Advertisement

“ம்ம்… புரியுது, புரியுது… ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்ச மாதிரி தெரியலையே…” என்றார் அவளை நோக்கி.
“அது பரவால்ல மேடம்… என் மனசுக்கு தெரியுமே…” என்றவன் அங்கிருந்து நகர அவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த சிறைக்காவலர் பெண்மணி.
“இவங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க… ஒழுக்கமில்லா துணைகளை சகிச்சுக்க முடியாம தானே தண்டனை கொடுத்து ஜெயிலுக்கு வந்தவங்க… இவங்க வாழ்க்கைல இணைஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்…” யோசனையோடு பார்த்தார்.
நிரஞ்சனாவிடம் சென்றவர், “சாப்பிடப் போலயா மா…” என்றார்.
“ம்ம்… போறேன் மேடம்…” என்றவள் எழுந்து கொள்ள, “உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும் மா…” என்றதும் நின்றாள்.
“சக்தியை உனக்குத் தெரியும் தானே…” கேட்டதும் திகைத்தவள் சட்டென்று குனிந்து கொண்டு “ம்ம்…” என்றாள்.
“எங்க தெரியாதுன்னு சொல்லிடுவியோன்னு நினைச்சேன்… அவரைப் பத்தி நீ என்ன நினைக்கற…” கேட்டவர் ஆராய்ச்சியுடன் அவள் முகத்தை நோக்க முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் அவள்.
“எ..எதுக்கு கேக்கறிங்க மேடம்…” திணறலாய் கேட்டவளை நோக்கி சிரித்தவர், “ஒண்ணும் இல்ல மா, நீங்க ரெண்டு பேருமே வாழ்க்கைத் துணையால பாதிக்கப்பட்டவங்க… அதை நினைச்சதும் ஒரு விஷயம் மனசுல தோணுச்சு…” அவர் சொல்லவும் திகைப்புடன் நிமிர்ந்தவள், “எ..ன்ன விஷயம் மேடம்…” என்றாள் யோசனையுடன்.
“தப்பான வாழ்க்கைத் துணையால வாழ்க்கையை இழந்துட்டு நிக்கற நீங்க ரெண்டு பேரும் ஏன் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கக் கூடாது…” கேட்டவரை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.
“என்னமா, நான் சொன்னது சரிதானே…”
“அ…அது, எங்க வாழ்க்கை முடிஞ்சு போன கதை மேடம்… மீண்டும் அத்தியாயம் போட முடியாது…”
“யாரு சொன்னா, எத்தனையோ கதை ரெண்டாம் பாகம் வர்றதில்லையா… அது போல உங்க வாழ்க்கைலயும் இது ஒரு ரெண்டாம் பாகமா இருக்கட்டுமே…” சொன்னவரை அதிசயமாய் பார்த்தவள், “அ..அதெல்லாம் சரிவராது மேடம்… மறுபடியும் ஒரு கல்யாணம்லாம் என்னால யோசிக்கவே முடியல…”
“யோசிச்சா முடியும்மா… எனக்குத் தெரிஞ்சவரை சக்திக்கு உன் மேல ஒரு அக்கறை இருக்கு… அது வெறும் அக்கறை மட்டும் இல்லன்னு என் மனசு சொல்லுது… நீங்க ரெண்டு பெரும் இணைஞ்சா உங்க வாழ்க்கை நிச்சயம் நல்லாருக்கும்…” அவர் சொல்ல அப்படியே நின்றாள்.
“சரி நிரஞ்சனா, நீ நிதானமா யோசி.. இப்ப சாப்பாடு வாங்கப் போ…” என்றவர் சொல்லிவிட்டு செல்ல அவளது கால்கள் நடந்தாலும் மனம் அதையே யோசித்து.
“ச… சக்தி, என் புருஷனா… இது சாத்தியமா…” மனது கேள்வி கேட்க,
“ஏன் சாத்தியமில்லை… இதுக்கு முன்னாடியே அவனை உன் புருஷனா நினைச்சுப் பார்த்தவ தானே… அபர்ணா மட்டும் நடுவுல வராம இருந்திருந்தா இப்ப நீ சக்தியோட மனைவியா சந்தோஷமா வாழ்ந்திட்டு இருந்திருப்பியே…” மனசாட்சி  அவளைக் குழப்ப மனதுக்குள் சின்னதாய் ஒரு ஆசை எட்டிப் பார்த்தது.
