Advertisement

அத்தியாயம் – 36
நிரஞ்சனா சொல்வதைத் திகைப்புடன் கேட்டு நின்ற சக்தியின் மனம் நெகிழ்ந்திருந்தது.
“எனக்காக வெற்றி எத்தனை மெனக்கெட்டிருக்கிறான்… தான் மட்டும் நன்றாய் வாழ்ந்தால் போதுமென்று நினைக்கும் உலகில் உடன் பிறந்தவனின் வாழ்க்கையும் சீராக்கப் போராடி இருக்கிறான்…” பதிலை எதிர்பார்த்துத் திரும்பிய நிரஞ்சனா கலங்கிய கண்களுடன் அவன் நிற்பதைக் கண்டு திகைத்தவள் அருகில் சென்றாள்.
“ச..சக்தி… என்ன இது கண் கலங்கிட்டு…”
“ப்ச்… ஒண்ணுமில்ல, வெற்றி மட்டும் உனக்கு சொல்லிப் புரிய வைக்கலன்னா நான் உன்னை லவ் பண்ணதே உனக்குத் தெரிஞ்சிருக்காதே… என்னைப் போல ஒரு நல்லவன், வல்லவனோட காதலை நீ இழந்திருப்பியே… அதை நினைச்சா தான் மனசு கொஞ்சம் கலங்குச்சு… வேறொண்ணும் இல்ல…” அவன் சமாளிப்புடன் புன்னகைக்க அதைக் கேட்டு அவளும் புன்னகைத்தாள்.
“ஓ… ஆமாமா… இன்னைக்கு BBC நியூஸ்ல கூட சொன்னாங்க… சக்திவேல், சக்திவேல்னு இந்த உலகத்துல ஒரே ஒரு நல்லவன், வல்லவன் இருக்கான்… அவன் காதலை மிஸ் பண்ணிடாதன்னு…”
“பார்றா… நியூஸ் சானல் வரைக்கும் என்னைப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்காங்க…” என்றவன் அவள் கண்களையே கண்ணெடுக்காமல் நோக்க தாங்கிக் கொள்ள முடியாமல் திணறியவள் நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
“நிரூ…” அவனது குரல் காதலுடன் ஒலிக்க அந்த அழைப்புக்காய் காத்திருந்த அவள் இதயம் சிலிர்த்தது.
“ம்ம்…” பாதி குரல் தொண்டையிலேயே புதைந்து கொண்டது.
“உனக்கு என்மேல வருத்தம் இல்லையே…”
“ப்ச்… என்மேல தான் எனக்கு வருத்தம்…”
“உன்மேல எதுக்கு நிரூ…” என்றான் புரியாமல்.
“நீங்க என் மனசுல காலடி எடுத்து வச்சப்பவே என் காதலை உங்ககிட்ட சொல்லி இருந்தா, ஒருவேளை நீங்க என் லவ்வை ஏத்துகிட்டு கல்யாணம் பண்ணி அழகா குடும்பம் நடத்தியிருக்கலாம்… பெரிய தியாகி போல உங்க லவ் ஜெயிக்கட்டும்னு விலகிப் போனது என் தப்பு… சரியான நேரத்துல சொல்லப்படாத காதலும் தவறுதான்… என்னோட தவறுதான் நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையிலும் பல துன்பங்களைத் தந்திட்டுப் போகக் காரணம்னு என் மேல தான் எனக்கு வருத்தமா இருக்கு…” அவள் சொல்லவும் பிரமித்தான் சக்திவேல். நடந்த தவறுக்கெல்லாம் அவளையே காரணமாக்கி தன்மீது பழி சொல்லாத அவள் காதலின் ஆழம் அவனை சிலிர்க்க செய்தது.
இனியும் இந்தக் காதலை அனுபவிக்காமல், திரும்ப நேசிக்காமல் ஒரு நிமிடத்தைக் கூட என்னால் வீணாக்க முடியாது என்று மனதில் வேகம் வந்தது.
