Advertisement

அத்தியாயம் – 35
இரண்டு வருடங்களுக்குப் பிறகு.
சென்ட்ரல் ஜெயில் என்று பெரிய போர்டுக்கு கீழே இருந்த நீலநிற சின்ன கேட்டைத் திறந்து வெளியே வந்த சக்தி நிமிர்ந்து பார்க்க காலை வெயில் பளபளத்து கண் கூசியது. ஆழமாய் ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டவன் வாசலில் நின்ற சிறைக்காவலர்களை நோக்கிப் புன்னகைத்தான்.
“ஓகே சார், போயிட்டு வரேன்…” என்றவனை நோக்கிப் புன்னகைத்தவர், “சக்தி, இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் மறுபடி வரேன்னு வார்த்தைல கூட சொல்லக் கூடாது… இனியாச்சும் ஒரு வாழ்க்கையை அமைச்சுட்டு நல்லாரு…” என்றவரிடம் தலையசைத்து விடை பெற்றான்.
பேசாமல் மெயின் கேட்டுக்கு நடந்தவன் மனம் ஒருவித வெறுமையாய் இருந்தது. 
கேட்டுக்கு வெளியே வெற்றி காருடன் காத்திருந்தான். “சக்தி…” அழைத்துக் கொண்டே வேகமாய் வந்து அணைத்துக் கொண்டவன் கை பிடித்து காருக்கு அழைத்துச் சென்றான்.
“என்னடா, போன மாசம் பார்த்ததுக்கு கொஞ்சம் இளைச்ச போல இருக்கே… உடம்புக்கு எதுவும் முடியலையா…”
“ப்ச்… அதெல்லாம் ஒண்ணுமில்ல… வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க… அண்ணி, குட்டீஸ் எல்லாம் சுகமா இருக்காங்களா…” என்றான்.
“ம்ம்… உங்க அண்ணி இன்னைக்கு நீ வீட்டுக்கு வர்றேன்னு தடபுடலா விருந்தெல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்கா…”
“ம்ம்… ஜெயிலுக்கு போயிட்டு வர்றவனுக்கு விருந்து எதுக்கு…” என்றவனை முறைத்தவன், “ஏண்டா… ஒரு மாதிரி வெறுப்பாவே பேசற… புது லைப்க்கு திரும்பி வந்த சந்தோஷமே இல்லையே உன்கிட்ட…” என்றான்.
“ஹூம்… என்ன லைப்… எனக்குன்னு இனி என்ன இருக்கு… எல்லாரையும் பார்த்துட்டு கொஞ்ச நாள் இருந்திட்டு வெளியூர் எங்காச்சும் கிளம்பிடலாம்னு இருக்கேன்…” 
அவனை முறைத்த வெற்றி, “அப்படியே மூஞ்சில குத்துனேன்னு வை… ரொம்பதான் பேசற… நிரஞ்சனா உன்கிட்ட கல்யாணத்துக்கு மறுத்ததுல இருந்து நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்… என்னமோ வாழ்க்கையே முடிஞ்சு போன போல விரக்தியா பேசற… அவ இல்லேன்னா உனக்கு வேற வாழ்க்கை கிடையாதா என்ன…” காரை ஓட்டிக் கொண்டே வெற்றி கேட்க சற்றுநேரம் மௌனமாய் இருந்த சக்தி சொன்னதைக் கேட்டு வெற்றி திகைத்தான்.
“நான் நேசிச்சவ தான் என்னை ஏமாத்தினா… என்னை நேசிச்சவளும் இனி கல்யாணத்துல விருப்பமில்லன்னு சொல்லிட்டா… என்னதான் வேற பொண்ணைப் பார்த்தாலும் அது நிரஞ்சனா போல வராதே…” என்றவனின் மனம் வெற்றிக்குப் புரியவே செய்தது.
