருக்க பவி அவனை நோண்டிக் கொண்டிருந்தாள்.
“அப்பா, வா… டாட்டா போலாம்…”
“அப்பாக்கு வேல இருக்குடா செல்லம்… கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாம்…”
“ம்ஹூம், இப்ப…” தலையை வேகமாய் ஆட்டி மறுத்தாள்.
“என் செல்ல பவிக்குட்டி தானே… அப்பாவை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா ஐஸ்க்ரீம் வாங்கித் தருவேன்…”
“எனக்கு ஐஸ்கீம் நானா…”
“ஓ… ஏன் வேண்டாம்…”
“ஐஸ்கீம் தின்னா சளி பிதிக்கும்…”
அவள் சொன்னதைக் கேட்டு திகைத்தவன், “ஓ… இதெல்லாம் பவிக்குட்டிக்கு எப்படி தெரியும்…” என்றான்.
“அம்மா சொன்னா…” என்றதும் அதிர்ந்தான்.
“என்னது அம்மாவா…”
“ம்ம்… நான் போத்தோ பாக்கதேன்…” என்றவள் கீழே செல்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆல்பம் ஒன்றை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தாள்.
“இவளுக்கு என்னாச்சு… அம்மான்னு சொல்லறா… கனவு ஏதாச்சும் கண்டிருப்பாளோ…” யோசித்தவன் மீண்டும் பைலில் மூழ்கினான்.
“பவி பாப்பா, அப்பா… அங்கிள்… பாட்டி…” என்று புகைப்படத்தில் இருந்தவர்களை சொல்லிக் கொண்டு வந்தவள் நிறுத்திவிட்டு நிமிர்ந்தாள்.
“ப்பா… பாட்டி சாமிகித்த போயிட்டாங்களா…”
“ம்ம்… ஆமாடா செல்லம்…”
“எப்ப வருவாங்கப்பா… பாட்டி எனக்கு மம்மு ததுவா, குளிப்பாத்துவா… கத சொல்லுவா… பாட்டியப் பாக்கணும் போல இருக்குப்பா…” தலையை சாய்த்து உதட்டைக் குவித்து சோகமாய் அவள் சொல்ல அவன் மனம் நெகிழ்ந்தது.
“வருவாங்கடா செல்லம்… நீ வேற ஆல்பம் பாரு…” என்றான்.
“ம்ம்…” என்றவள் மற்றொரு ஆல்பத்தை எடுத்தாள். அது வெற்றி, சக்தியின் ஆல்பம். அதைத் திறந்தவள் கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தது.
“ஐ… இது அப்பா, இதும் அப்பா… எனக்கு ரெண்டு அப்பா…” என்றாள் சந்தோஷத்துடன். அதில் இரட்டை சகோதரர்கள் இருவரும் தோளில் கை போட்டுக் கொண்டு நின்றிருந்தனர். மற்றொரு படத்தில் அன்னையின் தோளில் பற்றி நின்றனர்.
“ஐ… பாட்டி, அப்பா, அப்பா…” என்று குழந்தை குதூகலிக்க வெற்றியின் பார்வை ஆல்பத்தில் நிலைத்தது. அது அவர்களின் பிறந்த தினத்தன்று மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம். மனம் அன்னையின் நினைவில் நெகிழ கண்கள் பனித்தன.
“வத்சு… வத்சு…” அழைத்துக் கொண்டே அன்னையைத் தேடி வந்தான் சக்திவேல்.
“என்னடா, ஏதோ பொண்டாட்டிய அழைக்கற போல அம்மாவ செல்லம் கொஞ்சற… ஒழுங்கா அம்மான்னு சொல்லு…” துவைத்த துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருந்த வத்சலா மகனை அதட்டினார்.
“என்ன வத்சு, அழைக்கதானே பேரு வச்சிருக்காங்க… அதென்ன, பொண்டாட்டிய மட்டும் தான் செல்லமா கூப்பிடணுமா… எனக்கு என் அம்மா முடிஞ்சு தான் பொண்டாட்டி எல்லாம்…” சொன்ன மகனின் தலையில் செல்லமாய் தட்டியவர், “சரி… இப்ப எதுக்கு இந்த தாஜா எல்லாம்… ஏதோ பெருசா பிளான் பண்ணிட்ட போலருக்கு…” என்றார் அவனை ஆராய்ச்சியுடன் நோக்கி.