“நிரூ… உனக்கு என்னை அவ்ளோ பிடிக்குமா…”
“ம்ம்… என்னைவிட உங்களைப் பிடிக்கும்… அதான் என் லவ் தோத்தாலும் உங்க லவ் ஜெயிக்கணும்னு நினைச்சேன்…” அதற்கு மேல் பொங்கி வந்த காதல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன் காற்றுக்கும் இடைவெளி தராமல் இறுக்கி அணைத்துக் கொண்டான். நேசித்தவனின் நெஞ்சம் மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் முகம் பதித்தவளின் முகமெங்கும் முத்தமிட்டு, “ஐ லவ் யூ நிரூ… இனியும் உன்னை விட்டு விலகியிருக்க என்னால முடியாது… உன் காதலுக்கு முன்னாடி நான் ஒண்ணுமே இல்லை…” முத்தங்களுக்கு நடுவே அவன் இதழ்கள் அரற்றிக் கொண்டு இருக்க, அதை விரும்பாதவள் அவன் இதழ்களை தன் இதழால் சிறை செய்ய அவனது வார்த்தைகளும், வலிகளும் அவளுக்குள்ளேயே கரைந்து போயின. அதற்குப் பிறகு அவனால் பழையது எதையும் யோசிக்க முடியாமல் மனம் முழுதும் நிரஞ்சனா மட்டுமே நிறைந்திருக்க ஆழ்ந்த முத்தத்தில் விலகத் தோன்றாமல் லயித்திருந்தவர்களை கீழிருந்து ஒலித்த இந்துவின் குரல் கலைத்தது.
அவனது வலிய உதடுகளுக்குள் சிக்கியிருந்த தன் மெல்லிய இதழ்களை கஷ்டப்பட்டு விலக்கிக் கொண்டவள் நாணத்துடன், “இந்து சாப்பிடக் கூப்பிடறாங்க…” என்றாள்.
“ம்ம்… என் பசி இன்னும் தீரலையே…” என்றான் சக்தி கிறக்கத்துடன்.
“அய்யடா, மொத்தமா இப்பவே சாப்பிடக் கூடாது… கல்யாணத்துக்குப் பிறகு விருந்தே வைக்கறேன்… அதுவரைக்கும் இதுவே தாராளம்…” என்றவள் நாணத்துடன் கீழே செல்ல நிறைந்த மனதுடன் நின்றான் சக்தி.
அடுத்த வாரமே இருவருக்கும் மருதமலையில் கல்யாணம் முடிவு செய்திருந்தனர். குடும்பத்தினர் முன்னிலையில் அவள் கழுத்தில் தாலி கட்டி தன்னவளாக்கிக் கொண்டான் சக்தி. தம்பியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில் வெற்றியின் மனம் நிறைந்தது.
தனைக் கண்டு கண் கலங்குபவனை சக்தியின் கண்கள் நெகிழ்ச்சியுடன் நோக்கின. பெரியோர்களின் ஆசியில் எல்லாம் நல்லபடியாய் முடிய அருகிலிருந்த ஹோட்டலில் டிபனை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். இந்துவும், வெற்றியும் மூத்தவர்களாய் எல்லாரையும் கவனித்துக் கொண்டனர். ஒரு பெண்ணால் கலைந்து, தொலைந்து போன அந்தக் குடும்பம் மற்றொரு பெண்ணின் வரவால் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. மணமக்களுக்கு பால், பழம் கொடுக்கும் சடங்கு முடிந்து அவர்களை ஓய்வெடுக்க அனுப்ப நிரஞ்சனா மறுத்துவிட்டு இந்துவுடன் உதவ சென்றாள். ஆகாஷின் பெற்றோரும், இந்துவின் பெற்றோரும் பேரக் குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் சிந்து பொறுப்புடன் அக்காவுக்கு உதவியாய் சமையலறையில் இருந்தாள். பெரிசாமி தோட்டத்திலிருந்து வாழை இலையைக் கொண்டு வர எல்லாருக்கும் மதியவிருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
சிந்து அனைவருக்கும் கூல் டிரிங்ஸ் கொண்டு வந்து கொடுக்க அவளைக் கண்ட ஆகாஷின் அன்னை, “சம்மந்தி… சின்னவ நல்லா வளர்ந்துட்டாளே… என்ன படிக்கிறா…” என்றார் சிரிப்புடன்.
“சித்தி காலேஜ் படிக்குறா, இல்ல பாட்டி…” என்றது பவிக்குட்டி.
“ஆமாடி செல்லம், B Tech செகண்ட் இயர் படிக்கிறா சம்மந்தி…” என்றார் அகிலா புன்னகையுடன்.
