Advertisement

அத்தியாயம் – 34
நாட்கள் அழகாய் நகரத் தொடங்க வெற்றி, பவித்ராவின் வாழ்க்கையில் இந்து அழகாய் பொருந்தியிருந்தாள். வெற்றி அலுவலகம் செல்லத் தொடங்கியிருக்க இந்துவும், பவித்ராவும் பிளே ஸ்கூலுக்கு செல்லத் தொடங்கினர். சமையலை மட்டும் இந்து பார்த்துக் கொள்ள மற்ற வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பார்வதி சென்று விடுவார். அவரது மகள் கணவனுடன் தாயின் வீட்டுக்கே வந்துவிட மருமகனின் மெஸ்ஸில் மற்ற நேரம் உதவியாய் இருந்தார்.
வீட்டில் அதிக நேரமும் சும்மா இருந்த பெரியசாமி ஏதாவது வேலை வாங்கித் தருமாறு வெற்றியிடம் கேட்க இரவு நேர வாட்ச்மேனாய் அவனது அலுவலகத்திலேயே சேர்த்துக் கொண்டான். பகலில் வீடும் இரவில் அலுவலகமுமாய் சந்தோஷமாய் கவனித்துக் கொண்டார் பெரியசாமி. அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் எல்லாரும் ஓய்வாய் வீட்டில் இருக்க இந்துவின் வீட்டுக்கு சென்றிருந்தனர்.
பவித்ரா சிந்துவுடன் விளையாடிக் கொண்டிருக்க பரமசிவமும் வெற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். அகிலா, மும்முரமாய் மாப்பிள்ளை, மகளுக்கு சமையல் செய்து கொண்டிருந்தார்.
சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்திருந்த இந்து, “நான் தோட்டத்துல இருக்கேன்…” என்று தோட்டத்துக்கு செல்ல காலை எழுந்ததில் இருந்தே அவள் ஒருமாதிரி யோசனையுடன் இருப்பது போலத் தோன்றியது வெற்றிக்கு.
“உடம்புக்கு சரியில்லையா, என்னவென்று கேட்டும் எதுவுமில்லை… என்று சொல்லிவிட்டாள்… சரி, இங்கு எல்லாருடனும் இருந்தாலாவது கொஞ்சம் கலகலப்பாய் இருப்பாள்… என நினைத்து தான் இந்து, லஞ்சுக்கு உங்க வீட்டுக்குப் போகலாம்…” என அழைத்து வந்திருந்தான். ஆனால் இங்கேயும் அவள் யாருடனும் கலந்து கொள்ளாமல் கல்யாணத்திற்கு முன்பு இருந்த போல் அமைதியாய் இருக்க வெற்றிக்கு யோசனையாய் இருந்தது.
“மாமா, நானும் கொஞ்ச நேரம் தோட்டத்துல இருந்துட்டு வரேன்…” வெற்றி சொல்ல, “ம்ம், சரி மாப்பிள… அவளுக்கு பழைய நினைவு வந்திருச்சு போலருக்கு…” எனவும், “என்ன மாமா சொல்லறீங்க, எந்தப் பழைய நினைவு…” என்றான்.
“நாளைக்குதான் அவ கழுத்துல ஆகாஷ் கட்டின தாலி ஏறி இறங்கின நாள்…” என்றார் வருத்தத்துடன்.
“ஓ… அதை யோசிச்சு தான் எங்கிட்ட கூட சொல்லாம மனசுக்குள்ளேயே வருத்தப்பட்டுட்டு இருக்காளா…” என நினைத்தவன், “சரி, மாமா… நான் பார்த்துக்கறேன்…” என்றுவிட்டு மனைவியிடம் சென்றான்.
பவிழமல்லி மரத்தடியில் உள்ள திண்டில் சோக சித்திரமாய் அமர்ந்திருந்தவளைக் கண்டு மனம் கலங்கியது. என்னதான் புதிய வாழ்வு கிடைத்தாலும் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமும், எதிர்பார்ப்புமாய் இருக்க மோசமான நாளாய் மாறிய கறுப்பு தினத்தை அவளால் மறக்க முடியவில்லை.
“இந்துமா…” நேசத்துடன் ஒலித்த கணவனின் குரலில் திரும்பியவள், “எ..என்னங்க, ஏதாச்சும் வேணுமா…” பதட்டமாய் கேட்டுக் கொண்டே எழுந்திருக்க, அவள் அருகே வந்தவன் கை பிடித்து அமர்த்தினான்.