“அ..அது சரிதான்… ஆனா, சக்தி மனசுல நான் இல்லையே…”
“அதை நீ ஏன் முடிவு பண்ணிக்கற… இப்ப அவன் மனசுல வேற யாரும் இல்லை… முன்னாடி தவற விட்ட போல இப்பவும் அவனைத் தவற விட்டுடாதே…”
“ம்ம்… ஆனா, நான் எப்படி அவன்கிட்ட இதைப் பேச முடியும்…”
“முன்ன நீ பேசத் தயங்கினதால தான் உங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் நாசமாப் போயிருச்சு… இப்பவும் தயங்காத… ஆண் தான் விருப்பத்தை சொல்லணும்னு எந்த நியதியும் இல்லை… பெண்களும் தன் விருப்பத்தை சொல்லலாம்…”
“ஏய், தட்டை நீட்டாம மரம் போல நிக்கற… நீட்டு…” அதட்டல் குரல் கேட்கவும் கலைந்தவள் தட்டில் சூடாய் விழுந்தது பொன்னி அரிசி சோறும் சுடச்சுட சாம்பாரும்… ஸ்பெஷலாய் ஒரு கூட்டும் உடனிருக்க பார்த்தவளுக்குப் பசித்தது.
எப்போதும் பூச்சி, புழு விழுந்த வாடை பிடித்த அரிசியில் சமைத்த உணவையும், தண்ணியாய் சுவையில்லாத சாம்பாரையும் சாப்பிடும் கைதிகளுக்கு வெளியே உள்ள சில புண்ணியவான்கள் எப்போதாவது ஏற்பாடு செய்யும் இது போன்ற உணவே மாபெரும் விருந்து.
மனதில் வந்த எண்ணத்தின் மாற்றமோ, சாப்பிடும் உணவின் மாற்றமோ இன்று சுவையாகத் தெரிய வெகு நாட்களுக்குப் பிறகு உணவை உணர்ந்து சாப்பிட்டாள் நிரஞ்சனா.
இரவு முழுதும் சக்தியைப் பற்றிய பழைய நினைவில் உறங்காமல் புரண்டு கொண்டிருந்தாள். அபர்ணாவை சக்தி விரும்புகிறான் எனத் தெரிந்ததும் என்றோ தன் மனதில் தோண்டிப் புதைத்த ஆசைகளும், கனவுகளும் இப்போது மீண்டும் வடிவம் கொள்ள கனவிலும் அவனே சிரித்தான்.
மனதின் சுகமான எண்ணங்கள் முகத்துக்கும் பொலிவைத் தர காலை விடியல் அவளுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தியை சுமந்து வந்தது. மகளின் வாழ்க்கை இப்படியான துக்கத்தில் நிரஞ்சனாவின் தந்தையும் மரணித்துவிட அவளுக்கென்று இந்த உலகத்தில் யாருமின்றிப் போனது.
தந்தையின் மரணத்துக்கு பரோலில் சென்று இறுதிக் காரியத்தில் கலந்து திரும்பிவளைக் காண உறவென்று யாரும் வருவதில்லை. அவர்களின் சொத்துகளைப் பராமரிக்கும் மேனேஜர் மட்டும் எப்போதாவது வந்து விவரம் சொல்லிப் போவதோடு சரி.
சக்தி தன்னைக் காண விண்ணப்பித்திருக்கிறான் என்பது தெரிந்ததும் அவளுக்கு கண்ணில் நீர் துளிர்த்தது. சிறை சிப்பந்தி வந்து அவளை அழைக்கையில் மனதுக்குள் ஒருவித சந்தோஷமும் பதட்டமும் தொற்றிக் கொண்டது.
“என்ன பேசுவதற்காய் என்னை தனியே சந்திக்கப் போகிறான்… ஒருவேளை அவன் மனதிலும் என்னைப் போல ஏதாவது ஆசைகள் இருக்குமோ… இல்லை, வேறு ஏதேனும் விஷயம் சொல்லப் போகிறானா…” பலதும் யோசித்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். வெளியிலிருந்து வரும் பார்வையாளர்கள் சந்திக்க வேறு அறையும் இவர்கள் சந்திக்க உள்ளேயே தடுப்பு சுவருடன் கூடிய ஒரு அறையும் இருந்தது. தடுப்புக் கம்பிக்கு பின்னில் சக்தியின் முகம் தெரிந்தது.
