Advertisement

அத்தியாயம் – 32
நிரஞ்சனாவின் உதையில் எட்டி விழுந்த சொர்ணாக்கா ஆவேசமாய் எழுந்து வந்து அவள் முகத்தில் ஓங்கி அறைந்து, “என்ன திமிருடி உனக்கு… என்னையே உதைக்கறியா… உன்னை என்ன செய்யறேன் பார்…” என்றபடி முகத்தில் மாறி மாறி அறைய ஓடி வந்து அவளைப் பிடித்து மாற்றினர் சிறைக் காவலர்கள்.
“ஏய் அருக்காணி, வர வர உன் அலும்பு ஓவராப் போயிருச்சு… எதுக்கு அந்தப் பொண்ணுகிட்ட வம்பு பண்ணற…” சொர்ணாக்காவைப் பற்றி நன்கு தெரிந்த அந்தப் பெண் அவளைத் திட்டிக் கொண்டே தலையில் கை வைத்து அமர்ந்திருந்த மற்றவளிடம் திரும்பினார்.
“ரத்தம் வர்ற மாதிரியா அடிச்சுப்பீங்க… சனியனுகளா… ரெண்டு பேரும் பக்கத்து செல்லுக்குப் போங்க…” என்று விரட்ட அதற்குள் சத்தம் கேட்டு வார்டன் வந்தாள்.
“என்னாச்சு…” ஆண்களின் குரலும் உருவமும் கொண்டிருந்த வார்டன் முறைப்புடன் நிரஞ்சனாவை நோக்கி, “ம்ம்… என்ன…” என்றாள்.
“மே…மேடம், இ…இவங்க என்னை…” என்று திணறியவள், “அசிங்கமா நடந்துக்கப் பாக்குறாங்க…” என்றாள்.
“அசிங்கமாவா, அப்படின்னா… என்ன பண்ணாங்க…” வார்டன் வேன்றுமென்றே கேட்க நிரஞ்சனா நடந்ததை சொல்ல முடியாமல் உடல் கூசி, வாய் மூடி நிற்க அந்த சிறைக் காவலர் பெண்மணிக்கு பாவமாய் இருந்தது.
“மேடம்… அவங்கதான் இவளை…” என்று அவர் சொல்லப் போக கை காட்டித் தடுத்தவர், “நீ என்ன இவ வச்ச ஆளா… என்னமோ பார்த்த போல சொல்லுற…” என்றவள் விரலை உதட்டில் வைத்து, “அடங்கு…” என்றார்.
“ஏய் கல்யாணி, பெரிய காயமா…”
“இல்ல மேடம்… லைட்டா தான்…” என்றாள் கல்யாணி.
“ம்ம்…” என்று நிரஞ்சனாவிடம் திரும்பியவர், “இங்க பார்… நீ புதுசா வந்ததால இந்த முறை மன்னிச்சு விடறேன்… அடுத்த முறை இப்படி யார் மண்டையாச்சும் உடஞ்சுச்சு… இன்னும் ரெண்டு வருஷம் இங்கயே கிடக்க வேண்டியது தான்…” மிரட்டலாய் சொன்னவர் மற்ற செல்லிலுள்ள பெண்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்க, “ம்ம்… போயி படுங்க…” என்று உறும அவர்கள் தலை மறைந்தது.
கண்ணீருடன் தலை குனிந்து நின்றாள் நிரஞ்சனா.
“இங்க பாரு இது ஒண்ணும் உன் வீடில்ல… இங்க என்ன நடைமுறையோ அதுக்கு தகுந்த போல தான் இருக்கணும்… புரிஞ்சுதா…” என்று கேட்க, பயத்துடன் தலையாட்டினாள்.
“ஏய் அருக்காணி, ரெண்டு பேரும் என்னோட வாங்க…” என்று முன்னில் நடக்க அவளைக் கிண்டலாய் பார்த்துக் கொண்டே நாக்கை நீட்டி பரிகசித்துவிட்டு அந்த ரெண்டு ஜென்மங்களும் நகர சிறைக்காவலர் பெண், நிரஞ்சனாவை நோக்கினார்.