“இந்து… பழசையே நினைச்சு கலங்கிட்டு இருக்கியா…”
“நா..நாளக்கி தான், ஆகாஷ்…” அவள் சொல்லாமல் நிறுத்த,
“ம்ம்… புரியுதுமா… ஆனா, இப்ப உனக்கு நான் இருக்கேன் இந்து… அதை மறந்துட்டு உனக்குள்ளயே வேதனப்பட்டுட்டு இருக்கியா…” அவன் குரலில் வருத்தம் தெரிய,
“அச்சோ, அப்படில்லாம் இல்லிங்க… உங்ககிட்ட சொல்லி எதுக்கு உங்களையும் வருத்தப்பட வைக்கனும்னு நினைச்சேன்…” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொள்ள அணைப்பாய் கையை வைத்துக் கொண்டான் வெற்றி.
“இந்துமா, நான் சந்தோஷத்தையும், சுகத்தையும் மட்டுமே பங்கு போட்டுக்க நினைக்கறவன் இல்லை… உன்னோட துக்கம், வருத்தம் எல்லாத்துலயும் நானும் இருக்கணும்னு நினைக்கறேன்… என்னைத் தனியா பார்க்காத…”
“ப்ச்… ஏன் இப்படிப் பேசறீங்க… நான் வேற… நீங்க வேறயா… எனக்கு எல்லாமே நீங்கதானே… உங்ககிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லப் போறேன்… என்னதான் நான் இப்ப சந்தோஷமா இருந்தாலும் நாளைய நாளை நினைச்சாலே மனசுக்கு கொஞ்சம் நடுக்கமா இருக்கு…” முகம் வெளிற பயத்துடன் அவள் சொல்லவும் அணைப்பில் அழுத்தத்தைக் கூட்ட அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள். 
அவளை அணைத்துக் கொண்டவன், “பழசை நினைச்சு கலங்காத இந்து… நான் எப்பவும் உன்னோட தான் இருக்கேன்…” வெற்றி அவள் காதில் சொல்ல அந்தக் குரல் அவளுடைய முகத்தில் யோசனையைக் கூட்ட, அது ஆகாஷின் குரல் போலத் தோன்றியது அவளுக்கு.
அவள் திகைத்து அவனையே நோக்க, “நாளைக்கு போயி அப்பா, அம்மாவைப் பார்த்திட்டு வரலாம்… அவங்களுக்கும் ஆறுதலா இருக்கும்…” என்ற கணவனின் வார்த்தைகள் ஏன் ஆகாஷ் சொல்வது போலவே அவளுக்குத் தோன்றுகிறது எனப் புரியாமல் பார்த்திருந்தாள்.
“சரி வா, நம்மைக் காணோம்னு பவி தேட ஆரம்பிச்சிருவா…” அவன் சொல்லும்போதே, “அப்பா, அம்மா… ரெண்டு பேரும் இங்க இதுக்கிங்களா…” கேட்டுக் கொண்டே பவித்ராவும் பின்னிலேயே சிந்துவும் வந்தனர்.
“அக்கா, அம்மா வர சொன்னாங்க…” என்று சொல்ல “ம்ம்…” எழுந்தவளின் கையை பிடித்த வெற்றி அழுத்தமாய் ஒரு பார்வை பார்க்க ஒரு மாதிரி ஆறுதலாய் உணர்ந்தாள்.
அன்றைய பொழுது அங்கே கழித்துவிட்டு அடுத்தநாள் காலையில் ஆகாஷின் வீட்டுக்கு கிளம்பினர். மகனின் பிரிவை நினைத்து கலங்கிக் கொண்டிருந்த அவன் பெற்றோர் இவர்களைக் கண்டதும் சற்றுத் தெளிந்தனர். காலையில் வீட்டிலேயே சாமி கும்பிட இவர்களும் கலந்து கொண்டனர்.
“நல்லவங்களை கடவுளுக்கு ரொம்பப் பிடிக்குமாம்… என் மகன் ரொம்ப நல்லவன்… அதான் சீக்கிரம் அழைச்சுகிட்டார் போலருக்கு…” ஆகாஷின் அன்னை கண் கலங்கினார்.
