Advertisement

அத்தியாயம் – 33
ஆகஸ்ட் 15.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…
மிமிக்ரியில் திறமை கொண்ட சிவா பெண் குரலில் அழகாய் பாடிக் கொண்டிருக்க முன்னில் அமர்ந்திருந்த கைதிகளும் காவல் துறை அதிகாரிகளும் பார்த்துக் கொண்டிருந்தனர். அமைச்சர் கொடியேற்றி முடித்ததும் வேறு நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி கிளம்பியிருந்தார்.
சூப்பிரண்டு அருகே அமர்ந்திருந்த ஜெயிலரிடம் அவர் ஏதோ சொல்ல தலையாட்டியவர் சிரித்துக் கொண்டிருந்தார்.
பெண் கைதிகளுக்கும் ஆண் கைதிகளுக்கும் இடையே தடுப்பு கட்டிப் பிரித்திருக்க வரிசையாய் சேரில் அமர்ந்திருந்தனர். இன்னொரு பக்கம் போலீஸ் துறையினர் அமர்ந்திருக்க கைதிகளின் சிறப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
பெண் கைதிகளுடன் அமர்ந்திருந்த நிரஞ்சனாவிற்கு பாடலின் வரிகளைக் கேட்டதும் கண்கள் துளிர்த்தது.
“நானும் என் வாழ்க்கையைக் குறித்து எத்தனை நம்பிக்கை, லட்சியம் வைத்திருந்தேன்… எல்லாவற்றையும் விதி புரட்டிப் போட்டு  இந்த பூலோக நரகத்தில் தினம் தினம் செத்துக் கொண்டு இருப்பதுதான் உன் எதிர்காலம் என்று சொல்கையில் எந்த நம்பிக்கையைக் கையில் வைத்துக் காத்திருப்பது…” மனதுக்குள் நினைத்தவள் தன்னைத் தானே நொந்து கொண்டு அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அடுத்தது நம்ம சக்திவேலின் டான்ஸ் நிகழ்ச்சி…” என்று சிவாவே மைக்கில் சொல்லிவிட்டு செல்ல சில நிமிடத்தில் சக்திவேல் மேடையில் தோன்ற அவனுக்கு ஜோடியாய் பெண் வேடமிட்ட ஒரு ஆண் கைதியும் இருந்தான்.
என்னோடு நீ வந்து மோதாதே…
உன் பப்பு இங்கே தான் வேகாதே…
ஆடலில், பாடலில் மன்னவன் பாரு…
பூமாலை ஒரு பாவை ஆகுமா…
பொன்மாலை புது பாடல் பாடுமா…
இதை பார்க்க பார்க்க புதுமை
இசை கேட்க கேட்க கொடுமை
அதை யார்தான் சொல்வது…
பின்னணியில் இசை ஒலிக்க, கல்லூரியில் ஆடிய அதே பாடலுக்கு சக்தி நடனமாடிக் கொண்டிருக்க உடனிருந்த கைதி சுமாராய் சமாளித்துக் கொண்டிருந்தான். சக்தியின் உடையும் ஆடலும், பாடலும் பழைய நினைவை நிரஞ்சனாவின் மனதில் நிரப்ப தனை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்து ஒரு நாடகமும் முடிய வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த பொழுதுபோக்கில் மனம் மகிழ்ந்து கை தட்டிக் கொண்டிருந்தனர். அடுத்து மேடையில் நாற்காலிகள் போடப்பட பெரிய அதிகாரிகள் மேடையேறினர்.
முதலில் ஆண் சிறையின் ஜெயிலர் வருடாவருடம் சுதந்திர தினத்தன்று தண்டனைக் கைதிகளை விடுவிப்பது பற்றிக் கூறிவிட்டு இந்த வருடம் இந்த நல்ல தினத்தில் தண்டனை குறைந்து ரிலீஸ் ஆகும் கைதிகளின் பெயரை வாசித்தார்.
அடுத்து எழுந்த சூப்பிரண்டு, “இந்த முறை நன்னடத்தை காரணமாய் சில கைதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப் பட்டிருக்கிறது… மீதமுள்ள காலமும் அவர்கள் அதே போல நல்ல முறையில் கழிய வேண்டும்… இல்லாவிட்டால் இந்த சிறப்பு தண்டனைக் குறைப்பு லிஸ்ட்டில் இருந்து அவர்கள் பெயர் விலக்கப்படும்… எனவே இனியும் அவர்கள் சிறை விதிமுறைகளை சரியாகப் பாலித்து நடந்து கொள்ள வேண்டும்…” என்று சொல்லிவிட்டு லிஸ்டை வாசிக்க முதல் பெயரே சக்திவேல் என்றது.
