Advertisement

“ம்ம்… சரி சார்…” என்றவன் சென்றான். பெரிய பெரிய அண்டாக்களில் சோறு வெந்து கொண்டிருக்க வெந்ததை மூங்கில் கரண்டியால் அள்ளி கூடையில் போட்டு வடித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு அண்டாவில் சோறும் இன்னொரு அண்டாவில் குழம்பும் கொண்டு செல்லத் தயாராய் இருக்க, அதை இரண்டிரண்டு பேராய் பிடித்து டிராலியில் ஏற்றி வைத்தனர். அதைத் தள்ளிக் கொண்டு கேட்டுக்கு செல்ல அங்கு பணியில் இருந்த போலீசார், “பெண்கள் சிறைக்கா… இன்னும் கொண்டு வரலியான்னு வார்டன் மேடம் இப்பதான் கேட்டுட்டுப் போனாங்க… போங்க…” என்றவர் ஒரு ஆள் மட்டுமே நுழையும் அளவுக்கு இருந்த நுழைவாயில் கதவைத் திறந்துவிட இருவரும் டிராலியுடன் வெளியே வந்து திரும்பி அதே போலிருந்த அடுத்த கேட்டுக்கு செல்ல, “என்னப்பா சக்தி… இன்னைக்கு உன்னை இந்த வேலைக்கு அனுப்பிட்டாங்களா…” என்று கேட்டுக் கொண்டே டியூட்டியில் இருந்த பெண் போலீஸ் கேட்டைத் திறந்து விட்டார்.
“ஆமாம் மேடம்… எப்பவும் வர்ற ராமு தான் நேத்து ரிலீஸ் ஆயிப் போயிட்டானே…” என்று சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல அங்கே வெள்ளை சீருடையில் அங்கங்கே உலாத்திக் கொண்டிருந்தனர் பெண் கைதிகள். வரிசையாய் போடப்பட்டிருந்த துவைக்கும் கல்லில் சிலர் துவைத்துக் கொண்டிருக்க சிலர் அலாசிக் கொண்டிருந்தனர். சிலர் கதை பேசிக் கொண்டிருக்க வார்டன் அதட்டிக் கொண்டே வந்தார். இவர்களைக் கண்டதும், “வசந்தி, யாரையாச்சும் கூப்பிட்டு அதை இறக்க உதவி செய்…” என்றார்.
அந்த வந்தியும் இன்னொரு பெண்ணும் சேர்ந்து இரண்டு அண்டாக்களையும் இறக்க உதவி செய்ய நால்வருமாய் ஒரு திண்டின் மீது ஏற்றி வைத்தனர். பெண் கைதிகள் தட்டு, கிளாசுடன் சாப்பாடு வாங்க வரிசையில் நிற்க இவர்களிடம் வந்த வார்டன், “சக்தி, உன்னோட பேரும் தண்டனைக் குறைப்பு லிஸ்ட்ல இருக்குன்னு கேள்விப்பட்டேன்… சந்தோசம்பா…” என்றார்.
“ம்ம்… ஆமாம் மேடம்…” என்றவன், “சாரி, இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிருச்சு…” என்றான்.
“அது பரவால்ல… இங்க என்ன வெட்டி முறிக்குறாங்க… நேரத்துக்கு சோறு போடறதுக்கு…” என்று சொல்லிக் கொண்டிருக்க வரிசையில் தட்டுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டதும் சக்தியின் புருவம் யோசனையுடன் சுருங்க அவளையே பார்த்தான். அவளது அழகான முகத்தில் சோகம் அப்பியிருக்க, எங்கோ வெறித்துப் பார்த்த களையிழந்த கண்கள் சிரிக்க மறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது என்றது. அவளை அங்கு கண்டதில் அவன் அதிர்ந்து நிற்க சிவா அழைத்தான்.
“சக்தி, என்ன பார்க்கற… வா, போகலாம்…” என்று அவன் கையைப் பிடித்து அழைக்க, வரிசையில் நின்ற பெண்களைக் கடந்து வந்தவன் அவள் அருகே நிற்க சட்டென்று அருகில் யாரோ நின்றதில் திகைத்து ஏறிட்டவள் கண்கள் அதிர்ச்சியில் சுருங்க, “சக்தி…” என்று உச்சரித்தது.
“அங்க என்ன பார்வை… போ, போ… சக்தி கிளம்பு…” ஒரு பெண் காவலர் குரல் கொடுக்க, சிவா இவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். பெண் கைதிகளிடம் அப்படி எல்லாம் யாரையும் பேச விட மாட்டார்கள். பிறகு அதற்கும் ஒரு பேச்சு கேட்க வேண்டும்.
அவன் யோசனையுடனே வருவதைக் கண்ட சிவா, “என்னாச்சு சக்தி, அந்தப் பொண்ணைத் தெரியுமா…” என்றான்.
