Advertisement

“அப்புறம் என்னாச்சு சித்தி…” பவித்ரா கேட்க அவளை அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றான் சக்தி. அதற்குள் கீழிருந்து இந்து “பவி… சாப்பிட வா…” என்று குரல் கொடுத்தாள்.
திகைப்பு மெல்ல புன்னகையாய் மாற, “எல்லாரும் பிளான் பண்ணி எங்கிட்ட சொல்லாம இருந்தீங்களா…” என்பது போல் அவனது பார்வை இருக்க, “பவிக்குட்டி, அம்மா கூப்பிடறாங்க போயி சாப்பிடு டா…” என்றான் சக்தி.
“ம்ம்… சரி, சாப்பிட்டு வந்ததும் மீதி கதை சொல்லணும்… நீயும் வா சித்தி, சாப்பிடலாம்…” என்றாள்.
“அவங்க, அம்மாவோட சாப்பிடுவாங்க… நீ முதல்ல சாப்பிடு செல்லம்…” சக்தி சொல்ல, “சரி…” என்றவள் சென்றாள்.
சக்திக்கு தொண்டையிலிருந்து வார்த்தை வருவேனா என்று சண்டித்தனம் செய்ய சரி செய்தவன், “எல்லாம் பிளானிங்கா…” என்று அவளை நோக்கிக் கேட்க அவள் வெட்கத்துடன் சிரித்தாள்.
“உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆ இருக்கட்டும்னு தான்…” அவள் வார்த்தையை முடிக்காமல் இழுக்க அவளது சிவந்த முகமும், உதடும் அருகில் வாவென்று அழைக்க, “வேண்டாம் சக்தி, இத்தனை நாள் பொறுமையை அவசரப்பட்டு செயல்ல காட்டிடாத…” என்று தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டவன் பார்வையை மாற்றி கட்டிலில் கிடந்த குழந்தைகள் அருகே சென்றான்.
இருவரும் ஒரே அச்சில் வார்த்தது போல் சின்ன வயது வெற்றி, சக்தியை நினைவூட்ட ஆவலுடன் நோக்கினான்.
ஒருவன் கையை மற்றவன் பற்றிக் கொண்டு சுகமான உறக்கத்தில் இருந்த குழந்தைகள் இதழில் ஒரு மென்னகை நிறைந்திருக்க சந்தோஷமாய் உணர்ந்தான்.
“எந்தக் கவலையும் இல்லாம, எதுமே தெரியாம எப்படி தூங்குறாங்க… அச்சோ, கியூட் குட்டிங்களா…” என மனதுள் நினைத்துக் கொண்டே ஆதர்ஷின் கன்னத்தில் இதழ் பதிக்க ஆகாஷ் சிணுங்கினான். அவனது கன்னத்திலும் முத்தம் வைக்க, இருவரும் சின்னக் கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தனர். வெற்றியைப் போலத் தோன்றியதோ என்னவோ, அழாமல் சக்தியின் முகம் நோக்கி சிரித்தனர்.
“அச்சோ, என் செல்லங்களா… நிரு, என்னைப் பார்த்து எப்படி சிரிக்கிறாங்க பாரு…” அருகே நின்ற நிரஞ்சனாவிடம் சந்தோஷத்துடன் சொன்னான் சக்தி. புன்னகைத்தவள், “அப்படியே உங்க ரெண்டு பேர் ஜாடைல இருக்காங்க…” என்று ஆளுக்கொரு குழந்தையைத் தூக்கிக் கொண்டனர்.
குழந்தை சிணுங்கும் சத்தம் கேட்டு வெற்றியும் இந்துவும் அங்கே வர இருவரும் ஆளுக்கொருவரை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருப்பதை கண்டு புன்னகைத்தனர்.
“என்ன, ரெண்டு பேரும் இப்பவே டிரையல் பாக்குறிங்களா…” வெற்றி சக்தியிடம் கேட்க, அவனை முறைத்தவன், “நீ பேசாத… வண்டில எப்படிலாம் புலம்பிட்டு வந்தேன்… எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலை… நிரு இங்க தான் இருக்கான்னு ஏன் சொல்லலை…” என்றான்.
“எல்லாம் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க தான்… சரி குழந்தைய எங்க கிட்ட கொடுத்துட்டு நீங்க என்ன பேசணுமோ பேசுங்க…” என்றான் வெற்றி.
“ஆனா, சரியா அரை மணி நேரத்துல நிரஞ்சனா கீழ வந்திடனும்… எனக்குப் பசிக்குது… சொல்லிட்டேன்…” புன்னகையுடன் இந்து சொல்ல ஒருவரையொருவர் சந்தோஷமாய் நோக்கிக் கொண்டனர்.