“அம்மா… நடந்ததை யாராலும் மாத்த முடியாது… எல்லார் மனசுலயும் அவர் அன்பு எப்பவும் இருக்கும்…” வெற்றி சொல்ல அவன் கைகளைப் பிடித்து கண்ணீர் விட்டார்.
அதைக் கண்ட பவிக்குட்டி வேகமாய் அருகில் சென்று “அழாதீங்க பாத்தி…” என்று கண்ணீரைத் துடைத்துவிட, “இல்லடா செல்லம்… அதான் எங்களுக்கு நீங்கல்லாம் இருக்கீங்களே…” என்று அவளை அணைத்துக் கொண்டார்.
“நீங்க எல்லாரும் இங்கே வந்தது மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு மா…” என்றார் ஆகாஷின் தந்தை.
மதியம் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் அனைவருக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எல்லாம் முடிந்து மனதிருப்தியுடன் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“மனசுக்கு நிறைவா இருக்குப்பா… இப்படில்லாம் செய்தா அவன் ஆத்மா சந்தோஷப்படும்…” என்றார் வெற்றியிடம்.
“ம்ம்… உண்மைதாங்க, எனக்கும் ஒருமாதிரி சந்தோஷமா இருக்கு…” என்றார் ஆகாஷின் அன்னை. இந்துவின் மனம் கூட நெகிழ்ந்திருக்க அமைதியாய் இருந்தாள்.
“சரிம்மா, நாங்க கிளம்பட்டுமா…” என்றான் வெற்றி.
“இப்பவே போகணுமாப்பா…” குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டே கேட்டார். “கொஞ்சம் வேலை இருக்கு மா… உங்களுக்கு எப்ப எங்களைப் பார்க்கணுமோ சொல்லுங்க வந்திடறோம்… நீங்களும் அப்பப்ப புள்ளை வீட்டுக்கு வரலாம்…” என்றான் எங்கோ பார்த்தபடி.
“ஹாஹா… வரோம் வரோம்…” என்று அவன் முதுகில் தட்டிய ஆகாஷின் தந்தை, “காபி குடிச்சிட்டு கிளம்பலாம்…” என்று மனைவியைப் பார்க்க அவர் அடுக்களைக்கு சென்று பணிப்பெண்ணிடம் சொல்லிவிட்டு வந்தார்.
“என்னம்மா இந்து, ஒண்ணுமே பேசாம அமைதியா இருக்க…”
“ஒ…ஒண்ணும் இல்ல அத்த… கொஞ்சம் தலைவலிக்குது…”
“ஓ.. தைலம் வேணுமா…” என்றவர், “முடிஞ்சு போனதை அதிகம் நினைச்சுட்டு இருக்காதம்மா… தங்கமான புருஷன் உனக்கு… சந்தோஷமா இரு…” என்றார். “ம்ம்…” அமைதியாய் தலையாட்டினாள் இந்து. சிறிது நேரத்தில் காபி வரவும் எடுத்துக் கொண்டனர்.
“பவிக்குட்டிக்கு பால்…” என்ற ஆகாஷின் அன்னை நன்றாக ஆற்றி குழந்தைக்குக் கொடுக்க காபியை வாயில் வைத்த இந்து தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்து ஓடினாள்.
குமட்டிக் கொண்டு வரவே வாஷ் பேசினுக்கு ஓடியவள் வாந்தி எடுக்க தலை கிர்ரென்று சுற்றியது. அவள் பின்னிலேயே பதட்டமாய் ஓடிவந்த வெற்றி மனைவியைத் தாங்கிக் கொண்டான்.
அதற்குள் பெரியவர்களும் வர தளர்ந்து நின்றவளை அணைப்பாய் அழைத்து வந்து கட்டிலில் கிடத்தினான்.
“அம்மா… என்னாச்சு மா…” பவித்ரா உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அவள் அருகில் அமர்ந்து அழுகைக்குத் தயாராக,
“அம்மாக்கு ஒண்ணும் இல்லடா… கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா சரியாகிடும்…” என்றதும் அமைதியாய் கண்ணில் பொங்கிய கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தது.
“இந்துமா என்னடா ஆச்சு, சாப்பிட்டது எதுவும் சேரலையா…” ஆகாஷின் தந்தை கவலையுடன் கேட்க ஏதோ மனசுக்குள் கணக்குப் போட்ட அம்மா, இந்துவின் காதில் கேட்டார்.