“ம்ம்… நிரஞ்சனா… என்னோட காலேஜ்ல தான் படிச்சா…” என்றவன், “முன்னாடி இங்க பார்த்ததில்லை… எதுக்கு வந்திருக்கான்னு தெரியலயே…” என்றான் குழப்பத்துடன்.
“அதெல்லாம் நம்ம வார்டன் கிட்ட விசாரிச்சுக்கலாம் வா…” என்றவன் அவர்களின் செல்லுக்குள் நுழைந்தான்.
அங்கேயும் உணவு வாங்க ஆண் கைதிகள் வரிசையில் நின்று கொண்டிருக்க இவர்களும் தட்டை எடுத்து வந்து சேர்ந்து கொண்டனர். சாப்பாட்டை வாங்கிக் கொண்டு மரத்தடியில் இருந்த திண்டில் அமர்ந்தவன் மனது அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது.
நிரஞ்சனா மிகவும் கலகலப்பான அழகான பெண். அவளும் இஞ்சினியரிங் பிரிவைச் சேர்ந்தவள் என்பதால் சக்திக்கு அதிகம் பழக்கம் இல்லை. என்றாலும் கல்லூரியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் அடிக்கடி இவள் பரிசு வாங்கும்போது கவனித்திருக்கிறான். அபர்ணாவுக்கு இவளைக் கண்டாலே பிடிக்காது… அழகிலும், திறமையிலும் தன்னை விட சிறந்த நிரஞ்சனாவைப் போட்டியாய் நினைக்காமல் எதிரியாய் நினைத்தாள் அபர்ணா. அவளுக்குப் பிடிக்காதென்று சக்தி இவளோடு பேச மாட்டான். 
“அப்படி இருந்தவள் இப்போது எதற்கு இந்த சிறையில்… என்ன குற்றத்துக்காக வந்திருப்பாள்…” என யோசித்தவனுக்கு மண்டை குழம்பியது.
“சரி, வார்டனைப் பார்க்கும்போது கேட்டுக் கொள்ளலாம்…” என நினைத்தவன் அந்த பருப்புத் தண்ணி சாம்பாரை நாக்கில் வைத்தால் ருசி தெரிந்தால் சாப்பிட மாட்டோம் என்று அப்படியே விழுங்கி வைத்தான்.
அடுத்தநாள் காலையில் மகளிர் சிறைக்குப் பின்னில் இருந்த தோட்டத்தில் தான் சக்திக்கு வேலை என்பதால் அங்கே சென்றுவிட்டான். செடிகளுக்கு தண்ணீர் விட்டு காய்க்கத் தொடங்கிய பாகல், வெண்டைக்காய், கத்தரிகளைப் பார்த்து பாகம் ஆகியதைப் பறித்துக் கொண்டிருந்தான் சக்தி. அவனுடன் வேறு சிலரும் பேசிக் கொண்டே வேலையை செய்து கொண்டிருந்தனர். காய்கறிகளை சாக்கில் கட்டி அடுக்களையில் வைத்துவிட்டு குளித்து தனது துணியைத் துவைத்துக் கொண்டிருந்தான் சக்தி.
“சக்தி, வார்டன் உன்னை தண்ணி டேங்கு கிட்ட வர சொன்னார்…” ஊழியர் ஒருவர் சொல்லிச் செல்ல துணியைக் காயப் போட்டுவிட்டு வார்டனிடம் சென்றான் சக்தி.
“வாப்பா சக்தி… இந்த பைப் எல்லாம் பாரு… எப்பவும் தண்ணி ஒழுகிட்டு இருக்கு… உனக்கு தான் கொஞ்சம் பிளம்பிங் வேலை எல்லாம் தெரியுமே… இதை அவிழ்த்து கொஞ்சம் டைட் பண்ணி விடு…” என்றார்.
“பார்க்கறேன் சார்…” என்றவன் அதற்கான டூல் கிட்டை வாங்கி வந்து அவிழ்த்துப் பார்த்தான். அதன் மறை லூசாகி இருக்க உள்ளே ஏதோ டேப்பை சுற்றி மீண்டும் பொறுத்த தண்ணி வடிவது நின்று போனது.
“ம்ம்… பரவால்லியே… படிச்சது MBA ன்னாலும் இந்த வேலை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியே…” என்றவரிடம் “சின்ன வயசுல அப்பா வீட்டுல பண்ணுறதைப் பார்த்து பழகிட்டது தான் சார்… அவர் போனப்புறம் நான் செய்வேன்…” என்றான்.