“கவலப்படாதம்மா… இங்க இந்த மாதிரி கேடு கேட்ட ஜென்மங்கள் சிலது இருக்க தான் செய்யுது… இந்தம்மாவை கைல போட்டுட்டு ரொம்ப தான் ஆடுதுங்க… நீ அவங்ககிட்ட எந்த வம்புக்கும் போகாம ஒதுங்கி இரு… ஏதோ அந்தப் பொம்பள உனக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காம விட்டுச்சேன்னு சந்தோஷப்பட்டுக்க…” என்று சமாதானம் சொல்ல அவள் கண்ணீர் விட்டாள்.
“எதுக்கு இப்படி ஒரு வாழ்க்கை… வெளிய தான் மானத்தைக் காப்பாத்த போராடனும்னா, இங்க பொம்பளைங்களே இப்படி அசிங்கப் படுத்துறாங்க… பேசாம என்னைத் தூக்குல போட சொல்லுங்க… ஒரேயடியா போயிடறேன்…” அழுகையுடன் சொன்னவளைக் கண்டு அவருக்கும் மனம் கலங்கியது. “அழாதம்மா, உன் வேதனை புரியுது… ஆனா, அப்படில்லாம் தண்டிக்க சட்டத்துல இடமில்லை…” என்றார்.
“மனுஷங்களை வாழவும் விடாம, சாகவும் விடாம இந்த சட்டம் எதுக்கு மேடம்…” என்றவளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் நிற்க தளர்வுடன் தனது அறைக்கு சென்றாள் நிரஞ்சனா. இதைப் போல நிறைய பெண்களின் கண்ணீரும் வேதனையும் பார்த்திருந்த அந்தப் பெண்மணி அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தார்.
அடுத்தநாள் கைதிகள் மைதானத்தில் பேசிக் கொண்டே ஒவ்வொரு வேலையில் இருக்க வார்டன் வந்தார்.
“என்ன சக்தி, சுதந்திர தினத்துக்கு ஏதாச்சும் நிகழ்ச்சி பிளான் பண்ணி இருக்கீங்களா…”
“ம்ம்… சிவா பாட்டுப் பாடறான் சார்… அப்புறம் ஒரு நாடகமும் டான்சும் பிளான் பண்ணிருக்கோம்…”
“ஓ… நல்லது பா… நிகழ்ச்சிக்கு அமைச்சரும், சூப்ரண்டும் வருவாங்க போலருக்கு, அவங்களை ஓட வச்சிடாதிங்க…”
“இல்ல சார், சும்மா இருக்கும்போது பிராக்டீஸ் பண்ணிட்டு தான் இருக்கோம்…”
“ம்ம்… பெண்கள் சிறைல சுவரெல்லாம் அழுக்காருக்காம்… யாராச்சும் கூட ரெண்டு பேரை அழைச்சிட்டுப் போயி சுண்ணாம்பு பூசி, தோரணம் கட்டிருங்க…”
பெண்கள்சிறை என்றதும் அவனுக்கு நிரஞ்சனாவின் நினைவு வர அவன் யோசனையைக் கண்டே புரிந்து கொண்டவர்,
“அப்புறம் சக்தி, அங்க போயி தேவையில்லாம யாரோடவும் பேசறதுக்கு நிக்காத… நேத்து வேற ஏதோ பிரச்சனை ஆயிருக்கும் போலருக்கு…” சொல்லிக் கொண்டே அவர் நடக்க இவன் பின்னிலேயே ஓடினான்.
“ச..சார், அங்க என்ன பிரச்சனை, அந்தப் பொண்ணுக்கு எதும் பிராப்ளம் இல்லையே…” அவன் கவலையுடன் கேட்பதைக் கண்டவர் சிரித்தார்.
“என்ன சக்தி, அந்தப் பொண்ணு மேல ரொம்ப அக்கறையா இருக்க போலருக்கு…” என்றவர் அங்கே நடந்ததைக் கூற அவன் மனம் வேதனையில் துடித்தது.
“என்ன சார் சொல்லறீங்க… பெண் கைதிகள் இவ்ளோ மோசமா நடந்துப்பாங்களா…” அவன் அதிர்ச்சியுடன் கேட்க,
“இதை விட மோசமாவே நிறைய நடக்குது சக்தி…” என்றவர் சுற்றிலும் பார்த்துக் கொண்டு, 
“சக்தி, எனக்கே சொல்ல கஷ்டமா தான் இருக்கு… எங்க சில அதிகாரிகள் கூட பெண் கைதிகளை விபச்சாரத்துக்கு உட்படுத்துறதா நியூஸ் வந்திருக்கு… ஆனா, அந்தளவுக்கு நம்ம ஜெயில்ல எந்த அதிகாரியும் மோசம் இல்லை… அந்த ஜெயிலர் பொம்பளை கொஞ்சம் திமிரு புடிச்சது… அதைக் கைல போட்டுட்டு அந்த அருக்காணியும், கல்யாணியும் இப்படி எல்லாம் பண்ணுறாங்க…” அவர் சொன்னதைக் கேட்கக் கேட்க சக்தியின் உள்ளம் பதறியது.