“ஓ… என்ன விரும்பறாளோ படிக்க வைங்க… அவசரப்பட்டு கல்யாணத்துக்கு யோசிக்காதிங்க…” என்றார்.
“இல்ல சம்மந்தி, படிக்கிற பிள்ளையைக் கல்யாணம் பண்ணி வைக்கிறதெல்லாம் அந்தக் காலம்… இனி வர்ற காலத்துல பொண்ணுங்க படிக்கிறது தான் அவங்களுக்குப் பாதுகாப்பு… அவ விருப்பப்படியே படிக்கட்டும்னு தான் நாங்களும் நினைக்கறோம்…” என்ற தந்தையைப் பெருமையுடன் நோக்கிய சிந்து புன்னகையுடன் அடுக்களைக்கு சென்றாள்.
“என்னடி, சிரிச்சுட்டே வர்றே…” இந்து கேட்க, “இப்பெல்லாம் ஓல்டு ஜெனரேசன் கூட ரொம்ப மாடர்னா யோசிக்குறாங்க… அதான் சிரிச்சேன்…” என்றாள்.
“நம்ம பெரியவங்க வயசுல வேணும்னா ஓல்டா இருக்கலாம்… ஆனா குணத்துலயும், யோசிக்கறதுலயும் கோல்டாக்கும்…” என்றாள் இந்து பெருமையுடன்.
“அம்மா, தம்பிங்க அழறாங்க… பாட்டி உன்னைப் பால் கொடுக்க சொல்லுறாங்க…” சொல்லிக் கொண்டே பவித்ரா இந்துவிடம் ஓடி வந்தாள்.
“அக்கா, இந்தப் பொடியனுங்க ரெண்டும் ஒரே நேரத்துல பசிக்கு அழ வேண்டியது… தூங்க வேண்டியது… சிரிக்க வேண்டியது… இவங்களை சமாளிக்க கஷ்டமா இல்லியா…” சிந்து அக்காவிடம் கேட்க அவள் புன்னகைத்தாள்.
“கொஞ்சம் சிரமமா இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் பொக்கை வாயில ஒண்ணா எனைப் பார்த்து சிரிக்கும்போது இந்த உலகத்தையே ஜெயிச்ச போல ஒரு உணர்வு வரும்… அதெல்லாம் உனக்கு இப்ப புரியாது… உனக்கும் ஒரு குழந்தை வரும்போது புரியும்…” என்றவள் நிரஞ்சனா ஆர்வத்துடன் அவள் சொல்வதை நோக்குவதைக் கண்டு,
“நிரு, சீக்கிரமே நீயும் என்ன மாதிரி ஒரே பிரசவத்துல ரெண்டு குழந்தையைப் பெத்துக் குடு… நம்ம வீடே கலகலன்னு குழந்தைங்க நிறைஞ்சிருக்கட்டும்…” என்று சொல்லி செல்ல நாணத்தில் அவள் முகம் சிவந்தது. அக்காவின் பேச்சு சிந்துவுக்கு கணேஷை நினைவுபடுத்த அழகாய் மனதில் அவளை நோக்கிப் புன்னகைத்தான்.
அவள் படிக்கும் அதே காலேஜில் அதே குரூப்பில் தான் கணேஷும் படிக்கிறான். எட்ட நின்று அவளை ஆர்வத்துடன் பார்த்தாலும் அருகே வந்து அவளைத் தொந்தரவு செய்யாத கண்ணியம் அவளுக்கு மிகப் பிடித்திருந்தது.
அன்று அவள் சொன்ன வாக்கையே வேத வாக்காய் எடுத்துக் கொண்டு பிளஸ் டூவில் அவளை விட இரண்டு மதிப்பெண்கள் அதிகம் வாங்கிக் காட்டியவனைக் கண்டு அவளுக்கு திகைக்கவே தோன்றியது. அன்று பேசியதன் பிறகு இது வரை அவன் காதலைப் பற்றி அவளிடம் பேசாதது மரியாதையைக் கொடுத்தது. படித்து முடித்து நல்ல ஒரு வேலையைத் தேடிக் கொள்வது என்பது அவளது  இலட்சியம் என்பதைவிட அவனது அவசியமாய் இருந்தது. அவளது லட்சியத்துக்கு குறுக்கே நிற்காமல் அவனும் அவள் பின்னிலேயே தொடர்ந்து வருவது அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது. அவனது விலகலும், புரிதலும் அவன்மேல் ஒரு அபிமானத்தைக் கொடுக்க அவள் மனதிலும் அவன் மெல்லப் பதிந்து கொண்டிருந்தான்.