“ஹூக்கும்… பிளான் பண்ணறாங்க… அதெல்லாம் இல்ல வத்சு செல்லம்… நாளைக்கு எங்க பிறந்தநாள் வருதுல்ல, அதான் பசங்க எல்லாம் ட்ரீட் கேக்கறாங்க…”
“ஓ… அதுக்கு….”
“நீ தான் யாருகிட்டயும் எந்த கடனும் வச்சுக்கக் கூடாதுன்னு சொல்லுவியே மம்மி… அவங்க பர்த்டேக்கு ட்ரீட் கொடுக்கும்போது போயி நல்லா சாப்பிட்டு நாம மட்டும் கொடுக்காம இருந்தா நல்லாவா இருக்கும்…” என்றான் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு.
“ம்ம்… நீ சொல்லறதும் சரிதான்… நாளைக்கு ஞாயித்துக் கிழமை லீவு தானே… பசங்களை எல்லாம் நம்ம வீட்டுக்கு வர சொல்லிடு… நானே நல்லா விருந்து சமைச்சு தரேன்… சந்தோஷமா சாப்பிட்டு போகட்டும்…” என்றார் சிரிப்புடன். “என்னது, எல்லாரையும் வீட்டுக்கு அழைக்கிறதா… அபுவை வீட்டுக்கு அழைச்சா என் கூடப் பிறந்த ஹிட்லர் ஆயிரம் கேள்வி கேப்பானே… என்ன பண்ணுறது…” யோசித்தான்.
“என்னடா… விருந்துக்கு தானே கூப்பிட சொன்னேன்… என்னவோ எக்ஸாம் எழுதக் கூப்பிடற போல முழிக்கறே…”
“ப்ச்… அதில்லைமா, பசங்க பலவிதமா சாப்பிட விரும்புவாங்க… எல்லாருக்கும் நீ ஒத்தையா எப்படி சமைக்க முடியும்… கஷ்டமா இருக்கும்ல… அதான் யோசிச்சேன்…”
“என் கஷ்டத்தைப் பத்தி நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்… நான் பார்த்துக்கறேன்…” என்றவர் அங்கிருந்து செல்ல பின்னாடியே ஓடினான் சக்தி.
“சரி சரி, என்னோட படிக்கிற கேர்ள்ஸ் எல்லாம் வர முடியாது… அவங்களுக்கு மட்டும் சிம்பிளா காலேஜ்ல ஒரு ட்ரீட் கொடுத்திடறேன்… அதுக்கு மட்டும் ஒரு பட்ஜெட் ஒதுக்கிக் கொடேன்…” என்றான் பரிதாபமாய்.
“ம்ம்… சரி தரேன்டா…” என்றதும், “என் செல்ல மம்மி, புஜ்ஜு மம்மி…” என்று கொஞ்சிவிட்டு கையோடு பணத்தை வாங்கிக் கொண்டவன், “உன் மூத்த புள்ளகிட்ட போட்டுக் கொடுத்துடாத தாயி…” என்று வேண்டிக் கொண்டு உற்சாகமாய் விசில் அடித்துக் கொண்டே நகர்ந்தான்.
அப்போது எதிரில் வெற்றி வரவும் அப்படியே விசில் சத்தத்தை, “வாங்கண்ணா, வணக்கங்கண்ணா… மை சாங் ஒண்ணு கேளுங்கண்ணா…” என்று மாற்றிப் பாட அவன் நின்று மேலும் கீழுமாய் தம்பியை கவனித்தான்.
“என்னடா, அம்மாகிட்ட எதையாச்சும் பிட்டைப் போட்டு ஆட்டைய போட்டுட்டியா…”
“யாரு, நானுங்களா அண்ணா… நான் உங்க தம்பிங்கண்ணா… உங்க அளவுக்கு நல்லவனா, வல்லவனா இருக்க முடியலைனாலும் கொஞ்சூண்டு நல்லவன், கொஞ்சூண்டு வல்லவனுங்க அண்ணா…” என்றான் கை கட்டி.
“ம்ம்… என்ன, உன் பேச்சே ஒரு மார்க்கமா இருக்கே… ஏதோ சரியில்லையே…” என்றான் வெற்றி.
“அண்ணா, கூடப் பிறந்த அண்ணனா இருந்துட்டு, உங்ககூட ஒட்டிப் பிறந்த தம்பியை நீங்களே சந்தேகப்படறது எல்லாம் நல்லா இல்லை, சொல்லிட்டேன்…” என்றவன் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டே நகரந்தான்.