அவர்கள் கதவை சாத்திவிட்டு குழந்தையுடன் கீழே செல்ல நிரஞ்சனா ஜன்னலருகே வெளியே பார்த்துக் கொண்டு அமைதியாய் நின்றாள். கட்டிலில் சக்தி அமர்ந்திருக்க யார் முதலில் தொடங்குவது, என்ன கேட்பது என்று யோசித்துக் கொண்டிருக்க நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அவள் அவன் பேசட்டும் என்று காத்திருக்க அவனே தொடங்கினான்.
“நி…நிரு… எனக்கு ஒண்ணும் புரியல… நீ எப்படி இங்கே…”
“ம்ம்… நான் ரிலீஸ் ஆகறதுக்கு ரெண்டு வாரம் முன்னாடி வெற்றி எனைப் பார்க்க வந்திருந்தார்…” என்றவள் அன்று நடந்ததை சொல்லத் தொடங்கினாள்.
“ஏய் நிரஞ்சனா, உன்னைப் பார்க்க வெற்றின்னு யாரோ வந்திருக்காங்க…” சிறை சிப்பந்தி ஒருத்தி வந்து சொல்லவும், “வெற்றி எதுக்கு வந்திருக்கார்…” என அவள் யோசிக்க, “வீட்ல இருந்து ஒரு பொம்பள வந்து எட்டிப் பார்க்கிறதில்ல… விதவிதமா ஆம்பளைங்க மட்டும் பார்க்க வராங்க…” அவளுக்கு கேட்கவேண்டும் என்றே சத்தமாய் முனங்கிக் கொண்டு நகர்ந்த பெண்மணியை முக சுளிப்புடன் பார்த்துக் கொண்டே வெற்றியைக் காண சென்றாள் நிரஞ்சனா. கம்பித் தடுப்புக்கு இந்தப் பக்கம் சிறைக்கைதிகள் நின்றிருக்க அந்தப் பக்கம் பார்வையாளர்கள் நின்று பேசிக் கொண்டிருக்க சலசலவென்று பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு ஓரமாய் வந்து நின்றவளைக் கண்டதும் வெற்றி வந்தான்.
அவனைக் கேள்வியாய் ஏறிட்டவளை கனிவுடன் நோக்கியவன், “நிரஞ்சனா, நல்லாருக்கியான்னு உன்னைக் கேக்க முடியல… உனைப் பார்த்தாலே நல்லா இல்லன்னு தெரியுது… இந்த மாதிரி ஒரு சூழல்ல உன்னைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு…” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
“ம்ம்… விதி எழுதினதை மாத்தவா முடியும்… விடுங்க வெற்றி…” எனவும், “உண்மைதான்… நமக்குன்னு எழுதின விதியை மாத்த முயற்சி பண்ணா மனுஷங்க தோத்து தான் போவாங்க… அதுக்கு உதாரணம் நீயும் சக்தியும்…” என்றான்.
“எனக்குப் புரியலை… நீங்க என்ன சொல்ல வரீங்க… எதுக்கு என்னைப் பார்க்க வந்தீங்க…”
“சொல்லறேன் மா, அதுக்கு முன்னாடி உன் மனசுல உள்ளதை அன்னைக்கு போலவே உண்மையா எங்கிட்ட சொல்லணும்…” என்றான் வெற்றி.
“ம்ம்… கேளுங்க…”
“உன் மனசுல இப்ப உண்மையாவே சக்தி இல்லையா…” அவன் கேட்கவும் ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவள், “என் மனசுல சக்தி இருந்தார்… எப்ப அவர் எனக்கு இல்லேன்னு ஆச்சோ அப்பவே மனசை மாத்திகிட்டு வேற ஒரு வாழ்க்கைக்கு தயாராயிட்டேன்… ஆனா அந்த வாழ்க்கை பொய்த்துப் போயி மறுபடி இங்கே சக்தியைப் பார்க்கற வரை என் மனசுல மறுபடி அவனைப் பத்தின எண்ணமே வரல… எப்ப இங்கே அவனைப் பார்த்தேனோ, மனசுல புதைஞ்சு கிடந்த காதல் மறுபடி உருவெடுத்திருச்சு…”
அதைக் கேட்டதும் நிம்மதியானவன், “அப்புறம் ஏன்மா, சக்தி உன்கிட்ட கல்யாணம் பண்ணிக்க கேட்டபோது மறுபடி ஒரு கல்யாணத்துக்கு நீ தயாரா இல்லன்னு சொன்ன…”
“மறுபடியும் எனக்குள்ள துளிர்த்த காதல் இல்லாமப் போயிடக் கூடாதுன்னு தான்…” அவள் சொல்ல குழம்பினான்.
