Advertisement

அத்தியாயம் – 4
இரண்டு நாட்கள் கழிந்திருந்தது.
மாலையில் குழந்தைகள் எல்லாம் வீட்டுக்கு கிளம்பி இருக்க இரவு உணவுக்கு கிச்சடி செய்வதற்காய் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள் இந்துஜா.
அகிலாண்டேஸ்வரி காலை நீட்டி அமர்ந்திருக்க சிந்து தைலம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏன் மா, இந்த வயசுல ஓடியாடி சுறுசுறுப்பா இல்லாம எப்பவும் கால் வலின்னு இப்படி உக்கார்ந்துக்கறியே… இன்னும் நீ என்னெல்லாம் செய்ய வேண்டிருக்கு…”
“ஓ, நான் என்னடி செய்யணும்…”
“இன்னும் பொண்ணு கல்யாண வேலை எல்லாம் பார்க்கணும்… பேரன், பேத்திய குளிப்பாட்டி, சோறூட்டி, கக்கா கழுவின்னு எவ்ளோ பண்ண வேண்டிருக்கு… நீ இப்பவே இப்படி சைடு வாங்கினா இதெல்லாம் யாரு பண்ணறது… பாரு, உனக்கு தைலம் தேச்சு என் கைரேகையே அழிஞ்சு போயிடும் போலருக்கு…” என்றவளை முறைத்தவர், “யாரு உனக்கு, இன்னைக்கு என்னமோ உலக அதிசயமா தேச்சு விடறேன்னு சொல்லிட்டு பில்டப்பு… என்ன பேச்சுப் பேசற… உனக்கு வாய் மட்டும் இல்லேன்னா நாய் கவ்விட்டுப் போயிடும்டி… படிக்கிற புள்ள பேசற போலவா பேசற…”
“ஏன், படிக்குற புள்ள இதெல்லாம் பேசக் கூடாதாக்கும்… சரி, ரொம்ப டயர்டா இருக்கு… உன் மூத்த பொண்ணுகிட்ட ஒரு காபி தர சொல்லு…”
“என்னது காபியா… உனக்கு நைட் டிபனே கொடுக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கறேன்…”
“போம்மா, நானே என் அக்காகிட்ட கேட்டுக்கறேன்…” என்றவள், இந்துவிடம் சென்றாள்.
“அக்கா, என்ன பண்ணிட்டு இருக்கே…” கேட்டுக் கொண்டே அருகில் அமர்ந்தவள் ஒரு கேரட்டை எடுத்து கடிக்கத் தொடங்க அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த இந்துவுக்கு அவள் வந்த நோக்கம் நன்றாகவே புரிந்தது.
“நான் பூ கட்டிட்டு இருக்கேன்… சிந்து… வேணுமா…”
“ம்ம்… பார்ரா… புள்ளப்பூச்சி எல்லாம் கிண்டல் பண்ணுது…” என்றவள் கண்ணை உருட்டி உதட்டைச் சுழிக்க அதைக் கண்ட இந்துவுக்கும் சிரிப்பு வந்தது.
“அக்கா, என் செல்ல அக்கா இல்ல…”
“இல்ல…”
“அக்கா…” சிணுங்கியவள், “எனக்கு உன் கையால ஸ்டிராங்கா ஒரு காபி கலந்து தர்றியா… குடிக்கணும் போலருக்கு…” தாஜா பண்ணியவளை சிரிப்புடன் நோக்கினாள் இந்து.
“அச்சோ, எனக்கு காபி போடத் தெரியாதே… அதென்ன குடிக்கற பொருளா… எப்படி இருக்கும்…”
“”ஹூம், கடிக்கிற பொருள்… விளையாடாத அக்கா…”
“அட, நிஜமாலுமே எனக்கு காபி போடத் தெரியாது…”
“என்னது, இந்தியாவின் தேசிய பானமான காபியைப் போடத் தெரியாதா… நிச்சயமாகத் தெரியாதா…”
“ஆமா, தெரியாது…”
“ஆஹா, உன் அறியாமையை எண்ணி நான் வெக்கப்படறேன்… வேதனைப்படறேன்… துக்கப்படறேன்… தொயரப்படறேன்… ஐயகோ, இந்தக் களங்கத்தை நான் எப்படி துடைக்கப் போகிறேன்…”
“சர்ப் எக்ஸல் இருக்கு, தரட்டுமா…”
இந்து சொல்லவும் முறைத்தவள், “என்ன… இந்த வீட்டுல எல்லாரும் என்னைத் தனியாப் பாக்கறீங்களா… வரவர யாருக்கும் என் மேல பாசமே இல்லாமப் போயிருச்சு…” ஜஸ்ட் ஒரு காபிக்கு கூட என்னைப் போராட வக்கறீங்க… நான் கோபமா கிளம்பறேன்…” என்றாள் உதட்டை சுழித்து.