அவர் கேட்டதும் யோசனையாய் நெற்றியை சுருக்கியவள் முகம் நாணத்தில் சிவக்க அவரிடம் ஏதோ சொன்னாள். அவர் முகம் சந்தோஷத்தில் மலர, “கடவுளே…” என்று கும்பிட்டுக் கொண்டே வேகமாய் அடுக்களைக்கு சென்றவர் சக்கரையை எடுத்துக் கொண்டு வந்தார்.
“என்னம்மா, என்னாச்சு… என்ற வெற்றி புரியாமல் கேட்க ஆகாஷின் தந்தை சந்தோஷத்துடன் மனைவியிடம் திரும்பி, “அப்படியா…” என்பது போல் தலையாட்ட, அவர் “ஆமாம்…” என்று பதிலுக்கு தலையாட்டினார். டியூப் லைட் வெற்றிக்கு அப்போதும் எதுவும் புரியாமல் கவலையுடன் நோக்க, “இந்து, ஆ காட்டு…” என்று மருமகளுக்கு வாயில் சக்கரையைப் போட அவன் புரியாமல் பார்த்தான்.
“நீயும் ஆ காட்டு…” என்று வெற்றியிடம் சொல்ல வாயைத் திறந்து வாங்கிக் கொண்டவன், “எதுக்குமா சக்கரை…” என்றான் குழப்பத்துடன். “பாத்தி… எனக்கு…” பவிக்குட்டியும் வாயைக் காட்ட அவளுக்கும் சக்கரையைப் போட்டார்.
“அடேய் மகனே, காரியத்தில் உள்ள வேகம் காட்சியில் உனக்கு இல்லையேப்பா…” என்று ஆகாஷின் தந்தை அவனைக் கேலியுடன் நோக்கி சிரிக்க இந்து நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
“ப்ச்… பையனை கிண்டல் பண்ணாதீங்க…” என்றவர், “பவிக்குட்டி… உனக்கு தம்பிப் பாப்பா வேணுமா, தங்கச்சி பாப்பா வேணுமா…” என்று கேட்டுக் கொண்டே “என்னங்க, வாங்க… என்று கணவரை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல, “எனக்கு ரெண்டு பாப்பாவும் பிதிக்கும் பாத்தி…”  அவர்கள் சொன்னதைக் கேட்டு குபீரென்று தேகமெங்கும் ஒரு உணர்ச்சி பாய சிலிர்ப்புடன் மனைவியிடம் திரும்பினான் வெற்றி. அவள் முகத்திலுள்ள நாணமும், மலர்ச்சியும் ஓராயிரம் கதைகள் சொல்ல அவள் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டவன், அவளைக் கேள்வியுடன் நோக்க, “ம்ம்…” என்று தலையாட்டவும் நெகிழ்ச்சியுடன் அவள் கையில் முத்தமிட்டவனின் கண்கள் கலங்கியிருந்தன.
அதைக் கண்டதும் பதறி எழுந்தவள், “என்னப்பா இது… சந்தோஷப்படாம கண் கலங்கிட்டு…” என்று கேட்க அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு, “இது சந்தோஷத்துல வந்த கண்ணீர் இந்துமா… என் அம்மா ஆசைப்பட்ட போல இந்தக் குழந்தையை அருமை பெருமையா வளர்த்தனும்…” என்றான்.
“சரி, இப்ப கொஞ்சம் என்னை விடறீங்களா… மூச்சு முட்டுது…” அவள் கிண்டலாய் சொல்ல புன்னகையுடம் விடுவித்தவன், “சரி வா, டாக்டர்கிட்ட போயி கன்பர்ம் பண்ணிக்கலாம்…” என்றான் பரபரப்புடன்.
“ம்ம்… அத்த, மாமாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு கிளம்பலாம்…” என்றவள் எழுந்து அவனுடன் வெளியே வர பவித்ராவை சிரிக்க வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
நெகிழ்ச்சியுடன் அவர்களிடம் சென்றவள், “அத்த, ரெண்டு பேரும் எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க…” என்று சொல்லவும், “என் மகனே உன் வயித்துல பொறப்பான்னு நம்பறேன் மா… நீ நல்லபடியா குழந்தை பெத்து சந்தோஷமா வாழணும்…” என்று வாழ்த்தியவர், “முதல்ல டாக்டர்கிட்ட போயி செக் பண்ணிடு… அவங்க சொல்லுறதை எல்லாம் சரியா பாலோ பண்ணு…” என்று சொல்ல தலையாட்டினாள்.