“உலகமகா நடிகனா இருக்கானே… நம்ப முடியலையே…” என யோசித்துக் கொண்டே தனது அறைக்கு சென்றான் வெற்றி. வெற்றியின் தந்தை மூன்று வருடங்கள் முன்பு மாரடைப்பில் இறந்திருந்தார். தந்தை கட்டி வைத்திருந்த வீடுகள், ஷாப்பிங் காம்ளக்ஸிலிருந்து நல்லவொரு தொகை மாத வாடகையாய் வந்து கொண்டிருந்ததால் பணத்துக்கு பிரச்சனை இல்லை.
வத்சலா பிள்ளைகளின் நியாயமான செலவுக்கென்று மாதம் ஒரு தொகை கொடுத்தாலும் தேவை இல்லாமல் கொடுக்க மாட்டார். அன்பும் கண்டிப்பும் நிறைந்த அன்னையாய் பிள்ளைகளே உலகமாய் வாழ்ந்து வந்தார்.
அன்று மாலை சக்தி அபர்ணாவுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டை அட்வான்சாய் கொடுத்தான். அடுத்தநாள் நண்பர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருக்க விதவிதமாய் சமைத்து வைத்திருந்தார் வத்சலா.
பிள்ளைகளின் நண்பர்களையும் சுற்றத்தாரையும் அழைத்து விருந்து கொடுத்து மாலையில் கேக்கும் வெட்டி கொண்டாடினர். அன்று மூவரையும் நிற்க வைத்து நண்பன் ஒருவன் எடுத்த புகைப்படம் தான் அது.
“அம்மா, பிள்ளைங்க மேல அவ்ளோ நேசத்தையும், கனவையும் வச்சிருந்தியே… அதெல்லாத்தையும் சிதைச்சு உன் மரணத்துக்கு நாங்களே காரணம் ஆயிட்டோமே…” அன்றைய நினைவில் வெற்றியின் கண்கள் கசிய விரல்கள் புகைப்படத்தை தடவிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டவன் பவித்ராவை நோக்க அவள் கரடி பொம்மையுடன் ஜன்னலருகே நின்று கொண்டிருந்தாள்.
“பவி, என்னடா செல்லம் பண்ணறே…”
“அப்பா, பாப்பா…” என்று வெளியே கை காட்டினாள் பவித்ரா. எழுந்து வந்தவன் வெளியே பார்க்க அங்கே ஒரு இரண்டு வயதுக் குழந்தை பொம்மைக் காரில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. சற்றுத் தள்ளி சிந்து நின்று கவனித்துக் கொண்டிருந்தாள். எப்போதும் பவித்ரா அங்கே நின்று எதிர் வீட்டுக்கு வரும் குழந்தைகளை கவனிப்பதும், அவர்களைக் காட்டி எதையாவது சொல்லிக் கொண்டும் இருக்க, இவளை அங்கே விட்டால் என்னவென்று தோன்றியது.
“குழந்தைகளோடு சேர்ந்து விளையாடினால் இவளுக்கும் சந்தோஷமாய் இருக்கும்… அடுத்த வருடம் பள்ளியில் சேர்க்கும்போது ஒரு அனுபவமாகவும் இருக்குமே…” என யோசித்தவன், அங்கே சென்று பார்ப்பது என முடிவு செய்தான். கீழே கேட்டைத் திறந்து பார்வதி அம்மா வருவது ஜன்னல் வழியே தெரிந்தது.
ஆல்பத்தை எடுத்து வைத்துவிட்டு கீழே சென்றவன் மதிய உணவுக்கு என்ன செய்ய வேண்டுமென்பதை சொல்ல அவர் கேட்டுக் கொண்டார். அவர் கையில் ஒரு ஜெம்ஸ் பாக்கெட் இருக்க, “இதை பாப்பாக்கு கொடுக்கட்டுமா தம்பி…” என்றார் அவனிடம் அனுமதிக்காய். அவருக்கு பவியைக் கண்டதும் அவரது பேத்தியின் நினைவு வந்திருக்க வேண்டும்.
“ம்ம்… கொடுங்கம்மா…” அவன் சம்மதம் சொல்ல புதிதாய் வந்தவரைக் கண்டு பம்மிக் கொண்டு வெற்றியின் பின்னில் நின்று கொண்டிருந்த பவி அரைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பாப்பா… பாட்டிகிட்ட வா செல்லம்… இந்தா, மிட்டாய் வாங்கிக்க…” என்று சொல்ல அவள் தயக்கத்துடனே நின்றாள்.