அவனைக் கண்டதும் தயக்கத்துடன் குனிந்து கொண்டாள்.
“நிரஞ்சனா…” தயக்கத்துடனே அழைத்தான் சக்தி.
“ம்ம்… என்ன பேசணும்…”
“உன்னை இங்க பார்த்ததும் ரொம்ப ஷாக் ஆயிட்டேன்…  எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நீ ரொம்ப சாப்ட் நேச்சர்…”
“ம்ம்… நீங்க கூட சாப்ட் தானே சக்தி…”
“ம்ம்… உள்ளே உன்கிட்ட எதையும் பேச முடியல… அதான் சூப்பிரண்டு கிட்ட பர்மிஷன் வாங்கினேன்…”
“என்ன பேசணும்…”
“நடந்ததை வார்டன் மூலமா கேள்விப்பட்டேன்… ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… என்னோட அதே அனுபவம் உனக்கும் வந்திருக்க வேண்டாம்… உன்னை இந்த சூழல்ல மனசு ஒத்துக்கவே மாட்டேங்குது…”
“எல்லாம் விதி… என்ன பண்ண முடியும்…”
“ம்ம்… இதோட எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு மனசைத் தளர விடாத நிரு… உனக்கான வாழ்க்கை எங்கயோ காத்திருக்கு…”
“ம்ம்… கேட்க நல்லாத்தான் இருக்கு… ஆனா, இனி எனக்கு என்ன வாழ்க்கை இருக்கு…”
“ஏன், நான்லாம் இல்லையா… பெத்த குழந்தைகிட்ட கூட அப்பான்னு சொல்லிக்க முடியாம வாழ்ந்திட்டு தானே இருக்கேன்…” சொல்லும்போதே கண்கள் கலங்க அவள் மௌனமாய் பார்த்தாள்.
“குழந்தை வெற்றி கிட்ட தானே இருக்கா…”
“ம்ம்… என்னை வளர்த்த அவனுக்கு அவளை வளர்க்கிறது ஒண்ணும் பெரிசில்லை… அண்ணியும் ரொம்ப நல்லவங்க…”
“ம்ம்… இன்னும் உங்களுக்கு ரெண்டு வருஷம் தான இருக்கு… வெளிய போனதும் புது வாழ்க்கையை அமைச்சுக்கலாமே…”
“அதைப் பத்தி எல்லாம் நான் யோசிக்கலமா… என்னமோ உன்னை இங்கே பார்த்ததும் நமக்கு ரொம்ப வேண்டியவங்க பக்கத்துலயே இருந்தும் பேச முடியாத போல கஷ்டமா இருந்துச்சு… நமக்கும் மனசைத் திறக்க யாராச்சும் ஒருத்தர் வேணுமில்லையா…” அவன் சொல்லவும் அவள் மனம் சந்தோஷமாய் படபடத்தது.
“தேங்க்ஸ் சக்தி…”
“எதுக்கு நிரு…”
“என்னை, உனக்கு வேண்டியவங்க பக்கத்துல இருக்கற போலன்னு சொன்னியே… அதுக்கு தான்…” அவள் குரலில் ஒரு தவிப்பு இருப்பதை உணர்ந்து கொண்டான்.
“ம்ம்… உனக்கு வெளிய ஏதாச்சும் உதவி வேணும்னா சொல்லு… வெற்றி கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணறேன்… இங்க அந்தப் பொம்பளைங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு… அதுக இன்னும் கொஞ்ச நாள்ல ரிலீஸ் ஆகிடும்… அதுவரை பொறுமையா இரு…” என்றான்.
அதைக் கேட்டதும் அவளுக்கு புஸ்சென்று போய்விட மனதில் ஏமாற்றமாய் உணர்ந்தாள். அவளது குடும்பத்தைப் பற்றி மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும்போதே சமயம் முடிந்துவிட்டதாய் சிறைக் காவலர் கூற விடை பெற்றான்.
  
நிலை மாறும் உலகில்
நிஜமாய் சில நேசங்கள்…
தடம் மாறும் தாளத்தில்
சுகமாய் சில லயங்கள்…
தேடிய பாதை தவறினாலும்
நேசித்த சுவாசம் மறப்பதில்லை…
விடை தெரியா வினாக்களோடு
விடை பெரும் நெஞ்சங்கள்…
விதியின் சாப விளையாட்டும்
முடிவில் வரமாய் மாறுமோ…

Advertisement