“ஓ, அப்ப கிளம்பறியா… காபி வேண்டாம் தானே…”
“உனக்குதான் காபி போடத் தெரியாதே…”
“ஆனா, இப்ப நினைவு வந்திருச்சு…” என்றவள் சொல்லிக் கொண்டே பாத்திரத்தை அடுப்பில் வைக்க, “என் செல்லக்கா…” என்று அவளைக் கட்டிக் கொண்டாள் இளையவள்.
“ம்ம்… எப்படியோ காக்கா பிடிச்சு உன் அக்காவ காபி போட வச்சுட்ட…” சொல்லிக் கொண்டே வந்த அன்னையிடம், “என் அக்காகிட்ட நான் காக்கா பிடிப்பேன், கழுகு பிடிப்பேன்… வாத்து கூட பிடிப்பேன்… கண்ணு போடாத ஓல்டு லேடி…”
“என்னடி சொன்ன, உன்னை…” என்று அகிலா காலை இழுத்துக் கொண்டே அடிக்கத் துரத்த கையில் சிக்காமல் ஓடிய சிந்து தந்தையின் வண்டி வரவும் அவரிடம் சென்றாள்.
“செல்லப்பா, வரவர உங்க ஒயிப் சுத்தமா சரியில்ல… எப்பப் பார்த்தாலும் எங்கிட்ட வன்முறையா நடந்துக்கறாங்க… அப்புறம் குழந்தைகள் வன்முறை சட்டத்துல அரஸ்ட் பண்ணிடப் போறாங்க… வார்ன் பண்ணி வைங்க…”
அவள் சொல்லவும் அகிலா மேலும் கோபத்துடன் துரத்த, “அடடா, உங்க யுத்ததுக்கு அளவே இல்லாமப் போயிடுச்சு… நான் ஒரு நல்ல விஷயம் சொல்லறேன் வாங்க…” என்றார்.
“என்ன, நல்ல விஷயம் செல்லப்பா… அம்மாவை டைவர்ஸ் பண்ண டிசைட் பண்ணிட்டிங்களா…” என்று கேட்க,
“ஹூம், எனக்கெங்க அந்த பாக்கியம் எல்லாம்…” அவர் முனங்கிக் கொண்டே சென்றார்.
“அடியே உன்ன…” ஆங்காரத்துடன் நோக்கியவர், “இருடி, வந்து வச்சுக்கறேன்…” என்று கணவரைத் தொடர்ந்தார்.
“என்னங்க, ஏதோ நல்ல விஷயம்னு சொன்னிங்க…”
“ம்ம்… ஆபீஸ் விட்டு வர்ற வழியில நம்ம புரோக்கரைப் பார்த்தேன்… நமக்கு ஏத்த போல ஒரு சம்மந்தம் வந்திருக்காம்… இந்துவைப் பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லியும் அவங்களுக்கு ஓகே தானாம்… எங்களுக்கு ஜாதகத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை… நீங்க பொருத்தம் பார்க்கணும்னாலும் ஓகேன்னு சொன்னாங்களாம்…”
“கடவுளே… என் மனசுல பாலை வார்த்த… நல்ல சம்மந்தம்னா பார்த்துடலாங்க…” என்றார் அகிலா.
“ம்ம்… நீ என்னடா இந்து சொல்லற…” பெற்றோர் பேசுவது தனக்கு சம்மந்தமில்லாத போல அமைதியாய் நின்ற மகளிடம் கேட்டார் பரமசிவம்.
“நான் முன்னமே என் முடிவை சொல்லிட்டேன்பா… அதுக்குப் பிறகும் நீங்க எதுக்கு முயற்சி எடுக்கறீங்கன்னு புரியல…”
“என்னடி முடிவு… இனிமே கல்யாணமே வேண்டாம்னா அப்படியே விட்டுட முடியுமா… விடக் கூடிய வயசா உனக்கு… எங்களுக்கும் கடமைன்னு ஒண்ணு இருக்குல்ல… உன்னை இப்படியே விட்டுட்டு நாங்க நிம்மதியா போய் சேர முடியுமா… நீ இந்த சம்மந்தம் அமைஞ்சா ஒத்துகிட்டு தான் ஆகணும்…” கண்ணில் பொங்கிய நீருடன் மனதில் உள்ள குமுறலைக் கொட்டினார் அகிலாண்டேஸ்வரி.