நிரஞ்சனா சக்தியை நேசித்தது பற்றி வெற்றி சொன்ன பிறகு சக்தியின் மனதில் பெரிய மாற்றம். தன்னை ஒரு பெண் உண்மையாய் நேசித்திருக்கிறாள் என்பது ஆனந்தமாய் இருக்க அவன் மனதிலும் நிரஞ்சனா மீது ஒரு பிரியம் முளை விடத் தொடங்கியது. தனிமையில் நாட்களை கழித்தவன் மனது எப்போதும் அவளைப் பற்றியே நினைக்கத் தொடங்க ஒரு புது சந்தோஷத்தை உணர்ந்தான். அவளைக் குறித்த எண்ணங்களே மனதில் நிறைந்திருக்க பழைய நினைவுகளின் தாக்கம் கூடக் குறைந்திருந்தது.
தனது காதல் பொய்த்துப் போனாலும், தன்னைக் காதலித்து, தன்னைப் போலவே வாழ்க்கை பொய்த்துப் போன நிரஞ்சனாவின் வலிக்கு மருந்தாய் இருக்க வேண்டுமென்று முடிவு செய்தவன் அவளை மறுபடியும் சந்திக்கப் போகும் தருணத்திற்காய் காத்திருந்தான். ஆனால் அந்த சந்திப்பு அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. இனி ஒரு கல்யாணத்துக்கு மனதளவில் தான் தயாரல்ல என்று நிரஞ்சனா மறுத்து விட்டாள்.  
உடனே அவளது சம்மதத்தை எதிர்பார்ப்பது தவறு என்று நினைத்தவன் சிறிது சமயம் கொடுத்து மீண்டும் சந்திக்க முயலுகையில் அவள் காண மறுத்து விட்டாள். ஒருவரின் காயத்துக்கு மற்றவர் மருந்தாகலாம் என நினைத்த சக்தியின் எண்ணம் பொய்த்துப் போக ஒரு மாதிரி மனதளவில் தளர்ந்து போனான்.
சக்தியின் பார்வை வெளியே பதிந்திருக்க காட்சிகள் வேகமாய் கடந்து போயின. தான் போகும்போது இருந்ததற்கு மிகவும் வித்தியாசமாய் உணர்ந்தான். காலியிடங்கள் எல்லாம் கட்டிடங்கள் முளைத்திருக்க மனிதர்களின் நடை, உடை பாவனையில் கூட வித்தியாசம் வந்திருந்தது.
பயணத்தின் முடிவில் கார் ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது. கார் சத்தம் கேட்டு பெரியசாமியும் இந்துவும் ஆவலுடன் வெளியே வர, புன்னகையுடன் இறங்கிய வெற்றி, சக்தி காரிலேயே தயக்கமாய் அமர்ந்திருப்பதைக் கண்டு அழைத்தான்.
“என்னடா, இறங்கி வா… நம்ம வீடுதான்…” என்பதற்குள், “சக்தி தம்பி, வாங்க… நல்லாருக்கீங்களா…” என்றபடி பரமசிவமும் அகிலாவும் வந்தனர். அவர்களைப் புரியாமல் பார்க்க, “உன் அண்ணியோட அப்பா, அம்மாடா…” வெற்றி சொல்லவும் இறங்கியவன் வணங்கினான்.
“வணக்கம் மாமா, உங்களுக்கு உடம்புக்கு பரவால்லியா…” நலம் விசாரித்தவனைக் கண்டு புன்னகைத்தார்.
“வாங்க சக்தி…” இந்து அழைக்க, “நல்லாருக்கீங்களா அண்ணி…” கேட்டுக் கொண்டே சுற்றிலும் பார்த்தான்.
“குழந்தைங்க மாடில இருக்காங்க…” என்றவள் உள்ளே செல்ல தயக்கத்துடனே வந்தான். “நம்ம வீட்டுக்குள்ள என்ன தயக்கம்…” என்ற பெரியசாமி அந்த வீட்டு ஆளாக அவனை அழைத்துச் செல்ல அவரிடம் நலம் விசாரித்தபடி உள்ளே நடந்தான். இந்து அனைவருக்கும் ஜூஸ் கொடுக்க வாங்கிக் கொண்டான்.
“பவி… யாரு வந்திருக்காங்க பாரு…” இந்து குரல் கொடுக்க மாடியில் பவியின் முகம் தெரிந்தது. சற்று வளர்ந்திருந்தாள். அவனை யோசனையாய் பார்த்தவளை, “வாடா…” இந்து அழைக்க தயக்கத்துடனே கீழே வந்தாள்.