அவர்கள் கிளம்ப சந்தோஷத்தில் மனம் நிறைந்தவர் மகனின் போட்டோவிடம் வந்து நெகிழ்ச்சியுடன் பார்த்து நின்றார்.
டாக்டரும் அவளைப் பரிசோதித்து உறுதி செய்திட எல்லாருக்கும் மிகவும் சந்தோஷமானது.
வெகு நாட்களாய் மனதில் வேதனைகளை மட்டுமே கொண்டிருந்த அந்த நெஞ்சங்கள் புதிதாய் வரப்போகும் குடும்ப உறுப்பினரை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தது.
இந்த சந்தோஷத்தை தெரிவிக்க தம்பியைக் காண சென்றான் வெற்றி. விஷயம் அறிந்து மிகவும் மகிழ்ந்தான் சக்தி.
“அம்மா இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க வெற்றி…” கண் கலங்கியவன், “இப்பதான் நம்ம குடும்பம், குடும்பம் போல இருக்கு… பவியும் குட்டிப் பாப்பா வரப் போகுதுன்னு ரொம்ப சந்தோஷப் படுவால்ல…” மனதில் உண்மையான சந்தோஷத்துடன் அவன் கேட்டாலும் வெற்றியின் மனது அவன் நிலையை எண்ணிக் கலங்கியது.
“உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்தா தான் அம்மா மனசு சாந்தியடையும்டா…” என்றவன் அவனது சிறப்பு தண்டனைக் குறைப்பு விஷயம் அறிந்து சந்தோஷப் பட்டான். சக்தி நிரஞ்சனா அங்கே இருப்பதைப் பற்றி சொல்லி அவள் உள்ளே வந்த காரணத்தையும் சொல்லி வேதனைப்பட யோசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.
“அபர்ணா கிளாஸ்மெட் நிரஞ்சனாவையா சொல்லற…” மீண்டும் சந்தேகமாய் கேட்க அவன் வேதனையுடன், “ஆமாடா, பாவம்… ரொம்ப நல்ல பொண்ணு… இங்கே வந்து ரொம்ப கஷ்டப்படுது…” என்றான் வருத்தத்துடன்.
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவன், “நான் நிரஞ்சனாவைப் பார்க்கணுமே…” என்றான்.
“ம்ம்… நாம பார்த்து என்னாகப் போகுது… வாழ வேண்டிய வயசுல அந்தப் பொண்ணும் என்னைப் போலவே இங்க இருக்கு… எங்களோட விதியைப் பார்த்தியா… தப்பு செய்தவங்க உடனே உலகத்தை விட்டுப் போயிட்டாங்க… ஆனா, துணையை நம்பின நாங்க ஆயுள் முழுதும் பழியை சுமந்து தண்டனையை அனுபவிச்சிட்டு இருக்கோம்…” என்றான் சக்தி.
ஏதோ யோசித்த வெற்றி, “சக்தி, நிரஞ்சனாவுக்கு இன்னும் எத்தன வருஷம் இருக்கு…” என்றான்.
“அவளுக்கும் ரெண்டு வருஷம் தான் போலருக்கு…”
“ம்ம்… விதி ஒண்ணு இருக்க, மனுஷங்க அதை மாத்தினா இப்படி தான் வாழ்க்கை அலங்கோலமாப் போயிடும்…”
“என்னடா சொல்லற, என்ன விதி…” என்றான் புரியாமல்.
“நீயும், நிரஞ்சனாவும் சேரணும்னு தான் விதி… அதுப்படி நடந்திருந்தா இப்ப ரெண்டு பேருமே உள்ள இருக்காம சந்தோஷமா வாழ்ந்திட்டு இருப்பீங்க… அதை அந்த அபர்ணா பண்ண சதியால எல்லாம் மாறுச்சு… இப்போ ஆளுக்கொரு பக்கமா ஜெயிலுக்குள்ள இருக்கீங்க… ஆனாலும் விதி உங்களை மறுபடி இங்கே சேர்த்து வைக்கும்னு நான் நினைக்கவே இல்லை…” வெற்றி சொல்ல அவன் முழித்தான்.
“என்னடா, நீ என்னன்னவோ சொல்லற… எனக்கு எதுவும் புரியலையே…” என்றான்.