“அம்மா…” சற்று கோபத்துடன் அழுத்தமாய் ஒலித்தது இந்துவின் குரல்.
“உங்க எல்லாரோடவும் இந்த வீட்ல இருக்கறதை சந்தோஷமா நினைக்கறேன்… என்னை மாத்தி யோசிக்க வச்சுடாதீங்க…” அவள் சொன்னதைக் கேட்ட அகிலா விக்கித்து நின்றார்.
கலங்கிய கண்களுடன் அமைதியாய் நின்ற பரமசிவம் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றினார்.
எப்போதும் எல்லாரிடமும் வம்பிழுத்து சிரிக்க வைக்கும்  சிந்து நடப்பதை சோகத்துடன் பார்த்து நின்றாள்.
“அக்கா…” என்று இந்துவிடம் செல்ல, “நான் கோவிலுக்குப் போயிட்டு வந்திடறேன்…” என்றவள் யார் பதிலையும் எதிர் நோக்காமல் கிளம்பினாள். மனதில் பழைய நினைவுகள் அலையடிக்க கனத்த மனதுடன் நான்கு வீதி தள்ளியிருந்த அம்மன் கோவிலை நோக்கிச் சென்றாள்.
“ச்சே… அப்பா, அம்மாகிட்ட இப்படிப் பேசிட்டோமே… ரொம்ப வருத்தப் படுவாங்களோ… ஏன் என்னைப் புரிஞ்சுக்காம மறுபடி மறுபடி கல்யாணம்னு பேச்செடுத்து என்னை டென்ஷன் பண்ணி அவங்களும் டென்ஷன் ஆகிக்கிறாங்க… என்னை இவங்களே புரிஞ்சுக்கலன்னா வேற யாரு புரிஞ்சுப்பா…” சுய கழிவிறக்கத்தில் கண்ணீர் சுரந்தது.
நேரம் ஏழு மணிக்கு மேலாகி விட்டதால் கோவிலில் கூட்டம் கம்மியாகவே இருந்தது. கருணையே வடிவாய் இதழ்கடையில் மெல்லிய குறுநகையுடன் எளிய அலங்காரத்தில் நின்றிருந்த அன்னையை மனதார வணங்கியவள் கண்கள் தன்னை மீறி சுரக்க அப்படியே கை கூப்பி நோக்கி நின்றாள்.
அவளிடம் எதையும் முறையிடத் தேவையில்லையே… நமது பிரச்சனை அவளுக்குத் தெரியாததா… எதை எப்போது தீர்த்து வைக்க வேண்டுமென்பதை அவள் தானே தீர்மானிக்கிறாள்… அதனால் அவளை வெறுமனே நோக்கி நின்றாள்.
“இந்து… என்னமா இந்நேரத்துல கோவிலுக்கு வந்திருக்கே… தனியாவா வந்த…” பரிச்சயமான கோவில் பூசாரியின் அன்பான விசாரிப்புக்கு தலையாட்டிவிட்டு அவர் கொடுத்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு பிரகாரத்தை சுற்றி வந்தாள். ஒரு ஓரமாய் தூணில் சாய்ந்து அமர்ந்தவள் மனது நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.
கண்கள் ஒரு சூன்யத்தில் நிலைக்க மனது பழைய நினைவுகளில் தத்தளித்தது.
“சிந்து, எங்க இப்படி ஓடுற… கொஞ்சம் மெதுவாதான் போயேன்…” மாடியில் நின்று கொண்டிருந்த இந்து கீழே ஓடிய சிந்துவிடம் சொல்லிக் கொண்டே திரும்பியவள் முன்னில் இரு கைகளையும் தடுப்பாக்கி புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் அந்த வாலிபன். இந்துவின் குடும்பம் உறவினர் கல்யாணத்துக்கு வந்திருந்தனர்.
“ச…சாரி… அங்க பார்த்திட்டு திரும்பினேன், கவனிக்கலை…”
“நோ பிராப்ளம்…” என்றவன் அவள் முகத்தையே குறுகுறுவென்று பார்க்க சட்டென்று குனிந்து கொண்டாள்.
“உங்க நேம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா…” அவன் கேட்கவும் சட்டென்று நிமிர்ந்தவள் விழிகள் படபடவென்று அடித்துக் கொள்ள, “எதுக்கு கேக்கறிங்க…” என்றாள்.
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… அதான் உங்க பேரும் அழகா இருக்குமான்னு தெரிஞ்சுக்கலாம்னு… நீங்க மாப்பிள்ள சைடா… பொண்ணு சைடா… நான் மாப்பிள்ளையோட பிரண்டு ஆகாஷ்… நீங்க…” அடுக்கடுக்காய் அவன் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போக, இந்து தயக்கத்துடன் பதில் சொல்லாமல் நின்றாள்.