இருவரும் படிப்பைத் தவிரே வேறு எதுவும் பேசிக் கொள்ளாவிட்டாலும் அவனைக் காண்கையில் இதழோரம் அவள் உதிர்க்கும் சிறு புன்னகையே கணேஷுக்குப்  போதுமாயிருந்தது. அவளது லட்சியத்துக்காய் அவளும், அவளே லட்சியமாய் அவனும் காத்திருந்தனர். பேசப்படாமலே இருவருக்குள்ளும் காதல் உணரப்பட்டுக் கொண்டிருந்தது.
தேங்காய் துருவாமல் அவள் யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்ட நிரஞ்சனா, “சிந்து… யோசனை பலமாருக்கிறதைப் பார்த்தா அடுத்ததும் இந்த வீட்ல லவ் மேரேஜ் தான் போலருக்கு…” என்று சிரிக்க, “போங்கக்கா…” என்று சிரிப்புடன் சமாளித்தவள் வேலையை கவனிக்கத் தொடங்கினாள்.
  
மதிய விருந்தில் அனைவரின் வயிற்றோடு மனமும் நிறைய மாலை ஆகாஷின் பெற்றோர் வீட்டுக்குக் கிளம்பினர். இரவு உணவு முடிந்து இந்துவின் வீட்டாரும் கிளம்ப அவர்கள் குடும்பம் மட்டும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பார்வதி அம்மா மதியமே கிளம்பியிருக்க பெரியசாமி மனநிறைவுடன் தோட்டத்தில் இருந்தார். இப்போது அவர்தான் இந்துவின் மேற்பார்வையில் தோட்டத்தையும் கவனித்துக் கொள்கிறார்.
ஆகாஷும், ஆதர்ஷும் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க சோபாவில் அமர்ந்திருந்த சக்தியின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் பவித்ரா. இந்த சில நாட்களில் அவனிடம் இயல்பாய் ஒட்டிக் கொண்டிருந்தாள் குழந்தை. அவளது தலையைக் கோதி விட்டபடி மகளின் முகத்தைக் கனிவோடு நோக்கிக் கொண்டிருந்தான் சக்தி.
“சக்தி, பவி தூங்கிட்டா… கட்டில்ல படுக்க வைடா…”
“இல்ல, இப்படியே இருக்கட்டுமே…” என்றான் அவன்.
“ம்ம்… ரொம்ப நாளைக்குப் பிறகு இன்னைக்கு தான் மனசு ரொம்ப நிறைவா இருக்கு…” என்றான் வெற்றி. அதன் காரணம் தெரியுமாதலால் சக்தி அமைதியாய் இருந்தான்.
“சுனாமில சிக்கினபோல சின்னாபின்னமாகிப் போன குடும்பம் இப்பதான் குடும்பமா இருக்கு… இனி எந்தப் பிரச்னையும் வராம நீங்க சந்தோஷமா இருக்கணும்…” என்றான். அப்போது இந்து, நிரஞ்சனா வேலை முடிந்து அங்கே வந்தனர்.
“என்ன சீனியர் ட்வின்ஸ் ரெண்டு பேரும் ஏதோ டிஸ்கசன்ல இருக்க போலருக்கு…” என்றாள் இந்து. நிரஞ்சனாவைக் கண்டதும் சக்தியின் முகத்தில் தெரிந்த பாவமாற்றமும் ஆர்வமும் கண்ட வெற்றிக்கு சந்தோஷமாய் இருந்தது.
“அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கறோம்…”
“ஒரு யோசனையும் வேண்டாம்… இவங்க நம்மளோட இங்கயே தான் இருக்கப் போறாங்க… நிருவோட அப்பா கம்பெனியை இனி சக்தி பார்த்துகிட்டும்… வீட்டை வழக்கம் போல வாடகைக்கு கொடுத்துடலாம்…” என்றாள் இந்து. “ஆமாம், பவிக்குட்டியை உங்களாலயும் விட்டுட்டு இருக்க முடியாது… எங்களுக்கும் முடியாது… அதனால எங்கே இருந்தாலும் ஒண்ணாவே இருக்கலாம்… நம்ம குழந்தைங்க ஒண்ணா வளரணும்…” என்றாள் நிரஞ்சனா. அவர்களை வியப்புடன் சக்தியும், வெற்றியும் நோக்க, “என்னங்க பார்க்கறிங்க, நாங்க இவ்ளோ நேரம் அதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தோம்…” என்றாள் இந்து.