“என் மனசுல உள்ள காதல் அவர் மனசுல இல்லையே…” என்றவளின் குரலில் வேதனை தெரிய, “நான் காதலிச்ச மனுஷன் என் நிலையைப் பார்த்து அனுதாபப்பட்டு என்னைக் கல்யாணம் பண்ணறதை நான் விரும்பல… என் மேல உண்மையான அன்போட கல்யாணம் பண்ணிக்க கேட்டிருந்தா சந்தோஷமா சம்மதிச்சிருப்பேன்… ஆனா, என்னைக் கல்யாணம் பண்ணறது எங்க ரெண்டு பேர் வாழ்க்கையை சரி பண்ண ஒரு வழியா தான் சக்தி பார்க்கிறார்… என்  காதல் மறுபடி தோத்துப் போகக் கூடாது… அது எனக்குள்ள வாழ்ந்திட்டுப் போகட்டும்னு நினைச்சு தான் நான் விருப்பம் இல்லன்னு சொன்னேன்…”
கண்ணீருடன் சொல்ல வெற்றிக்கு அவள் மனநிலை புரிந்தது.
“இல்லமா, நீ நினைக்கறது தப்பு… அவன் உன்னை ரொம்ப நேசிக்கிறான்… நீ கல்யாணத்துக்கு விருப்பமில்லன்னு சொன்ன பின்னாடியும் எப்பவாச்சும் உன் மனசு மாறும்னு காத்துட்டு இருக்கான்… அவன் காதல்னு நினைச்சது தான் கானலாப் போயிருச்சு… உன் உண்மையான காதலையாவது வாழ வைக்கணும்னு ஆசைப்படறான்…” வெற்றி சொல்லவும் கேட்டுக் கொண்டிருந்தவள் முகத்தில் பரவசம் தெரிந்தது.
“வெ…வெற்றி, உண்மையாவா சொல்லறீங்க… சக்தி மனசுல நான் நிஜமாலும் இருக்கேனா…” கேட்கும்போதே அவளது கண்களில் கரை உடைந்திருக்க கண்ணீர் உருண்டு கன்னத்தை நனைத்தது.
“உண்மைம்மா, உன்கிட்ட மனசுல உள்ளதை எல்லாம் சொல்ல முயற்சி செய்தப்ப நீ பார்க்க மறுத்திட்டேன்னு ரொம்ப நொந்து போயிட்டான்…” என்றான் வெற்றி.
அவளது கண்ணீர் சந்தோஷமாய் வழிந்து கொண்டிருக்க துடைக்கக் கூடத் தோணாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நீங்க ரெண்டு பேரும் ஒண்ணாகணும்னு தான் விதி… அதை மாத்த முயற்சி பண்ணதால தான் இப்படில்லாம் ஆயிடுச்சு… இப்பவாச்சும் அதைத் திருத்த முயற்சி செய்யணும்… நீங்க இணைஞ்சா வாழ்க்கை ரொம்ப அழகாருக்கும் மா… தயவு செய்து மறுக்காம அவனை ஏத்துக்க…” வெற்றி நெகிழ்ந்த குரலில் அவளிடம் கேட்க அவள் மனது சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.
“என் சக்தி மனசுல நான் இருக்கேனா… என்னோட வாழணும்னு ஆசைப்படறானா…” என மனது மீண்டும் மீண்டும் அதையே கேட்டுக் கொண்டிருக்க அமைதியாய் நின்று கொண்டிருந்தாள்.
“ஹூம்… போதும் போதும், டைம் ஆச்சு… கிளம்புங்க…” சிறை சிப்பந்தியின் அதட்டல் குரல் கேட்க வெற்றி திரும்பினான்.
“நிரஞ்சனா, நீ ரிலீஸ் ஆகுற அன்னைக்கு நான் வாசல்ல காத்திருப்பேன்… சக்தியை மணக்க உனக்கு சம்மதம்னா நீ எங்களோட வரணும்… அதுவரைக்கும் நல்லா யோசி… ஒரு சந்தோஷமான முடிவை உன்கிட்ட எதிர்பார்க்கிறேன்… நான் வரேன்…” என்றவன் கிளம்பிவிட அவள் அப்படியே நின்றாள்.
காதல் என்றும்
அழிவதில்லை…
அழிந்தால் அதன் பேர்
காதலில்லை…
ஊனும் உயிரும்
மக்கிப் போகும் வரை
மனதுக்குள் தேக்கி வைத்த
மழைச்சாரலாய்
மனத்தைக் குளிர்வித்துக்
கொண்டே இருக்கும்…
முதல் காதல்…

Advertisement