“ஏய், இந்து, அங்கே என்னடி பண்ணற, வா, உமா உன்னைக் கேட்டுட்டே இருக்கா…” சொல்லிக் கொண்டே வந்தாள் அவளது சக வயது உறவுக்காரி ஹேமா. உமா கல்யாணப் பெண்ணின் பெயர் என்பதால் அவன் கேட்ட கேள்விக்கு இந்து பதில் சொல்லாமலே பதில் கிடைத்தது.
இந்து எதுவும் சொல்லாமல் வேகமாய் ஹேமாவிடம் சென்றுவிட அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ். “இந்து… ம்ம்… ஆளைப் போலவே பேரும் ரொம்ப அழகாதான் இருக்கு…” நினைத்தவன் மனதில் அவள் முகம் ஃபெவிக்விக் போடாமலே ஒட்டிக் கொண்டது.
அதற்குப் பிறகு அவள் செல்லுமிடமெல்லாம் அவனது பார்வை தொடர்வதை உணர்ந்தாள் இந்து. அடுத்தநாள் கல்யாணம், மணமக்கள் விருந்து என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் அவனும் இருந்தான்.
விருந்து முடிந்து கிளம்பும் போது, அவளிடம் வந்தவன், “இந்து, உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு… கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்… உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா…” என்றான் நேரடியாக.
அவனது பேச்சில் திகைத்தாலும், “நான் அதைப் பத்தி எதுவும் யோசிச்சதில்லை… எதுவா இருந்தாலும் எங்க வீட்ல பேசிக்கோங்க…” என்றாள் இந்து.
“வீட்ல ஓகே சொன்னா, உனக்கு ஓகே தானே…” ஆவலுடன் அவள் முகத்தைப் பார்க்க, “ம்ம்…” என்று குனிந்து கொண்டாள். அதைக் கண்டதும் அவன் மனம் நிறைய சீக்கிரமே வந்து பேசுவதாக சொல்லிச் சென்றான்.
“இந்து… இன்னும் வீட்டுக்கு கிளம்பலயா… கோவில் சாத்துற நேரமாச்சு…” அந்த பூசாரி பொருட்களை எடுத்து வச்சுக் கொண்டே கேட்க, சுதாரித்தவள் சுற்றிலும் நோக்க நேரம் எட்டரை ஆயிருந்ததால் நன்றாக இருட்டியிருந்தது.
“இதோ கிளம்பிட்டேங்க ஐயா…” சொல்லிக் கொண்டே எழுந்தவள், “அட ரொம்ப நேரம் இங்கே உக்கார்ந்துட்டேன் போலருக்கு… அப்பா, அம்மா கவலைப் படுவாங்களே…” என யோசித்துக் கொண்டே வீட்டுக்கு நடந்தாள்.
கடந்த நினைவுகள் எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாதென்று மனதை அடக்கி வைத்துக் கொண்டு வலிய ஒட்ட வைத்த உற்சாகத்துடன் வலம் வந்தவள் மனது இப்போது பின்னோக்கி சென்றதால் சோர்ந்திருந்தாள்.
மின்சாரம் இல்லாததால் தெருவிளக்கு அணைந்து வீதி எல்லாம் இருண்டு கிடந்தது. யோசனையுடனே நடந்து கொண்டிருந்தவள் பின்னில் யாரோ வருவது போலத் தோன்ற சட்டென்று திரும்பிப் பார்த்தாள். எவனோ ஒருவன் காதில் போனுடன் நின்றிருந்தான். அவனது பார்வையும் செயலும் மனதுக்கு அச்சத்தைக் கொடுக்க வேகமாய் நடக்கத் தொடங்கினாள்.
சாலையில் ஏனோ அந்த நேரத்துக்கே யாரையும் காணவில்லை. வீடுகளும் அந்த ஏரியாவில் சற்றுத் தள்ளித் தள்ளியே இருந்தது.
அவளது நடையின் வேகம் கூடியதும் பின்னில் வந்தவன் வேகமும் அதிகமாக இவள் ஓடத் தொடங்கும்போது ஏதோ கார் சத்தம் கேட்க சற்று ஆசுவாசத்துடன் திரும்பிப் பார்க்க பின்னில் வந்தவன் நின்று விட்டான்.