“ம்ம்… பெரிய விஷயம் தான்… நான் அதைப் பத்தி கேக்கல, அடுத்து இவங்க சாந்தி முகூர்த்ததுக்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் பண்ண வேண்டாமா… அதைதான் சொன்னேன்…” வெற்றி சொல்லவும் நிரஞ்சனா நாணத்துடன் குனிந்து கொள்ள சக்தி ஆர்வமாய் மனைவியைப் பார்த்தான்.
“ஆமா, சீக்கிரமே அடுத்த ட்வின்ஸ்க்கு ஏற்பாடு பண்ணுங்க…” இந்து சொல்ல, “முதல்ல நீங்க ஏற்பாடு பண்ணினாத்தானே… மத்ததெல்லாம் நடக்கும்…” என்றான் சக்தி.
“ஹாஹா, இதுக்கு மேல இவங்களைக் காக்க வச்சா சரியா வராது…” என்ற வெற்றி, “நீங்க ரெண்டு பேரும் மாடில கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க… உங்க அறையை ரெடி பண்ணிடறோம்…” என்று அவர்களை அனுப்பினான்.
இருண்ட வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பளிச்சிட்ட நட்சத்திரங்களை நோக்கி நின்றாள் நிரஞ்சனா. சுகமான காற்று இருவரையும் தழுவிக் கொண்டிருக்க மனதுக்குப் பிடித்தவனின் அருகாமை அந்த சூழ்நிலையை சொர்கமாக்கிக் கொண்டிருந்தது. ரம்மியமான சூழ்நிலையை கலைக்க விரும்பாமல் மௌனமாய் அவளை ரசித்துக் கொண்டிருந்தான் சக்திவேல்.
“இப்படி ஒரு சந்தோஷமான சூழ்நிலை நம்ம வாழ்க்கைல வரும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்த்ததில்லை…” நிரஞ்சனாவின் குரல் உருக்கமாய் கேட்க, “ம்ம்… நானும் தான் நிரு… இனிமே வாழ்க்கையே இல்லை… எல்லாம் முடிஞ்சுருச்சுன்னு தான் நினைச்சேன்… உன்னைப் பார்க்கற வரைக்கும்… எல்லாமே சாத்தியமானது வெற்றியால தான்…” என்றவன் குரலும் நெகிழ்ந்திருந்தது.
“ம்ம்… நடந்த எதுவும் கனவா இருந்திடக் கூடாதேன்னு இப்பவும் மனசுக்குள்ள ஒரு பக்கம் அடிச்சுகிட்டே கிடக்குது…”
தடுப்புச் சுவரின் மீது கை வைத்து நின்றபடி வானத்தைப் பார்த்துக் கொண்டு நிரஞ்சனா சொல்ல காற்றில் படபடத்த சேலை அவள் இடுப்பு வளைவை மெல்லிய வெளிச்சத்திலும் பளிச்சிடச் செய்தது. சட்டென்று அவள் இடுப்பில் சக்தி கிள்ள அவள் துள்ளினாள்.
“ஆ… என்ன சக்தி…” என்றவளை இழுத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டவன், “எதுவும் கனவில்லைன்னு இப்ப புரியுதா…” என்றதும் அவள் புன்னகையுடன் சாய்ந்து கொண்டாள்.
அவள் காது மடலில் முத்தமிட்டவன், “நிரூ… நீ ரொம்ப அழகாருக்க…” உதடுகள் உரச உச்சரிக்கவும் தேகத்துள் நடந்த இரசாயன மாற்றத்தில் தவித்துப் போனாள். எத்தனையோ காலம் முன்பு அவனுடன் இப்படி ஒரு தனிமைக்காய் மனதுள் ஆசைப்பட்டு ஏங்கி நின்றவள், மனம் அது நிஜமானதால் சந்தோஷமாய் கண்ணில் நீர் துளிர்த்தது. “நிரூ…” என்றவனின் இதழ்கள் அவள் கண்ணில் மென்மையாய் முத்தமிட உப்புக் கரித்தது. பதறியவன் அவளை விடுவித்து, “என்னம்மா, எதுக்கு கண் கலங்கற…” என்றான்.