“சார், பாவம் சார் அந்தப் பொண்ணு… இங்க வந்து இப்படி கஷ்டப்படுதே… அந்த ரவுடிப் பொம்பளைங்க ஏதாச்சும் பண்ணிட்டா…” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
“ம்ம்… கொஞ்சம் எச்சரிக்கையா தான் இருக்கணும்… அவளுங்க ஜெயிலே கதின்னு எப்பவும் வந்து போறவளுங்க… எது செய்யவும் அஞ்ச மாட்டாங்க… சரி, நீ வேலையைப் பாரு…” சொல்லிவிட்டு அவர் செல்ல அவன் மனது அவளை நினைத்து கலங்கிக் கொண்டிருந்தது.
அடுத்தநாள் உடன் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு சுண்ணாம்பு அடிப்பதற்காய் சிறைக்கு சென்றனர். வெளிப்பக்க சுவரை மட்டுமே இவர்களை அடிக்க சொல்லி இருந்தனர். உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த சிறைக் காவலர் இவனைக் கண்டதும், “சக்தி… இன்னைக்கு இங்க டியூட்டியா..”  என்று சிரித்தபடி அவனிடம் வந்தவர் துவைக்கும் கல்லருகே இருந்த பைப்பைக் காட்டி, “அந்த பைப் கொஞ்சம் ஒழுகிட்டே இருக்கு.. சரி பண்ணித் தர்றியா…” என்றார்.
“சரி மேடம்…” என்றவனின் கண்கள் நிரஞ்சனா இருக்கிறாளா எனத் தேடிக் கொண்டே அந்த பைப்பை நோக்கி செல்ல அங்கே துவைத்துக் கொண்டிருந்த நிரஞ்சனா இவனைக் கண்டதும் திகைத்து மீண்டும் குனிந்து கொண்டாள்.
“நிரஞ்சனா…” அவனது குரல் கேட்டாலும் அவள் நிமிராமல் இருக்க முகத்தில் தெரிந்த கை அடையாளமும், கலங்கி இருந்த கண்களும் கண்டு பரிதபமாய் இருந்தது.
“நிரஞ்சனா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… தண்ணி டேங்க் கிட்ட வர்றியா…” அவன் பைப்பை பார்த்தபடி திரும்பிப் பார்க்காமல் சொல்ல அவளும் குனிந்தே பேசினாள்.
“வேண்டாம்… நான் எங்கயும் வரலை… எனக்காக நீங்க கவலைப் பட வேண்டாம்…”
“ப்ளீஸ் நிரஞ்சனா, ரெண்டே நிமிஷம்… டேங்க் கிட்ட போ…” அவன் குரலில் என்ன தோன்றியதோ…”ம்ம்…” என்றாள்.
துவைத்த துணிகளுடன் அவள் அந்தப் பக்கம் செல்ல அந்த அருக்காணியும், கல்யாணியும் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறைக்காவலரிடம் வந்த சக்தி, “மேடம்… தண்ணி டேங்க் வால்வ் ஆப் பண்ணனும்…” என்றான்.
“ஓ… அதோ அந்தப் பக்கம் இருக்கு…” என்று கைகாட்ட சக்தி அங்கே சென்றான்.
நிரஞ்சனா துணியை காயப் போட்டுக் கொண்டிருக்க அவளிடம் சென்றவன், “நிரஞ்சனா, நடந்ததை எல்லாம் கேள்விப் பட்டேன்… மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… உனக்கு எப்படி ஆறுதல் சொல்லறதுன்னே தெரியல…” அவன் சொல்லவும், “விட்டிருங்க சக்தி… என்னைப் பத்தி கவலைப்படாதீங்க… ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லவோ, பரிதாபப்படற நிலைமைலயோ நாம இல்ல… என்னோட ஒரே வருத்தம் எனக்கு மரண தண்டனை கிடைக்காமப் போயிருச்சேன்னு மட்டும் தான்…” என்றவள் சொல்லிவிட்டு நிற்காமல் சென்றுவிட அப்படியே நின்றான்.