“பவி… நல்லாருக்கியாடா செல்லம்…” சக்தியின் குரல் நெகிழ்ச்சியுடன் ஒலிக்க தலையாட்டினாள்.
“நல்லாருக்கேன்… நீங்க நல்லாருக்கீங்களா ப்பா…” அவள் அழைப்பைக் கேட்டு திகைத்தவன் நிமிர்ந்து வெற்றியைப் பார்க்க அவன் புன்னகைத்து கண் சிமிட்டினான்.
பவி சக்தியை சித்தப்பா என அழைத்ததை அவனால் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அவளிடம் சித்தப்பாவையும் நீ அப்பான்னு தான் கூப்பிடணும்…” என்று சொல்லிக் கொடுத்தவன் அடிக்கடி அவர்களின் ஆல்பத்தைக் காட்டி சொல்ல வைக்க குழந்தை, “எனக்கு ரெண்டு அப்பா…” என்று ஏற்றுக் கொண்டாள்.
அவளை அருகே அழைத்து அமர்த்திக் கொண்ட சக்தி, “பவிம்மா, ஸ்கூல் போறியாமே… என்ன கிளாஸ் படிக்கிற டா…” அறிந்தும் அறியாத போல கேட்டான்.
“யூகேஜி A செக்சன்…” அழகாய் சொன்ன மகளைக் கண்ணில் நிறைத்துக் கொண்டவன், “சின்ன குட்டீஸ் எங்கே…” என்றான்.
“நைட் எல்லாம் எங்களைத் தூங்க விடாம ஜாலியா விளையாடிட்டு இப்ப நல்லாத் தூங்குறாங்க…” சந்தோஷமாய் சலித்துக் கொண்டாள் இந்துஜா. அவள் பிரசவித்தது அவர்களைப் போலவே இரட்டை ஆண் குழந்தைகள்.
“ஆமா, அம்மா ஆகாஷைத் தூங்க வச்சாங்க… நான் ஆதர்ஷை தூங்க வச்சேன்… இல்லமா…” என்றாள் பவித்ரா.
“ஆமாடா செல்லம்… அக்கா தான தம்பிப் பாப்பாவைப் பார்த்துக்கணும்…” என்று அவள் தலை முடியை செல்லமாய் கோதிவிட்டாள் இந்து.
அவர்களுக்குள் இருந்த அம்மா, மகள் பாசத்தைக் கண்கள் பனிக்க பார்த்திருந்தான் சக்தி. மகள் தன்னை அப்பா என்றழைத்ததில் சந்தோஷமாய் உணர்ந்தான்.
“சரிடா, நீ குளிச்சு பிரஷ் ஆகிட்டு சாப்பிடு… அதுக்குள்ளே அவங்களும் எழுந்திருவாங்க… இந்த ரூம்ல உனக்கு வேண்டியது எல்லாம் இருக்கு… யூஸ் பண்ணிக்க…” என்று கீழே உள்ள அறையைக் காட்டினான் வெற்றி. “ம்ம்…” என்றவன் எழுந்து சென்றான்.
பரமசிவமும், வெற்றியும் பேசிக் கொண்டிருக்க, “அம்மா, இன்னும் சமையல் முடியலை… நீங்க வந்து வடை போட்டிருங்க… நான் பாயசம் பண்ணிடறேன்……” என்ற இந்து, “பவிக்குட்டி, நீ சித்திகூட ரூம்லயே இருடா செல்லம்… தம்பிங்க எழுந்தா அம்மாவைக் கூப்பிடு…” என்று மகளை அனுப்பி அன்னையுடன் அடுக்களைக்குள் நுழைந்தாள். இருவருமாய் வடை, பாயசத்துடன் சமையலை முடிக்கத் தொடங்க வீடே மணத்தது.
சிறையில் எப்போதும் அரைகுறைக் குளியல்தான் என்பதால் வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டுக் குளியலை ஆசையாய் அலுப்பு தீர அனுபவித்து குளித்தான் சக்தி.