கைதிகள் அதைக் கேட்டு கை தட்ட அவன் புன்னகையுடன் எழுந்து நெஞ்சில் கை வைத்து வணங்கினான். அடுத்து இருவர் பெயரையும் வாசித்துவிட்டு, “எல்லாரும் வரிசையில் வந்து இனிப்பு வாங்கிக் கொள்ளுங்கள்…” என்று கூறி முடித்தார்.
“சரி, நான் கிளம்பறேன்…” ஜெயிலரிடம் சொல்லிக் கொண்டே வந்தவர் முன்னில் சக்தி வந்து நிற்கவும், “என்ன சக்தி, உனக்கு சந்தோஷமா…” என்றார்.
“ரொம்ப தேங்க்ஸ் சார்… எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் சார்…” என வாட்சைப் பார்த்துக் கொண்டே, “என்ன…” என்றார்.
“என் கூட கல்லூரில படிச்ச பிரண்டு ஒருத்தி பெண்கள் சிறைல இருக்கா, பார்த்துப் பேச அனுமதி வேணும்…” என்றான்.
“பெண் கைதியைப் பார்க்க, நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கேப்பா…” என்றவர், “சரி, நீ ஒண்ணு பண்ணு…” என்றவர் வார்டனிடம் திரும்பி, “வேண்டிய அப்ளிகேஷனை பில் பண்ணி வாங்கிட்டு ஏற்பாடு பண்ணிடுங்க…” என்றவர்,
“சரி, நான் கிளம்பறேன்…” என்று சென்று விட, “ம்ம்… பரவால்லியே, அந்த மனுஷனையும் கைக்குள்ள போட்டு வச்சிருக்க, சக்தி…” என்று சிரித்தார் ஜெயில் வார்டன்.
“அப்படில்லாம் ஒண்ணும் இல்ல சார், அவர் பொதுவாவே நல்ல டைப் தானே… அதான் கேட்டுப் பார்த்தேன்…”
“ம்ம்… என்ன ஆச்சு உனக்கு… இதுவரை இல்லாத புதிய மாற்றம்… அந்தப் பொண்ணு மேல ரொம்ப அக்கறை காட்டற…” புன்னகையுடன் கேட்க, திகைத்தான்.
“அ…அப்படி ஒண்ணும் இல்ல சார்… அந்தப் பொண்ணைப் பார்த்து நாலு வார்த்தை ஆறுதலாப் பேசலாமேன்னு தான்…” சொல்லியவனுக்கு உண்மையிலேயே “தான் எதற்கு இப்போது அவள் மீது இத்தனை அக்கறை எடுத்துக் கொள்கிறோம்…” என்று திகைப்பாக இருந்தது. “ஒருவேளை எங்கள் இருவரின் வாழ்விலும் விதி ஒரே போல விளையாடியதன் பரிதாபமா, நன்றாக வாழ்ந்த பெண் இந்த மாதிரி இடத்தில் கஷ்டப் படுகிறாளே என்ற இரக்கமா…” என யோசித்தான்.
அவனுக்கு காரணம் தெரியவில்லை… ஆனாலும் அவளைப் பார்க்க வேண்டும்… ஆறுதல் சொல்ல வேண்டுமென்று மனம் விரும்பியது.
“சரி, நாளைக்கு அந்தப் பொண்ணைப் பார்க்க ஏற்பாடு பண்ணறேன்…” என்றவர், “போயி எல்லாருக்கும் ஸ்வீட் கொடு…” என்று நகர்ந்தார்.
சந்தோசத்துடன் வரிசையில் நின்றவர்களை நோக்கிக் கொண்டே ஸ்வீட் பாக்ஸ் இருக்கும் இடத்துக்கு செல்ல அங்கே நான்கு பேர் பெட்டியை உடைத்து அதைக் கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். சக்தியும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள பெண் கைதிகள் வரிசையில் நிரஞ்சனாவைத் தேட அவள் வரிசையில் நில்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தாள்.
அந்த அருக்காணியும், கல்யாணியும் வரிசையில் நிற்பதைக் கண்டவன் கடுப்பானாலும் அமைதியாய் ஒவ்வொருவருக்கும் இரண்டு லட்டு, மிக்சர் அடங்கிய பாக்கெட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“அந்தப் பொண்ணை வந்து வாக்கிக்க சொல்லு…” என்று ஒருத்தியிடம் நிரஞ்சனானைக் கை காட்ட அவள் அழைத்தாள்.
“இந்தா பொண்ணு, வந்து வரிசைல நின்னு இனிப்பு வாங்கிக்க… வார்டன் அம்மா திட்டும்…” என்றதும் அவளும் வந்து நின்றாள்.