அவள் மனம் எத்தனை வேதனையில் இருந்தால் இப்படி சொல்லி இருப்பாள் என நினைத்தவன் மனமும் கலங்கியது.
அவளுக்கு உதவி செய்ய மனமிருந்தும் செய்ய முடியாத கையாலாகாத் தனத்தை நினைத்து வேதனைப்பட்டான். பைப்பை சரி செய்துவிட்டு சுவருக்கு சுண்ணாம்பு பூசி முடித்துவிட்டு அவர்களின் செல்லுக்கு சென்ற பின்னும் அவள் சொன்ன வார்த்தைகளே மனதைக் கிழித்தது.
“நிரு ஏன் அப்படி சொன்னாள்… அந்தளவுக்கு அவள் மனம் ரணமாகி விட்டதா… நன்றாகப் படித்தும் நல்ல குடும்பத்தில் பிறந்தும் இப்படி அவதிப்படுகிறாளே…” என நினைத்தவனுக்கு அபர்ணாவின் நினைவு வர மனம் வெறுப்பில் நிறைந்தது.
“அவளுக்கும் இவளுக்கும் தான் எத்தனை வித்தியாசம்…” அவளை விட படிப்பிலும் அழகிலும் அமைதியிலும் கூட சிறப்பாக இருந்தாலும் அதிகமாய் அலட்டிக் கொள்ளாமல் விலகியே நிற்பாள் நிரஞ்சனா.
“அபர்ணாவுக்கு பிடித்ததை மட்டுமே என் பிடித்தமாய் நினைத்து அவளுக்குப் பிடிக்காததை விலக்கி வைத்தேனே… அப்படி இருந்தும் அவள் என் குடும்பத்தையே சிதைத்து விட்டாளே…” வெகு நாட்களுக்குப் பிறகு அவளை யோசித்ததில் மனம் கலங்க, “பாவம், என் பவிக்குட்டி… பிறந்த குழந்தைக்கு பால் கூடக் கொடுக்காத பாவியை உருகி உருகிக் காதலித்தேனே…”  தன்னைத் தானே நொந்து கொண்டவன் கண்ணில் குழந்தையின் முகம் தோன்றி “சித்தப்பா…” என்று சொல்ல  மனது வலித்தது.
என்னதான் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல்  குழந்தை வெற்றி, இந்துவின் மகளாக வளர்வதே நல்லது என்று மூளை சொன்னாலும் மனது சற்று கலங்கத்தான் செய்தது.
அவளை நினைத்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ அங்கே குழந்தைக்கு சட்டென்று புரையேற இந்து அவள் தலையில் மெதுவாய் தட்டிக் கொடுத்தாள்.
“பவிக்குட்டியை யாரோ நினைக்கறாங்க போலிருக்கே…” சொல்லிக் கொண்டே தண்ணியைக் கொடுக்க குடித்தாள்.
பவிக்குட்டி மீண்டும் இந்துவின் மடியில் படுத்துக் கொள்ள அவள் தட்டிக் கொடுக்கத் தொடங்கினாள். வெற்றி மொபைலில் நோன்டிக் கொண்டே மகள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“ம்மா, நம்ம வருண் சொல்லதான்… அவன் வீட்டுக்கு கொஞ்ச நாள்ல குட்டிப் பாப்பா வரப் போகுதாம்… அவனை அண்ணான்னு கூப்பிதுமாம்… பாப்பாகூட விளையாதுவேன், கொஞ்சுவேன் சொல்லதான்…” என்றவள் முகம் சட்டென்று வாட இந்துவின் கையைப் பிடித்துக் கொண்டவள், “அம்மா… நம்ம வீட்டுக்கும் குட்டிப் பாப்பா வந்தா நல்லாதுக்கும்ல… என்ன அக்கா கூப்பிடும்… நானும் பாப்பாவ பத்திரமாப் பார்த்துப்பேன்… விளாதுவேன்…” அவள் அடுக்கிக் கொண்டே செல்ல வெற்றி இந்துவை நோக்கி புன்னகைக்க அவள் குனிந்து கொண்டாள்.