குளித்து முடித்தும் கண்கள் மூடி ஷவரில் சற்று நேரம் நின்றான். மனதிலுள்ள சஞ்சலங்கள் எல்லாம் வழிந்தோடுவது போலத் தோன்ற மனம் அமைதியாய் உணர்ந்தது. அவனுக்காய் ஆடையில் இருந்து எல்லாமே புதியதாய் வாங்கி வைத்திருந்தான் வெற்றி. டவலை எடுத்து உடலைத் துடைத்தவன் அதை இடுப்பில் சுற்றிக் கொண்டு வெளியே வர அடுக்களையிலிருந்து வந்த மணம் நாசியைத் தீண்டி பசியைத் தூண்டியது.
அலமாரியைத் திறந்து புதிய உடையின் வாசத்தை நுகர்ந்தவன் உடன் பிறந்தவனின் நேசத்தில் நெகிழ்ந்தான். அதை அணிந்து கொண்டு தலையை சீவிக்கொண்டு வெளியே வந்தவனைக் கண்டதும் வெற்றியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
“என் தம்பி என்னை விட அழகு… இத்தன நாளா அவனை அந்த சிறை சீருடையில் பார்த்திட்டு இப்படி பார்க்க எவ்ளோ அழகாயிருக்கான்…” என்றவன், “மாப்பிள மாதிரி இருக்கடா சக்தி… வா…” என்று அருகில் அமர்த்திக் கொண்டான்.
“டிரஸ் சரியா இருக்கா… உனக்குப் பிடிச்சிருக்கா…”
“ம்ம்… எனக்கு நீ செய்யற எல்லாமே சரியாதான் இருக்கும்…”
“சரி வா, பசியோட இருப்ப… உன் அண்ணி சமையல் சூப்பரா இருக்கும்… சாப்பிட்டு பேசுவோம்…” என்றவன், “நீங்களும் வாங்க மாமா…” என்று அழைத்தான்.
“பவிக்குட்டி சாப்பிட்டாச்சா…” சக்தி கேட்க, “அவளுக்கு இந்து ஊட்டி விட்டா தான் சாப்பிடுவா… நீ வா…” என்றான் வெற்றி.
அவர்கள் சாப்பிட அமர, எல்லாவற்றையும் தயாராய் மேசை மீது வைத்திருந்த இந்து இலை போட்டு பரிமாறத் தொடங்கினாள். வருடங்களுக்குப் பிறகு நல்ல உணவைக் கண்டவன் ஆவலுடன் சாப்பிடத் தொடங்க இந்துவின் கைமணத்தோடு நேசமும் கலந்து மணத்தது. அவன் வேகமாய் சாப்பிட்டதில் புரையேற வெற்றியோடு இந்துவும் ஓடி வந்து சக்தியின் தலையில் தட்டினாள். வேகமாய் தண்ணியை நீட்ட வாங்கி குடித்தவன் கண்கள் பனித்தன.
“சக்தி, மெதுவா சாப்பிடுடா…” என்ற வெற்றிக்கும் அவன் வேகத்தின் காரணம் புரிய குரல் நெகிழ்ந்திருந்தது. அவன் நல்ல உணவு சாப்பிட்டு பல வருடங்கள் ஆனதே காரணம் என்பது புரிந்தது. திருப்தியாய் உண்டவன் எழுந்து கொள்ள மற்றவர்களும் சாப்பிட்டு முடித்தனர்.
“குழந்தைங்க இன்னும் எழுந்துக்கலையா…” அவன் ஆவலுடன் கேட்க, “எழுந்துக்கற நேரம் தான்… நீ மாடி ரூம்ல குழந்தைகளோட இரு… பவியை சாப்பிட அனுப்பு…” வெற்றி சொல்ல, “சரி…” என்றவன் மாடிப்படியேறி வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறக்க சந்தோஷமாய் அதிர்ந்தான்.
அங்கே நிரஞ்சனா பவிக்குட்டிக்கு கதை சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
“அப்புறம் அந்த முயல் என்னாச்சுனா…” சொல்லிக் கொண்டே நிமிர்ந்தவள் பார்வை கதவைத் திறந்த சக்தியின் மீது படிய முகம் சிவந்தவள் நாணத்துடன் குனிந்து கொண்டாள்.

Advertisement