“பவி, வாங்கிக்க…” வெற்றி சொல்லவும் மெல்ல கையை நீட்டி வாங்கிக் கொண்டாள்.
“முலாம்பழம் வாங்கினேன், ஜூஸ் போட்டு தரட்டுமா தம்பி…” அவரது குரலில் அன்னையின் பரிவு எட்டிப் பார்க்க, மறுக்க விரும்பாமல், “குடுங்கமா…” என்றான். அவர் புன்னகையோடு சமையலறைக்கு செல்ல மாடிக்கு சென்றவன் பைலில் பாக்கி வேலையை முடிக்கும்போது ஜூஸுடன் வந்தார் பார்வதி. வெயிலுக்கு இதமாய் அவர் கொடுத்த ஜூசைக் குடித்துவிட்டு பவிக்கும் சிறிது கொடுக்க அவள் மறுத்துவிட்டாள். மீண்டும் ஜன்னல் அருகே அவள் நின்று பார்த்துக் கொண்டிருக்க அப்போதே அங்கு சென்று பேசிவிடலாம்… என நினைத்தவன் பவியை அழைத்தான்.
“பவிக்குட்டி… நாம அங்கே போகலாமா…” எனக் கேட்க பலமாய் தலையாட்டியவள் கண்கள் பளிச்சிட்டன. ஜோவை எடுத்துக் கொண்டவளிடம், “சரி, வா…” என அவளை அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.
“முன்னாடி பிளேஸ்கூல் போயிட்டு வந்திடறோம் மா… பார்த்துக்கோங்க…” பார்வதியிடம் சொல்ல, “இந்துப் பொண்ணு வீட்டுக்கா… சரி தம்பி…” என்றார் அவர். பவித்ரா ஆவலுடன் அவன் விரலைப் பிடித்து நடக்க பூட்டி இருந்த கேட்டின் முன்பு நின்றனர். அவர்களை கவனித்த ஜோதி கேட்டைத் திறந்துவிட்டு “குழந்தையை சேர்க்கறதுக்கா சார்… அம்மா உள்ளே இருக்காங்க… போங்க…” என்று சொல்லிவிட்டு மீண்டும் கேட்டை பூட்டிக் கொண்டார். நண்டும் சிண்டுமாய் இரண்டு வயது முதல் குழந்தைகள் இருந்தன. ஒரு சில குழந்தைகள் மட்டும் அழுது கொண்டிருக்க மற்ற குழந்தைகள் இந்த புதிய சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஜோதி அவர்களைப் பார்த்துக் கொண்டு அங்கே இருக்க உள்ளே சில குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தன.
“சிந்து, வருண் இந்து கூட தோட்டத்துல இருக்கானா பாரு… எப்பப் பார்த்தாலும் அவ பின்னாடியே போயிடறான்…” சொல்லிக் கொண்டிருந்த அகிலா உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் புன்னகைத்தார். முன்தினம் நடந்த சம்பவங்களை பரமசிவம் வீட்டில் சொல்லி இருந்தார்.
“வாங்க தம்பி… அட, இது யாரு குட்டிப் பொண்ணு…” அவர் கேட்கவும் பவித்ரா அவன் காலைக் கட்டிக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டாள். சிந்துவுக்கு அவன் மீது முன்பு இருந்த கோபம் நேற்றைய விஷயத்தால் சற்றுத் தணிந்திருந்தது. அவளிடம் புன்னகைத்த வெற்றிக்கு அவளை சுத்தமாய் நினைவில்லை.