“அதெல்லாம் வரும்போது வரும் டா செல்லம்… நீ இப்ப பேசாமத் தூங்கு…” என்று மகளிடம் சொல்ல, “ப்ளீஸ்மா, எனக்கு ஆசையா இருக்கு… எவ்ளோ நாள் தான் நான் தனியாவே விளாதுவேன்… பாப்பா இருந்தா நாங்க ஒண்ணா விளாதுவோம்ல…” அவள் மனது ஒரு தீர்மானத்தில் இருக்க, இந்து என்ன சொல்வதென்று திகைத்தாள்.
“பவிக்குட்டி… நீ சீக்கிரம் தூங்குனாதான் பாப்பா வருமாம்… இல்ல இந்து, அப்படிதானே…” அவன் அவளை நோக்கி கண்ணடிக்க அவளுக்கு நாணம் வந்தாலும் மறைத்துக் கொண்டு முறைத்தவள், “ப்ச்… நீங்க பேசாம இருங்க… எதையாச்சும் சொல்லி வச்சு அவ அதையே பிடிச்சுக்குவா…”
“அதனால என்ன, நல்லாப் பிடிச்சுகிட்டும்… நல்லது தானே… அவளுக்கு மட்டும் இல்ல, எனக்கு கூட அந்த ஆசை இருக்கதான் செய்யுது…” என்றவனின் முகம் சீரியஸாய் மாற அதற்குமேல் எதுவும் பேசாமல் அமைதியானான். அதைப் புரிந்து கொண்ட இந்துவும் மௌனமாய் இருந்தாள்.
சிறிது நேரத்தில் குழந்தை உறங்கிவிட அவளை சரியாய் படுக்க வைத்து போர்த்தி விட்டவள் வெற்றியின் அருகில் வந்து அமர்ந்தாள்.
அவன் சாய்வாய் அமர்ந்து வெறுமனே கண் மூடி அமர்ந்திருக்க அவனது கையைப் பற்றிக் கொண்டாள் இந்து.
“என்ன யோசனை…”
“ம்ம், ஒண்ணும் இல்ல மா… பவித்ரா பிறந்த சமயம் நினைவு வந்திருச்சு…” சொல்லி விட்டு அமைதியாய் இருக்க அவன் கையை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டவளுக்கு அவனது எண்ணவோட்டம் புரியவே செய்தது. குழந்தை பிறந்த நேரத்தில் குடும்பத்தில் நடந்த வேதனைகளும் அனுபவித்த அவஸ்தைகளும் அவன் மனதை அலட்டுகிறது எனப் புரிந்து கொண்டவள் அவளாகவே அவன் மார்பில் சாய்ந்து கொள்ள அவளை அணைப்பாய் வளைத்துக் கொண்டது அவன் கை.
கண் மூடி அமர்ந்தவனின் கன்னத்தில் முத்தமிட்டவள், “பழையதை நினைச்சு வேதனைப்பட்டது போதும்… இனி நடக்கறது நல்லதா நடக்கும்னு நம்புவோம்…” என்றாள்.
“ம்ம்… என் அம்மாக்கும், சக்திக்கும் குழந்தைன்னா ரொம்ப ஆசை… பவி வயித்துல இருக்கும்போது அந்தப் பாவியை சக்தி அவ்ளோ தாங்கினான்… அம்மா, அவளை மகளை விட அதிகமா பாசத்தோட பார்த்துகிட்டாங்க… நாங்க ரெண்டு பேரும் பசங்களா போயிட்டதால பெண் குழந்தைன்னா அம்மாக்கு ரொம்ப ஆசை… அதனால பேத்தி தான் பிறப்பா… அவளுக்கு பவித்ரான்னு பவித்திரமான பேரை வைக்கணும்… பெண் குழந்தை இல்லாத குறையை அவளை அலங்காரம் பண்ணி அழகு பார்த்து தீர்த்துக்குவேன்னு எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க… எதுமே நடக்காம மனசு வெந்து வேதனைல போயிட்டாங்க…” சொன்னவனின் கண்களில் ஈரம் பளபளக்க இந்துவுக்கும் வருத்தமாய் இருந்தது. ஒரு குடும்பத்தின் மொத்த ஆசைகளையும், கனவுகளையும் ஒரு பெண்ணின் தவறான போக்கு அழித்துவிட்டது.