“ம்ம்… நல்ல விஷயம் தானே… எல்லா வேலையும் தெரிஞ்சு வச்சிருக்கிறது ரொம்ப நல்லது…” என்றவர், “சரி, சுதந்திர தினத்துக்கு கொஞ்சம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எல்லாம் பண்ணிக்க சொல்லி பர்மிஷன் கிடைச்சிருக்கு… யாருக்கு திறமை இருக்கோ பார்த்து ரெடி பண்ண வேண்டியது உன் பொறுப்பு… முந்தின நாள் கலர் பேப்பர் டெகரேஷனும் நீதான் பார்த்துக்கணும்…” என்றார் வார்டன்.
“சரி சார்… அழகா பண்ணிடலாம்…” என்றவன் முகத்தில் ஏதோ யோசனையும் தயக்கமும் தெரிவதைப் பார்த்தவர், “என்ன சக்தி, ஏதோ கேக்கனும்னு நினைச்சிட்டு முழுங்கற போல இருக்கு…” என்றார்.
“அ..அதுவந்து சார்… நேத்து மகளிர் சிறைல நிரஞ்சனான்னு ஒரு கைதியைப் பார்த்தேன்… அந்தப் பொண்ணு என்னோட காலேஜ்ல படிச்ச பொண்ணுதான்… எந்த வம்பு, தும்புக்கும் போகாத நல்ல பொண்ணு… அது எப்படி உள்ள வந்துச்சுன்னு மனசுக்கு கஷ்டமா யோசனையா இருக்கு…” என்றான் சக்தி.
“ஓ… அந்தப் பொண்ணா…” என்றவர் ஒரு நிமிடம் அமைதியாய் இருந்துவிட்டுதொடர்ந்தார்.
“என்னன்னு சொல்லறது, அதுவும் உன்னைப் போல பாதிக்கப்பட்ட பொண்ணு தான்… கட்டின புருஷனே பொண்டாட்டியை வேற ஒருத்தனுக்கு கூட்டிக் கொடுக்க முயற்சி பண்ணி இருக்கான்… இவ சம்மதிக்கலன்னு குளிக்கும்போது அவளுக்கே தெரியாம வீடியோ எடுத்து சம்மதிக்கலன்னா அதை நெட்டுல போட்டுடுவேன்னு பிளாக்மெயில் பண்ணிருக்கான்…” அவர் சொல்ல சொல்ல சக்தியின் முகம் கோபத்தில் மேலும் சிவக்க, கண்கள் வெறுப்பை உமிழ்ந்தன.
“கோபத்துல அருவாமனைய எடுத்து கழுத்துல ஒரே போடு… அவன் அப்ப சாகலைன்னாலும் கொலை முயற்சி கேஸ்ல மூணு வருஷ தண்டனையோட இந்தப் பொண்ணு உள்ள வந்திருச்சு… ஒரு வருஷம் பொள்ளாச்சி ஜெயில்ல இருந்துச்சு… இப்ப இங்க மாத்தி இருக்காங்க…” என்றார்.
அதைக் கேட்டு அவனது மனம் வேதனையில் குமுறியது. “கடவுளே… தப்பு செய்த அவன் வெளியே இருக்க இந்தப் பெண்ணுக்கு தண்டனையா… மனைவியின் மானத்துக்கு வேலியாய் இருக்க வேண்டிய கணவனே இப்படி செய்தால் ஒரு பெண் என்ன தான் செய்வாள்…” என்று தவித்தது.
“ஓ… பாவம் சார்… அந்தப் பொண்ணை இப்படி செய்யத் தூண்டிய படுபாவிக்கு தண்டனை எதுவும் இல்லையா…”
“கோர்ட் தண்டனை இல்லைதான்… ஆனா கடவுள் அவனுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டார்… இவ வெட்டுனதுல கொஞ்சநாள் ஆசுபத்திரியில இருந்தவன் வெளிய வந்து ஒரு மாசத்துல கார் விபத்துல செத்துப் போயிட்டான்…”
“ஓ… கடவுளுக்கு அப்ப தண்டிக்கவும் தெரியும் போலருக்கு…”
“ம்ம்… இந்தப் பொண்ணோட கேஸ் ஹிஸ்டரி பார்த்து எனக்கே கஷ்டமா தான் இருந்துச்சு… என்ன பண்ணுறது…”
“ம்ம்… பாவம் சார்…” என்றவன் தன் நிலை மறந்து அவளுக்காய் பரிதாபப்பட்டான்.
வானமே எல்லையென்று
பறக்கத் துடிக்கும் சிறகுகள்
பெண்களுக்கும் உண்டு…
அதை முளையிலேயே
கிள்ளிப் போடும் அற்பப்
பதர்களாய் சில ஆண்கள்…
எப்படியும் வாழலாம்
என்பதல்ல வாழ்க்கை…
எல்லைகள் வானத்திற்கு
இல்லையென்றாலும்
வாழ்க்கைக்கு உண்டு…
வாழு… வாழ விடு…

Advertisement