“வணக்கம் மா… என் பேரு வெற்றிவேல்… அன்னைக்கு பார்த்தப்ப அறிமுகம் செய்துக்க முடியல… ஒரு யார்ன் கமிஷன் ஏஜன்சி வச்சிருக்கேன்… இது என் பொண்ணு பவித்ரா… இங்கே நிறைய குழந்தைங்க இருக்கறதைப் பார்த்து அவளுக்கும் இங்கே வரணும், விளையாடணும்னு ஆசைப்படறா… அதான், என்ன பார்மாலிடீஸ், இவளை சேர்த்துக்க முடியுமான்னு கேக்க வந்தேன்…”
“ஓ நல்லது தம்பி, நேத்து என் பொண்ணுக்கு செய்த உதவிக்கு ரொம்ப நன்றி… இங்கே உள்ள குழந்தைங்க நிறைய பேரோட பேரன்ட்ஸ் வேலைக்குப் போறவங்க… சிலர் அடுத்தவருஷம் LKG சேர்க்கும்போது குழந்தைகளுக்கு கொஞ்சம் அனுபவமா இருக்கட்டும்னு விட்டுட்டுப் போவாங்க… மதியம் வரை விடறவங்களும் இருக்காங்க… மாலை ஆபீஸ் முடிஞ்சு வந்து கூட்டிப் போறவங்களும் இருக்காங்க… உங்களுக்கு எது விருப்பமோ அப்படி விட்டுக்கலாம்… வீடும் இங்கயே இருக்கறதால சில நேரம் முன்னப் பின்ன ஆனாலும் பார்த்துக்குவோம்…”
“ஓ… நல்லதும்மா… நான் இதுவரைக்கும் இவளை எங்கேயும் விட்டதில்லை… சரி, குழந்தைகளோட பழகினா அவளுக்கும் ஒரு மாற்றமா இருக்கும்… முதல்ல மதியம் வரை விட்டுப் பழக்கிடலாம்… அப்புறம் அவளுக்குப் பிடிச்சா மாலை வரை இருக்கட்டும்…” என்றான் வெற்றிவேல்.
“சரி தம்பி… இந்த பாரத்துல குழந்தை பத்தின டீடைல்ஸ், அவளுக்கு எது பிடிக்கும், பிடிக்காது எல்லாம் பூர்த்தி பண்ணிடுங்க… நம்பி விட்டுட்டுப் போங்க… எங்க குழந்தை போல நல்லாப் பார்த்துக்குவோம்…” என்றார் அகிலா.
“சரிம்மா…” என்றவன் பாரத்தைப் பூர்த்தி செய்ய சிந்து அவனையே பார்த்துக் கொண்டு “நம்மை இவனுக்கு சுத்தமா நினைவு இல்ல போலருக்கே…” என நினைத்துக் கொண்டே பவித்ராவிடம் ஏதோ சைகை செய்து கொண்டிருந்தாள். அப்போது வருணிடம் ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டே இந்து அங்கே வர பவித்ராவின் பார்வை அவள் மீதே ஆவலுடன் நிலைத்தது. இவனைக் கண்டதும் பரிச்சயமாய் புன்னகைத்த இந்து, பவியிடம், “ஹாய் குட்டி… நீங்களும் இங்க வர்றீங்களா…” என்றாள் அவள் உயரத்துக்கு குனிந்து.
அவளையே கண் சிமிட்டாமல் பார்த்த பவியிடம், “உன் பேரு என்ன செல்லம்…” என்றாள். “அக்கா, இந்தப் பாப்பாவும் என்கூட விளையாத வருவாளா…” என்றான் வருண்.
“நானு பாப்பா இல்ல பவி…” என்றாள் பவித்ரா.
“ஓ… பவிக்குட்டியா… அழகான பேரு… உன்னைப் போலவே கியூட்டா இருக்கு…” என்றவள் ஒரு சாக்கலேட்டை நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் பவித்ரா.
“அக்கா, எனக்கு சாக்கி தர மாத்தியா…” வருண் கேட்க அவனுக்கும் ஒன்றைக் கொடுத்துவிட்டு, “எப்போ இருந்து பவிக்குட்டியை இங்கே  விடறீங்க சார்…” என்றாள்.
“நாளைல இருந்து விட்டுடறேன்…” என்றவன் அகிலா சொன்ன தொகையைக் கொடுத்துவிட்டு அவர் குழந்தைக்கு கொடுத்துவிட சொன்ன பொருட்களை லிஸ்ட் எழுதிக் கொண்டான்.
“ஓகே தேங்க்ஸ்… வர்றோம்…” என்றவன் எழுந்து கொள்ள, “பவி, பை டா செல்லம்…” என்றாள் இந்து.
“அக்காக்கு பை சொல்லு பவி…” வெற்றி அவளிடம் சொல்ல, “அக்கா இல்ல… அம்மா…” என்றாள் பவித்ரா.
எதையும் இயல்பாய்
எடுத்துக் கொள்ளும் மனம்
எல்லோருக்கும்
அமைந்திடாத வரம்…
நிரந்தரமில்லா நிமிடங்களில்
நிம்மதியில்லை…
இருக்கின்ற நொடிகளே
நிஜம் எனும் போது…

Advertisement