“ஒரு ஆண் தவறு செய்தால் அவனோடு முடிந்துவிடும்… பெண் தவறு செய்தால் குடும்பமே ஆட்டம் கண்டுவிடும்…” என்று பெரியவர்கள் சொல்லும் வாக்கு நினைவில் வந்தது. “அழகான ஸ்ருதியாய் அவர்களின் குடும்பத்தில் கலந்திருக்க வேண்டிய அபர்ணா அபஸ்வரமாய் மாறி குடும்பத்தையே சிதைத்து விட்டாளே…” என வேதனைப்பட்டாள். பழைய நினைவில் கலங்கிக் கொண்டிருந்தவனை அப்படியே விடாமல் பேச்சை மாற்ற முயன்றாள்.
“ம்ம்… உங்க வேதனை புரியுதுப்பா… அதுக்காக நடந்ததையே நினைச்சு கலங்கிட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா…”
“எனக்குப் புரியுது இந்து… ஆனா, அதை நினைக்காம இருக்க முடியலை… அம்மாவோட ஆசை தம்பியோட கனவு எல்லாம் நடக்காமயே போயிருச்சே…”
“ம்ம்… அதை நாம நடத்திட்டாப் போகுது…” என்றவளை அவன் புரியாமல் பார்க்க நாணத்துடன் குனிந்து கொண்டாள்.
“என்ன சொல்லற இந்து…” அவன் குழப்பத்துடன் கேட்க,
“என் மக்குப் புருஷா… பவி சொன்ன போல ஒரு பாப்பாவை ரெடி பண்ணி அம்மா ஆசையைப் பூர்த்தி செய்துடலாம்…” அவள் சொல்லவும் அவன் கண்கள் மலர்ந்தது.
“ஓ… நீ அப்படி சொல்லறியா… எனக்கும் ஆசையா தான் இருக்கு… ஆனா, நமக்குன்னு ஒரு குழந்தை வந்துட்டா பவி மேல அன்பு குறைஞ்சிடுமோன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு…” சொல்லிக் கொண்டே உறங்கும் குழந்தையின் முடியைக் கோதி விட்ட கணவனை முறைத்தாள் இந்து.
“ஓ… நம்ம மேல உங்களுக்கு இவ்ளோ தான் நம்பிக்கையா…” என்றவள், “நீங்க தனியாளா பவியை அக்கறையோட பார்த்துக்கறதை நினைச்சு தான் உங்கமேல எனக்கு ஒரு அபிப்ராயமே வந்துச்சு… ஒருவேளை உங்க தம்பி இவளை வளர்த்திருந்தாக் கூட இவ்ளோ பொறுமையா, அக்கறையா வளர்த்திருப்பார்னு சொல்ல முடியாது… அப்படிப்பட்ட உங்களுக்கு இன்னொரு குழந்தை வந்தா இவ மேல பாசம் போயிடுமா… உங்களை நீங்களே குறைச்சு சொல்லாதிங்க… எனக்கு கோபம் வருது…” என்றவள் அவன் கையை விலக்கி விட்டு திரும்பிப் படுத்துக் கொள்ள தன்னிடம் அவள் கொண்ட நம்பிக்கை சந்தோஷமாய் இருந்தது.
அருகே சாய்வாய் படுத்துக் கொண்டு அவள் மீது கைவைக்க தட்டி விட்டவளைக் கண்டு அவனுக்கு உற்சாகமானது.
“இந்தூ…” அவள் காதில் கிசுகிசுப்பாய் உச்சரிக்க கூச்சத்தில் நெளிந்தாள் அவள்.
“பவிக்குட்டிக்கு தம்பிப் பாப்பா வேணுமா, தங்கை வேணுமான்னு கேக்காம விட்டுட்டோமே…” சொல்லிக் கொண்டே அவளை நெருங்கிப் படுத்தவன் பின்னிலிருந்து அணைத்துக் கொள்ள அதற்குமேல் அவளால் கோபத்தைப் பிடித்து வைக்க முடியவில்லை. அவனது வேதனைகளுக்கும் கனவுக்கும் மருந்தாய் அவளே மாறினாள்.
குடும்பம் என்னும் விழுதைத்
தாங்க மனைவி என்னும்
வேர் நினைத்தால் மட்டுமே
அந்த குடும்பம் தழைக்கிறது…
ஆயிரம் வார்த்தைகள் தராத
சமாதானத்தை அன்பான
அருகாமை தந்துவிடும்…
மனைவியிடம் தாயைத்
தேடும் கணவனும்,
கணவனிடம் பிள்ளையைக்
காணும் மனைவியும்
இருக்கும் வரை காதல்
என்றும் அழிவதில்லை…

Advertisement