“ம்ம்… உனக்குப் புரியாத, தெரியாத ஒரு விஷயம் இருக்கு… அது நிரஞ்சனா உன்னை உருகி உருகிக் காதலிச்சது… அவ காதலை சொல்ல வர்றதுக்குள்ள நடுவுல அபர்ணா புகுந்து நீ அவளோட மயக்கு வார்த்தைல மயங்கி அவளை லவ் பண்ணத் தொடங்கிட்ட…” என்றான் வெறுப்புடன்.
அவன் சொன்னதைக் கேட்டு சக்தி அதிர்ந்து நோக்க வெற்றி தொடர்ந்தான்.
“எனக்கு அபர்ணாவைப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும்… ஆனா, அதுக்குக் காரணம் என்னன்னு தெரியுமா… அவ நடுவுல புகுந்து உன் மனசைக் கலைச்சது தான்… நிரஞ்சனா நல்ல பொண்ணு… அவளை நீ லவ் பண்ணறேன்னு சொல்லி இருந்தா முழு மனசோட நான் சம்மதிச்சிருப்பேன்… ஆனா, நாங்க எவ்ளோ சொல்லியும் நீ அபர்ணாவை தான் நம்பின… நீ அபர்ணாவைக் காதலிக்கறேன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே நிரஞ்சனாவைப் பார்த்து நான் பேசினேன்… அவ லவ்வைப் பத்தி உன்கிட்ட சொல்லறேன்னு சொன்னேன்… ஆனா வேண்டாம்னு தடுத்திட்டா… உனக்குப் பிடிச்ச பொண்ணோட தான் உன் வாழ்க்கை அமையணும்னு தீர்மானமா சொன்னதோட இல்லாம மொத்தமா உன் பார்வைல கூட வராம ஒதுங்கிப் போகத் தொடங்கிட்டா… அந்த அளவுக்கு அவ உன்னை ரொம்ப நேசிச்சா…” என்றான் நெகிழ்ச்சியுடன்.
கேட்டுக் கொண்டிருந்த சக்திக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. உப்புக்கல்லை வைரமென நம்பி ஏமாந்து போன தன் செயலை எண்ண வெறுப்பாய் உணர்ந்தான்.
“இ…இது எதுமே எனக்குத் தெரியாதே…” என்றான் அதிர்ச்சியுடன்.
“ம்ம்… நிரஞ்சனா உன்னை லவ் பண்ணது எங்க சில பேருக்கு மட்டும் தான் தெரியும்… உன்னோட பர்த்டே அன்னைக்கு உன்கிட்ட பிரபோஸ் பண்ணப் போறதா சொன்னா… ஆனா அதுக்கு முன்னாடி நீ அபர்ணா பர்த்டேக்கு அவகிட்ட பிரபோஸ் பண்ணிட்ட…” என்றான் கடுப்புடன்.
“சார், டைம் ஆச்சு…” சிறை சிப்பந்தி குரல் கொடுக்க,
சக்தி, “ம்ம்… விடு வெற்றி, இனி இதைப் பத்தி பேசி என்ன ஆகப் போகுது… இப்படில்லாம் எங்களுக்கு நடக்கனும்னு இருக்கும்போது மாத்தவா முடியும்…” என்றான் சோர்வுடன்.
“ஏன் முடியாது… நிச்சயம் மாத்த முடியும்… உங்களுக்கொண்ணும் அவளோ வயசாகிடல… நீங்க நினைச்சா உங்க வாழ்க்கையை சரி பண்ணிக்க இனியும் சமயமும், சந்தர்ப்பமும் இருக்கு… முதல் முறை தவறவிட்ட உன் வாழ்க்கையை உனக்கு நிச்சயம் நான் அமைச்சு தருவேன்…” என்றான் மனதில் உறுதியுடன்.
எத்தனையோ பிரியங்கள்
உரியவரை சேராமல்
அவருக்கு சொல்லப்படாமல்
வெறும் காகிதத்திலேயே
கரைந்து விடுகின்றன…
மௌனத்தை மட்டுமே
சாட்சிப்படுத்தி
நேசத்தின் சுரங்கத்தை
இறுக மூடிப் பாதுகாப்பாய்
வைத்துக் கொண்டிராமல்
பகிர்ந்து கொள்ளுங்கள்…
நேசம் பகிரப் பகிரவே
பெருகும் அமுதசுரபி…

Advertisement