“ப்ச்…” என்றவள் சந்தோஷமும் கண்ணீருமாய் அவன் நெஞ்சிலேயே தஞ்சம் கொள்ள அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தான்.
“ம்க்கும்…” பின்னில் வெற்றி கனைக்கும் சத்தம் கேட்டு அவள் சட்டென்று விலக, “ரெண்டு பேரும் வாங்க…” என்றதும் நிரஞ்சனா கூச்சத்துடன் வேகமாய் கீழே செல்ல தம்பியை சந்தோஷமாய் பார்த்த வெற்றி அவன் தோளில் கையிட்டு, “வா…” என்று அழைத்துச் சென்றான்.
இந்து நிரஞ்சனாவை குளிக்க சொல்லி, புதிய சேலையை உடுக்க சொல்ல, அதற்குள் சக்தியும் வேட்டி சட்டையில் பளிச்சென்று வந்தான். இருவரையும் அன்னையின் புகைப்படம் முன்பு அழைத்து வந்த வெற்றி, நமஸ்கரிக்க சொல்ல கண்ணில் நீருடன் நமஸ்கரித்தான் சக்தி.
“அம்மாவோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும்… ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்க்கையைத் தொடங்குங்க…” என்றான் பெரியவனாய் வெற்றி.
“டேய் அண்ணா…” என்று அவனைக் கட்டிக் கொண்ட சக்தியின் கண்கள் கலங்க, வெற்றியின் கண்களும் கலங்கின.
“அடடா, சந்தோஷமா கிளம்ப வேண்டிய நேரத்துல சென்டிமென்ட் சீனைப் போட்டு அழுதுட்டு இருக்கீங்களே பிரதர்ஸ்… ம்ம், டைம் ஆச்சு ரூமுக்குப் போங்க…” என்று இந்து அதட்ட, “டேய் தம்பி, பைனான்ஸ் மினிஸ்டர் ஆர்டர் போட்டாச்சு… ஓடிடுடா… அப்புறம், என் கல்யாணத்துக்கு என் மாமனார் சொன்ன ஒரு சம்சார மந்திரத்தை உனக்கும் சொல்லித் தரேன்… அதுபோல நடந்தா உன் வாழ்க்கையும் ஓஹோன்னு இருக்கும்…” என்றவன், “பொண்டாட்டி எது சொன்னாலும், ஒண்ணு சரி மா… ரெண்டாவது சாரிமா… இதுல ஒரு பதிலை மட்டும் தான் நீ சொல்லணும்… சரியா…” வெற்றி சொல்ல இந்து கணவனை முறைக்க சக்தி சிரிப்புடன் அறைக்கு சென்றான்.
சிறிது நேரத்தில் அவனது அழகான நிகழ், எதிர்காலம் பால் சொம்புடன் உள்ளே வர இறந்தகாலம் மறந்து சுகமாய் புதிய வாழ்க்கைக்கு அச்சாரமிட்டுக் கொண்டிருந்தான். இதழில் தொடங்கி இதழில் முடிந்து இரவு முழுதும் தொடர்ந்தாலும் அவர்களின் காதல் லீலைகள் முடியவே இல்லை…
லயம் தப்பிய தாளமும், சுருதி விலகிய லயமும் நேரான திசையில் பயணித்துக் தொடங்க லயம் தேடும் தாளங்கள் இனிமையாய் காதலை இசைத்துக் கொண்டிருந்தன.
கூடிய சீக்கிரமே அவர்களும் ஒரு ராம், லக்ஷ்மணனை உருவாக்கும் பணியில் பிஸியாய் இருக்க இனிமையாய் வாழ்த்தி விடை பெறுவோம்…
காதலெனும்
விளைநிலத்தில்
நேசப் பயிரை
விதைக்கிறேன்…
கோபம் சந்தேகம்
என்னும் அற்பப்
பதர்களை நீக்கி
உண்மையான நேசத்தை
மட்டும் விளைச்சலாகத்
தந்துவிடு…
பாரதிக்கு கண்ணம்மாவாய்
கவிதைக்குத் தூரிகையாய்
தாளத்திற்கு லயமாய்
என்றும் இணைந்திருப்போம்…
—————————————-சுபம்———————————————

Advertisement