அவள் அருகே நின்ற காரிலிருந்து இறங்கியவன், “என்னாச்சு, ஓடின போலத் தோணுச்சு…” என்று கேட்க பயத்துடன் திரும்பியவள், சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தவனைக் காட்டி, “அ..அவன்… என் பின்னாடியே துரத்திட்டு வர்றான்…” என்றாள் பெருமூச்சு வாங்கிக் கொண்டு. அதைக் கேட்டதும் சட்டென்று அவனைப் பிடிக்கப் பாய்ந்தான் புதியவன். அதற்குள் அவன் சிட்டாய் பறந்துவிட திரும்பி வந்தான்.
“ஏன் இந்த நேரத்துல இப்படி யாருமில்லாத வழியில தனியா வர்றீங்க… நீங்க அந்த பிளே ஸ்கூல் நடத்தறவங்க தானே…” அவளை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டு அவன் கேட்க அப்போதுதான் அவன் முகத்தை சரியாய் கவனித்த இந்து, “இவன் நம்ம எதிர் வீட்டுக்கு குடிவந்த சிந்து சொன்ன முசுடன் ஆச்சே…” என யோசிப்புடனே தலையாட்டினாள்.
“வாங்க, வீட்டுல விட்டுடறேன்…” அவன் சொல்லவும், “இ..இல்ல பரவால்ல… உங்க உதவிக்கு ரொம்ப நன்றி சார்… நான் நடந்தே போயிக்கறேன்…” என்றாள் அவள்.
அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல் “சரி, நீங்க முன்னாடி போங்க… நான் மெதுவா கார்ல வரேன்…” என்றவன் காருக்கு செல்ல அவள் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தாள்.
“இந்தப் பொண்ணுங்களே இப்படி தான்… ஒரு அசட்டு தைரியத்துல எல்லாத்தையும் செய்ய வேண்டியது… அப்புறம் ஏதாச்சும் ஆபத்து வந்தா ஒட்டுமொத்த ஆண்களையும், சமூகத்தையும் குத்தம் சொல்ல வேண்டியது…” மனதுக்குள் ஒட்டு மொத்தமாய் பெண் குலத்தைப் பழித்துக் கொண்டே காரை மெல்ல ஓட்டிக் கொண்டிருந்தான் வெற்றிவேல்.
அதற்குள் மகளைத் தேடி பைக்கில் எதிரே வந்து கொண்டிருந்தார் பரமசிவம். இவளைக் கண்டதும் வண்டியை நிறுத்தியவர், “என்னமா இந்து, கோவிலுக்குப் போனா சீக்கிரம் வீட்டுக்கு வரதில்லையா… பயந்து தேடிட்டு வரேன்…” எனவும் அவளுக்கு தன் செயலை நினைத்து வருத்தமானது.
“சாரிப்பா… கொஞ்சம் லேட் ஆயிருச்சு…” என்றவள் காரை நிறுத்தி வெற்றி கவனிப்பதைக் கண்டு, அப்பாவிடம் நடந்ததை சொல்லி வெற்றி உதவியதையும் சொல்ல, “ரொம்ப நன்றி தம்பி… பொண்ணுங்க வெளியே போனாலே வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்க வேண்டி இருக்கு… சரி, பக்கத்து கோவில் தானே… வந்திருவான்னு நினைச்சு நானும் வெயிட் பண்ணிட்டு இருந்துட்டேன்…” என்றார் வருத்தத்துடன்.
அதற்குள் காரிலிருந்து இறங்கி இருந்தவன், “பரவால்ல சார்… இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம்… எங்கே போனாலும் இருட்டறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்துட சொல்லுங்க… எவ்ளோ தான் பெண்ணுரிமைன்னு பேசினாலும் ஒரு பொண்ணு பாதிக்கப்பட்டா அந்த குடும்பமே பாதிக்கப் படும்… நான் வெற்றிவேல்… உங்க எதிர் வீட்டுக்கு குடி வந்திருக்கேன்… வந்து அறிமுகப் படுத்திக்கணும்னு நினைப்பேன்… டைமே கிடைக்கலை…” என்று சொல்ல இவரும் தன்னைப் பற்றிக் கூறினார்.
“சரி சார், பத்திரமா கிளம்புங்க… வீட்ல குழந்தை வெயிட் பண்ணிட்டு இருப்பா… நான் வரேன்…” என்றவன் காரை எடுக்க அவர்கள் இருவரும் பைக்கில் தொடர்ந்தனர்.
மனதைக் கீறிவிடும்
நினைவுகளும்
அகற்ற முடியா முள் தான்…
உனை நோக்கி
சிறகடிக்கும்
என் நினைவுப் பறவை
உன் நினைவின்
நிழலிலேயே இளைப்பாறிக்
கொண்டிருக்கிறது…
நீ விட்டுச் சென்ற
வெற்றிடத்தில்…

Advertisement