வரிசையில் வந்தவள் சக்தியைக் கண்டதும், “கடவுளே, ஏன் மீண்டும் மீண்டும் இவனை என் முன்னில் கொண்டு வந்து மிச்சமிருக்கும் என் சக்தியையும் உறிஞ்சுக் கொள்கிறாய்…” என மனதில் நொந்து கொண்டே குனிந்தபடி நின்றாள்.
“ஹாப்பி இன்டிபென்டன்ஸ் டே நிரஞ்சனா…” என்றவனைக் கண்டு சிரிப்பதா, அழுவதா என்று புரியாமல் “இவன் என்ன லூசா…” என்பது போல் பார்த்தவள் அமைதியாய் வாங்கிக் கொண்டு நகர்ந்தாள். அவளது மனநிலை புரிய அவளையே பார்த்து நின்றான் சக்தி. ஏதோ ஒரு சமூக அமைப்பு அன்று அனைவருக்கும் ஹோட்டலில் உணவு ஏற்பாடு செய்திருக்க சிறை சாப்பாடு சாப்பிட்டு வெறுத்துப் போனவர்கள் ஆவலுடன் மதிய உணவுக்கு காத்திருந்தனர்.
தனியே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த நிரஞ்சனாவிடம் அந்த அருக்காணியும், கல்யாணியும் வம்பிழுக்க சென்று அமர்ந்தனர்.
“ஏய் விடியாமூஞ்சி, உனக்கெதுக்குடி ஸ்வீட்டு… குடுடி…” என்று கையை நீட்ட நிரஞ்சனா மறுக்காமல் கொடுத்து விட்டாள்.
“ம்ம்… அன்னைக்கு வாங்கின அறை வேல செய்யுது…” என்று நக்கலடித்தபடி நகர்ந்தவர்களை சக்தி கவனித்துக் கொண்டு தான் இருந்தான். இவர்களுக்கு ஏதாவது பாடம் புகட்ட வேண்டும் என்று காத்திருந்தவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஹோட்டலில் இருந்து பெரிய அண்டாக்களில் சாப்பாடு வந்திறங்க அதை பரிமாறும் இடத்துக்கு கொண்டு போய் வைத்தனர். மகளிர் சிறைக்கும் கொடுக்க வேண்டி இருந்ததால் சில பெண்களை அழைத்து எடுத்துச் செல்லும்படி கூறினார் சிறை சிப்பந்தி.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அருக்காணி, கல்யாணியை “வந்து ஒரு கை பிடிங்க…” என்று சக்தி அழைத்தான்.
அவர்கள் இருவரும் சூடான அண்டாவை முந்தானையால் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொள்ள, “ஆ… சுடுது…” என்றவன் கையிலிருந்து சாம்பார் அண்டாவை ஒரு பக்கம் சரித்தபடி வேகமாய் கீழே வைக்க அவர்கள் இருவரும் அலறினர்.
“ஆ… காலு… ஐயோ, எரியுதே…” என்று அலற மற்றவர்கள் ஓடி வந்தனர். மனதுக்குள் அதை ரசித்துக் கொண்டே “அச்சோ, சாரிக்கா, கை சூடு தாங்க முடியல…” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூறியவனை முறைத்தனர்.
“என்ன சக்தி, பார்த்து பிடிக்கறதில்லையா…” சிறை சிப்பந்தி கேட்க, “பார்த்து தான் மேடம் பிடிச்சேன்… சூடுல கை வழுக்கிடுச்சு…” என்றவனை நோக்கி கண்ணை சிமிட்டி, சரி, போ… இனியாச்சும் ஒழுங்கா பிடி…” என்று அனுப்பி வைத்தார்.
அலறியபடி கீழே அமர்ந்த இருவரும் காலைப் பிடித்துக் கொண்டு, “உப்… உப்… என்று ஊதிக் கொண்டு கையை உதறிக் கொண்டிருக்க, பெரிய காயம்லாம் இல்ல போலருக்கு… போங்க, ரெண்டு பேரும் மருந்து வைங்க…” அவர்களை அனுப்ப, “சும்மா நின்னவங்களை கூப்பிட்டு சூடு வச்சிட்டல்ல, உன்னை…” என்று முறைத்தபடி நொண்டிக் கொண்டே சென்றனர்.
அவர்களைப் பழி வாங்கிவிட்ட சந்தோஷத்தில் சக்தி, நிரஞ்சனாவை நோக்க அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
சக்தி அவளைப் பார்த்து நிற்பதைக் கண்ட சிறை சிப்பந்தி, “சக்தி, அந்தப் பொண்ணுக்காக தான இப்படிப் பண்ணின, உன்கூடப் படிச்ச பொண்ணாமே… ஜெயிலர் சார் சொன்னார்…” என்று கேட்க, பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.

Advertisement